அய்யன்காளி, வைக்கம்

வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

அன்புள்ள ஜெ,

வைக்கம் போராட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நான் இன்னும் அதியமானின் புத்தகத்தை படிக்கவில்லை (புத்தகம் என்னிடம் இருக்கிறது). நிர்மால்யாவின் ‘மகாத்மா அய்யன்காளி’ புத்தமும் இருக்கிறது. இவற்றோடு அதிகம் பேசப்படாத இன்னொரு புத்தகம், மேரி எலிஸபத் கிங் எழுதி ஆக்ஸ்போர்டு வெளியிட்ட ‘Gandhian Non-Violent struggle and untouchability in South India: The 1924-25 Vykom Satyagraha and the Mechanisms of Change’. இந்தப் புத்தகம் நல்ல தரத்தில் இருக்கிறது. படித்த வரையில், பெரியாரின் பங்களிப்புப் பற்றிய உங்கள் கட்டுரைகளின் சாராம்சத்தோடு ஒத்துப் போகிறது. முழுவதுமாக அதியமான், மேரி புத்தகங்களை படித்து ஒப்பு நோக்கி எழுத வேண்டும்.

நேற்று அரவிந்தன் (வேறொருவர்) என்கிற வாசகர் வைக்கம் போராட்டத்தில் அய்யன்காளி பங்குப் பெற்றதாகவும் நிர்மால்யாவின் புத்தகத்தில் தரவு இருக்கிறது என்கிறார். நிர்மால்யா புத்தகத்தில் அப்படி இல்லை என்பதே நான் சரி பார்த்த வரையில் தெரிகிறது. வைக்கம் போராட்டம் பற்றி சிறு குறிப்பு இருக்கிறது டி.கெ.மாதவன் புகைப்படத்தோடு. அக்குறிப்பில் அய்யன்காளி பற்றி எதுவுமில்லை. மேலும் அய்யன்காளி பற்றிய புகைப்படங்களில் வைக்கம் பற்றி இல்லை. ‘ஆராலும்மூடு சந்தை’, ‘பாலராமபுரம் சாலியத் தெரு’ ஆகியபு புகைப்படங்கள் தான் இருக்கின்றன.

எலிஸபத் கிங் புத்தகத்தில் அய்யன்காளி பற்றித் தெளிவாக இப்படி இருக்கிறது, “he did not actively participate in the Vykom Satyagraha. The absence of Ayyankali from a major movement against the degradation of untouchables must be pondered”.

ஜோசப் லெலிவெல்டின் “Great Soul:Mahatma Gandhi and His Struggle with India” அய்யன்காளி வைக்கம் போராட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்று கே.கே.கொச்சு என்கிற தலித் அறிஞரோடு பேசும் போது தெரிய வந்தது என்கிறார். “K.K.Kochu, a Dalit intellectual whom I met near Kottayam, has written that Ayyankali’s abstention from Vaikom- his “silence”-is what echoes down over the years for Dalits. That abstention reflects something other than indifference. It points to a rising impulse to act on their own behalf. When Gandhi, on a later trip, finally was introduced to Ayyankali, he hailed him, it’s said as “king of pulayas”, then invited him to declare his greatest wish. “I only wish that ten from our community would get B.A’s,” the Pulaya king coolly replied”.

கவனிக்க வேண்டியது எலிஸபத் கிங்கும், லெலிவெல்டும் தனித்தனியே இந்த முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவரையே இன்னொருவர் மேற்கோள் காட்டியிருந்தால் நாம் ஒருவர் தவறாகச் சொன்னார் அதை இன்னொருவரும் நம்பிவிட்டார் என்று சொல்லலாம். இங்கு அப்படிச் சொல்ல முடியாது. அய்யன்காளி வைக்கம் போராட்டத்தில் பங்குப் பெறவில்லை என்பதே உண்மை.

நன்றி

அரவிந்தன் கண்ணையன்

***

வைக்கம் ,காந்தி, அய்யன்காளி


வைக்கம், மன்னத்து பத்மநாபன்

அன்புள்ள ஜெ,

வைக்கம் போராட்டத்தில் அய்யன்காளியின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே எழுதினேன். அவருக்கு பங்கு இல்லை. அக்கடிதத்தை படித்தீர்களா என்று தெரியவில்லை.

