எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

ஏ.கே.எஸ்.பாபு வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். கண்டத்தில் ரவீந்திரநாத் தன் பெட்டிக்குள் இருந்து சிறிய புட்டியை எடுத்து திறந்தார். அதை ஜான் ஜோசப்பும் அப்துல் ஹமீதும் கங்காதரனும் வெறுமே பார்த்தனர். அவர் அவர்களின் பார்வையை உணரவில்லை. மேஜை மேலிருந்த கண்ணாடி டம்ளரில் எஞ்சியிருந்த நீரை திறந்திருந்த கழிப்பறைக் கதவு வழியாக உள்ளே வீசிவிட்டு புட்டியில் பாதியளவு இருந்த ரம்மில் விரற்கடை அளவு ஊற்றினார். தூக்கி அளவு நோக்கிவிட்டு பிளாஸ்டிக் குடுவையில் இருந்த நீரை அதில் கலந்தார். அவர் அதை குடிப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் அப்துல் ஹமீது குடிப்பதில்லை. பிறர் அவ்வப்போது குடிப்பவர்கள்தான். திரிச்சூரில் அவர்கள் கூடினால் குடிப்பது தவறுவதுமில்லை. ஆனாலும் எவரும் குடிக்க விரும்பவில்லை, ரவீந்திரநாத் அவர்களிடம் கேட்கவுமில்லை.

வாயைத் துடைத்துக்கொண்டு வந்த ரவீந்திரநாத் “நாட்டுச் சாராயம் போல் எரிகிறது, தமிழ்நாட்டிலிருந்து நேராக ஸ்பிரிட்டையே அனுப்பிவிடுகிறார்கள்” என்றார். ஜான் “இவன் எங்கே போனான்?” என்றார். கங்காதரன் “வருவான், அவன் வரும் வழியில் பழைய ஆட்கள் யாரையாவது பார்த்துவிடாமல் இருக்கவேண்டும்….” என்றார். கங்காதரன் ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டார். ஜான், கங்காதரன் இருவருக்கும் சிகரெட் தேவையாக இருந்தது. ஹமீது எழுந்து சென்று ஜன்னலோரம் நின்றுகொண்டார். வெளிக்காற்று அவருக்கு ஆறுதலாக இருந்தது. விடுதியின் பின்பக்கம் மாபெரும் மாமரம் ஒன்று நின்றிருந்தது. அதன் இலைசெறிந்த கிளைகள் அந்த மாடியறையின்  அதே உயரத்தில் எழுந்து சன்னல்காட்சியை பெரும்பகுதி நிறைத்தபடி நின்றிருந்தன. மாமரம் இளங்காற்றில் இலையுலைந்தது. இலைகளின் கறைமணமும் மிசிறு எறும்புகளின் புளிப்புமணமும் எழுவதாக ஹமீதுக்குத் தோன்றியது.

ரவீந்திரநாத் நன்றாக வியர்த்திருந்தார். காலர் இல்லாத வெள்ளை ஜிப்பாவை இழுத்து பின்னால் விட்டுக்கொண்டு கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார். கண்களை மூடி மின்விசிறிக் காற்றை முகத்தில் வாங்கினார். மின்விசிறியை மேலும் திருகும்படி அவர் கோருவார் என்று ஹமீது எண்ணினார். அதே கணத்தில் ரவீந்திரநாத் கண்திறந்து “அந்த குமிழை திருகு” என்று சுட்டிக்காட்டினார். “அது மூன்றில்தான் இருக்கிறது” என்றார் ஹமீது. ஜான் “அவனுக்கு காற்றுபோதவில்லை” என்றார். கங்காதரன் “அவனுக்குள் இருக்கும் காற்று போய்க்கொண்டிருக்கிறது…” என்றார். “மகனே, உள்ளே இருக்கும் காற்றுதான் சொந்தக் காற்று. வெளிக்காற்று உள்ளே போனால் அதே வேகத்தில் திரும்ப வந்துவிடும்”.

ரவீந்திரநாத் “புளிக்கவைக்காதே…. புளிப்பு வேண்டாம் கேட்டாயா? நான் ஏராளமான காற்றுக்களைப் பார்த்தவன்” என்றார். ஏப்பம் விட்டு உடலை அசைத்து “எத்தனையோ சுழல்காற்றுகளில் பறந்தலைந்த சருகு நான்… நீயெல்லாம் இங்கே அரைடிராயர் போட்டுக்கொண்டு அலைந்த காலத்தில் சி.பி.ராமசாமி அய்யரின் போலீஸ் என் தலைக்கு விலைபேசியது”. அவர் சிகரெட் மிச்சத்தை நாற்காலிக்குக் கீழேயே இருந்த பழைய சிகரெட் கூடினுள் குத்தி அணைத்துவிட்டு “இரண்டாயிரம் ரூபாய்… அன்று இரண்டாயிரம் ரூபாயில் திரிச்சூரில் ஒரு நல்ல வீடு வாங்கலாம்” என்றார். “உன் மனைவியைக் கொண்டு உன்னைக் காட்டிக்கொடுக்க வைத்து அதை நீ வாங்கியிருக்கவேண்டும்… திரிச்சூரில் ஒரு வீடு இன்றைக்கு இருபது லட்சம் போகிறது” என்றார் கங்காதரன். “அவள் அந்த வீட்டுடன் வேறு எவரையாவது சேர்த்துக்கொண்டிருந்தால்?” என்று ஜான் கேட்டார். “போடா” என்றார் ரவீந்திரநாத்.

கீழே காலடியோசைகளும் பேச்சொலிகளும் கேட்டன. “யார்?” என்று கேட்டபடி ரவீந்திரநாத் எழுந்தார். அவர் மிகையாகப் பதற்றப்படுவதாக ஹமீது எண்ணினார். “கவிஞரின் குரல் அல்லவா?” என்றார் கங்காதரன். “கிளிச்சத்தம்”. ராமவர்மாவின் குரல் சற்றே உடைந்தது. அவரை கிளிவர்மா என்று அவருடைய கல்லூரி மாணவர்கள் அழைப்பதுண்டு. அவர் ஓய்வுபெற்ற நாளில் ஒரு மாணவன் “கிளி பறந்து போகிறது, கூடு எஞ்சுகிறது” என மிக மிக உருக்கமான கற்பனாவாதக் கவிதையை வாசிக்க அவையே வெடித்துச் சிரித்து ஆர்ப்பரித்தது. யாருடன் பேசிக்கொண்டு வருகிறார் என்று தெரியவில்லை. ராமவர்மா கதவைத் திறந்து உள்ளே வந்து திரும்பி வெளியே நின்றிருந்த இளைஞனிடம் “உள்ளே வா” என்றார். அவன் கலைந்த தலையும், பதறும் கண்களும், பலநாட்கள் வளர்ந்த தாடியும், மெலிந்த உடலுமாக மனநோய் கொண்டவன் போல் தோன்றினான்.

