‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 1

பகுதி ஒன்று : பொற்பூழி – 1

அரசே கேள்! சொல்லச் சொல்ல சிதறுவதும் எண்ண எண்ணப் பெருகுவதும் வகுக்கும்தோறும் மீறுவதுமான ஒன்றை அறம் என்றனர் முன்னோர். அது கண்ணீரில் தெளிவது, புன்னகையில் ஒளிவிடுவது, கனிவில் கூர்கொள்வது. பேசிப் பேசி பெருக்கியவை பொருளிழந்து உதிர்வன என்றுணர்ந்தவன் மெய்யறிந்தோன், எண்ணிப் பெருக்கியவற்றை எண்ணாது சுருக்குபவனே யோகி, ஒரு சிரிப்பில் ஒரு துளி விழிநீரில் அமைபவன் கவிஞன் என்கின்றனர். இப்புவியில் அறம் பேசப்படாத நாளே இல்லை. ஆகவே அறம் மீறப்படாத நாளும் இல்லை.

விண்ணிலிருந்து ஒளிச்சரடு என மண்மேல் விழுந்து அறத்தோர் அல்லவர் என மானுடரை இரு பிரிவென பிரிப்பது எது? இங்கு இவ்வண்ணம் மானுடர் வாழவேண்டுமென்று வகுத்தது எதுவோ அது. அறமென இங்கு தன்னை காட்டுவது, அறத்தை கடந்து சென்றாலொழிய முழுதுரு தெளியாதது, சார்ந்தோர் அறிவது, மீறியோர் மேலும் அறிவது. அது வாழ்க! அதன் வண்ணங்கள் பொலிக! அதன் வழிகள் துலங்குக! இலக்குகள் அனைத்திலும் அது நிலைகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!

சதபதத்தைச் சார்ந்த ஃபூர்ஜ குலத்து இசைச்சூதன் பிரவகனின் மைந்தனாகிய கருணன் நான். பன்னிரண்டு தலைமுறைகளாக இசைப்பாடல்கள் திகழும் நா கொண்டவன். மெய்யறிவெனும் நெய் நிறைந்த கலம் எங்கள் நெஞ்சு. அதிலெழும் சுடர் எங்கள் நாக்கு. இக்கரிய சிறு உடலில் பற்றியெழுந்த தீயின் திருத்தழல் எந்தையரிலிருந்து என்னில் பற்றிக்கொண்டது. என்னிலிருந்து என் மைந்தனுக்கு நான் பொருத்திக்கொடுப்பது. எரித்தழிப்பது, அவிகொள்வது, ஒளியூட்டுவது, விண்விண் எனத் தாவுவது. அரசே, ஒருபோதும் தூய்மை அழியாதது. தூய்மை செய்வது. இருப்பதும் நிகழ்வதும் ஒன்றென்றானது. துடிப்பே தானென்றானது. கணமும் நிலைகொள்ளாதது. எனினும் ஊழ்கம் அறிந்தது. இவ்வுலகையே உண்டாலும் பெருகும் பசி கொண்டது. எனினும் தன் எல்லையை உணர்ந்தது. திசைகளில் சுடர்களாக, வெறும் வெளியில் மீன்களாக, நீரில் ஒளியாக, மலர்களில் வண்ணமாக, சொல்லில் மெய்மையாகத் திகழ்வது, இங்கு என்னில் இவ்வண்ணம் எழுந்துள்ளது. இவ்வேள்விக்குண்டத்தில் எழுந்த தழலுக்கு வணக்கம்.

