சக்தி ரூபேண! [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சாந்தம்மா மேலும் ஒரு கோப்புடன் வந்து “இது நாராயணன் மாஸ்டர் கொடுத்தனுப்பியது” என்றாள். விதவிதமான ரசீதுகளை ஓர் அட்டையில் சேர்த்து பிடிப்பான் போட்டு வைத்த கோப்பு

நான் கோபத்துடன் நிமிர்ந்து “எல்லாவற்றையும் சேர்த்தே கொண்டுவந்தால் என்ன? நான்குநாட்களாக கேட்கிறேன். கடைசிநிமிடத்தில்தான்  கொண்டு வருவீர்களா? நோயாளி போனபிறகு கொண்டுவாருங்கள். நான் போய் வாரியரின் காலைக்கழுவுகிறேன். அறிவே இல்லை” என்றேன்

சாந்தம்மா என்னிடம் இத்தகைய தருணங்களில் எப்போதும் காட்டும் எனக்கென்ன என்ற முகபாவனையுடன் அதை மேஜைமேல் வைத்தாள். நான் அதை கைகளால் ஒருமுறை அளைந்துவிட்டு “இதெல்லாம் என்ன?” என்றேன்

“அவள் சாப்பிட்டது…”

அதில் ஒரு ரசீதை எடுத்துப் பார்த்தேன். ராயல் பேக்கரியின் பில். இன்னொன்றும் அதுதான். “அப்படியென்றால் இவள் இங்கே சாப்பிடவே இல்லையா?”

சாந்தம்மா “அவளுக்கு சோறு குழம்பு எதுவும் பிடிக்கவில்லை. காரம் காரம் என்று சொல்கிறாள். கஞ்சியைக்கூட காரம் என்றுதான் சொல்கிறாள்”

“அப்படியென்றால் நம் சாப்பாட்டுக்கு ஏன் பில் போடுகிறீர்கள்?”

“அதை அவள் வாங்கினாளே”

‘அதை யார் சாப்பிட்டார்கள்?” என்றேன்.

“மாத்தன் இருக்கும்வரை அவன் சாப்பிட்டான். இப்போது அதை வாங்கிச் சாப்பிட இரண்டுபேர் இருக்கிறார்கள். ஷெனாய் எது கிடைத்தாலும் தின்கிறார்”

சரி என நான் தலையசைத்து அவளைப் போகச் சொன்னேன். பெருமூச்சுடன் கணிப்பொறியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஆரம்பத்திலிருந்தே மறுபடியும் கணக்குகளை ஏற்றவேண்டும். இதை ஒற்றைவிரலால்தான் நான் செய்யவேண்டும். இருபதாண்டுகளாக அப்படித்தான். விசைப்பலகையை பார்த்தால் திரையை பார்க்கமுடியாது. அவற்றில் ஒன்றை பார்த்தால் வேறு எதையும் பார்க்கமுடியாது. ஆகவே முதலில் ரசீதுகளைப் பார்த்து எண்களை மனப்பாடம் செய்து அவற்றை விசைப்பலகையில் தட்டி திரையை பார்த்து அதுதான் அச்சாகியிருக்கிறதா என்று பார்த்தபின் ரசீதுகளை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

நான் இதை முடிக்க அந்தியாகிவிடும். வழக்கமாக மாதவிதான் செய்வாள். அவள் ஏழு நாட்களாக லீவு. ஏழுநாட்களுக்கெல்லாம் இன்னொரு வேலையாளை அமர்த்தமாட்டார் வாரியர். கேட்கலாம், பதிலுக்கு ஏதாவது சம்ஸ்கிருத ஸ்லோகம் சொல்வார். சமாதானங்கள் சொல்வதற்கென்றே ஃபர்த்ருஹரி நிறைய சுபாஷிதங்களை எழுதி வைத்திருக்கிறார்.

என் செல்பேசி அதிர்ந்துகொண்டிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். கையை உதறி இயல்படைந்தபின் அதை எடுத்து “அல்லோ” என்றேன். மறுபக்கக் குரல் புரியவில்லை. எனக்கு செல்பேசியில் யார் பேசினாலும் குரல் தெளிவாகி சொற்கள் பிடிபட நாலைந்து சொற்றொடர்கள் தேவைப்படும்

“நான் ஸ்ரீதரப்பொதுவாள்… ஆமாம், ஸ்ரீதரப்பொதுவாள். யார் வேணும்? இது ஸ்ரீகார்த்திகா விலாசம் வைத்யாலயம். யார் வேணும்? நீங்கள் யார்?”

மெல்ல தெளிவடைந்தது. அது தனியார் தபால் கொண்டுவரும் பையன். “நாஸரா? டேய் நீ நாஸர் தானே? நாஸராடா? டேய், மாப்பிளை என்னடா?” என்றபின் மேலும் தெளிவுகொண்டு “நீ வேறா? என்ன பெயர்? ராமன்குட்டியா? நாஸர் என்ன ஆனான். அவனுக்கு கொட்டம்சுக்காதி எடுத்து வைத்திருக்கிறேனே” என்றேன்.

ராமன்க்குட்டி புதியவன் “நாஸர் இல்லை. இது பெரிய கொரியர். ஆட்டோவில் கொண்டுவருகிறோம். ஆட்டோவுக்கான செலவை நீங்கள் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வந்து எடுத்துக்கொண்டு போங்கள்”

நான் “மருந்தா?” என்றேன்.

“இல்லை, ஒரு பெட்டி…”

“அது ஹிமாலயன் கம்பெனி மருந்து… பத்திரமாக…”

“மருந்து இல்லை. இது வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறது”

“வெளிநாட்டில் இருந்தா? யார் பெயருக்கு?”

“வைத்யாலயம் பெயருக்கு…உரிமையாளர், ஸ்ரீதரப் பொதுவாள்”

“நான் உரிமையாளர் இல்லை”

“பரவாயில்லை. ஆட்டோ கட்டணத்தை கொடுப்பீர்களா இல்லையா?”

“கொண்டு வா… கொடுக்கிறேன்… ஆனால் ஐம்பது ரூபாய்தான். அதற்குமேல் என்றால் வேண்டாம்”

“ஐம்பதுதான்…”

”சரி”

நான் மீண்டும் கணக்குகளைப் பார்த்தேன். ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டது. ஆனால் வெளிநாட்டிலிருந்து என்ன பொட்டலம்? எங்கள் வைத்தியநிலையத்தில் அப்போது பன்னிரண்டு வெளிநாட்டு நோயாளிகள் இருந்தனர். எட்டுபேருக்கு உயர் மனஅழுத்தம், போதைப்பழக்கம். எஞ்சியவர்களுக்கு கீல்வாதம், மூட்டு இறுக்கம்.

எழுந்து சென்று வேப்பமரத்தடியில் நின்று வெற்றிலைபோட்டுக்கொண்டேன். மெல்ல பதற்றங்கள் அடங்கின. வெற்றிலையை துப்பிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தபோது ஆட்டோ வந்தது. உள்ளிருந்து சந்தனக் கீற்று அணிந்த முப்பது வயதான ராமன்குட்டி இறங்கி வந்து “வைத்யாலயம்தானே?” என்றான்

“ஆமாம், நான்தான் ஸ்ரீதரப்பொதுவாள்” என்றேன்

“வைத்யரே, ஒரு பெட்டி. பெரிய எடையில்லை. ஆனால் பிளாஸ்டிக் டப்பா . உள்ளே ஏதாவது விலைமதிப்புள்ள பொருள் இருக்கப்போகிறது என்று தோன்றியது. ஆட்டோக்காரன் அறுபது ரூபாய் கேட்கிறான்”

நான் கோபத்துடன் “நான் உன்னிடம் சொன்னேன். ஐம்பதுரூபாய்க்கு ஒரு பைசா கூடாது… பத்துரூபாய் நீ கொடுடா”

“வைத்தியரே இந்த வைத்யாலயம் கடலோரமாக இவ்வளவு தள்ளி இருக்கிறது என்று அவனுக்கு தெரியாதாம். அங்கே சாலையில் இருக்கும் போர்டைத்தான் அவன் பார்த்திருக்கிறான்… உள்ளே தனி சாலையே இருக்கிறது என்கிறான்”

“ஐம்பது ரூபாய்…. மேலே கிடையாது. முடியாது என்றால் நீ திரும்பிக் கொண்டுபோ… பத்து ரூபாய் சும்மாவா கிடைக்கிறது?”

ராமன்குட்டி “இதெல்லாம் பிச்சைக்காரத்தனம்” என்றான்

“பிச்சைக்காரன் உன் தந்தை… டேய், அந்த மாப்பிள்ளை எவ்வளவு நல்லவன்… அவன் அல்லாவுக்கு விசுவாசமானவன்”

“விசுவாசத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். பணத்தை எடுடா அம்பலவாசி… இல்லாவிட்டால் நீ ஜங்ஷனுக்கு வராமலா போய்விடுவாய்… என்னடா நினைத்தாய்? பணத்தை எடு”

“பணம் உன் தந்தை தருவான், போடா”

அவன் அந்தப் பெட்டியை தூக்கி வெளியே போட்டான்.  “எடுடாம் எழுபது ரூபாய் எடு… “

“எழுபதா!”

