‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80

பகுதி ஒன்பது : கலியன்னை

ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித் திரும்பும் சிறிய பாதையைக் கண்டு தயங்கி நின்றான். பின்னர் அந்த ஊரை நோக்கி திரும்பினான். மரக்கூட்டங்களுக்குமேல் எழுந்து தெரிந்த குன்றின் முடியை புதர்களுக்கு அப்பாலிருந்து மெல்ல தலைதூக்குவதாகவே எண்ணினான். மிகப் பெரிய ஒரு விலங்கு. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதை முன்னரே கண்டிருக்கிறோம் எனத் தோன்றியது. பின் அதை நோக்கி அவன் நடந்தான்.

அந்தக் குன்றை அடைந்து அதன் சரிவுகளில் மேலேறிச் சென்றான். செல்லும் வழியெங்கும் சித்தர்களின் நிறைவிடங்கள் தெரிந்தன. அவன் மேலே சென்றபோது சோறு வேகும் மணத்தை உணர்ந்தான். அப்பால் மரத்தடியில் ஒரு கலத்தில் சோறு வெந்துகொண்டிருந்தது. அவன் அதை நோக்கி சென்றான். அனல் அப்போதும் எரிந்துகொண்டிருந்தது. கொதிக்கும் அன்னநீர் மூடியைத் தூக்கி சீறியது. அவன் விழிசுழற்றி நோக்கியபோது அப்பால் இரு கால்களை கண்டான். புதர்களுக்கு நடுவே ஒருவர் விழுந்து கிடந்தார். மிக முதியவர். அருகணைந்து அவர் முகத்தைக் கண்டதும் அவன் திடுக்கிட்டான். வெண்தாடியும் மீசையும் நீள்சடைகளும் கொண்டிருந்தார்.

அவனை சுக்ரன் எழுப்பினான். “பூசகரே, செய்தி… செய்தி வந்துள்ளது” என்றான். அவன் எழுந்து அமர்ந்தான். அரைநாழிகைப் பொழுதுகூட அவன் துயில்கொண்டிருக்கவில்லை. “என்ன? யார்?” என்றான். சுக்ரன் “அரண்மனையில் இருந்து பேரரசி இங்கே வழிபட வரவிருக்கிறார். ஆணை வந்துள்ளது” என்றான். “பேரரசியா? இங்கா? அவ்வண்ணம் மரபில்லையே?” என்றான் ஆதன். “இந்த ஆலயமே மரபு மீறியமைந்தது அல்லவா? கலியின் ஆலயத்திற்கு அன்றாடப் பூசெய்கை எங்காவது உண்டா?” என்றான் சுக்ரன். “அவர் வருவது நன்று. இனி இங்கே ஒருநாளும் ஆளோயாது. எழுக, ஒருங்குக!”

ஆதன் “எவர் வந்து சொன்னார்கள்?” என்றபடி எழுந்துகொண்டான். கரிய மேலாடையை சீரமைத்தபடி அவன் மண்சரிவில் இறங்கி ஆலயமுற்றம் நோக்கி சென்றான். ஆலயமுற்றம் மரங்கள் வெட்டப்பட்டு புதர் களையப்பட்டு பலகைகள் பரப்பி பெரிதாக்கப்பட்டிருந்தது. கரிய கற்களால் ஆன ஆலயத்தின்மேல் படர்ந்திருந்த கொடிகள் நீக்கப்பட்டிருந்தன. அங்கே ஒவ்வொருநாளும் பல்லாயிரம்பேர் வந்தனர். அவர்களுக்கான குடில்கள் கீழ்ச்சரிவெங்கும் அமைந்தன. குடிநீர் ஊற்றுக்கள். இளைப்பாறுவதற்கான மஞ்சங்கள். அவர்கள் வரத்தொடங்கியபோதே அங்கே இருந்த நரிகளும் ஓநாய்களும் கீரிகளும் விலகிச் சென்றுவிட்டன.

