சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

யா தேவி அத்தனை விவாதங்கள் வழியாக விரிவாக வாசிக்கப்பட்ட பிற்பாடு சர்வ பூதேஷுவை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. முந்தையகதையில் இருந்ததைப் போலவே ஏமாற்றும் எளிமை. உரையாடல்கள் வழியாக தொட்டுத்தொட்டுச் செல்லும் கதைசொல்லல் முறை. எதையும் சிறு குறிப்பாகவே சொல்லிவிட்டுவிடுதல். ஆனால் எல்லா புள்ளிகளும் இணைந்து முழுமையான கோலமாக ஆகிவிட்டன.

 

சில வரிகளை குறிப்புகளாக எடுத்துக்கொண்டேன். ‘அவன் பூதாகரமான குழந்தை போல இருந்தான்’ என்பதுதான் முதல் க்ளூ. அவளை மேரிமாதாவின் முகம் என்கிறான். குறிப்பாக வியாகூல மாதாவின் முகம் என்கிறான். அவன் கேட்கும் பல கேள்விகள் முக்கியமானவை. “வைத்தியரே கண்ணீர்விட்டால் தூய்மை ஆகிவிடுவோமா?” அவன் சர்ச்சில் அழுபவன். ஆகவே தூய்மையானவன். அவன் சென்றடையவேண்டிய தூய மேரிமாதா அவள்தான்

 

அவன் சிலுவை ஏற்றப்பட்டவன். அவனை மடியில்தாங்கி அமர்ந்திருக்கும் அன்னையைக் காட்டி சிறுகதை முடிகிறது. பல நுட்பமான குறிப்புகள் வழியாக கதை சொல்லப்படுகிறது. ஆனால் எதுவும் வலிந்தும் சொல்லப்படவில்லை. எல்லாமே ஒழுக்காக இயல்பாக வந்தமைகின்றன. ‘வைத்தியரே அவியல்?”என்று அவன் கேட்கும் இடம் ஓர் உதாரணம்

 

எம்.பாஸ்கர்

 

இனிய ஜெயம்

 

யாதேவி சர்வ ஃபூதேஷு இரு கதைகளையும் இன்றுதான் வாசித்தேன். வாசக கடிதங்களை  இக் கடிதத்தை உங்களுக்கு அனுப்பிய பிறகே படிக்கப் போகிறேன்.  இரண்டாம் கதையை முதலில் வாசித்து   அதன் பிறகு முதல் கதையை படிக்க நேர்ந்தவன் என்ற வகையில் நான் லீலியர் வடிவம் அளிக்கும் வாசிப்பின்பம் எய்தினேன்.

 

பாவம், குற்ற உணர்ச்சி,மீட்சி.  இதுவே மாத்தச்சன் அகம் கொள்ளும் பயணம். எல்லாவைக் கண்ட முதல் பார்வையிலேயே  அவளுள் இலங்கும் அன்னையை அறிந்து விடுகிறான். அந்த அன்னையின் மடிசேர்ந்து மதலையாக மாறி அவன் கொள்ளும் துயில், அந்தத் துயில் நோக்கிய அவனது பயணமே கதை.  ‘உணமையான’ எல்லாவை அன்னை வடிவில்  கண்ட கணமே, எல்லா தவிர்த்த எல்லாவின் பொம்மைகள்,திரைப்பட பிம்பங்கள் எனும் அனைத்து  மாயையும் மாத்தச்சனை விட்டு விலகி விடுகிறது. அது விலகுவதற்கு முன்னால் அவன் புணர்ந்த பொம்மை துய்த்த திரை பிம்பம் எல்லாமே அன்னையின் உருவாகி நின்று அவனை குற்ற போதத்தில் தள்ளுகிறது. அக் குற்ற உணர்விலிருந்து [அன்னையின் முத்தங்கள் போல] அவன் எவ்வாறு மீள்கிறான் என்பதன் அழகிய கதை.

 

அந்த பாலியல் பட நடிகைக்குள் எவ்வாறு அந்த அன்னை எழுகிறாள்? அதுவே முதல் கதை. யா தேவி முதல் பார்வையில்  அக் கதைக்குள் வரும் ஆண் பெண் இருவருக்குள்ளும் அகவயமாக நிகழும் மிஸ்டிக்கான பயணம் ஒன்றை சாப்ளிமேஷன் ஒன்றை மையம் கொள்ளும் கதை இரண்டாம் பார்வையில் மேலைத்தேய மரபும் கீழைத்தேய மரபும் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றையும் உள்ளடக்கி இருக்கிறது.

