கடத்தற்கரியதன் பேரழகு

என் அப்பா மொத்தமே இரண்டு சினிமாக்கள்தான் பார்த்திருக்கிறார். மலையாளப்படமான செம்மீன், தமிழ் புராணப்படமான தசாவதாரம். இரண்டாவது படத்தை பதினைந்து நிமிடம் பார்த்தார். பிடிக்கவில்லை. கதகளி ரசிகரான அவருக்கு இரணியன் கோமாளி மாதிரி பேசுவதாகத் தோன்றியது. ஆனல் செம்மீனை முழுக்க பார்த்தார். “நல்ல படம், கடல்  நன்றாக இருக்கும்” என்றார்.  அவருக்கு சினிமா என்னும் கலைக்கு கண்ணும் மனமும் பழகவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் செம்மீனை அவரால் ரசிக்க முடிந்திருக்கிறது

செம்மீன் அக்காலத்தில் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றிப்படம். எம்.எஸ் அது நாகர்கோயிலில் நூறுநாட்களுக்கும் மேலாக ஓடியது என்றார்.  வண்ணநிலவன், வண்ணதாசன், கலாப்ரியா, பிரபஞ்சன் போன்ற பல எழுத்தாளர்கள் அவர்களின் இளமைக்காலத்தில் அவர்களை ஆட்கொண்ட படங்களின் பட்டியலில் செம்மீனைச் சொல்வார்கள். பல தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் “அதுமாதிரி ஒண்ணு எடுத்திரணும்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

நான் செம்மீன் படத்தைப் பார்ப்பது 1978ல்தான். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். குலசேகரம் ஸ்ரீபத்மநாபா திரையரங்கில் மீண்டும் செம்மீன் வெளியானது – புத்தம்புதிய காப்பி. ஊரே கோலாகலம் கொண்டது என்று ஒரு பேச்சுக்குச் சொல்வோமே அதுதான் மெய்யாகவே. பழைய தலைக்கட்டுக்கள் எல்லாம் ‘செம்மீன், அதில்லாவே படம்!” என்றவகையில் புளகாங்கிதங்களை அடைந்து புதிய சினிமா ரசிகர்களான எங்களை “போ, போயி கோமணத்தை ஒளுங்கா கட்டு” என்றபாவனையில் பார்த்தனர். ஆகவே நாங்கள் எட்டுபேர் கிளம்பிச் சென்றோம்

ஆனால் எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. அவர்கள் அப்படி கண்மலர்ந்து சொன்ன பல படங்களை நாங்கள் “என்னடே இது!” என்று அரங்கிலேயே கேலிசெய்தது உண்டு.  ‘ஆயிரம்தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ வகை படங்கள். நாங்கள் எங்களை ‘நவசினிமா’ ரசிகர்கள் என எண்ணிக்கொண்டிருந்த காலம்.  அன்று ஐ.வி.சசி ஓர் அலைபோல எழுந்து வந்துவிட்டிருந்தார். 77ல் மட்டும் அவருடைய பன்னிரண்டு படங்கள் வெளியாகின. மிகக்குறைவான செலவில் கச்சிதமான கதையுடன் எடுக்கப்பட்ட கறுப்புவெள்ளைப் படங்கள். அவருடைய அ வரிசைப் படங்கள் மலையாள ரசனையையே மாற்றியமைத்தன. அவருடைய படங்கள் நாடகத்தனம் இல்லாத, காட்சித்தன்மை ஓங்கிய , ஐரோப்பியக் கலைப்பட மரபிலிருந்து தூண்டுதல் கொண்ட  ‘புதிய அலை’ படங்கள்