“பின்னே ? உன் உணக்கை பெட்டியை கொண்டு இவ்வளவு தூரம் வருவதற்கு நான் என்ன உன் பெண்டாட்டியிடம் தொடுப்பா வைத்திருக்கிறேன்”

“எனக்கு பெண்டாட்டி இல்லை”

“பணத்தை எடுடா தைலக்கார நாயே… தொழிலாளிகளிடம் விளையாடுகிறாயா? பிற்போக்கு மூராச்சி?” அவன் கையை ஓங்கி “பணத்தை கொடுக்காவிட்டால் எண்பது ரூபாய் சாமான் எதையாவது எடுத்துக்கொண்டு போகிறேன்…” என்றான்

நான் எழுபது ரூபாயைக் கொடுத்தேன். அவன் தரையில் சற்றே துப்பிவிட்டு “திமிர் காட்டுகிறான்கள், பூர்ஷுவா நாய்கள்” என முணுமுணுத்து ஆட்டோவில் ஏறிக்கொண்டான். அது வட்டமிட்டு சென்றது. மணலில் தென்னை மரங்களின் நடுவே அந்த ஆட்டோவின் சக்கரங்களின் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிச் சென்றதை பார்த்துக்கொண்டிருந்தேன்

மீண்டும் கணக்கை தொடர்வோமா அல்லது அந்தப் பெட்டியை திறந்து பார்ப்போமா என்று குழம்பினேன். வாரியர் எதையாவது வாங்கியிருப்பாரோ? சமீபகாலமாக அவருக்கு இணையத்தில் கிடைக்கும் பொருட்களை வாங்குவதில் ஆர்வம். பெரும்பாலான நேரம் வீட்டில் வெட்டியாக இருப்பதன் விளைவு. சென்றவாரம் தொப்பையை குறைக்கும் பெல்ட் என்று ஒரு ரப்பர் பட்டையை நாலாயிரம் ரூபாய்க்கு வாங்கினார். அதை வைத்து அவர் மனைவில் பசுவை கட்டுகிறாள்.

நான் அந்தப் பெட்டியை உருட்டிப் பார்த்தேன். விலாசத்தை பார்த்ததும் தெரிந்துவிட்டது. சாந்தம்மாவை மணி அடித்து கூப்பிட்டேன். அவள் கையை துடைத்தபடி வந்தாள்

“எல்லா எங்கே?”

“அறையில் இருக்கிறாள்”

“அவளை வரச்சொல்”

சாந்தம்மா அந்தப் பெட்டியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றாள். நான் அதை புரட்டிப் பார்த்தேன். உள்ளே ஏதோ எலக்ட்ரானிக் பொருள் இருப்பதாகத் தோன்றியது

எல்லா கையில் புத்தகத்துடன் வந்தாள். திருவனந்தபுரத்தில் இருந்து மாத்தன் அவளுக்கு வாங்கிக்கொண்டு கொடுத்த நூல்கள்தான் அவளுடைய இப்போதைய வாசிப்பு. பெரும்பாலும் வெவ்வேறு சாமியார்கள் இந்திய ஆங்கிலத்தில் எழுதிய ஆன்மிக விளக்கங்கள். கீதை, பிரம்மசூத்திரம், தேவிபாகவதம்.

“அப்படி எல்லாவற்றையும் கலந்துகட்டி வாசித்தால் குழப்பம்தான் மிஞ்சும், ஒன்றை மட்டும் படி” என்று நான் சொன்னேன். “எனக்கு எல்லாமே ஒன்றாகத்தான் தெரிகிறது” என்று அவள் சொன்னாள். நான் “அப்படியென்றால் சரி” என்றேன். “உண்மையாகவே” என்றாள். “ஏன்?” என்று கேட்டேன். “ஒருவேளை எல்லாமே எனக்கு புரியாதவை என்பதனால் இருக்கலாம்” என்று சிரித்தாள்.

எல்லா அருகே வந்து “வந்துவிட்டதா?” என்றாள்.

“இது என்ன?” என்றேன்

“சொல்கிறேன்… உங்களுக்காக நான்தான் வரவழைத்தேன்” என்று அவள் புத்தகத்தை மேஜைமேல் வைத்தாள். சௌந்தரிய லஹரி. விஷ்ணுமங்கலம் நீலகண்டன் நம்பூதிரிப்பாடு உரையுடன். அதன் அட்டையில் வெண்கலச் சிலை ஒளியுடன் தெரிந்தது

“ஒரு கத்தரிக்கோல்.. ஏய் ஷாண்ட்!”

சாந்தம்மா எட்டிப்பார்த்தாள். எல்லா கைவிரலை வெட்டுவதுபோல் காட்டி கத்தரிக்கோல் என்றாள்

“இது என்ன?” என்றேன்

“இது பொம்மை, நான் சொன்னேனே. என் பொம்மை”

“உனக்கேது பொம்மை?”

“இது என் வடிவப் பொம்மை”

“இது எதற்கு?”

“நீங்கள் இங்கே உழிச்சில் சொல்லிக்கொடுப்பதற்கு ஒரு மரப்பொம்மையை வைத்திருக்கிறீர்கள். நேற்றுகூட அந்த அமெரிக்கக்காரிக்கு எப்படி உழிச்சில் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க அந்த மரப்பொம்மையை வைத்து பெண்களிடம் விளக்கிக் கொண்டிருந்தீர்கள்”

“அதனாலென்ன?”

“அது சரியான அளவுகளிலேயே இல்லை. சொல்லப்போனால் அது பொம்மையே அல்ல, மரக்கட்டை. அதில் இடங்களை அடையாளப்படுத்தியிருக்கிறீர்கள். அவையும் தவறாகவே இருக்கமுடியும்…”

“என்ன சொல்லவருகிறாய்?”

“நான் என் பொம்மைகளில் ஒன்றை இந்த வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக தருகிறேன்”

“இங்கே அந்தமாதிரி பொம்மைகள் தேவையில்லை”

“இது மிகச்சரியானது, துல்லியமாக என் உடல்போலவே இருக்கிறது. அத்தனை உறுப்புகளும் உண்மையானவை”

.“ஆம், அதனால்தான்..”

“பல மருத்துவமனைகளில் மனிதச் சடலத்தையே பயன்படுத்துகிறார்கள்”.

நான் தயங்கி  “ஆனால் இங்கே அவ்வழக்கம் இல்லை” என்றேன்

நீங்கள் அஞ்சுகிறீர்களா?”

“அச்சமா?”

“இல்லையென்றால் மருத்துவர்கள் ஏன் உடலை ஒதுக்கவேண்டும்?”

“அதுவும் சரிதான்”

“அது மிகமிகச் சிறந்த உடல்… இலட்சிய உடல். அதுதான் கற்பிப்பதற்கு மிகச்சிறந்தது. எல்லா அடையாளங்களையும் அதைக்கொண்டே சொல்லமுடியும். ஒவ்வொரு நரம்பையும் அதைக்கொண்டு காட்டிவிடமுடியும்”

நான் பெருமூச்சுவிட்டேன்

“என்ன, சொல்லுங்கள்”

“சரி” என்றேன்

“மருத்துவர்களுக்கு மட்டும்தான். அந்த அறையிலேயே அது இருக்கலாம்”

“எல்லா”

“சொல்லுங்கள்”

“நீ ஏன் இதை இங்கே கொடுக்கிறாய்?”

“நான் இங்குள்ள பகவதி ஆலயத்திற்கு கொடுக்கலாமென்று நினைத்தேன். அங்கே இருக்கும் கற்சிலை அத்தனை உயிர்ப்புள்ளது அல்ல. இதை வைத்தால் பகவதி நேரில் வந்ததுபோல் இருக்கும்”

“விளையாடாதே”

அவள் தலையை பின்னால்தள்ளி சிரித்து “சரி, சும்மாதான். தோன்றியது. உண்மையில் என் உடலை இங்கே இவர்கள் உழியும்போது என்னை  நானே கற்பனையில் பார்த்துக்கொண்டிருப்பேன்.  ஆகவே மரப்பொம்மையை உழிவதைப் பார்த்தபோது தவறாகத் தோன்றியது” என்றாள். நன்றாகவே தேறிவிட்டாள். அவள் முகம் பளபளப்பாக இருந்தது. கண்களில் இளமை மீண்டுவிட்டிருந்தது.

