யா தேவி! [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன்,
யா தேவி! சிறுகதைக்கு வரும் கடிதங்கள் திகைப்பூட்டுகின்றன. என் வாசிப்பு தவறானதோ தோன்றுகிறது. என் புரிதல், அந்தப்பெண், மருத்துவனை மற்ற ஆண்களைப்போல் எண்ணி முதலில் என்னை தொடாதே என்கிறாள். ஆனால் அவன் பெண் உடலுக்கு மயங்காதவன் என்று தெரியவரும் போது அவனைத்தூண்டி தன் உடலை அனுபவிக்குமாறு வேண்டுகிறாள். அவன் மீண்டும் மறுக்கவும், ஆயிரக்கணக்கான ஆண்களால் விரும்பப்படும் பெண் எனும் அவளது அகங்காரம் சீண்டப்பட, அதை ஒரு அவமதிப்பாக உணர்கிறாள்.
இறுதியில் அவன் அவளை பார்த்த போது யா தேவி வழிபாட்டு வாக்கியத்தை சொன்னானா என்று கேட்டு, சொன்னான் எனத் தெரிந்து அமைதி அடைகிறாள். ஏனெனில், அந்த வாக்கியம், அழகிய பெண்களைப் பார்க்கும் போது, ஆண்கள் தங்கள் மனதை கட்டுப்படுத்த, தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் வாக்கியம் என அவள் அறிவாள். மருத்துவன் கண்ணிலும் தான் அழகிதான் என்று தெரியவும் அவள் மனம் சாந்தி கொள்கிறது. ஆம், என் மனம் சஞ்சலப்பட்டது என்று உண்மையை ஒத்துக்கொண்டு மருத்துவன் விலகுகிறான்.
இந்தப் புரிதல் தவறா? அல்லது கதையை இப்படியும் புரிந்து கொள்ளலாமா? நேரமிருந்தால் விளக்கவும். ‘வெற்றி’ கதையும் இதே கரு தான் என்று தோன்றுகிறது. ஒரு வலிமையான ஆணும், சாதாரண ஆணும், லதாவைப் பந்தயம் வைக்கிறார்கள். ஆனால் வென்றது என்னவோ லதாவின் பெண்மைதான். அழகிய பெண் எந்த ஆணையும் வெல்கிறாள்.
கணேசன்
***
அன்புள்ள ஜெயமோகன் சார்,
யா தேவி! கதை ஒரு திகைப்பை தந்தது. முதல் வாசிப்பில் நமது மரபின் விரிவிலிருந்து எழுந்து வரும் சகலத்திற்கும் அன்னையான தேவி என்ற படிமத்திலிருந்து மிகவும் நுணுக்கமாக நெய்த கதை என்று தோன்றியது. ஆனால் வரும் கடிதங்கள் மேலும் திகைக்க வைக்கின்றன. நான் காணாத பல நுணுக்கங்களை வாசகர்கள் காண்பித்தபடியே இருக்கிறார்கள். இந்தக் கதையையும் வரும் கடிதங்களையும் ஆழ்ந்து வாசித்தாலே ஒருவருக்கு சிறுகதை என்றால் என்ன என்ற பாலபாடம் கிடைத்துவிடும். திரு. நவீன் (மலேசியா) அவர்கள் ஒரு கட்டுரையில் ஒருவர் கவிதை வாசிப்பது என்பது ஒரு தீபத்தை கொண்டு மற்றொரு தீபத்தை ஏற்றுவது என்று சொல்லியிருப்பார். ஒவ்வொரு வாசிப்பும் ஒரு தீபமேற்றுதலே. அந்த படிமத்தை இன்னும் விரித்தால். தேவி வீற்றிருக்கும் கருவறையின் சுற்றம்பலத்தை சுற்றியும் உள்ள எரியும் எண்ணை விளக்குகளை ஒட்டுமொத்தமாக பார்த்த பரவசத்தை இந்த கடிதங்கள் அளிக்கின்றன.