இன்று உங்கள் வாசகர் ஒருவர் நான் என்னமோ மன்னத்து பத்மநாபனே வைக்கம் போராட்டத்தை வெற்றியாக முடித்துவைத்தார் என்று எழுதி விட்டதாக சொல்கிறார்.

நான் எழுதியதாக அவர் சொல்வது, “பின்னர் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் இணையப்பக்கத்தில் மன்னத்துப் பத்மநாபன் தீண்டாமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் ஆலயபிரவேசம் ஆகியவற்றை வலியுறுத்தி மிக நீண்ட நடைபயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அந்த மாபெரும் பயணமே வைக்கம் போராட்டம் வெற்றிகரமாக முடிய வழிவகுத்தது என்றும் பார்த்தேன்”

நான் எழுதியப் பதிவின் நோக்கம் அப்போராட்டத்தின் போது பிராமணர்களின் பங்களிப்பு பற்றி. நூற்றுக் கணக்கான பிராமணர்கள் பிராமணர்களுக்கு எதிராக ஒரு நடைபயணம் சென்று மகஜர் அளித்தார்கள் என்பதே தமிழகத்தில் பலரும் அறியாதச் செய்தி. தலித்துகளுக்காக போராடிய பிராமணர்களும் இருந்தார்கள் வரலாறு ஒற்றைப்படையானதல்ல என்ற அர்த்தத்தில் எழுதினேன். அந்தப் பேரணியே வைக்கம் போராட்டம் வெற்றியடைய வழி வகுத்தது என்றெல்லாம் எழுதவில்லை. அந்தப் பதிவை நான் எழுத காரணமே இணையத்தில் சுற்றிய இன்னொரு பதிவால். காஞ்சி மகா பெரியவரும் ஏனைய பிராமணர்களும் தலித்துகள் கோயில் பிரவேசம் செய்யக்கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக் காட்டி ‘இது தான் இந்து மதம்’ என்றும் சொன்னது. அதற்கு மறுப்பாகத்தான் எழுதினேன். ஹ்ம்ம்ம்.

நான் பேஸ்புக்கில் எழுதியது கீழே.

“History is complex: The tangled tale of Brahmins and Harijans.

A Facebook post doing the rounds carries a newspaper clipping of a reportage dated Dec 27th (the post says Dec 30th 1932). The news is about an association, including the much revered Kanchi pontiff, that objected to Harijans, as Dalits were then referred to, entering temples because they were, per the scriptures, outside the 4 divisions of Hinduism and practically not Hindus and therefore not entitled to enter temples. The post duly criticizes Hinduism. Is history that simple? Of course not.

During Vaikkom Satyagraha ‘Savarna Jathas’ (Upper caste processions) were organized by Mannath Padmanabha Pillai who had been combating untouchability for 50 years before 1924-25 when then agitation took place. (EVR was a very latter day incidental participant). Hundreds of Brahmins ‘walked in military precision’ starting Nov 1st 1924 from Vaikkom to meet the maharani and present a memorandum to let Ezhavas into streets adjoining temples. They marched despite pouring rains and the numbers swelled when they reached the capital on Nov 11th. Enroute the marchers hailed Gandhi’s name and ate food offered by Pulayas.

Time and time and time again we find upper castes, particularly Brahmins, who led reforms and worked for the uplift of Dalits. There are two aspects to this. First, we shouldn’t use these examples to whitewash the sins of the upper castes wholesale. These upper caste men and women who rebelled were still far fewer in number and they were rebelling against their own fellow compatriots who created or nurtured the iron law of discrimination in the first place. Second, as much as we don’t want to excuse everyone on account of a few we should not refuse to acknowledge the acts of grace carried out at great personal risk and even losses.

Understanding the complexities of history with its labyrinthine nuances is difficult but it is a duty we must undertake. I remain a staunch critic of the regard that is so reverentially heaped, mindlessly, on the Kanchi pontiff turning a blind eye to how he remained unapologetic about untouchability etc till his end decades later.

