அக்ஷயபாத்திரம் உணவு

அக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்: எதிர்ப்புகள் ஏன்?

 

இஸ்கான் [The International Society for Krishna Consciousness] அமைப்பின் அக்ஷ்யபாத்ரா அமைப்பு அவர்களின் உணவுக்கொடை நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் விழாவுக்கு என்னையும் விருந்தினராக அழைத்திருந்தனர். நான் அதை தவிர்த்துவிட்டேன். ஒன்று, அதைப்பற்றி முழுமையாக அறியாமல் கலந்துகொள்ளக் கூடாது என்பது. இன்னொன்று, கவர்னர் முதல்வர் போன்றவர்களின் நிகழ்ச்சியில் நான் சங்கடமாகவே உணர்வேன் என்பது. கொஞ்சம் ஆணவம்தான், ஒன்றும் செய்வதற்கில்லை

 

இஸ்கானின்  பொறுப்பில் இருக்கும் துறவியான ஷியாம் வல்லஃப் அவர்கள் இரு துறவிகளுடன்  வந்து என்னை சந்தித்தார். நான் தங்கியிருந்த ரெயின்டிரீ விடுதியில் அவர்களின் வருகை ஒரு திகைப்பை உருவாக்கியிருப்பதை உணரமுடிந்தது. அடுத்து எனக்கு தேநீர் கொண்டுவந்த ஊழியர் ஆர்வமாக விசாரித்து தன் எண்ணங்களையும் சொன்னார்.

 

இஸ்கான் அமைப்பு பற்றி பொதுவாகச் சில செய்திகள் எனக்குத் தெரியும். அவர்களின் ஆலயங்களுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் நேரடி உரையாடல் என்பது இப்போதுதான். சுவாமி பிரபுபாதரைப் பற்றியும் சைதன்ய மகாப்பிரபுவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சைதன்யர் 1530 வாக்கில் கேரளத்திற்கு வந்திருக்கிறார். என் அப்பாவின் பாரம்பரிய இல்லம் திருவட்டாற்றில் ஆதிகேசவன் ஆலயத்திற்கு அருகே உள்ளது. அந்த இல்லத்திலிருந்து பத்து கட்டிடங்களுக்கு அப்பால்தான் சைதன்யர் தங்கியிருந்த இல்லம் இருந்தது என்பார்கள். அங்கே அவருக்காக மகாராஜா கட்டி அளித்த சிறிய கிருஷ்ணன்கோயில் எஞ்சியிருக்கிறது.

 

பேச்சு இஸ்கான் இயக்கத்தின் அக்ஷயபாத்ரம் என்னும் உணவுக்கொடை இயக்கம் பற்றி சென்றது. அதைப்பற்றிய இணைய அவதூறுகள், வெறுப்புரைகள் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். புன்னகையுடன் ஷ்யாம் வல்லஃப் அவர்கள் “அதெல்லாம் பதினைந்துநாள் நீடிக்கும். அதன்பின் அவர்கள் வேறு அரசியலைப் பேசுவார்கள். எங்க்ளுக்கு அரசியல் இல்லை. எந்தவகையிலும் அரசியலில் ஈடுபடுவதில்லை. எங்கள் மீதான அரசியல்தாக்குதல்களுக்கு நாங்கள் மறுப்போ விளக்கமோ அளிப்பதும் இல்லை” என்றார்.

 

இஸ்கானின் உணவுக்கொடை பற்றிய நிறைய செய்திகளை பகிர்ந்துகொண்டார்கள். என் ஐயங்களை கேட்டேன். அதைப்பற்றிய பெரும்பாலான இணையச்செய்திகள் அப்பட்டமான பொய்கள், அரைகுறை தகவல்கள். அவற்றின் ஆதாரம் வெறும் மதக்காழ்ப்பும் ஐயமும் – அவற்றுக்கு எப்படி அரசியல்வண்ணம் அடிப்பது, போலி அறச்சார்பை அளிப்பது என்று நம்மவர்களுக்கு மிக நன்றாகவே இன்று தெரியும்.

