பகுதி எட்டு : அழியாக்கனல்-2
மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம் அங்கே ஏற்கெனவே செதுக்கப்பட்டிருந்தது. மிச்சமில்லாமல் கரைந்தழியும் உணர்வை அடைந்தான். ஆனால் சற்றுநேரத்திலேயே அவன் பிரிந்து படியலானான். அவன் அடித்தளமென அமைந்திருக்க அவனுக்குமேல் அலைகள் சுழித்துக்கொண்டிருந்தன. ஓசைகள், வண்ணங்கள், உடல்கள். அவன் மேல் உடல்கள் முட்டியபோதெல்லாம் அவன் துணுக்குற்றான். உடல் அதிர்ந்து சீறித் திரும்பினான். ஆனால் அங்கே எவரும் எதையும் காணவில்லை. எவரும் இன்னொருவர் அங்கிருப்பதை உணரவில்லை.
அவன் தன்னை பிரித்துக்கொள்ள முயன்றான். தன்னை இழுத்து இழுத்து சேர்த்துக்கொண்டான். கைகளையும் கால்களையும் ஆடையையும் இழுத்துக்கொண்ட பின்னரும் திரளில் ஏதோ எஞ்சியிருந்தது. அவன் பெருமூச்சுடன் மாளிகை ஒன்றின் சுவரோரமாக நின்றான். பின்னர் அதன் சிறு திண்ணையில் ஏறிக்கொண்டான். திரண்டு சுழித்து அலைகொண்டு நின்று புரண்டு கரைததும்பி சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவராலும் அந்தப் பெருக்கில் இருக்க இயல்கிறது. அவர்கள் அப்பொய்மையில் திளைக்க முடிகிறது. அதுவே இன்பமென்றால் மெய்யென்ற ஒன்றுக்கான தேடல் எதற்காக?
ஆனால் அவர்கள் அதில் திளைக்கவில்லை. அதைவிடப் பெரிய ஒன்றுக்கு அதை நிகர்வைக்க முயல்கிறார்கள். ஆகவேதான் துலாத்தட்டை இப்படி அழுத்திக்கொள்கிறார்கள். மிடிமையை, இழிவை, சாவை, வெறுமையை இவற்றைக்கொண்டு நிகர்செய்கிறார்கள். அவை மெய். இவையனைத்தும் பொய். பாறையை முகில்கொண்டு நிகர்செய்ய முயல்கிறார்கள். பாறையை மறைக்க முடியும். சற்றுநேரம். ஒரு காற்று எழும் வரை. பகலொளி வெளிக்கும் வரை. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களுக்கு இதுவாவது எஞ்சியிருக்கிறது. ஆனால் நான் அறிந்தாகவேண்டும். அந்தப் பாறையின் நிகர் எடை எது என. மாயை இன்றி, பொய் இன்றி, நேர்விழிகாளால் அறிந்தாகவேண்டும்.
அவன் நின்றிருந்த அந்தத் திண்ணையை ஒட்டியிருந்த சிறிய வாயில் திறந்தது. உள்ளிருந்து ஒருவன் எட்டிப்பார்த்து “இன்னும் திரள் சென்றுகொண்டிருக்கிறது” என எவரிடமோ சொன்னான். கதவு மூடப்பட்டது. இந்தப் பெருக்கில் இவர்கள் அறைமூடி அமர்ந்து என்ன செய்கிறார்கள்? மதுவா, வேறேதும் மூலிகைக் களிமயக்கா? எதுவானாலும் அதில் நான் ஒன்ற முடியும். என்னைப்போல் வண்டல் எனப் படிந்தவர்கள் இவர்கள். அவன் அக்கதவை மெல்ல சுண்டினான். உள்ளிருந்து தாழ் விலக்கும் ஓசை கேட்டது. முன்பு திறந்தவன் இம்முறையும் திறந்தான். “யார்?” என்றான். தீக்ஷணன் “செய்தியுடன் வந்துள்ளேன்” என்றான். “என்ன செய்தி?” என்றான் அவன். ”விழவு குறித்த செய்தி.” அவன் உள்ளே நோக்கி “எவனோ விழவு குறித்த செய்தியுடன் வந்திருப்பதாக சொல்கிறான்” என்றான். “களிமகனா? சூதாடியா?” என்றார் உள்ளிருந்தவர். “அல்ல” என்றான் திறந்தவன். “வரச்சொல்” என்றார் உள்ளிருந்தவர். கதவு திறந்து அவனை உள்ளே எடுத்துக்கொண்டது.