அதற்கு முன்னரே எம்.டி.வாசுதேவன் நாயரின் இலக்கியத்தரமான திரைக்கதைகள் படங்களாக வந்து ஐ.வி.சசிக்கு வழியமைத்திருந்தன. சசி அவருடைய தொடர்ச்சியான பரதன், பத்மராஜன் , மோகன் போன்ற புதிய இயக்குநர்களுக்கு வழியமைத்தார். மொத்தமாக மலையாள சினிமாவின் இயல்புகள் மாறிக்கொண்டிருந்தன. எங்களுக்கு தமிழ் சினிமாக்களைப் பற்றிய உச்சகட்ட இளக்காரம் இருந்த காலம். எங்களூர்க்காரர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். ஆகவே ஊளையிடுவதற்காகவே சினிமா பார்க்கச் சென்றோம். மறுநாள் கிழவாடிகளை எப்படியெல்லாம் கேலிசெய்வது என சொல்கோத்துக் கொண்டிருந்தோம்.

படக்கதை வடிவம்

ஆனால் திரையில் நவீனஓவியம் போல தலைப்புக்கள் ஓட தொடங்கியதுமே அமைதியாகி விட்டோம். தொடக்கக் காட்சி அல்ல தொடக்க படச்சட்டமே  நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது முற்றிலும் வேறுபட்ட கலைப்படைப்பு என்று தோன்றச் செய்துவிட்டது. கனவில் என வாழ்ந்து மீண்டோம். பிரமைபிடித்தவர்களாகத் திரும்பி வருகையில் கோபாலகிருஷ்ணன் “இந்தப்படம் அறுபதிலேயே வந்தாச்சு. அப்டீன்னா இவனுக இப்ப என்னடே நியூவேவ் எடுக்கானுக?” என்றான். அதுதான் என்னுள்ளும் ஓடிக்கொண்டிருந்த எண்ணம்.

நான் அன்று மலையாளம் எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருந்த காலம். ஆகவே தகழியின் நாவல் எதையும் வாசித்திருக்கவில்லை. எனக்கு செம்மீன் பற்றி ஒன்றுமே தெரியாது. என் அம்மா அந்நாவலைப் பற்றி ஏதோ சொன்ன நினைவு மழுங்கலாக இருந்தது. படம் பார்த்தபோதுதான் அதைப்பற்றி அம்மா சொன்னதெல்லாம் நினைவில் தெளிந்தன. ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டு விரிந்தன. அன்று திரும்பி வந்து உளக்கொப்பளிப்புடன் அம்மாவிடம் செம்மீன் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தேன். மறுநாள் மீண்டும் படம் பார்க்கச் சென்றோம்

அதன்பின் செம்மீன் படத்தை ஏழு முறை பார்த்திருக்கிறேன். திரையரங்குகளிலேயே ஐந்துமுறை. வெவ்வேறு திரைவிழாக்களில்.1988ல் எழுத்துக்கூட்டி செம்மீனை மலையாளத்தில் வாசித்தேன். பின்னர் பலமுறை, பல வடிவங்களில். சுந்தர ராமசாமியின் அழகிய மொழியாக்கத்தில் தமிழில். சமீபத்தில் அனிதா நாயரின் புது மொழியாக்கத்தில் செம்மீன் மீண்டும் வெளியாகியிருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பின் சைதன்யாவுக்காக இப்போது செம்மீனை மீண்டும் பார்த்தேன். பேச்சுவாக்கில் செம்மீன் படத்தைப் பற்றி சொல் எழுந்தது. இப்போதுதான் எல்லா படங்களும் கையருகே கிடைக்கின்றன. உடனே அமர்ந்துவிட்டோம். மிகச்சிறந்த பிரதிகள் பல இருக்கின்றன. யூடியூப் பிரதியே ஓரளவு நல்ல அச்சுதான். வழக்கம்போல அழகிய தலைப்புகளே என்னை உள்ளே கொண்டுசென்றுவிட்டன.