 

நான் எப்போதுமே சொல்லிவரும் ஒன்று, இந்து மத அமைப்புக்கள் சேவைப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது. கல்வி, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியாவில் அவை செய்யவேண்டியவை பெருமளவில் உள்ளன. இது பசித்திருக்கும் தேசம், இங்கே சோற்றின் வடிவிலேயே தெய்வம் எழமுடியும். விவேகானந்தர் அதை திரும்பத்திரும்ப இங்குள்ள மத அமைப்புகளை நோக்கிச் சொன்னார். உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சேவையினூடாகவே இந்து அமைப்புக்கள் இன்றைய மெய்யான பணியைச் செய்யமுடியும்

 

ஆகவே எவர் எதன்பொருட்டு சோறிட்டாலும் அதை ஆதரிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன்பொருட்டே இஸ்கானின் இந்த உணவுக்கொடையை முழுதுளத்துடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே இதுபற்றி கிளப்பப் பட்டிருக்கும் ஐயங்களுக்கு நான் பெற்ற விளக்கங்கள் மற்றும் என் விளக்கங்கள். இவற்றை இந்த இணையப் பரப்புரைகளால் குழம்பியிருக்கும் இந்துக்களுக்காக மட்டுமே சொல்கிறேன். மதக்காழ்ப்பையும் அரசியல் காழ்ப்பையும் கக்குபவர்களை ஏற்கச் செய்ய என்னால் இயலாது. எவராலும் இயலாது.

இப்போது இப்படி இஸ்கான் அளிக்கும் உணவு தேவையா? அரசு இதை ஏற்றாகவேண்டுமா?

 

இன்றும் இந்தியாவின் , தமிழகத்தின் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு அன்றாட உணவு போதுமான அளவு கிடைக்காமலேயே உள்ளது என்பது ஓர் உண்மை. மதிய உணவு அளிக்கப்பட்டபோதும்கூட காலையில் உண்ணாமல் வருபவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. மதிய உணவுத்திட்டத்தை கடந்து மேல்வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கூட மதிய உணவு திட்டத்தின் உணவை கோரி பெற்று உண்பதுண்டு. இதைப்பற்றிப் பேசுபவர்களைப் போல அல்ல, நான் இப்பள்ளிகள் பலவற்றுக்கும் தொடர்ந்து சென்று நேரில் பார்ப்பவன், எழுதுபவன். என் மகன் அரசுப்பள்ளியில்தான் படித்தான்

 

உண்மையில் மிக வறிய பிள்ளைகள் சிற்றூர்களை விட மிகுதியாகச் சென்னை நகரில்தான் உள்ளனர். தமிழகக் குடிசைவாழ் மக்களில் பாதிப்பங்கினர் சென்னையில்தான் இருக்கிறார்கள் என்பதே காரணம். பரவலான நம்பிக்கைகளுக்கு மாறாக வளமான தஞ்சைநிலத்தில்தான் அடுத்த படியாக குடிசைமக்கள் இருக்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு எவர், எப்படி உணவு அளித்தாலும் அது வரவேற்கத்தக்கதே.

 

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட இலவச மதிய உணவுத்திட்டமும், பின்னர் எம்.ஜி.ஆர் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட சத்துணவுத்திட்டமும் தமிழகத்தில் குழந்தை நலம், கல்வி ஆகிய தளங்களில் மிக ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்கியவை. அவற்றின் அத்தனை குறைபாடுகளுடனும் அவை மாபெரும் மக்கள்நலத் திட்டங்கள். ஆனால் இன்றைய அரசு அந்த மதிய உணவை அளிப்பதற்குரிய நிதிச்சுமையையே தாளமுடியாமல் உள்ளது. உண்மையில் டாஸ்மாக் மதுவருவாய் வழியாகவே இலவச மதிய உணவு முதலிய திட்டங்கள் ஈடுசெய்யப்படுகின்றன. மதிய உணவுத்திட்டத்தில் ஒருபகுதி மத்திய அரசின் பங்களிப்பு. அதற்குமேலும் நிதியில்லாமல் தமிழக அரசு திணறிக்கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் காலையுணவையும் அரசே அளிப்பதென்பது இயல்வது அல்ல. இச்சூழலில் இஸ்கான் போன்ற ஓர் அமைப்பு காலையுணவை குழந்தைகளுக்கு இலவசமாக அளிக்கிறது என்பது எந்த ஒரு மக்கள்நல அரசாலும் வரவேற்கப்படவேண்டிய ஒரு நிகழ்வே.  இஸ்கான் அமைப்பு அரசிடமிருந்து கோருவது பெரிதாக ஒன்றுமில்லை. அவர்களின் சமையலறை செயல்படுவதற்குரிய அரசு இடம் பத்தாண்டு குத்தகைக்கு அரசால் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு உணவுக்கான நிதிச்செலவில் மிகச்சிறிய ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கிறது – அதையும் தானியமாகவே வழங்குகிறது. இதற்கான மிகப்பெரும்பகுதி நிதி இஸ்கானால் அதன் பக்தர்களிடமிருந்து திரட்டப்படுகிறது.