உள்ளே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தரை முழுக்க சுவடிக்கட்டுக்கள் செறிந்திருந்தன. நடுவே எழுவர் அமர்ந்து சுவடிகளை அடுக்கி கட்டிக்கொண்டிருந்தனர். மூவர் முதியவர்கள், இருவர் மிக இளையோர். இருவர் நடு அகவையினர். அனைவருமே அந்தணர்கள். “யார் நீர்?” என்று முதியவர் கேட்டார். தீக்ஷணன் சூழலை உடனே புரிந்துகொண்டான். “நான் கௌசிக குலத்து சுகேசரின் மைந்தனாகிய தீக்ஷணன். அதர்வவேதத்தவன். அதை மீறும் நூல்களை கற்றவன். இங்கே சுவடிகள் ஆய்வுசெய்யப்படுவதை அறிந்தேன். இங்கு இருக்க விழைந்தேன்” என்றான். அவர் அவனை கூர்ந்து நோக்கி “இது வேதம் உசாவும் இடம் அல்ல. மெய்நூல் பேசுவதற்குரிய இடமும் அல்ல. நாங்கள் நெறிநூல்களை தேர்பவர்கள்” என்றார்.
“ஆம், நான் நெறிநூல்களில் மெய்நூல்கள் எவ்வண்ணம் செயல்படுகின்றன என்று ஆராய்பவன்” என்று தீக்ஷணன் சொன்னான். அவர் “என் பெயர் ஜங்காரி. விஸ்வாமித்ரரின் மைந்தரான ஜங்காரி முனிவரின் வழிவந்த குருமரபு என்னுடையது” என்றார். “நான் கையில் வைத்திருக்கும் இச்சுவடி ஒரு நெறிநூலைச் சார்ந்தது. இது இவ்வாறு உரைக்கிறது. இது எந்நூல் என சொல்லமுடியுமா? எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீரா?” என்றபின் இளம் மாணவனிடம் அச்சுவடியை நீட்டி “படி” என்றார்.
அவன் உரத்த குரலில் அச்சுவடியை படித்தான். “தெய்வத்தை நான் கண்டதில்லை. தெய்வத்தை ஏற்க சான்றுகளும் இல்லை. தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் முன்னை வினைப்பயனால் அல்லவா அந்த நிலையை அடைந்தனர்? செயல் விளைவை உருவாக்குமென்பதை ஐயமறக் காண்கிறோம். மானுடர் பிறந்து மாய்கிறார்கள். மறக்கப்படுகிறார்கள். அவர்களின் செயல்களோ விளைவுகளாக எஞ்சுகின்றன. விளைவுகள் செயல்களாகி மீண்டும் நீள்கின்றன. முன்னைவினை நிகழ்வினை வருவினை ஈட்டியிருக்கும் வினை என நான்குவகையான நிலைகள் இவ்வண்ணம் உருவாகின்றன. ஆகவே வேதச்சொல்லுக்கு அடுத்தபடியாக உலகியலில் துயரறுத்து மீட்புகொள்ளச் செய்யும் செயல்நிலைகளை சொல்லியிருக்கின்றனர் மூதாதையர்.”