சில கலைப்படைப்புக்கள் காலத்தில் இயல்பாக மலர்ந்துவிடுகின்றன. செம்மீன் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று. தகழி சிவசங்கரப்பிள்ளை அதை எப்படி எழுதினார் என்பது வியப்புக்குரியதுதான். அவருடைய யதார்த்தவாத – இயல்புவாத அழகியல் இல்லாத நாவல் இது. ஒரு தேவதைக்கதை போன்றது. ஆலப்புழா கடற்பகுதியில் புழங்கும் தொன்மங்களில் ஒன்று, தகழியின் இளமையிலேயே அவரை வந்தடைந்து தொடர்ந்து உடனிருந்தது.

அதை ஒரு நாவலாக எழுதவேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு இல்லை. ஆனால் எப்படியாவது எழுதவேண்டும் என்றும் எண்ணியிருந்தார். உண்மையில் ஒரு கவிதையாக எழுதினாலென்ன என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் எழுத உளம்கூடவுமில்லை. ஏனென்றால் அவருடைய அன்றைய அரசியல்கொள்கை, இலக்கியக் கொள்கை என்பது ஸ்டாலின் காலத்தில் முன்வைக்கப்பட்ட  சோஷலிச யதார்த்தவாதம்தான். தொழிலாளர் ஒன்றுசேர, புரட்சி உருவாக எழுதுவது. அதற்குள் செம்மீன் போன்ற கதைகளுக்கு இடமில்லை.

செம்மீனை தகழி எப்படி எழுதினார் என அவரே சொல்லியிருக்கிறார். பலரும் எழுதியிருக்கிறார்கள். கோட்டையத்தில் ஒரு பதிப்பாளரிடம் நாவல் எழுதித்தருகிறேன் என்று சொல்லி சிறுகச் சிறுகக் கடன் வாங்கி செலவிட்டுவிட்டார். அவர் நாவல் எங்கே என்று துரத்த திரிச்சூர் வந்து தலைமறைவாக இருக்கிறார். திரிச்சூர் கரெண்ட் புக்ஸ் நிறுவனம் பணம் கொடுத்தால் அதைக்கொண்டு கோட்டையம் பதிப்பாளரின் கடனை அடைத்து எஞ்சியிருக்கு மிச்சத்தை செலவிட்டு கொஞ்சநாள் ஓட்டலாம் என்று எண்ணம். நாவல்? அதுதான் வரவில்லையே. வந்தால் கொடுக்க மாட்டோமா என்ன?

திரிச்சூரில் கடனுக்காக அலைகிறார். கரண்ட்புக்ஸ் உரிமையாளரும் இலக்கியவிமர்சகரும் மார்க்ஸியக் கோட்பாட்டாளருமான ஜோசஃப் முண்டச்சேரியிடம் கொஞ்சம் பணம் வாங்குகிறார். கைக்கு பணம் கிடைத்ததுமே கிளம்பி கோட்டையம் செல்கிறார்.  அங்கே பேருந்துநிலையத்தை ஒட்டி மத்தாயி என்பவர் ஒரு சைவ ஓட்டல் நடத்தி வருகிறார். சைவ ஓட்டல் நடத்தும் கிறித்தவர் என்பதனால் ‘போற்றி மத்தாயி’ என்று செல்லப்பெயர் [போற்றி என்பது துளு,கொங்கணி பிராமணர்களைக் குறிப்பது. அன்று அவர்கள்தான் சைவ உணவகங்கள் நடத்துபவர்கள்] அவருடைய ஓட்டல் அருகே போட் ஹவுஸ் லாட்ஜ் என்னும் ஏழெட்டு அறைகள் கொண்ட விடுதியையும் மத்தாய் நடத்திவருகிறார். அதிலொரு அறையில் தங்கி எழுத ஆரம்பிக்கிறார்.

