ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட செய்யும் ஓர் நிகழ்வை நோக்கியோ செல்வதில் பெரும் தயக்கத்தை கொண்டிருந்தேன். இச்சந்திப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல் அதில் கலந்துகொள்ளும் நாள் வரை என்னுள் தலைவிரித்தாடிய தயக்கத்தை உடைத்து, சந்திப்பில் கலந்துகொண்டதையே என்னுள் நிகழந்த பெரும் வெற்றியாக கருதுகிறேன்.
உங்களை சந்தித்த சில நிமிடத்தில் உரையாடல்களும் விவாதங்களும் இயல்பாகவே தொடங்கிவிட்டன. அந்நொடியில், ஒரு பெரும் மலைக்கான விஸ்தரிப்பையும், அதன் செறிந்த கட்டுமானத்தையும் ஓர் கடுகையொத்த சிறு கல் அடைவதற்கான கனவை நினைத்து என்னுள் சிரித்து கொண்டேன். ஆனால், பல தரப்பட்ட உரையாடல்கள் வழியாக நீங்கள் வலியுறுத்திய தொடர் பயிற்சியும், செயலின் தீவிரத்தையும் அமைத்துக்கொள்வதின் மூலம் அந்த கனவினை அடைவது சாத்தியமே என்பதை அறிந்துகொண்டேன். உரையாடல்கள் அரட்டையை நோக்கி நகரும் இடங்களிலும், சிந்தனைகள் சிறுமைப்படுத்தப்படும் இடங்களிலும் கவனமாக குறுக்கிட்டு, இவையெல்லாம் ஏன் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்திய விதம் ஒரு பெரும் திறப்பை என்னுள் நிகழ்த்தியது.
எழுத்து, வாசிப்பு அடங்கிய உரையாடல்களில் நீங்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தும் பயிற்சிக்கு உரியவை. அப்பயிற்சியை என்னளவில் நிகழ்த்த முயலும்போதே அதற்கான கண்டடைதல்களை அறிய முடியும் எனபதை உணர்ந்து கொண்டேன்.
இலக்கியம் பேச நண்பர்கள் கிடைப்பது என்பது மிகப்பெரிய வரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இத்தனை காலமாக நான் கண்டுவரும் கனவு அது. இங்கு அவ்வாறான நண்பர்கள் கிடைத்தது எனது பாக்கியம். இவர்களிடம் பேசிய பிறகு இன்னும் நிறைய வாசிக்க வேண்டுமென்றும், எழுத வேண்டுமென்றும் தோன்றுகிறது. இதுவே, எனக்கான களம் என்று தோன்றுகிறது.
இச்சந்திப்பின் நிர்வாகம் என்னை வியப்புற செய்தது. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவு, படுக்கை எல்லாம் பிரமாதம். நான் என்னளவில் மிகவும் நிறைவாக உணர்ந்தேன். அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
என்னை இந்நிகழ்வில் தெரிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
நரேந்திரன்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஈரோடு சந்திப்பு அதுவும் உங்களுடன் இரண்டு நாட்கள் தங்கி உரையாடும் வாய்ப்பு என்பதற்காகவே கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டு வந்திருந்தேன்.
சனிக்கிழமை காலை முதலே நேரம் குறித்து சொல்லாமல் தொடர்ந்து (உணவு இடைவேளை , தேநீர் இடைவேளை ,நீண்ட மாலை நடையிலும்) பல்வேறு இலக்கிய போக்குகள், பத்திரிக்கை ஆசிரியர் குறிப்புகள், தொன்மைக் கதைகள், பேசுபொருள், பேசுதளம், பேசும்முறை என உரையாற்றினீர்கள்.இரண்டாம் நாள் சக நண்பர்கள் கொண்டுவந்திருந்த படைப்புகளை படித்து அதிலுள்ள போதாமைகள்,செறிவு படுத்த வேண்டிய இடங்கள் என பேசியது யாவருக்கும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது.
இரண்டு நாள் நிகழ்வு மிக அழகாக ஒருங்கமைக்க பட்டிருந்தது.எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்று அரட்டையாகவோ, கிசுகிசுக்களாகவோ இல்லை.உங்களை தீவிரமாக கவனித்துக் கொண்டே இருந்தேன்.தீராத விருப்பத்துடன் துளியும் சோர்வின்றி உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருந்தீர்கள்.மிகுந்த நம்பிக்கையாக உணர்கிறேன். உங்களுக்கு அன்பும் நன்றிகளும் . உடனிருந்து அத்துணை பணிகளையும் ஒருங்கிணைத்த ஈரோடு கிருஷ்ணன் அண்ணா ,பாரி , மணாளன், அந்தியூர் மணி அண்ணா, செந்தில் அண்ணாவுக்கும் எனது நன்றிகள் …
குமார் சண்முகம்
கோவை