தீக்ஷணன் “இது பராசர கீதை என்னும் தொல்நூல். இது முன்னர் மிதிலையை ஆண்ட அரசமுனிவரான ஜனகர் பராசர முனிவரிடம் கோரியபோது அவர் உரைத்தது” என்றான். ஜங்காரி புன்னகைத்து “நன்று, உம் விழிகளைக் கண்டபோதே எண்ணினேன். அமர்க!” என்றார். தீக்ஷணன் அவரை வணங்கிய பின் அமர்ந்தான். “என்ன நிகழ்கிறது இங்கே? இச்சுவடிகள் எவை?” என்றான். அவர் “நான் தென்புலத்தின் விஜயபுரியிலிருந்து வருகிறேன். ஷத்ரியகுடியில் பிறந்தவன்” என்றார். “இங்கே பாரதவர்ஷத்தின் மாபெரும் ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. அதில் நூறு நாட்கள் நூறு நெறியவைகள் கூடவிருக்கின்றன. அவற்றில் பாரதவர்ஷத்தின் முதன்மை நெறிநூல்கள் அனைத்தும் அரங்கேற்றப்பட்டு அறிஞர்களால் முழுதுற உசாவப்பட்டு ஏற்புடையவை அஸ்தினபுரியின் அரசரின் ஒப்புதலுக்கு அளிக்கப்படும். மும்முடி சூடிய பேரரசரின் கோலால் நிலைநிறுத்தப்படும் நூல்களே இனி பாரதவர்ஷத்தை ஆட்சி செய்யும்” என்றார்.
அவன் “இவையனைத்தும் நெறிநூல்களா?” என்றான். “ஆம், இவற்றில் தொல்நூல்கள் முதல் அண்மையில் புலவர்கள் யாத்தவை வரை உள்ளன. நாங்கள் நூறுநெறிநூல்களை அவை முன் வைக்கிறோம். இவ்வண்ணம் நூற்றுக்கணக்கான அறிஞர் குழுக்கள் தங்கள் நெறிநூல்களை முன்வைப்பார்கள். நூல்வேறுபாடும் சொல்மாறுபாடும் களைந்து தூயநூல் அறுதி செய்யப்படும். அந்நெறிகளின் நேற்றைய நிலையும் இன்றைய நடப்பும் நாளைய விளைவும் முழுதுற ஆய்வுசெய்யப்படும். அதன்பின் அரசருக்கு அவை தன் ஏற்பையும் அதன் அடிப்படைகளையும் அளிக்கும். மறுக்கப்படும் நூல்களுக்கு மேல் நிகழ்ந்த சொல்லாடல்கள் தொகுத்து அளிக்கப்படும்” என்றார் ஜங்காரி. “இச்சடங்கு ராஜசூயத்தை ஒட்டி வழக்கமாக நிகழ்வதுதான். இதை சாந்தி தர்ப்பணம் என்பார்கள். இந்நூல்களை சாந்திகிரந்தங்கள் என்று அடையாளப்படுத்துவார்கள்.”
“இதுவரை பாரதவர்ஷத்தில் இருபத்தெட்டு அமைதிக்கொடை நிகழ்வுகள் நடந்துள்ளன. இருபத்தெட்டு அமைதிநூல் தொகைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வேள்வியே இதுவரை நிகழ்ந்தவற்றில் தலையாயது, இன்னும் பல தலைமுறைக்காலம் பாரதவர்ஷத்தை ஆளவிருப்பது. ஆகவே இந்த அமைதிநூல்தொகையில் ஒரு சிறந்த நூல்கூட தவறவிடப்படக் கூடாது என முடிவுசெய்திருக்கிறோம்” என்று இன்னொரு புலவர் சொன்னார். “யாக்ஞவல்கிய மரபைச் சேர்ந்தவனாகிய நந்திசேனன் நான். எங்கள் குருநிலையின் ஏழு நூல்கள் இங்குள்ளன. நீங்கள் வருகையில் நாங்கள் எங்கள் முதலாசிரியர் ஊழிவெள்ளத்தைப் பற்றி கூறிய செய்திகளை ஏடுகளுடன் ஒப்பிட்டுக்கொண்டிருந்தோம்.”
ஜங்காரி “இங்கே நாரதர், யாக்ஞவல்கியர், வசிட்டர், பராசரர், கபிலர் என முதன்மையான முனிவர்களின் சொற்களெல்லாம் உள்ளன. ஏடுகளை ஒப்பிட்டு முடித்துக்கொண்டிருக்கிறோம். செய்யச்செய்யப் பெருகும் பணி இது. நூலறிந்தோர் எவர் வந்தாலும் பணிக்கு போதியவர்கள் இல்லை என்பதே நிலை” என்றார். “அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு நிலைகளும் இங்கே முற்றாக வகுக்கப்பட்டுவிடும். அவை குறித்த உசாவல்கள் என்றுமிருக்கும். ஆனால் இங்கு இவ்வண்ணம் தொகுக்கப்பட்டவற்றுக்கு மேலெழுந்தே எவரும் சொல்லெடுக்க முடியும்.”