நான்கு வெவ்வேறு நாவல்கள். எதுவும் மேலே வளரவில்லை. கடைசிநாவலை கிழித்துவீசிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக வந்து அன்று சாகித்ய பிரவர்த்தக சங்கம் செயலாக இருந்த, பின்னாளில் டி.சி.புக்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய டி.சி.கிழக்கேமுறியிடம் [டொமினிக் சாக்கோ கிழக்கேமுறி] எழுதமுடியவில்லை, ஆகவே ஊருக்கு திரும்பிச் செல்லப்போவதாகச் சொல்கிறார். ஆனால் அன்றிரவு அரைத்தூக்கத்தில் ஓர் உள எழுச்சி. எழுந்தமர்ந்து “எங்கப்பா தோணியும் வலையும் வாங்கப்போகிறாரே” என்று கறுத்தம்மா பரீக்குட்டியிடம் செல்லம் கொஞ்சும் காட்சியை எழுதிவிட்டார்.

வெளியே செல்லாமல் அமர்ந்து ஏழுநாட்களில் நாவலை எழுதி முடித்தார் தகழி. தகழி நியூஸ்பிரிண்ட் காகிதத்தில் பென்சிலால் எழுதுபவர். நிறைய கிழித்துப்போடுபவர். வெட்டிவெட்டி எழுதுவதும் உண்டு. ஆனால் செம்மீன் ஒரேவீச்சில், ஒருமுறைகூட காகிதம் கிழிக்கப்படாமல் எழுதப்பட்ட நாவல். எழுதியபின் ஒன்றும் தோன்றாமல் வெறுமையுடன் அமர்ந்திருந்தார். அவரை மீறி நிகழ்ந்த கதை. ஆனால் அது நல்ல நாவல்தானா என தகழிக்கே ஐயம். புராதன விழுமியங்களைத் தூக்கிப் பிடிக்கிறதா? வெறும் காதல்கதையாக ஆகிவிட்டதா? உழைப்புக்கு மரியாதை செலுத்தவில்லையா?

விடுதிக்கு வரும் சி.ஜே.தாமஸ் அந்நாவலை வாசிக்கிறார்.[ மலையாள நாடக ஆசிரியரான சி.ஜே.தாமஸ்தான் ஜே.ஜே.சிலகுறிப்புகளில் வரும் ஜே.ஜேயின் முன்னோடி பிம்பம். எம்.கோவிந்தனின் நண்பர். இளமையிலேயே காலமானார்] “இது ஒரு கிளாஸிக்!” என அவர் அறிவிக்கிறார். தகழி உளம் தெளிகிறார். அதை பதிப்பகத்திற்குக் கொடுக்கிறார்.

ஆனால் இடதுசாரிகள் அந்நாவலை கிழிகிழி என கிழிக்கிறார்கள். அது ‘பூர்ஷுவா அழகியல்’ கொண்ட நாவல் என்று ஜோசப் முண்டச்சேரி வகுக்கிறார். அது உழைப்புக்கு எதிரானது, கடலோரப் பெண்களை இழிவுசெய்வது, மீன்பிடித்தொழிலைப் பற்றி அதில் ஒன்றுமே இல்லை – இவ்வாறு ஏகப்பட்ட விமர்சனங்கள்.  செம்மீன் என்ற பெயர் வெளிவந்ததுமே அன்றைய வழக்கப்படி மீன்பிடித்தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய நாவல் அது என எண்ணிவிட்டிருந்தனர். ஆகவே கடுமையான ஏமாற்றம்.

விமர்சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட தாக்குதல்களாகி பின்னர் வசைகளாகின்றன. தகழிக்கு எதிராக நேரடி ஆர்ப்பாட்டம்கூட நடைபெறுகிறது. பழைய இடதுசாரித் தோழர்களே கடுமையாக விமர்சிக்கிறார்கள். விமர்சனச் சூறாவளி தகழியை சோர்வுறச் செய்கிறது. அவர் கம்யூனிஸ்டுக் கட்சியை விட்டு மெல்லமெல்ல உளம்விலக அதுவே காரணமாகிறது. ஆனால் கடைசிவரை இடதுசாரி ஆதரவாளராகவே நீடித்தார்.