 

ஸ்ரீதரனின் முதல் தொடுகைக்கே எல்லாவின் பாதம் கூசி நெளிகிறது. மண்மகள் அறியாப் பாதம் அது. அத்தகு தொடுஉணர்வு கொண்டவளே பாலியல் உலகில் உழல நேர்கிறது. இங்குள்ள அத்தனை ஆண்களும் தன்னைப் புணர்ந்தாலும் தனக்கு ஒன்றும் இல்லை என்பதை இவள்தான் சொல்கிறாள்.  இந்த இருவேறு  யதார்த்தங்களை சுமந்தே அவள் நோயாளி ஆகிறாள். அகம் ஈர்க்கும் ஆணுடன் காதலுடன் நிகழும் ஒரு கலவி தன்னை மீட்டுவிடும் என்பதே அவளது மீட்சிக்கான அவளது இறுதி விழைவாக இருக்கிறது. பகவதியின் நாட்டில் அவள் பெண்மை என்றால் என்ன அன்னை என்றால் என்ன என்பதை  சக்திக்கே சக்தியின் நிலையைக் கதையாக சொல்லும் ஒரு சாக்த உபாசகன் வழியே உணர்கிறாள்.

 

ஸ்ரீதரன் அவளை மருத்துவனாக நின்று நோயாளி ஆக மட்டுமே முதலில் கையாளுகிறான். பேச்சின் ஓட்டத்தில் ‘அழகாக இருப்பீர்களா’ என வினவுகிறான். உண்மையாகவே அவன் அவள் உடல் நோயாளிக்காக அன்றி வேறு விதத்தில் கருத்தில் பதியாதவனாகவே  இருக்கிறான். அவன் தான் நிற்கும் வழிபாட்டு மரபை அவளுக்கு சொல்லும் போது,வைத்தியன் எனும் நிலையில் இருந்து சக்தி உபாசகனாக மாறி விடுகிறான். அவன் உபாசகனாக மாறிய அக் கணமே எல்லா சொல்லி விடுகிறாள் ‘நீ ஒரு பெண்’ .  உபாசகன் ஸ்ரீதரன்  வசம் இறுதியாக எல்லா கேட்கிறாள் நீ அந்த பாடலை உனக்குள் இப்போது சொல்லிக் கொண்டாயா’ ‘ஆம்’ என்கிறான் ஸ்ரீதரன். ஆம் இப் புவனமாள அவள் இணையடி ஒன்றே போதுமே, அக் கழலடி அழகில் பராசக்தியை  கண்ட ஸ்ரீதரன் எப்படி அந்தப் பாடலை சொல்லாமல் இருப்பான்.

 

பிம்பங்களாலும் எண்பதாயிரம் பொம்மைகளாலும்  மாயையின் விஸ்வரூப தோற்றத்தாலும் தீர்க்க இயலாத ஒன்றை, உண்மையின் இணையடி மட்டுமே கொண்டு ஒருவன் கடந்து செல்கிறான். பெண் உடலும் அழகும் போற்றுதர்க் குரியது. அங்கே கிரேக்க மரபில் தொடங்கும் மேலை மரபு, கிறிஸ்துவ அடிப்படை வாதத்தில் சரிகையில் காமம் ஒடுக்கப் படுகிறது. ஏசுவே கன்னி மேரிக்கு பிறந்தவராக அறியப்படுகிறார். மறுமலர்ச்சி காலம் தோன்றி மதிப்பீடுகளை மாற்றி அமைக்கிறது. இந்த நெடும் மரபின் தொடர்ச்சிதான் எல்லா. மாத்தச்சன் உழலும் குற்றபோதம் அடிப்படை வாத கிறிஸ்துவத்தின் ஒழுக்கவியலால் விளைந்தது.  எல்லா எனும் பாலியல் பட நடிகையில் எவ்வாறு அவன்  அன்னையைக் கண்டு மீட்சி அடைகிறான்?  எல்லா பகவதியின் நிலத்தில் நின்றே தன்னைக் கண்டடைகிறாள்.  அன்னை அவள். படைக்கும் காமம்,  காக்கும் மோகம், அழிக்கும் குரோதம் எல்லாம் அவளின் குழந்தைகளே. அந்த மெய்மையில் நின்று எல்லா மாத்தச்சனுக்கு அளிக்கும் முத்தங்கள் வழியாகவே அவன் மீட்சி அடைகிறான்.

 

ஒரு இலக்கிய வாசகனாக,ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைத் தருணம் வழியே, புதிய அனுபவ தளம் ஒன்றை தொட்டு நடக்கும் பயணத்தில் இன்று மரியன்னைக்கும் பராசக்திக்குமான உரையாடலை நிகழ்த்திக் காட்டிய அழகிய இரு கதைகள்  வாசிக்கக் கிடைத்தது.

 

நன்றி :)

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2
அடுத்த கட்டுரைஅக்ஷயபாத்ரம் -கடிதங்கள்-2