“கிளியே, இவன் யார் நக்ஸலைட்டா?” என்றார் ரவீந்திரநாத். “பாடமா, பேதமா?” என்று ஜான் சிரித்தார். அப்போது ‘கலா சாம்ஸ்காரிக வேதி’யின் ‘மூலபாடம்’ என்னும் இதழ் வந்துகொண்டிருந்தது. தொடங்கி ஆறுமாதம் கடந்ததும் கலா சாம்ஸ்காரிக வேதி உடைந்தது. விப்ளவ சாம்ஸ்காரிக வேதி என இன்னொரு அமைப்பு உருவாகி பாடபேதம் என்று ஓர் இதழ் வெளிவந்தது. “அடுத்த இதழ் பேதாபேதபாடம் என்ற தலைப்பில் வெளிவரலாம்” என்று எம்.கே சொன்னார். “இங்கே அத்வைத தரிசனம் வளர்ந்த வழி அதுதான். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், சுத்தாத்வைதம், அத்வைதாத்வைதம்…”. கங்காதரன் கூர்ந்த கண்களுடன் “கடைசியாகச் சொன்னது யாருடையது?” என்றார். “என்னுடையது, நான் இப்போது உருவாக்கியது” என்று எம்.கே சொன்னார். அறை வெடித்துச் சிரித்தது. எம்.கே பொதுவாகச் சிரிப்பதில்லை. நகைச்சுவைக்குப் பின் ஆழமாக பீடியை ஒருமுறை இழுப்பது அவருடைய வழக்கம்.

ராமவர்மா “இவன் தமிழ்நாட்டுப் பையன்… கதாசிரியன். மலையாளம் தெரியும்” என்றார். “உனக்கென்று கிறுக்கர்கள் தேடிவந்துவிடுகிறார்கள்” என்றார் ரவீந்திரநாத். “இவன் என்ன வகையான வளர்ப்பு? புரட்சியா, இருத்தலியல் சிக்கலா, சாதாரண மலச்சிக்கலேதானா?”. ராமவர்மா “வேதாந்தம்” என்றார். “நான் யார்! இதெல்லாம் என்ன! ஏன்! எதற்காக?” என்று கைவிரித்து நாடகம்போல சொன்னார். ஜான் தொடையில் அறைந்து சிரித்து “சுத்தம்…. இனி ஒரு முப்பதாண்டுக்காலம் பேய் உட்காரவிடாது. தத்துவமும் மூலநோயும் ஒன்றுதான்”. ரவீந்திரநாத் “மிகச்சரி, உள்ளிருக்கும் ஒன்று தேவையில்லாமல் வெளியே நீட்டி உலகுடன் உரசிக்கொண்டு புண்ணாகிறது” என்றார். ராமவர்மா சிரித்தபடி இளைஞனிடம் அமரும்படிச் சொன்னார்.  “கடைசியில் ஒன்று வெடிமருந்து தீர்ந்த புஸ்வாணம் போல எங்காவது போய்விழுவான். அல்லது வெறுங்கையில் விபூதி எடுத்து வாழ்க்கையில் நிறைவடைவான்” ஹமீது “விடுங்கள்… சும்மா பேசிக்கொண்டே” என்றார்.

ராமவர்மா “பாபு வரவில்லையா?” என்றார். “அவன் வந்துகொண்டிருக்கிறான் என்றார்கள்… அவனைத்தான் எதிர்பார்த்துத்தான் இங்கே அமர்ந்திருக்கிறோம்”. ரவிவர்மா “சிகரெட் உண்டா?” என்றார். ரவீந்திரநாத் தேடிவிட்டு “இல்லை, ஒரு பாக்கெட் வாங்கி வரச்சொல்கிறேன்” என்று எழுந்தார். அப்போது கீழிருந்து பேச்சுக்குரல் கேட்டது. ஏ.கே.எஸ்.பாபுவும் ஓவியர் கே.வி.பாலனும் மேலேறி வந்தனர். மரத்தாலான படி ஓசையிட்டது. ஓவியர் வழக்கமான வெடிக்குரலில் “என்னடா இங்கே? அரசைக் கவிழ்க்க சதியா?” என்றார்.  பாபு “வரும்வழியில் பாலன் அண்ணனைப் பார்த்தேன்” என்றார். ஓவியர் “நான் இங்கே ஓரியண்ட் புக்ஸ் தாமஸைப் பார்க்கவந்தேன். பயல் எனக்கு பணம் தரவேண்டும். அரைமணிநேரம் அவனுடைய பிலாக்காணத்தைக் கேட்டேன். இருநூறு ரூபாய் பிடுங்கிவிட்டேன்… அந்தப் பிலாக்காணம் மண்டையிலிருந்து போகவேண்டுமென்றால் அதில் ஐம்பது ரூபாய்க்கு குடிக்கவேண்டும்,” அவர் ரவீந்திரநாத்தை கூர்ந்து நோக்கி “இருக்கிறதா?” என்றார். “அங்கே, பையில்” என்று ரவீந்திரநாத் சுட்டிக் காட்டினார். ஓவியர் எழுந்து சென்று பையை எடுத்து உள்ளே கைவிட்டு துழாவி புட்டியை எடுத்தார். அவர் அதிலிருந்த திரவத்தை கண்ணாடி டம்ளரில் விட்டு நீர் கலக்கும் ஓசை கேட்டது.

ரவீந்திரநாத் வெளியே சென்று பையனிடம் சிகரெட்டுக்கு காசு கொடுத்துவிட்டு உள்ளே வந்தார். “டீ கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன்” என்றபடி அமர்ந்தார். ராமவர்மா கீழே கிடந்த சிகரெட் துண்டு ஒன்றை எடுத்து அதை எஞ்சிய தீக்குச்சியால் கொளுத்தி இருமுறை ஆழ இழுத்தார். அதற்குள் கைசுடும்படி அனல் அணுக அதை கீழே போட்டார். குறுந்தாடியில் புகை பரவி மெல்ல பிரிந்து கலைந்தது. ஹமீது ஓர் ஒவ்வாமையை உணர்ந்தார். உடனே கிளம்பிச் சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அங்கிருப்பவர்கள் பேச விழைவதைப் பேசவில்லை, அதை பேசத்தயங்கி வேறு எளிய வேடிக்கைகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் கனைத்து “ஏதோ செயல்திட்டம் இருப்பதாக  கண்டன் சொன்னானே” என்றார்.

“செயல்திட்டம் இதுதான். நான் சொல்கிறேன்” என்று ஓவியர் உரத்தகுரலில் இடைபுகுந்தார். “நான் ஏற்கனவே கண்டனிடம் சொன்னேன். பாபுவிடமும் அதைத்தான் பேசிக்கொண்டே வந்தேன். ஒரு நல்ல நினைவுமலர், உடனடியாக. ஒரு ஆறுமாத காலத்திற்குள்”. ஜான் “நினைவுமலரா? இங்கே இரங்கல்கூட்டத்தில் பேசப்பட்டதைக் கேட்டபோது இவர்கள் யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் இவனிடம் கேட்டேன்… அன்பான மனிதர், கனிவான மனிதர், நல்லவர்… யாரோ கத்தோலிக்கப் பாதிரியைப் பற்றி சொல்கிறார்கள் என்று இவன் சொன்னான்”.