பாரதவர்ஷம் கண்ட பெருவேள்வியின் கதையை இதுகாறும் சொன்னேன். அதன் ஒவ்வொன்றும் பேருருக்கொண்டது. கட்டெறும்பு நடுவே யானையென இதுவரை பாரதவர்ஷம் இயற்றிய வேள்விகள் நடுவே அது திகழ்கிறது என்கின்றனர் பாணர். அஸ்தினபுரி அந்த வேள்வியால் மண்ணிலிருந்து ஏழு அடி உயரம் விண்ணில் எழுந்துள்ளது என்கிறார்கள். அங்குள்ள மரங்களின் கனிகள் அனைத்தும் இருமடங்கு இனிமை கொண்டன. அங்குள்ள உலோகங்கள் அனைத்திலும் மும்மடங்கு இசையொலி நிறைந்துள்ளது. ஆயிரத்து எட்டு அவைகளிலாக அங்கு நூல் ஆய்ந்து தெளியப்பட்டது. பல்லாயிரம் களங்களில் அறுபத்து நான்கு கலைகளும் ஆடி முடிக்கப்பட்டன. பல்லாயிரம் பல்லாயிரம் பந்திகள் அன்னம் அமுதென நாவால் உணரப்பட்டது. அனைத்துக் கைகளிலும் பொன்னும் வெள்ளியும் திகழ்ந்தன. அனைத்து உள்ளங்களிலும் களிவெறி நிறைந்திருந்தது.

ஒருவர் எஞ்சாது அனைத்து மானுடரும் மகிழ்ந்து கூத்தாடும் ஒரு நகரில் தெய்வங்கள் வந்திறங்குகின்றன. வானில் பொன்னொளிர் முகில்கள் நிறைந்திருந்தன. அவற்றிலிருந்து கணம் கோடியென தேவர்கள் இறங்கி அங்கு நிறைந்தனர். அவர்கள் உலோகப்பரப்பில் ஒளிர்வென விழிகொண்டனர். நீரில் அலையென மகிழ்ந்தாடினர். அனலில் ஒளியென வெறி கொண்டனர். தொடுவது எதுவும், நோக்குவன அனைத்தும், அறிவன முழுவதும் தேவர்களே என்று அங்குளோர் அகத்தே அறிந்தனர். தெய்வங்கள் அந்தக் காற்றை விண்ணின் தூய்மையால் நிறைத்தனர். அதை உயிர்த்தவர் அனைவரும் தேவர்கள் என்றானார்கள். பின்னிரவில் இசையும் குளிரும் வண்ணங்களும் சுவையும் மணமும் ஒன்றே என்றான கணங்களில் அவர்களின் கால்கள் நிலம்தொடவில்லை. அதை அவர்களும் அறியவில்லை.

கருவூலம் ஒழிய, கைதளர, உளம் நிறைய அள்ளி அள்ளிக் கொடுத்து பெருஞ்செல்வனானார் அஸ்தினபுரியின் பேரரசரான யுதிஷ்டிரன். அந்தணர் வாழ்த்த, குடிகள் வணங்க அரியணை அமர்ந்தார். மூதாதையரை வணங்கி முனிவரை பணிந்து நற்சொல் பெற்றார். அஸ்தினபுரியின் அரண்மனை பாரதவர்ஷம் தன் நெஞ்சில் அணிந்த மணியாரத்தின் பொற்பதக்கத்தின் மையத்தில் ஒளிரும் அருமணியென்றாகியது. அதன் பேரவைக்கூடத்தில் ஹஸ்தி அமர்ந்த அரியணையில் மணிமுடி சூடி யுதிஷ்டிரன் கோலேந்தினார். அவர் அருகே அமர்ந்தாள் ஐம்புரிக் குழல் முடித்து மணிமுடிசூடிய பாஞ்சாலன் கன்னி. மும்முடி சூடிய வேந்தனை வாழ்த்தி அந்தணர் வேதமுரைத்தனர். முரசுகள் இயம்பின. கொம்புகள் பிளிறின. பல்லாயிரம் நாவுகளால் நகர் அவர்களை வாழ்த்திக் கூவியது.

