யா தேவி! [சிறுகதை]
அன்புள்ள ஜெ
யா தேவி! ஒரு அழகான கதை. அதை பலவாறாக வாசிக்க முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அதை வாசிக்கிறர்கள். ஆனால் அதன் மையமாக உள்ளது ஒரு உருவகம்தான். அது ஸாக்த மரபின் முக்கியமான உருவகம். அதை அறிந்து அதற்குமேல் எந்த வகையில் வேண்டுமென்றாலும் கற்பனையை ஓட்டலாம்
அதாவது,ட் இந்த பூமியை ஆளும் ஆற்றல் ஒன்று. அதுவே ஸக்தி. அதுவே ஸார்த்தம். அதுவே பரம். அதுவே பிரம்மஸ்வரூபம். அது தன்னை வெவ்வேறு வகையாக ஆக்கிக்கொண்டு இந்த பூமியெங்கும் நிறைந்திருக்கிறது. ‘யாதேவி சர்வபூதேஷு ஸக்தி ரூபேண ஸம்ஸ்திதா’ என்பது முதல் வரி. ‘யாதேவி சர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா’ யாதேவி சர்வபூதேஷு வாணி ரூபேண ஸம்ஸ்திதா’ என்றெல்லாம் அந்த ஸ்துதி நீண்டு செல்கிறது. அன்னைவடிவமாகவும் சொல்வடிவமாகவும் இங்கே நிறைந்திருப்பவள் அவளே.
மாயாரூபிணி அவள். தன் பல்லாயிரம் மாயாரூபங்களால் தன்மேல் மோகம்கொள்ளச் செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு. ஆகவேதான் அதை அபிராமி என்கிறார்கள். இங்குள்ள எல்லா உயிர்களும் அதன்மேல் கொண்ட மோகத்தால்தான் அலைக்கழிகின்றன. ஆனால் அந்த மோகம் இல்லையேல் வாழ்க்கையும் இல்லை. அழகு மேல் கொள்ளும் மோகம், காமம், பசி, அறிவின்மேல் கொள்ளும் மோகம் எல்லாமே அந்த ஆற்றல்மேல் கொள்ளும் மோகம்தான். அவ்வளவு காமத்தை உருவாக்கக்கூடியவள் காமாக்ஷி என்னும் அன்னை.
அந்த காமம்தான் மற்ற மூன்று புருஷார்த்தங்களுக்கும் அடிப்படை. அந்த மாயாரூபங்களில் காமம் கொண்டிருக்கையில் நாம் அடிமைப்பட்டு அல்லல் உறுகிறோம். அந்த பல்லாயிரக்கணக்கான மாயாரூபங்களின் சாராம்சமாகிய சக்திஸ்வரூபத்தை அறிந்துகொள்கையில் நாம் மற்ற காமங்களிலிருந்து விடுபடுகிறோம். அதன்மேல் பற்றுகொள்கிறோம்.
இதுதான் ஸாக்த தர்சனம். இந்தக்கதையில் அந்த நடிகை ஒரு உருவகம்தான். இந்தக்கதை அந்த நடிகை எப்படி மீட்பு அடைகிறாள் என்று சொல்லவில்லை. இந்தக்கதையில் அவளை அவன் தெய்வமாக பார்க்கிறான் என்பதும் சொல்லப்படவில்லை. அவள் ஒன்று, அவளுடைய உருவங்கள் பல. உருவங்களில் காமம் கொள்பவர்கள் அவளை அறிவதில்லை. அவளை அறிந்தவனுக்கு அவள் உருவங்கள்மேல் காமம் இல்லை. அவன் அவள் பாதங்களைத் தொட்டுவிட்டவன்.
இந்த அடிப்படையில் இருந்து இந்தக்கதையை மேலே வாசிப்பவர்கள்தான் சரியான ஒரு புரிதலோடு வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன்
எம்.கோபாலன்.
அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,
தங்களது “யாதேவி” கதையைப் பற்றி.
எல்லா, ஸ்ரீ , இருவருமே ஒரே நிலையில் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.இருவருமே உடலைக் கடந்தவர்களாய்ப் (அல்லது உடலைக் கடந்து பார்ப்பவர்களாய்ப்) படுகிறார்கள். ஆனால் எல்லாவுக்கு அது நரகமாய் இருக்கிறது. அவளது மேலோட்டமான அஹங்காரம், அவளைத் தொந்திரவு செய்கிறது.இன்னும் சொல்லப்போனால், எல்லா, தேவியின் உக்ரரூபமாய் உள்ளாள்.எல்லா, சிவனை இன்னும் பார்க்கவில்லை.
