ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்

யாதும் ஊரே

திருச்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், அவரது தங்கையை கும்பகோணத்துக்காரருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, அவர்களது திருமணம் முடிந்த ஒரு மாதம் கழிந்து, தம்பதிகளின் புதுக்குடித்தனத்தை பார்வையிட்டு வரச் சென்றிருந்தார். அவர் சென்ற சமயம் மாப்பிள்ளை இல்லை. தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தார். வெளியில் ரோட்டில் கார்களும், பைக்குகளும், ஸ்கூட்டர்களும் போகும் சத்தம். ஒலிப்பான்களின் ஓசை. பேச்சின் இடையில் அவரது தங்கை, “அண்ணா, அவர் வந்துட்டார்” என்று வாசலுக்கு சென்றுள்ளார். ரோட்டில் ஆயிரம் ஸ்கூட்டர்கள் சென்றிருக்கும், தனது தங்கை குறைந்த நாட்களிலேயே தனது கணவனின் ஸ்கூட்டர் சத்தத்தை இனம் காணும் நுண்ணுணர்வை அறிந்து பெருமை கொண்டு பேசினார்.

நானும், மூன்று சகோதரிகளுடன் பிறந்தவன், எனது நடுச் சகோதரி, அவருக்கு கல்யாணம் முடிந்த இரண்டாவது வருடத்தில், வெளியூரில் வேலை பார்க்க சென்ற கணவர் , ஆறு மாதம் பிரிந்திருந்து, அவர் கடிதத்தில் நான் ஊர் வருகிறேன் என்ற எழுதிய நாள் நெருங்க , ‘மாலையிட்ட கணவன் நாளை வருவான்’ என்று பாடி மகிழ்ந்திருந்ததை கண்டிருக்கிறேன். இதில் அதிசயம் என்னவென்றால், என் சகோதரிகளில், சினிமாப் பாடல்களை கவனித்து கேட்டு ரசிப்பவரில்லை அவர். பிடித்தவனுக்காக அவள் காத்திருத்தல், அவனுக்காக அவளை அலங்கரித்துக்கொள்தல், அவன் சார்ந்த ஓசைகளை அறிந்து இருத்தல் – பெண்களின் அக அழகை நாம் காணும் தருணங்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் போர் முடிந்து திரும்பி வரும் தலைவனுக்காக காத்திருந்தவளின் அக அழகை இன்றும் படித்து உணர, ஒக்கூர் மாசாத்தியார் இயற்றிய குறுந்தொகையில் 275-வது பாடலான ‘முல்லை ஊர்ந்த கல்லுயர் ஏறி’ இருக்கிறது. இதை நமக்கு மிகவும் தெரிந்த பெண், இனிய குரல் உள்ளவள் பாடினால் எப்படி இருக்கும் என எண்ணினேன்.

 

ராலே நகரில் வாழும் ராஜன் சோமசுந்தரம் நமது மனதை படித்தவர் போல, சூப்பர் சிங்கர் பிரியங்காவை, அந்தக் குறுந்தொகை பாடலை பாட வைத்து, காத்திருக்கும் ஏக்கத்தை தனது ஆலாபனையில் கொண்டுவந்து மீண்டும் மீண்டும் கேட்கலாம் என்பதுபோல், சங்கப் பாடல்களை , சிம்பொனி இசையும், கர்நாடக ராகங்களும் கலந்து கொடுத்திருக்கும் தனது ‘சந்தம்’ எனும் ஆல்பத்தில் கொண்டுவந்துள்ளார். இந்தப் பாட்டை நானும் ராதாவும், காலை மாலை , இல்லை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கேட்கிறோம். ‘தேர்மணி கொல்!’ என்று பிரியங்காவின் இன்குரல் காதில் ஒலிக்கும் கணம், ராஜனின் ஆலாபனைக்கு மனம் தேடும்.

இந்தப் பாட்டை அவள் குரலில் பாடி, ராஜனின் ஆலாபனையை மட்டும் பதிவு செய்து வைத்துக்கொண்டு ஒரு நாள் மாலை எனக்குப் போட்டுக் காண்பித்தாள். பள்ளியில் படிக்கும்பொழுது அவள் மனதில் நிற்காத சங்கப் பாடல் ஒன்றை , ஒரு வரியும் இடரின்றி மனப்பாடமாக பாடும் அளவுக்கு முன்னேற்றியது ராஜன் சோமசுந்தரத்தின் இசையன்று வேறு என்ன ?

கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் நாவலில், சீனிவாசநாயக்கர் கல்யாணத்திற்கு துணியும் நகையும் எடுக்க மதுரைக்குச் சென்று திரும்பி வரும் இரவில் , கொள்ளையடிக்கவந்த கள்ளர்களுடன் போராடி, வெட்டுப்பட்டு இறந்து விடுவார். அவருக்கு நிச்சயிக்கப்பட்டு , மனதால் ஒருமையாகிவிட்ட எங்க்கச்சி, செய்தி கேட்டு அழவில்லை. மாறாக, மஞ்சள் நனைந்த ஈரப்புடவை உடுத்தி, செவ்வரளி மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு, கூந்தலில் மஞ்சள் நீர் சொட்ட தெருவிற்கு நடந்து. உடன்கட்டை ஏறத் தயாராகிவிடுவாள்.

 

உடன்கட்டை ஏறுதல் சட்டப்படி குற்றம் என்று எழுதப்படாத காலம். சீனிவாசநாயக்கரின் மேல் அவளுக்கு இருந்த ஆழ்ந்த நேசத்தை அறிந்த ஊர் மக்கள் அவளை தடுக்கவில்லை. “கைகளை அகலித்துக் கொண்டு , ஒரு தீப்பறவை பறப்பதுபோல்ப் பாய்ந்துசென்று தன புருஷனைத் தழுவிக் கொண்டாள் பெரு நெருப்புக்கிடையே’ என்று ராஜநாராயணன் விவரித்த நிகழ்ச்சியையும் , எங்க்கச்சியையும், ஆனந்த விகடனில் இந்த கதை தொடராக வந்தபொழுது படித்தவர்களும், நாவல் வடிவில் வந்ததை வாசித்தவர்களும் மறக்க முடியாது.

கிட்டத்தட்ட அதே உணர்வை தமிழர்களின் மனத்தில் உருவாக்க, ‘கலம்செய் கோவே கலம்செய் கோவே’ என்ற சங்கப் பாடலை எடுத்துக்கொண்டு ராலே ராஜன் சோமசுந்தரமும், அவரது குழுவும், பாடகி சைந்தவியும் படையெடுத்து வந்துள்ளார்கள். இந்தப் பாடலின் ஆரம்பத்தில், சைந்தவி அவர்கள் , அதில் இருக்கும் ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண்பல்லி போலத் தன்னொடு’ என்னும் உருவகத்தை உணர்ந்து சொல்லியிருப்பது பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் தாவிச் செல்லும் மனமில்லாமல் கேட்க வைக்கிறது. கணவனை இழந்து , தன்னையும் சேர்த்து புதைக்க கலத்தை பெரிதாக செய்யச் சொல்பவள் சோகத்தை சைந்தவியின் குரலும், பாடல் ஆரம்பத்தில் சுருதி இழக்கும் தந்தி, அறுந்து விழும் ஓசையில் முடிவதும் கேட்பவன் கண்ணில் நீர் கோர்க்க வைக்கிறது.. சோகத்தையும் ரசிக்க வைக்கும் இந்தப் பாடல் அழியா ஒரு கலையாக ஓங்கி நிற்கிறது.

எல்லா சகோதரிகளையும் விட , எனது சின்ன சகோதரியுடன்தான் நான் அதிகமாக அடித்து பிடித்து விளையாடியிருக்கிறேன். ஒருமுறை கிணற்றடியில் ஓடும் பம்ப்செட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வரும் வழியில் ,கல்லில் காலை பலமாக இடித்துக்கொண்டார். வீட்டிற்கு வந்ததும், குடத்தை இறக்கி வைத்துவிட்டு, கால் காயத்தை என்னிடம் காண்பித்தார். “இப்படித்தான் தாத்தாவிற்கு கல் இடித்துக் காயமாகியது. அப்புறம் அது பெரிதாகி செத்துப் போய்விட்டார்” என்றேன். என்னைப் பார்த்தால், உதட்டை இடப்புறம் சுளுக்கிக்கொண்டு, வேறுதிசையில் முகத்தை திருப்பிக் கொள்ளும் கோபம் மூன்று நாட்கள் நீடித்தது. அவருக்கு

 

திருமணம் முடிந்து, கணவன் வீட்டில் விட்டு விட்டு திரும்பிய நாளன்று, கிட்டத்தட்ட பாசமலர் சிவாஜி கணேசன் நிலைமை. ‘ஆனந்தா, என் கண்களையே உன் கைகளில் ஒப்படைக்கிறேன்’ என்று என் சகோதரியின் கணவரிடம் சொல்லாத குறைதான். இன்னும் சில நாட்களில், நாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த மகள், அவளுக்கு பார்த்துவைத்தவனுடன் திருமணம் செய்துகொண்டு செல்லவிருக்கிறாள். இப்பொழுது , என் உணர்வுகளுக்கு நான் துணையாக எடுத்துக்கொள்வது, ராஜன் சோமசுந்தரத்தின் இசையில், ராஜலட்சுமி சஞ்சய் குரலில், வெளிவந்திருக்கும் ‘ஞாயிறு காயாது மரநிழற் பட்டு’ என்ற இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய பாடல்தான்.