 

அந்நிதி பெரும்பாலும் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்தே வருகிறது. விவேகானந்தர் கூறியதுபோல மேலைநாடுகளுக்கு இந்திய ஞானம் தேவை எனில் அவர்களுக்கு அதை அளிப்பதும் இந்தியர்களுக்கு தேவையான உணவை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதும்தான் இந்தத் திட்டத்தின் உள்ளுறை. இஸ்கான் அமைப்பின் நிறுவனரான பிரபுபாதரும் அதையே சொல்லியிருக்கிறார். இன்றைய இந்தியச் சூழலில் மிகமிக இன்றியமையாத ஒரு செயல்பாடு இது. இஸ்கான் அரசுநிதியை பெற்று இதைச் செய்யவில்லை. இஸ்கான் இங்கே கொடுக்கும் இடத்தில் இருக்கிறது. அது எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அது அரசுநிதியை மோசடி செய்கிறது என்றெல்லாம் எழுதுவதுபோல கீழ்த்தரமான அவதூறு வேறில்லை.

 

இன்று அக்ஷயபாத்திரம் போன்ற ஓரு சர்வதேசப்பின்னணிகொண்ட, பயிற்சி கொண்ட அமைப்பு மட்டுமே இத்தகைய உணவளிப்பைச் செய்யமுடியும். கிறித்தவ அமைப்புக்கள் செய்யலாம், செய்யுமென்றால் நன்று.

இப்படி ஒரு மதம்சார் அமைப்பு கொடையளிக்கலாமா?

 

இப்படிக் கேட்பவர்கள் இந்தியாவில் கல்வி பரவிய வழியையே அறியாதவர்கள். இந்தியாவில் தேசியக்கல்வி இயக்கம்  காங்கிரஸால் 1905 முதல் 1930 வரை முன்னெடுக்கப்பட்டது. காந்தியின் காலகட்டத்தில் அது ஒரு பொதுமக்களியக்கமாக ஆகியது. இந்தியாவில் பொதுக்கல்வி ஒரு பேரியக்கமாக ஆனது அதன்வழியாகவே. அவ்வியக்கம் பெரும்பாலும் தனியார் அறக்கொடைகளை நம்பியே செயல்பட்டது. மதநிறுவனங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களும் கல்விநிறுவனங்களை நிறுவி நடத்த தூண்டப்பட்டன. பெரும்பாலான பள்ளிகள் பெருந்தனக்காரர்களின் மாட்டுத்தொழுவங்களில் தொடங்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆசிரியர்களுக்கேகூட ஊர்கூடி சோறிடும் வழக்கம் இருந்தது. இன்றும் புகழ்பெற்றிருக்கும் பெரும்பாலான கல்விநிறுவனங்கள் அப்போது தொடங்கப்பட்டவை. அதற்கு முன்னரே இங்கே கிறித்தவ இயக்கங்களின் கல்விநிறுவனங்கள் செயல்பட்டன. இன்றுகூட அரசு உதவிபெறும் தனியார் கல்விநிறுவனங்களாக அவை நீடிக்கின்றன.

 

இந்தக் கல்விப்பணியில் கிறித்தவ, இஸ்லாமிய நிறுவனங்கள் பங்களிப்பாற்றியிருக்கின்றன. அவற்றின் நோக்கம் தங்கள் மதத்தை பரப்புவதாகவே இருந்திருக்கிறது. அதை விமர்சிப்பவர்கள் உண்டு. என் நோக்கில் அதில் எந்தப் பிழையும் இல்லை.  எந்நோக்கம் இருந்தாலும் கல்வி பரவட்டும் என்பதே என் எண்ணம். கிறித்தவக் கல்விநிறுவனங்களில் இன்றும் எல்லா குழந்தைகளும் கிறித்தவப் பிரார்த்தனைகளையே பாடவேண்டியிருக்கிறது. என்குழந்தையும் அப்படித்தான் படித்தாள். அது அவர்களின் நிறுவனம், அவர்களின் கொடையை அப்படி அவர்கள் அளிப்பார்கள் என்றால் ஏற்கத்தான் வேண்டும் என்றுதான் எழுதினேன். குமரிமாவட்டத்தில் கிறித்தவ அமைப்புக்கள் சிலகாலம் முன்புவரை ஏழைகளுக்கு உணவுக்கொடைகளை நடத்தியிருக்கின்றன. அரசுப்பள்ளிகளிலேயே உணவு அளித்திருக்கின்றன. அவை எந்நோக்கம் கொண்டவை ஆயினும் உணவு வருமென்றால் வரட்டும் என்பதே என் எண்ணம்.