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
அன்புள்ள கணேசன்,கிருஷ்ணன் ரவிக்குமார்,
ஒரு கதைக்கு எல்லா வாசிப்புகளுக்கும் வழி இருக்கிறது. ஆகவே ‘தவறான’ வாசிப்பு என ஒன்று இல்லை. ஆனால் சிறந்த வாசிப்பு உண்டு. சிறந்த வாசிப்பை நோக்கிச் செல்ல வாசகன் கடமைப்பட்டவன். தன்னால் இயன்ற ஒரு வாசிப்பை கொடுத்துவிட்டு அதுவே அந்தக்கதை என்று அவன் அடம்பிடிப்பான் என்றால் அவன் நல்ல வாசகன் அல்ல. எல்லா கூறுகளையும் கருத்தில்கொண்டு எல்லா கோணங்களிலும் வாசிப்பதே நல்ல வாசிப்பு.
ஆகவேதான் கூட்டுவாசிப்பு – விவாதம் ஒரு வாசிப்பு வழிமுறையாக இருக்கிறது, உலகமெங்கும். நாம் கொண்டாடும் பல படைப்புகள் கூட்டுவாசிப்பினூடாகவே அத்தனை அர்த்த தளங்களை அடைந்தன. பலசமயம் தலைமுறை தலைமுறையாக அந்தக் கூட்டுவாசிப்பு நிகழ்கிறது. இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆய்வு என்பது அந்தக் கூட்டுவாசிப்பின் ஒரு பகுதியே.
இங்கே தமிழில் நமக்குக் கூட்டுவாசிப்பு மிகக்குறைவு. ஆகவே நாம் இயல்பாக சிலவகை குறைபட்ட வாசிப்புக்களுக்குப் பழகியிருக்கிறோம். ஒன்று, நம் சொந்த அனுபவதளத்திற்குக் கதையைக் கொண்டுவந்து வாசிப்பது. கதையை நோக்கி நாம் நகர்ந்து செல்லாமல் இருப்பது. இதை குறுக்கல்வாசிப்பு எனலாம். இரண்டு, நாம் நம்பும் அரசியல்நிலைபாடு, நாம் கொண்டுள்ள இலக்கிய அரசியல் சார்ந்த நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் படைப்பின் மையம் என ஒரு கருத்தை மட்டும் உருவிக்கொண்டு அதை வைத்து அக்கதையை மதிப்பிடுவது. அந்த மையத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது. இது பொழிப்புரை வாசிப்பு.
[இவை இயல்பானவை. இதைவிடக் கீழ்நிலை ஒன்று உண்டு. எல்லா படைப்புக்களையும் இலக்கியவம்பு மனநிலையுடன் வாசிப்பது. எல்லா விவாதங்களிலும் வம்பையே காண்பது. அது வாசிப்பல்ல, ஓர் உளநோய். மீள்வது இயல்வதே அல்ல]
நல்ல வாசிப்பு என்பது ஒரு கதையின் எல்லா சமூகவியல் குறிப்புகளையும், பண்பாட்டு அடையாளங்களையும், உளவியல் உள்ளோட்டங்களையும் கருத்தில்கொண்டு வாசிப்பது. ஒரு கதையில் ஆசிரியன் அளித்துள்ள எவையும் தவறவிடப்படக்கூடாது. குறுக்கல் வாசிப்பாளர்கள் மற்றும் பொழிப்புரை வாசிப்பாளர்களின் சிக்கல் என்னவென்றால் அவர்கள் ஒரு வாசிப்பை எடுப்பார்கள், அதன்பிறகும் கதையில் நிறைய எஞ்சியிருக்கும். அதெல்லாம் தேவையில்லை என இவர்களே முடிவுசெய்துவிடுவார்கள். சார்லி சாப்லின் கார் பழுதுபார்ப்பதுபோல. காரை அக்கக்காக கழற்றி திரும்ப மாட்டுவார். பாதிப்பங்கு உதிரிப்பொருட்கள் மிச்சமிருக்கும். டிக்கியில் அள்ளிப்போட்டுக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டுபோவார். அது பக்கவாட்டில் சாய்ந்து ஓடும்.
உதாரணமாக எளிமையான கதையைச் சொல்கிறேன். யானை டாக்டர் கதையை யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் சேவையின் கதை என வாசிக்கலாம். ஆனால் அப்போது அதில் புழு பற்றி வரும் இடங்கள் தேவையில்லாத ‘வர்ணனை’கள் என்று தோன்றும். ஆனால் ஆசிரியன் அவற்றை எழுதியிருக்கிறான். அவனுடைய ஆழுள்ளத்திலிருந்து அது கதையில் இயல்பாக வந்திருக்கிறது. யானையைப் பற்றிப் பேசவந்தவன் ஏன் புழுவைப் பற்றி பேசுகிறான்? சின்னஞ்சிறு புழு யானையை தின்கிறது என்பது அக்கதைக்குள் ஏன் வருகிறது? அதையின் கருத்தில்கொண்ட வாசகனே அக்கதையை சிறப்பாக வாசிக்கிறான்.
