ஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு

மண்டகப்பட்டு

 

இனிய ஜெயம்

 

விழுப்புரம் துவங்கி அருணை மலை வழியே வேலூர் வரை நீளும் மலைத்தொடர் தமிழக அளவில் மிக முக்கியமான நிலப்பரப்பு.  இதன் இறுதிப் புவியியல் வரலாற்று நேரமானி, விண்கல் மோதி டினோசர்கள் அழிந்துபோன ஊழிக் காலத்தில், விண் கல் மோதிய உப விளைவில்,  புவி மைய கன்மதம் உலை கொதிக்கும் மேற்ப்பரப்பாக மாற்றிய, இப்போது நாம் காணும் நிலக்காட்சி வரை வந்து நிற்கிறது.

 

செத்தவரை, கீழ்வாலை பாறை ஓவியங்கள் துவங்கி, பல்லவர்களின் முதல் குடைவரைகள், கோவில்கள், எண்ணற்ற சமணப் பள்ளிக் குகைகள்,  உளுந்தூர்பேட்டை, மேல் சித்தாமூர், வந்தவாசி, திருமலை சமணத் தளங்கள், செஞ்சிக் கோட்டை என வரலாற்றின் அடுக்குகள் இந்த மலைத்தொடரின் இரு பக்க சாரலிலும் அமைந்து நிற்பவை. இடைவெளிகளில்  நண்பர் இதயத்துல்லா உடன், இந்த மலைச் சாரல் தொடரில் எங்கேனும் அவ்வபோது அலைவது உண்டு. இம்முறை மூன்று இடங்கள் சென்றோம்.

 

முதல் இடம்.  சேந்தமங்கலம் வாணிலை கண்டேசுவரம் ஆலயம்.  பண்ரூட்டி அடுத்த கெடிலம் ஊருக்கு மிக அருகே உள்ள இடம், ஒரு காலத்தில் கோப்பெருஞ்சிங்கன் கோட்டையாக இது இருந்திருக்கிறது. நாற்புறமும் வாசல் கொண்டது. கெடிலக்கரை ஓர சுங்கம் வசூலிப்பு, அவனது தலைநகரம் சேந்தமங்கலம் இவற்றின் வாசலாக இருந்திருக்கிறது.

மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு

கிபி 1229 முதல்  1279 வரை  இப்பகுதியை தலைநகராகக் கொண்டு ஆண்ட காடவர் வம்சத்தை சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன்,  மூன்றாம் ராஜராஜனை வந்தவாசி அருகே தெள்ளாறு எனும் இடத்தில் போரில் தோற்கடித்து சிறை பிடித்தான் எனவும், சோழனுக்கு உதவ வந்த போசள மன்னன் வீர நரசிம்மன்,  கோப்பெருஞ்சின்கனின் ஆட்சிக்கு உட்பட்ட   கெடிலநதிக்கரை ஊர்கள் அனைத்தையும் சூறையாடி தீயிட்டு அழிக்க, போசளனுடன் உடன்படிக்கை கொண்டு சோழனை விடுவிக்கிறான் கோபெருஞ்சிங்கன்.  பின்னர் போசளர்களை பெரம்பலூர் போரில் தோற்க்கடிக்கிறான். இறுதியாக மாறவர்மன் குலசேகர பாண்டியன் போர்தொடுத்து கோபெருஞ்சிங்கன் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருகிறான். இவை திருவண்ணாமலை திருவந்திபுரம் கல்வெட்டுக்கள் வழியே, வரலாற்று ஆசிரியர் கே கே பிள்ளை தரவுகள் வழியே கிடைக்கும் தகவல்கள்.

