தானென்றாதல்

செம்மீனுக்காக விருது வாங்கும் பாபு சேட்

கடத்தற்கரியதன் பேரழகு

எர்ணாகுளத்தில் திரைக்கதையாசிரியர் ஜான்பால் அவர்களுடன் ஒரு படத்தின் சூழல் நோக்கும்பொருட்டு பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி  “அதுதான் செம்மீன் பாபுவின் இல்லம்” என்றார். திகைப்பாக இருந்தது, அது ஓர் அரண்மனை. அதன்பின் செம்மீன் பாபு என்னும் கண்மணி பாபு என்னும் பாபு மிர்ஸா இஸ்மாயில் சேட்  அவர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொன்னார். பின்னர் ஜான்பால் அவர் தொலைக்காட்சியில் நடத்திவந்த நிகழ்ச்சியில் அதையெல்லம மீண்டும் சொல்வதைக் கேட்டேன். மலையாள சினிமாவில் ஒருவகையான தேவதைக்கதை போலச் சொல்லப்படுவது பாபு இஸ்மாயீல் சேட்டின் செம்மீன் கதை

 

பாபு இஸ்மாயீல் பாபு மட்டாஞ்சேரியில் மிகப்பெரிய  நிலவுடைமைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய முன்னோர்கள் கொச்சியின் புகழ்பெற்ற கடல்வணிகர்கள். அவருடைய பாட்டனார் வெள்ளிப்பல்லக்கில் பயணம் செய்தவர். அவருடைய தந்தையார் கேரளத்தில் முதலில் கார் வாங்கியவர்களில் ஒருவர். அவர்களின் நிலவுரிமை பற்றி ஒரு கதை உண்டு. அவர்கள் ஆயிரம் தென்னைத்தொழிலாளர்களை நிரந்தரமாக வேலைக்கு வைத்திருந்தனர். நாள்தோறும் தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது அவர்களின் வேலை. நாளொன்றுக்கு இருபதாயிரம் தென்னையில் தேங்காய் வெட்டப்படும். வெட்டி வெட்டி அவர்கள் தென்னந்தோப்புகளின் மறு எல்லைக்குச் சென்று முடிக்கும்போது தொடங்கிய இடத்தில் தேங்காய்கள் விளைந்திருக்கும்.

 

பாபு இஸ்மாயீல் சேட் 1946ல் மட்டாஞ்சேரியில் பிறந்தார். இளவரசர்களுக்குரிய வாழ்க்கை. விரும்பிய அனைத்தும் கையருகே. ஆனால் பாபு முழுக்க முழுக்க கலைகளில் உளம் தோய்ந்தவர். இசைப்பித்தர், இலக்கிய வெறியர். கலைஞர்களையும் இலக்கிவாதிகளையும் ஆதரித்தவர். கதைகளைக் கேட்கும்போது இளமையில் சக்கரவர்த்தி ஷாஜகான் அப்படி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இளவரசரின் கண்ணுக்காக பெண்கள் காத்திருந்த காலம். இளவரசர் தன்னைவிட மூன்றுவயது மூத்த பெண்ணிடம் காதல் கொண்டார். நான்காண்டுகள் காத்திருந்து தனக்கு 21 வயது முடிந்தபின் அவளையே மணம் புரிந்தார்.

செம்மீனின் நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் பாபு சேட், மது

செம்மீன் நாவலை படமாக்கவேண்டும் என்னும் எண்ணம் அன்று பலருக்கு இருந்தது. அதன் உரிமை எவரிடம் இருக்கிறது என்று தெரியாமலேயே ராமு காரியட் அதற்கு தன் 29 ஆவது வயதில் ஒரு திரைக்கதை எழுதினார். அதை படமாக்க விரும்பி அலைந்து திரிந்தார். அரசு உதவி தரவேண்டும் என கோரினார். ஆனால் கம்யூனிஸ்டுகள் அக்கதை தொழிலாளர் நலத்திற்கு உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் ஒரு கிளப்பில் அவர் பாபுவை சந்தித்தார். அப்போது பாபுவுக்கு 17 வயதுதான். செக்கில் கையெழுத்துபோடும் வயது ஆகவில்லை.ஆகவே தனக்கு 18 வயதாகும் வரை காத்திருக்க முடியுமா என்று பாபு ராமு காரியட்டிடம் கேட்டார். ராமு காரியட் ஒப்புக்கொண்டார்.

