நான்கடவுள் படப்பிடிப்பு நடந்தபோது காசியில் ஒரு சாமியாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எல்லா மொழியும் பேசுவார். ஆங்கிலம் பிரெஞ்சு உட்பட. எங்களுடன் தமிழில் பேசினார். தன் பெயர் ஏதோ பாபா என்றார். சாமியாருக்கு அறுபது எழுபது வயதிருக்கும். சடை, தாடி, கஞ்சாவில் மயங்கிய கண்கள், குழந்தைச்சிரிப்பு
எங்களுடன் இருந்த தயாரிப்பு உதவியாளர், சற்று வயதானவர். அவர் “நீங்க எந்த ஊரு?” என்றார். “எல்லாம் நம்ப ஊருதேன்” என்றார் சாமியார். அவர் மேலும் கூர்ந்து “சாமிக்கு தமிழ்நாடா?” என்றார். “தமிழ்நாடும் நம்ப ஊருதேன்” என்றார். “பேச்சப்பாத்தா மருதப்பக்கம்னு தோணுதே” என்றார் தயாரிப்பு உதவியாளர்
சாமியார் வெடித்துச் சிரித்தார். என்னைப்பார்த்து “சாமி ஊரும் ஒறவும் வாணாம்னு விட்டுனு வந்தது. இவரு தேடிக் கண்டுபுடிச்சு ஒட்டவைக்க பாக்கிறார்” என்றார். தயாரிப்பு உதவியாளரிடம் “ஊரு சாதி பேரு எல்லாம் கண்டுபுடிச்சா என்ன செய்வே? கல்யாணம் பண்ணி வச்சிருவியா?” என்றார். அவருடைய சிரிப்பில் நாங்களும் கலந்துகொண்டோம்
இதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மனிதர்களால் இன்னொரு மனிதரை எங்காவது கொண்டு ஒட்டவைக்க முயலாமல் இருக்க முடியவில்லை. “உங்களுக்கு எந்தூரு?” “நீங்கள்லாம் என்ன ஆளுக?” . ஆனால் உலகியலில் இருப்பவர்க்ள் ஊரைப் பற்றிக் கேட்டாலே உற்சாகமாகி பேசத்தொடங்கிவிடுகிறார்கள்
எங்கிருக்கின்றன இந்த அடையாளங்கள்? நம்மைச்சூழ்ந்து. காற்றில் இருக்கும் தூசு போல. சற்று அசையாமல் நின்றுவிட்டால் வந்து படிந்துவிடும். சாமியார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியாக எவருடனும் நட்புடனும் இருப்பதில்லை. நான் எவருமற்றவன் என தங்கள் ஆடை வழியாக அறிவித்துக்கொள்கிறாகள். ஆனாலும் பல்லாயிரம் கைகளுடன் சூழ நின்றிருக்கிறது உறவுவலை. அரசு, சமூகம், நலம்விரும்பிகள் என்னும் ஆயிரம் முகங்களுடன்.
அரசியல்
இந்த பூமியிலுள்ள அனைத்து மனிதர்களாலும்
கைவிடப்பட்டவர் போலும்
நன்கு இணைக்கப்பட்டவர் போலும்
சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார்
அந்த மனிதர்
மயக்கம் தெளிவித்தார்கள்
காவலர்களுக்கு தகவல் போனது
காவல்துறை
அவரை அவர் ஆட்களிடம் ஒப்படைக்கவே
கேள்விகள் கேட்டது
எரிச்சலுற்றது
அவரை அவர் உறவோடு
சுற்றத்தோடு சாதியோடு
இனத்தோடு நாட்டோடு கட்டி
அதன் மூலம் தன் அதிகாரத்தையும் இருப்பையும்
நிலைநாட்டிக்கொள்ளவே அது துடித்தது
இனிமேல் தனியாக இப்படி நடந்து செல்லாதீர்கள்
என்று எச்சரித்தது அது
ஆச்சரியமான இந்த கவிதைக்கு ஏன் அரசியல் என்று தேவதேவன் தலைப்பு வைத்திருக்கிறார்? அரசியல் தொடங்கும் புள்ளி அதுவே – நி யார், நீ இவர். அந்த அடையாளமற்றவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அடையாள அரசியல் என்கிறார்கள், அரசியலே அடையாளம்தான். அடையாளமென்பதே அரசியல்தான்
இனிமேல் தனியாக எங்கும் செல்லாதே என்கிறது போலீஸ். தனியாக இருக்காதே என்றுதான் எல்லா அமைப்புக்களும் ub. அடையாள அட்டை வைத்துக்கொள் என்கின்றன. பெயர் என்ன என்கின்றன. ஏனென்றால் பாதுகாப்புக்காக. அடையாளம் இல்லாத ஒருவன் அடையாளம் கொண்ட அனைவருடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என நினைக்கிறது அது.
