அன்புள்ள ஜெ
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உதவியைச் செய்திருக்கிறது. யார் அந்த அ.வரதராஜன் என்று தேடச்செய்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்
ஆர்.எஸ்.பாரதி பேசியதை ‘பெரியார் வழியில் இருந்து’ பிறழ்ந்தவர் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் அம்பேத்கர் உள்ளிட்ட அத்தனைபேரையும் பற்றி அலட்சியமாக, ஆணவமாகத்தான் பேசியிருக்கிறார். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, தான்தான் எல்லாம் சொல்லிக்கொடுத்தேன் என்ற வகையிலே பேசியிருக்கிறார்
தமிழகத்தில் தலித் கல்வி இயக்கம் தியோசபிக்கல் சொசைட்டியால் முன்னெடுக்கப்பட்டது. கிறித்தவ கல்விநிறுவனங்கள் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன. தலித் அரசியல் இயக்கம் நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் தோன்றுவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள் அதன் தலைவர்களாக வந்துவிட்டார்கள். எம்.சி.ராஜா போன்றவர்கள் அன்றிருந்த எந்த நீதிக்கட்சி தலைவர்களைவிடவும் கல்வி கொண்டவர்கள். சட்டப்பணி ஆற்றியவர்கள். காங்கிரஸ் தமிழகத்தில் தலித் கல்விக்கு பெரும்பணியை ஆற்றியிருக்கிறது. அவர்கள் தொடங்கிய நிறுவனங்கள் இன்றும் உள்ளன.
இப்படியே போனால் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கு பத்மபூஷண் விருதை நாங்கள்தான் பிச்சைபோட்டோம் என்று பாரதிய ஜனதாக்கட்சி சொல்லும் என நினைக்கிறேன். தலித் வரலாற்றை எந்த முதலியாரும் தேவரும் பேசப்போவதில்லை. தலித்துக்கள் மட்டும்தான் பேசவேண்டும்
செல்வ கணேசன்
*
நீதிபதி அ.வரதராஜனின் ஆற்றலும் திராவிட அரசியலின் போலியான பெருமிதமும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், அ.வரதராஜனை முதல் தலித் நீதிபதியாக திராவிட இயக்கமான திமுகதான் நியமித்தது என்று பல்லாண்டுகளாகவே திராவிட அரசியல்வாதிகள் மேடைகளில், பேட்டிகளில், எழுத்துகளில் பேசிவருகிறார்கள். தற்போது அந்த பேச்சின் மோசமான வடிவமாக திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அமைந்திருக்கிறது. நாங்கள்தான் நியமித்தோம் என்று தம்முடைய சகாக்கள் கூறிவந்த நிலையில் “நாங்கள்தான் பிச்சை போட்டோம்” என்கிற வார்த்தையாக அதை மறுஆக்கம் செய்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இவர்கள் கூறும் அந்த முதல் தலித் நீதிபதி யார்? அவரை திமுக அரசு ஏன் நியமித்தது? நியமித்ததற்கான காரணம் என்ன? அவர் பெற்றிருந்த தகுதிகள் யாவை?
அ.வரதராஜன் அவர்கள் வேலூர் மாவட்டம், ஜோலார் பேட்டையில் ஓர் தலித் குடும்பத்தில் 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் பிறந்தார். தந்தையின் பெயர் அப்பாஜி. விவசாயம் மற்றும் சிறுவணிகத்தை தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்தான் வரதராஜன் அவர்கள். வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் பண்டிதர் மற்றும் கோலார் தங்கவயல் தலித்துகளின் தாக்கங்கள் பரவியிருந்த காலம் அது. விழிப்புணர்வு கொண்ட அப்பகுதியில் அன்றைய தலித் இளைஞர்களுக்கு கல்வியின் மீது மிகுந்த ஈடுபாடு உருவாகிவந்தது. வரதராஜன் அவர்களும் 1937 இல் திருப்பத்தூர் நகராட்சி பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். 1939 இல் இடைநிலைக் கல்வியை(இண்டர்மீடியம்) வேலூர் ஊரிஸ் கல்லூரியில் முடித்தார். சென்னை லயாலோ கல்லூரியில் 1941 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்று தமது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உயர்ந்தார். அதைத்தொடர்ந்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை 1943 இல் படித்து முடித்தார். 1944 செப்டம்பரில் பதிவு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். தம்முடைய 29 ஆவது வயதான 1949 ஆம் ஆண்டு நவம்பரில் உரிமையியல் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கும் இரண்டு மாதத்திற்கு முன்புதான் (1949/செப்டம்பர்17) திமுக என்னும் கட்சியும் உதயமானது என்பதை இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது திமுக உருவாகும் காலத்திலேயே அவர் நீதிபதியாகும் தகுதியை அடைந்துவிட்டார்.
தொடர்ந்து, வரதராஜன் அவர்கள் முனிசிபல் நீதிபதியாகவும் பிறகு, 1957 இல் சார்பு நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 1968 இல் மதுரை தொழிலாளர் நல நீதிமன்றத்திலும், 1969 இல் தொழில்துறை தீர்ப்பாயத்திலும் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1970 தென்காசி துப்பாக்கிச் சூடு பற்றிய விசாரணைக்கு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். அதேக் காலக்கட்டத்தில் தமிழக நீதித்துறையின் ஆய்வுக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
1973 பிப்ரவரி 15 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வரதராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அவர் நீதித்துறையில் வழக்கறிஞராக ஐந்தாண்டுகளும், நீதிபதியாக 24 ஆண்டுகளும் சிறப்புற பணியாற்றிய அனுபவங்களையும், தகுதியையும் பெற்றிருந்தார். அவற்றைத் தொடர்ந்து அவரின் பெயர் தகுதி மற்றும் மூப்பு (Seniority) அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியமர்த்துவதற்கான பட்டியலில் முதல் பெயராக வந்து நின்றது. அதன்படி, வரதராஜன் அவர்களின் பெயரை பரிந்துரைத்தார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. அந்த பரிந்துரையை மாநில முதல்வரும் மாநில சட்ட அமைச்சரும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது விதி; அன்றைய முதல்வர் மு.கருணாநிதிதான். ஆனால், வரதராஜன் அவர்களின் பெயரை பரிந்துரைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையை அன்றைய திமுக ஆட்சி அலட்சியம் செய்தது. ஆறுமாதங்களாக கிடப்பில் போட்டது.
