பாரதி நினைவுக்குறிப்புகள்

பாரதி நினைவுக்குறிப்புகள்

 

நண்பர்கள் நினைவில் பாரதியார்- தொகுப்பாசிரியர் இளசை மணியன். வெளியீடு சிறுவாணி வாசகர் மையம். கோவை. [email protected]

 

பாரதியைப் பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது தமிழில், தமிழ்ப்படைப்பாளிகளில் அவர் அவ்வகையில் நல்லூழ் கொண்டவர். அவருக்கு வரலாற்றாசிரியர்கள், தொகுப்பாளர்கள் பலர் அமைந்தனர். அவருடன் வாழ்ந்தவர்களே பலர் அவருடைய வாழ்க்கையை எழுதினார்கள். ஆகவே ஓரளவு அவருடைய வாழ்க்கை நமக்கு தெரிகிறது

 

பரலி நெல்லையப்பர், வ.ரா, கனகலிங்கம், யதுகிரி அம்மாள், செல்லம்மா பாரதி ஆகியோர் அவருடனான நேரடி பழக்கத்தைக்கொண்டு அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், குவளைக்கண்ணன் போன்றவர்களின் நினைவுகள் பதிவாகியிருக்கின்றன.  பிற்காலத்தில்  பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், இளசை மணியன் போன்றவர்கள் மேலும் செய்திகளை திரட்டி பாரதி ஆய்வை முன்னெடுத்திருக்கிறார்கள். இன்று கடற்கரய் இளைய தலைமுறை பாரதி ஆய்வாளராக அறியப்படுகிறார்.

மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார்

அதற்கு முன் எந்த இலக்கியவாதியைப்பற்றியும் வாழ்க்கைக்குறிப்புகள் இல்லை. ஏனென்றால் அந்த வழக்கம் நம் மரபில் இங்கே இல்லை.நமக்கு செவிவழிச் செய்திகள், தொன்மங்களே உள்ளன. தமிழின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறு உ.வே.சாமிநாதய்யர் தன் ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பற்றி எழுதிய ‘எனது குருநாதர்’. [அல்லது திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்]

 

அதற்குப் பின்னர் வந்த படைப்பாளிகளைப் பற்றி அந்த அளவுகூட வரலாற்றுக்குறிப்புகளோ ஆய்வுகளோ இல்லை. உதாரணமாக, புதுமைப்பித்தன் பற்றி ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு என்னும் ஒரே நூல்தான் உள்ளது. பின்னர் இளையபாரதி தொகுத்த புதுமைப்பித்தன் கடிதங்கள் ‘கண்மணி கமலாவுக்கு’. அவ்வளவுதான். வேறு ஆய்வோ நூலோ இல்லை. மௌனி, கு.ப,ரா, பிச்சமூர்த்தி, அழகிரிசாமி, ஜானகிராமன், லா.ச.ரா, ஜி.நாகராஜன்,ஜெயகாந்தன், எவரைப்பற்றியும் விரிவான வரலாற்றுப் பதிவுகல் இல்லை.

பெ.தூரன்

ஜெயகாந்தனைப் பற்றி பி.குப்புசாமி [திருப்பத்தூர்] எழுதிய ‘ஜெயகாந்தனுடன் பல்லாண்டு’ சுந்தர ராமசாமி பற்றி நான் எழுதிய ‘சு.ரா.நினைவின் நதியில்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இச்சூழலில்தான் சுந்தர ராமசாமி நினைவோடை என்னும் வரிசையில் கிருஷ்ணன்நம்பி, மௌனி, கு.அழகிரிசாமி, பிரமிள் க.நா.சு, ஜி.நாகராஜன், சி.சு.செல்லப்பா ஆகியோரைப்பற்றி எழுதிய குறிப்புக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அவை மிகத்தாமதமாக நினைவிலிருந்து எழுதப்பட்டவை என்றாலும்.

