நுரைச் சிரிப்பு

மார்ச் தொடக்கத்தில் குமரிமாவட்டத்தின் வண்ணம் மாறத்தொடங்குகிறது. புல் செம்மைகொள்ளத் தொடங்குவதனால். ஆனால் விமானத்தில் இருந்து நோக்கினால் இந்த வேறுபாடு தெரியாது. எங்கும் பசுமையின் அலைகள். நடுவே ஒளிரும் நீர்நிலைகள், ஆறுகளின் சரிகைக்கோடுகள். நீரே மின்னல் கொடிகள் என பிரிந்துப் பதிந்ததுபோல மண்ணில் அதன் பின்னல்கள்.

 

முன்பு இரண்டு சிறு விமானங்கள் இந்தவழியாகச் சென்னை செல்லும். நான் குனிந்து பார்த்தபடியே வருவேன். கீழே வேளிமலையின் உச்சிமுனை ஒரு கோடுபோல தெரியும் அதன் வடகிழக்குப் பக்கம் செம்மண்நிறம் தென்மேற்குப்பக்கம் ஒளிரும் பச்சை. நாங்கள் பாண்டிநாடு என்று சொல்லும் அரைப்பாலைநிலம் ஆரல்வாய்மொழிக்கு அப்பால் தொடங்கி பணகுடி வழியாக நெல்லை கோயில்பட்டி என விரிந்து மதுரை வரைச் செல்வது. ஆங்காங்கே பசுந்திட்டுக்கள் தவிர முழுக்கவே செம்மண் நிறம்தான்.

ஆனால் குமரிமாவட்டம் எல்லா பருவங்களிலும் பச்சை. கீழே நோக்கும்போது மனிதர்கள் வசிக்கிறார்களா வெறும் காடா என்றே சந்தேகம் வரும்.திருவனந்தபுரம் அணுகும்போது விமானம் கீழிறங்க நிலம் எத்தனை மேடுபள்ளமானது என்று தெரியும். எல்லா வீடுகளும் ஏதேனும் குன்றின் சரிவில்தான் அமைந்திருக்கின்றன. குன்றுச்சரிவுகள் பள்ளங்களில் ஓடும் ஆறுகளைச் சென்றடைகின்றன. மீண்டும் குன்றாகி ஏறி குவையாகின்றன.

 

புல் நிறம் மாறுவதைப் பார்க்க ஒவ்வொருநாளும் செல்லவேண்டும். ஒருநாள் கண்ட நிறமல்ல மறுநாள். தீ நோக்க நோக்க நிறம் மாறுவது போலத்தான். இங்கே பலவகை புற்கள். இதழ்நீட்டி எழுவன எல்லாமே பூவிட்டு செண்டு சூடுபவை. நாணல்கள் வகைவகையான கொத்துக்கள் கொண்டவை. ஆனால் எல்லாமே சிலநாட்களுக்குத்தான். இப்போது சற்று காற்று குறைவு. இன்னும் சிலநாட்களில் தென்மேற்குக் காற்று சவேரியார் குன்றை அசைத்துவிடுவதுபோல சீறி வீசும். அத்தனை புல்மலர்ச்செண்டுகளும் உதிர்ந்து பறந்து மறையும்

சூரியஒளியை பஞ்சு நீரை என அள்ளித்தேக்கிக் கொள்ளத் தெரிந்தவை இந்த மலர்ச்செண்டுகள். மெய்சிலிர்த்து நிற்பவை போல. அல்லது மயிர் எழுந்த அணில்வால்கள். காலைநடை செல்லும்போது அவை சுடர்கொண்டு நின்றிருக்கின்றன. தொலைவில் அவற்றின் அசைவைப் பார்க்கையில் அனல் பற்றிக்கொண்டுவிட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது

 

பச்சைவண்ணம் கொண்ட கொத்துக்கள் சில. பச்சையிலிருந்து செம்மை நோக்கி நாம் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே நகர்கின்றனவா என்ற ஐயம் எழும். பொன்வண்ணம் கொண்டவை. வெண்நுரை போன்றவை உயரமான நாணல்களில். அவை காற்றில் நடனமிடுகின்றன. சூரிய ஒளியை துழாவுகின்றன. அறியா ஓவியன் ஒருவனின் தூரிகையின் மென்முனை போல.