ஆனால் காகங்கள் மரங்களின்மேல் செறிந்தே இருந்தன. அவை பிற இடங்களைப்போல கீழே நோக்கி கூச்சலிடுவதில்லை. இலைகளுக்குள் கரிய நிழல் என அவை அமைந்திருந்தன. விழிகள் கரிய மணிகள் என துறித்து நோக்கின. பெரும்பாலும் அவை ஓசையே எழுப்புவதில்லை. சருகுகள் உதிர்வதுபோல மண்ணிறங்கி அன்னமும் பிறவும் உண்டு மேலெழுந்தன. அவற்றின் ஓசையின்மையே அவ்விடத்தின் மீதான அச்சத்தையும் ஈர்ப்பையும் உருவாக்குவதாக இருந்தது.

அரண்மனையிலிருந்து வந்தவனை ஆதன் அறிந்திருந்தான். குள்ளமான உருவம்கொண்டவனாகிய ஒற்றன் யாமன் அவனைக் கண்டதும் அருகே வந்து “எனக்கும் சற்றுமுன்னர்தான் செய்தி வந்தது. பேரரசி பெருங்கொடையாட்டு முடிந்து ஆடைமாற்ற அணியறைக்கு வரும் வழியில் என்னை அழைத்து ஆணையிட்டார். பெருநிகழ்வாக இது அமையவேண்டியதில்லை, ஆகவே அறிவிப்பும் திரளும் இருக்காது. ஆனால் எல்லா ஒருக்கங்களும் முழுமை பெற்றிருக்கவேண்டும். ஆகவே விரைந்து வந்தேன்” என்றான். ஆதன் “இங்கே தனியாக ஏதும் செய்யவேண்டியதில்லை. இங்குள்ள சடங்குகள் மிக எளியவை” என்றான். “பேரரசி வரும்போது மக்கள்திரள் இருக்கலாகாது. இப்போதே திரளை நிறுத்திவிட்டிருப்பார்கள். அதற்கான ஆணை சென்றுவிட்டது” என்றான் யாமன்.

ஆதன் “அங்கே ஏதோ விரும்பாதன நிகழ்ந்தது என்று கேட்டேன்” என்றான். “ஆம், ஒரு சார்வாகர். அவர் நிகழ்வில் ஒரு மங்கலமின்மையை நிகழ்த்த விழைந்தார். அதை அவர் விழைந்தபடி அந்தணர் நிகழ்த்தி முடித்தனர்” என்றான் யாமன். “அரசர் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் அதை ஈடுகட்டிவிட்டனர். அவர் எழுந்து வரும்வரை இளையோர் பெருங்கொடையை நிகழ்த்தினர். இளைப்பாறிய பின் அரசரும் வந்து சேர்ந்துகொண்டார். ஆனால் அவர் நோயுற்றிருந்தார் என்று எனக்குப்பட்டது.” ஆதன் அவனை நோக்காமல் தவிர்த்து தன் இடைப்பட்டையைக் கட்டியபடி “அரசி நிலையழிந்துள்ளாரா?” என்றான்.

“இல்லை, உண்மையில் அரசி அச்செய்தியை அறிந்திருந்தாரா என்றே ஐயம் தோன்றியது. அவரிடம் அது சொல்லப்பட்டபோது ஒருகணம் கூட அவர் விழிதாழ்த்தவில்லை. அவர் செயலில் சிறு தயக்கம்கூட நிகழவில்லை.” ஆதன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் அவர் இங்கு வர முடிவெடுத்தது அதனாலாக இருக்கலாம்” என்று யாமன் தொடர்ந்தான். “அவருக்கு இன்று பல பணிகள் உள்ளன. முதற்கதிர் எழுவதற்குள் எல்லா ஆலயநெறிகளும் முடிந்து அவையெழுந்தருளவேண்டும்… இன்று வேள்விதொடக்கம்.” ஆதன் “எனில் அவர் உடனே கிளம்பியாகவேண்டும்” என்றான். “அவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் யாமன். “அறைக்குச் சென்று அணிகளைக் களைந்த பின் வரவேண்டும். இங்கே எவரும் பொன்னோ மணியோ பட்டோ அணிந்து வரலாகாது” என்று ஆதன் சொன்னான்.