 

பொதுவாக தமிழ்நாட்டில், இன்றைய ஜனநாயக யுகத்தில்,  இன்றிருக்கும் மூவாயிரத்து சொச்ச  [அல்லது முப்பதாயிர சொச்சமா?]  சாதிகளும் ஆண்ட  சாதிகளே. ஆண்டாத சாதியாக இருக்க எவருக்குத்தான் விருப்பம் உண்டு?  சங்க காலத்தில் வாழ்ந்த பள்ளியர் குறும்பர் காடவர் குலங்களில் ஒன்று இந்த காடவர்கள். முற்கால பல்லவர் காலத்தில் சிற்றரசர்களாக இருந்து, படையெடுப்புகளால் ஆட்சி இழந்தவர்கள். பிற்கால சோழர்கள் காலத்தில் மீண்டும் சிற்றரசர்களாக உயர்ந்தவர்கள்.

 

இந்த காடவர் வம்சம் நாங்களே என உரிமை கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சத்ரிய குல வன்னியர்கள்.  இதில் நகைச்சுவை என்ன என்றால் காடவ ராயர் போல ராயர் விகுதி கொண்ட  சம்புவராயர் மழவராயர் எல்லோரும் சத்திரிய குல வன்னியரில் சேர்க்கப்பட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் கிருஷ்ணதேவ ராயரை எப்படி இணைப்பது என்ற ரீதியில் ஆய்வுகள் முன்சென்று கொண்டிருக்கிறது. நிற்க.

 

பனையூர்

பனையூர்

 

பனையூர்

நாங்கள் சென்ற மாலைப் பொழுதில் தமிழ் நிலத்தின் பிற தொல்லியல் களங்கள் போலவே,தொல்லியல் கட்டுப்பாட்டில் இருக்கும் இக் கோவிலுக்குள்ளும் கிராமத்தினர்கள் மாடுகள் கட்டிப்போட்டு கொட்டிலாக கோவிலை பராமரித்துக் கொண்டிருந்தனர்.  உடைந்து கிடக்கும் கோட்டை சுவரின் கீழே  எதையோ மலையாக குமித்துப் போட்டு எரித்துக்கொண்டு இருந்தனர். ஒரு அம்மாள் மலையாக குவித்த பழந்துணிகள் துவைத்துக் கொண்டிருந்தார். ஏற்க்கனவே துவைத்தவை அரசாங்கம் அமைத்த வேலியில் காய்ந்து கொண்டிருந்ததது .

 

ராஜகோபுரம் அற்ற அடித்தள வாயில் மட்டுமே கொண்ட வளைப்புக்குள், சிற்பங்கள் ஏதுமற்ற பிற்கால சோழர் பாணி கோவில்.  அர்த்தமண்டபத்தில் ஓரமாக நின்று முறைத்துக் கொண்டிருந்தது ஒரு ரிஷபவாகனம்.  வாடாப்ப்பா இன்னா விசியம் என்றார் இருளுக்குள்ளிருந்த வாணிலை கண்டேஸ்வரர். மாலை வெயிலின் மஞ்சள் பூசிய வெளி வளாகத்தை சுற்றிக் கடந்து, குதிரை சிற்பங்களை தேடிச் சென்றோம்.  இந்தக் கோவிலின் எதோ தேர் போன்ற பகுதியை இழுப்பதாக வடிவமைக்கப்பட்ட ஐந்தடி உயர நீள இரண்டு குதிரைகள். விசித்திரக் கல்லில் வடிக்கப்பட்ட குதிரைகள். தரையில் பதிந்து கிடக்கும் பிரும்மாண்ட வெண்கல மணியை தட்டினால் எப்படி ஒரு ஓசை வருமோ, இந்த குதிரைகளை தட்டினால் அப்படி ஒரு ஓசை வரும்.