அத்தனை பருப்பொருட்களும் ஒலியெழுப்புவதை அங்கு கண்டனர். வாழ்க வாழ்க என்றன கோட்டைச்சுவர்கள். மணிமாடக்குவடுகள் ஓங்காரமிட்டன. தெருப்புழுதிப் பரப்புகள் முரசுத்தோல்களாயின. நீரோடைகள் யாழ்நரம்புகளென்றாயின. சங்குகள் என முழங்கின சாளரங்கள். பெருகி அலைத்த பசுவெளிக்காடுகள் மேல் கவிழ்ந்த வானம் சல்லரியாகியது. வாழ்த்துகள் அன்றி பிறிதொன்றை செவி கொள்ளாது அங்கிருந்தார் பாரதவர்ஷத்தின் தனியரசர். தௌம்யர் தலைமையில் அந்தணர் சூழ்ந்திருந்தனர். கௌதமர் முதன்மைகொள்ள முனிவர் அவை நிறைத்திருந்தனர். துணையரசர்கள் வாழ்த்தி அமைந்தனர். புலவரும் சூதரும் குடித்தலைவர்களும் வணிகர்களும் அங்கிருந்தனர்.

தௌம்யர் அரசரிடம் “வேதச் சொல் கனிந்த அந்தணர் தொட்டளித்த மணிமுடி அணிந்து அமர்ந்திருக்கிறீர்கள், அரசே. அருமுனிவர் அளித்த சொல்லனைத்தும் உங்களைச் சூழ்ந்திருக்கின்றன. குடிகளின் வாழ்த்து பீடமென உங்களை ஏந்தி நிற்கிறது. இத்தருணத்தில் இப்புவியில் இவ்வண்ணம் பிறிதொரு மானுடர் திகழ்ந்ததில்லை. இங்கு இந்திரன் நீரே என்றுணர்க!” என்றார். யுதிஷ்டிரன் மகிழ்ந்து தலைவணங்கினார். “என் மூதாதையரும் என் குடியினரும் இதன்பொருட்டு ஆன்றோர் அனைவருக்கும் நன்றிக்கடன் கொண்டிருக்கிறோம். என் கொடிவழிகள் இன்றுரைக்கப்பட்ட சொற்கள் ஒவ்வொன்றையும் செல்வமெனக் கொள்க! அவர்கள் சித்தம் களஞ்சியமாகுக!” என்றார்.

கௌதமர் “அரசே, முடிசூடும் அரசர் அனைவரும் ஒருகணமேனும் இந்திரனெனத் திகழ்ந்து மீண்டாலொழிய விண்ணேக இயலாதென்கின்றன நூல்கள். வெற்றிவேலேந்தி அறமுரைத்து அமர்கையில், தந்தையென உளம் பெருகி குடிபுரக்கையில், அந்தணர் முன் சொல்பணிகையில், முனிவர் அடிசூடுகையில், புலவர் வாழ்த்துகையில் அரசன் இந்திரனாகிறான். நீயோ இப்போது இந்திரனென்றே அமர்ந்திருக்கிறாய். அருகே உன் பொருட்டு இத்தருணத்தில் இந்திரன் தன் மணிமுடி கழற்றி வைத்து விண்ணில் நின்றிருக்கிறான். இனி எப்போதும் பாரதவர்ஷத்தில் முடிசூடும் எவரும் உன் பெயர் உரைத்தே கோலேந்துவர். பேரறத்தான் என்று இந்நிலத்தெழுபவர் நினைவில் என்றும் நிலைகொள்வாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அவை நிறைந்திருந்த குடிகள் போற்றினர். அண்டைநாட்டு அரசர்கள் மகிழ்வோசை எழுப்பினர். நிரைவகுத்திருந்த முனிவர்கள் யோகக்கழி தூக்கி வாழ்த்தினர். வேதம் எழுந்தது அந்தணர் நாவுகளில். கங்கைநீருடன் அரிமலர் பொழிந்தது. எழுந்து கை கூப்பியபோது யுதிஷ்டிரன் விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தார். சூழ்ந்து நின்றிருந்த இளையோர் உளம் பெருகி இருந்தனர் என விழிகள் காட்டின. அருகமர்ந்திருந்த அரசி கல்லெனச் சமைந்திருந்தாள். அவள் கண்கள் மட்டும் கூர் கொண்டிருந்தன. “எங்குளர் எனினும் நிறைக என் அன்னையர் இருவரும் பெருந்தந்தையும்! மகிழ்க என் பேரமைச்சர் விதுரர்! விண்ணிலிருந்து வாழ்த்துக என் உடன்பிறந்தார் கர்ணனும் சுயோதனனும் தம்பியர் நிரையும்! களிகொள்க என் மைந்தர்!” என்றபோது யுதிஷ்டிரன் உளம் விம்மி கூப்பிய கைமலர்மேல் நெற்றி வைத்து உடல் அதிர்ந்து அழுதார்.

