யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
வணக்கம் ஜெ
சில சமயங்களில் ஏதுமறியாமல் ஏதோ ஒன்று மனதை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு பாடல் வரியோ கவிதையோ இசையோ கோர்ப்போ. சில முறை முன்னரே பார்த்துள்ள ஓவியமோ சிற்பமோ அன்று மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அவ்வாறு சென்ற வாரம் என்னுள் இருந்துகொண்டிருந்தது மிக்கலேஞ்சிலோவின் தி பியட்டா.
அச்சிற்பத்தை பற்றி ப்ராய்ட் எழுதியதை படிக்க தொடங்கி மிக்கலேஞ்சிலோவின் சில குறிப்புகளை படித்து இத்தாலியின் உயர் மறுமலர்ச்சி (high renaissance), டா வின்சியின் குறிப்புகள்( நாம் அறிந்த டாவின்சி ஓவியங்களின் முன் வடிவங்கள் மற்றும் கோட்டோவியங்கள் அபாரமானவை, லேடாவின் தலைமுடி ஓடும் நீர் போன்ற கோட்டோவியங்கள் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் உடையவை என தோன்றசெய்பவை), பின் பெர்னினி பரோக் ரோகோகோ என்று சென்றமைந்தது.
இதனைத்திற்குப்பிறகும் யேசுவை ஏந்திய அந்த முகம் என் நினைவிலிருந்து நீங்கவில்லை. எப்போதும் போல் அதை வரைவது வழியே என்னுள்ளிருந்து வெளிகொண்டுவர முயன்றேன்.
இன்று தளத்தில் வந்த சிறுகதையின் இறுதியில் மீண்டும் அம்முகம். மீண்டும் பியட்டா. எல்லோரிடத்திலும் உறைந்திருக்கும் தேவி. யா தேவி சர்வ பூதேஷூ..
ஸ்ரீராம்
பி.கு. அடுத்த வெண்முரசு வெளிவருவதற்குள் இதுபோன்ற மேலும் சிறந்த சிறுகதைகள் பல வரவேண்டும்.
***
அன்புள்ள ஜெ
சர்வ ஃபூதேஷு வாசித்தேன். அதில் கதை என என்ன உள்ளது? சில நிகழ்ச்சிகள். அதிலும் விசித்திரமாக ஒன்றுமில்லை. சில உரையாடல்கள். அவையும் உணர்ச்சிகரமானவை ஒன்றும் அல்ல. மிகமென்மையாகச் சொல்லப்பட்டவை. விரைவான பென்சில் கீறல்கள்போன்ற சில ஓவியங்கள் அவ்வளவுதான்
இரு கதைகளையும் வாசித்தபின்னர் இந்தக் கதைகள் ஏன் இத்தனை ஈர்ப்பை அளிக்கின்றன என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அதற்கு காரணம் என எனக்குத் தோன்றியது சில படிமங்கள்தான் என்று. இந்த படிமங்கள் ஏற்கனவே மரபில் உள்ளவைதான். துர்க்கை, சக்தி, மேரி, வியாகூல மாதா எல்லாமே. அவற்றை சார்ந்து நம் உணர்ச்சிகளும் உள்ளன. இந்தக்கதை அவற்றை முற்றிலும் புதிய ஒரு வழியில் காட்டும்போது ஓர் அதிர்ச்சி உருவாகிறது. ஒரு பரபரப்பு. நாம் அந்தப் படிமங்களைப் புதியதாக கண்டடைகிறோம். அப்போது மீண்டும் அந்தக் கொந்தளிப்பு நிகழ்கிறது
முழுக்க முழுக்க கவிதைபோல படிமங்களையும் உருவகங்களையும் மட்டுமே வைத்து எழுதப்பட்ட கதைகள் இவை
ஜெயராமன் எஸ்
***