அந்தி கடிதங்கள்

அந்தி எழுகை

அன்புள்ள ஜெ

 

அந்தி எழுகை அருமையான ஒரு கட்டுரை. அதில் நிஜத்திற்கும் கற்பனைக்குமான ஒரு அலைவு இருக்கிறது. அது பகலில் இருந்து இரவுக்குப்பொவதுபோல. அதுதான் அந்தி என்று தோன்றிவிட்டது.

 

இரவு வருவது அல்ல அந்தி. ஒரு பொழுது இன்னொன்றாக ஆகும்போது நம் கண்ணெதிரே இந்தப் பிரபஞ்சம் உருமாறுகிறது. ஆகவேதான் இந்த சந்திப்பொழுதுகள் எல்லாமே தெய்வ வணக்கத்துக்குரியவை என்று சொன்னார்கள்.

 

அந்தி ஒருவருக்கு தனிமைக்காக அளிக்கப்பட்டுள்ளது என்று எங்கள் தியானமரபில் சொல்வார்கள். அந்தியில் சேர்ந்து இருக்கக்கூடாது. அந்தியை தனிமையில்தான் சந்திக்கவேண்டும்.

 

உங்கள் அந்தியின் தரிசனம் ஆன்மிகமானது

 

சாரதா

அன்புள்ள ஜெ

 

நீங்கள் நடைசெல்லும் அந்தக் கணியாகுளம் சாலைக்கு நானும் நண்பர்களும் ஒருமுறை பைக்கில் வந்திருந்தோம். தற்செயலாக உங்களைச் சந்தித்தோம். ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்

 

அந்த சாலை அழகானதுதான். ஆனால் நீங்கள் எழுதும்போது இன்னும் அழகாக ஆகிறது. பத்தாண்டுகளாக இந்த ஒரே பாதையைப்பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். மழை, வெயில், காலை, மாலை என்று. எல்லாமே அழகான சித்திரங்கள். எல்லாமே புதியவையாகவும் இருக்கின்றன

 

அழகை உருவாக்குவது அந்தக் கண்தான்

 

ராஜேந்திரப் பிரசாத்

 

முந்தைய கட்டுரைமறைசாட்சி – கடிதம்
அடுத்த கட்டுரைகடத்தற்கரியதன் பேரழகு