வேள்வியை நிறைவுசெய்யும் சடங்குகள் மூன்று என்று மறையோர் அறிவித்தனர். வேள்வியின் பொருட்டு அவைசூழப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட நெறிநூல்களை குடிகளுக்கு அளித்தருளல், அன்ன நிறைவு செய்தல், வேள்விச் சாம்பலை கங்கைப் பெருக்கில் கரைத்து விண்ணோருக்கு நன்றி கூறி நிறைவேற்றுதல். யுதிஷ்டிரன் ஆகுக என ஆணையிட்டார். அவைக்கு இரு பெரும் அடுக்குகளாக செம்பட்டு சுற்றப்பட்டு பொற்தாலங்களில் ஏந்தி கொண்டுவரப்பட்ட நிறுவுகை நூல்களையும் அமைதி நூல்களையும் அவைமுன் வைத்தார். தௌம்யர் அவையில் எழுந்து “ஆன்றோரே, பீஷ்மரால் நிறுவப்பட்ட நூல்கள் ஓர் அடுக்கு. வேள்வியின் நிறைவென அமைக்கப்பட்ட அமைதி நூல்கள் இன்னொரு அடுக்கு. அறிஞர் அமர்ந்த அவைகள் ஆய்ந்து பழுது நீக்கி அவையேற்பு செய்து அளித்திருப்பவை இவை. அவற்றை அரசர் தன் செங்கோலால் இங்கிருக்கும் குடித்தொகை அனைத்திற்கும் மேல் நிலைகொள்ளச்செய்க! இனி இப்பாரதவர்ஷம் இந்நூல்களால் ஆளப்படுவதாக!” என்றார்.

அவை மேடையில் பொன்னாலான துலாத்தட்டொன்று நிறுவப்பட்டது. அதன் இரு தட்டுகளில் இடத்தட்டில் நிறுவுகை நூல்களும் வலத்தட்டில் அமைதி நூல்களும் வைக்கப்பட்டன. அவை முற்றிலும் நிகர்எடை கொள்வது வரை சுவடிகளை அடுக்கினர். முள் அசைவிலாது நின்றபோது அவையில் அமர்ந்திருந்த குடிகள் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களையும் கைகளையும் தூக்கி வாழ்த்தொலி பெருக்கினர். “அழியா நெறிகள் வாழ்க! வெல்க நாராயணப் பெருவேதம்! நிலைகொள்க வேத நெறி!” என்று கூவினர். யுதிஷ்டிரன் எழுந்து “இதோ இந்நூல்கள் இங்கே நிலைகொள்கின்றன. அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும் உடைவாளும் கொடியும் இந்நூல்களின் காவலென, சான்றென, ஊர்தியென என்றும் நின்றிருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!” என அறிவித்தார். “ஆம்! ஆம்! ஆம்!” என முழக்கமிட்டது அவை.

தௌம்யர் சொன்னார் “ஒன்று மூதாதையர் அளித்தது. பிறிதொன்று நாம் கண்டடைந்த மெய்மை. ஒன்று பிறிதை நிகர் செய்யும். தந்தை மைந்தரை என ஒன்று பிறிதை வாழ்த்தும். மைந்தர் தந்தையை என ஒன்று பிறிதொன்றை பேணும். சாந்தியும் அனுசாசனமும் செஞ்சிறகுகள் என்றாக பாரதவர்ஷமெங்கும் பறந்தெழுக இந்த விண்பருந்து! ஆம், அவ்வாறே ஆகுக!” அவை வாழ்த்தொலி எழுப்பியது. யுதிஷ்டிரன் எழுந்து தன் செங்கோலை அத்துலாவின் இரு தட்டுகளுக்கும் குறுக்காக வைத்தார். பின் அதன் முன் மண்டியிட்டு மும்முறை தலைவணங்கினார். தன் வாளுடன் அதனருகே நிலைகொண்டார். அந்தணரும் முனிவரும் குடிகளும் மலர் அரியிட்டு வாழ்த்தி அத்தருணத்தை தெய்வங்களுக்குரியதாக்கினர்.