 

ஓர் எழுத்தாளனின் எழுத்துக்குப் பின்புலமாக அமைவது அவனுடைய வாழ்க்கை. அவனுடைய எழுத்தை முழுமையாக அவன் வாழ்வுடன் பொருத்திக்கொள்ள முடியாது – கூடாது. ஆனால் அவன் எழுத்தை தருணப்படுத்திக்கொள்ள [contextualize]அவை மிக முக்கியமான தொடக்கங்கள். எழுத்தாளனின் ஆளுமை அவன் எழுத்திலிருந்து பிரிக்கக்கூடுவது அல்ல. அத்துடன் படைப்பூக்கம் கொண்ட ஓர் எழுத்தாளன் அவன் காலகட்டத்தின் தட்பவெப்பமானியைப் போல. அவன் காலகட்டத்தின் மொத்தப் பண்பாட்டுச் செயல்பாடும் அவனுடைய வாழ்க்கையினூடாக அறியப்பட இயல்வது.

ரா.அ.பத்மநாபன்

உதாரணமாக, புதுமைப்பித்தனின் புனைவுலகில் அன்றிருந்த சுதந்திரப்போராட்டச் சூழல் பற்றிய செய்தியே இல்லை. மெல்லிய ஏளனத்துடன் சில கதைகளில் குறிப்பு உள்ளது. அதைச்சார்ந்து புதுமைப்பித்தனின் அரசியல் விலக்கத்தை அன்றைய விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் பின்னர் வெளிவந்த அவருடைய கண்மணி கமலாவுக்கு என்னும் தொகுதியைப் பார்ப்பவர்கள் அதில் அவர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசெல்ல விரும்பி திரும்பத்திரும்ப கமலாவுக்கு எழுதிய குறிப்புகளைக் காணலாம். அது புதுமைப்பித்தனின் உள்ளத்தை மேலும் அணுகி ஆராய வழிவகுக்கிறது.

 

தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய வாழ்க்கைவரலாறுகள் நிறைய வரவேண்டியிருக்கிறது, பலகோணங்களில் எழுதப்படுபவை. மேலைநாடுகளை ஒப்பிட நாம் ஒருவகையான கட்டுப்பெட்டித்தனத்துடன் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்கிறேன். விஷ்ணுபுரம் விருதை ஒட்டி விருதுபெறும் எழுத்தாளர்களின் வாழ்க்கைவரலாற்றை வெளியிடலாம் என முயன்றபோது தொடக்கம் முதலே எழுத்தாளர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்கள். இப்போது எழுத்தாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக குறைந்த அளவில் பதிவுசெய்கிறோம். ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், ராஜ்கௌதமன், அபி ஆகியோரைப்பற்றிய ஆவணப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

செல்லம்மாள், பாரதியுடன்

பாரதியார் பற்றிய அவருடைய சமகாலத்தவரின் உளப்பதிவுகள் அடங்கிய சிறுநூல் நண்பர்கள் நினைவில் பாரதியார். பாரதி ஆய்வாளரான இளசை மணியன் தொகுத்தது. மிக ஆர்வமூட்டும் வாசிப்பை அளிக்கும் சிறுநூல் இது. இதில் வ.வேசு. அய்யர் போன்ற பாரதிக்கு இணையான ஆளுமைகள், சர்க்கரைச் செட்டியார் போன்ற பாரதி அணுக்கர்கள்,சும்மா பாரதியை தெரிந்து வைத்திருந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் ஆகியோரின் நினைவுகளுடன் அன்றைய நாளிதழ்க்குறிப்புக்களும் உள்ளன.

 

எழுத்தாளனின், அல்லது மறைந்த மதிப்புக்குரிய ஒருவரின் நினைவுகளை பதிவுசெய்வதில் நமக்கு பல சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நாம் அவரை கூர்ந்து கவனிப்பதே இல்லை.  ‘அவருடன் நான்’ என்ற அளவிலேயே நம் பதிவுகள் அமைகின்றன. பின்னாளில் நாம் அவரைப்பற்றி எழுதும்போது அவை ‘என்னுடன் அவர்’ என ஆகிவிடுகின்றன. ஆகவேஅந்தப்படைப்பாளியைப் பற்றிய நுண்சித்திரங்களே இருப்பதில்லை.