 

தமிழக அல்லது இந்திய வழமைப்படி  முட்செடிகள் செறிந்த பீக் காட்டுக்குள் நின்றிருந்தன இரு குதிரைகளும். தட்டி எறிந்தது போக முக்கால்வாசி மீதமிருந்தது இரண்டிலும். கொஞ்சநேரம் அங்கே அக் குதிரைகளை வேடிக்கை பார்த்து விட்டு, மலதாரிகளை மேலும் தொல்லை தர விருப்பம் இன்றி வெளியேறினோம். செடி கொடி வழியே புகுந்து நடந்ததில், எதோ ஒரு ஒரு வினோத செடியின் தாக்குதலுக்கு ஆளாகி,  ஹமாம் சோப்பு போட்டு குளித்துக் காட்டும் நடிகை என்றாகி, சொரிந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

 

இரண்டாவது இடம். மண்டகப்பட்டு குடைவரை.  விழுப்புரம் செஞ்சி சாலையில்,நெமூர் எனும் கிராமம் அருகே இரண்டு கிலோமீட்டரில் அழகிய ஏரிக்கரைக்குப் பின்னே அமைந்த மகேந்திர வர்ம பல்லவன் (ac 590-ac 630)  சிவன் பிரம்மா விஷ்ணு மூவருக்கும் எழுப்பிய முதல் குடைவரை.  தெய்வங்கள் அற்ற கருவறையை காத்து நிற்கும் துவார பாலகர்கள், கற்கள் பாவிய தளத்தில் ஓடியாடிக் கீச்சுக்குரலில் மகிழ்ந்து குலாவும் அணில்கள், சூழும் பெரும் பாறைகள், ஏரிக்கரையை தழுவி ஓடி வந்து அணைக்கும் தென்றல். குளிர் பரவிய குடைவரைக்குள் மாலை வரை ஒரு தூக்கம் போட்டேன். வரலாறில் உறங்கும் கொடுப்பினை எத்தனை பேருக்கு கிடைக்கும்?

 

மூன்றாம் இடம்.  [நாம் ஒரு முறை சென்றிருக்கிறோம்] பனைமலை  தாளகிரீஸ்வரர். தாள் எனில் பனை, பனை ஓலை. கிரி எனில் மலை என்கிறது இணையம்.  விழுப்புரம் – அனந்தபுரம் அருகே உள்ள இடம். நரசிம்ம பல்லவன் கட்டிய முதல் கோவில் .இதன் பிறகே மாமல்லை. பிறகே காஞ்சி கைலாச நாதர். பல்லவர் கால ஓவியக் கலையின் மிச்சம் கொஞ்சம் இந்த கோவிலின் கருவறைக்குள் இருந்தது. ஆம் இருந்தது.

மண்டகப்பட்டு

மண்டகப்பட்டு

மண்டகப்பட்டு

சிறிய குன்றின் மேல் அமைந்த பாறை வெட்டுக் கோவில். கீழே ஒரு சிறிய குகைக்குள் புடைப்பு சிற்பமாக துர்க்கை. வழக்கமாக வரும் காதலர்களோ, கேடிகளோ, குரங்குகளோ எவருமே இல்லை கோவிலில்.  எவரோ ஒருவர் சட்டை இன்றி கைலியுடன் நின்றிருந்தார். கையில் கருவறை கதவின் எடை மிகுந்த நீண்ட சாவி, ‘சாமி பாக்கணுமா’  …. சாராய நாற்றம் இங்கே வரை வீசியது.  இல்லிங்  நீங்க சாமிய காட்டி அது எனக்கு காட்சி குடுத்து  நான் முக்தி அடைஞ்சி வேண்டாங்க  என மனசுக்குள் சொல்லிக்கொண்டு மறுப்பாக தலையாட்டினேன்.  ‘கோவிலுக்கு கொஞ்சம் பல்பு மாட்டி விடுங்களேன்’ என்றார்.  நாளை சிவராத்திரி பக்தாள் வருகைக்கு கோவில் தயாராகிறது போல.