PS: The details on Vaikkom are from Mary Elizabeth King’s “Gandhian Nonviolent Struggle and Untouchability in South India: The 1924-25 Vaikkom Satyagraha and the Mechanisms of Change”.

நன்றி

அரவிந்தன் கண்ணையன்.

***

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்,

முதலில் ஒரு சிறு தகவலை சுட்டிக்காட்டுகிறேன். மேரி எலிஸபத் கிங் அவர்களின் நூலில் இருந்து ஒரு செய்தியை உங்கள் முகநூலில் குறிப்பிட்டிருந்தீர்கள், அதைப்பற்றிய ஒரு குறிப்பு என் தளத்தில் நேற்று வந்திருந்தது.[ Mary Elizabeth King’s “Gandhian Nonviolent Struggle and Untouchability in South India: The 1924-25 Vaikkom Satyagraha and the Mechanisms of Change ]அந்நூலில் ஸவர்ண ஜாதா என்ற பேரில் மன்னத்து பத்மநாபன் நடத்திய மாபெரும் பாதயாத்திரை பற்றி கூறுகையில் அது  ‘பிராமணர்களின் ஊர்வலம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

மன்னத்து பத்மநாபன் என்.எஸ்.எஸ் [நாயர் சர்வீஸ் சொசைட்டி] என்னும் அமைப்பை உருவாக்கியவர். அவருடைய அந்த அமைப்பே அந்தப்பாத யாத்திரையை நடத்தியது. மிகச்சிறிய அளவிலான பிராமணர்களே அதில் கலந்துகொண்டனர். சில நினைவுக் குறிப்புகளின்படி மொத்தமே பதினேழு பேர். சற்று கூட இருக்கலாம், அவ்வளவுதான். கேரளத்தில் பிராமணச் சாதியின் எண்ணிக்கை மிகக்குறைவு. அது பெரும்பாலும் நாயர் வேளாளர் மற்றும் உயர்சாதியினரின் நடைபயணம். நீங்கள் கூறிய நூலில் எளிதாக அது பிராமணர்களின் ஊர்வலம் என சொல்லப்பட்டுவிட்டது.

தமிழகத்திலோ வடமாநிலங்களிலோ வேறுநாடுகளிலோ வாழும் ஆய்வாளர்கள் நாளை பிராமணர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதியை அணுகியமுறையைப் பற்றி ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதும்போது இயல்பாக இந்தச் செய்தியை இந்நூலில் இருந்து மேற்கோள்காட்டிவிடுவார்கள். அப்படியே அந்த மேற்கோள் பரவிச்செல்லும், இல்லையா?

இதைப்போன்ற இன்னொரு விவாதம் நினைவுக்கு வருகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு, ஒருவர் நான் எழுதிய ஒரு கட்டுரையைப் பற்றி விவாதிக்கும்போது ‘கேரளத்தில் நாயர் சாதியினரிடம் மட்டுமே மக்கள்தாய வழிமுறை உள்ளது. அது ஒரு சமூகவழக்கமோ தொல்வழக்கத்தின் நீட்சியோ அல்ல, ஒரு பிறழ்வு மட்டுமே’ என எழுதினார்.  ஓர் ஆங்கில நூலை மேற்கோள் காட்டியிருந்தார்.

நான் கேரளச் சாதியினரில் நாயர்,ஈழவர், புலையர் போன்ற பெரும்பாலான சாதியினரிடம் மக்கள்தாயமுறை இருந்தது; வேளாளர்கள், நாடார்கள் ஆகியோரில் மக்கள்தாய முறைகொண்டவர்கள் பாதிப்பங்கினர் என்றும் இஸ்லாமியர் கிறித்தவர்களில்கூட அந்த முறை இருந்தது என்றும் சொன்னேன். இது ஒன்றும் ‘ஆய்வு செய்து’ சொல்லவேண்டிய செய்தி அல்ல. ஒரு மலையாளிக்கு சாதாரணமாகத் தெரிந்த உண்மை. ஆனால் அந்நபர் இரண்டு ஆங்கில சமூகவியல் நூல்களை மேற்கோள்காட்டி மேலும் வாதிட்டார். அவருடைய நம்பிக்கையுடன் என்னால் வாதிடமுடியவில்லை.