யதுகிரி அம்மாள்

இன்னொன்று, மதிப்புக்குரியவர்கள் இறந்தால் மிகமிகச் சம்பிரதாயமான சிலவற்றையே சொல்லவேண்டும் என்னும் நமது நம்பிக்கை. பெரும்பாலான குறிப்புகள் வழக்கமான ‘பாவம் நல்ல மனுஷன், போய்ட்டார்’ என்றவகையிலேயே அமைகின்றன. நீத்தாரின் சாதனைகளை புகழ்வதில்கூட மாறாத ஒரே சொற்றொடர்கள்தான். நீத்தார் நினைவில் நாம் அள்ளி வைக்கும் அளவுக்கு தேய்வழக்குகள் வேறெங்கும் இருப்பதில்லை.

 

அது பாதுகாப்பானதும்கூட. நீத்தாரின் உறவினர்களுக்கு அதுவே பிடிக்கிறது. நீத்தார் அறிஞரோ எழுத்தாளரோ சமூகப்போராளியோ ஆக இருக்கலாம். அவருடைய குடும்பத்தினருக்கு அவரைப்பற்றி பெரும்பாலும் ஏதும் தெரிந்திருக்காது. சற்று மரியாதை இருக்கும், அல்லது அதுவும் இருக்காது. நீத்தார் புகழ்பெற்று ஒரு கொடியாக ஆகும்போது குடும்ப அடையாளமாக மாறுகிறார். அதன்பின் அதில் ‘மாசு’ பட அவர்கள் விரும்புவதில்லை.

கனகலிங்கம்

உதாரணமாக, ஜி.நாகராஜன் மறைந்தபின் அவரைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்பு ஒன்று க்ரியா வெளியிட்ட நாளை மற்றுமொரு நாளே நூலில் இருந்தது. அது சுந்தர ராமசாமி எழுதியது- பெயரில்லாமல். அதில் ஜி.நாகராஜனின் கொந்தளிப்பும் சரிவும் அழகாகச் சொல்லப்பட்டிருந்தது. அந்த குறிப்புதான் ஜி.நாகராஜன் மேல் புதியவாசகர்கள் ஆர்வம் கொள்ளவும் அவர் மீண்டெழவும் செய்தது. அதை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். பின்னர் எழுதியுமிருக்கிறார்

 

ஆனால் அக்குறிப்பை அன்றைய விமர்சகர்கள்கூட கடுமையாக விமர்சனம் செய்தனர்- அது நாகராஜனை இழிவுசெய்கிறது என்று அன்றைய வேகாவிமர்சகரான நாகார்ஜுனன் எழுதினார். ஜி.நாகராஜனின் குடும்பமும் அதை ஏற்கவில்லை. ஜி.நாகராஜன் குடிப்பாரே ஒழிய குடிகாரர் அல்ல என்று அவர்கள் வாதிட்டனர். இது நம் சூழல். இங்கே எழுத்தாளனைப் பற்றி அக்குடும்பம் உருவாக்கும் பிம்பமே நீடிக்கவேண்டும் என்னும் சூழல் உள்ளது. சுந்தர ராமசாமிக்கும் அந்த சூழல் அவர் மறைவுக்குப்பின் வந்தமைந்தது.

வ ரா

பாரதி பற்றிய இந்நூலில் இடக்கரடக்கலுடன், ஒப்புக்குச் சொல்லப்பட்ட சொற்களே பெரும்பகுதி. சுதேசமித்திரன் ஆசிரியர் உள்ளிட்ட அன்றைய பிரமுகர்கள் பெரும்பாலும் ‘பாரதியார் நல்ல கவிஞர், தேசவிடுதலைக்காக பாடுபட்டவர்’ என்ற வகையில் பொதுவான புகழ்மொழிகளை மட்டுமே சொல்லியிருக்கிறர்கள். அவை இன்றைய வாசகனுக்கு எவ்வகையிலும் ஆர்வமூட்டுவன அல்ல.