பின்னர் அவை கலையும் அறிவிப்பு எழுந்தது. யுதிஷ்டிரன் மும்முறை வணங்கி, வாழ்த்துப் பேரொலியும் மங்கல இசையும் அலையலையென எழுந்து அள்ளிக்கொண்டு செல்வதுபோல் திரும்பி அவையொழிந்து வெளியேறினார். சிற்றறையில் சற்றே ஓய்வெடுத்து இன்நீரும் பிடியன்னமும் அருந்தி மணிமுடி மாற்றி உண்போர் ஒழிந்த அன்னசாலை நோக்கி நடந்தார். நூற்றெட்டு எச்சில் இலைகளை தன் கையாலேயே எடுத்து கூடையிலிட்டு அன்னசாலையை அவர் தூய்மை செய்யவேண்டுமென நெறியிருந்தது. தம்பியர் கைகூப்பி உடன் வர ஒவ்வொரு இலையாக நின்று வணங்கி எச்சில் இலையை இரு கைகளாலும் எடுத்து அருகே நின்றிருந்த ஏவலனின் கூடையில் இட்டார்.

அச்சடங்குக்கென அந்தணரும் பிற குடியினரும் உண்டு முடித்து எழுந்த ஏழு அன்னசாலைகளில் இலைகள் அவ்வண்ணமே எச்சில் நிறைந்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது அன்னசாலைக்குள் யுதிஷ்டிரன் நுழைந்தபோது அங்கே ஒரு கீரி எச்சில் இலைகளின் மேல் உருண்டு புரள்வதை கண்டார். எவ்வண்ணம் அது அங்கு வந்ததென்று திகைத்து நோக்கினார். அவர் நோக்குவதைக் கண்டே பிறர் அதை உணர்ந்தனர். அதை விரட்டும் பொருட்டு ஏவலர் கூச்சலிட்டபடி ஓடினர். திரும்பி நின்று மென்மயிர் உடல் சிலிர்த்து மணிவிழி உருட்டி அவர்களை அது பார்த்தது. வீரர் கோல்களுடன் கூச்சலிட்டு அதை துரத்த முற்பட்டனர்.

“நில்லுங்கள்!” என்று யுதிஷ்டிரன் கூவினார். அக்கீரியின் ஒருபுறம் பொன் என சுடர் விட்டது. “இது எளிய கானுயிர் அல்ல. கந்தர்வரோ தேவரோ மாற்றுருக்கொண்ட முனிவரோ என்று தோன்றுகிறது. இவ்வண்ணம் பொன்னுடல் கொண்ட கீரியொன்றை முன்பு கண்டதில்லை, நூலிலும் அறிந்ததில்லை” என்று யுதிஷ்டிரன் கூறினார். தௌம்யரும் அப்போதுதான் அதை கண்டார். “ஆம், இது எளிய விலங்கு அல்ல” என்றார். பிறரை விலக்கி கைகூப்பியபடி அருகணைந்து முழந்தாளிட்டு அக்கீரியின் அருகே அமர்ந்து “தாங்கள் யாரென்றறியேன். எனது அரசப் பெருவேள்வியின் அன்னநிலையில் வந்து இவ்வண்ணம் புரள்வது எதன் பொருட்டு என்று கூறுக!” என்றார்.