தீக்ஷணன் ஒரு சுவடியை எடுத்து புரட்டினான். இந்திரனுக்கும் மாந்தாதாவுக்கும் அரசநெறி பற்றி அமைந்த உரையாடல் அது. அவன் அந்நூலை முன்னரே பயின்றிருந்தான். அதை கீழே வைத்துவிட்டு பிறிதொரு சுவடியை எடுத்தான். க்ஷேமதர்சி என்னும் முனிவருக்கும் காலகவ்ருக்ஷீயருக்குமான உரையாடல். உலக நிலையாமை, யாக்கை நிலையாமை, அறம் நிலையாமை, அறிதல் நிலையாமை என்னும் நால்வகை நிலையாமைகளை பற்றியது. அவன் அச்சுவடியை மீண்டும் அடுக்கிவிட்டு “நான் அறியாத நூல். கேள்விப்பட்டதே இல்லை” என்றான்.
“அத்தகைய பல நூல்கள் இங்குள்ளன. பல நெறிநூல்கள் சிற்றூர் முதியவர்கள் சொல்லும் கதைகளின் வடிவில் உள்ளன. இதோ இந்நூல் பௌரிகன் என்பவன் நரியாக மாறிய கதையை சொல்கிறது. நரிகளுக்கும் புலிகளுக்குமான உரையாடல்… நாம் எண்ணிப் பார்க்கவே முடியாத நூல்களெல்லாம் உள்ளன. இன்னும் விந்தையானவை இங்கு நிகழவிருக்கும் அவைகளில் எழுந்து ஒலிக்கக்கூடும். பாரதவர்ஷத்தின் அத்தனை மூலைகளில் இருந்தும் அறநூல்கள் இங்கே வந்தாகவேண்டும் என்று மாமன்னர் யுதிஷ்டிரன் ஆணையிட்டிருக்கிறார். அசுரர் அரக்கர் நிஷாதர் கிராதர் என எவருமே விடுபட்டுவிடக்கூடாது. யவனரின் நெறிகளும் பீதரின் நெறிகளும் சோனகர் காப்பிரிகளின் நெறிகளும் கூட உசாவப்படுகின்றன. நெறிநூல் என்பது காட்டில் மழைபெய்ய தாழ்ந்த நிலத்தில் சுனை உருவாவதுபோல மக்களிடமிருந்து இயல்பாக உருவாகி வரவேண்டும் என்றார்.”
தீக்ஷணன் “இதில் சார்வாக மரபின் நெறிநூல்கள் உள்ளனவா?” என்றான். “அவர்கள் நெறிவகுக்கலாகாது என்பவர்கள். ஆனால் அவர்களின் பொருள்நோக்கு அணுகுமுறையின் முதன்மை ஆசிரியரான பிரஹஸ்பதி முனிவரின் நூல்கள் ஆறு இங்குள்ளன. இதோ இது இந்திரனுக்கும் பிரஹஸ்பதிக்குமான உரையாடல்.” தீக்ஷணன் அந்நூலின் சில வரிகளை படித்தான். “நான்கு விழுப்பொருட்களுக்கும் அடிப்படை ஒன்றே, அவை ஒன்று பிறிதுக்கு பயன்படவேண்டும். பொருளுக்கும் இன்பத்திற்கும் உதவாத அறமும், இன்பத்துக்கும் அறத்துக்கும் உதவாத பொருளும் அவை மூன்றுக்கும் உதவாத வீடுபேறும் பயனற்றவையே.” அவன் “எதன் அடிப்படையில் இவற்றில் சில தெரிவுசெய்யப்படுகின்றன” என்றான்.