 

1964ல் பாபுவுக்கு 18 வயது நிறைந்தது. அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பு தொடங்கியது. ஆனால் அதற்குள் படத்தின் உரிமையை கண்மணி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கிவிட்டிருந்தது. உரிமையை அத்தயாரிப்பாளர் விட்டுக்கொடுக்க மறுத்தார். பாபு அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக அதன் கட்டிடம், கடன் அனைத்துடனும் பெருந்தொகைக்கு வாங்கினார். அவ்வாறுதான் கண்மணி ஃபிலிம்ஸ் என்றபேரில் திரைப்படம் அமைந்தது. பாபு இஸ்மாயில் சேட் அதன்பின் கண்மணி பாபு என அறியப்படலானார்.

செம்மீன் படப்பிடிப்பில் தயாரிப்பு நிர்வாகிகள். கடைசியாக மார்கஸ் பட்லே

செம்மீனின் படத்தின் செலவு அன்று எடுக்கப்பட்ட ஒரு சராசரி மலையாளப் படத்தைவிட இருபது மடங்கு அதிகம். தமிழிலும் தெலுங்கிலும் அக்காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய வணிகப்படங்களை விடவும் அதிகம். 1964ல் எடுக்கப்பட்ட மாபெரும் வரலாற்றுத் தமிழ் படமான கர்ணனை விட இரு மடங்கு முதலீடு கொண்டது செம்மீன். அப்பெரும் தொகை அன்றைய குறைந்த ஒளியுணர்வு கொண்ட படச்சுருளைக் கொண்டு கடலை அழகாக படம்பிடிப்பதற்கே செலவானது.கடலோர வெளிப்புறப் படப்பிடிப்பு மிகப்பெரிய செலவு வைத்தது. கடலுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஐந்து சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட முடிந்தது. படப்பிடிப்பில் மூன்று விபத்துகள் நிகழ்ந்தன. ஒரு முறை படகு கவிழ்ந்து சத்யனும் மூன்று நடிகர்களும் கடலில் மூழ்கி வலைபோட்டு மீட்கப்பட்டனர். படக்கருவிகள் அனைத்தும் கடலில் மூழ்கின. உண்மையில் படப்பிடிப்புக்கான பணிகள் 1963ல் தொடங்கின. 1965 ல் முடிவடைந்தன. கிட்டத்தட்ட முன்றாண்டுக்காலம் மொத்தப் படக்குழுவே திரிச்சூர் அருகே நாட்டிகை என்னும் கடற்கரையில் வாழ்ந்தது. அதற்காக வீடுகள், படகுகள், வண்டிகள்  வாங்கப்பட்டன.

 

படம் வெளியானபோது பாபு இஸ்மாயீல் சேட்டுக்கு வயது 20தான். தேசிய விருது பெற ஜனாதிபதி மாளிகையில் மேடையேறிய இருபது வயதான இளைஞனிடம் ஜனாதிபதி “இவர்தான் கதைநாயகனா? சிறுவனாக இருக்கிறாரே?” என்று கேட்டார். பின்னாளில் நடிகர் மது ஒரு மேடையில் “ பாபு இஸ்மாயில் சேட் அளவுக்கு அழகான நடிகர்கள் எவரும் இந்தியத்திரைவானில் தோன்றியதில்லை, அவர் நடித்திருந்தால் மாபெரும் கனவுநாயகனாகியிருப்பார்” என்றார். பாபு இஸ்மாயில் சேட் அதன்பின் இரண்டு படங்கள் எடுத்தார். அவற்றையும் பெரும்பொருட்செலவிலேயே தயாரித்து வெளியிட்டார். அவை வணிகப்படங்கள் அல்ல, கலைச்சோதனைப் படங்கள். அவை வெற்றிபெறவில்லை.

பாபு சேட் கடைசிக்காலத்தில்

1966 ல் வெளிவந்த ஏழு ராத்ரிகள் ராமுகாரியட்டுகாக அவர் தயாரித்தது. செம்மீன் அளவுக்கு செலவு செய்யப்படவில்லை. கருப்புவெள்ளை படம். சலீல் சௌதுரி இசையில்  ‘பஞ்சமியோ பௌர்ணமியோ’ என்னும் பாடல் இன்றும் கேரளத்தின் புகழ்பெற்ற தாலாட்டு. ஆனால் படம் முற்றிலும் தோல்வியடைந்தது.