ராஜலட்சுமி சஞ்சய் பாடி, நான் இதற்கு முன்னர் கேட்டதில்லை. அவரது குரலும், ராஜனின் இசையும், மகளின் திருமணத்தன்று , இந்தப் பாடலை ஒலி(ஒளி)பரப்பலாம் என்ற முடிவுக்குத் தள்ளியுள்ளது. இந்தப் பாடலின் மூலம் என்னைப்போன்ற புது ரசிகர்கள் ராஜலட்சுமி சஞ்சய் அவர்களுக்கு உருவாவார்கள் என்பது திண்ணம்.

‘நானும் வேலை பார்க்கிறேன், நீயும் வேலை பார்க்கிறாய். சேர்ந்து வாழ்ந்தால் பொருளாதார சிக்கல் இல்லை , வா கல்யாணம் செய்துகொள்வோம்’ என்ற பொருளில் இந்தக் கால காதலை கிண்டல் செய்து ஒருமுறை கவிதை எழுதியிருந்தேன். “அவளின் தந்தையை பற்றி இவனுக்குத் தெரியாது, அவனின் தந்தையை பற்றி இவளுக்குத் தெரியாது. அன்பினால் கலப்போம்” என்று செம்புலப்பெயல்நீரார் பாடி இரண்டாயிரம் வருடங்கள் ஆகியும், மனதால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் அரிதாகவே இருக்கிறது.

இலக்கியம் தெரிந்த நண்பர்கள், என் கவிதையின் பின்னணி தெரிந்து , புரிந்து நகைத்தனர். கோபம் கொண்ட நண்பர்களும் உண்டு. கொஞ்சம் இசையுடன் கொடுத்தால் ஒருவேளை இன்னும் சிலரின் எண்ணங்களை மாற்றலாம். அதற்கு கார்த்திக், பிரகதி வெவ்வேறு சுதிகளில் பாடி , ராஜன் மெட்டமைத்து, சிம்பொனி இசையில் வெளிவந்திருக்கும் ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ சங்கப் பாடலின் உதவியை நாடுகிறேன்.

 

 

ராஜனுக்கு சங்கப் பாடல்களுக்கு இசையமைப்பது இது முதல் முறையல்ல. சிகாகோவில், மே 2019-ல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்காக , யாதும் ஊரே யாவரும் கேளிர் சங்கப் பாடலுக்கு இசை அமைத்திருந்தார். அது சமயம், தmerica என்ற தொலைக்காட்சிக்கு கொடுத்த நேர்முகத்தை கவனித்தால் , எவ்வளவு விஷயங்களை நுணுக்கமாக அணுகியிருக்கிறார் என்று தெரிகிறது. இரண்டாயிரம் வருடம் கழித்தும் நிற்கும் பாடலை, இன்னும் நூறு வருடங்களுக்காவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்த ராஜன், கர்நாடக இசையில் புது வாத்தியங்களும், மற்ற இசைகளும் சேர்ந்த வண்ணம் இருக்கும் என்ற தொலைநோக்கு ஒன்று வைத்துள்ளார். அதன் காரணமாகவே சிம்பொனி இசையை , இணைத்தேன் என்கிறார்.

டர்ஹாம் சிம்பொனி குழுவின் நடத்துனர் மாஸ்டரோ வில்லியம் ஹென்றி கர்ரியிடம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலை ஆங்கில மொழி பெயர்ப்பு செய்த ஏ.கே. ராமானுஜத்தின் விளக்கத்தை எடுத்துச் சொல்லி அவரை வியக்கவைத்து சம்மதம் வாங்கியுள்ளார். தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாத சார்லெட் கார்டினாலே என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த பாப் பாடகிக்கு நெடில் குறில் எல்லாம் புரியவைத்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாட வைத்திருக்கிறார். யுக்ரைனில் வசிக்கும் ராக் இசை வல்லுனருடன் தொடர்ந்து உரையாடியும், இசையை பலமுறை பதிவு செய்து அனுப்பியும், ஆனந்த பைரவியை ராக் இசையில் வர வைத்திருக்கிறார்.

பாடலுக்கு நடனத்தை வடிவமைத்தவர், ஆங்கில மொழிபெயர்ப்பை நன்கு படித்து புரிந்த பிறகே இயக்கியிருக்கிறார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் முன்னோக்குப் பார்வையுடன் அறைகூவல் விடுத்தும், மொழி, மத வேறுபாடு பார்க்கும் நிலைமை இன்றும் இந்தியா, அமெரிக்கா என்று எங்கும் தொடர்கிறது. ராஜன் சோமசுந்தரம் , அந்தக் கோபத்தை தனது பன்னாட்டு கூட்டு இசையில் வெளிப்படுத்த, ராப் மியூசிக் பாடும்பொழுது சிறிதே தெரியும் கோபத்தை பயன்படுத்திக்கொள்கிறார். ராப் பாடகர், தர்ட்டீன் பீட்ஸ், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பாடும்பொழுது அந்த கோபத்தை இனம் காணலாம்..

