1981 வாக்கில் பூலான்தேவியின் ஒரு புகைப்படம் வெளியாகி நாளிதழ்களில் பிரபலமாகியது. அதுதான் அவருடைய முதல் புகைப்படம். அப்போது குமுதம் அரசு பதில்களில் பூலான்தேவி பற்றி ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த அரசு ‘அவருடைய புகைப்படம் வெளியாகும் வரை கொள்ளைராணி பூலான் தேவி என்று சொன்னபோது ஒரு கிளுகிளுப்பு இருந்தது. அழகான இளம்பெண் என நினைத்திருந்தேன். புகைப்படத்தில் களைத்த அவலட்சணமான பெண்ணை பார்த்ததும் ஆர்வம் போய்விட்டது’ என எழுதியிருந்தார்.
இன்று யோசிக்கையில் இந்தப்பதிலில் உள்ள சாதிமேட்டிமை, இனவெறிநோக்கு, ஆணாதிக்க நோக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கிய விடலைத்தனம் திகைப்பூட்டுகிறது. ஆனால் அது அன்று ஒரு எளிமையான நகைச்சுவையாகவே கொள்ளப்பட்டது. இந்த விடலைத்தனம் அன்றும் இன்றும் தமிழ் ஊடகங்களின் பொது இயல்பு. இன்று சமூக ஊடகங்களில் ஓங்கியிருப்பதும் இந்த மனநிலைதான்.அரசு பதில்களை எழுதிய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பியிடம் அந்தப்பதிலில் இருந்த கீழ்மையை எவரேனும் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. அன்று வேலைக்காரிகளையும் டைப்பிஸ்டுகளையும் நர்ஸுகளையும் பாலியல் பண்டங்களாக காட்டி இழிவுசெய்யும் ‘ஜோக்குகள்’ சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்தன.
பூலான்தேவியின் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்வது அவரை ஒரு ‘தாழ்ந்தசாதிப் பெண்ணுடல்’ மட்டுமே என அணுகும் ஆண்களைத்தான். அந்த ஆண்களால் ஆனது கிராமத்துச் சாதியக் கட்டமைப்பு, கிராமத்தலைமை, காவல்துறை, நீதிமன்றம், அரசு அனைத்தும். அன்றைய ஊடகங்களும் அதே மனநிலை கொண்டிருந்தன. அதைத்தான் அரசு பதில்கள் வெளிப்படுத்தின. ஆச்சரியமென்னவென்றால் பூலான் தேவி யின் மல்லா சாதியினரும் அதே மனநிலையைத்தான் கொண்டிருக்கிறார்கள். பூலான் தேவி அதற்கு எதிராக குழந்தைப்பருவம் முதலே போராடினார். தண்டிக்கப்பட்டார், இழிவுசெய்யப்பட்டார், பழிவாங்கினார், அறுதியாக அதற்கு பலியானார்.
இந்த நூல் பூலான் தேவி யின் வாழ்க்கையை அவரே சொல்வதுபோல அமைக்கப்பட்டது. பூலான் தேவியுடன் நடத்திய நீண்ட உரையாடல் வழியாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே இதற்கு பல எல்லைகள் உள்ளன. பூலான் தேவி உருவான சமூக- பொருளியல் பின்னணியை ஆசிரியர்கள் உருவாக்கவில்லை. கதைசொல்லும் பூலான் தேவிக்கு என்ன தெரியுமோ அதைத்தான் ஆசிரியர்கள் சொல்லமுடியும். ஒப்புநோக்க ராய் மாக்ஸமின் Outlaw– India’s Bandid Queen நூல் இன்னமும் மேலானது. ஆனால் விரிவான சமூகப் பொருளியல் சித்திரம் கொண்ட ஒரு நூலை இனிமேல்தான் எவராவது எழுதவேண்டும்
உத்தரப்பிரதேச, மத்தியப்பிரதேச கொள்ளையர்கள் இப்போது மறைந்து வரலாற்றின் பகுதியாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இதழாளர்களின் புனைவுகளும் நாட்டார்புனைவுகளுமே இன்று கிடைக்கின்றன. பொதுவாக அவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை பல்வேறுவகையில் இந்நிலத்தை ஆண்டிருந்த ஆட்சியாளர்களின் படையினராக இருந்த போர்ச்சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அதிகாரம் இழந்தனர். அவர்கள் அறிந்த தொழில் போரிடுதல் மட்டுமே. அவர்களில் ஒருசாரார் ஊர்க்காவல் மற்றும் வேளாண்மைக்குச் சென்றாலும் ஒருசாரார் கொள்ளையர் ஆயினர். இவர்கள் ஒரு பக்கம்
இன்னொருபக்கம் அன்றிருந்த நிலவுடைமைச் சாதியினரால், அன்றிருந்த கிராம அதிகார அமைப்பால் ஒடுக்கப்பட்ட எளியமக்களில் சிலர் பழிவாங்கும்பொருட்டு, நீதி மறுக்கப்பட்டமையால் சீற்றம்கொண்டு கொள்ளையர்களாக ஆனார்கள். அவர்களின் நோக்கம் கொள்ளை மட்டும் அல்ல, முதன்மையாக பழிவாங்குதல்தான். பூலான் தேவி அந்த வகையைச் சேர்ந்தவர். அவரை மணந்து கொள்ளைக்காரியாக ஆக்கும் விக்ரம் மல்லாவும் அவ்வகையானவரே.
பூலான் தேவியின் முதன்மை எதிரியான ஸ்ரீராம் டாக்கூர் முதல்வகையைச் சேர்ந்தவன். டாக்கூர் கொள்ளையர்கள் எளிதான செல்வம், கட்டற்ற வாழ்க்கை, பிறரிடம் அச்சத்தை ஊட்டுவதன் இன்பம், ஆகியவற்றுக்காக கொள்ளையர் ஆனவர்கள். இந்நூல் முழுக்க இவ்விரு கொள்ளையர்தரப்புகளும் ஒன்றோன்று போரிட்டும், தேவையானபோது இணைந்துகொண்டும் செயல்படுவதைக் காணமுடிகிறது. ஆனால் மக்களுக்கு குழப்பமே இல்லை. மல்லா சாதியினரான பூலான் தேவி அம்மக்களுக்கு துர்க்கையின் அவதாரம்தான். பூலான் தேவி அம்மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கவும் செய்கிறார். டாக்கூர்கள் எந்நிலையிலும் பூலான் தேவியை எதிரியாகவே காண்கிறார்கள்.
இந்நூல் பூலான் தேவியின் தன்வாக்குமூலம். ஆகவே ஒருசார்பானது. ஆனாலும் இதன் விவரிப்பில் ஒரு நல்ல வாசகன் கண்டடையச் சாத்தியமான சமூக நுண்சித்திரங்கள் ஏராளமாக உள்ளன. இந்நூல் காட்டும் யதார்த்தம் ஒன்றே. ஒரு கிராமத்தில் நிலம் டாக்கூர்கள் என்னும் ஷத்ரிய சாதியினரிடம் உள்ளது. ‘தலைவர்’ ‘ஆட்சியாளன்’ என்னும் பொருள் வரும் சொல் இது. இவர்களே ஊரின் பஞ்சாயத்துத் தலைவர்கள். காவல்துறையிலும் இவர்களே. அரசியலும் இவர்களிடமே.
இந்தக் காலகட்டத்தை பார்த்தால் அரசியலதிகாரமும் இவர்களிடமே இருந்ததைக் காண்கிறோம். சுதந்திரத்திற்குப் பின் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்லது ஷத்ரியர்கள்—என்.டி.திவாரி, வீர்பகதூர் சிங், ஸ்ரீபதி மிஸ்ரா, வி.பி.சிங், பகுகுணா, கமலாபதி திரிபாதி, திரிபுவன் நாராயண் சிங், சரண்சிங். 1989ல் முலாயம்சிங் யாதவ் பதவிக்கு வரும்வரை இதுதான் நிலைமை. [நடுவே ராம்நரேஷ் யாதவ் இரண்டு ஆண்டுகள் ஆண்டதை ஒரு அடிமையின் தற்காலிகப் பதவி என்றே கருதவேண்டும்] பூலான் தேவி நிகழ்த்திய புகழ்பெற்ற ஃபெமாய் படுகொலையின்போது முதல்வராக இருந்தவர் வி.பி.சிங். அவருடைய ஷத்ரிய சாதியினரின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி பதவி விலகினார். ஆனால் கொள்ளையர்களை ஒடுக்குவதாக வஞ்சினம் உரைத்தார்.
அதாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபின் கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் சமூக – அரசியல் -பொருளியல் அமைப்பு எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்திலேயே தேங்கிக்கிடந்தது. சுதந்திரம் கிடைத்ததுமே பழைய நிலப்பிரபுத்துவ சக்திகள் ஜனநாயக அரசியலைக் கையிலெடுத்தன, காங்கிரஸ் கட்சியை கைப்பற்றின. காங்கிரஸ் தலைமையும் உள்ளூரில் வெல்பவரிடமே அதிகாரத்தை அளித்தது. அது வசதியாகவும் இருந்தது. அந்த வெற்றி ஜனநாயகத்தை ஒடுக்கி வன்முறை வழியாக பெறப்பட்டது என்பதை அது கவனிக்கவில்லை. ஏனென்றால் உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பிரதமர் எவர் என்பதை தீர்மானிக்கும் மாநிலம்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தபோது தேசிய அளவில் காங்கிரஸ் மறையத் தொடங்கியது. அது ஏன் நிகழ்ந்தது என்பதை இந்நூலும் காட்டுகிறது. காங்கிரஸ் அங்கே கொண்டிருந்த அதிகாரம் பழைய நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஜனநாயக அதிகாரமாக வண்ணம் மாற்றிக்கொண்டதுதான். அடித்தள மக்களின் எழுச்சி அதை என்றாவது வீழ்த்தியே தீரும். அது நாற்பதாண்டுகள் நீடித்ததே ஆச்சரியம் – அதற்கு மத்திய அரசின் ஆதரவு இருந்தமையால்தான் அவ்வாறு நிகழ்ந்தது. யாதவர் – தலித் கூட்டமைப்பு ஷத்ரிய மேலாதிக்கத்தை ஒழித்தது. பின்னர் பிராமண- தலித் கூட்டமைப்பு வென்றது
ஆனால் உத்தரப்பிரதேசத்தின் ஜனநாயக மீட்சி இருபதாண்டுகள்கூட நீடிக்கவில்லை. பதவியை அடைந்த யாதவர்களும் தலித்துக்களும் ஜனநாயகத்தின் ஆற்றலைக்கொண்டு ஊழலால் நாட்டைச் சூறையாடினர், விளைவாக மீண்டும் பழைய ஷத்ரிய நிலப்பிரபுத்துவ சக்திகளிடமே அதிகாரம் சென்று சேர்ந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் தொழில்நுட்ப ரீதியான சிறிய மாற்றங்களை அடைகிறது – சமூகச்சூழல் மீண்டும் உறைந்துவிட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் நூற்றாண்டுகால உறைவில் இருந்து பூலான் தேவி வெடித்து எழுகிறார். இந்நூல் முழுக்க வரும் சித்திரம் நிலம் மீதும் பெண் உடல்மீதும் நடக்கும் தொடர் வன்முறை. நிலப்பிரபு நிலங்களை கவர்ந்துகொள்கிறார். ஊர்ப்பெண்களை கற்பழித்துக்கொண்டே இருக்கிறார். எவருக்கும் மீட்பில்லை. மல்லா சாதியினருக்குள்ளேயே ஒருவருக்கொருவர் நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். பெண்களை கவர்ந்துசெல்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், விலைக்கு வாங்குகிறார்கள், சூறையாடுகிறார்கள். பிறந்த நாள் முதல் பெண் தன் கௌரவத்தைக் காக்க ஒளிந்து ஒளிந்து வாழவேண்டியிருக்கிறது. பூலான்தேவியின் கதை பெண்ணின் விடுதலைக்கான போர் மட்டுமல்ல நிலத்தின் போரும்கூட.
இந்நூல் இன்று நகர்சார்ந்த பல்கலைகளில் இருந்து அன்னியநிதி பெற்று ஆராய்ச்சிசெய்யும் ‘அறிஞர்கள்’ மற்றும் இதழாளர்கள் உருவாக்கும் எளிமையான ஒற்றைப்படையான சித்திரங்களுக்கு எதிராக நிலைகொள்ளும் செய்திகள் நிறைந்தது. இந்த ‘அறிஞர்கள்’ உருவாக்கும் சித்திரங்கள் மிகப்பெரும்பாலும் கிறித்தவ மதமாற்ற நோக்கம் கொண்ட அன்னிய அமைப்புக்களின் நிதியுதவியால் நிகழ்பவை, அவர்களின் செயல்திட்டங்களை ஒட்டியவை. ஆனால் இவையே மிக மிக ‘அதிகாரபூர்வ்மான’ ஆய்வுகளாக முன்வைக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளன. இவை இந்தியா முழுக்க ஒற்றைப்படையான ஒரு கொள்கையை போட்டுப்பார்க்கின்றன, ஒரே சித்திரத்தை வரைகின்றன.
இவை இந்த மொத்த ஒடுக்குமுறைக்கும் பிராமணர்களை பொறுப்பேற்கச் செய்கின்றன, அதனூடாக பொறுப்பை இந்துமதம் நோக்கி தள்ளுகின்றன. ஆனால் இந்நூலில் டாக்கூர்களின் வன்முறைக்கு ஆளாகிறவர்கள், அவர்களின் அதிகாரத்திற்குள் சுருண்டிருப்பவர்கள் தலித்துக்கள், யாதவர்கள் மட்டும் அல்ல: கிராமத்துப் பிராமணர்களும்தான். பிராமணப் பெண்களை தூக்கிச் சென்று கற்பழிப்பது நடந்தபடியே இருக்கிறது – அவர்கள் சிவந்ததோல் கொண்டவர்கள் என்பதனால் விரும்பப்படுகிறார்கள். அதிகாரிகளுக்கு உள்ளூர் பிராமணப்பெண் [கோதுமைக் கதிர்போன்ற நிறம்கொண்டவள்] பரிசாக கொண்டுவந்து கொடுக்கப்படுகிறாள்.
சில பிராமணர்கள் பணத்தாசைகொண்டவர்களாக, ஆதிக்கத்தின் கையாள்களாக இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அஞ்சித்தான் இருக்கிறார்கள். பூலான்தேவி சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்படவிருக்கையில் டாக்கூர்களிடமிருந்து அவரை விடுவித்து அதன்விளைவாக தன் உயிரை அளிக்கும் முதிய பிராமணரின் கண்ணீர் நிறைந்த முகம் இந்நூலின் முக்கியமான தருணங்களில் ஒன்று. “பூலன், விடாதே பழிவாங்கு” என அவர்தான் சொல்கிறார். உண்மையில் ஃபெமாய் படுகொலைக்கு அவருடைய ஆணையே காரணம். பிராமணர்கள் ஊர்களை விட்டு வெளியேறி நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். நகரங்களில் வழக்கறிஞர்களாக திகழும் பிராமணர்கள் மல்லாக்களுக்காக வாதாடுகிறார்கள். ராஜேந்திர சதுர்வேதி என்னும் பிராமணரைத்தான் பூலான் தேவி நம்பி சரண் அடைகிறார்.
பூலான் தேவி உட்பட மல்லாக்களுக்கு நாட்டார்த் தெய்வங்களும் துர்க்கையும் ஆற்றலை அளிக்கின்றன. போராட்ட விசையை முழுக்க பூலான் தேவி துர்க்கையிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார். சிறையிலும் துர்க்கையை வழிபடுகிறார். துர்க்கை கனவில் வந்து பலதருணங்களில் பூலான் தேவியை மீட்கிறார். ஆனால் விடுதலையாகி பாராளுமன்ற உறுப்பினர் ஆனபின் 1995ல் பூலான் தேவி தன் கணவருடன் பௌத்த மதத்தை தழுவினார். அம்பேத்கர் பௌத்தத்தை தழுவிய தீக்ஷாபூமியில். அதுவும் ஓர் இயல்பான பரிணாமம் என்றே படுகிறது.
இந்நூல் நுண்சித்தரிப்புகள் குறைவானது. நிகழ்ச்சிகளே மிகுதி. அவையும் கதைத்தலைவியால் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. ஆயினும் தொடர்ச்சியாக அன்றைய வாழ்க்கையின் குரூரமான ஒடுக்குமுறை, அதிலிருந்து எழும் வஞ்சம், எல்லாநிலையிலும் எளிய மக்களே பாதிக்கப்படுதல் என விரிவான சித்திரம் உருவாகி வருகிறது.
ஒரு காட்சி, ஓர் அழகிய சிறுகதை போல் உருவகத் தன்மை கொண்டது. பூலான் தேவியும் குழுவும் ஜாலன் சமவெளியில் ஜகமன்பூரில் ஓர் அரண்மனையைக் கொள்ளையிடுகிறார்கள். மிகமிக ஆடம்பரமான மாளிகை. உள்ளூர் ஆட்சியாளர் அவர். அங்கே செல்வம் குவிந்திருக்கிறது. ஆனால் எதையுமே கொண்டுசெல்ல முடியாது. எடைமிக்க பொருட்கள் அனைத்துமே. கொள்ளையர்கள் அந்த அரண்மனையில் கட்டிலில் படுத்து உருள்கிறார்கள், ஆடைகளை அள்ளி அள்ளி மேலே போட்டுக்கொள்கிறார்கள், வெள்ளிப்பொருட்கள் மேல் ஏறி குரங்குகள் போல குதிக்கிறார்கள். அதன்பின் வெறும்கையுடன் திரும்பிச் செல்கிறார்கள். வழியில் வாழ்த்திக் கூச்சலிட்ட மக்களுக்கு ஒருவருக்கொருவர் கடன் வாங்கி பணத்தை விட்டெறிந்தபடிச் செல்கிறார்கள்.
இந்த கொள்ளைவாழ்க்கை முழுக்கவே நிறைந்து வற்றாது ஒழுகும் யமுனையின் கரையில் நிகழ்கிறது, நீரில்லா பாலையில் அல்ல. நிலமல்ல நிலத்தை ஆளும் மனிதர்களும் அவர்களின் அமைப்புகளுமே அந்தக் கொடும் வறுமையை உருவாக்கின. பூலான்தேவி சரண் அடைந்து முப்பத்தேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. கொல்லப்பட்டு இருபதாண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும்கூட உத்தரப்பிரதேசம் பெரிதாக மாறிவிடவில்லை. இன்றுள்ள ஒரே மாறுதல் உத்தரப்பிரதேச மக்கள் இன்று நிலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. கைவிட்டுவிட்டு நாடெங்கும் கூலிவேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.