ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பின் வெற்றி என்பது உங்களுடன் இரு நாட்கள் தங்கியிருந்தது தான். உங்களின் பதிவுகளை நூல்களை படிக்கும் போது பிறக்கும் உத்வேகத்தில் பலமுறை நான் நினைத்ததுண்டு நீங்கள் ஏதேனும் குருகுலம் ஆரம்பித்தால் முதல் ஆளாகப் போய்ச் சேரவேண்டும் என்று. அங்கேயே கிடந்து சேவை செய்து கற்றறிந்து புதிய ஆளாக வரவேண்டும் என்று. வாசகர் சந்திப்புக்கான இவ்விரு நாட்கள் அவ்வாசையை தீர்த்துக் கொள்ள ஒரு சிறு வாய்ப்பு. அதை மிகச்சிறப்பாக எங்களுக்கு ஏற்படுத்தித் தந்த உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நம் சூழலில் தீவிரமாகச் செயல்படுபவர்களைச் சந்திப்பது அரிது. எத்துறையினராயாலும் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினாலே நமக்கும் அந்த உற்சாகம் கைகூடும். நாம் செய்ய வேண்டியவற்றை நமக்கு ஞாபகப்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தத் தூண்டும். நம் உச்ச மனநிலையை கரைத்துச் சாதாரணமானவனாக நம்மை மாற்றும் சூழலில் உங்கள் தளத்தில் வரும் ஒரு கட்டுரையைப் படித்தால் போதும் எனக்கு மீண்டும் அம் மனநிலையை மீட்க. அதன் ஆழமும் அதற்காக நீங்கள் அளிக்கும் சிரத்தையும் உழைப்பும் பிரமிக்க வைக்கும்.
முகாமில் நீங்கள் பேசி விளக்கிய ஒவ்வொன்றும் செறிவும் கூர்மையும் நிறைந்தவை. எங்களைப் போன்ற இளம்வாசகர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விவாத முறைமைகள், ‘Metafiction’ முதலான இலக்கிய அடிப்படைகள் முதல் ‘Jane Goodall’, தமிழ்வாணன் காமிக்ஸ் என்று தகவல்கள் வரை. அங்கே பேசப்பட்ட நகைச்சுவைகள் எல்லாம் நினைவில் வரும் போதெல்லாம் சிரிப்பை அடக்கச் சிரமத்தைக் கொடுப்பன. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் ஈரோடு கிருஷ்ணன், சனீல் கிருஷ்ணன், சிவகுருநாதன் முதலான நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது. சந்திப்பு முடித்து நண்பர் கார்த்தியுடன் சென்னை பஸ்ஸிற்காக காத்திருக்கும் போது மிக நிறைவாக உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்டோம்.
பணிவன்புடன்,
ஜெயராம்
அன்புள்ள ஜெ ,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு இனிதே அமைந்தது, உங்களை பலமுறை கூட்டங்களில் முகமுன் செய்திருந்தாலும் பெரியதாக பேசாதத்துற்கு எனது தயக்கமே காரணம், அதே தயக்கத்துடன் சனிக்கிழமை காலை நண்பர்களுடன் ஈரோடு செந்தில் அவர்களின் பண்ணை வீட்டிற்குவந்தோம் , நீங்கள் எங்களுக்கு முன்னர் வந்து வாசலில் அமர்திருந்திர்கள். தயக்கத்துடன் வந்த பொழுதும் அதை அறிந்தவராக உங்களின் வேடிக்கை பேச்சு எங்களை இயல்பு நிலைக்கு வரவைத்தது .
சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே இலக்கியம், கல்வி, சங்கீதம் பற்றிய சுவாரசியமான பேச்சை தொடர்ந்தோம். பின்னர் சுவையான உணவு, உங்களின் இலக்கியம் என்றால் என்ன எதெற்கு இலக்கியம் போன்ற எளிய கேள்விகளுக்கு, ஒரு ஆசானாக எங்களை போன்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு இனிதே புரியவைத்தீர்கள். அறத்து பால் நமக்கு இலக்கியத்தை போதிக்கும் ஆனால் இலக்கியமே அறத்தை உணரவைக்கும் என்பதை சிறுவர்களுக்கு புரிய வைப்பதை போன்று புரியவைத்தீர்கள். முந்தைய நாள் பேருந்து பயணத்தில் சரியாக தூங்கவில்லை என்றாலும் உங்களின் பேச்சு எங்களை நாள் முழுவதும் விழிப்பாக வைத்திருந்தது. உண்மையான வேடிக்கை என்றால் என்ன என்பதனை உங்கள் பேச்சின் மூலமாக கண்டடைந்தோம்..
மாலை நேர நடை உங்களின் உரையை கேட்பதுமாக மற்றும் புதிய நண்பர்களுடன் உரையாட ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. இரவு ஒரு நல்ல கதை எவ்வாறாக அமையவேண்டும், மற்றும் எங்களின் கதை கருக்களை கேட்டு அதை வைத்து விவாதமும் மற்றும் எவ்வாறு ஒரு சிறுகதை அமையவேண்டும் என்ற விவரிப்பும் எங்களின் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உதவும். இரவு பேய்கதையும் வெடிச்சிரிப்புமாக இனிதே நிறைவு பெற்றது, ஞாயிறு காலை எங்களின் ஆக்கங்களின் விமர்சனம் நாங்கள் எதை இலக்கியத்தில் செய்ய கூடாது என்பதை தெளிவு படுத்தியது. நீங்கள் இந்த இரண்டு நாட்களை எவ்வாறு முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கொடுத்து அறிவுரை இலக்கியத்திற்கு மட்டும் அன்றி வாழ்விற்கும் ஒரு படிப்பின்னை.
சினிமா நகைச்சுவை மட்டுமே அறிந்த எனக்கு , உண்மையான நகைச்சுவை என்ன என்று உணர்த்தினீர்கள் (அதை உங்களின் பல கட்டுரைகளில் அறிந்திருந்தாலும் நேற்று தான் நேரில் கண்டேன் ). உங்களின் உன்னதமான இரண்டு நாட்களை எங்களை போன்ற ஒரு ஆரம்ப நிலை வாசகர்களுக்ககாக ஒதுக்கியதற்கு வணங்குகின்றேன். இதற்கு ஏற்பாடுகள் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .
யாதேவி சிறுகதை பற்றிய பேச்சு வரும்பொழுது ஆன்ஸெல் மேரி மாதாவாக உருவகப்படுத்த பட்டதாக உணர்ந்ததை சொன்னேன், அப்பொழுது உங்களின் எதிர்வினையை என்னால் உணரமுடியவில்லை . இன்று காலை சர்வ பூதேஷு கதையில் மாத்தன் “ஆன்ஸெல் முகம் மாதாவின் முகமமாக இருக்கிறது” என்று கூறுகையில், நான் அடைந்த பரவசத்திற்கு அளவு இல்லை, அது ஒரு வாசகன் தனது ஆசிரியரை கண்டடைந்த பரவசம்.
நன்றி ,
கார்த்திகேயன் A.M