“நெறிநூல்களெல்லாம் ஸ்மிருதிகள், அவை சுருதிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது தொல்நெறி” என்று ஜங்காரி சொன்னார். “இங்கே நெறிநூல்கள் அனைத்திற்கும் மையமென அமைந்திருக்கப்போவது பெறுநூலான யாதவகீதை. அதுவே இச்சகடத்தின் அச்சு. அதைக்கொண்டே இவையனைத்தையும் தொகுக்கவிருக்கிறோம். இந்த அமைதி நூல்கள் அதன்மேல் சென்று அமையும். அங்கே குருக்ஷேத்ரத்தில் பீஷ்ம பிதாமகரால் தெரிவுசெய்யப்பட்டு நிலைக்கோள் பெற்ற நிறுவுநூல்களும் யாதவரால் ஒப்பப்பட்டவை. அவையும் அதன்மேல் நின்றிருக்கும். சங்கும் ஆழியும் ஏந்திய விண்முதல்வன் என புதிய வேதம் இந்நெறிநூல்களால் பொலிவுபெறும். அதுவே ஐந்தாம் வேதம் என்றும் நாராயணவேதம் என்றும் வரும் யுகத்தில் வழுத்தப்படும்.”
“பிதாமகர் பீஷ்மரின் நெறிநூல்களுக்கு இனி இங்கே என்ன பொருள்?” என்றான் தீக்ஷணன். ஜங்காரி “ஏன்?” என்றார். “பீஷ்மரை இங்குளோர் இன்று வெறுக்கிறார்கள்” என்று தீக்ஷணன் சொன்னான். “அவர் சூதர்பாடல்களில் இன்று எதிர்மானுடராகவே காட்டப்படுகிறார்.” ஜங்காரி “ஆம், நானும் பல பாடல்களில் அவ்வாறே அவரை பாடக்கேட்டேன்” என்றார். “இது எழும் யுகத்தின் பெருங்களியாட்டக் காலம். இன்று எல்லா பறவைகளும் எல்லா பூச்சிகளும் ஒற்றைச் சிறகில் பறக்க முயல்கின்றன. ஆகவே எல்லா பறத்தலும் சுழல்களும் கூத்தாட்டமும் என்றே உள்ளன. நிலைமீண்டு புடவிநெறியின் இயல்பறிந்து அமைகையில் பீஷ்மரை மீண்டும் கண்டடைவார்கள்” என்றார்.
“அவர் பெண்பழி சூடியவர் என்பதை மறுக்க முடியுமா? இன்றும் அங்கே கங்கைக் கரையில் அம்பையன்னையின் சிலை குருதிப்பலி கொண்டு அமர்ந்திருக்கிறது. அரசியின் விழிநீர் விழுந்த அவை இங்கே காத்திருக்கிறது” என்றான் தீக்ஷணன். ஜங்காரி “ஆம், பெண்பழி கொண்டவர்தான் அவர். அதன்பொருட்டே அங்கே களத்தில் தன் குலம் முழுதழிவதை கண்டார். அவர் படுகளத்தில் கிடந்து அனைத்தையும் மீண்டுமொருமுறை எண்ணி தொகுத்துக்கொள்ள வகுத்தன தெய்வங்கள்” என்றார். “அவர் அங்கே களத்தில் குருதியாலும் விழிநீராலும் சொல்லாலும் எண்ணத்தாலும் அமைதியாலும் தன்னை மீட்டுக்கொண்டார். விண்புகுந்தார். எட்டு வசுக்களில் எட்டாவது வசு என சென்று அமைந்தார்.”
“ஒவ்வா செயலொன்றைச் செய்தவர் இயற்றிய நெறிநூலுக்கு என்னதான் மதிப்பு இருக்கமுடியும்?” என்று தீக்ஷணன் கேட்டான். ஜங்காரி “ஆனால் அவர் பிறிதென்ன செய்திருக்க முடியும்? இளையவரே, அவர் வாழ்ந்தது துவாபர யுகத்தில். அவரிடமிருந்தவை கிருதயுகத்தில் விளைந்து திரேதாயுகத்தில் கனிந்த விழுப்பொருட்கள். விழுப்பொருட்கள் மானுடரிடம் இல்லை, மானுடர் விழுப்பொருட்களின் ஊர்திகள் மட்டுமே” என்றார். அவரிடம் தணிந்த குரலில் ஏற்ற இறக்கம் இல்லாமல் பேசும் வழக்கம் இருந்தது. அது அவருடைய சொற்களுக்கு ஆழ்ந்த உறுதிப்பாட்டை அளித்தது. அவனை கூர்ந்து நோக்கி அவர் சொன்னது, அவனுக்கு அப்பாலிருக்கும் எவரிடமோ என ஒலித்தது.