 

இஸ்கான் போல நாளை கிறித்தவநிறுவனங்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் குழந்தைகளுக்கு உணவிடுவார்கள் என்றால் வரவேற்புக்குரியதே. பெரியாரியர்களோ திராவிட இயக்கத்தவர்களோ தங்கள் சொந்தச்செலவில் இதேபோல உணவிடுவார்கள் என்றால் அதுவும் வரவேற்புக்குரியதே. அவர்கள் தாங்கள் விரும்பும் உணவை அளிக்கட்டும். வேண்டும் குழந்தைகள் உண்ணட்டும். இஸ்கானின் உணவுக்கு போட்டியாகக்கூட அவர்கள் அதைச் செய்யலாம், எப்படியானாலும் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கட்டும்.

 

இஸ்கானின் இந்த உணவுக்கொடையை எதிர்ப்பவர்கள் யார்? இஸ்கான் இந்துமதம் சார்ந்த அமைப்பு. ஆகவே மதக்காழ்ப்பால் எதிர்க்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் இதன்மூலம் இன்றைய ஆட்சிக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாதே என்பதற்காக எதிர்க்கிறது. இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தால் அவர்கள் இதை ஏற்று முன்னின்றிருப்பார்கள். நாளை ஆட்சிக்குவந்தால் அவர்களே இஸ்கானின் உணவுக்கொடையை ஆதரிக்கவும்கூடும். ஏனென்றால் உணவுக்கொடை எவ்வகையிலாயினும் அரசுக்கே சாதகமானது.

2011ல் புட்டபர்த்தி ஸ்ரீசத்யபாபா சென்னைக்கு மு.கருணாநிதி அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். அவரை கருணாநிதி அவர்களின் குடும்பமே வணங்கி வரவேற்றது. சாய்பாபா அவர்கள் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரும் தெலுங்கு கங்கா திட்டத்திற்கு பெருந்தொகை ஒன்றை நன்கொடையாக அளிப்பதனால் அவரை வணங்கி வரவேற்பதாக கருணாநிதி அவர்கள் கூறினார். அன்று திராவிட இயக்கத்தவர் சாய்பாபாவின் செயலை போற்றினர்.  அந்த திட்டத்திற்கு அவர் அளித்த நிதியேகூட வேள்விகள் பூசைகளுடன்தான் அளிக்கப்பட்டது.

 

மக்கள் நலத்திட்டத்திற்கு மத அமைப்புக்கள் நிதியளிப்பது, மக்கள் நலத்திட்டங்களை மத அமைப்புகள் அரசுடன் சேர்ந்து நடத்துவது பலவகையிலும் உகந்தது. இந்தியா போன்ற வறியநாட்டுக்கு மிக உதவியானது. அரசியல்வாதிகள் எவராயினும் அதை ஏற்றாகவேண்டும். அவ்வகையில் மு.கருணாநிதி அவர்கள் சிறந்த முன்னுதாரணம் என்றே சொல்வேன். இன்று நிகழ்வதும் அத்தகைய ஒரு கொடையே.

 

மிக வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே பல மத அமைப்புக்கள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து, அரசுநிதியைப் பெற்றுக்கொண்டு உணவு அளிப்பதை, உறைவிடம் அளிப்பதை நான் கண்டிருக்கிறேன். நானே சென்று பார்த்திருக்கிறேன். சால்வேஷன் ஆர்மி போன்ற கிறித்தவ அமைப்புக்கள் மட்டும் அல்ல சுவாமிநாராயன் அமைப்பு போன்ற இந்து அமைப்புக்கள்கூட அதைச் செய்கின்றன. இஸ்கான் அமைப்பே அமெரிக்காவில் இப்பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது.

 

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், இந்தியாவின் கல்வி இன்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பல சர்வதேச அமைப்புக்களின் நிதிபெற்று, அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில்தான் நடந்துகொண்டிருக்கிறது.