 

ஆனால் புதுமை அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அமுதன், சென்னையில் பாரதியாருடன் பழகிய டிவிஜயராகவாச்சாரியார், சோமதேவ சர்மா, பாரதியின் அண்டைவீட்டுக்காரர் நாகசாமி போன்றவர்களின் குறிப்புகள் நுணுக்கமானவை. ஏனென்றால் அவர்கள் சாதாரணமானவர்கள், அவர்கள் ‘காலத்தை நோக்கி’ அதைப் பேசவில்லை. பாரதி சாப்பிட்டுவிட்டு வரும்போது தாடியும் சாப்பிட்டிருக்கும் என்னும் வரி வேறொரு பாரதியை நமக்குக் காட்டுகிறது.

குவளைக்கண்ணன்

பாரதி சோற்றை சிந்தி இறைத்து சாப்பிடுவார், சாப்பிடும்போதே சாப்பாட்டை மறந்துவிடுவார் என்கிறார் நாகசாமி. குளிக்க ஆரம்பித்தால் ஆடைமேலேயே தண்ணீரை விட்டுக்கொண்டே இருப்பார். கையில் கிடைத்த ஏதேனும் துணியை தலைப்பாகையாக கட்டிக்கொண்டு வெளியே செல்வார் என்கிறார். உண்மையில் நினைவுக்குறிப்புகள் வழியாக நாம் தேடுவது இத்தகைய நுண்சித்திரங்கள், அல்லது மிகமுக்கியமான செய்திகள்.

 

மொட்டைமாடியில் கற்பனையாக கம்பு சுற்றும் பாரதி, நடனமாடியபடியே தன் கவிதையைச் சொல்லும் பாரதி, பாடச்சொன்னதும் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு ‘ஜெயபேரிகை கொட்டடா!’ என்று ஆர்ப்பரிக்கும் பாரதி [ஆனால் குழந்தை பயந்து அழவில்லை] என வரும் சித்திரங்களே இந்நூலின் கொடை  சென்னையில் பஞ்சத்தில் இருக்கும் பாரதியின் வீட்டுக்கு மளிகை , காய்கறி வாங்கிக் கொடுக்கிறார் சோமநாத சர்மா.  ‘நம் பொருட்டு எவரிடமும் கேட்கக்கூடாது’ என்று பாரதி சொல்கிறார்.  ‘இல்லை, இது என் சொந்தச் செலவு’ என்னும்போது சமாதானம் அடைகிறார்

பரலி சு நெல்லையப்பர்

பாரதியில் இருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகம் இலக்கியம் – கலைகள் மேல் கொண்டிருக்கும் ஒவ்வாமை மாற்றமில்லாமல் தொடர்கிறது. பாரதி சரஸ்வதிபூஜை அன்று பிரசங்கம் செய்ய விரும்புகிறார். அவருடைய நண்பர் நாராயண அய்யங்கார் அதற்கு ஏற்பாடு செய்கிறார். தலைமை சீதாராம சாஸ்திரி என்னும் தர்க்கவியல் அறிஞர். ஆனால் பிரசங்கம் கேட்க எவருமே வரவில்லை. ஆகவே நாராயண அய்யங்கார் வெளியே சென்று இங்கே தட்சிணை கொடுக்கிறார்கள் என அறிவிக்கிறார். தெலுங்கு தேசாந்தரிகளின் கூட்டம் வந்து அரங்கு நிறைகிறது. பாரதி தமிழில் பேச அவருடைய முற்போக்குக் கருத்துக்களை நாராயண அய்யங்கார் மறுக்க ஒரே சண்டை. தெலுங்கர் இங்கே காணிக்கை கிடையாது, அரவாடுகளின் சண்டை என்று புலம்பிக்கொண்டு எழுந்து செல்கிறார்கள்