இந்த வகையான பிழைகள் எப்படி வருகின்றன. ஐரோப்பிய அமெரிக்க ஆய்வாளர்கள் இங்கு வந்து இங்குள்ள ஆய்வாளர்களையே தங்கள் தகவலாளர்களாகக் கொள்கிறார்கள். இங்கே எழுதப்பட்ட கட்டுரைகள் குறிப்புகளை செய்திமூலமாக எடுத்துக்கொள்கிறார்கள், அவற்றை தெரிவுசெய்தும் மொழியாக்கம் செய்தும் அளிப்பவர்களும் இங்குள்ள ஆய்வாளர்களே. அவர்கள் பெரும்பாலும் கல்வித்துறையாளர்கள்.

இங்கே உள்ள ஆய்வாளர்களில் சாதிய, கருத்தியல் திரிபுகள் இல்லாதவர்கள் சிலரே. இங்குள்ள ஆய்வாளர்களின் பிழைகள், முன்முடிவுகள் அவர்களின்  ஆய்வையும் பாதிக்கின்றன. அவர்கள் தங்கள் அளவில் முன்முடிவுகளும் நோக்கங்களும் கொண்டவர்கள். அப்படி அல்லாதவர்கள் என்றால்கூட இந்தவகையான பிழைகள் அவர்களின் ஆக்கங்களில் ஊடுருவுகின்றன.

உங்களுக்கே தெரியும், இந்தியாவின் சாதிய யதார்த்தம் மிகச்சிக்கலானது. ஒருவர் சொல்லும் வரலாறு அல்ல இன்னொருவர் சொல்வது. ஒரு சின்ன விஷயத்தில்கூட சாதிச் சார்பு நூற்றுக்கணக்கான திரிபுகளை உருவாக்கிவிடுகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகள் மிகப்பெரும்பாலும் அரைநூற்றாண்டுக்குப்பின் நினைவுகளிலிருந்து உருவாக்கப்பட்டவை. குறைவானவையே நேரடிட் செய்திகள். அதில் பலவகையான அரசியல்கள் உண்டு.

கேரள வரலாற்றாய்வில் அப்படி சாதிச்சார்பான நோக்கால் சிடுக்காக ஆகி நூறாண்டுகளாக முடிவேயில்லாமல் விவாதிக்கப்படும் பத்து தலைப்புக்கள் உள்ளன – பின்னர் ஒருமுறை அவற்றை எழுதுகிறேன் ஒரே வரி மட்டும், கேரள வரலாறு என்பது நாயர்களால் எழுதப்பட்டு ஈழவர்களால் திருத்தப்பட்டது.

வைக்கம் போராட்டம் கேரள அரசியல் – சமூகவியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனை. இன்றும் கேரளத்திலுள்ள அரசியல் அதிகார மையங்கள் அனைத்தும் அதில்தான் உருவாகி தெளிவடைந்தன. ஆகவே அதைப்பற்றிய வரலாறுகளும் சிக்கலானவை. மலையாள ஆய்வாளர்களின் நூல்கள் வழியாக, கேரள சாதியரசியலின் சிக்கல்கள் வழியாக, நடுநிலைமையுடன் சென்றாலன்றி உண்மையை சென்றடைய முடியாது.

வைக்கம் போராட்டம்  காங்கிரஸ் ஆதரவுடன் , நாராயணகுருவின் மாணவரான டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டு, பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன் காங்கிரஸாலும் காந்தியாலும் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த ஒன்று. காந்தியவாதியாக அதில் மன்னத்து பத்மநாபன் கலந்துகொண்டார். அதை முடித்துவைப்பதில் பெரும்பங்கை ஆற்றினார். அதில் என்.எஸ்.எஸ் அவரால் வழிநடத்தப்பட்டு பங்களிப்பாற்றியது.