“கிருதயுகத்திற்கு முன்பிருந்தது தமோயுகம். அன்று வானில் ஒளியிருந்தது, மண்ணில் அது பரவவும் செய்தது, சொல்லில் ஒளி எழுந்திருக்கவில்லை. எங்கும் வழிகாட்டுவதாக மானுடச் சொல் உருப்பெறவில்லை. அன்று நிலம் சேறுபோல் நெகிழ்வுகொண்டிருந்தது. மரங்கள் அதில் வேர்மிதக்கும் பாசிகள் என ஒழுகின, மலைகள் அதில் மிதந்தலைந்தன என்கின்றன தொல்நூல்கள். எதற்கும் எந்த உறுதிப்பாடும் இல்லாமலிருந்தது. சொல்லுக்கு உறுதியளிப்பது எது? சொல்லுக்குப் பொருளாவது எதுவோ அது. அவை இயற்கையும், தெய்வங்களும் மட்டுமே. வான் எட்டாத் தொலைவிலிருந்தது. மண் நெகிழ்ந்திருந்தது. தெய்வங்கள் அறியமுடியாமையில் அமைந்திருந்தன. எஞ்சியது ஒன்றே, குருதி. இந்த விதையிலெழுந்தது இந்த மரம், இவள் கருவிலெழுந்தது இந்த மகவு, இவனுக்கு இவன் தந்தை என்னும் மாற்றமுடியாத மெய்மை. அது அனைத்தையும் இணைக்கும் ஒன்று, எந்நிலையிலும் மாறாமல் அமையும் ஒன்று. ஆகவே அதை தலைக்கொண்டனர் முன்னோர்.”
“சொல்லுக்குப் பொருள் அளிக்கும் முதல் பருவடிவ உண்மை குருதியே” என ஜங்காரி சொன்னார். “குருதி தொட்டு நெறிகூட்டுக என்றன தொல்நூல்கள். அத்தனை சொற்களும் அத்தனை நெறிகளும் குருதியால் சான்றுரைக்கப்படவேண்டும், குருதியால் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்றன. குருதி அளித்து தெய்வங்களை விண்ணிலிருந்து இறக்கி இங்கே நிலைநிறுத்தினர். தெய்வங்கள் தங்கள் பீடமென நிலத்தை உறுதியாக்கின. தொல்நெறிகள் அனைத்துக்கும் அடிப்படையானது குருதியே. ஒவ்வொரு மானுடனின் வாழ்வும் சாவும் அவன் குருதியால் முற்றாக வகுக்கப்பட்டது. ஒவ்வொருவரின் அடையாளமும் குருதியால் பொறிக்கப்பட்டது. நன்றும் தீதும் குருதியால் முடிவுசெய்யப்பட்டது. பீஷ்மர் அறிந்தது அதைத்தான், மலைக்கங்கர்களிடமிருந்து அவர் கொண்டு வந்தது அதையே. அம்பையின் முன் அவர் அக்குருதியின் சொல்லுடன் நின்றார். அவையில் அக்குருதியின் அமைதியுடன் அமர்ந்திருந்தார்.”
ஜங்காரி தொடர்ந்து சொன்னார். “துரியோதனனையும் யுதிஷ்டிரனையும் பிதாமகர் நன்கறிவார். குடிகளின் உள்ளத்தை மேலும் அறிவார். தூதுவந்து அவை நின்றவன் எவன் என மிகமிக நன்றாகவே அறிவார். எனினும் குருதியால் நிலைகொண்ட நெஞ்சும் குருதியின் பாதையில் ஒழுகும் அறமும் கொண்ட அவர் வேறு என்ன செய்திருக்கமுடியும்? கூறுக! தொல்குருதிநெறியை அறிந்த எவரும் அவர் எண்ணியதையே தானும் எண்ணக்கூடும். குருதியால் முடிக்குரியவர் துரியோதனன் மட்டுமே. அவருக்கு துணைநின்று, அந்த முடி நிலைக்க போரிடுவதே அவர் செய்வது.”