 

அந்த நம்பிக்கை பாரதியை விடவேயில்லை. சென்னை மீண்டு வறுமையில் வாடும்போது ஒரு கட்டண நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் பணம் வரும் என்று திட்டமிடுகிறார். பாரதி தேசபக்திப் பாடல்களைப் பாடி சொற்பொழிவாற்றுவார் என்று அறிவிக்கப்படுகிறது ஒய்.ஐ.எம்.ஏ ஆதரவில் திலகர் ஹாலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. கடன் வாங்கி வாடகை கொடுக்கிறார் சோமநாத சர்மா. ஐநூறுபேர் வருவார்கள், நாலணா டிக்கெட். நூறு ரூபாய் மிச்சமாகும், அதைக்கொண்டு ஆறுமாதம் செலவு செல்லும் என்று பாரதி கணக்கிடுகிறார். அனால் வந்தவர்கள் ஐந்து பேர்.பாரதி உளம் உடைகிறார். ஆகவே இலவசம் என தெருவில் சென்று அறிவிக்கிறார்கள். கூட்டம் வந்து அமர்கிறது. பாரதி உற்சாகமாக பாடுகிறார். பேசுகிறார்.

இளசை மணியன்

பாரதி மிகச்சிறந்த சொற்பொழிவாளர். அவருக்கு தன் சொற்பொழிவுத்திறன் பற்றிய பெருமிதமும் இருந்தது. அதைக்கேட்க கூட்டமும் வரும், ஆனால் பணம்கேட்டால் வராது. பாரதி அவருடைய கடைசிநாட்களில் ஒருலட்சம் ரூபாய்க்கு ஆசைப்படுகிறார். அதைக்கொண்டு அமெரிக்காவில் உயர்தர அச்சில் தன் நூல்களை வெளியிடவேண்டும் என நினைக்கிறார். வண்ணப்படங்களுடன். ஏன் அமெரிக்கா? அங்குதான் வண்ண அச்சு அன்று இருந்தது. இரண்டு லட்சம் பிரதிகள் விற்கும் ஒருலட்சம் ரூபாய் லாபம் வரும் என நினைக்கிறார். பாவம்.

 

சிறிதும் பெரிதுமான பாரதிநினைவுகளின் தொகுதி இது. ‘வறுமையே ஆனாலும் வீடு பெரிதாக இருக்கவேண்டும். வீடு குறுகியதென்றால் உள்ளமும் குறுகும்’ என்று வாதிடும் பாரதியை , வெற்றிலை போட கவனமில்லாமல் கண்டபடி சுருட்டி திணித்துக்கொள்ளும் பாரதியை நாம் அணுக்கமாக உணர்கிறோம். ‘தூய்மைசெய்யப்படாத’ பாரதியை இன்னமும் அணுக்கமாக. தயங்கித்தயங்கி தன்னை இரவில் சந்திக்க வந்த இளம் வாசகனிடம் “ராத்திரி வந்து பார்க்க நான் என்ன தேவடியாளா?”என்று சொல்லி வெடித்துச் சிரிக்கும் பாரதி, வசைச் சொற்களை உதிர்க்கும் பாரதி நாம் வரலாற்றை கடந்து சென்று அருகே எனப் பார்க்கும் உண்மையான மானுடன்

=========================================

===================================

பாரதியார் ஓரு புகைப்படப்பதிவு

பெரியசாமித் தூரன் – பசுபதி பக்கங்கள்

பாரதியார் கதை – ஓர் இணையப்பக்கம் ஜீவி

இளசை மணியன் பேட்டி

ரா அ பத்மநாபன்

முந்தைய கட்டுரைஅறமெனப்படுவது – கடிதம்
அடுத்த கட்டுரைகவிதையில் அசடுவழிதல்