இஸ்கானின் உணவில் பூண்டு வெங்காயம் போன்றவை தவிர்க்கப்படுவது நியாயமா? குழந்தைகளுக்கு சுவையான உணவு அளிக்கப்படவேண்டாமா?

 

இதை இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் தமிழக அரசு வழங்கும் மதிய உணவை என்றேனும் சென்று பார்த்திருக்கிறார்களா? பார்க்கவேண்டாம், தமிழகத்தின் அரசு- அரசியல் சூழலில் அது எப்படி நிகழும் என்று கொஞ்சம் தலைநேராக இருப்பவர்கள் கற்பனைசெய்து பார்க்கலாம். நானே எழுதியிருக்கிறேன். இங்கே இருக்கும் ஊழல்மலிந்த நிர்வாக அமைப்பில் சத்துணவுத்திட்டம் போன்ற மாபெரும் பரவலாக்கம் கொண்ட செய்ல்பாடுகளில் மிகப்பெரிய பங்கு ஊழலுக்கே சென்றுவிடும். இதை உணராத ஒருவர் மந்தபுத்தியாகவே இருக்கமுடியும்.

 

காய்கறிச்சந்தையில் கழித்துக் கட்டப்படும் காய்கறிகளை போட ஒரு கூடை வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கூடையை சத்துணவுப் பணியாளர்கள் வந்து கொண்டுசெல்வதைக் காணலாம். அதுதான் குழந்தைகளுக்கான காய்கறி. மளிகை உட்பட அனைத்திலும் ஊழல். சத்துணவுப்பணியாளர்கள் மட்டுமல்ல பல தலைமையாசிரியர்களும் அந்த ஊழலில் பங்குப்பணம் பெறுகிறார்கள். சில இடங்களில் கல்வியதிகாரிகள் வரை. அரிதாக ஊர்க்காரர்களே தலையிட்டு நல்லுணவு வழங்கப்படுவதும் உண்டு. உறுதியாக நிலைகொண்டு ஊழலின்றி சத்துணவு வழங்கும் ஆசிரியர்களும் உண்டு – ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக்குறுகியது

 

மலைப்பகுதிகளில், சிற்றூர்களில் வெறும் சோறு, கஞ்சியாக வடிக்கப்பட்ட அரிசி மட்டுமே சத்துணவாக வழங்கப்படுகிறது. பல ஊர்களில் காய்கறி பருப்பு ஆகியவற்றை அரிசியுடன் போட்டு குழைய வடித்து கூட்டுச்சோறாக அளிக்கிறார்கள். கேட்டால் விறகுக்கு பணமில்லை, அரிசி மட்டுமே அரசால் அளிக்கப்படுகிறது என்கிறார்கள்.மனசாட்சி இருப்பவர்கள் செய்யவேண்டியது சத்துணவு ஊழல்களை முறைப்படுத்த களமிறங்குவது.

 

ஏன் இப்படி நிகழ்கிறது? இதை தவிர்க்கவே முடியாது. இங்கே சத்துணவு ஆயா வேலைக்கும் அமைப்பாளர் வேலைக்கும் அரசியல் சிபாரிசு உள்ளது. லஞ்சம் உள்ளது. இன்று மூன்று லட்சம் ரூபாய் வரை கொடுக்காமல் வேலை போடப்படாது. பத்தாண்டுகள் முன் திமுக ஆட்சியில் இது ஒருலட்சமாக இருந்தது. மறுபடி திமுக வந்தால் நான்கு லட்சம் ஆகும். இங்கே எந்த ஊழலும் தொடங்கப்பட்டபின் இல்லாமலாவதில்லை, மேலும் விகிதம் பெருகுவதும் முறைப்படுத்தப்படுவதுமே வழக்கம்

 

இதெல்லாம் இங்கே ஒரு சாதாரண குடிமகனுக்கும் தெரிந்த நடைமுறை. அரசியலாளர்கள், இந்த ஊழலில் பிய்த்து தின்பவர்கள் உடனே எங்கே ஆதாரம் என்று கூச்சலிடக்கூடும். மனசாட்சி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று சத்துணவுச் சமையலை பாருங்கள் என்று மட்டுமே சொல்வேன். அத்தனை ஊழலுக்கு அப்பாலும் உணவென ஏதோ குழந்தைகளுக்குச் செல்கிறது என்பதே ஒரே ஆறுதல்.