தீக்ஷணன் சீற்றத்துடன் “அவையில் பெண்சிறுமை செய்யப்படுவதை நோக்கி அமர்ந்திருப்பதும் கூடவா?” என்றான். “ஆம்” என்றார் ஜங்காரி. “நாம் கொண்டிருக்கும் நெறிநூல்களில் தொன்மையான அனைத்துமே நிலமும் பெண்ணும் வல்லமையால் கொள்ளப்படவேண்டியவை என்றே சொல்கின்றன. வெல்லப்படவேண்டியவை, வெல்பவனுக்குப் பரிசென ஆகவேண்டியவை. ஆகவே எதிரியின் கையில் சிறப்பு கொள்ளப்படக்கூடாதவை. நம் தொல்மூதாதையர் நிகழ்த்திய அத்தனை போர்களிலும் எரிபரந்தெடுத்தல் நடைபெற்றிருக்கிறது. நகரங்களும் காடுகளும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. ஊருணிகள் யானைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஊற்றுகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன. ஏரிகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அறிக, தொல்வேதம் வணங்கிய தலைவனாகிய இந்திரன் நகரங்களை எரிப்பவன், ஏரிகளை உடைப்பவன் என்றே போற்றப்பட்டிருக்கிறான்.”
தீக்ஷணன் பெருமூச்சுவிட்டான். ஜங்காரி புன்னகைத்து “தெய்வத்தின் முழுதுருவை நோக்குவதை ஒப்பவே கடினமானது அறத்தின் முழுதுருவை காண்பது. அதுவும் முடிவில்லா தோற்றப்பெருக்கு கொண்டது, எண்ணற்ற செயல்வடிவு கொண்டது” என்றார். “தொல்நூல்களை கற்றிருந்தால் அறிந்திருப்பீர். இங்கிருந்தவை பெண்கோன்மைகள். அன்னையர் ஆட்சியை வென்று அடைந்தவையே அனைத்தும். ஆகவே பெண்ணை சிறைப்பிடித்தல் அன்றைய அறம். வெல்லமுடியாத பெண்ணை சிறுமைசெய்தலும் இங்கு இயல்பென்றே நடந்தன. இளையவரே, இங்குள்ள நகரங்கள், படைகள், அரண்மனைகள், அரசவைகள், கொடைகள், நெறிகள், அறங்கள் அனைத்தும் பெண்ணை வென்று அடையப்பெற்றவையே. பெண்சிறுமை நிகழாத ஒரு தொல்நூலேனும் நீர் கற்றவற்றில் உண்டா?”
தீக்ஷணன் சொல்மலைத்து அமர்ந்திருந்தான். “பீஷ்மரின் நெறிகளின்படி மணிமுடி சூடி அமர்ந்தமையாலேயே அரசி திரௌபதி படைகொண்டு சென்று வெல்லத்தக்கவர். வென்றெடுத்த அரசர்களை அவைச்சிறுமை செய்து மாண்பழித்து அரசரென அல்லாமல் ஆக்குதல் தொல்வழக்கம். ஆகவே தொல்நெறியை மீறி எதையும் துரியோதனனும் துச்சாதனனும் செய்துவிடவில்லை. துரோணரும் கிருபரும் மற்றும் அவையமர்ந்த மூத்தோரும் அவ்வண்ணமே எண்ணினார்கள்” என்றார் ஜங்காரி. “பீஷ்மர் நின்ற தொல்நெறிகளின் தளத்தில் முனிவர் முனிவரால், அந்தணர் அந்தணரால், அரசர்கள் அரசர்களால் வெல்லப்படத்தக்கவர்கள். அரசர்களுக்கு உரியவர்களே குடிகளனைத்தும். குடிகளுக்கென உரிமைகளும் உணர்வுகளும் ஏதுமில்லை. ஒவ்வொரு குடிக்கும் உளமுண்டு, தன்னிலை உண்டு, விழைவுகளும் உண்டு என்பது இன்று எழுந்த ஐந்தாம் வேத நெறி.”