நாணல்கள் ஒளிகொள்வதை பார்ப்பதற்காகவே நின்று நின்று நடைசெல்கிறேன். அந்தி அணைவதுவரை அவை சுடர்ந்துகொண்டிருக்கும். இரவானபின்னரும் கூட ஓடையின் அலைநுரை போல தெரிந்துகொண்டிருக்கும். காலையில் அவை மேலும் மேலுமென பற்றி எரிந்துகொண்டே வந்து வெயில் சாய்வு அகன்றதும் அணைந்துவிடுகின்றன. கண்கூச ஒளிகொண்டுவிட்ட நிலத்தின் பகுதியாக மாறிவிடுகின்றன

 

அவை எழுந்து பறக்கும் காற்று முகத்தில் படும்போது தலைமுடியில் புல்விதைகள் அமைகின்றன. நடக்கும் செம்புழுதிச் சாலையோர மண்மேடுகள் எங்கும் அவை படிந்திருக்கின்றன. விதைகளை மழையை நம்பி காற்றிடம் ஒப்படைத்துவிட்டு புல்திரள்கள் வெறுமை கொள்கின்றன. அவ்வளவுதான். இனி எக்கணமும் பற்றிக்கொள்ளவேண்டியதுதான். விதைகள் எரிந்தழியாதா? எரியும். அழியும். வீணாகும். அனைத்தையும் எண்ணித்தான் அத்தனை பெருகுகிறது புல்

எங்கெல்லாம்! நான் செல்லும் வழியில் முகாமுகம் நோக்கியபடி இரு வீடுகள். அவை கட்டப்பட்ட நாளில் இருந்து எவரும் குடியிருக்கவில்லை. கோட்டைபோன்றவை. அவற்றின் அத்தனை மடிப்புகளிலும் புழுதியால் மண்சேர்ந்து அங்கே புல் முளைத்திருக்கிறது. உச்சிப்பாறையின் விரிசல்களில் மழையில் கோடு போல பசும்புல். ஒரு சொல் சற்றே அசையாமல் கிடந்தால்கூட புல் அதன்மேல் முளைத்தெழுந்துவிடும்போல

 

இது ஒரு சிரிப்பு என்று எண்ணிக் கொள்வதுண்டு. இந்த மண்ணைப் போர்த்தியிருக்கும் உயிரின் உவகை. மண்ணிலிருந்து எழுந்து பிரம்மனுக்கு அறைகூவல்விடும் ஒரு புல்நுனியின் கதை வெண்முரசில் உண்டு. இவை மனிதனின் அத்தனை தேடல்களுக்கும் தவிப்புகளுக்கும் அப்பால் அறைகூவல் என நின்றுகொண்டிருக்கின்றன. இப்படி வெண்சிரிப்பினூடாகவே பெருக முடியும் என்றால், சிரிப்பினூடாக நிலைப்பேறு கொள்ள முடியும் என்றால் எதை அஞ்சவேண்டும், எதை வெல்லவேண்டும்?

 

காலைநடை முடிந்து வருகையில் தோன்றுகிறது, அழிவின்மை என்பது பேருருவால், உறுதிநிலையால், கடினத்தால் வருவது அல்ல. மென்மையால், வளைந்துகொடுப்பதனால், அனைத்து எதிர்நிலைகளையும் கடந்து தன்னைப் பெருக்கிக்கொள்வதனால், அன்னமிடுவதனால் ஆட்கொள்வதனால் அமைவது. இப்படி பொங்கிச் சிரிப்பவர்களுக்கு அருளப்படுவது.

முந்தைய கட்டுரைதர்மபுரி இலக்கியச் சந்திப்பு
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-8