கங்காதரன் “நம் நம்பிக்கை அப்படி. செத்தவர்கள் தேவர்களாகிவிடுகிறர்கள். ஆகவே எல்லா தேவகுணங்களும் அவர்களுக்கு வந்துவிடுகின்றன” என்றார். ஜான் “போகிறபோக்கைப் பார்த்தால் கிழவருக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்து படையலிட ஆரம்பித்துவிடுவார்கள் போல” என்றார்.

“அவரைப்போய் அன்பானவர் என்று சொல்வது என்றால்…” என்றார் கங்காதரன். “நான் கார் விபத்தில் சிக்கி நாற்பதுநாள் ஆஸ்பத்திரியில் கிடந்தேன். நடுவே இரண்டுமுறை இங்கே வந்துபோனார். என்னை வந்து பார்க்கவில்லை. நான் திரும்ப அவரைச் சந்தித்ததும்  நேராகவே மிலான் டிலாஸின் ‘ரைஸ் ஆன்ட் ஃபால்’ பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்”. ஜான்  “அவருக்கு எவர் மீதும் அன்பு இருப்பதாகத் தோன்றியதில்லை” என்றார். “மகன் மேலும் மகள்மேலும் அன்பு இருந்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் அதைக் காட்டியதில்லை. அவர்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில்லை”.  ரவீந்திரநாத் “மனிதகுலம் மீது அன்பானவர்கள் தனிமனிதர்கள் மேல் அன்பு கொள்வதில்லை. தனிமனிதர்கள் மேல் அன்பாக இருப்பவர்களுக்கு மனிதகுலம் மீது அன்பில்லை” என்றார். “ஹமீது “யார் சொன்னது?” என்றார். “ஏன் நான் சொல்லக்கூடாதா?” என்றார் ரவீந்திரநாத்.

“கொடுமையிலும் கொடுமை அவரை மகாகவிஞர் என்று எம்.பி.நாராயணன் நாயர் சொன்னது… எம்கே அதைக் கேட்டிருந்தால் ப்பூ என்று காறித்துப்பியிருப்பார். கவிதை எழுத வருமென்றால் நான் ஏன் இதையெல்லாம் செய்கிறேனடா புல்லே என்பார்” என்றார் கங்காதரன். “ஆனால் அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார்” என்று ஜான் சொன்னார். ராமவர்மா “எழுதி எழுதித்தானே தான் ஒரு கவிஞர் இல்லை என்று அவர் கண்டுகொண்டார்” என்றார். “கட்டுரை எழுதி தான் கட்டுரையாசிரியர் அல்ல என்று தெரிந்துகொண்டார். மேடையில் பேசிப்பேசி பேச்சாளர் இல்லை என்று தெரிந்தது. கட்சி ஆரம்பித்து அரசியல்வாதி அல்ல என்ற அறிவை அடைந்தார். பாவம் கிழவர், வாழ்க்கை முழுக்க ஞானத்தை அடைந்தபடியே இருந்தார்”.

ஓவியர் மது அளித்த மேலதிகச் சீற்றத்துடன் “நாம் ஒரு நினைவு மலர் வெளியிடுகிறோம்” என்றார். “நல்ல நினைவு மலர். அசலானது. அதில் நாம் எழுதினாலே போதும்”. ராமவர்மா “அதில் அவருடைய குறிப்பிடத்தக்க சில கருத்துக்களை தொகுத்து அளிக்கலாம்” என்றார். ஜான் “உண்மையில் அவர் ஒரு உரையாடல்காரர். அவருடைய ஊடகமே அதுதான். உரையாடல்வழியாக வழிதவறிச் சென்று திகைத்து நின்றிருக்கும் எம்.கேதான் நம் காலகட்டத்தின் மாபெரும் அறிவுஜீவி. ஒரு கொள்கையாக அதை கூர்மையாக்கியிருந்தால், ஒரு நூலாக ஆக்கியிருந்தால், அவர் சங்கரர், ராமானுஜர்,  மத்வர் வரிசையில் வரவேண்டிய தத்துவ ஞானி” ஹமீது “ஏன் அவருடைய ஆசிரியர் எம்.என்.ராயை சேர்க்க மாட்டாயா?” என்றார். “இதோபார், ராய் பேரறிஞர். நம் குருவுக்கு குரு. ஆனால் அவர் வறண்ட அறிஞர். தரிசனம் இல்லாதவர். கவிதை இல்லாதவர்களிடம் தரிசனம் வெளிப்படாது. சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் பெரும் கவிஞர்கள், கவிதை எழுதாத கவிஞனே தத்துவ ஞானி ஆகமுடியும்”

“நாம் ஒரு மலர் போடலாம்… அவர் நம்மிடம் பேசியதை எழுதலாம். அது அவர் வாழ்க்கைமுழுக்க என்ன செய்தார் என்று காட்டும்” என்று ஓவியர் பாலன் சொன்னார். “ஒரு புத்தகம் கூட எஞ்சாத, ஓர் அமைப்பைக்கூட உருவாக்காத இந்த மனிதர் தன் வாழ்நாள் சாதனையாக புதிய சிந்தனை அலை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். ஓவியக்கலையில், இலக்கியத்தில், சினிமாவில், அரசியல் சிந்தனையில் அவருக்கு பின் அனைத்தும் மாறிவிட்டிருக்கின்றன. கேரள அறிவியக்கத்தின் எல்லா நவீன வளர்ச்சிகளுக்கும் அவரே தொடக்கப்புள்ளியாக இருக்கிறார்”. ஜான் “ஆமாம், அவரை சி.ஐ.ஏ ஒற்றன் என்றார்கள். திரிபுவாதி என்றார்கள். தனிமனிதவாதம் பேசுகிறார் என்றார்கள். இன்று எவருக்கும் அவருடைய பங்களிப்பை பற்றி சந்தேகமே இல்லை. அவர் இல்லாமல் இந்தக் காலகட்டத்துச் சிந்தனையே இல்லை” என்றார்.

