அம்மனும் சித்தரும் அருகிருக்க…

ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே ஆனது இரண்டாம் வகை. நகுலன் நவீனனுமாக ஆனது மூன்றாம் வகை

நாஞ்சில்நாடனின் கதைகளில் கடைசியாக வந்தமைந்த தொடர்கதைத்தலைவர் கும்பமுனி. இப்போது நாஞ்சில்நாடன் என்றபேரில் வரும் கதைகளை பெரும்பாலும் கும்பமுனியே எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்.சற்றே சாய்வான நாற்காலியில், தவசிப்பிள்ளை துணையுடன், மூலக்குருவின் கடுப்புடன் உலகை நோக்கி நையாண்டியுடன் அமர்ந்திருக்கும் பாட்டாவுக்கு ஒருபக்கம் நவீன இலக்கியம் மறுபக்கம் பண்டைய இலக்கியம். கவிமணியும் நகுலனும் நாஞ்சில்மேல் ஆவேசித்து உருவான அக்கதைத்தலைவர் பொதுவாக விலகியவர், குசும்பர், காணத்துவையல்காரர்.

நாஞ்சிலின் சங்கிலிபூதத்தான் தொகுதியின் கதைகள் பெரும்பாலும் ஆனந்தவிகடனில் வெளிவந்தவை. அவை அங்கே எப்படி வாசிக்கப்பட்டன என்று தெரியவில்லை. தமிழை- கொஞ்சம் நக்கலுடன் – ஆராய்ந்த ஒர் எழுத்தாளரின் மொழிநடை கொண்டது இந்தக் கதைத்தொகுதி. “திக்குகளையே ஆடையாக உடுத்து வண்ணச்சீரடி மண்மகள் அறியாதபடி நடந்துவந்தாள். வாரிய தென்னை வருகுரும்பை யாத்தனபோல் திண்ணமாக இருந்தன முகடுகள்’ என்று வர்ணித்துவிட்டு ‘இந்தக் கதாசிரியனுக்கு எழுபது நடக்கிறது என்பதனால் இதற்குமேல் வர்ணிப்பது பீடன்று’ என்கிறார் ஆசிரியர்

நேரடி அரசியல்சீற்றம், சங்க இலக்கிய மேற்கோள் [அதை மேற்கோள்திரிபு என்று புதிய அணியாக எடுத்துக்கொள்ளவேண்டும்] சப்புக்கொட்டியபடி உணவு விவரணை, சாலை- தெரு- வீடு போன்ற சூழல் விவரணைகளில் கூர்மை, கதாபாத்திரங்களை புறத்தோற்றத்தாலேயே கச்சிதமாக வரையறைசெய்தல், இடைவெட்டாக ஆசிரியன் குரல் ஆகியவற்றுடன் வாள்கீற்று ஒளிபோல் வந்து வந்து அணையும் நகைச்சுவையுடன் எழுதப்பட்டவை இத்தொகுதியின் கதைகள். ஒரு வாசகன் நாஞ்சின் கழி சுழலும் விதத்தை கொஞ்சம் ஊகித்து கொஞ்சம் திகைத்துக் கண்டடைந்து கூடவே செல்வது ஓர் அரிய இலக்கிய அனுபவம்

நாஞ்சிலின் கதையுலகம் உலகியல் சார்ந்தது. அதன் வஞ்சம், காழ்ப்பு, இரக்கமற்ற தன்னலம், அதன்விளைவான சூழ்ச்சிகள் ஆகியவற்றை மிக நம்பகமாக நாம் அன்றாடம் புழங்கும் சூழலினூடாகாவே சித்தரித்துக் காட்டுவது. ஆனால் இத்தகைய எதிர்க்கூறுகளை எழுதும் படைப்பாளிகளில் இருந்து அவரை ஒருபடி மேலே தூக்குவது அவருடைய அரிய கதைகளில் இந்த சேற்றுப்பரப்பில் இருந்து ஒளியுடன் மேலெழும் மானுடரை இதே நம்பகத்தன்மையுடன் அவர் உருவாக்கிக் காட்டுகிறார் என்பதுதான்

முதுமையில் கைவிடப்படுதலின் இரக்கமற்ற வாழ்க்கைவிதியை சித்தரிக்கும் இரு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. ‘ஆத்மா’ பீதாம்பர் பாண்டுரங்க நாத்ரே தனி வீட்டில் செத்து மெல்ல அழுகுவதைப் பற்றியது. கைவிடப்பட்டு மறக்கப்பட்டு வஞ்சம் திரண்டு நஞ்சென்றாகி மணியென்றாகி இறுகிய நாகமென மாறும் ‘பேச்சியம்மை’யின் கதை இன்னொன்று.