கீரி அவரை நோக்கி மெல்லிய குரலில் அவர் மட்டும் கேட்கும்படியாக கூறியது “வேந்தே, முன்பொரு நாள் வசிஷ்டர் அடர்கானகத்தில் வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். சித்திரை முழுநிலவு நாளில் அவ்வேள்வியை நிகழ்த்துவது அவர் மரபு. அனைத்து அவிப்பொருட்களுடன், அனைத்து அந்தணர் முறைமைகளுடன், முனிவர் குலங்களனைத்தும் இடம்பெற, ஆயிரம் பேர் அன்னமுண்டு அமைய, ஆயிரம் சூதர் சொல் பெற்றுச் செல்ல, அனைத்துக் கலைகளும் திகழ அதை நிகழ்த்துவது அவர் வழக்கம். ஆனால் அம்முறை வடமலை தேடிச்சென்ற அவர் அங்கொரு தவம் முடித்து கீழிறங்குகையில் வழி தவறிவிட்டிருந்தார். பன்னிரு முறை வழி தேர்ந்து கீழிறங்கிய பிறகும்கூட சென்றடைய வேண்டிய இடமல்ல தான் வந்தடைந்தது என்று உணர்ந்தார்.”

எனில் தன்னை மீறிய ஆடல் ஒன்று அதிலிருப்பதை உணர்ந்து உளம் அமைந்து அங்கே ஒரு சிற்றோடைக் கரையில் அமர்ந்தார். நாள் கணித்து நோக்கியபோதுதான் அது சித்திரை முழுநிலவு நாளென்று தெரிந்தது. அவ்வேள்வியை அங்கேயே நிகழ்த்த அவர் எண்ணினார். அவ்வேள்விக்குரிய பொருட்கள் எதுவும் அன்று அவரிடம் இல்லை. அன்னமென ஒரு மணி எஞ்சியிருக்கவில்லை. அக்காட்டில் ஒரு கனியோ ஒரு கிழங்கோ இருக்கவில்லை. உணவென்று எதுவும் அவருக்குக் கிடைத்து மூன்று நாட்களாகியிருந்தன. ஆனால் வேதச்சொல் அவர் உளத்தில் நிறைந்திருந்தது. சூழ நோக்கிய பின் விறகு தேர்ந்து அடுக்கி இரு கல்லெடுத்து உரசி எரியெழுப்பி வேதம் உரைத்து வேள்வி நிகழ்த்தினார். கல்முனையில் தன் கைவெட்டி சொட்டும் குருதியை நெய்யென்று உதிர்த்து அவியாக்கினார்.

அவ்வேள்வி முடித்து எழுந்தபோது அங்கே விண்ணிலிருந்து தவழ்ந்து என சுழன்று மண் வந்து தொட்ட சிறகொன்று கந்தர்வனென எழுந்தது. அவரை வணங்கி “முனிவரே, என் பெயர் நீலவன். இக்காட்டில் இத்தருணத்தை எதிர்நோக்கி தவம் இருந்தவன். தூய வேதம் திகழும் கணமொன்று இங்கு அமைந்தால் நான் விண்புகக் கூடும் என சொல் இருக்கிறது. மண்ணில் தூய வேதம் திகழும் தருணங்களை எதிர்நோக்கி அலைந்து இவ்விடத்தை கண்டடைந்தேன். மானுடர் எவரும் வராத இங்கே எவ்வண்ணம் வேதம் திகழும் என்று அறியாது அச்சொல்லை மட்டுமே நம்பி இங்கு இருந்தேன். இன்று அது நிகழ்ந்தது. நான் வீடுபேறடைந்தேன். என் உருக்களில் ஒன்றே தங்கள் முன் திகழ்கிறது” என்றான். பின்னர் மீண்டும் இளநீல நிறத் தூவலென மாறி மண்ணில் கிடந்தான்.

புன்னகையுடன் அவனை வணங்கி வாழ்த்தியபின் வழி தெளிந்து தெற்கு நோக்கி நடக்கலானார் வசிஷ்டர். நான் புதருக்குள்ளிருந்து அந்த வேள்வியை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் சென்ற பின்னர் அருகணைந்து அந்த வேள்விக்குளத்தின் வாடாத அனலை முகர்ந்தேன். மீண்டும் திரும்பி புதர்களுக்குள் சென்று வேட்டையாடி உண்டேன். திரும்புகையில் அன்று குளிர் மிகுந்திருப்பதை கண்டேன். என் வளைக்குள் புகுந்தபோதும்கூட உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த வேள்விக் குழியில் அனல் எஞ்சியிருப்பதை நினைவு கூர்ந்து அங்கு சென்றேன். அருகணைந்தபோது அச்சாம்பலிலும் மணலிலும் வெம்மை எஞ்சியிருப்பதைக் கண்டு அதன் மேல் படுத்து புரண்டேன். அதன் வெம்மையில் மயங்கி அன்றிரவு துயின்றேன்.