வி.வி.வேலுக்குட்டி அரையன் என்னும் அறிஞர் செம்மீன் பற்றி எழுதிய கடுமையான விமர்சனம் தகழிக்கு எதிரான அடுத்த அலையாக எழுந்தது. செம்மீனில் பேசப்படும் அரையர் சமூகத்தைச் சேர்ந்தவரான வேலுக்குட்டி அரையன் வரலாற்றாய்வாளர், ஆயுர்வேத வைத்தியர். இலக்கணம், கவிதை, வரலாறு என இருபது நூல்களின் ஆசிரியர். அரையன் என்னும் பத்திரிகை நடத்தியவர். அவருடைய ‘செம்மீன் – ஒரு விமர்சனம்’ என்னும் நூல் அன்று பெரிய தாக்கத்தை உருவாக்கியது

வேலுக்குட்டி அரையன் தகழிக்கு மீனவர்வாழ்க்கை பற்றி ஒன்றும் தெரியது என அவர் வாதிடுகிறார். தகழியின் நாவலில் உள்ள பல்வேறு தகவல்பிழைகளை பட்டியலிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் நூல் இது. அவருடைய விமர்சனங்களை இப்படிச் சுருக்கலாம்.

அ . அரையர் சமூகத்தில் ‘கடலம்மை’ என்ற நம்பிக்கையே இல்லை, அத்தகைய தொன்மமே அவர்களிடம் இருக்கவில்லை என்கிறார். சில வேண்டுதல்களில் பெண்கள் கடலம்மை என்று சொல்வதுடன் சரி

ஆ. பழனி தனியாக படகில் மீன்பிடிக்கப் போவது சாத்தியமே அல்ல. கடலில் தூண்டிலிட்டுப் பிடிப்பது மிக அரிதாகவே நிகழ்வது

இ.மீனவப் பெண்களின் வாயாடித்தனம், தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய தகழியின் சித்தரிப்பு இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது

ஈ.  தகழி அந்நாவலில் எழுதியிருக்கும் பேச்சுமொழி அரையர்களுடையது அல்ல. அதிலுள்ள பல சொற்களை அரையர்கள் பயன்படுத்துவதில்லை

ஈ. அரையர்களின் சாதிய அமைப்பு, உள்பிரிவுகள் பற்றியெல்லாம் தகழிக்கு தெரியவில்லை

உ. அதில் மீன்களைப் பற்றிய செய்திகள் பல பிழையானவை. சிலமீன்கள் சில பருவந்நிலைகளில் கிடைப்பதில்லை. சாகர என்னும் சேற்றுப்பரப்பு தோன்றும்போது ஒரு மீன் தோன்றினால் இன்னொருமீன் தோன்றுவதில்லை

இன்றும்கூட கலைப்படைப்புக்களைப் பற்றி இலக்கியமறியாதவர்கள் செய்யும் வழக்கமான விமர்சனங்கள் கொண்ட நூல்தான் வேலுக்குட்டி அரையனால் எழுதப்பட்டது. அதாவது, தகவல்பிழைகளைக் கண்டடைவது, சித்தரிப்புகளுக்கு தங்கள் நோக்கில் உள்நோக்கம் கற்பிப்பது, அரசியல்சரிகளின் அடிப்படையில் தாக்குவது ஆகியவை. வேலுக்குட்டி அரையனின் மொழி கேலி கிண்டல் என கடுமையான தாக்குதல்கொண்டது. அந்நூலை இடதுசாரிகள் தகழிக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால் புனைவு என்பது புறவுலகிலிருந்து சில கூறுகளை எடுத்து தன்போக்கில் முடைந்துகொண்டு தனியுலகை உருவாக்குவது. அது யதார்த்தத்தின் ஆவணம் அல்ல. அதன் ‘பிழைகள்’ கூட புனைவின் கூறுகளே. அதை அன்றைய விமர்சகர்களான எம்.பி.பால், சி.ஜே.தாமஸ் போன்றவர்கள் வலுவாக நிறுவியதும் மெல்லமெல்ல இடதுசாரி எதிர்ப்புகள் இல்லாமலாயின.