 

அந்தப்படம் பற்றி ஒரு செய்தியை ஜான்பால் சொன்னார். அந்தப்படத்தின் கதைநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ஜேஸி. ஜேஸி அதற்குமுன் ‘பூமியுடே மாலாக’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார், அது வெளிவரவில்லை. ராமு காரியட் ஏழு ராத்ரிகளுக்கு கதைநாயகனாக ஜேஸி நடிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் ஜேஸி ஓர் இதழாளராக செயல்பட்டபோது செம்மீன் படத்தை மிகக்கடுமையாக தாக்கி விமர்சனம் எழுதியிருந்தார். அது மூடநம்பிக்கையைப் பரப்புகிறது, அப்படி ஒரு நம்பிக்கை அக்கடற்கரையில் உண்மையில் இல்லை என்பது அவருடைய வாதம். ஆகவே பாபு அவரை நடிக்கவைக்கவேண்டாம், மது நடிக்கட்டும் என்றார். ஆனால் அப்படி சொல்லப்பட்டதனாலேயே ராமு காரியட் பிடிவாதம் பிடித்து படம் எடுத்தால் ஜேஸிதான் கதைநாயகன் என்றார். இயக்குநர் ஓங்கிச் சொன்னதனால் பாபு ஒத்துக்கொண்டார். படம் வெளியானது, எவருக்குமே கதைநாயகனைப் பிடிக்கவில்லை. மது நடித்திருந்தால் ஓடியிருக்க வாய்ப்புள்ள படம் மண்ணைக் கவ்வியது. ஜேஸி மேலும் சில படங்களில் நடித்தபின் இயக்குநராகி முப்பது படங்களுக்குமேல் இயக்கிநார்

 

சில ஆண்டுகள் படத்தயாரிப்பில் இருந்து விலகியிருந்த பாபு அதன்பின் 1983ல் இன்னொரு இளம் இயக்குநருக்காக அஸ்தி என்னும் படத்தை இயக்கினார். ஒரே ஒருநாள் ஒரு நிறுவனத்தின் தலைவராக ஆகநேர்ந்த கடைநிலைத் தொழிலாளரின் வாழ்க்கையைச் சொல்லும்படம். ரவிகிரண் பின்னாளில் படத்தொகுப்பாளராக புகழ்பெற்றார். ஆனால் அஸ்தி தோல்வியடைந்தது. பரத் கோபி கதைநாயகன். பாபு அதன்பின் படங்களை தயாரிக்கவில்லை. எர்ணாகுளத்தில் கவிதா என்னும் திரையரங்கை உருவாக்கினார்.

பாபு சேட்

 

இன்று செம்மீனுக்காகவே பாபு அறியப்படுகிறர். செம்மீன் பாபு என்றே அவர் அழைக்கப்பட்டார். 2005ல் தன் 62 ஆவது வயதில் அவர் மறைந்தபோது செம்மீன்பாபு இறப்பு என்றே செய்திகள் வெளிவந்தன. செம்மீன்பாபுவின் வாழ்க்கையை இன்று பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது, அதற்கு செம்மீனின் துயரநாயகனாகிய பரீக்குட்டியின் வாழ்க்கையுடன் நெருக்கமான உறவு இருக்கிறது. வணிகக் குடியில் பிறந்த பரீக்குட்டியின் உள்ளமெல்லாம் இசைதான். இசையின் உணர்வுநிலையாக கறுத்தம்மா. பாபு இசையில் தோய்ந்து வாழ்ந்தவர். செம்மீன் பாபுவும் இசையும் காதலுமாகவே வாழ்ந்தவர். வணிகச்சூழலில் மனம் அமையாதவர்.

பாபு வாழ்நாளெல்லாம் பணத்தை அள்ளி அள்ளி இறைத்துக்கொண்டிருந்தார். பெருங்கொடையாளி என இன்று அவரை சொல்கிறார்கள். நடிகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரை பல இக்கட்ட்டுகளிலிருந்து அவர் மீட்டிருக்கிறார். செம்மீனில் பரீக்குட்டியும் முன்பின் எண்ணாது அள்ளிக் கொடுப்பவராகவே இருக்கிறான். இப்போது பார்க்கையில் பரீக்குட்டியாக மதுவின் முகம் அன்றிருந்த பாபுவின் முகத்தை மிக ஒத்திருக்கிறது. பாபுவை தயாரிப்பாளராக அள்ளி அள்ளிச் செலவழிக்கச் செய்தது அவர் பரீக்குட்டியாக மாறி கறுத்தம்மாவை காதலித்தது தானா? அந்தப்படம் தயாரிக்கப்படும்போது பாபு படத்தின் வெறியிலும் காதலின் போதையிலும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்.படம் வென்றபோது அவருடைய காதலும் வென்றது.