மறுநாள் விழித்துக்கொண்டபோது என் உடல் பாதிப்பங்கு பொன்னென மாறியிருப்பதை கண்டேன். நான் அதை உணரவில்லை. என்னைக் கண்டதும் என் குலத்தார் அஞ்சி ஒலியெழுப்பியபடி விலகி ஓடியதைக் கண்டபோதுதான் என் உடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தேன். கங்கை நீரில் சென்று என் உருவை நோக்கி நிகழ்ந்ததை உணர்ந்து திகைத்தேன். அவர்களிடம் சென்று “இது என் பிழையல்ல, நம் குடிக்கு வந்த மாண்பென்று கொள்க! இன்னமும் என் உடலில் பாதி நம் குடியினரைப்போன்றே இருப்பதை உணர்க!” என்றேன். அவர்கள் அஞ்சி ஓடினர். நான் அவர்களிடம் “என்னை விலக்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூவினேன். “நம் குடிக்கு வந்த தெய்வக் கனிவல்லவா நான்?”

அவர்களில் குடிமூத்தவர் என்னை நோக்கி “ஆம், ஆனால் உன் உடலில் பாதி பொன்னென்று ஆகிவிட்டிருக்கிறது. பொன்னானவன் எங்களுடன் வாழ முடியாது. நாங்கள் உலகியலார். பழிகொள்ளாது வாழ இயலாதவர். பிழைகளினூடாகவே கற்பவர்கள். குருதியும் அழுக்கும் கொண்ட உடல் எங்களுடையது. நொடியோசையில் உடல் சுருட்டி ஒளிந்துகொள்ளவேண்டியவர்கள் நாம். ஒளிரும் இவ்வுடலுடன் உன்னால் ஒளிய முடியுமா என்ன? உன்னை உடனமைத்து இயல்பாக வாழ எங்களால் இயலாது” என்றார்.

நான் திகைத்து நின்றேன். “நீ தெய்வமாகும் செலவு கொண்டவன். உன் உடல் களைந்து பொன்னென்றே ஆகுக! ஒளியுடன் வந்து எங்கள் ஆலயத்தில் அமர்க! அன்றி, அப்பொன்னைக் களைந்து மீண்டும் நம் குடிக்கே வருக! சேறணிந்து குருதி உண்டு எங்களில் ஒருவன் என்றாகு! பொன்னென்றும் உடலென்றும் திரிந்த உரு கொண்டு ஒருவன் இங்கு எங்களுடன் வாழ இயலாது” என்றார். “ஆம், செல்க!” என்றனர் என் குடியினர். “இவன் அச்சமூட்டுகிறான்” என்றாள் என் அன்னை. “இவன் எங்களையும் காட்டிக்கொடுப்பான்” என்றனர் உடன்பிறந்தார். “நீ பொன்கொண்டவன், எனினும் கீரி. பொன்னை விரும்புவோர் உன்னை கொல்லவும் கூடும்” என்றார் முதுதந்தை ஒருவர். “உன்னை காத்துக்கொள்க! எங்களால் உனக்கு காவலளிக்க இயலாது.”

அவர்கள் என்னை விட்டு விலகிச்சென்ற பின் துயருற்றவனாக நான் வசிஷ்டர் சென்ற திசைக்கே சென்றேன். அவரது காலடிகளை மணம்கொண்டு விரைந்து இரவும் பகலும் ஓடி தெற்கே நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்த அவரை சென்றடைந்தேன். கங்கை நதிக்கரையில் ஊழ்கத்திலிருந்த அவர் அருகே அணைந்து காலடிகளை வணங்கி நின்றேன். விழி திறந்து அவர் என்னை கண்டார். நிகழ்ந்ததென்ன என்று அவர் முன்னரே உணர்ந்துகொண்டார். “முனிவரே, என்னை வாழ்த்துக! எஞ்சிய உடலையும் பொன்னென்றாக்கி அருள்க!” என்றேன். “நான் அதற்கு ஆற்றல் கொண்டவன் அல்ல. அது தெய்வவிளையாட்டு” என்றார்.