ராமவர்மா “அது உண்மை. ஆனால் அவருடைய பேச்சு மின்னல் வெட்டுவதுபோல. குழப்பமாக பேசும்போதுதான் அவர் தன் உச்சத்தை அடைந்தார். நாம் அந்தக்குழப்பத்தை நம்மில் ஏற்றிக்கொண்டு நமது பாதைகளில் நடந்தோம். நெடுந்தொலைவு சென்று நம் சிந்தனைகளையும் கலையையும் உருவாக்கிக் கொண்டோம். இன்று நாம் அவருடைய கருத்துக்களாக நினைவுகூர்வதெல்லாம் நாம் வளர்த்துக் கொண்டதாகவே இருக்கும். அவையெல்லாம் தெளிவான சிந்தனைகள். திட்டவட்டமான கொள்கைகள். அவர் அவற்றைச் சொல்லவில்லை. அவர் சொன்ன குழம்பும் சொற்கள் மறைந்துவிட்டன. முழுமையாகவே மறைந்துவிட்டன. அவை விதைகள். முளைத்தபின் விதைகள் எஞ்சுவதில்லை. இன்றிருக்கும் செடிகளும் மரங்களும்தான் அந்த விதைகளுக்கு சான்று” திரும்பி அந்த இளைஞனைச் சுட்டிக்காட்டி “இதோ மூன்றாம் தலைமுறை வந்திருக்கிறது. நாம் அறியாத நெடுந்தொலைவிலிருந்து. இன்னொரு மொழியில் இருந்து” என்றார்.

டீயும் சிகரெட்டும் வந்தது. அந்த தருணம் அவர்கள் அனைவருக்கும் தேவையாக இருந்தது. அனைவரும் டீ எடுத்துக்கொண்டனர். தமிழ் இளைஞனிடம் ஜான் “டீ எடுத்துக்கொள்” என்றார். அவன் நாணத்துடன் “வேண்டாம்” என்றான். “எடுத்துக்கொள். இங்கே கூச்சமெல்லாம் தேவையில்லை. இது எம்.கே தங்கும் அறை. அவர் எவருக்கும் மேலும் கீழும் அல்ல. எல்லாருக்குமே அவர் எம்.கேதான்” என்றார். அவன் டீயை எடுத்துக்கொள்ள  கங்காதரன் “சிகரெட் வேண்டுமா?” என்றார். “அய்யோ” என்று அவன் பதறினான். ஜான் “வேண்டுமென்றால் ரம்மும் எடுத்துக்கொள். நாசமாகப் போக கம்யூனிசத்துக்கு அடுத்தபடியாக குடிதான் சிறந்த வழி” என்றார். “வேதாந்தமும் சற்றும் சளைத்தது அல்ல” என்றார் கங்காதரன். “வேதாந்தம் ஒரு கைமுட்டி அடித்தல்.  அதனால் எந்தச் சிக்கலும் இல்லை.  அகம் பிரம்மாஸ்மி. ஆனால் மிஞ்சிப்போனால் கண்பார்வை போய்விடும் என்கிறார்கள்” என்றார் ரவீந்திரநாத். “வைத்யமடத்தின் மதனகல்ப லேகியம் அதற்கு நல்லது. போதேஸ்வரம் சுவாமிஜி மாதம் ஒரு கிலோ வாங்குவதாகக் கேள்வி” என்றார் கங்காதரன்.

அவர்கள் சிகரெட் பற்றவைத்துக் கொண்டபோது ஏ.கே.எஸ்.பாபு “நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரைப் பார்த்தேன்” என்றார். அனைவரும் அதை எதிர்பார்த்திருந்தனர் என அமைதி காட்டியது. அவர்களை ஒருமுறை சுற்றி நோக்கியபின் “என்னிடம் எம்கே மரணம் பற்றி கேட்டார்” என்று  ஏ.கே.எஸ்.பாபு சொன்னார். “ஓ” என்று ஜான் வெறுமே சொன்னார். “என்ன நடந்தது, அன்றைக்கு யாரெல்லாம் சந்தித்தார்கள் என்று கேட்டார்”. கங்காதரன் எரிச்சலுடன் “என்ன நடந்தது? அவருடைய மகளின் திருமணம். அவருக்குத் தெரிந்த அத்தனை பேரும் வந்திருந்தார்கள். நண்பர்களும் எதிரிகளும். எல்லாரும் சந்தித்தார்கள், பேசினார்கள், சிரித்தார்கள், பீடி பிடித்தார்கள். வேறென்ன?”.  ஏ.கே.எஸ்.பாபு “இல்லை, வேறேதும் நடந்ததா அவர் மனம் வருந்தும்படி என்று முதலமைச்சர் கேட்டார்” என்றார். “சொல்லவேண்டியதுதானே, கம்யூனிஸ்டுக் கட்சி சாராயக் காண்டிராக்டர்களின் தயவில் ஆட்சியில் இருப்பதனால் மனம் வருந்தியிருந்தார் என்று” என்றார் ரவீந்திரநாத்.

ஹமீது “நடுவே பேசவேண்டாம்” என்றார். “சொல், அவர் ஏதாவது சொன்னாரா?”. பாபு சில கணங்களுக்குப் பின் “தெளிவாகச் சொல்லவில்லை. அவர் இருக்கும் இடத்தில் இருந்து அப்படிப் பேசமுடியாது. ஆனால் அடாப்ஸி ரிப்போர்ட் அவர் கைக்குச் சென்றிருக்கிறது. அதில் ஏதோ இருக்கிறது”. கங்காதரன் “அவர் என்ன செய்யப் போகிறாராம்?” என்றார். “ஒன்றும் செய்யப்போவதில்லை. முழுமையாக விசாரித்திருக்கிறார். சந்தேகத்திற்குரிய ஒன்றும் இல்லை என்று தெரிந்தபின் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்”. சற்றுநேரம் மீண்டும் அமைதி. பாபு “அவர் ஐம்பதுகளில் எம்.கே.யின் பயிற்சிவகுப்புகளுக்கு வந்திருக்கிறார். எம்.கே. ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தபோது… அவரை என் ஆசிரியராகவே நினைக்கிறேன். அவருடைய பெயர் நிலைக்கவேண்டும். இப்படி ஒரு செய்தி வெளிவந்தால் அவருடைய வாழ்க்கையின் செய்தி முழுமையாகவே வீணாகிப்போகும் என்றார்”.

கங்காதரன் பெருமூச்சுவிட்டார். ஹமீது மீண்டும் கிளம்பிச் சென்றுவிடவேண்டும் என்ற உந்துதலை அடைந்தார். சற்றுநேரம் அமைதி நிலவியது. ஓவியர் “இன்னொரு டீ வரலாம், இல்லையா?” என்றார். ரவீந்திரநாத் எழுந்து வெளியே சென்றார். ராமவர்மா “நான் உண்மையான சந்தேகத்தைத்தான் கேட்கிறேன். இப்படி ஒரு செய்தி வெளிவந்தால் அது எப்படி அவருடைய வாழ்நாள் சாதனைகளை இல்லாமலாக்கும்?” என்றார். ஹமீது சீற்றத்துடன் “வாழ்வதற்காகத்தான் சிந்தனைகள். சாவதற்கு தத்துவம் தேவையில்லை” என்றார்.  “வாழத்தெரியாதவர்கள் சொன்ன சிந்தனைகளுக்கு என்ன மதிப்பு? சாவதற்கு எதற்கு தத்துவம்?”