இந்தியாவின் இன்றைய அடையாள அட்டை அரசியலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்று மெல்லமெல்ல இனிமேல்தான் வரவிருக்கிறது. இங்கே இன்று நாடெங்கும் நிலையற்று அலையும் துறவிகளுக்கு அடையாள அட்டை தேவை என இந்த அரசு சொல்லிவிடும் என்றால் இந்து மதம் என்னும் அமைப்பின் கண்ணுக்குத்தெரியாத அடித்தளம் அழியும்.
கவிதைக்கு அரிய தருணங்கள், பொறிபறக்கும் கணங்கள் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையின் எளிய துளியில் சென்று முட்டும் கவிஞனின் பிரக்ஞையே கவிதையை உருவாக்குகிறது. அதன்மேல் அவனுடைய அழகியல் சென்று படிந்து உருவாக்கும் சொல்லமைவே கவிதை. ‘கவித்துவமான’ ஒரு சொல்கூட இல்லாமல் எழுதப்பட்ட அரிய கவிதை இது
காலைத்தேநீர்
சர்க்கரை நோயினால்
சர்கக்ரை தழுவாத தேநீரை
அதுவும் கால்குவளையே
அருந்தப் பழகியிருந்தான் அவன்
அதையும் விட்டுவிட முடியும்
ஆனால் பால் உருகி தேயிலையோடு கலக்கும்
அந்தக் காதல் பொன்வண்ணத்திற்காய்
அதையும் ஏற்றுக்கொண்டிருந்தான்
எதிரே அமர்ந்திருந்த அவன் மனைவி
தன் இனிய தேநீரை
அதில் மேலும் இனிமை கலக்கும்படி
அவனிடம் நீட்டுகிறார்
முத்தம் அறிந்த இதழ்களால்
மூன்றே மூன்று சிறிய மிடறுகள்
அவன் பருகுகிறான்
ஆனால் அதுவே அவனுக்கு போதுமானதாயிருக்கிறது
அவருக்கும்
இப்பேருகுலகுக்கும்
அன்றாடத்தில் முற்றாக அமைந்த ஒரு கவிதை காலைத்தேநீர். ஒரு எளிய வாழ்க்கைத்தருணம். ஆனால் ஒரு மெல்லிய சொல்லிணைவு வழியாக இதை கவிதையாக்குகிறார். இரண்டு தொடுப்புகள் இந்த அன்றாடக் கணத்தை இரு அரிய தளங்களுடன் இணைக்கின்றன. முத்தம் அறிந்த இதழ்களால் என்னும் வரி அந்தத் தேநீரை காதலின் உணர்வுகளுடன் இணைக்கிறது.
அடுத்து அவருக்கும் இப்பேருலகுக்கும் போதுமானதாயிருக்கிறது என்னும் வரியில் அவர் என்னும் சொல்லினூடக கவிதையை மேலொரு தளத்தை நோக்கிக் கொண்டுசெல்கிறார். அன்றாடமே அழகிய கவிதையாக முடியும். கவிதைக்கான அழகிய தருணங்களை விட அன்றாடம் மேலும் கவிதையை நிறைத்துக்கொள்ளும். பாதிநிறைந்த கிண்ணத்தை விட காலிக்கிண்ணம் மேலும் அதிக தேநீர் கொள்வதுபோல.
மலர்தேடும் மலர்
தேவதேவன் கவிதைகள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்