 

இந்தப் பாடலில் , பொதுவெளியில் அவ்வளவாக பேசப்படாத பாடு பொருளையும் மேலும் பலரைச் சென்றடைய எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. காட்டாற்றில் மிதந்து செல்லும் படகைப் போல , வாழ்க்கை அதன் போக்கில் செல்லும். பாட்டின் இடையில் தோணி ஒன்று செல்வதை பின்னணியில் பார்க்கலாம். பெரியோரைக்கண்டு வியப்பதும், இளையோரை இளக்காரமாக காண்பதும் இழிவே என்பதை தெளிவுபடுத்த, வால்ஸ்ட்ரீட்-ல் திமிறி நிற்கும் காளையின் எதிரில் நிற்கும் சிறுமியின் சிலையையும், செல்லப்பிராணியை கொஞ்சும் பெண்ணையும் காட்சி படுத்தியிருக்கிறார்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முதல் வரிகளைக் கடந்து, கார்த்திக்கின் பிழையில்லா உச்சரிப்பில் வரும் , தீதும் நன்றும் பிறர்தர வாரா’, ‘பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற மற்ற பாடு பொருளையும் கேட்டு ரசிக்கும் ரசிகன், தனுக்குள் முணுமுணுத்து , வியந்து, ஆகச் சிறந்த மானுடத்தை வளர்ப்பான். எனது வாழ்வனுபங்களோடும், வாழ்க்கையோடும், இணைந்து பேசி மகிழ, தமிழும், தமிழ் மக்களும் பெருமைப்படும் ஒரு இசை ஆல்பத்தை வெளிக்கொணர்ந்த, இசையமைத்த, ஒருங்கமைத்த ராஜன் சோமசுந்தரத்திற்கு கோடான கோடி நன்றிகள்!

இதன் முழு வெற்றிக்கும் காரணமான டர்ஹாம் சிம்பொனி இசையை வழிநடத்திய மாஸ்டரோ வில்லியம் ஹென்றி கர்ரி அவர்களுக்கும், பின்னணி பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக், சைந்தவி, ராஜலட்சுமி சஞ்சய், பிரியங்கா, பிரகதி அவர்களுக்கும், காற்று வாத்திய கருவிகள், புல்லாங்குழல், வயலின் என அனைத்து வாத்தியக்கருவிகள் வாசித்த இசைக்கலைஞர்களுக்கும் மனம்கனிந்த வணக்கங்கள்.

ஆல்பத்தில் வரும் ஒவ்வொரு பாடலின் வரிகளையும் புரிந்துகொள்ள , அவருடன் அணுக்கமாக உள்ள எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம் (கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்) மிகவும் உதவினார்கள் என்று தனது பத்திரிகைகளுக்கு கொடுக்கும் நேர்முகங்களிலும், நண்பர்களுடன் வரும் உரையாடல்களிலும் ராஜன் சோமசுந்தரம் நன்றியுடன் நினைவு கூறுகிறார். அவர்களுக்கும் எனது நன்றியும் வணக்கங்களும் !

எல்லாப் பாடல்களையும் குறிப்பிட்டு சொன்ன நான், ஆல்பத்தில் உள்ள , கபிலர் , உயிரினும் பெரிது காமம் என்று முழங்கிய, பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடியுள்ள ‘வேரல் வேலி’ பாடலை பாராட்டி பேசும் பணியை உங்களிடம் ஒப்படைக்கிறேன். சந்தம் ஆல்பம், Youtube, Spotify, Amzon prime என்று அணைத்து ஸ்ட்ரீமிங் வடிவிலும் கிடைக்கிறது. ராஜன் சோமசுந்தரம் என்று கூகுளில் தட்டச்சு செய்து ஒரு சொடுக்கு சொடுக்கினால், நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை அறிவீர்கள். –

வ.சௌந்தரராஜன்

https://www.youtube.com/channel/UCmGO2vRjr53Y2ih2v-oLhOw

 

அமெரிக்கப்பொருளியல் – கடிதம்

அமெரிக்க சிற்றூரில் ஜனநாயகம்

அஷ்டவக்ரகீதை

அஷ்டவக்ரகீதை வெளியீடு

யாதும்!

ஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்

தருமை ஆதீனம் -கடிதம்

அமெரிக்காவின் வண்ணங்கள்

ராலே

முந்தைய கட்டுரையா தேவி! – கடிதங்கள்-14
அடுத்த கட்டுரைவரையறுத்து மீறிச்செல்லுதல்