“தென்னவரே, அரசி திரௌபதி அரியணை அமர்ந்தபோதும் அணிகளின்றியே இருந்தார்” என்று யாமன் சொன்னான். “அரியணை ஏற அவர் தன் அறையிலிருந்து வெளியே வந்தபோது பேரரசிக்கு இளமை திரும்பிவிட்டதுபோல் தோன்றியது. என் விழிமயக்காக இருக்கலாம். ஆனால் முப்பதாண்டுகள் அகவை குறைந்துவிட்டது போலிருந்தார். முகத்திலிருந்த சுருக்கங்கள் எல்லாம் அகன்றுவிட்டிருந்தன. கன்னங்களிலும் தோள்களிலும் கருங்கல் மெருகு. நடையில் இளமையின் மிடுக்கு. குரல்கூட மாறிவிட்டிருந்தது. அவை எல்லாம்கூட என் கற்பனைகளாக இருக்கலாம், ஆனால் விழிகளில் எழுந்த ஒளி. அது இளமையால் மட்டுமே அமைவது.”

ஆதன் ஆர்வத்துடன் நின்றுவிட்டான். யாமன் தொடர்ந்தான். என்னிடம் பேரரசர் கேட்டார், அரசி எவ்வண்ணம் இருக்கிறார் என்று. நான் அவர் இளமைக்கு மீண்டுவிட்டதை சொன்னேன். அவர் நகைத்து “நன்று! நன்று!” என்றார். “அரசி கிளம்பிக்கொண்டிருக்கிறாரா?” என்று கேட்டார். “கிளம்புகிறார்” என்று நான் சொன்னேன். “அணிசெய்துகொண்டிருப்பார், பொழுதாகும்” என்று சொல்லி உரக்கச் சிரித்தார் அரசர். அரசரை நான் முதல்முறையாக அத்தனை உவகையுடன் பார்க்கிறேன். அவர் எதையோ கொண்டாடிக்கொண்டிருந்தார். அவருடன் இருந்தவர்கள் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் அதற்குள் இருந்தார்.

அப்போதுதான் பீஷ்ம பிதாமகர் விண்புகுந்த செய்தி வந்தது. அது அவரை சற்று அணையச் செய்தது. யுயுத்ஸு “அது நாம் எண்ணியதுதானே, மூத்தவரே?” என்றார். “ஆம், ஆனால்…” என்றார். “அவர் காத்திருந்த பொழுது” என்று சகதேவன் சொன்னார். நான் பேரரசியைப்பற்றிய ஆணைக்காக காத்து நின்றிருப்பதை அவர்கள் மறந்துவிட்டிருந்தனர். “அமைச்சரை அழைத்துவருக! அவருக்கான நீத்தார்கடன்கள் என்னென்ன என்று அறிந்தாகவேண்டும்” என்றார் அரசர். என்னிடம் திரும்பி “அரசி ஒருங்கியதும் வந்து சொல்” என்றார். நான் தலைவணங்கி வெளியே வந்தேன். அமைச்சர் சுரேசர் ஓடி வருவதைக் கண்டேன்.

அரசியின் அறைக்குச் சென்றபோதுதான் அரசி அணிகளேதுமின்றி, வெண்ணிறப் பருத்தியாடை மட்டுமே அணிந்து குழலை கட்டிச் சரித்து கிளம்பிவிட்டிருப்பதை கண்டேன். ஒரு பொன்துளிகூட உடலில் இல்லை. ஆனால் இளங்கன்னி எனப் பொலிந்தார். அவர் கிளம்பிவிட்டார் என்னும் செய்தியைச் சொல்ல நான் திரும்பி அரசரிடம் சென்றேன். அங்கே சுரேசர் இருந்தார். அரசர் “அரசி ஒருங்கிவிட்டாரா?” என்றார். “கிளம்பிவிட்டார். ஆனால் அணிகளேதும் பூணவில்லை” என்றேன். “அணிகளேதுமின்றியா?” என்றார். அவர் முகம் சுருங்கியது. “ஆம் அரசே, ஒரு பொன்மணிகூட இல்லாமல்” என்றேன். “மணமங்கலத்தைக்கூட நாரில்தான் அணிந்திருக்கிறார்.”

