யா தேவி! – கடிதங்கள்-12

யா தேவி! [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

சில சிறுகதைகள் உங்களால் மட்டுமே எழுத முடியும். யா தேவி அவ்வகைப்பட்டது. மிக மிக எளிமையான கட்டமைப்பு. இரு கதாபாத்திரங்களின் உரையாடல். மிக மிக மென்மையான, நொய்மையான உணர்வுகள் பேசப்படுகின்றன. ரயிலில் கதையும் இவ்வகை கட்டமைப்புடையதே. ஆனால் அங்கே பேசப்பட்டவை மிகத் தீவிரமான உணர்வுகள். இங்கே ஒரு மாதிரி மரத்துப் போன உணர்வுகள் பரிமாறப்படுகின்றன. நாட்பட்ட பழக்கத்தால் மரத்துப் போனவை. அன்ஸாலுக்கு மட்டுமல்ல, ஸ்ரீக்கும் கூடத்தான்.

 

இச்சிறுகதையின் மையமே இப்புடவியனைத்தும் நிறைந்த முதலாற்றலை (காமமே முதலாற்றல் என்பதையும் இவ்விடத்தில் பொருத்திக் கொள்ளலாம். எனவே தான் மானுடம் தன் ஆதி சடங்குகளில் வளச் சடங்காக காமத்தையும் கைக்கொண்டது.) அனைத்தும் பிறந்த இடமான தேவியை இருவருமே உணர்ந்து கொள்ளும் தருணம். அப்பெண்ணுக்கு அது இருபடிகளிலும், அந்த சாதகனுக்கு மூன்று படிகளிலுமாக  நிகழ்வதாக காட்டப்பட்டிருக்கிறது.

 

முதலில் அவள் ஒரு பாலியல் படங்களில் நடிப்பவள் என்னும் அறிதல் ஸ்ரீயிடம் ஏற்படுத்தும் ஒரு துணுக்குறல் அல்லது தடுமாற்றம். எப்பெண்ணையும் சக்தி உருவாகக் காணும் நெறி கொண்டவர் அவர். தாசியைக் கூட அவ்வாறாகக் காணப் பழகிய மனம் தான் அவருடையது. இருந்தும் ஏன் அந்த துணுக்குறல்? அது அவள் தன்னை ஒரு நாளில் பதினெட்டாயிரம் பேர் புணர்வதாகச் சொல்கையில் திகைப்பாக மாறுகிறது. அதன் பிறகு அவள் எந்த தொடுகையையும் அறியவில்லை, எத்தொடுகையும் அவளைச் சென்றடையவில்லை, அனைத்துக்கும் அப்பால் அவள் தனியே இருந்துகொண்டிருக்கிறாள் என்பதை உணரும் பெருமூச்சில் தேவியின் மஹா அபிசாரிகை ரூபத்தை தரிசிக்கிறார் அவர். யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேணே சமஸ்திதா என அப்போது சொல்லியிருப்பார்.

 

தன்னை ஒரு ஆண் காமம் சற்றும் இல்லாமல் மிக இயல்பாகத் தொட இயல்கிறது என்பதை உணர்ந்து, அவன் பார்வையில் தன்னைக் காணும் இடத்தில் வெளிப்படும் பெருமூச்சில் அன்ஸால் உணர்கிறாள், அவளைப் பற்றி அவளே அதுவரையிலும் அறியாத ஒரு பெண்ணை. அப்படிப்பட்ட ஒரு ஆணை பெண் எனச் சுருக்கும் அவளால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தன்னுடல் நரம்புகள் தளர்ந்து மெல்ல உறக்கத்தில் விழப்போகும் அவள் அவனிடம் தன்னை அவன் வழிபடும் சக்தி ரூபமாகக் கண்டானா என உசாவும் இடத்தில் வெளிப்படும் பெருமூச்சில் அவள் தன்னையும் தேவியாக உணர்கிறாள்.

 

இவ்விரண்டு தளங்களுக்கும்  மேலே மற்றொரு முக்கியமான ஒரு அம்சம் இக்கதையில் இருக்கிறது. அது மஹாமாயையின் திரை. தேவியே ஆனாலும் அவள் இப்புடவி ஆடலில் இருக்கையில் மாயையின் பிடியில் தான் இருக்கிறாள். அவளை தேவி என அவளே உணர அவள் முழு வடிவத்தையும் அல்ல, வெறும் பாதத்தை தியானிக்கும் ஒரு சாதகன் வரவேண்டியிருக்கிறது.

 

எண்ண எண்ண விரிந்து கொண்டே இருக்கும் ஒரு கதை. மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். இதை நீங்கள் மட்டுமே எழுத முடியும்!!!

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

 

அன்புள்ள ஜெ

 

ஒரு அசாதாரணமான கதை. இன்றையசூழலில் இத்தகைய கதைகளுக்கு இடமில்லை. ஆனால் இந்தவகையான தரிசனம் கொண்டகதைகள் மௌனி, லா.ச.ராவில் உள்ளன. மௌனியின் அழியாசுடர். இன்னொரு உதாரணமான கதை லா.ச.ராவின் தரிசனி. ஒரு பெண்ணில் பெண்ணைக் கடந்த பிறிதொன்றைக் கண்டுவிடுதல்.

 

இந்தக்கதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இது ஒருவகை முதிர்ச்சி கொண்டவர்களுக்குரிய கதை. உலகியலில் வைத்து புரிந்துகொள்பவர்களுக்குரியது அல்ல. நான் இப்படிச் சொல்வேன். ஒரு நாய் தன் குட்டிகளுக்கு பாலூட்டுவதைக் காண்கிறோம். என் பாட்டி அதைக்கண்டு கண்ணீர் மல்கி கைகூப்பி “தேவி பரதேவதே” என்று கும்பிட்டார்கள்

 

இது ஒருநாயை கும்பிடுவது அல்ல. விலங்குகளை தெய்வமாகக் காணும் ரொமாண்டிஸிஸமும் அல்ல. இது அந்த விலங்கில் அப்படி வெளிப்படும் ஒரு மகாசக்தியைக் காண்பது. அதைத்தான் ஸ்ரீதரன் செய்கிறான். அவன் அவளை deify செய்யவில்லை. அவள் வழியாக ஒரு முழுமையைக் காண முயல்கிறான். அவ்வளவுதான். தமிழின் இன்றையச் சூழலில் இப்படி ஒரு கதை எழுதப்படுவதற்கான space இருக்கிறது என நான் நினைக்கவில்லை. கொஞ்சம் வாசகர்கள் இருக்கலாம் அதுவே பெரிய விஷயம்

 

ராம்குமார். எம்

யாதேவி கடிதங்கள் 11

யா தேவி- கடிதங்கள்-10

யா தேவி- கடிதங்கள்-9

யாதேவி -கடிதங்கள்-8

யா தேவி- கடிதங்கள்-7

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி – கடிதங்கள்-5

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி- கடிதங்கள்-3

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! – கடிதங்கள்1

முந்தைய கட்டுரைஅய்யன்காளி, வைக்கம்
அடுத்த கட்டுரைஅ.வரதராஜன்