 

இஸ்கானின் உணவு சமைக்கப்படுவதை, பரிமாறப்படுவதை பார்த்தேன். உலகத்தரமான சமையலறை. சூடான சுவையான உணவு. இத்தகைய சத்தான உணவு என் அறிதலில் இன்றுவரை இந்திய கல்விநிலையங்களில் வழங்கப்பட்டதில்லை. நம் சத்துணவுக்கூடங்கள் இருக்கும் நிலையை, அவற்றில் உணவு சமைக்கப்படும் விதத்தை பார்த்தவன் என்றமுறையில், அறச்சீற்றம்கொண்டு கூச்சலிட்டவன் என்றநிலையில் இவ்வுணவு சமைக்கப்படும் தரம் என்னை பெருமிதம்கொள்ளவே செய்தது.,

 

இவ்வுணவு சுவையாக இல்லை, தேவையில்லை என எண்ணும் குழந்தைகள் உண்ண மறுக்கலாமே. ஆனால் எங்கும் குழந்தைகள் அவ்வுணவை மறுக்கவில்லை என்பதே நடைமுறை உண்மை – அவர்கள் வெறும் சோற்றையே உண்ணும் குழந்தைகள். வெங்காயம் பூண்டு இல்லாத உணவை மறுக்கும் இடத்தில் இங்கே ஏழைக்குழந்தைகள் இல்லை. இது அரசியல்கூச்சலாளர்களின் கருணையற்ற கண்களுக்கு ஒருபோதும் படாத நிலவரம்.

 

இஸ்கான் ஒரு மத நிறுவனம். அது அவர்களின் கொள்கைக்கு உகந்த உணவையே அளிக்கமுடியும். அவர்களுக்கு நிதிக்கொடை அளிப்பவர்கள் அந்த உணவுக்கே அதை அளிப்பார்கள். நாளை இஸ்லாமியர் குழந்தைகளுக்கு உணவளிப்பதென்றால் ஹலால் உணவையே அளிக்கமுடியும். அவர்களுக்கு அதற்காகவே நிதி கிடைக்கும். இந்தக் குழந்தைகள் மதியம்  அரசு அளிக்கும் சத்துணவைத்தான் உண்கின்றன. அதில் பூண்டும் வெங்காயமும் மிதந்து கிடப்பதில்லை. சென்று பாருங்கள். பூண்டு வெங்காயம் உண்ணாமல் குழந்தைகள் உணவை தொடுவதில்லை, பூண்டு வெங்காயம் இல்லாவிட்டால் குழந்தைகள் வதங்கிவிடும் என்றெல்லாம்  எழுதுபவர்களின் உள்ளத்தின் தரம்தான் என்ன?

 

ஆக இந்த உணர்வு என்ன? இப்படி உணவு அளிக்கப்பட்டால் இந்துமதம் மீது நல்லுணர்வு உருவாகிவிடும். இந்துமதம் சாதிவெறிகொண்டது, ஏழைகளுக்கு எதிரானது என்ற வழக்கமான வசை வலுவிழக்கக்கூடும். ஆகவே இதை எதிர்க்கிறார்கள் மதவெறியர்கள். இது அ.தி.முகவுக்கு சாதகமாகிவிடக்கூடும். ஆகவே எதிர்க்கிறார்கள் திமுகவினர். அக்குழந்தைகளுக்கு உணவே கிடைக்காமலானாலும் பரவாயில்லை!. என்ன ஒரு கசப்பு, எவ்வளவு கருணையே அற்ற கண்மூடித்தனம்

 

இஸ்கான் இந்த உணவை அளிப்பதற்கு எந்த மதநிபந்தனையையும் போடவில்லை. பிரார்த்தனை கூட இல்லை. உணவு அளிக்கும் முன் எவர் அளிப்பது என்று பிரச்சாரம் செய்வதுகூட இல்லை. பல கிறித்தவ நிறுவனங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவுக்கொடை கிறித்தவ ஜெபத்திற்குப் பின்னரே அளிக்கப்படுகிறது- நான் அதை பிழை என பார்க்கவில்லை. இஸ்கான் இந்த வெறுப்பாளர்களின் அவதூறுகளுக்கு அஞ்சி உணவுக்கொடையை நிறுத்திவிட்டால் அக்குழந்தைகளுக்கு காலைஉணவு கிடைக்காமலாகும். இழப்பு அக்குழந்தைகளுக்குத்தான்.

https://blog.akshayapatra.org/things-you-must-know-about-akshaya-patra/

முந்தைய கட்டுரைகாந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஅத்தர் மணம்- ராம்குமாரின் அகதி- மயிலாடுதுறை பிரபு