“அது பல ஆண்டுகளாக இங்கே இருக்கிறது”

“ஆம், அது ஒரு தெய்வம்போல ஆகிவிட்டது. அந்த பொம்மை எத்தனை பெண்களின் உடலாக ஆகியிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் கைகள் வழியாக அது பெண்களின் உடல்களுக்குச் செல்கிறது”

“நீ நாளை கிளம்புகிறாய், அதற்குமுன் இதை இங்கே விட்டுச்செல்ல விரும்புகிறாய்”

“இருக்கலாம். ஸ்ரீ, நான் இங்கே மகிழ்ச்சியாக இருந்ததைப்போல என் வாழ்க்கையில் எப்போதும் எங்கும் இருந்ததில்லை. நான் இங்கே மீண்டும் வருவேன்”

“வெறுமே விருந்தாளியாக வா”

“இல்லை வேலைக்குச் சேர்ந்துவிடவா? என்னால் உழிச்சில் கற்றுக்கொள்ள முடியும்”

நான் சிரித்தேன்

“மெய்யாகவே… ஒன்று சொல்லவா? என் அம்மா ஸ்வீடன்காரி. எங்களூரில் குழந்தைகளை தடவிக்கொடுக்கும் ஒரு மருத்துவமுறை உண்டு. பழைய மந்திரச்சடங்குகளில் இருந்து வந்தது. நோயுற்ற குழந்தைகளை என் அம்மா மடியில் போட்டு மெல்ல வருடுவாள். அரைமணிநேரம் அல்லது ஒரு மணிநேரம். உண்மையாகவே குழந்தைகள் நோய் தீர்ந்து எழுந்துவிடுகின்றன. நானே பலமுறை பார்த்திருக்கிறேன். பல நாட்களாக அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகள் அவை. பல மருந்துகளாலும் நோய் தீராதவை. என் அம்மா ஏதோ மந்திரங்களைச் சொல்வாள்”

“புனிதர்களுக்கான மந்திரங்களா?

“இல்லை, அவை பழைய பாகன் மதத்தின் மந்திரங்கள். ஒருவகை ஓசைகள், அவ்வளவுதான்”

“இங்கேயும் அவ்வழக்கம் உண்டு, அதையும் உழிச்சில் என்றுதான் சொல்வார்கள். நிறையக் குழந்தைபெற்று முதிர்ந்த பெண்கள் செய்வார்கள். ”

“என் அம்மாவுக்கு நிறைய குழந்தைகள்”

“முலைகளில் பாலாக ஊறுவது அன்னையின் உயிர்தான். நாங்கள் அதைச் சைதன்யம் என்கிறோம். முதிய அன்னையின் பத்துவிரல்களும் முலைக்கண்களாக ஆகிவிடுகின்றன”

“நான் ஊருக்குச் சென்று அதைப் பயிலவேண்டும் என நினைத்தேன்”

“உன் அம்மா இருக்கிறார்களா? ”

அவள் கண்களைச் சரித்து “இருக்கக்கூடும்” என்றாள்

“தொடர்பே இல்லையோ?”

“நெடுநாட்களாக தொடர்பில்லை”

“அவர்கள் உயிருடன் இருக்கவே வாய்ப்பு…. எளிதாகக் கண்டுகொள்ளலாம்” என்றேன்

“ஆனால் நான் குழந்தை பெறவில்லை… இப்போது எனக்கு கருப்பையும் iல்லை”

“அதனாலென்ன?”அவள் மெல்ல தனக்குள் “ஆம், அதனாலென்ன?” என எழுந்துகொண்டாள்

சாந்தா கத்தரிக்கோலுடன் வந்தாள். அவள் அதை வாங்கி பொட்டலத்தைப்  பிரித்தாள். உள்ளே இருந்தது உரித்த ஆட்டுத்தோலை திருப்பி வைத்ததுபோன்று கொழகொழவென்ற ரப்பர் குழம்பல்.

“இதுவா?”

“இதுதான், காற்று அடிக்கவேண்டும்… இதிலேயே பம்ப் உண்டு… மின்சார இணைப்பு கொடுத்தால் அதுவே காற்றை நிறைத்துக்கொள்ளும்”

“உள்ளே கொண்டுபோவோம்”

அவள் அதை அறைக்குள் கொண்டுவந்தாள். அதன் மின்இணைப்புகள் எல்லாம் உடன் இருந்தன. பயனர் வழிகாட்டி, பயன்பாட்டுறுதி ஆகியவை ஒரு தனி தோல்பையில் இருந்தன.

மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அவள் அதன் பித்தானை அமுக்கியதும் ர்ர்ர்ர் என்று அதன் மோட்டார் ஓட தொடங்கியது. அது உயிர்பெறுவதுபோல காற்று கொண்டது. அதன் முகம் விந்தையாக சுருங்கி சுளிவுகொண்டு மானுட முகமென்றே தோன்றாதபடி இருந்தது. அதில் விதவிதமான அசைவுகள் தோன்றின. அது அருவருப்பு கொண்டது, சீற்றம்கொண்டது, எதையோ சொல்லவந்தது, உதடுகள் விரிய புன்னகைத்தது. துயில்புன்னகை. பற்கள் தெரியாத புன்னகை, ஆழத்து நினைவொன்றால் இனிதாக ஊறி எழுவது.

அதன் கைகளும் கால்களும் உயிர்பெற்றன. உடல் முழுமையடைந்தது. சற்று தொட்டால் எழுந்துவிடும் என்பதுபோல.

“தொடுங்கள்”

நான் தயங்கினேன்

“நானே சொல்கிறேன், தொடுங்கள்”

நான் அதன் காலை தொட்டேன். அதன் கண்கள் திறந்தன. அது பற்கள் தெரிய புன்னகைத்தது

“நீங்கள் மொழியை தேர்வுசெய்யலாம். என்னென்ன நடத்தைகள் வேண்டும் என்பதை இதற்கு ஆணையாக அமைக்கலாம்”.

“நடத்தை என்றால்?”

“சிலர் நாணம் கனிவு போன்றவற்றை விரும்புவார்கள். சிலருக்கு வெறியும் வேகமும் வேண்டும்”

“எனக்கு மொழியே தேவையில்லை”

“அசைவுகள்?”

“இயல்பான அசைவுகள்போதும்”

அவள் “நான் இதை பின்னர் முழுமையாகவே அமைத்துத் தருகிறேன்” என்றாள்.

நாங்கள் வெளியே வந்தோம். நான் “இதை இனிமேல் பூட்டி வைக்கவேண்டும்” என்றேன்

“ஏன்?”

“இந்தப் பொம்மை… இதை யாராவது தவறாக பயன்படுத்தலாம்… திருடக்கூடச் செய்யலாம்”

“தவறாக என்றால்?”

நான் “அதற்காக” என்றேன்

“அப்படி யாராவது கேட்டால் கொடுத்துவிடுங்கள். நான் வேறு அனுப்புகிறேன்” என்றாள்

“அதில்லை”

“இங்கே இத்தனை பெண்கள்… ஒரு பொம்மை பாதுகாப்பாக இருக்காதா என்ன?”

“உனக்குப் புரியாது” என்றேன்

“உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. பெண்களுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கே? ”

“இங்குள்ள வழக்கம் அப்படி. ”

அவள் “நான் வெளியே செல்லலாம் என நினைக்கிறேன்” என்றாள்

“எங்கே?” என்றேன்

“கோயிலுக்கு”

“யார் கூட வருகிறார்கள்?”

“இதோ இங்கிருந்தே தெரிகிறது பகவதிகோயில். கடற்கரை வழியாகப்போனால் மிக பக்கம். நானே போய்விட்டு வருவேன்”

நான் “தனியாகவேண்டாம். இப்போது மாலைநேரம்” என்றேன்

“மாலைநேரம்தான் கடற்கரை வழியாகச் செல்லமுடியும். பகலில் வெயில் தீ போல் எரிகிறது”

நான் “நீ தனியாகச் செல்லவேண்டாம்” என்றேன்

“இன்று ஒருநாள்…” என்று கெஞ்சினாள்

‘இன்றுதான், நீ நாளை கிளம்பப்போகிறாயே”

“ஆம், நாளை…. ஆகவேதான் பகவதிகோயிலுக்குச் செல்கிறேன். ஒரு நன்கொடை வாக்குறுதி அளித்திருக்கிறேன்”

“மாத்தன் எப்போது வருவான்?”

“காலை எட்டுமணிக்கு. எனக்கு விமானம் மறுநாள் விடியற்காலை மூன்றுமணிக்கு. நான் மாத்தனின் வீட்டுக்குச் செல்கிறேன்”

“சரி”

அவள் தன் அறைக்குச் சென்றாள். நான் சமையற்கட்டுக்குச் சென்றபோது அவள் கடலோரமாக கைப்பையுடன் நடப்பதை சன்னல்வழியாகப் பார்த்தேன்

சாந்தம்மா “நிறைய பணம் வைத்திருக்கிறாள்” என்றாள்

நான் ‘ஆம்” என்றேன்

கணக்குகளை முடிக்க நெடுநேரமாகியது. அதன்பின் ஓர் உழிச்சல். அது முடிந்து நான் வரும்போது சாந்தம்மா எதிரே வந்தாள்

“அந்த பிரெஞ்சுக்காரி திரும்ப வரவில்லை”

“அப்படியா?” என்றேன். அந்தி இருட்டிவிட்டிருந்தது.

“அவளை தேடிப்பார்க்க சுகுவை அனுப்பவா?”

“அனுப்பு… கடலோரமாகவே போகச் சொல்…கடல்வழியாகத்தான் வருவாள்”

சுகுவை சாந்தம்மா அனுப்பினாள். நான் என் அறைக்குச் சென்றேன். குளித்து ஈர உடையுடன் சில வழிபாடுகள், தியானங்கள் என் வழக்கம். ஆடைமாற்றிக்கொண்டு வந்தபோது மேலும் ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது

சாந்தம்மா திகிலுடன் எனக்காகக் காத்து நின்றிருந்தாள். “அவள் அங்கே இல்லை” என்றாள்.