அவர் என்னை தவிர்க்கிறார் என உணர்ந்தேன். “அந்தணரே, என்னை வாழ்த்துக! என்மேல் கனிக!” என மன்றாடினேன். “நீயே உணர்க, நான் இயற்றிய வேள்வியில் நீ பாதிப்பங்கே பொன்னாகிறாய் எனில் அதன்பொருள் என்ன? என் ஆற்றலின் எல்லை அதுதான் என்றல்லவா? பாதிப்பங்கு பொன்னானவன் நீ மட்டுமல்ல. எஞ்சியதைப் பொன்னாக்கவே நானும் இங்கு தவமியற்றிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “என் எஞ்சிய உடலை பொன்னென்றாக்குவது எவ்வண்ணம்?” என்று நான் கேட்டேன். “இவை நம் வழியாக நிகழும் நம்மைக் கடந்தவை. உன்னை பொன்னென்றாக்கியது நான் நிகழ்த்திய வேள்வி. அதற்கு நிகரான பிறிதொரு பெருவேள்வி ஒன்றை சென்றடைக! அங்கு எரி மிச்சத்தில் இவ்வண்ணம் புரள்க! அது உன்னை முற்றிலும் பொன்னென்றாக்கும்” என்றார்.

நான் அவரை வணங்கி அங்கிருந்து கிளம்பினேன். அரசே, என் அகவை ஆயிரம் ஆண்டுகள் என்று உணர்க! என் உடல் பொன்னென்று ஆகியிருப்பதால் எனக்கு சாவில்லை. நான் இதுவரை நூற்றெட்டு பெருவேள்விகளை சென்றடைந்து அவ்வனலில் புரண்டிருக்கிறேன். அவை எவையுமே அறநிறைவு கொண்டவை அல்ல என்பதனால் என் உடல் பொன்னென்று ஆகவில்லை. சலித்து துயருற்று இங்கு வந்தேன். யயாதியும் தசரதனும் கார்த்தவீரியனும் செய்த வேள்விகளால்கூட நான் பொன்னுரு பெறவில்லை.

ஒருநாள் அறிந்தேன், இங்கு இப்பெருவேள்வியொன்று நிகழவிருப்பதை. எனவே இந்நகர் நாடி வந்தேன். இவ்வேள்வி அனைத்து வகையிலும் நிறைவு கொள்வதை எதிர்பார்த்து காத்திருந்தேன். கலை திகழும் அவைகளில் சென்று வேள்வி நிறைவின் கணம் அங்கு எழுகிறதா என்று பார்த்தேன். இல்லையென்று அறிந்தேன். எரி ஓம்பிய களங்களுக்கு சென்றேன். அங்கு சாம்பலில் விழுந்து புரண்டேன். அங்கும் நிறைவடையவில்லை இவ்வேள்வி என்று உணர்ந்தேன். உன் அவைக்கு வந்து அங்கு நிகழ்ந்த சொல்லை கேட்டேன். அங்கும் நிறைவடையவில்லை என்று உணர்ந்து இங்கு அன்னசாலைக்கு வந்தேன். இங்கு விரிந்திருக்கும் இந்த எச்சிலில் புரண்டால் என் உடல் பொன்னென்றாகும் என்று எண்ணினேன். இல்லை இங்கும் இவ்வேள்வி நிறைவடையவில்லை என்றே கண்டேன்.

“என் தவம் முழுதுறவில்லை. பொன்நிறைவு கொள்ளாமல் இதோ உன் முன் நின்றிருக்கிறேன். இந்த வேள்வி நிறைவுறவில்லை என்று உணர்க!” என்றது கீரி.

முந்தைய கட்டுரைகோடையின் சுவை
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு கடிதங்கள்-4