அரசர் என்னை கூர்ந்து நோக்கினார். பின்னர் திரும்பி சுரேசரிடம் “ஆவன செய்க… நான் கிளம்பவேண்டும்” என்றபின் என்னை பார்த்தார். “செல்க” என்றார். திரும்பி சகதேவனிடம் “அனைத்து அணிகளும் வரட்டும்… மாமன்னர் ஹஸ்தி முதலானவர்கள் அணிந்த அருமணிகள் ஒன்றுகூட குறையலாகாது. இன்று நான் என் மூதாதையரின் முழுவுருவென அரியணை அமர்வேன்” என்றார். நான் திரும்ப வந்தபோது பேரரசி அவைக்குச் சென்றுவிட்டதை அறிந்தேன். பின்னால் சென்று பீஷ்மர் விண்புகுந்த செய்தியை சொன்னேன். அதற்குள் செய்தியுடன் சுரேசரே வந்துவிட்டிருந்தார். பீஷ்ம பிதாமகரின் விண்புகுகையை நகரில் முரசுகள் அறிவிக்கவேண்டும் என்றும், அவர் நிறுவுகை செய்த நூல்களை அஸ்தினபுரி தன் நெறிகளென ஏற்கும் என்றும் அரசர் அறிவித்திருப்பதாக சொன்னார். அரசி இயல்பாக நன்று என்று சொல்லி அவைநோக்கி நடந்தார்.

 

கீழே கொம்பொலி கேட்டது. யாமன் “அவர்தான், அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றான். “நான் சென்று அவரை வழிகாட்டி அழைத்துவருகிறேன்” என கிளம்பினான். ஆதன் “நான் திருச்சிலையை ஒருக்குகிறேன்” என்றபடி சென்று கோயிலுக்குள் நுழைந்தான். கலிதேவனின் சிலை நீலப்பட்டாடை அணிந்து விழிகள் நீலத்துணியால் கட்டப்பட்டு அமர்ந்திருந்தது. புதிதாக அதன் காலடியில் இருபுறமும் இரு சிறிய கருங்கற்களாக துரியோதனனும் சகுனியும் நிறுவப்பட்டிருந்தனர். ஆதன் நெய்விளக்குகளை எண்ணைவிட்டு தூண்டினான். சூழ எரிந்த பந்தங்களில் எண்ணை துலக்கும்படி ஏவலர்களுக்கு ஆணையிட்டான். இசைச்சூதர்களை அணுகி வந்து ஒருங்கி நிற்கும்படி கைகாட்டினான். அவர்கள் அப்போதுதான் துயில்கொள்ளும்பொருட்டு அமர்ந்திருந்தனர். துடித்து எழுந்து வந்து நின்றனர்.

அவன் மேலே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். கீழிருந்து விளக்குகளின் நிரை ஊர்ந்து வந்தது. அது இருளை எரித்துக்கொண்டே வருவதுபோல கற்பனை செய்தான். அங்கிருந்து கொம்புகளின் ஓசையும் ஆணைகளும் எழுந்தன. மையச்சாலையில் வந்த ஒளிநிரை புதிதாக அமைக்கப்பட்ட பாதை நோக்கி திரும்பியது. முகப்பில் அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியுமாக மூன்று கொடிவீரர்கள் வந்தனர். தொடர்ந்து பூசனைப்பொருட்களுடன் சேடியர் நிரை. அதன்பின் முழவும் கொம்புமாக சூதர்கள். தொடர்ந்து வந்த திரௌபதியை அவன் நிழலுருவெனக் கண்டான். அந்த அசைவிலேயே அவளிருந்த இளமையை அவனால் உணர முடிந்தது. அவளருகே படைத்தலைவி சம்வகை கவச உடையணிந்து வந்தாள்.