“யார்?”

“எல்லா”

“ஓ’ என்றேன். எனக்கு முதலில் ஒன்றும் தோன்றவில்லை. “கோயிலில் இல்லையா?”

“சுகு வந்து சொன்னான்…அவள் அங்கே சென்றுவிட்டு உடனே திரும்பிவிட்டாள் என்று போற்றி சொல்லியிருக்கிறார். வேறு எவரும் அவளைப் பார்க்கவில்லை”

“திருவனந்தபுரம் போயிருப்பாளோ?”

“அப்படி போகமாட்டாளே”

“அவளை செல்ஃபோனில் கூப்பிட்டாயா?”

“நூறுமுறை கூப்பிட்டுவிட்டேன். முதலில் அழைப்பு சென்று ஓய்ந்தது.இப்போது அணைந்துவிட்டது”

எனக்கு பதற்றம் ஏற்பட்டது. ஆனால் எல்லா சற்று ஊகிக்கமுடியாத நடத்தை கொண்டவள். வெள்ளைக்காரர்களே அப்படித்தான். வெள்ளைக்காரப் பெண்களுக்கு இந்தியாவில் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே தெரியாது

நான் மின்கலக் கைவிளக்கை எடுத்துக்கொண்டேன். “நான் பார்த்துவருகிறேன்” என்று கிளம்பினேன்

கடல் வெண்ணுரை மட்டுமே தெரிய கொந்தளித்துக்கொண்டிருந்தது. அலையோசை, காற்றில் உப்புநீர் துமிகள். பாறைகளுக்கு அப்பால் அலை பொங்கிப்பொங்கி எழுந்தது. கடற்கரை மணலில் எவருமில்லை. கூர்ந்து நோக்க நோக்க மண் தெளிந்தது. பாறைகள் வடிவு துலங்கின

நான் பகவதி கோயிலுக்குச் சென்றேன். நடைபூட்டியிருந்தது. மங்கலான விளக்கு எரிந்தது. கோயிலைச்சுற்றி வீடுகள் ஏதுமில்லை. ஒற்றையடிப்பாதை ஜங்ஷனுக்குச் சென்றது. அங்கே சென்று சேரும் வழியின் இருபக்கமும் தென்னைத்தோப்பு. விளக்கை சுழற்றி சுழற்றி வீசி தேடிக்கொண்டே போனேன். என் கண்ணே எழுந்து பறந்து தென்னை தென்னையாக தொட்டு மீள்வதுபோல் இருந்தது.

ஜங்க்‌ஷனில் சிவராமன் நாயர் கடை சாத்திக்கொண்டிருந்தார். எதிர்ப்பக்கம் சுப்ரமணியனின் கடையில் இருவர் நின்றிருந்தனர். சிவராமன் நாயர் என்னிடம் புன்னகைத்து “என்ன வேண்டும்?” என்றார்

”இங்கே எங்கள் நோயாளி ஒருத்தி வந்தாளா? வெள்ளைக்காரி?”

“இல்லையே”

‘பஸ் ஏறியோ ஆட்டோவிலோ போனாளா?”

“இல்லையே… இங்கே யாரையுமே பார்க்கவில்லையே. யார்? எல்லாவா?”

“அவளை தெரியுமா?”

“நன்றாகவே தெரியுமே? நல்ல பெண்…ஸ்ரீத்துவம் உள்ளவள்… இங்கே பகவதியை கும்பிட வருவாள்…”

நான் “ஓ” என்றேன்

“அவளா திரும்பி வரவில்லை? இந்தவழியாக பஸ் ஏறவில்லை. உறுதியாகச் சொல்கிறேன்”

சுப்ரமணியனுக்கும் அவன் கடையில் பீடி பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்களுக்கும்கூட எல்லாவை தெரிந்திருந்தது. அவள் அவ்வழியாகச் செல்லவில்லை என்றார்கள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை.அப்போதுதான் மாத்தன் நினைவு வந்தது. அவனைக் கூப்பிட்டுப் பார்க்கலாமா? அவனை பயமுறுத்துவது ஆகுமா? ஆனால் கேட்பதே நல்லது. அவள் அவனிடம் பேசியிருக்கலாம்

நான் இரண்டாம் முறை கூப்பிட்டபோதுதான் மாத்தன் எடுத்தான். “வைத்தியரே, நான் வைன் குடித்தேன். நல்ல பிரெஞ்சு ஒயின்…போர்டியாக்ஸ் ரெட்…”

“எல்லா ஃபோன் செய்தாளா?”

“ஆமாம், நாளை காலை வரச்சொன்னாள். அவள் சொன்ன டிரெஸ் கூட எடுத்துவிட்டேன்”

“இல்லை, மாலையில் ஃபோன் செய்தாளா? ஐந்துமணிக்கு மேல்?”

“இல்லையே”

“அவள் இன்று எங்காவது போவதாகச் சொன்னாளா?”

“இல்லையே. ஏன்?”

“இல்லை கேட்டேன். ஒன்றுமில்லை”

என் பதற்றம் கூடிக்கூடி வந்தது. மீண்டும் தென்னந்தோப்பு நோக்கிச் செல்ல திரும்பினேன். சிவராமன் நாயரின் கடைமுன்  டிவிஎஸ் 50 யில் வந்திறங்கிய ராமன்குட்டி என்னை பார்த்து “என்ன பொதுவாளே, சாயங்காலம் ஒரு லார்ஜ் ஏற்றும் வழக்கம் உங்களுக்கும் உண்டா?” என்றான்

நான் ஒன்றும் சொல்லாமல் திரும்பினேன். சிவராமன் நாயர் அவனிடம் நான் எல்லாவை தேடுவதைச் சொன்னார். அவன் என் பின்னால் டிவிஎஸ் 50யில் காலை தரையில் உதைத்து உதைத்து வந்தான்.

“உண்மையா சிவராமன் நாயர் சொன்னது? அந்த பிரெஞ்சுக்காரியை காணவில்லையா?”

“இல்லை. அவளை உனக்குத்தெரியுமா?”

“இங்கே எல்லாருக்குமே அவளை தெரியும்… யார் பேசினாலும் சிரித்துப்பேசுவாள். அவசியமென்றால் பணமும் தருவாள்… சந்தனப்பொட்டு போட்டு குங்குமம் வைத்திருப்பாள். கூந்தல் மட்டும் செம்பட்டையாக இல்லை என்றால் யாரோ மேனோன்வீட்டு பெண் என்று சொல்லிவிடலாம்… அவள் எங்கே?”

“அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்”

“எங்கேயும் போயிருக்க மாட்டாள். நீங்கள் வண்டியில் ஏறுங்கள். நாம் கடற்கரை வழியாக சுற்றிப்பார்ப்போம்… நல்ல பெண். ஆனால் கொஞ்சம் மரைகழன்றவள். அனேகமாக ஏதாவது பாறைமேல் கடலைப் பார்த்துக்கொண்டிருப்பாள்”

நான் விளக்கைச் சுழற்றி அடித்துக்கொண்டு பின்னால் அமர்ந்திருந்தேன். ராமன்குட்டி “ஈரமணலில்தான் வண்டி புதையாமல் ஓடும். நீங்கள் கரையோரத் தென்னைகளைப் பாருங்கள்” என்றான்

ஒளி பாறைகள் மேல் தாவித்தாவி அமர்ந்தது . வருடி சுழன்று வந்தது. அவள் தென்படவில்லை.

“பொதுவாளே, அவள் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள் அல்லவா?”

“வாய்ப்பில்லை, அவளுக்கு குணமாகிவிட்டது”

“குணமானால்தான் தற்கொலைசெய்யத் தோன்றுமோ என்னவோ. அவளுக்கு என்ன நோய்?”

“நரம்புச்சிக்கல்”

‘பத்து ரூபாய்க்கு பேரம்பேசுகிற பொதுவாள் நீங்கள்… உங்களுக்கே ஏதோ நரம்புச்சிக்கல் உண்டு”

“பத்துரூபாய் கம்யூனிஸ்டுகளுக்கு பெரிய தொகை இல்லை”

“கம்யூனிஸத்தை தொட்டுவிளையாடவேண்டாம்… நான் வேறுமாதிரி ஆள்”

அவள் எங்குமே இல்லை. நாங்கள் எட்டு கிலோமீட்டர் வரை சென்றோம். அதற்கப்பால் கோவளத்தின் விடுதிகள். அங்கே பெரிய கட்டிடங்களின் சன்னல்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. கடலோரம் குடைகள் பலவண்ணங்களில் ஒளிவிட்டன. இசை காற்றில் அலையலையாக வந்தது

“அங்கே சென்றிருப்பாளோ?” என்றேன்

“இந்தவழியாக அங்கே செல்ல முடியாது. பெரிய முள்கம்பிவேலி இருக்கிறது. ரோடுவழியாகச் சென்று ஈத்தைமுக்கு ஜங்ஷனில் இறங்கித்தான் அங்கே போகமுடியும்… அந்த வேலிவரை வேண்டுமென்றால் போய் பார்ப்போம்”

வேலி அருகில் செல்லமுடியவில்லை. அங்கே கடலில் இருந்து ஒதுங்கிய குப்பைகள் குவிந்து கிடந்தன. ராமன்குட்டி வண்டியை திருப்பியபடி “எதற்கும் மறுபக்கம் ஒரு நான்கு கிலோமீட்டர் போய் பார்ப்போம்” என்றான்

“எங்கே போயிருப்பாள்?”