இந்தக்கதையையே எடுங்கள். உங்கள் வாசிப்புதான் கதை என்றால் இக்கதைக்கு ‘ஒருபெண்ணின் பல்லாயிரம் வடிவங்கள்’ என்ற படிமம் எதற்காக? அவளுடைய கால் என்னும் படிமம் எதற்காக? அதிலுள்ள பல்வேறு குறிப்புகளெல்லாம் எதற்காக? நீங்கள் சொல்வது ஒரு எளிமையான உளவியல் வாசிப்பு. அதற்கு இந்தக்களமே தேவையில்லையே. அவள் ஒரு போர்ன் நடிகையாகக்கூட இருக்கவேண்டியதில்லை. நடனமங்கையாகக்கூட இருக்கலாம். அல்லது அதுகூட தேவையில்லை. இவையெல்லாம் கதையில் வருவதனாலேயே வாசகன் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்ட ஒரு வாசிப்பை நிகழ்த்தியாகவேண்டும்.
ஒரு வாசிப்பை ஒரு கோணத்தில் நிகழ்த்தலாம்; நம்முடைய அத்தருணத்தைய உளநிலை மற்றும் நம் அறிதல்கள் போன்றவை காரணமாக அமையலாம். நம் உளநிலை சற்றே மாறும்போது, மேலும் சில செய்திகளைத் தெரிந்துகொள்ளும்போது நம் வாசிப்பு வளரலாம். அவ்வாறு வளர்வதற்கு நாம் அனுமதிக்கவேண்டும். நம் வாசிப்பை நம் தன்முனைப்பால் காத்துக்கொள்ள முயலக்கூடாது. அதுவே வாசகன் என்னும் நிலையின் உகந்த உளவியல். நம் வாசிப்பை நம் ஆணவநிலைபாடாகக் கொள்வோம் என்றால் நாம் இறுகிவிடுகிறோம்.
கூட்டுவாசிப்பு, பன்முக வாசிப்பு ஆகியவற்றுக்கு உரையாடல்களங்கள் மிக உதவியானவை. ஏனென்றால் தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இந்தியத்தன்மை வாய்ந்த பண்பாட்டுக் குறிப்புகள், வரலாற்றுக் குறிப்புகள், சமூகவியல் குறிப்புகள் ஏராளமானவர்களுக்கு தெரியாது. இங்கே அன்றாட வாழ்க்கைக்கு அப்பால் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிவார்ந்த எந்த பயிற்சியும் இல்லை. இந்துமதம் சார்ந்த ஒரு படிமம், இந்தியாவின் ஒரு சடங்கு கதையில் குறியீட்டுத்தன்மையுடன் வந்தால் அது வாசிக்கவே படாது. ஆகவே அவர்கள் மிக மொட்டையான அன்றாட வாசிப்பையே எந்தக்கதைக்கும் அளிப்பார்கள். இங்கே இலக்கியவாசிப்பு பாலியல்,அன்றாட அரசியல், குடும்பம் என்னும் மூன்று சிறு வட்டங்களுக்குள் சுழல்வது. அதைமீறிச்செல்ல எவரேனும் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. ஆகவே விவாதங்களே புதிய திறப்புக்களை அளிப்பவை.
இணையம் அதற்கிணையான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. ஆகவேதான் இத்தனை கடிதங்கள். இந்த இணையதளத்தில் அறிமுக எழுத்தாளர்களின் ஆக்கங்கள் உட்பட ஏராளமான படைப்புக்களைப் பற்றி இப்படி நீண்ட பன்முக வாசிப்பும் விவாதமும் நிகழ்ந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.
இந்த விவாதம் போதிய அளவு நீண்டுவிட்டமையால் நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன் ஒவ்வொன்றிலும் நானே நிறுத்திக்கொள்ளும் அளவுக்கு எதிர்வினைகளும் விவாதங்களும் வருவது நிறைவளிக்கிறது.
ஜெ
***