ஸ்ரீ க்கு அதுவே (உடலைக் கடந்து பார்ப்பது ) ஒரு வழிபாட்டு முறையாய் இருக்கிறது.ஸ்ரீ, இன்னும் தேவியைப் பார்க்கவில்லை.
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள சார் அவர்களுக்கு
யா தேவி கதை படித்ததும் உள்ளுக்குள் ஏதோ ஒரு அலைக்கழிப்பு இருந்து கொண்டே இருந்தது. சரி யாராவது ஒருவர் கடிதம் எழுதுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதல் கடிதம் படித்ததும் புரிந்து கொண்டேன். எனக்கு படிக்கப் படிக்க கன்னியாகுமரி, கன்னிமை இரண்டு கதைகளும் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. இந்த ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் என்னைப் புணர்ந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை என்று சொல்லும் ஒருத்தி ஒரு ஆண் என்னைத் தொட்டு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கூச்சல் போடுவது அவனைப் பார்த்ததும் அவளின் ஆன்மா அவனை அறிந்து கொண்டதே காரணம்.
ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமாவை இழந்தால் அதனால் அவனுக்கு பயன் என்ன என்ற பைபிள் வசனம் ஏன் எனக்கு ஞாபகம் வர வேண்டும். என் கணவர் திருமணத்திற்கு முன் அவர்கள் உறவினர் வீட்டுப் பக்கத்தில் குடியிருந்த ஒரு துணை நடிகையுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அந்தப்பெண் தன் மனதில் இருந்த அனைத்துக் காரியங்கள் பற்றியும் சொல்லி இருக்கிறார். கடைசியாய் ரொம்ப நாளுக்கப்புறம் மனசு விட்டுப் பேசி இருக்கிறேன். ரொம்ப நன்றி என்று கையைப் பிடித்து அழுதிருக்கிறார். அதில் இருந்து என் கணவர் பெண்களைப் பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டது. அந்தக் குணம் சில நேரங்களில் என்னை மிகவும் கடுப்பேத்தும்.
எத்தனைப் பேர் தொட்டாலும் ஒரு பாலியல் தொழில் செய்பவள் தன் உள்ளே அந்த உறவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவளுக்கு அது ஒரு பொருட்டு. இல்லையென்றால் அவள் கன்னிதான். அந்த கன்னிமையை யாரோ ஒருவரால்தான் உணர முடியும் இல்லையா. நான் சின்னப் பிள்ளையாய் இருந்தபொழுது படித்த ஒரு கதை. ஒரு பெண் தன்னை முதன் முதலில் பெண் பார்த்த மாப்பிள்ளையை தன் கணவனாக மனதில் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் வேறு சில காரணங்களால் அது திருமணம் வரை செல்லவில்லை. வேறு ஒருவரை வீட்டில் பார்த்து மணமுடிக்கிரார்கள். அவரோடு வாழ்ந்து பிள்ளைகள் பெற்று ஆளாக்கி எல்லாம் குறை இல்லாமல் செய்கிறாள். அவள் கணவன் இறக்கும் போது எல்லாரையும் போல் அழுகிறாள். சடங்குகள் செய்து கொள்கிறாள். அதன் பின் ஒன்றுமே நடக்காதது போல் வாழ்ந்து வருகிறாள். சில மாதங்கள் கழித்து பேப்பரில் இறந்தவர்கள் அஞ்சலி பகுதியில் அந்த முதலில் பெண் பார்த்து விட்டுப் போன மனிதரின் போட்டோவைப் பார்த்ததும் வெடித்து நான் விதவையாய்ப் போனேனே என்று அழுகிறாள். அப்ப இத்தனை நாள் அவள் யாருக்கு மனைவியாய் இருந்தாள். ஒரு பெண்ணை அவளின் உடல் கடந்த தன் சக ஆன்மாவைப் பார்ப்பதற்கு அவர்களில் ஒரு பெண்மை கண் திறக்க வேண்டும் போலிருக்கிறது. அதனால்தான் காந்தியைத் தேடி அத்தனைப் பெண்கள் வந்தார்கள் போல.
இன்றைக்கு விடிகாலையில் என் மகளை எழுப்பப் போனபோது அவளைப் பார்த்ததும் மனம் நிறைந்து கண்கலங்கி அவள் தலையில் கை வைத்து “தேவி உலகம் முழுக்க சக்தி வடிவாய் நிறைந்திருப்பவளே” என்று சொல்லி விட்டு அவளை எழுப்பினேன்.
டெய்ஸி பிரிஸ்பேன்
யா தேவி! – கடிதங்கள்
யாதேவி – கடிதங்கள்-2