“நான் சொல்லவா? நாம் தேடிபோகிறோம். அவள் கன்யாகுமரி தேவி போல ஒரு பாறைமேல் ஒற்றைக்காலை ஊன்றி நின்று தவம்செய்துகொண்டிருப்பாள். நாம் அருகே சென்று தேவியை வணங்குகிறோம்… ”

“உளறாதே”

நான் செல்போனில் சாந்தம்மாவை அழைத்து  “எல்லா கூப்பிட்டாளா?” என்று கேட்டேன்

“இல்லை வைத்யரே, ஒரு செய்தியும் இல்லை. நான் இன்னும் வாரியரிடம் சொல்லவில்லை”

“சொல்லவேண்டாம்… நானே கூப்பிடுகிறேன்”

மறுபக்கம் நெடுந்தொலைவுக்கு வெறும் மணல். அப்பால் மீனவர்களின் படகுகள் கரையில் நின்றிருந்தன. ஒவ்வொரு படகின் அடியிலும் நான் விளக்கை ஏவி நோக்கினேன்

“இந்தக் கடற்கரையில் இல்லை… அவளை யாரோ வண்டியில் கூட்டிச் சென்றிருக்கவேண்டும்…” என்று ராமன்குட்டி சொன்னான்.

“இல்லை, அவளுக்கு அப்படி யாரும் இல்லை” என்றேன்

“இல்லாவிட்டால் அவளுக்கு இங்கே யாரோ தொடர்பு இருக்கிறார்கள். அவர்களுடன் சென்று இரவில் ஒரு நல்ல மேகத்தை இழுத்து கொண்டாடிவிட்டு காலையில் வந்துசேர்வாள்”

நான் “என்ன செய்வது?” என்றேன்

“காலையில் ஒரு பத்துமணிவரை பார்ப்போம். வரவில்லை என்றால் போலீஸுக்கு போவோம்” என்றான் ராமன்குட்டி

“இப்போதே சொன்னால் என்ன?”

“புகார் கொடுக்க முடியாது… செய்தியாக ஆனால் கெட்டபெயர்… தங்கச்சன் என்று ஒரு நண்பன் எனக்கு இருக்கிறான். கான்ஸ்டபிள். அவனிடம் சொன்னால் அவன் சும்மா விசாரித்துப் பார்ப்பான். ஆயிரம் ரூபாயாவது கொடுக்கவேண்டியிருக்கும்”

‘ஆயிரமா?”

“போலீஸ்காரர்கள் பெற்ற தாயிடம் பணம் கேட்பவர்கள். இந்த தங்கச்சனும் எங்கள் தோழர்தான். ஆனால் அது வேறு…”

“ஆயிரம் என்றால்..”

‘அதையும் அந்த பிரெஞ்சுக்காரியிடமே கேட்டு வாங்கிக்கொள்ளும் பொதுவாளே… என்ன இது?”

“சரி” என்றேன்

நாங்கள் வைத்தியசாலைக்கு வந்துசேர்ந்தோம். நான் இறங்கிக்கொண்டேன். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை

”இனி என்ன செய்வது?” என்று அவனிடமே கேட்டேன்

“காலைவரை காத்திருக்கவேண்டியதுதான்…முடிந்தால் தூங்குங்கள். அல்லது தூக்கம்வரவில்லை என்றால் திரிபலாதி அரிஷ்டம் ஒரு துடம் குடியுங்கள்… எனக்கு வேறு அரிஷ்டம் இருக்கிறது”

நான் தலையசைத்தேன்.

அவன் வண்டியை எடுத்து ஒளி அலைபாய தென்னைமரங்கள் நடுவே சென்றான். அவன் மறைந்ததும் நான் என் அறைக்குச் சென்றேன்

யாரும் இல்லை. சாந்தம்மாவும் தூங்கியிருப்பாள் என்று தெரிந்தது. நான் வெறுமே அமர்ந்திருந்தேன். எண்ண எண்ண சலிப்பாக இருந்தது. எல்லா மேல் கோபம் வந்தது. என்ன இப்படிப் படுத்துகிறாள் என முனகிக்கொண்டேன். எழுந்து அறையை திறந்தேன். அவள் காற்று செலுத்தி வைத்த அந்த பொம்மை மேஜைமேல் கிடந்தது.உழிச்சிலுக்கு கிடப்பதுபோல. முதற்கணம் என் அகத்தை பதைக்கச் செய்தது அது, அங்கே மெய்யாகவே ஒரு பெண் கிடப்பதுபோல. இல்லை, பெண் கிடப்பதுபோல அல்ல, பெண்ணின் சடலம் கிடப்பதுபோல.

இந்த மனநிலையில் அப்படித் தோன்றுகிறதா? கண்களை மூடிக்கொண்டு அந்த அறைக்குள் என்ன உணர்வு ஏற்படுகிறது என்று பார்த்தேன். உண்மையாகவே அந்த நுண்ணுணர்வே வந்தது. நான் அறியாத ஒரு சடலம். கண்களைத் திறந்து பார்த்தேன். மனித உடலேதான். தோலின் வண்ணம், தோலின் பல்வேறு நுணுக்கமான தோற்றங்கள். வரிகள், கோடுகள்.

அதை அருகே சென்று பார்த்தேன். அந்த மெய்த்தோற்றம் வருவது அவர்கள் மெய்யான தோலை படமெடுத்து அதை அப்படியே அமைத்திருந்தமையால் என்று தெரிந்தது. மனிதத் தோல் பிளாஸ்டிக் அல்லது ரப்பர் போல பளபளப்பு கொண்டது அல்ல. அதன்மேல் மென்மயிர் பரவல் உண்டு. வரிகள் புள்ளிகள் உண்டு. அதெல்லாமே அப்படியே இருந்தது. ஆகவேதான் அது உடல் என்று கண் சொல்ல உள்ளம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதில் உயிர் இருப்பதை என் உள்ளம் ஏற்க மறுத்தது.

நான் அது எல்லாதான், வாழும் உடல்தான் என்று என் உள்ளத்திற்குச் சொல்ல முயன்றேன். பிடிவாதமாக நம்ப மறுத்தது என் உள்ளம். கல்லை எடுத்து உணவு என்று சொல்லி வாயில் இட்டால் உடல் மறுப்பதுபோல.கண்களை மூடிக்கொண்டேன். அவள் உடலின் மச்சங்கள், வடுக்கள். ”யா தேவி, சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா. யாதேவி சர்வ ஃபூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா. யா தேவி, யாதேவி சர்வஃபூதேஷு அன்னரூபேண சம்ஸ்திதா! சர்வஃபூதேஷு வாக்ரூபேண சம்ஸ்திதா!” ஆனால் அச்சொற்கள் வேறெங்கோ ஒலித்தன. அந்த உடலை அறியாதவையாக

நான் வண்ணப்பேனாக்களை எடுத்துவந்து நீலத்திலும் சிவப்பிலுமாக அதன் உடல்மேல் நரம்புப்புள்ளிகளை வரையத்தொடங்கினேன். சுழிமுனைகளை, முடிச்சுகளை, கரவுமையங்களை அடையாளப்படுத்தி எண்களை இட்டேன். ஓர் ஓவியத்தை மிகமிக கூர்ந்து வரைவதைப்போல. அது என்னை மனம்குவியச் செய்தது.  அதுவரை இருந்த அலைபாய்தல்கள் மறைந்தன.

வரைந்து முடித்து அந்த உடலை நோக்கியபடி நின்றேன். இப்போதும் அது சடலம்தான், ஆனால் நான் அறிந்த சடலம். புன்னகையுடன் கைகளை கட்டிக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தேன். பின்னர் குனிந்து அந்தப்பொம்மையின் பித்தானை இயக்கினேன். “ஹாய்” என்று சொல்லி கண்களை திறந்து, விழியுருட்டி என்னைப் பார்த்தது. பற்கள் தெரிய புன்னகை செய்து “ஹாய் தேர்!” என்றது.

என் தொண்டை அடைத்தது. நான் அதன் உடலை பார்த்தேன். மெய்யாகவே என்னிடம் பேசுகிறது. எல்லாவின் அதே குரல், அதே பாவனை, எல்லாவேதான்.

நான் அதன் கால் பாதத்தைத் தொட்டேன். “ஆ” என்று சிரித்து சிணுங்கினாள். உள்ளங்காலில் நரம்புப்புள்ளியை அழுத்தினேன். “நீ என்னை சிறுமியாக ஆக்குகிறாய்” திடுக்கிட்டு கையை எடுத்துக்கொண்டேன்.

மெய்யாகவே அது சொன்னதா? எல்லா சொன்னதா? எப்படி அது சொல்ல முடியும்? சற்று தயங்கிவிட்டு அதன் உள்ளங்காலில் வயிற்றுக்குரிய இடத்தை தொட்டேன். “ஆ, எனக்கு பசிக்கிறது!”