அவர்கள் வளைந்து வளைந்து ஏறிவந்த சாலையில் மேலே வந்தனர். பந்தங்களின் ஒளியை கடக்கையில் திரௌபதி தெரிந்து அணைந்தாள். அவள் உடலில் நகைகள் என ஏதுமில்லை. வெண்ணிற ஆடை, வெண்மேலாடை. முடிந்து கொண்டையாக்கி தோளில் தழைந்த குழல். அவளுடைய காலடிகள் இளம்புரவியின் மிடுக்குடன் இருந்தன. அவள் ஆலயமுற்றத்தை அணுகியதும் ஆதன் கையில் நிறைகலத்துடன் சென்று எதிர்கொண்டான். நீரை மாவிலையால் தொட்டு அவள்மேல் தெளித்து வரவேற்றான். அவள் விழிகள் ஆலயத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தன. அங்கே பிறர் இருப்பதையே அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சம்வகை கையசைத்து அவனிடம் பூசனை நிகழட்டும் என ஆணையிட்டாள்.

ஆதன் அவளை ஆலயமுகப்புக்கு அழைத்துச்சென்றான். அவன் கைகாட்டியதும் சூதர் இசை முழக்கினர். அவன் ஆலயத்திற்குள் மண்டியிட்டு நுழைந்து அமர்ந்தான். ஏவற்பெண்டுகள் மலர்த்தாலங்களையும் பூசனைப்பொருட்களையும் அளித்தனர். நீல மலர்கள், அரிசி, கரிய பட்டாடை. அவன் தாலங்களை கலிதேவனின் முன் பரப்பினான். உள்ளிருந்து மலர் கொண்டுவந்து பேரரசியிடம் நீட்டினான். அவள் அதை சம்வகைக்கு கொடுக்கும்படி கண்காட்டினாள். அவன் அளித்த மலரை சம்வகை பெற்றுக்கொண்டாள். அவன் மீண்டும் கருவறைக்குள் நுழைந்து கலிதேவனைப் போற்றும் தொல்பாடலை உரைத்தபடி பூசனையை தொடர்ந்தான்.

கரியவனே, கண்ணற்றவனே

கண்ணே கருவிழியே உடலானவனே

காகக் கொடியும் கழுதை ஊர்தியும்

சிறக்க அமர்ந்திருப்பவனே

எழுயுகத்தோனே, எதிரற்றவனே

அறத்தின் ஊர்தியே

எழுக, எழுக, இங்கெழுக!

எழுக உன் குளம்படிகள்!

எழுக உன் கனைப்பொலிகள்!

எழுக உன் இருள்வண்ண ஒளி!

இந்தப் பொழுதில் எழுக

உன் முடிவிலாத கருணை!

தேவனே,

அருள்கொண்டவனே

நீ அறிவாய்

மானுடரின் எளிமையை

அவர்களின் ஆணவத்தை

விழைவை வஞ்சத்தை

தனிமையை

பிறதெய்வங்கள் உணராத அனைத்தையும்

நீ அறிவாய்

நீயே எங்களுக்கு துணைவன்

எங்களை ஆளும் இறைவன்

எங்களுக்கு பாதையாகுக!

எங்களுக்கு ஒளியாகுக!

எங்கள் வழிச்சொல் ஆகுக!

உடனிருந்து அருள்க!

எளியோரின் எளிமையால்

உன்னை வழிபடுகிறோம்

தீயோரின் தீமைகளை

உனக்குப் படைக்கிறோம்

கீழோரின் கீழ்மைகளால்

உன்னை நீராட்டுகிறோம்

அறிந்த தேவனே

அறியாத தெய்வங்களைவிட அணுக்கமானவன்

நீயன்றி எங்களுக்கு

இன்று உற்றான் எவருமில்லை

எழுயுகத்தோனே

இனி நீயன்றி அடைக்கலம் பிறிதில்லை

அவன் தீயாட்டும் சுடராட்டும் மலராட்டும் காட்டினான். கலிதேவனின் மூடிய விழிகளுக்குக் கீழே என்றும் அவன் காணும் புன்னகையை உணர்ந்தான். சுடர்கொண்டு காட்டும்போது திரௌபதியை நோக்கினான். பந்த வெளிச்சம் மேனிமென்மையில் மிளிர அவள் விழிமூடி கைகூப்பி நின்றிருந்தாள்.

[களிற்றியானைநிரை நிறைவு]

முந்தைய கட்டுரைஅந்தி எழுகை
அடுத்த கட்டுரைஇமையச்சாரல் -கடிதம்