“வாழ்வதற்கும் தத்துவம் தேவையில்லை. வாழ்க்கையை புரிந்துகொள்ளத்தான் தத்துவம் தேவை. சாவைப் புரிந்துகொள்ளவும் தத்துவம் தேவைதான். தத்துவ சிந்தனைகளில் நேர்பாதி சாவைப்பற்றியதே” என்றார். ஹமீது சீற்றத்துடன் “இதையெல்லாம் என்னிடம் சொல்லவேண்டியதில்லை. இங்கே கொஞ்சநாளாகவே அத்தனைபேரும் பேசுவது தற்கொலை பற்றித்தான். உண்மையான தத்துவப்பிரச்சினை தற்கொலைதான், காம்யூ. சாவதும் ஒரு கலை, சில்வியா பிளாத். அவ்வளவுதானே? புதிதாக ஒன்றும் இல்லை அல்லவா?” என்றார். அவருக்கு மூச்சிளைத்தது. “மொத்தமாக ஒரு சமூகத்திற்கே மனச்சோர்வு. நரம்புத்தளர்ச்சி. அவ்வளவுதான் சொல்வேன்”.

ராமவர்மா “நான் சொல்வது அது அல்ல. சோர்வு இல்லாமல், தளர்ச்சி இல்லாமல், ஒரு தற்கொலை நடக்கக்கூடாதா என்ன? நன்றாகச் சிந்தித்து தெளிவான மனநிலையில் எடுக்கப்பட்ட ஒரு சுபமுடிவு? செய்வதெல்லாம் செய்தாகிவிட்டது என்று ஒருவருக்கு தோன்றும்போது, இனி செய்யவேண்டியதில்லை என்று தெரிந்துவிடும்போது… மங்கலமான ஒரு நிறைவாக அது நிகழக்கூடாதா என்ன? சும்மா கேட்டேன்” என்றார். பாபு “உண்மையில் அன்று அவரே என்னிடம் அதைத்தான் ஒருமாதிரி சொன்னார்” என்றார். “அன்று குருவாயூரில் திருமணம் முடிந்து மேலே சென்றோம். சைத்ரம் விடுதியில் அவருக்கு அறை. சடங்குகள் முடிந்தபோது நானும் அவரும் மட்டும்தான் விடுதியில் எஞ்சினோம். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுடன் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். நல்ல உச்சிவெயிலில் அந்தச் சடங்கு நடந்தது. ஒருமணிநேரம் இழுத்துவிட்டது. எல்லாரிடமும் விடைபெற்று கிளம்பிச் செல்ல அவ்வளவு நேரம் ஆகிவிடும்” என பாபு தொடர்ந்தார்.

எம்.கே. களைத்திருந்தார். மேலே செல்லும்போது சுரன் பின்னால் வந்தான். வழக்கம்போல நன்றாகக் குடிதிருந்தான். “மிஸ்டர் எம்.கே ஐயாம் சுரேன். சுரேந்திரநாத். நாட் சுரேந்திரநாத் தத்தா. நாட் சுரேந்திரநாத் பானர்ஜி. ஒன்லி சுரேன்…” என்றான். எம்.கே. என்னிடம் “அவனுக்கு ஏதாவது கொடுத்து அனுப்பு” என்றார். நான் நூறுரூபாய் கொடுத்தேன்.  அவன் அதை வாங்கிக்கொண்டு உரக்க “பணத்தால் என் வாயை அடைக்கமுடியாது. மிஸ்டர் எம்கே, ஹூ ஆர் யூ? வாட் ஆர் யூ? யூ அச்சீவ்ட் வாட்? ஓக்கே! யூ ஆர் கிரேட். ஆனால் நீ ஒரு பெரிய தோல்வி. யூ ஆர் எ டிஸாஸ்டர். யூ ஆர் நதிங்பட் என் எம்ப்டி ஈகோ.. நீ ஒன்றுமே செய்யவில்லை. நீ எழுதியதெல்லாம் குப்பை. நீ எடுத்த சினிமாவை எவரும் பார்க்கவில்லை. நீ உருவாக்கிய மாணவர்கள் எவருக்கும் நீ சொன்னதில் நம்பிக்கை இல்லை. நீ ஆரம்பித்த கட்சியை கலைக்களஞ்சியத்தில்தான் தேடவேண்டும்… ஹஹஹஹா!” என்றான்.

எம்.கே. என்னிடம்  “இன்னொரு நூறுரூபாய் கொடு” என்றார். இன்னொரு நூறுரூபாயை பார்த்ததும் சுரன் பாய்ந்து பிடுங்கிக்கொண்டான்.  “வெரிகுட், அங்கேதானே இருப்பீர்கள்? நான் மீண்டும் வருகிறேன். என் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அறைக்குச் சென்றதும் எம்.கே. மின்விசிறியைப் போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்துக்கொண்டார். நான் “தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டேன்.  “ஆமாம்” என்றார். “ஒரு தலைவலி மாத்திரை வேண்டும், இருக்கிறதா?” என்றார்.  “இல்லை” என்றேன்.  “என் பெட்டிக்குள் ஒரு சிறிய புட்டியில் ரத்த அழுத்த மாத்திரை இருக்கிறது, அதை எடு” என்றார். நான் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்தேன்.விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு படுத்தார். சற்று நேரத்திலேயே இயல்பாகிவிட்டார்.

ஜான் “அந்த மாத்திரைப்புட்டி காலியாக இருந்தது என்றார்கள்” என்றார். ஹமீது “அவன் அளித்த கவலையாக இருக்குமோ?” என்றார். “அவன் இப்படி ஆகி நெடுநாட்கள் ஆகின்றன. அவர் அவனை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை” என்றார் ரவீந்திரநாத். ஜான் “டீச்சர் போன போது கொஞ்சம் வருத்தப்பட்டார். ஆனால் அதுவும் ஒருமாதம்தான். பெண்ணுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்றுகூட கவலைப்படவில்லை. அவளே முடிவுசெய்து சொன்னபோதுகூட சாதாரணமாகத்தான் ஏற்றுக்கொண்டார்”. என்றார். கங்காதரன் “ஆனால் அவள் திருமணமாகிப் போனது அவருக்கு ஓர் ஆறுதல்தான்” என்றார். “திருமணநாளிலேயே அந்த நிம்மதியை அவரிடம் பார்க்கமுடிந்தது”. ஹமீது “அவள் போனபிறகு தன்னைப் பார்த்துக்கொள்ள எவரும் இல்லை என நினைத்தாரா என்ன?” என்றார். ஜான் ”எவர் எவரைப் பார்த்துக் கொள்வது!” என்றார். “அவர் அப்படியெல்லாம் நினைக்கக்கூடியவர் அல்ல. இந்த உலகின் அன்றாட உணர்ச்சிகளுடன் அவருக்கு தொடர்பே இல்லை”