 

பலவகையிலும் செம்மீன் பாபுவுடன் ஒப்பிடத்தக்க ஒர் ஆளுமை தமிழ்நாட்டில் உண்டு – சொக்கலால் ராம்சேட் பீடி உரிமையாளர் ஹரிராம் சேட். [ வட இந்தியர் அல்ல. தமிழர். முக்கூடல் என்னும் ஊரைச்செர்ந்தவர். பெயரை வட இந்தியத்தன்மையுடன் சூட்டிக்கொண்டவர்]  தியாகராஜ பாகவதர் உட்பட பல இசைவாணர்கள். நடிகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். வணிகராக இருந்தாலும் இசையில் கலையில் தோய்ந்தவர். ஒரு பெருங்கொண்டாட்டமாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கொடைவள்ளல். ஆனால் அவர் பெயரை இன்று அவர் குடும்பத்தவர் அன்றி எவரும் நினைவுகூர்வதில்லை. ஏனென்றால் அவர் ஆற்றியது என சொல்லிக்கொள்ள செம்மீன் போன்ற ஒரு காலம்கடந்து நிற்கும் சாதனை இல்லை.

 

எண்ணிப்பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது. சொக்கலால் ஹரிராம் சேட்டுக்கும் பாபு சேட்டுக்கும் என்ன வேறுபாடு? ஹரிராம் சேட் கொண்ட கலையார்வம் என்பது சாதாரணமாகத் தமிழர்கள் கொள்ளும் திரைப்பிரபலங்கள் மீதான மோகம்தான். எவர் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கிறார்களோ அவர்களுடன் தங்கள் செல்வப்பெருமையைக் கொண்டு அணுக்கம் சாதிப்பது. அதில் மகிழ்வது, அவர்களை உபசரிப்பது, அதன்பொருட்டு பெரும்பணத்தைச் செலவிடுவது. அதன் வழியாக அவர்களும் தானும் நிகரானவர்கள் என்று கருதிக்கொள்வது. கலை ஈடுபாடு என்பது அப்பெருமையில் மறைந்துவிடுகிறது

 

இத்தகைய செல்வந்தர்களை இன்றும் திரைவாழ்க்கையில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் பிரபலங்களுடனான தொடர்பை பேணுவதற்குச் செலவிடுவதில் சிறுபகுதியை நல்ல படங்களுக்குச் செலவிட்டிருந்தால்கூட தமிழில் ஒர் அரிய கலைப்பட இயக்கம் உருவாகியிருக்கும். அவர்களுக்கும் காலம் கடந்து நிற்கும் பெருமை வந்தமைந்திருக்கும். ஆனால் அவர்களிடம் அதைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. நான் பலமுறை சொல்லி ஏமாந்திருக்கிறேன். சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பாளர் சொன்னார், தோல்வி அடையும் என்று தெரிந்தே நட்புக்காக ஒரு படம் எடுத்து நான்குகோடி ரூபாயை இழந்தார் என்று. பத்து நிமிடம் பார்க்கமுடியாத பயிற்சியே அற்ற அசட்டு வணிகக்கேளிக்கைப் படம் அது.

 

இந்த வேறுபாடு எங்கிருந்து வருகிறது? மீண்டும் பாபு சேட்டுக்கே செல்லவேண்டியிருக்கிறது. பாபுசேட் இலக்கியவாசகர். மலையாள நவீன இலக்கியத்தின் மையத்தில் ஒரு சிறந்த வாசகராக என்றும் இருந்தவர். கலையார்வம் ஒரு வகையில் ‘அறிவுத்தரம்’ தேவையற்றது. இலக்கியம் அப்படி அல்ல. அது ஒரு வரலாற்றுப்புரிதலை, ஒரு நுண்ணுணர்வை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பாபு சேட்டை செம்மீன் நோக்கி கொண்டுவரச் செய்தது தகழியின் நாவலின் கதைத்தலைவனாக அவரே ஆனதுதான். அப்படி ஓர் இலக்கியப்படைப்பினூடாக தன்னை கண்டடைதல் என்பது ஒரு தரிசனம்.

பஞ்சமியோ பௌர்ணமியோ!

 

சினிமாவின் பாரி

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்

தந்தை காட்டிய வழி

முந்தைய கட்டுரைமீண்டும் கங்கைக்கான போர்
அடுத்த கட்டுரைஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2