வரதராஜன் அவர்களை தமிழக அரசின் பொதுப்பணித்துறை தேர்வாணையத்தில் ஓர் உறுப்பினராக வேண்டுமானால் அரசு தயார் என்கிற நிலைபாட்டில் திமுக அரசு நின்றது. ஆனால், வரதராஜன் அவர்களும் அவரை பரிந்துரைத்த தலைமை நீதிபதி அவர்கள் அந்த நிலைபாட்டை ஏற்கவில்லை. அதனாலேயே ஆறுமாதங்களாக நீதிபதிக்கான பரிந்துரையை கண்டுகொள்ளாமல் இருந்த திமுக அரசு, சத்தியவாணிமுத்து அவர்களின் வலியுறுத்தலுக்குப் பிறகுதான், வேறு வழியில்லாமல் பரிந்துரையை ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்துதான் அவர் 1974 பிப்ரவரி 27 ஆம்தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியில் நியமிக்கப்பட்டார்; உயர்நீதிமன்றத்தி நீதிபதியாக ஆன முதல் தலித் என்கிற வரலாற்றில் தடமும் பதித்தார்.
ஆறாண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற பணியில் சிறப்பாக பணியாற்றிய வரதராஜன் அவர்கள், 1980 டிசம்பர் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்றார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக ஆன முதல் தலித் என்கிற வரலாற்றையும் படைத்தார் நீதிபதி வரதராஜன் அவர்கள். ஐந்தாண்டுகள் முக்கியத்துவமான நீதிபதியாகவும், சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய ஆற்றல் மிக்க சட்ட நிபுணராகவும் உச்சநீதிமன்றத்தில் கடமையாற்றிய வரதராஜன் அவர்கள் 1985 அக்டோடர் 15 இல் நீதிபதவி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவர் நீதிபதியாக பணியாற்றிய வழக்குகளில் அவர் கொடுத்துள்ள விளக்கங்களை இன்றளவும் சட்ட நிபுணர்கள் வியந்து பின்பற்றுகிறார்கள் என்கின்றன சட்டவியல் துறைத் தகவல்கள். பல வழக்குகளுக்கு இன்றைக்கும் அவருடைய தீர்ப்புகளும் கருத்துகளும் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரங்களாக இருப்பதாக கூறப்படுகின்றன. அவர் நுட்பமான சட்டறிவை கொண்டிருந்தார் என்கிறார்கள் அவரின் தீர்ப்பு விளக்கங்களை ஆராய்ந்தவர்கள். ‘திருமண பேச்சில் மதிப்புக்குரிய பொருட்களை கேட்பதே வரதட்சணைக் கொடுமைதான்’ என்கிற அவரின் தீர்ப்பு இன்றைக்கும் நாடுமுழுக்க முக்கியமான முன்னுதாரணத் தீர்ப்பாக கூறப்படுகிறது.
ஓய்வு பெற்றபின்னும் கூட அவர் சமூகத்தின் கொடுமைகளை எதிர்த்து குரல்கொடுத்தார். அண்ணலின் பேரனும் தலித் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து செயல்பட்டார் வரதராஜன் அவர்கள். வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டை அரசுகள் முழுமையாக பயன்படுத்தாத போக்குக்கு எதிராகவும் அவரும் பிரகாஷ் அம்பேத்கரும் இணைந்து தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததனர்; குடியரசுத் தலைவரிடமும் வலியுறுத்திவந்தனர்.
இத்தகைய தகுதியும் பேராற்றலும் கொண்ட நீதிபதி வரதராஜன் அவர்களைத்தான், வெறும் சாதியால் பதவி பெற்றவர் என்கிற தொணியில் தொடர்ந்து கூறிவருகிறார்கள் திராவிட அரசியல்வாதிகள். அறிவாலும் ஆற்றலாலும் பெற்ற பணியுரிமையை பிச்சையாக பெற்றதாக கூறுகிறார்கள் கபடமான திராவிட அரசியல் உறுப்பினர்கள். இவர்கள்தான் சமூகநீதியின் அடையாளங்களாகவும் தங்களை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கேலிக்குரியதாகும்.
தலித் சமூகத்தவர்கள் தங்களுடைய அறிவு, ஆற்றல், நடத்தை ஆகியவற்றால் உயர்ந்து வருவதை அங்கீகரிக்க முடியாத சாதிய மனோநிலையைக் கொண்டவர்கள், தலித் பண்புகளை மறைத்தும், திரித்தும், இழித்தும் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கு நீதிபதி வரதராஜன் அவர்களின் வரலாற்றை தங்களுடைய வரலாறாகத் திரித்துக்கொண்ட திராவிட அரசியல் தரப்பினர் சிறந்த எடுத்துக்காட்டாக இன்று திகழ்கிறார்கள்.
தி.ஸ்டாலின்
[முகநூலில்]