கங்காதரன் “அவர் நிறைவாகத்தான் இருந்தார். சின்ன விஷயங்கள் அவரை பெரிதாகப் பாதிப்பதில்லை” என்றார். “அவர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தில், அல்லது ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைத்தான் கண்டிருக்கிறேன். ஒருதடவை சுரன் நாடக ஒத்திகையில் டி.எஸ்.நாராயண மேனனை அடித்துவிட்டதைப் பற்றிச் சொன்னேன். அவர் அதை ஒரு நிமிடம்தான் கேட்டார். மனம் உடனே பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்குத் திரும்பிவிட்டது. அவருக்கு இதெல்லாம் கவலையை அளிப்பதே இல்லை”. ராமவர்மா பாபுவிடம் “அவர் அன்று என்ன சொன்னார்?” என்றார். “சுரன் சொன்னதைப்பற்றி கேட்டார். அவருடைய வாழ்க்கையின் பொருள் என்ன என்று நான் நினைக்கிறேன் என்றார். நான் அவரிடமிருந்தே நவீன இலக்கியம், புதிய சினிமா, மார்க்ஸியத்தைக் கடந்த அரசியல் கொள்கை எல்லாமே தொடங்குகின்றன என்றேன். அது அவருக்கு நிறைவை அளித்தது”.

அவர் அன்று பேசும் மனநிலையில் இருந்தார். ஒரு பீடி பற்றவைத்துக் கொண்டு ஆழமாக இழுத்தார் “நீ சொன்னது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அப்படி ஒருவருடைய சாதனையை அல்லது பங்களிப்பை தெளிவாக வரையறை செய்துவிட முடியாது. லெனினையோ காந்தியையோ பற்றிக்கூட அப்படி தெளிவாகச் சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் பங்கு என்ன என்று தெளிவாகத் தெரியவும் செய்யும்” என்றார். “அவதாரங்களுக்கு பிறவிநோக்கம் உண்டு. அசுரர் அரக்கர் ஆகியோருக்கும் பிறவிநோக்கம் உண்டு. நான் அவதாரமா அசுரனா அரக்கனா தெரியவில்லை. ஆனால் பிறவிநோக்கம் என நான் நினைத்ததைச் செய்துவிட்டேன். என்னிடம் வந்ததை பெருக்கி கைமாற்றிவிட்டேன். திரும்பிப் பார்க்கையில் ஒருநாளையும் வீணடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆகவே முழுநிறைவையே அடைகிறேன்” என்றார்.

“திரும்பத் திரும்ப என்னிடம் நானே கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் மனக்குறை இருக்கிறதா? போதாமையை உணர்கிறேனா? நானே பொய்யாக உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கை அல்லதானே இது? பலமுறை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான். இல்லை, எந்த குறையும் இல்லை. செய்யமுடிந்ததைச் செய்துவிட்டேன். ஒரு துளிகூட மிச்சமில்லாமல். இனி செய்வதற்கு என்று ஒன்றுமே இல்லை. இனி ஏதேனும் செய்வதென்றால் செய்ததை பற்றி பெருமையடித்துக் கொண்டிருக்க வேண்டும், நினைவுகளை தொகுத்துக் கொண்டிருக்க வேண்டும், அவ்வளவுதான். அல்லது திரும்பத் திரும்ப செய்தவற்றையே செய்து கொண்டிருக்கவேண்டும். எல்லாமே முதுமையின் அசட்டுத்தனம். அதைத்தான் இ.எம்.எஸ் செய்கிறார். நானும் அதைத்தான் செய்யவேண்டும்” அவர் முகம் தியானத்தில் இருப்பதுபோல தோன்றியது. பீடிப்புகையை ஊதினார். அது அவர்மேல் மெல்லிய மேகக்கீற்றுபோல பிரிந்து அறைக்காற்றில் கலந்தது.

நான் “அப்படியெல்லாம் இல்லை. இ.எம்.எஸ் இன்றைக்கும் கப்பலின் காப்டன்தான். அவருடைய வரலாற்றுப் பணியை ஆற்றுகிறார்” என்றேன். “இல்லை, அது ஒரு பாவனை. அவரைச்சூழ்ந்து நின்று அத்தனைபேரும் நடிக்கிறார்கள். அந்த நடிப்பு அவருக்கும் வசதியாக இருக்கிறது. நமது மெத்தையில் நாமே படுத்துப் படுத்து உருவாக்கும் பள்ளம் போன்றது நாம் வரலாற்றில் உருவாக்கும் இடம். அது நமக்கு மிக வசதியானது, இதமானது, மென்மையானது. அதில் படுத்துக் கொண்டு சுற்றிலும் இருக்கும் காலத்தை உணராமல் கடந்த காலத்தை கற்பனை செய்துகொள்வதுதான் பலரும் செய்வது. முதியவர்கள் அப்படி ஒர் உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த உலகை அவர்களின் அருகே வருபவர்களும் உணர்கிறார்கள். அவர்களும் அந்த உலகில் நுழைந்து அதை வாழ ஆரம்பிக்கிறார்கள். கடைசியாக இ.எம்.எஸ்ஸை பார்க்கப் போயிருந்தேன். அவரைச் சுற்றி இளைஞர்கள். ஆனால் அத்தனை பேரும் ஐம்பது அறுபதுகளில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்…”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை. அவர் சொன்னார். “அல்லது கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்க்கவேண்டும். பழுத்து உதிர்ந்து மரத்தின் காலடியில் நாம் கிடப்பதை மெய்யாகவே உணரவேண்டும். அதற்கு மிகப்பெரிய ஆற்றல் வேண்டும். அது ஒரு சுயவதை. கழிவிரக்கமோ கசப்போ இல்லாமல் அதைச்செய்ய முடியும் என்றால் நன்று. ஆனால் அது கர்மயோகிகளால் மட்டுமே முடியும். அறிவுஜீவிகளால் முடியாது. நான் கர்மயோகி அல்ல. கர்மயோகிகளான பல காந்தியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் எனக்குத் தெரியும். நான் அவர்களைப் போன்றவன் அல்ல. நான் வெறும் அறிவுஜீவி. என்னால் அது முடியாது”

“சாதாரண மனிதர்களால் முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் முடியவே முடியாது என்று இப்போது காண்கிறேன். சாமானியர் முதுமையில் குமுறிக்கொண்டே இருக்கிறார்கள். உலகம் தன்னைவிட்டு போய்விட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. ஆகவே இளைய தலைமுறையினரை வதைக்கிறர்கள். அவர்கள் இளமையாக இருப்பதே தவறு என்று எண்ணுகிறார்கள் என்று தோன்றும். சிரிப்பு, கொண்டாட்டம் எதுவுமே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. இளையோரின் வெற்றியைக்கூட அவர்கள் கசப்புடன் பார்க்கிறார்கள். ஏன் சுவையான உணவையே வெறுக்கிறார்கள். ஆனால் இங்கே அத்தனைபேரும் அந்தக் கசப்பை அன்பினால் வரும் ஆற்றாமை அல்லது பதற்றம் என்று மாற்றிச் சொல்ல கற்றிருக்கிறார்கள்” எம்.கே. சிரித்து “இங்கே பெரும்பாலான கிழவர்கள் இளைஞர்களைக் கண்டிப்பதும் வசைபாடுவதும் அவர்கள் இளைஞர்கள் என்பதற்காக மட்டும்தான்…” என்றார்.