 

தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் இல்லையா. ஆகவே எப்போதும் திறந்தே கிடக்கும். பல்புகள் இரவுப் பணிக்கு தடை என்பதால், கோவிலின் இரவு நேர பக்தாள் அவற்றை உடைத்து விடுவர். இப்போது நிகழ்வுக்கு புதிய பல்பு.  ஆசாமி ஏற்க்கனவே உச்சத்தில் இருந்தார். ஏணியில் ஏறினால் அவர் கைலாசத்துக்கே போய்விடும் வாய்ப்பு இருந்ததால், நண்பர் ஏறி பல்பு மாட்ட ஹோல்டரை தொட்டார். மின்சாரம் வந்து கொண்டு இருந்தது. ஐயையோ இன்னிக்கு ராத்திரி வீட்டுக்குப் போல்லன்னா என் வீட்டுக்காரி என்னை வீட்டுக்குள்ள சேக்க மாட்டா, நீங்க ஏறி மாட்டுங்க என்று பல்புகளை என் வசம் தந்தார்.  சிவோஹம் என முழங்கி விட்டு வெற்றிகரமாக பல்புகளை மாட்டிவிட்டு இறங்கினேன். கைலி தலையை சொரிந்தார் அவரது உழவாரப்பணி தடை இன்றி நடக்க நண்பர் ஒரு பத்து ரூபாய் தந்தார். பின்னர் வளாகத்தை சுற்றி வந்தோம்.  சாப்பாட்டு தட்டு, கோப்பை குப்பைகள். பெருக்கினால் ஒரு வண்டி நிறையும். நாளை வேறு பக்தாள்  கூட்டம் வரப் போகிறது.  வெளியேறி பின்புறம் குன்றின் முனைக்கு சென்று அமர்ந்தோம்.

 

குன்றுக்குப் பின்புறம்  கீழே கிடந்த பெரும் நீர்ப்பரப்பில் மாலை வானம் ஒளிர்ந்தது. சுற்றிலும் சதுரம் சதுரமாக பச்சையின் வெவ்வேறு வண்ணம் கொண்ட  பச்சையம் காட்டும் வயல்வெளிகள் . வகிர்ந்து செல்லும் கரிய சாலை. தொடுவானில் மலைத்தொடர் வளைப்பு. மேகங்களற்ற துல்லிய வானம். தலைக்கு மேலே  நின்ற இடத்திலேயே உறைந்து நின்றிருக்கும் தட்டான் கூட்டம்.

 

மாலையின் வானம், அந்தியின் வண்ணம் கொண்டு மெல்ல மெல்ல சிவந்தது. தொடுவானின் மலைத்தொடர்கள் பின்னே மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது அந்திச் சூரியன்.  நீர்ப்பரப்பு பெரும் ஆடியாக மாற, கீழே நிகழ்ந்து கொண்டிருந்தது ஒரு தலைகீழ் அந்தி. மெல்ல மெல்ல அமிழ்ந்து, துளி குருதிச் சொட்டு என எஞ்சி, அந்தத் துளியையும் வான் உறிஞ்ச, கணத்திலும் கணம், நிழல்கள் அவிந்த உலகு சற்றே உறைந்தது. ஏஏஏஏஏஏன் என்றது எங்கிருந்தோ ஒரு பறவை.  ஹாஆஆஆம் என்றது கீழிருந்து சுழன்றேறி வீசிய காற்று. மற்றொரு அந்தியை வழியனுப்பி வைத்தேன்.

 

பேரரசர்களுக்கு வரலாறு இருக்கிறது. அவர்கள் கட்டி வைத்த கோவில் இருக்கிறது. தேவ தேவனின் வரியை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், எளிய மனிதனுக்கு அவன் தலைக்கு மேல் பதாகையாக வானம் இருக்கிறது.  அவன் எதிர்கொண்டு வரவேற்க ஒரு உதயம், வழியனுப்ப ஒரு அந்தி தினம்தோறும் அவனுக்கு இருக்கிறது

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-9
அடுத்த கட்டுரைமேலாண்மை, மேலோட்டமான வம்புகள்