யா தேவி! [சிறுகதை]
ஜெயமோகனின் “யா தேவி ” சிறுகதையில் வரும் ஸ்ரீவித்யா கோட்பாடு ப்ருமச்சர்யம் குறித்து தனியாக ஒரு பதிவு எழுத எண்ணுகிறேன் .அது பிறகு .மற்றபடி அந்த சிறுகதையை கடைசி வரியில் இருந்தும் வாசிக்க தொடங்கலாம் .ஒரு விபரீத க்ரமம் தான் .அந்த பெருமூச்சில் இருந்து .அந்த பெண்மணியின் உடல் ஒவ்வொருவரின் / ஒவ்வொருக்காலக்கட்டத்தின் / ஒவ்வொரு ஜனத்திரளின் எண்ணத்தின் படி விருப்பத்தின் படி மாற்றி அமைக்க பட்டதில் இருந்து .
சிற்றின்ப கேளிக்கைக்காக அந்த நடிகையின் பொம்மைகள் பத்தாயிரக்கணக்கானவர்களால் வாங்கப்படுகின்றன .அது அவள் அல்ல ; கதாநாயகன் அவளை புனித விக்ரகமாக தேவியின் வடிவாக காண்கிறான் .அதுவும் அவள் அல்ல .அந்த நடிகையின் சுயத்தை குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை .அவரவருக்கு பிடித்த வடிவம் .
இன்னும் ஒரு விஷயமும் உண்டு .ஒன்று வேசி . இல்லை எனில் புனிதப் பெண் .இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் சாதாரண மானுப்பெண்ணை யாரும் காண்பதில்லை என்பது ஒரு விவாதப் பொருள் .ஸ்ரீதரனின் விரதம் குலையவில்லை .ஆனால் அப்பெண்ணின் நோயும் தீராது என்றே தோன்றுகிறது . வரிக்கப்பட்ட எல்லா வேஷங்களுக்கும் பொருந்தி போக வேண்டியிருப்பதும் ஒரு சாபமே .
அனீஷ்கிருஷ்ணன் நாயர்
[முகநூலில்]
அன்புள்ள ஜெ,
யா தேவி கதையை அதன் கட்டமைப்பைப் பற்றி சிந்தனை செய்துகொண்டிருந்தேன். காலாகாலமாக இங்கே நடப்பது கண்ணகியா மாதவியா என்ற விவாதம். வேசியா தெய்வமா என்ற விவாதம். அதைத்தான் அந்தக்கதையில் முதலில் பார்த்தேன். ஆனால் முதல்பார்வைக்குப் பின்னர் தோன்றியது அந்த வழக்கமான விஷயத்தை அந்தக்கதை அட்ரஸ் செய்தாலும் அதை அழுத்தமாகத் தாண்டிச்செல்கிறது. ‘நீ வேசியே ஆனாலும்…’ என்று அந்தக்கதை சொல்லவரவில்லை. வேசியும் தெய்வம்தானே என்றும் சொல்லவரவில்லை. அது அந்த விஷயத்தை பொருட்படுத்தவே இல்லை.
அது சொல்லவருவது ஒரு பெண்ணின் பெர்சனாலிட்டி எப்படி நூறாக ஆயிரமாக பலரால் புனையப்பட்டு துய்க்கப்படுகிறது என்பதுதான். அது எல்லா பெண்களுக்கும் உள்ள விதிதான். சொல்லப்போனால் எல்லா மனிதர்களுக்கும் அது உண்டு. பெண்களுக்குத்தான் அது அவ்வளவுபெரிய பிரச்சினை. அவளால் அவளை தொகுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு நடுவே நான் யார் என அவள் கேட்கிறாள். நீ தேவி என்று ஒருவன் சொல்கிறான். அப்படியும் ஒருவன் சொல்லமுடியும் என்பதை அவள் உணர்கிறாள். அவ்வளவுதான் கதை.
அவள் ஏன் தேவி என்றால் தேவியைப்போல மாயாரூபமாக ஆகி அவள் உலகமெங்கும் பரவியிருக்கிறால். தேவிபோல இங்குள்ள எல்லா காமங்களையும் அவளே நிகழ்த்துகிறாள். அவள் எப்படி தன்னை உணர்வாள்? அந்த மானிஃபெஸ்டேஷன்கள் ஏதும் தன்னுடையது அல்ல தான் வேறு என்று அவள் உணர்ந்தால் சரி. அல்லது அப்படி உணரும்போது அவள் நான்யாஸ்தி சனாதனம் என்று உணர்ந்து சொல்லிக்கொள்வாளா?
ஆர்.சந்தானகிருஷ்ணன்