மூச்சுவாங்க என் கையை விலக்கிக் கொண்டேன். அதைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு நின்றேன். என்னிடம் எவராவது விளையாடுகிறார்களா? எல்லாவின் வேடிக்கையா இது? நான் சொன்னதைக்கொண்டும் அவள் உணர்ந்ததைக் கொண்டும் இதையெல்லாம் புரிந்து எழுதியனுப்பி இதைச் செய்யவைத்திருக்கிறாளா?

மெல்ல அதன் மற்ற நரம்புமுனைகளை தொட்டேன். அது மிகச்சரியாக எதிர்வினையாற்றியது. மெய்யாகவே அங்கே ஒரு பெண் இருப்பதைப்போல. மெல்ல அவள் முழங்கால்களை வயிற்றை நெஞ்சை தோளை தொட்டேன். நான் வரைந்து அடையாளப்படுத்தியிருந்த நரம்புமுனைகளை தொடத்தொட சரியான முகச்சுளிப்புகளை, கூச்சங்களை, துடிப்பை அவள் வெளிப்படுத்தினாள்

பெருமூச்சுடன் அடங்கி அவளை நோக்கினேன். அது வழக்கமான பொம்மைதான். ஆனால் மிகமிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டது. அதற்குள் இருக்கும் மின்னணு அமைப்பும் அவற்றை இணைக்கும் மென்பொருளும் மிகநவீனமானவை. மானுட உடலை காமம் வழியாகவே அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. நானும் என் மரபினரும் மானுட உடலை வலி வழியாக அறிந்தவர்கள். இரு சாராரும் அறிந்தது ஒன்றே

என் செல்பேசி அதிர்ந்தது. அந்த ஒளியில் எல்லாவின் உடல் நிறம் மாறியது. அறியாத எண்

“அல்லோ” என்றேன்

‘பொதுவாளே இது நான், ராமன்குட்டி. திரும்பி வரும் வழியில் நான் குஞ்ஞச்சனிடம் பேசினேன். அவன் இரவு டியூட்டி. அவன் உடனே ஸ்டேஷனுக்கு வரச்சொன்னான். வந்துவிட்டேன். சங்கதி நாம் நினைப்பதுபோல எளிமையானது அல்ல என்று குஞ்ஞன் சொல்கிறான். அங்கே கடற்கரையில் கஞ்சா விற்கும் ஒரு பெரிய கும்பல் உண்டு. எல்லாருமே பொறுக்கிகள். எல்லா ஏழுமணிக்குமேல் தனியாக கடற்கரைக்குச் சென்றிருக்கிறாள்…”

நான் மூச்சு திடுக்கிட,என் நெஞ்சை செவிகளில் கேட்டபடி “ம்” என்றேன். மறுகணம் இவர்கள் மிகைப்படுத்துகிறார்கள், அவள் வந்துவிடுவாள் என்று சொல்லிக்கொண்டேன்

“குஞ்ஞச்சனும் நானும் மூன்று போலீஸ்காரர்களும் மீண்டும் கடற்கரைக்குச் சென்றோம். அங்கே எங்கும் அவள் இல்லை. ஆனால் பகலில் தேடவேண்டும். அந்த கும்பலில் சிலரை பிடிக்க போலீஸ் போயிருக்கிறது. நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கள் ஏரியா செகரட்டரி தோழர் செறுகுந்நும் இங்கேதான் இருக்கிறார். நீங்கள் உடனே வந்து ஒரு புகார் எழுதி தரவேண்டும்…”

“புகாரா?”

“யோவ் அசட்டுப் பொதுவாள், பெண் காணாமலாகியிருக்கிறாள். போலீஸில் புகார் செய்யவேண்டாமா? இரவு ஒன்பது மணிக்கே எழுதித்தந்ததுபோல எழுதி தரவேண்டும்… அவளுடைய பாஸ்போர்ட், போட்டோ இருக்கிறதா?”

“பாஸ்போர்ட் இருக்கும். எங்கள் ஃபைலில் ஃபோட்டோ உண்டு”

‘உங்கள் ஆதார்கார்டையும் எடுத்துக்கொண்டு உடனே கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் வாருங்கள்…”

இன்னொருவர் ஃபோனை வாங்கி “வைத்தியரே, நான் சப் இன்ஸ்பெக்டர் செறியான் தாமஸ். உடனே வாருங்கள்” என்றார்.

“வருகிறேன்” என்றேன்

மீண்டும் ராமன்குட்டி ஃபோனை வாங்கி “எப்படி வருவீர்கள்?” என்றான்

“சந்திரனின் பைக் இங்கே நிற்கிறது. அவனை கொண்டுவிடச் சொல்கிறேன்”

“சீக்கிரம்…அவளுடைய நல்ல போட்டோ வேண்டும். உங்களிடம் வாட்ஸப் இருக்கிறதா?”

“இருக்கிறது”

“அதை மட்டும் உடனே அனுப்பிவிடுங்கள். அதை எல்லாருக்கும் அனுப்பவேண்டியிருக்கிறது. போலீஸ்காரர்கள் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள்”

நான் கம்ப்யூட்டரை திறந்தேன். கோப்புகளில் எல்லாவின் படம் இருந்தது. ஆனால் பாஸ்போர்ட்டில் இருந்த அதே படம். மங்கலானது. பாஸ்போர்ட் நகலும் இருந்தது.

அவள் பாஸ்போர்ட்டையும் படத்தையும் என் செல்பேசியில் நகல் செய்தேன். அவற்றை ராமன்குட்டினுக்கு வாட்ஸப் செய்தேன்.

ராமன்குட்டி திரும்பவும் கூப்பிட்டான். ஆனால் பேசியது எஸ்.ஐ.செறியான். “அந்தப் படம் தெளிவாக இல்லை. நல்ல தெளிவான படம் தேவை. சமீபத்தில் இங்கே எடுத்த படம்”

“இருக்கிறதா பார்க்கிறேன்”

ஆனால் அப்படி எந்தப் படமும் இல்லை. மாத்தன் எடுத்திருக்கலாம். அல்லது வேறு எவரேனும். ஆனால் இந்த விடியற்காலையில் எங்கே செல்வது படத்திற்கு?

ஓர் எண்ணம் வந்தது. மீண்டும் அறையை திறந்து உள்ளே சென்றேன். எல்லாவின் பொம்மை கண்கள் திறந்து சிரித்தபடி கட்டிலில் கிடந்தது. அறைவிளக்குகள் அனைத்தையும் போட்டேன். அதை ஒரு படம் எடுத்தேன். அந்தப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பினேன்

”நல்ல படம்” என்று எஸ்.ஐ சொல்வதாக ராமன்குட்டி வாட்ஸப்பில்  சொன்னான். “உடனே கிளம்பி வாருங்கள். உங்கள் புகாரை எழுதி வாங்கியபின் அதை டி.எஸ்.பிக்கு உடனே அனுப்பவேண்டும்… எஸ்.ஐ. காத்திருக்கிறார்”

நான் உள்ளறையில் தூங்கிய சந்திரனை எழுப்பி என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்லும்படிச் சொன்னேன். சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. “போலீஸ் ஸ்டேஷனுக்கா? எதற்கு?”

“கிளம்புடா நாயே’

அவன் அதிர்ந்துவிட்டான்

நான் அமைதியடைந்து “ஒரு வேலை… அவசரம்” என்றேன்

அவன் முகம்கழுவி சட்டை போட்டுக்கொண்டு வந்து பைக்கை உதைத்து கிளப்பினான். நான் பின்னால் ஏறிக்கொண்டேன்.

விடியற்காலை இருட்டில் தென்னைகள் நிழல்களாக கடந்து பின்னால் சென்றன. முகப்பொளியில் தெருநாய்கள் பம்மின. நல்ல குளிர். நான் தும்மல் போட்டேன்.சாலையில் மெல்லிய டீசல் மணம்

போலீஸ் ஸ்டேஷன் விளக்கொளியில் கல்யாண வீடு போல தோன்றியது. அங்கே நடமாடுபவர்களின் நிழல்கள் அசைவதை தொலைவிலேயே கண்டேன்

அருகே சென்று பைக்கை நிறுத்தியதும் சந்திரன் “நான் உள்ளே வரவேண்டுமா?” என்றான்.

“வேண்டாம், நீ இங்கேயே நில்” என்றேன். தயங்கிய காலடிகளுடன் உள்ளே சென்றேன்

என்னை எதிர்பார்த்து ராமன்குட்டி பெஞ்சில் அமர்ந்திருந்தான். அவன் எழுந்து வந்தான்

“பொதுவாளே இப்படி வாரும்…ஆதார் எங்கே?”

‘செல்போனில் இருக்கிறது…”

“ஓ… அதை பிரிண்ட் எடுக்கவேண்டும். இப்போதைக்கு நம்பர் போதும்”

உள்ளிருந்து எஸ்.ஐ வந்தார். கூடவே வத்ஸன் செறுகுந்நும் வந்தார்

ராமன்குட்டி “சார், இவர்தான் பொதுவாள் வைத்தியர்” என்றான்

“நீங்களா? அந்த பெண் பெயர் என்ன?” என்றார் எஸ்.ஐ.