ஆனால் அவருடைய பிற்கால வரலாறு அத்தகைய பெருமை கொண்டது அல்ல. அவர் நாயர்சாதியின் அதிகார அரசியலின் முகமாக மாறினார். என்.எஸ்.எஸ் அதன்பின் மிகப்பழைமைவாத இயக்கமாக மாறியது.  அவருடைய பழைய முற்போக்கு முகத்தில் இருந்து பிற்கால அரசியலை பிரித்துப் பார்த்தே வரலாற்றைப் புரிந்துகொள்ளமுடியும்.

அதையொட்டி வைக்கம்போராட்டத்தில் அவருடைய பங்கு மெல்லமெல்ல மாற்றப்பட்டது. வைக்கம் போராட்டம் காந்தியின் காங்கிரஸாலும் அதன் முகங்களான கேளப்பன், கே.பி.கேசவமேனன் போன்றவர்களாலும் நடத்தப்பட்டது என்றும்,  காந்தியின் ஆணையை ஏற்றுக்கொண்ட மன்னத்து பத்மநாபனால் முடித்துவைக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. மன்னத்து பத்மநாபனுக்கு வைக்கத்தில் வைக்கப்பட்ட சிலை அதன் ஒரு அடையாளம். அதாவது கிட்டத்தட்ட ஒரு நாயர்நோக்கு வரலாறு எழுதப்பட்டது

அப்போராட்டத்தில் நாராயணகுருவின் இயக்கத்தின் இடம் மறைக்கப்பட்டது. டி.கே.மாதவன் தவிர பிறர் பெயர்கள் சுட்டப்படவில்லை. அந்த வரலாற்றெழுத்தை ஈழவ வரலாற்றாசிரியர்கள், இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மாற்றி எழுதினர். நாராயணகுரு தொடக்கத்தில் ஐயம்கொண்டு விலகி நின்றார் என்றாலும் இறுதியில் நேரடியாகவே அரங்குக்கு வந்தார் என்பதும், அவருடைய இயக்கம் பங்கெடுத்தது என்பதும் நிறுவப்பட்டது.

ஆனால் இன்றுகூட நாராயணகுருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் உண்டு. காந்தியின் கடிதங்களில் நாராயணகுரு விலகிநின்றது, எதிர்த்தது பற்றிய செய்திகள் உள்ளன. அதை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி இந்த மறுப்பு எழுதப்படுகிறது. என் தளத்திலேயே இதைப்பற்றி ஒரு கடிதமும் என் விளக்கமும் வந்தது ஆனால் இன்று ஈழவர்களால் நாராயணகுருவின் பங்களிப்பு நிறுவப்பட்டுவிட்டது.

ஆனால் நெடுங்காலம் அய்யன்காளியின் பங்களிப்பு சொல்லப்படவே இல்லை. பல வரலாறுகளில் அவர் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றே உள்ளது.  அய்யன்காளியும் நாராயணகுருவைப் போலவே அகிம்சையில் நம்பிக்கை கொண்டவராக இருக்கவில்லை. நாராயணகுருவைப் போலவே அவரும் அத்வைதி, ஆகவே ஆலயவழிபாடு அவருக்கு முக்கியமாகத் தோன்றவுமில்லை. அவர் வைக்கம் போராட்டத்தில் இருந்து தொடக்கத்தில் விலகி நின்றார்.

அய்யன்காளியின் பங்களிப்பு அவருடைய பேரனும் அவருடைய முதல் வரலாற்றசிரியருமான வெங்கானூர் சுரேந்திரன் அவர்களால்தான் சுட்டிக்காட்டப்பட்டது.  அய்யன்காளி ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். அய்யன்காளியின் முறையான வரலாறு இன்னமும் செய்திகள் வழியாகத் தொகுக்கப்படவில்லை. மிகமிகக்குறைவாகவே அவரைப்பற்றிய பதிவுகள், ஆவணங்கள் உள்ளன. அவர் நினைவுகளை பதிவுசெய்யவில்லை. அன்றைய செய்திகளில் அவர் மிகமிகக் குறைவாகவே இடம்பெற்றார். கணிசமானவர்களின் நினைவுகளில் அவரைப்பற்றிய குறிப்பே இல்லை. ஆகவே சந்தர்ப்பம் சார்ந்த ஊகங்களாகவே அவருடைய வரலாறு இன்றும் சொல்லப்படுகிறது.