அமைப்பின் பெரும்பாறாங்கற்களால் நசுக்கப்பட்டும் ஆலமர வேர் என வளைந்து நெளிந்து உயிர்கொண்டு வாழும் எளிய மானுடரின் சித்திரங்கள் நாஞ்சில்நாடனின் உலகில் எப்போதும் உளம்குழைய வைக்கும் நேர்த்தியுடன் வெளிப்படுபவை. அத்தனைபேராலும் அதட்டப்படும் கூர்க்கா தன்ராம்சிங்கின் வெகுளித்தனம் ஒரு சித்திரம் என்றால் ; ஊரில் கிராமக்கோயில் பூசாரியாக இருந்து, அனைவராலும் சுரண்டப்பட்டு, அனைவராலும் ‘ஆட்சி’ செய்யப்பட்டு, சிறுமையையே வாழ்வெனக் கொண்ட நம்பியாரின் கதையை சொல்லும் ‘பரிசில்வாழ்க்கை’ இன்னொரு சித்திரம். இரண்டும் ஒன்றே.

சமீப காலங்களில் நாஞ்சில்நாடன் கதைகளில் தெய்வங்கள் இடம்பெறுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை மானுட வாழ்க்கையை விட பரிதாபகரமானது. அதே சுரண்டல், அதே அதிகார அடிபணிவு. மானுடருக்காவது சாவு என்ற விடுதலை உண்டு. சாமிகளுக்கு அதுவும் கிடையாது. மானுடர் நெறிகளை மீறமுடியும். தெய்வங்களுக்கு அந்தக்கொடுப்பினையும் இல்லை

ஏவல், கறங்கு, அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது, சங்கிலிபூதத்தான் போன்ற கதைகளில் தெய்வங்கள் தட்டழிகின்றன. மானுடவாழ்க்கையின் அத்தனை அல்லல்களும் அபத்தங்களும் அவற்றைப் பொறுத்தவரை முடிவின்மையால் பெருக்கிக் காட்டப்படுகிறது. அவர்களை மெல்லிய கேலிகலந்த இனிய உரையாடல் வழியாகச் சித்தரிக்கும் இக்கதைகள் தமிழின் முக்கியமான கலைப்படைப்புக்கள்

நாஞ்சில்நாடனின் கதைகள் அவற்றின் இயல்பான ஓடுதளமான உலகியலை கடந்து எழும் இரு இடங்கள் கான்சாகிப், காடு போன்ற கதைகளில் உருவாகும் மானுடஎழுச்சி. பாம்பு போன்ற கதைகளில் உருவாகும் கூரிய அங்கதம். இவை புகழ்பெற்ற கதைகள். அவற்றுக்கு அப்பால் இத்தொகுதியில் அவருடைய கதைகளிலேயே அரிதான ஒரு கவிதை அம்சம் வெளிப்பட்ட கதை ‘பூனைக்கண்ணன்’

சாமியைக் கடத்தப்போய் சாமியால் கடத்தப்பட்டு சித்தபுருஷனாக ஆகும் பூனைக்கண்ணனின் கதையை இன்றுள்ள கதையாசிரியர்களில் நாஞ்சில்நாடன் அன்றி எவர் எழுதமுடியும்? திரும்பத்திரும்ப ஆண்பெண் சல்லாபத்தையே இலக்கியமென நுகரப்பழகிய தமிழ்ச் சூழலில் சிறுபான்மையினருக்குரிய கதைஇது.ஆனால் புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’ போல ந.பிச்சமூர்த்தியின் ‘ஞானப்பால்’ போல ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ போல காலம்கடந்து நின்றிருக்கும் இலக்கிய வெற்றி

பூனைக்கண்ணர் என்னும் சித்தரின் பெயர் இக்கதையுடன் நினைவில் தொடுத்துக்கொள்கிறது. கதை இப்படி முடிகிறது

பூனைக்கண்ணன் அம்மனிடம் ஒருநாள் கேட்டான். “கெட்டவன்னு தெரிஞ்சும் தண்டிக்கலேன்னா நீயெல்லாம் என்ன சாமி?”.

அம்மன் சொன்னாள் “நல்லவன்னா யாரு? கெட்டவன்னா யாரு?”

“போட்டி, புத்திகெட்டவளே” என்றான் பூனைக்கண்ணன்

அம்மன் அமர்ந்திருக்கும் இருமைகளுக்கு அப்பாற்பட்ட உலகில் அவளருகே மலைக்குகை விளிம்பில்  பூனைக்கண்ணனும் தன் காலடியில் விரிந்த உலகை நோக்கிச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான் நாஞ்சில்நாடன் கும்பமுனியென ஆனது இதற்காகத்தான். கும்பமுனிதான் இந்தப்பக்கம் அமர்ந்து அம்மனும் பூனைக்கண்ணனும்  கொஞ்சிப் பேசிக்கொள்வதை கேட்கமுடியும்.

சங்கிலிபூதத்தான். நாஞ்சில்நாடன் சிறுகதைகள் விஜயா பதிப்பகம்

முந்தைய கட்டுரைகிருமி [சிறுகதை] உமையாழ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81