“எல்லா ஆன்ஸெல். பிரெஞ்சுக்காரி”

“சரி, அவளை தேடிக்கொண்டிருக்கிறோம். ஒன்றும் ஆகவில்லை என்றால் நல்லது. ஏதாவது ஆயிருந்தால் பெரிய சிக்கல். வெளிநாட்டுக் குடிமகள், வெள்ளைக்காரி…”

நான் படபடப்புடன் உதடுகளை அழுத்தியபடி நின்றேன்

செறுகுந்நு “ஒன்றும் ஆகியிருக்காது. வெள்ளைக்காரிகள் கிறுக்கிகள். எங்கேயாவது நின்றிருப்பாள்… ஆனால் நாம் தேடிவிடுவோம். இது நம் ஊரின் கௌரவம்” என்றார். “ஒன்றும் பயப்படவேண்டாம். ஒரு புகார் எழுதி கொடுங்கள்… ரைட்டர் சொல்வார், அதைப்போல எழுதினால்போதும்”

“சரி’ என்றபோது நான் நடுங்கிக்கொண்டிருந்தேன்

ராமன்குட்டி என்னை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே பெரிய தொப்பையுடன் சால்வையை போர்த்திக்கொண்டு குரங்குக்குல்லா வைத்த ரைட்டர் இருந்தார்

“மீரான் பிள்ளை, புகார் எழுதிக்கொள்ளுங்கள்” என்றார் எஸ்.ஐ

ரைட்டர் என்னிடம் அமரும்படி சொன்னார். “எனக்கு இழுப்பு இருக்கிறது வைத்தியரே. நல்ல சூரணம் லேகியம் ஏதாவது உண்டா?”

‘அதை நன்றாக பார்த்துத்தான் தரமுடியும்… வைத்யசாலைக்கு வாருங்கள்”

“எங்கே நேரம்? நான் ரிட்டயர் ஆக இன்னும் ஏழு மாதம்…” அவர் தாள்களை எடுத்து வைத்து பேனாவை அதன்மேல் வைத்தார். ‘நான் சொல்வதை எழுதிக்கொள்ளுங்கள்”

அவர் சொல்லச்சொல்ல நான் எழுதினேன். பழைமையான மலையாளம். சம்பிரதாயமான சொற்கள். “ எஜமான் சமக்ஷம் சங்கடம் போதிப்பிச்சு கொள்ளுந்நு”

“கையெழுத்து போடுங்கள்”

நான் கையெழுத்திட்டேன். அவர் அதை வாங்கிக்கொண்டார்.

“நான் போகலாமா?”

“இருங்கள்… ஒருவேளை டிஎஸ்பி வருவார்…”

நான் வெளியே சென்று பெஞ்சில் அமர்ந்தேன்

தோழர் செறுகுந்நு அங்கே அமர்ந்திருந்தார். “ஏதாவது நடந்தால் என் யூனிட்டுக்கே கெட்டபெயர். பஞ்சாயத்து தேர்தலில் எல்.டி.எஃப் ஜெயிக்க வாய்ப்பிருக்கும் மண்டலம் இது” என்றார்

ராமன்குட்டி “நாம்தான் ஜெயிப்போம் தோழர்” என்றான்

நான் பெருமூச்சுவிட்டேன். என் செல்ஃபோனை பார்த்தேன். எப்போதுவேண்டுமென்றாலும் அது அடிக்கும். எல்லா அதில் தோன்றுவாள். “ஸ்ரீ நான் இங்கே வந்துவிட்டேன்”

உண்மையாகவே அவள் அப்படிச் சொன்னாள். ஆனால் வாய் ஊறிவழிய விழித்துக்கொண்டதும் அது கனவு என உணர்ந்தேன். பத்துநிமிடம் தூங்கியிருப்பேன்

போலீஸ் ஸ்டேஷன் கணிப்பொறியில் எல்லாவின் வண்ணப்புகைப்படம் ஒளியுடன் நின்றது. நான் அனுப்பியது. அவளுடைய பொம்மையின் படம். அதன் பிரதிபலிப்பு கதவின் வார்னீஷ் பரப்பில், சன்னல், கண்ணாடிகளில் செறுகுந்நின் மூக்குக் கண்ணாடிச்சில்லுகளில் எதிரொளித்தது. அப்போதுதான் பார்த்தேன். என் அருகே இருந்த போலீஸ்காரரின் செல்பேசியிலும் அந்தப்படம். இன்னொரு கணிப்பொறி ஒளிகொண்டது. அதிலும் அவள் படம். இந்நேரம் பலநூறு செல்பேசிகளில் கணிப்பொறிகளில் அவள் பிறந்தெழுந்து பெருகிக்கொண்டே இருப்பாள்

இன்ஸ்பெக்டர் ஒரு ஜீப்பில் வந்திறங்கினார். சற்று முதியவர், தளர்ந்த நடையுடன் படி ஏறிவந்து “என்ன ஆயிற்று? என்றார். அனைவரும் எழுந்து நின்றனர். என் அருகே நின்ற போலீஸ்காரர் “பிரபாகரனும் நாராயணனும் மூர்த்தியும் குஞ்ஞச்சனும் போயிருக்கிறார்கள் சார்” என்றார்

நான் வணங்கினேன். செறுகுந்நு வணங்கி அருகே சென்று தாழ்ந்த குரலில் அவரிடம் பேசினார். ராமன்குட்டி என்னிடம் “இங்கே பிரச்சினை என்றால் எல்லா சுற்றுலா தொழில்காரர்களுக்கும் பிரச்சினை… நீங்கள் வைத்யசாலையை அப்படி ஒதுக்குபுறமாக கொண்டு வைத்திருக்கிறீர்கள்” என்றான்

நான் “அவள் வைத்யசாலையில் இருந்து வெளியே சென்றாள்” என்றேன்

“அதைத்தான் நான் சொன்னேன்” என்றான் ராமன்குட்டி

சந்திரன் உள்ளே வந்து என்னிடம் “என்ன செய்ய?” என்றான்

“கொஞ்சம் பொறு” என்று நான் சொன்னேன்

அதற்குள் சாந்தம்மாவின் அழைப்பு.  “என்னாயிற்று பொதுவாள் மாஸ்டரே? எங்கே இருக்கிறீர்கள்?”

நான் குரல் தாழ்த்தி “போலீஸ் ஸ்டேஷனில்… தேடிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏதாவது செய்தி வந்ததா” என்றேன்

“இல்லை” என்றாள்

நான் செல்பேசியை அணைத்தேன். ராமன்குட்டி “நாம் போய் ஒரு சாயா குடிக்கலாம். மாதவன் கடை திறந்துவிட்டான்” என்றான்

நாங்கள் வெளியே சென்றோம்.சாலையில் காலை விடிந்த மந்தமான ஒளி. புழுதியின் மணம். பாலீதீன் குப்பைகள் கடற்காற்றில் அலைபாய்ந்தன. மாதவனின் டீக்கடையில் பால் கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. ஒரு கான்ஸ்டபிளும் இரண்டு உள்ளூர்க்காரர்களும் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள்.

ராமன்குட்டி டீ போடச் சொன்னான். நான் டீ சாப்பிடுவதில்லை. சீனி இல்லாமல் பால் சொன்னேன்.

ராமன்குட்டி “யோசித்துப்பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. நம் வாழ்க்கை பகல்வெளிச்சத்தில்தான். இருட்டு வந்துவிட்டால் இங்கே என்ன நடக்கிறதென்றே தெரியாது” என்றான். “சின்னவயதில் ஒருமுறை வீட்டை விட்டு இருட்டில் வெளியே வந்துவிட்டேன். அப்போது தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. பொதுவாளே, வீட்டு முற்றத்தில் சீங்கண்ணி நிற்கிறது… வாயைப்பிளந்து. நல்லவேளை அப்பா பின்னால் வந்து காப்பாற்றினார்”

கான்ஸ்டபிள் “சீங்கண்ணி என்றால்?” என்றார்

ராமன்குட்டி  “முதலை” என்றான்

கான்ஸ்டபிள் “உங்கள் வீட்டருகே ஆற்றங்கழி உண்டோ?” என்றார்

உள்ளிருந்து செறுகுந்நும் இன்ஸ்பெக்டரும் வெளியே சென்று ஜீப்பில் ஏறிக்கொண்டனர். எஸ்.ஐ வெளியே வர கான்ஸ்டபிள் அவரை நோக்கி ஓடினார். எஸ்.ஐ என்னை பார்த்தார். அருகே வரச்சொல்லி கை காட்டினார்

நானும் ராமன்குட்டிவும் ஓடி அருகே சென்றோம்.

“அவள் கிடைத்துவிட்டாள்”

“எங்கே?” என்றேன்.