“முதுமையில் கனிந்து மகிழ்ந்திருக்கும் ஒரு சாமானியனை நான் பார்த்ததில்லை. அப்படி ஒருவர் இருக்கவே முடியாது. முதுமையில் கனியவேண்டும் என்றால் முழு வாழ்வும் ஒரு யோகமாக இருக்கவேண்டும்… அறிவுகூட யோகமாகலாம். ஞானயோகம் என்பார்கள்.  அறிவு யோகம் ஆகவேண்டும் என்றால் அது எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படவேண்டும். பயன்கருதா பயில்தலாக நடக்கவேண்டும். இயற்கையின் நிகழ்வுகள்போல பிரபஞ்சவிதிகளுடன் இணைந்து நிகழவேண்டும். அறிவுஜீவியால் அதை செய்யமுடியாது. அவன் செய்வதெல்லாம் பயன்நோக்கிய பணிகள். இலக்கு நோக்கிய பயணங்கள்”

நான் அவர் சோர்வுற்றிருக்கிறார் என எண்ணினேன். “நீங்கள் உருவாக்கிய சிந்தனைகள் இன்று வளரவில்லை என நினைக்கிறீர்களா? நாளை அவை மறைந்துவிடும் என எண்ணுகிறீர்களா?” என்றேன். “அப்படி அல்ல என்றுதானே சொன்னேன்? ஆனால் எவருடைய சிந்தனையானாலும் அதில் ஒரு சிறுபகுதியே முளைத்து பெருகும். அப்படி முளைத்தவை என்னுடையவை அல்ல. அவை பிறரிடமே வளர்ந்திருக்கும். முளைக்காமல் போனவையே என்னிடம் எஞ்சியிருக்கும்” என்றார். “நான் என்ன சொல்கிறேன் என்று எனக்கே தெளிவில்லை. இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். சிந்தனைகளின் ஆயுளைவிட மனித ஆயுள் நீளமானது. ஆகவே நீளமான ஆயுள் கொண்ட மனிதன் தன் சிந்தனைகளின் சாவைப் பார்த்தே ஆகவேண்டும்”.

ஹமீது  “அவருக்கு சென்ற மேமாதம் அறுபத்தொன்பது வயதுதான்” என்றார். அவர்கள் அனைவரும் திரும்பி அவரை நோக்க அவர் சற்று குன்றி நோக்கை வெளியே மாமரத்தை நோக்கி விலக்கிக் கொண்டார். பாபு “அவர் பேசியதெல்லாம் அப்படியே நினைவில் இருக்கிறது. பொதுவாக இம்மாதிரியான பேச்சுக்களின்போது என்னுள் இருக்கும் இதழாளன் விழித்துக் கொள்கிறான். இதை நான் எதிர்கால தலைமுறையினருக்கும் சொல்லப்போகிறேன் என்று தோன்றிவிடும்” என்றார். “நான் அன்று என் அறைக்குச்  சென்றதுமே அனைத்தையும் டைரியில் எழுதிவைத்திருக்கிறேன். அதை இருமுறை படித்தேன். ஆகவே எல்லா சொற்களும் நினைவில் நிற்கின்றன”. ராமவர்மா “உம்” என்றார். பாபு “அவர் முகம் நிறைவும் அமைதியும் கொண்டதாகவே தோன்றியது” என்று தொடர்ந்தார்.

அவர் பீடிப்புகையை மச்சுநோக்கி விட்டபடி சொன்னார். “எப்படி யோசித்தாலும் நான் நிறைவுற்றுவிட்டேன் என்றே தோன்றுகிறது. எஞ்சுவது பயனற்ற ஒர் உடலும், தேவையற்ற சில நினைவுகளும், பொருளிழந்துபோன சில சிந்தனைகளும்தான்… வெற்றியை முழுமையாக்கிக் கொள்ளவேண்டும் என்றும், நானே என் வெற்றியில் கீறல்களை உருவாக்கிவிடக்கூடாது என்றும் தோன்றுகிறது” என்றார். “அதெப்படி நீங்கள் அதைச் செய்யமுடியும்?” என்றேன். “நான் பி.சி.ஜோஷியை மும்பை கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் பார்த்தேன். அங்கே இருந்தவர் மாபெரும் கம்யூனிஸ்டு இயக்க முன்னோடி அல்ல. சலித்துப்போன கிழவர். அவருக்குக் கைநடுங்குகிறது, அவர் கம்யூனிசத்தைத்தான் கீழே போட்டு உடைப்பார்”.

நான் சற்றுநேரம் மேலும் பேசிக்கொண்டிருந்தேன்.  “பீடி வாங்கிவர முடியுமா?” என்றார். வாங்கிக்கொண்டு சென்று கொடுத்தேன். இரவுணவுக்கு வாழைப்பழம் வேண்டும் என்றார். அதையும் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். “நான் போகலாமா?” என்றேன். “போகலாம்” என்றார். “குருவாயூரில் தாமஸ் குரியன் என்பவருடைய விடுதி ஒன்று உண்டு. நான் அந்தக்காலத்தில் வந்தால் அங்கேதான் தங்குவேன்” என்றார். “தெரியும்” என்றேன். “குரியன் அதை இடித்து கல்யாண மண்டபமாக கட்டிவிட்டான்” என்றார். ஏன் அதைச் சொல்கிறார் என்று புரியவில்லை. நான் விடைபெற்றுக்கொண்டேன். என் அக்கா வீடு அருகில்தான். அங்கே சென்று தூங்கி காலையில் எழுவதற்குள் செய்தி வந்துவிட்டது”

அவர்கள் அமைதியாக இருந்தனர். டீ வந்தது. அவர்கள் மீண்டும் டீ குடித்தனர். ஹமீது டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தமிழ் இளைஞன் டீயை அவனே எடுத்து ஆவலாக பருகினான். அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஹமீது “நாம் இதைப்பற்றிப் பேசவேண்டாம்” என்றார். “நீ பயப்படுகிறாய். உன் மதநூலில் நரகத்திற்கு போகும் பாதை அது என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றார் ரவீந்திரநாத். ஹமீது சீற்றத்துடன் “இருக்கட்டும்… எதையும் எதிர்கொள்ள முடியாமலிருப்பது கோழைத்தனம்” என்றார்.