செம்மீன் உடனடியாக பெருவெற்றி பெற்றது. 1957ல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றது. 1954ல்தான் இந்திய இலக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சாகித்ய அக்காதமி விருதுகள் உருவாக்கப்பட்டன. மலையாளத்தில் புனைவிலக்கியத்திற்குக் கிடைத்த முதல் சாகித்ய அக்காதமி செம்மீன் நாவலுக்குத்தான். மலையாளத்தில் நூற்றுக்கணக்கான பதிப்புகள் வெளிவந்துள்ளது செம்மீன்.

வி.கே.நாராயண மேனன் 1962ல் இந்நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். லண்டனைச் சேர்ந்த விக்டர் கோலன்ஸ் [Victor Gollancz] நிறுவனம் வெளியிட்டது. உலக அளவிலும் செம்மீன் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. தொடர்ந்து ஐரோப்பிய மொழிகளிலும் ஜப்பானிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பு உலகஇலக்கியச் செல்வம் என திரட்டிய தொகுப்பில் இடம்பெற்றது. தொடர்ச்சியாக விருதுகள் பெற்றுக்கொண்டே இருந்தது.

ராமு காரியட்

 

சலீல் சௌதுரி  [செம்மீன்]

 

மார்க்கஸ் பட்லே [செம்மீன்]

ரிஷிகேஷ் முகர்ஜி

1965ல் அதன் திரைவடிவம் வெளிவந்தது. ராமு காரியட் இயக்கத்தில் மார்க்கஸ் பட்லே ஒளிப்பதிவில் ரிஷிகேஷ் முகர்ஜி படத்தொகுப்பில். திரைக்கதை வடிவம் எஸ்.எல்.புரம் சதானந்தனால் எழுதப்பட்டது. இசை சலீல் சௌதுரி.

மலையாளத் திரைப்படங்களில் செம்மீன் போல தலைமுறை தலைமுறையாக ரசிக்கப்பட்ட ஒரு வெற்றிப்படம் உருவானதே இல்லை. அத்தகைய ஒன்றை மீண்டும் நிகழ்த்திவிட எல்லாருமே முயன்றிருக்கிறார்கள். ராமு காரியட்டே பலமுறை முயன்று தோற்றார். ஓரளவேனும் வென்ற படம் பரதனின் அமரம் மட்டுமே. லோகிததாஸின் எழுத்தில் வெளிவந்த அமரம் ஒரு முக்கியமான கலைப்படைப்பு.

இன்று பார்க்கையிலும் செம்மீன் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. மார்க்கஸ் பட்லேயின் ஒளிப்பதிவு ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும். கடலை படம் பிடிப்பது எத்தனை சவாலானது என்பதை நான் ஈடுபட்ட திரைப்படம் வழியாக அறிந்தவன். அது ஒரு மாபெரும் ஒளிபரப்பி. அந்த பின்புலத்தில் எல்லாமே நிழலுருக்களாகவே தெரியும். கடலுக்குள் சென்று படம்பிடிக்க முடியாது, காமிரா ஊசலாடுவதனால் காட்சிகள் அமையாது.

ஆனால் அன்றிருந்த மிகக்குறைவான வசதிகளைக் கொண்டு, நுட்பமற்ற காமிரா மற்றும் ஒளியுணர்வு குறைவான படச்சுருளை பயன்படுத்தி, மார்க்கஸ் பட்லே உருவாக்கிய பேரழகு கொண்ட படச்சட்டங்களே அப்படத்தின் முதன்மையான கலைக்கூறு. பெரும்பாலும் விடியற்காலையில் , கடல் மெல்லிய ஒளிகொள்ளும் பொழுதில் மட்டும் எடுக்கப்பட்டவை செம்மீன் படத்தின் கடற்காட்சிகள். பல காட்சிகள் நாட்கணக்கில் காத்திருந்து எடுக்கப்பட்டவை.