”அவன்களைப் போட்டு சவிட்டிக் குழைத்தோம். ஒருவன் சொல்லிவிட்டான். அந்தக் கடற்கரையில்தான்… பாறைகளின் இடுக்கில் உடல் கிடக்கிறது”

“உடலா?” என்றேன்

“எட்டுபேர்  சேர்ந்து கற்பழித்திருக்கிறார்கள். கடைசியில் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்று பாறையிடுக்கில் செருகிவிட்டு கிளம்பிவிட்டார்கள். எல்லாருமே கஞ்சாப்போதையில் இருந்திருக்கிறார்கள்”

நான் ஏதோ சொல்ல முயன்றேன். சட்டென்று என் உடல் இடப்பக்கமாகச் சரிந்தது. ராமன்குட்டி பிடித்துக்கொண்டான்

கான்ஸ்டபிள் “தண்ணீர்!” என்றார். மாதவன் நீர்க்குவளையுடன் வருவதற்குள் நான் நிலைமீண்டுவிட்டேன். ஆனால் குளிர்ந்த நீர் என் நெஞ்சுக்குள் ஆறுதலை உருவாக்கியது

“நான் வந்தால்போதாதா? இவர் எதற்கு?” என்றான் ராமன்குட்டி

“இவர்தான் அடையாளம் காட்டவேண்டும். இவர்தான் புகார் தந்தவர்…மெல்ல கூட்டிக்கொண்டு வா… ஆட்டோவில் வாருங்கள்” என்றபின் எஸ்.ஐ கிளம்பிச் சென்றார்

நான் அருகே இருந்த கல்லில் அமர்ந்தேன். மாதவனே ஆட்டோவை கூப்பிட்டு கொண்டுவந்தான்

நாங்கள் ஏறிக்கொண்டோம். “பைக்கை தொடர்ந்து போ” என்றான் ராமன்குட்டி

சிவராமனின் கடைவழியாக இடைவழியில் இறங்கி தென்னந்தோப்பு நடுவே சென்ற பாதை வழியாக பகவதிகோயிலை அடைந்து முற்றம்வழியாகச் சுற்றிக்கொண்டு கடற்கரை நோக்கிச் சென்றோம். ஆட்டோ மணல்விளிம்பில் நின்றுவிட்டது. பைக்கை நிறுத்திவிட்டு எஸ்.ஐ இறங்கி சென்றார். அதற்கு அருகே ஜீப் நின்றது

அப்பால் காக்கி உடைகள் தெரிந்தன. ஓரிரு உள்ளூர் மீனவர்கள் லுங்கியை கட்டிக்கொண்டு சட்டை இல்லாமல் நின்றனர்.

நான் மணலில் தள்ளாடி நடந்தேன். என் உடல் எடைமிகுந்திருந்தது. ஆனால் உள்ளம் அமைதியாக இருந்தது. ராமன்குட்டி “ஊருக்கே கெட்டபெயர்… எல்லாம் போலீஸின் தவறு. இந்த கும்பலை அப்போதே அடித்து உள்ளே போட்டிருக்கவேண்டும்…கட்சிக்கும் கெட்டபெயர்” என்றான்

அருகே செல்லச்செல்ல மேலும் காட்சிகள் துலங்கின. பாறை இடுக்கில் கிடந்த உடலை சூழ்ந்து நின்றிருந்தனர். உடல் தெரியவில்லை

ராமன்குட்டி “இந்த கஞ்சா நாய்களை வளர விடுவதே ரிசார்ட்காரர்கள்தான். வெள்ளைக்காரர்கள் பாதிப்பேர் கஞ்சாவுக்காகவும் சின்னக்குழந்தைகளுக்காகவும்தான் வருகிறார்கள். அரசாங்கம் என்ன செய்ய முடியும்? சுற்றுலா வருமானம் வேண்டுமே. கடைசியில் கட்சிக்கும் முதலமைச்சர் தோழருக்கும் கெட்டபெயர்” என்றான்

பாறையை அணுகியதும் மேலே நின்ற எஸ்.ஐ ஒரு கான்ஸ்டபிளிடம் என்னை தூக்கி மேலேற்ற கைகாட்டினார்.நான் அவர் கையைப் பிடித்து மேலே சென்றேன். ‘இங்கே வாருங்கள் பொதுவாளே… இவள்தானா?” என்றார் இன்ஸ்பெக்டர்

இரண்டு பெரிய பாறைகள் நடுவே சிறிய இடுக்கு. அதில் கடல் அலையில் அடித்துக்கொண்டுவந்த பழைய செவ்வண்ணப் புடவை சுருண்டு கிடப்பதுபோல முதலில் எனக்குத் தோன்றியது. பிறகுதான் அது எல்லாவின் உடல் என்று அடையாளம் கண்டேன். எப்படி அடையாளம் கண்டேன் என்று தெரியவில்லை, ஆனால் அவள்தான் என உறுதியாகத் தெரிந்தது

வெற்றுடல். பாறாங்க்கல்லைப் போட்டு தலையைச் சிதைத்திருந்தனர். முகம் ஒரு குருதித்தசைக் குழம்பலாக தெரிந்தது. மேலே நின்று மேலும் பல பாறாங்கற்களை போட்டிருந்தார்கள். ஆகவே தோள்களும் இடையும் நசுங்கியிருந்தன. கைகள் உடைந்து திரும்பியிருந்தன.

“இவள்தானா?” என்றார் இன்ஸ்பெக்டர்

“ஆமாம்’ என்றேன்

“என்ன அடையாளம்” என்றார்.

அவள் உடலில் சிதையாமல் எஞ்சியிருந்தது தொடைகள் மட்டும்தான். “உள்தொடையில் உள்ள அந்த மச்சமும் வடுவும் அடையாளங்கள்” என்றேன்

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றார் எஸ்.ஐ

“அவள் என் நோயாளி… ” என்றேன்

“சரி, இனி இங்கே நிறைய சடங்குகள் உண்டு. உடலை ஜி.எச்சுக்குக் கொண்டுபோவோம். அங்கே நீங்கள் வரவேண்டியிருக்கும். நிறைய வேலைகள் உண்டு. இப்போது நீங்கள் வைத்தியசாலைக்குத் திரும்பிச் செல்லலாம். ஓய்வெடுத்து அங்குள்ள வேலைகளுக்கு வேறு ஏற்பாடுகள் செய்துவிட்டு மத்தியான்னம் ஜி.எச்சுக்கு வாருங்கள்…” என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்

நான் தலையசைத்தேன்

என்னுடன் ராமன்குட்டி வந்தான். “கொடுமை…” என்றான். “வெறிபிடித்து இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் கஞ்சாவெறி இப்படிச் செய்ய வைக்கும். அவர்களைப் பார்த்துக் குரைத்த ஒரு நாயை இதைப்போல அடித்து கொன்று கல்லைவீசி நசுக்கி சிதைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களால் நிறுத்தவே முடியவில்லை. வெறி ஏறிக்கொண்டே போயிற்று. அது செத்துவிட்டதுகூட அவர்கள் மூளைக்குள் செல்லவில்லை”

நான் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்

ராமன்குட்டி “நீங்கள் போங்கள் பொதுவாளே…நான் கொரியர் ஆபீஸுக்கு போய்விட்டு ஜிஎச்சுக்கு வருகிறேன்” என்றான்

ஆட்டோ ஓடியபோது காற்று என்மேல் பட்டது. அப்போதுதான் என் உடல் வியர்வையில் மூழ்கியிருப்பதை உணர்ந்தேன். கண்களை மூடிக்கொண்டேன். குருதிப்படலம் விழிக்குள் அலைபாய்ந்தது. சற்று தூங்கியிருப்பேன். எல்லா என்னிடம் ஏதோ சொன்னாள். ஆட்டோ நின்றது. என் மண்டை கம்பியில் மோதியது

நான் ஆட்டோவை அனுப்பிவிட்டு முற்றத்தில் நின்றேன். சாந்தம்மா திண்ணையில் நின்றாள். கார்த்தியாயினி என்னிடம் “என்ன ஆயிற்று” என்றாள்

அவர்களுக்கு செய்தி வந்துவிட்டிருந்தது. “அவள்தான்” என்றேன்

சாந்தம்மா “அய்யோ”என்றாள்

“நான் கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும். எனக்கு ஒரு கோப்பை பால் வேண்டும்” என்றேன்

“நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள் பொதுவாளே…வேண்டுமென்றால் கொஞ்சம் அரிஷ்டம் சாப்பிடுங்கள்.. கொஞ்சம் ஓய்வெடுங்கள்”

‘எனக்கு பால் போதும்” என்றேன்

என் அறைக்கு செல்லும்பொருட்டு மெல்ல நடந்தேன். சுவரில் கையால் உரசிக்கொண்டே அடிமேல் அடிவைத்தேன்.

‘நோயாளிகள் அனைவரையும் அவரவர் அறைகளில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன். சுபத்ரா தங்கச்சியும் பார்கவியும் அருணாவும் பார்த்துக்கொள்கிறர்கள். சிவன்பிள்ளையும் பிரேமன் நாயரும் அவசியமான உழிச்சில்களை மட்டும் செய்வார்கள். சந்த்ரப்பனும் நாராயணன் நாயரும் இன்னும் வரவில்லை” என்றாள் கார்த்தியாயினி

நான் தலையசைத்தேன். என் வலக்கைப் பக்கம் அந்த அறை. ஒரு கணம் நின்றேன்.  “நீ போ” என்று கைகாட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.

எல்லா கட்டிலில் படுத்திருந்தாள். என் காலடியோசை கேட்டு திரும்பி நோக்கி புன்னகைத்து “ஹாய் டியர்!” என்றாள்.

முந்தைய கட்டுரைபழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்
அடுத்த கட்டுரைதனிமையின் புனைவுக் களியாட்டு