அய்யன்காளி ஆரம்பத்தில் நேரடியாக போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவருடைய அமைப்பு கலந்துகொண்டது. அய்யன்காளியின் தயக்கத்திற்கான காரணம் 1904 முதல் திருவிதாங்கூரில் உருவான ஸ்ரீமூலம் மக்கள் சபை என்னும் சட்டச்சபையில் அய்யன்காளி 1911 முதல் உறுப்பினராக இருந்தார் என்பது. அந்தச் சபையின் அதிகாரம் எல்லைக்குட்பட்டது – இந்தியாவில் அன்றிருந்த மாகாணச் சட்டச்சபைகளைப்போல. ஆனாலும் அய்யன்காளியால் புலையர்களின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்குக் கொண்டுவரவும் கல்வி உரிமை, வழிநடை உரிமை, அடிப்படைச் சொத்துரிமை போன்ற உரிமைகள் பலவற்றை பெறவும் இயன்றது.

அய்யன்காளியின் வழிமுறை என்பதே போராட்டமும் சமரசமும் மாறிமாறி நிகழ்வதுதான். பெறும் சிறு உரிமைகளே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கி மேலும் உரிமைக்கான வேட்கையை உருவாக்குகின்றன என அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் வைக்கம் போராட்டத்தில் அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

ஆனால் வைக்கம் போராட்டத்தின் இறுதிநாட்களில், நாராயணகுரு களத்திற்கு வந்தபின் அய்யன்காளியின் நேரடிப் பங்களிப்பும் இருந்தது.  ஆனால் புலையர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவானவர்கள், ஆகவே அந்தப் பங்களிப்பு ஒரு குறியீட்டு முக்கியத்துவம் மட்டுமே கொண்டது. 1930 முதல் ஆலயநுழைவுக்கான ஆணை பிறப்பிக்கப்படுவது வரையிலான எல்லா பேச்சுவார்த்தைகளிலும் அய்யன்காளி இருப்பதே அவருடைய பங்களிப்புக்கான சான்று என வெங்கானூர் சுரேந்திரன் குறிப்பிடுகிறார். மகாத்மா அய்ய்யன்காளி நூலின் 118 ஆவது பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் ஆலயநுழைவு அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களின் படம் உள்ளது, அதில் அய்யன்காளியும் இருப்பதைக் காணலாம். அரவிந்தன் குறிப்பிடுவது அதையாக இருக்கலாம்.

வைக்கம்போராட்டத்தில் அய்யன்காளியின் பங்களிப்பின் அடிப்படையிலேயே ஆலயநுழைவு கமிட்டிகள் அனைத்திலும் அவர் இடம்பெற்றார்.வைக்கம் உட்பட எல்லா போராட்டங்களிலும் அவர் தரப்பின் அழுத்தம் இருந்தது. அது ஸ்ரீமூலம்சபைக் குறிப்புகளில் பதிவாகியிருக்கிறது. ஆலநுழைவுக்கான ஒப்பந்தங்களில் அவர் இருந்தார். \நேரடியாக அவர் ஆலயநுழைவு களத்துக்குச் செல்லமுடியாது – அது மேலும் எதிர்ப்பும் வன்முறையும் உருவாகவே வழிவகுக்கும். 1934 ஜனவரியில் காந்தி அய்யன்காளியை தேடி வெங்ஙானூர் வந்து அய்யன்காளியை கௌரவித்தது அவருடைய அப்பங்களிப்பினால்தான்.

அகவே ஓரிரு ஆங்கிலநூல்களைக் கொண்டு உறுதியான முடிவுகளைச் சொல்லவேண்டியதில்லை. வரலாறு தொடர்ச்சியாக நுணுக்கமாக மேம்படுத்தப்பட்டு எழுதப்படுகிறது

ஜெ

***

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

திராவிட இயக்கம், தலித்தியம்

முந்தைய கட்டுரைஅரசன் பாரதம் -சீனு
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-12