அன்றைய ஸ்டுடியோ படங்களை செம்மீன் போல எடுக்கவே முடியாது. முதலாளிகள் படச்சுருளை அளந்து கொடுப்பார்கள். செம்மீனின் தயாரிப்பாளர் பாபு இஸ்மாயீல் சேத் [செம்மீன் பாபு] சினிமாப் பித்தர். குடும்ப சொத்தை அள்ளி அள்ளி இந்தப்படத்திற்காக எடுத்து வைத்தார். அவரைப்போன்றவர்களே இந்தவகையான படங்களுக்கு தேவையான பின்பலம். படச்சுருள் கணக்கில்லாமல் கொடுக்கப்பட்டது. மிகச்சிறந்த படச்சட்டங்கள் மட்டும் தெரிவுசெய்து படத்தில் சேர்க்க்கப்பட்டன.

கடலுக்குள்ளேயே சென்று எடுக்கப்பட்டிருப்பவை போன்று தெரியும் காட்சிகள் கரையில் இருந்து ஸூம் போட்டு எடுக்கப்பட்டவை. சிலகாட்சிகள் கடலுக்குள் கடல்பாறைமேல் காமிராவை அமைத்து எடுக்கப்பட்டவை. ரிஷிகேஷ் முக்கர்ஜியின் படத்தொகுப்பு கடலை ஒரு கதைமாந்தராகவே நிலைநிறுத்துகிறது. படம் முழுக்க கடலோசை. சீறும் கொந்தளிக்கும் ஊழ்கத்தில் அமையும் கனவுகாணும் கடல். தமிழிலும் மலையாளத்திலும் பெரும் ஒளிப்பதிவாளர்கள்கூட ‘அதைப்போல செய்யமுடியாது ,அது ஜீனியஸ் வர்க்’ என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இன்று இந்தப் படத்தின் காட்சியழகு முயன்றாலும் இயலாதது. மீன்தோணிகளை மறிக்கும் பறவைகளிலிருந்து அப்படியே அம்மக்களைக் காட்டி விரிகிறது படம். இன்று கடலை நம்பி இத்தனை மக்கள் இல்லை. கடலோரத்தில் மீன்பாடு இத்தனை கொண்டாட்டமானது அல்ல. இன்று கட்டுமரங்களும் துடுப்பு துழாவுவதும் இல்லை. துடுப்புபோடத் தெரிந்தவர்களே குறைவு. முழுக்க சிறு மோட்டார்கள்தான் கட்டுமரங்களில்கூட பொருத்தப்படுகின்றன.

இந்தப்படத்தில் துடுப்பு போடுவதன் அசைவுகள் பறவைகள் சிறகு உந்தி பறப்பதுபோலிருக்கின்றன. நீண்ட நிரையாக அவர்கள் கடலுக்குள் செல்லும் காட்சிகள் ஏதோ வரலாற்றுக்காலம் போல தோன்றுகின்றன. மார்கஸ் பட்லே பலகாலம் கடலோரம் தங்கி எடுத்த காட்சிகள் அவை, அவற்றை அரிய படத்தொகுப்பு வழியாக ரிஷிகேஷ் முக்கர்ஜி கலையொருமை கொள்ளச் செய்தார். மார்க்கஸ் பட்லே ஒளிப்பதிவுக்கு உலக அளவில் கிடைக்கும் உச்சகட்ட விருதான கேன்ஸ் திரைவிழா தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.