“எதை அவர் எதிர்கொள்ளவில்லை? சொல், அவர் என்றேனும் அஞ்சியவராக இருந்திருக்கிறாரா? அரசியல் போராட்டங்களை, சிறையை, கடும் வறுமையை எதிர்கொண்டிருக்கிறார். பணமே இல்லாமல் அலைந்து திரிந்திருக்கிறார். கொள்கை முரண்பாடு வந்தபோது வெளியே எந்த பிடிப்பும் இல்லாமல் கட்சியை விட்டிருக்கிறார். நண்பர்களை இழந்து, அவதூறு செய்யப்பட்டு, தன்னந்தனிமையில் வாழ்ந்திருக்கிறார். நண்பர்களே அவரை தாக்கியிருக்கிறார்கள், அவர் கூசியதில்லை. கொலைமிரட்டல் இருபதாண்டுக்காலம் இருந்தது. எதற்கும் அவர் அஞ்சியதில்லை. அவர் கோழை அல்ல. அவரை கோழை என்று சொல்லுமளவுக்கு நாம் துணிவானவர்களும் அல்ல” என்று ரவீந்திரநாத் சொன்னார்.

ஹமீது “அப்படியென்றால் இதையும் அப்படியே எதிர்கொண்டிருக்கலாமே” என்றார். “நீ திரும்பத் திரும்ப அதையே சொல்கிறாய், இது அவருடைய தோல்வி அல்ல. அவருடைய வெற்றி இது. இங்கும் முழுக்கமுழுக்க தர்க்கபூர்வமாக முடிவெடுக்க அவரால் முடிந்திருக்கிறது. எந்த உணர்வுச் சிக்கல்களும் இல்லாமல் இருந்திருக்கிறார். அதுதான் வாழ்க்கை முழுக்க அவர் சொன்னது. அவர் ஒட்டுமொத்தப்பார்வை கொண்டவர். ஆகவேதான் தத்துவஞானி”. ஓவியர் பாலன் “இங்கே அந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஜைனர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விடுகிறார்கள். இந்துக்கள் கங்கையில் பாய்ந்து ஜலசமாதி ஆகிறார்கள்” என்றார்.

ஹமீது நடுங்கும் குரலில் உரக்க “அப்படியென்றால் ரயிலில் பாய்ந்து சாகும் முன்னாள் நக்சலைட்டுக்களும் இருத்தலியல் பேசி கஞ்சா பிடித்துச் சாகும் வேலையில்லாப் பட்டதாரிகளும் எல்லாரும் தத்துவஞானிகள்தான்” என்றார். “அவர்கள் வேறு… உனக்கு சொன்னால் புரியவில்லை” என்றார் ரவீந்திரநாத். எழுந்து தன் பையை எடுத்துக்கொண்டு “சரி நான் கிளம்புகிறேன். எனக்கு ஆலுவாவில் ஒரு சிறு வேலை இருக்கிறது. நீங்கள் முடிவெடுங்கள். நான் என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்” என்றார். ஓவியர் பாலன் “ எப்படியானாலும் நாம் ஒரு நல்ல நினைவுமலர் கொண்டு வருகிறோம். எல்லா துறைகளிலும் அவருடைய ஒட்டுமொத்தச் சாதனைகளை திரட்டி வைக்கிறோம்” என்றார். “ஆம், அதைச் செய்வோம்” என்றார் கங்காதரன்.

ராமவர்மா எழுந்துகொண்டு “நானும் போகவேண்டும். ஏஜிஎஸ்ஸை பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன்” என்றார். “நான் ஒன்றுமட்டும் கேட்கிறேன், இந்த விஷயம் நமக்கு உள்ளூர ஏற்கமுடியாமல்தானே இருக்கிறது? உண்மையைச் சொல்லுங்கள்” என்றார் ஹமீது. ரவீந்திரநாத் “ஆம், உண்மையைச் சொல்லப்போனால் அப்படித்தான்” என்றார். ஓவியர் பாலன் “நான் அவரை புரிந்துகொள்ள முயல்கிறேன்” என்றார்.

ராமவர்மா “நாம் நம்மைத்தான் அங்கே வைக்கிறோம். திரும்பிப் பார்க்கையில் நம் வாழ்க்கையில் நாம் நிறைவைக் காணவில்லை. ஆகவே எதிர்காலத்தை கற்பனை செய்துகொள்கிறோம். ஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது எதிர்காலக் கற்பனை உடையவர்களுக்குத்தான் இது அத்தனை பயத்தை அளிக்கிறது” என்றார். “முட்டாள்தனம்” என்று ஹமீது கூவினார். “இருக்கலாம்… சும்மா சொல்லிப்பார்ப்போமே என்றுதான் சொன்னேன்” என்றார் ராமவர்மா.

“அதுதான் எம்கேயின் வழக்கம். சொல்லிச் சொல்லி கண்டுபிடிப்பது” என்றார் ரவீந்திரநாத். ஹமீது “எம்.கே மட்டும் இப்படிப்பட்டவர் இல்லை என்றால் நமக்கு இது இத்தனைச் சிக்கலை அளித்திருக்குமா? அவர் இத்தனை நாட்கள் சொன்னவற்றுக்கும் செய்தவற்றுக்கும் இது எப்படி முடிவாகும் என்பதுதானே நம் பிரச்சினை?” என்றார். ராமவர்மா “ஆமாம், அதுதான் பிரச்ச்சினை. ஆனால் எனக்கு இங்கிருந்து தொடங்கி பின்னால் செல்வதே நல்லது என்று தோன்றுகிறது” என்றார். ஹமீது தலையை ஆட்டினார்.

ராமவர்மா தமிழ் இளைஞனை நோக்கி திரும்பி “போகலாமா” என்றார். ஜான் அவனிடம் “உனக்கென்ன உடம்பு சரியில்லையா?” என்றார். “இல்லை” என்று அவன் ஓசையின்றி சொன்னான். “ஏன் நடுங்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று ஜான் கேட்டார். அவன் தலையை மட்டும் அசைத்தான். “வா” என்றபடி ராமவர்மா நடக்க அவன் பின்னால் சென்றான். அவர்கள் படிகளில் இறங்கிச்செல்லும் ஓசை கேட்டது. ராமவர்மா கீழே விடுதி உரிமையாளர் முஸ்தபாவிடம் ஏதோ பேசி சிரிக்கும் ஒலி.

ஹமீது “நினைவுமலர் என்றால் அதில் இரண்டு பகுதிகள் இருக்கலாம். அவரை பற்றி பிறர் எழுதியவை. அவர் எழுத்துக்களின் சுருக்கமான தொகுப்பு” என்றார். “அப்படியென்றால் இரண்டு பகுதிகளாக வெளியிடலாம்” என்றார் ஓவியர் பாலன். “நினைவுமலர் தனியாக இருக்கட்டும். அவருடைய படைப்புக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு தனியாக வரலாம். ரீடர் என்பார்களே அதைப்போல ஒன்று” என்றார் ஜான். ஹமீது பெருமூச்சுவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

***

முந்தைய கட்டுரைவைரஸ் அரசியல்-3
அடுத்த கட்டுரைபோகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது