நோய்:ஒருகடிதம்

என் மரியாதைக்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு ,
  
என் பெயர் அ- ,வயது 25 .  உங்கள் வாசகன் நான். உங்கள் பத்திகளை இணையத்தில்  தொடர்ந்து  படித்து வருகிறேன் , தற்போது சென்னை வாசி சொந்த ஊர் நெல்லை மாவட்டம்.  BTECH படித்து இரண்டு வருடங்கள் வேலை இல்லாமல் இருந்து கடந்த நான்கு மாதமாக    ஒரு  சின்ன  software company இல் வேலை கிடைத்து உள்ளது..

இலக்கியம் சார்ந்த கடிதம் அல்ல இது,என்னுடைய தனிப்பட்ட உள சிக்கல் காரணமாக இந்த கடிதத்தை அனுப்புகிறேன் .அதனால் பிழை இருந்தால் மன்னிக்கவும்..

எனக்கு பிடித்த புத்தகங்களை படித்து கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய் கொண்டு இருந்த நான்கு மாதம் முன்பு,இருமல் அதிகமாக இருந்ததால் சென்னையில்  உள்ள ஒரு  ஒரு நுரையீரல் நிபுணரிடம் பரிசோதித்தேன் (5000 ரூபாய்க்கு மேல் செலவானது )
Xray,CT scan போன்றவற்றை எடுத்தபோது  bronchiectasis
என்னும் நுரையீரல் நோய் இருப்பது தெரிய வந்தது ….

இந்த நோயை பற்றி டாக்டர்கள் இதை மருந்துகளால் முற்றிலும்  குண படுத்த முடியாது என்றும் மருந்துகளால் ஓர் அளவு கட்டு படுத்தவே முடியும் என்றும் சொன்னார்கள் . மேலும் இந்த இருமல் நிற்கவே செய்யாது,என்றும் வாழ்க்கை முழுவதும் Anti-Biotic எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி ஒரு பொதி போல் மாத்திரைகளை கட்டி  தந்தார்கள்.

இந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அது ஒரு துர் கனவு போல் தான் இன்று வரை இருந்து வருகிறது,நோய் உண்டாக்கிய பயம் என் ரத்தத்தில் கலந்து விட்டது ….
மனமே என்னை மேலும் நலிவடைய  செய்துவிடும் லிருக்கிறது …. இதனால் நான் ஏன் சொந்த ஊருக்கு திரும்பி திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  விசாரித்த போது,  நீங்கள் கொண்டிருப்பது மிகை கற்பனை என்றும்,பயப்பட தேவை இல்லை எனவும் சொன்னார்கள்.Anti-Biotic வாழ்க்கை முழுவதும், எடுப்பது அவசியம் இல்லாதது என்றும்,அது மிகுந்த பின் விளைவுகளை தரும் என்றும் சொன்னார்கள்.

என் நண்பர்கள் அறிவுரை சொல்லும் போது மூர்க்கமான வெறுப்பு அவர்கள் மேலும்,என் மேலும் ஏற்பட்டது.  என் தந்தை படிக்கா விட்டாலும் உங்கள் தந்தையை போல அன்பு கொண்டவர் …
அவர் எனக்கு  ஒரு நண்பர் போல.  அவரிடம் மட்டும் என் நிலையை பற்றி சொல்லி அழுது இருக்கிறேன்,அப்போது அவர் “உனக்கு வயசு காணாது டா … எங்க வயசில் எவ்வளோவோ பார்த்தாச்சு ” டாக்டர் என்ன கடவுளா?இது வரும்னு நீ நெனச்சியா வந்திடுச்சு,அதே போல  ஆண்டவன் நெனச்சா நொடில போய்ரும்டா! ” என்பார் உனக்கு ஏதாவதுன்னா எங்க உள் உணர்வு சொல்லும் டா எங்க ரெண்டு பேருக்கும்
துளி கூட அது இல்ல ,நீ தைரியமா இரு டா என்று சிரிப்பார்.ஒரு வகையில் பேரு பெற்றவன் நான் .

அப்பா என்னிடம் ” நீ வீட்டிலயே இருந்தா இதை நினைச்சே வம்பா போயிருவே கிளம்பு ,சென்னைக்கு போ இந்த தடவை வேலை கிடைக்கும் என்றார் “கிளம்பி வந்தேன் வேலையும் கிடைத்தது …

இப்போது இருமல் சுத்தமாக நின்றுவிட்டது, ஆனால் முதுகு மற்றும் மார்பு வலி இருந்து கொண்டே இருக்கிறது, ஒரு நண்பர் மூலமாய் திருவனந்தபுரம்மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கிறேன் அது sterroid என்பதால் முதுகு மற்றும் மார்பு வலிஇருந்து கொண்டே ருக்கிறது .அதனால் தற்போது மாத்திரைகளை முழுமையாக நிறுத்திவைத்து விட்டு உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் நிலை  ஓரளவிற்கு பரவில்லை ..  ஆனால்  இன்னும் மூச்சை உள்ளே இழுத்தால் Painful Inhaling ஆகத்தான் இருக்கிறது

வலி கிளம்பும் போதெல்லாம் பயம் சூழ்ந்து கொள்கிறது,  என்னால் நிம்மதி கொண்டு வேலை செய்ய முடியவில்லை …. பயத்தை போக்க புத்தகத்தின் துணை யை தவிர வேறு எனக்கு ழிஇல்லை .இந்த நோய் என்னை மன அளவிலும் உடல் அளவிலும் மேலும் தளர வைத்துள்ளது ….இவ்வளவிற்கும் இந்த நோய் புற்று நோயை போல மிக கொடிய நோய் அல்ல  என்பதையும்  அறிவேன் …..

நான் தத்துவத்தில் சிறிது ஆர்வம் உள்ளவன்,ஓஷோ ,ஜக்கி வாசுதேவ் படித்திருக்கிறேன் எனவே நான் செய்த கர்மா தான் இதற்கு காரணம் எனபது உண்மைஎனில் அந்த கர்மாவை எப்படி கரைப்பது?கர்மாவை பற்றி நினைத்து மேலும் கர்மாவின் சுழல்
 புதைகுழிக்குள் சிக்கி கொள்கிறேனா ??

நீங்கள்  உங்கள் காலில் மண் வெட்டி வெட்டிய போது எழுதிய பத்தியை வாசித்து இருக்கிறேன் …. “சிவம்”  என்ற  உக்கிரமான உண்மையின் தரிசனத்தை சிறிது  அனுபவித்து இருக்கிறேன் .
உங்கள் தெய்வ மிருகம் படித்த போது அழுதே விட்டேன் ..
இயற்கை மருத்துவம்,மாக்ரோ பயாட்டிகஸ் ,மேயோ கிளினிக்  முற்றிலும் உண்மை …

உங்களுக்கு இந்த கடிதம் அனுப்ப காரணம்   நீங்கள் அனுபவித்த துன்பத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் இன்னும் அனுபவிக்க
வில்லை,உங்கள் பெற்றோரின்,  நண்பனின் மரணங்கள் தந்த மன பேதளிப்பே இன்று மிக உக்கிரமான படைபூக்கமாக உங்களிடம் வெளிபடுகிறது

வாசிப்தைதவிர எனக்கு வேறு பொழுதுபோக்கு யாது ….அதனால், வாசிப்பின் மூலமே மனதிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன் …மேலும் இந்த பேதளிப்பை முற்றிலுமாக இலக்கியம் ,தத்துவம், ஆன்மீகம் நோக்கி மடை மாற்றம் செய்ய விரும்பிகிறேன் ….

நீங்கள் அறிந்த வரையில் நான் எந்த மாதிரி சிகிழ்ச்சை எடுக்க வேண்டும் ஆயுர்வேதம்,இயற்க்கை வைத்தியம் ,யூனானி போன்ற வற்றில் இதற்கான மருந்துகள் உண்டா உண்டு எனில் அது மிகுந்த  எனக்கு உள  ஆறுதல் அளிக்கும்

உங்களுக்கு எதற்காக இந்த கடிதம் எழுதினேன் என்று துல்லியமாக
அறிந்தேலேன்..எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்,அதிக பிரசிங்கிதனம் இருந்தால் மன்னிக்கவும் …….

என் மன நிலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை கூச்சமும் துக்கமும் தான் காரணம் …ஏனோ உங்களிடம் சொல்ல ன்றியது. பிரபஞ்ச சத்தியத்தை  பற்றி எழுதுபவர் என்பதால் தானோ என்னவோ ?

அப்பாவிடம் மட்டுமே சொல்லுவதற்கென்று சில அந்தரங்கமான வலி இருக்கிறது …அது அப்பா மட்டுமே உணரும் மகனின் வலி …
நீங்களும் ஒரு  வகையில் எனக்கு   தகப்பன் தானே  
                           

அன்பன்
-அ –
அன்புள்ள அ-

உங்கள் தனிப்பட்ட கடிதத்தையும் என் பதிலையும் பிரசுரிப்பதற்கு மன்னியுங்கள் . இத்தகைய உரையாடல்கள் வெறுமே கவனிப்பவர்களில் கணிசமானவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கின்றன என்பதைக் கண்டிருக்கிறேன். அதாவது நீங்கள் எழுதிவிட்டீர்கள். எழுதாதவர்களே ஏராளம்.

இத்தகைய தருணங்களில் ஒருவருடைய உள்ளிருந்தே வெளியேறும் வழிக்கான வாசல் திறக்கமுடியும். அதுவே என் அனுபவம். வெறுமே சொல்லப்படும் கருத்துக்கள், அறிவுரைகள், அலசல்களினால் எந்தப்பயனும் இல்லை. அவை நமக்குச் சொற்கள் மட்டுமே. ஆகவே நான் உங்களிடம் நான் படித்தவற்றையோ சிந்தித்தவற்றையோ சார்ந்து ஏதும் சொல்லப்போவதில்லை. நான் கண்டதையும் அனுபவித்ததையும் சார்ந்தே சொல்லப்போகிறேன்.

நான் மிக இளம்வயதில் உடலால் நலிவுற்று உடல்நலச்சிக்கல்கள் பல வழியாகக் கடந்துசென்றவன். அதனாலேயே உடலை கூர்ந்து அவதானிக்கவும் உடல்நலச்சிக்கல்களை நானே கையாளவும் எப்போதும் கவனமாக இருக்கிறேன். உடலை பொருட்படுத்தாமலிருக்கும் நண்பர்களிடம் அது நம் கருவி, அதைப் பேணாவிடில் நாம் நம்முடையதென நினைக்கும் பல விஷயங்களை இழக்க வேண்டிருக்கும் என சொல்லி வருகிறேன்.

ஆனால் நாம் நம் உடல்தான் என்பது ஓர் ஆரம்ப கட்ட எளிமையான உணர்வேயாகும். அந்த உணர்வை ஏதேனும் ஒரு தளத்தில் தாண்டிச்செல்லாதவர்கள் இப்பிரபஞ்சம் வழங்கும் அளவில்லாத இன்பங்களை இழக்கிறார்கள் என்றே சொல்வேன். உடலே நான் என்ற உணர்வு அடிப்படையான விலங்குணர்வு. நான் என்று சொல்லி குட்டித்தொப்பையைச் சுட்டிக்காட்டும் சின்னக்குழந்தைப் பிராயத்தில் இருந்தே அந்த உணர்வு உருவாகி வந்திருக்கிறது. அதிலிருந்து எளிதில் விடுபட இயலாது. முற்றிலும் விடுபடுதல் சாத்தியமே அல்ல. ஆனால் அந்த விடுபடல் நிகழ்ந்தாகவேண்டும்.

எம்.முகுந்தன் எழுதிய மய்யழி நதியின் கரையில் என்ற நாவலில்[மலையாளம்] ஒரு அபூர்வமான இடம் வரும். மாஹியின் சுதந்திரப்போராட்ட்டத்தைப் பற்றிய நாவல் அது. அதில் வரும் ராகவன் மாஸ்டர் என்ற போராளி பிறப்பிலேயே கடுமையான நோயாளி. ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்தவர். அவரது தாயும் தந்தையும் அவரை எப்போதுமே மரணப்படுக்கையில் வைத்திருக்கிறார்கள். ஒருநாள் அவர் நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வந்து வெளியே  தென்னைமரத்தின் அடியில் அமர்கிறார். வானத்தை ஏறிட்டுப்பார்க்கிறார். அங்கே மின்னிக்கொண்டிருக்கும் ஒற்றை நட்சத்திரம். வான்வெளியின் நினைப்புக்கெட்டாத தூரத்தில் அது ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. கோடானுகோடி வருடங்களாக அது மின்னிக்கோண்டிருக்கிறது. மனிதன் அந்த காலவெளி முன்னால் ஒரு சிறு கொப்புளம் மட்டுமே.

ராகவன் மாஸ்டருக்கு அந்த நிலையாமை உனர்வு நேர்மாறாக ஒரு மன எழுச்சியை அளிக்கிறது. நான் இருக்கிறேன் என்ற உணர்வு. நாளை இருப்பேனா என்பதல்ல,  இப்போது இருக்கிறேன் என்பது. இந்தக்கணம் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது. அது எத்தனை மகத்தான விஷயம்! அந்த அற்புதமான இருத்தல் உணர்வால் மனம் கொந்தளிக்கப்பட்டு அவர் வீட்டுக்குள் செல்கிறார். ஒரு கூடை நிறைய பொற்காசுகள் கிடைத்தது போல. அவற்ரைக்கொண்டு என்னென்னவோ செய்யலாம். செய்து தீராத விஷயங்கள் கண்முன் இருந்தன.

அப்படித்தான் மாஸ்டர் மாகியின் சுதந்திரப்போராட்ட முன்னோடியானார். எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்ற உணர்வே அவரை  அசாதாரணமானவராக ஆக்கியது. எந்த விஷயத்துக்காகவும் தயங்கி நிற்க நேரமில்லை. ஒரு கணம் கூட வீணடிப்பதற்காக இல்லை. அந்த ஆவேசம் அவரை பெரும் புரட்சியாளர் ஆக்கியது

ஒரு வெறும் புனைவு அல்ல இது. இதனுடன் ஒப்பிடத்தக்க இரண்டு முன்னுதாரணங்களாவது நம் முன் உள்ளன. ஒன்று சே குவேரா. கடுமையான நுரையீரல் நோயால் வாழ்நாள் முழுக்க திணறிக்கொண்டிருந்தவர் அவர். இரண்டு, எம்.முகுந்தனுக்கு முன்னுதாரணமாக இருந்த தோழர்.பி.கிருஷ்ணபிள்ளை. அவருக்கு குணப்படாத காச நோய் இருந்தது. அந்த நோய்களில் இருந்தே அவர்கள் குன்றாத ஊக்கத்தைப் பெற்றார்கள்.

சிறந்த இசைக்கருவி மேலான இசைக்கு அவசியம். ஆனால் இசை என்பது ஒருபோதும் இசைக்கருவி அல்ல. அதை மீட்டுபவனின் ஆத்மாவே . இசைக்கலைஞன் மேதை என்றால்  எந்தக் கருவியும் இசைக்கருவியே. உடலை ஓம்ப வேண்டும். ஆனால் உடலாக உணரக்கூடாது. உடலாக இருக்கக் கூடாது. உடலில் மட்டுமே வாழக்கூடாது. இதுவே நான் என் வாழ்நாளில் கண்டடைந்தது.

உங்கள் உடல் உபாதை என்பது மிகச் சாதாரணமானதுதான். அது ஒன்றும் உங்கள் வாழ்நாளை நீங்கள் எண்ணிச்செலவிடச்செய்யும் ஒன்று அல்ல. அப்படியானால் ஏன் உங்களுக்கு இந்த பீதி ஏற்படுகிறது? அதை நீங்கள் சற்றே புறவயமாக சிந்தனைசெய்து பாருங்கள். நீங்கள் உங்கள் உடலை முடிவில்லாத சாத்தியங்கள் கொண்டதாக, அழிவில்லாததாக கற்பனைசெய்துகொண்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்கள் வயது இருபத்தைந்துக்குள் என்றீர்கள். அந்த வயதில் அப்படி நினைக்காதவர்களே இல்லை. அந்தவயதுக்குரிய மாயை அது.

நீங்கள் நாற்பதைக் கடந்தால் உடல் என்பது மிக மிக எல்லைக்குட்பட்டது, நாள்தோறும் அழிந்துகொண்டிருப்பது என்பதை உணர முடியும்.  அப்போது இப்போது நீங்கள் அடைந்த அதிர்ச்சி உருவாகாது. இப்போது உங்களுக்குள் இருந்துகொண்டு கடைசி வரை தொடரக்கூடிய ஒரு நோய் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நாற்பது வயது தாண்டிய அனைவருக்கும் அப்படி  ஏதாவது ஒரு நோய் மருத்துவர்களால் சொல்லப்பட்டுவிட்டிருக்கும். இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர்கள் வாழ்வதற்குக் கற்றுக்கொள்வார்கள்.

இப்போது நீங்கள் உங்கள் உடலின் ஒரு எல்லையை உணர்ந்துவிட்டிருக்கிறீர்கள் அவ்வளவுதான். இனி எல்லையில்லாத வாழ்க்கைச் சாத்தியங்களைப்பற்றி முதிரா இளமைக்கே உரிய முறையில் பகற்கனவுகள் காண்பதை விட்டுவிட்டு  உங்களுக்கு அளிக்கப்பட்ட அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு ஒரு வாழ்க்கையை அடைவதைப்பற்றித் திட்டமிடுங்கள். எல்லா வாழ்க்கையும் அப்படிப்பட்ட எல்லையால் வகுக்கப்பட்டதே. எந்தச் சிறிய எல்லைக்குள்ளும் முழுமையான நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிடமுடியும்.

இனி உங்களால் ஒருவேளை இமயமலை ஏறி கங்கோத்ரியைப் பாக்க முடியாமல் போகலாம். ஆனால் நள்ளிரவில் தீடிரென்று வரும் இளம் காற்றில் தென்னை ஓலைகள் ஒலியெழுப்புவதைக் கேட்கும்போது நான் இப்போது உணரும் இந்த அற்புதமான மனஎழுச்சியை உணர்வதற்கு என்ன தடை? நீங்கள் நூறு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டமுடியாமல் போகலாம். ஆனால் ஏன் தியாகராஜ கீர்த்தனை ஒன்றைக்கேடு மெய்மறந்து  அமர்ந்திருக்க முடியாது?

இயற்கையில் கலைகளில் சிந்தனைகளில் ஆழத்தெரிந்த மனிதனுக்கு ஒருபோதும் ஒரு வாழ்வும் வீணல்ல. ஒருபோதும் நாட்கள் துயரத்தால் செயலிழப்பதுமில்லை. அப்படி உங்களால் ஆழத்தெரியவில்லை என்றால் அது அப்படி ஆழத்தெரியாததன் குறைபாடே ஒழிய அதற்கு உடல்நிலை காரணமில்லை. ‘நான் கடவுள்’ படத்தில் கிருஷ்ண்மூர்த்தி பாகவதர் என்ற இசைக்கலைஞர் நடித்திருக்கிறார். இரு கைகளும் இரு கால்களும் கிடையாது. வெறும் உடல் மீது தலைதான். நன்றாக பாடுவார். ”கஷடமா இருக்கா சார்?” என்று கேட்டபோது ”இல்லசார்..அதான் பாடுறேனே” என்றாராம். கலைகளும் சிந்தனையும் இயற்கையும் நிரப்பிக்கொள்ளாத இடைவெளி என ஏதும் மானுட வாழ்க்கையில் இல்லை.

ஆனால் பலசமயம் நான் மனிதர்கள் தங்கள் நுண்ணுணர்வின்மைக்கு, சுயமைய நோக்குக்கு, சோம்பலுக்கு உடலையும் சூழலையும் பொறுப்பாக்குவதைக் கண்டு வருகிறேன். எடுத்த எடுப்பிலேயே உடல்நலம் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ”என்ன படிச்சீங்க?” ”என்னத்த படிக்கிறது? நாலுவாரமா வயிறே சரியில்ல.. ஒரே பொருமல்… ஆசிட்டு….. ஒண்ணுமே புடிக்கலை போங்க” . நீங்கள் உங்கள் உடல்நலக்குறைவை ஒரு மாபெரும் சாக்காக பயன்படுத்துகிறீர்களா என நீங்கள்தான் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

மனிதன் முன் அவனுக்குச் சாத்தியமான இன்பங்கள் முடிவிலாது கொட்டிக்கிடக்கின்றன. வாழ்நாளோ அனுதினமும் சுருங்கிக்கொண்டே இருக்கும் ஒரு மாயம். இப்போது நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. சற்று கற்பனை செய்துதான் புரிந்துகொள்ள முடியும். இளமையில் அளவில்லாத காலம் கையில் இருப்பதுபோல தோன்றும். செய்வதற்கு ஏதுமில்லாமல் காலம் கையிலிருந்து நழுவி நழுவி வீணாகும். நடுவயதில் அறிவோம் காலம் எத்தனை வேகமாகச் செல்கிறதென. என்னசெய்வதென சரியாக திட்டமிட்டு முடிப்பதற்குள் பத்தி இருபது என வருடங்கள் ஓடிச்சென்றுவிடும்.

நாஞ்சில்நாடன் சொன்னார் ஒருமுறை எதைப்படிக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்குள் பத்துவருடம் போனது, எடுத்து வைப்பதற்குள் இன்னொரு பத்து வருடம் என. என் நூலகத்து நூல்களைப் பார்க்கும்போது ஏக்கம் நெஞ்சை நிரப்புகிறது. நான் இன்னும் படிக்காத நூல்களே அவற்றில் அதிகம். மேலும் மேலும் அவை வந்து நிரம்பிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு நண்பர் கிட்டத்தட்ட 8000 பாடல்களை பதிவுசெய்து அனுப்பிவைத்தார். அவற்றை ஒருமுறை கேட்பதற்குள் பல வருடங்கள் என்னைக் கடந்துசென்றுவிடும். மனிதவாழ்க்கையில் கவலையே கூடாது, ஏனென்றால் கவலைப்படுவதற்கு நேரமில்லை.

இப்போது உங்களிடம் மிக அபாயமான ஒரு நோய் இருக்கிறது. அந்த நுரையீரல் பிரச்சினையைச் சொல்லவில்லை. அது எளிய உடல்நோய்தான். அது தேருக்கு இருக்கும் பழுது மட்டுமே. தேராளிக்கு இருக்கும் நோயைப்பற்றிச் சொல்கிறேன். நோயை நினைத்துக்கோண்டிருப்பது, நோயாளியாகவே எப்போதும் உணர்வது என்ற மனநிலையே மாபெரும் நோய். அது சத்தமில்லாமல் உங்கள் வாழ்க்கையை உறிஞ்சி உண்டு உங்களை சக்கையாக துப்பிவிடும். அப்படி அழிந்த பலரை நான் அறிவேன். அந்த மனநிலையில் இருந்து வெளிவர உங்களால் மட்டுமே முடியும். அது நோய் என்றும் அதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றும் எண்ணினால் மட்டுமே போதுமானது. அவ்வெண்ணத்தை ஒவ்வொரு கணமும் மனதில் ஓட்டிக்கொண்டால், அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், மெல்லமெல்ல அது சாத்தியமாகும்.

அதற்கு நேர்மாறான ஒரு வழி உள்ளது. அது தன்னிரக்கத்தின் பாதை. அது மிகமிக இன்பமானது. நம் ரத்தம்போல நமக்கே சுவையாக இருப்பது வேறொன்றில்லை என்பதை அப்போது நாம் அறிவோம். தனிமையையும் தன்னிரக்கத்தையும் இணைத்துக்கொண்டால் போதும் விசித்திரமான பகற்கனவுகளில் அலையலாம். மனம் இரங்கி ஏங்கி விம்மி அழுவதன் இனிமையை அனுபவிக்கலாம். நோயும் பேரிழப்புகளும் நமக்களிக்கும் பெரிய சாபமே இந்த தன்னிரக்கம்தான். நானும் அந்த மனநிலையை அடைந்து விரைவிலேயே அதைத் தாண்டிவந்தவன். அந்த இனிமை மிகமிகப்போலியானது. அது நம் உடலை நாமே சுவைத்து தின்று சாவதுபோன்றது.

அந்த மனநிலையில் இருந்து முற்றிலுமாக விடுபட ஒரே வழி நம்மை அழுத்தும் கெட்ட கனவில் இருந்து எப்படி நாம் விடுபடுகிறோமோ அந்த வழிதான். ஒரே உதறலாக உதறி எழுந்துவிடுதல். வேறு வழி இல்லை. தன்னிரக்கம் மனிதமனம் கொள்ளும் கீழ்மைகளில் ஒன்று. ஞானம், கற்பனை, ஆளுமைத்திறன் அனைத்தையும் இல்லாமலாக்கிவிடக்கூடியது அது.

கடைசியாக ஒன்று உண்டு. மனிதனின் வாழ்க்கையின் நிறைவும் மகிழ்ச்சியும் படைப்பூக்கத்தில்தான் உள்ளது. நான் இதைச்செய்தேன் என நாம் உணரும் நிலையிலேயே நாம் என்ற உணர்வின் முழுமையை அடைகிறோம். ஏதாவது ஒரு தளத்தில் எதையாவது ஒன்றை நிகழ்த்துபவனே மகிழ்ச்சியானவன். படைப்பூக்கத்தின் நிலையில் நாம் சுமந்துகொண்டிருக்கும் நம்மை இழக்கிறோம். நம்முள் இருந்து நமது எல்லா சாத்தியங்களும் வெளிவருகின்றன. நாம் நம்மை மீண்டும் மீண்டும் கண்டடைகிறோம். நம்மை நாம் தொடர்ந்து  உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

மானுட உழைப்பு என்பது பொருள் பொதிந்ததாக ஆவது படைப்பூக்கத்தின் நிலையிலேயே. நீங்கள் எதில் சிறந்தவர், எந்த தளத்தில் உங்கள் படைப்பூக்கம் வெளிப்படுகிறது என்று கண்டடைவது மிகமிக இன்றியமையாதது. அப்போது நீங்கள் அறிவீர்கள், உங்கள் உடல் அதற்கேற்ப மாறுவதை. அப்போது உங்களுக்கு உடலைப்பற்றி கவலைபப்ட நேரமிருக்காது.

கடைசியாக ஒன்று, ஒருபோதும் உங்கள் நோயின் மனதின் சுமைகளை அப்பா அல்லது பிறர் மீது சுமத்தாதீர்கள். அது ஒரு தார்மீகமான காரியம் அல்ல. எல்லா உயிர்களும் மண்ணில் தனிமையில்தான் வாழ்கின்றன. தனிமையில்தான் மடிகின்றன. இந்த வாழ்க்கைச்சூழலில் நாம் ஆறுதலையும் உதவியையும் பிறரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நம் துயரங்களில் பிறரை பங்காளிகள் ஆக்கக் கூடாது. உங்கள் அப்பாவை விட்டுவிடுங்கள். அவரிடம் சொல்ல வேண்டியவற்றைப் பற்றி மட்டுமே சொல்லுங்கள். அவரை துயரப்படுத்தும் விஷயங்களை விட்டுவிடுங்கள். அது உங்கள் கடமை.

நீங்கள் உங்களை அனுதாபத்துடன் பார்க்காத உங்களை சமமாக மட்டுமே காணக்கூடிய நண்பர்களிடம் அல்லது பிறரிடமே பேசவேண்டும். அல்லது நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அப்படி பேச வேண்டியவற்றை உடனே பேசிவிடுங்கள். ஒருபோதும் ஒருபோதும் தீராத மன உரையாடலுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

கர்மா என்பதெல்லாம் ஊகங்களே. வற்றைப்பற்றி ஒரு நெருக்கடியில் சிந்தனைசெய்வதில் எந்த பயனும் இல்லை. மண்மீது கோடானுகோடி உயிர்கள் பிறந்து வாழ்ந்து மறைகின்றன.  இந்தச் சுழற்சியின் காரண காரியம் என்பது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அதற்காக மனிதன் உருவாக்கிய ஒரு கோட்பாடுதான் கர்மம் என்பது. அது உண்மையானாலும் பொய்யானாலும் நம் வாழ்க்கையை அது மாற்றப்போவதில்லை. இந்த வாழ்க்கையில் நம் முன் உள்ளது நம்மைச்சூழ்ந்த இயற்கையும் நம் உடலும் மனமும் ஓடிச்செல்லும் காலமும் மட்டுமே.

உயிர் என்றால் அதற்கு நோயும் மரணமும் உண்டு. மனிதனும் அவற்றில் ஒன்றுதான். வலி பயம் குழப்பம் துயரம் ஆகியவை அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. ஆனால் இன்பம் மட்டும் மனிதனுக்கு அதிகம். அவனுடைய கற்பனை அவனை எங்கும் கொண்டுசெல்ல முடியும்.

உங்கள் நோயைப்பற்றி நிபுணன் அல்லாத நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நிபுணர்களை நீங்கள் கலந்தாலோசிப்பதே அவசியம் என்று எண்ணுகிறேன். ஐயம் கொண்டு மருத்துவர்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் சொல்வதில்லை. சரியான நிபுணர் ஒருவரின் வழிகாட்டலைத்தேடுவதையே உத்தேசிக்கிறேன்.

ஆயினும் சிலவிஷயங்கள் எனக்குப் படுகின்றன. நோய்த்தொற்று இல்லாத நிலையில் தொடர்ச்சியாக ஏன் நோய்முறிகளை [ஆன்டிபயாட்டிக்] சாப்பிடவேண்டும்? அவை உடலின் சமநிலையை இல்லாமலாக்கும். கண்டிப்பாக நம்மை மேலும் நோயாளியாக ஆக்கும். அதைப்பற்றி நீங்கள் இன்னும் மேலான மருத்துவரிடம் பரிந்துரை கோர வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

நம்முடைய உடலின் ஒரு பலவீனம் நமக்குத்தெரிந்துவிட்டால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு. அந்த பலவீனத்தின் எல்லைக்குள் நின்று கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது.செய்யக்கூடியது செய்யக்கூடாதது என தெளிவாக வரையறுத்துக்கொள்வது. அதன்படி கச்சிதமாக வாழ்வது. இரண்டாவதாக அந்த பலவீனத்தை தொடர்ச்சியாக கவனத்தில் வைத்துக்கொள்வது. அதற்கு இனியமையாத குறைந்த பட்ச சிகிழ்ச்சை அல்லது பராமரிப்பை மேற்கொள்வது.

நவீனமருத்துவர் ஒருவரின் தொடர்ச்சியான கண்காணிப்பில் நீங்கள் உங்கள் அன்றாடவாழ்க்கையை சரிசெய்துகொள்வதற்கான இயற்கையான வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் சொல்வேன். நான் மருந்துக்களை நம்பாமல் உணவையும் மன-உடல் பயிற்சிகளையும் அதிகம் நம்பக்கூடியவன். அது என் வழிமுறை.

உதாரணமாக நுரையீரல் சார்ந்த எந்த சிக்கலுடனும் குடலின் சுத்தம் மிக நேரடியான தொடர்பு கொண்டிருக்கிறது என நான் அறிந்திருக்கிறேன். ரசாயன உணவுகளை முழுமையாகவே தவிர்த்தல், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை நோக்கித் திரும்புதல் அதற்கு மிகமிகப் பயன் தருமென நான் கண்டிருக்கிறேன். அதேபோல மிக அதிகமான அளவுக்கு நீர் அருந்துவதும் முக்கியமானது என்பது என் எண்ணம். நீங்கள் கோவை போன்ற ஊர்களில் உள்ள நல்ல இயற்கை சிகிழ்ச்சைநிலையங்களை நாடலாம்.

நுரையீரல்சார்ந்த சிக்கல்களுக்கு பிராணயாமம், தியானம் [ஆனால் பனியில் செய்யக்கூடாது] போன்றவை அற்புதமான விளைவுகளை உருவாக்கும். அவற்றை முறைப்படிக் கற்றுத்தர பல அமைப்புகள் இன்று உள்ளன. எந்த அளவில்செய்தாலும் அந்த அளவில் பயன் தருபவையே. ஆனால் இவற்றைச் செய்வதனால் அலோபதியை விட்டுவிடாதீர்கள். அலோபதியின் மருத்துவக் கண்காணிப்பு முறை என்பது மிகமிக சிறந்தது.

உடலை கண்காணியுங்கள். அதைப்பேணுங்கள். உடலின் எல்லைக்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். ஆனால் உடல் அல்ல வாழ்க்கை என்பதை மறக்காதீர்கள். அது ஓர் எளிய கருவி மட்டுமே. வாழ்க்கையை வாழ்வது மனமே.

நூறாண்டிருக்க வாழ்த்துகிறேன்

அன்புடன்
ஜெ     

அரதி

ஹோமியோபதி:ஒருகடிதம்

முந்தைய கட்டுரைஇலக்கியப் பரிசுகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅச்சுப்பிழை : கடிதங்கள்