சத்யன் மிகையின்றி கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் செம்மீன் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை அளித்தவர்கள் செம்பன்குஞ்ஞு ஆகவரும் கொட்டாரக்கரை ஸ்ரீதரன் நாயர், அவர் மனைவி சக்கியாக வரும் அடூர் பவானி , அவர் நண்பர் அச்சன் குஞ்ஞு ஆக வரும் எஸ்.பி.பிள்ளை ஆகியோர்தான்.

இன்று இப்படி ஒரு படம் திட்டமிடப்படுகையிலேயே ‘அந்த மக்களின் இசை அப்டியே வரணும்’ என ஆரம்பிப்பார்கள். கலை என்பது ‘பதிவு செய்வது’ அல்ல, ‘உருவாக்குவது’தான். சலீல் சௌதுரியின் இசை உண்மையில் கேரளக் கடலோர இசையே அல்ல. அது அஸாமிய பழங்குடியிசையும் மேலைச் செவ்வியலிசையும் கலந்த ஒரு வெளி. ஆனால் இன்று அந்த இசையே கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கடலோர மக்களின் இசையாக ஆகிவிட்டிருக்கிறது.

செம்மீன் படம் 1965 ஆம் ஆண்டுக்கான தேசியவிருது பெற்றது. சிகாகோ சர்வதேச விழாவில் விருதுபெற்றது. பல சர்வதேச திரைவிழாக்களில் தொடர்ந்து விருதுகள்பெற்றது. ஆவணக்காப்புகளில் இடம்பெற்றது.

செம்மீன் நாவலின் மென்மையான குறியீட்டுத் தன்மையே அதன் கவித்துவம். அதில் கடலைப்பற்றிய வரிகள் இயல்பாக வந்தபடியே இருக்கின்றன. அந்தக் கடல் எது? அதை தகழி சொல்வதில்லை. நாவலில் அது விதியாக, சமூகமாக, உள்ளங்களாக தோன்றியபடியே இருக்கிறது. ஆனால் சினிமாவில் பாடலில் வயலார் அதை அடிக்கோடிட்டு காட்டுகிறார். ‘கடலிலே ஓளமும் கரளிலே மோகமும் அடங்குகில்லா” [கடலில் அலையும் உள்ளத்தில் மோகமும் அடங்குவதில்லை] அவர்களின் உள்ளே அலையடிக்கும் உள்ளம்தான் அது. அவர்கள் அஞ்சி அஞ்சி தவிர்ப்பது. ஆனால் அதன் கரையிலேயே வாழ்கிறார்கள். அதன் சுழிகளில் இழுத்துக் கொண்டுசெல்லப்படுகிறார்கள். ரிஷிகேஷ் முக்கர்ஜி படம் முழுக்க உள்ளக்கடலை நிகழ்த்திக்காட்டுகிறார்.

அது எவருடைய தனி உள்ளமும் அல்ல. செம்பன் குஞ்ஞின் பேராசை, சக்கியின் ஏக்கம், கறுத்தம்மாவின் தவிப்பு, பரிக்குட்டியின் தனிமை, பழனியின் ஆணவம் என எல்லாமே அதுதான். அனைவரிலும் ஆழுள்ளமாக நிறைந்திருக்கும் ஒன்று. கடக்கமுடியாதது என்பதனால் கடல், ஆழ்ந்ததனால் ஆழி, பரந்ததனால் பரை, வெறுமை கொண்டதனால் பாழி, சூழ்ந்திருப்பதனால் வளைநீர், முடிவின்மை கொண்டதனால் நெடுநீர். எல்லை கொண்டமையால் நிலைநீர். எல்லாமே மானுட அகத்திற்கும் பொருந்தும்தானே.

செம்மீன் வாங்க

 

 

 

மலையாள சினிமா ஒரு பட்டியல்

தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்

படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?

இசையும் வண்ணமும்

===========================================================================

செம்மீன் பற்றி அதியன்

செம்மீன் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஅந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅக்ஷயபாத்திரம் – கடிதங்கள்