“ஒவ்வொரு உயிரும் ஆத்மாவே என்பதும் ஆத்மாவனைத்தும் பிரம்மவடிவமே என்பதும் தன்னை தான் அறிந்து தன்முழுமையில் தானமைய ஒவ்வொரு உயிர்த்துளிக்கும் முற்றுரிமை உண்டு என்பதும் நாராயணவேதத்தின் மெய்ச்சொல்.” அவர் பேசி நிறுத்தியதும் அறைக்குள் அமைதி நிலவியது. அங்கிருந்த சுவடிகளை நோக்கியபடி தீக்ஷணன் அமர்ந்திருந்தான். பொருளில்லாது ஏடுகளை அடுக்கி கலைத்தான். ஜங்காரி சொன்னார் “தொல்நெறிகள் மூன்று யுகங்களாக நாளுமெனப் பெருகி குவிந்திருக்கின்றன. அவற்றிலிருந்து எழும் யுகத்திற்கு உகந்தவற்றை பிதாமகர் பீஷ்மர் தெரிந்து தொகுத்து தன் சொல்லுறுதியை அளித்து நிறுவியிருக்கிறார்.”
“நாராயணவேதத்தின் அறுதியை அவர் படுகளத்தில் உணர்ந்தார். ஆகவே அவர் சொற்கள் மூதாதையரின் ஆணைகளென்றாகின்றன. கிருதயுகத்தில் இருந்து எழுந்து வந்து நாராயணவேதத்தை தொடுபவை அவை. இங்கே எழும் அறத்தின் சொற்கள் என தொடங்கி வரும் காலங்களின் முடிவிலிநோக்கி செல்பவை இங்கே நாங்கள் தொகுக்கும் அமைதிநிறைவின் சொற்கள். யாதவர் நாவிலெழுந்து இனியென்றும் புவிக்கு ஒளிகாட்டும் மூன்றாம் சுடரெனத் திகழப்போகும் தெய்வப்பாடலின் இரு வடிவங்கள் இவை என்று கொள்க!”
இன்னொரு புலவர் “சாந்தியும் அனுசாசனமும் இரு சிறகுகள் என்று ஆகுக! கூட்டுத்தவம் முடித்து எழுக நாராயணவேதம்” என்று வாழ்த்துச் சொல்வரியை சொன்னார். தீக்ஷணன் பெருமூச்சுவிட்டான். “இந்த வேள்வியில் எழும் தொழுகைச்சொல் இது. இனி இச்சொல்லே இங்கு இந்த யுகமெங்கும் திகழும், ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார் ஜங்காரி. அங்கிருந்தோர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர். தீக்ஷணன் எழுந்துகொண்டான். “நீர் கற்பதற்குரிய அனைத்தும் இங்குள்ளன” என்றார் ஜங்காரி. “ஏன் எழுகிறீர்? எங்கு செல்கிறீர்?” தீக்ஷணன் மறுமொழி சொல்லவில்லை. இளையவர் “அவர் நால்வேத வைதிகர் போலும்” என்றார். “அல்ல, நான் வேதமின்மையை நோக்கி செல்ல விழைபவன். இவ்வேதங்கள் அனைத்தும் கோட்டையும் அரண்மனையும் என மாறுவன. வாளும் வில்லும் வேலும் என்றாவன. பொன்னும் மணியும் என்று உருக்கொள்வன. வியர்வையும் கண்ணீரும் குருதியும் உண்டு நிலைகொள்வன. இல்லை என நீங்கள் எவரேனும் சொல்லலாகுமா?” என்றான்.
ஜங்காரி “அவ்வாறே” என்றார். “எச்சொல்லும் அவ்வாறே இங்கு நிலைகொள்ள முடியும். சொல் தன்னை பொருளென்று ஆக்கிக்கொள்ளாது செயலென நிகழமுடியாது. செயலே புவியை ஆள்கிறது. அறமிலா எதிரிக்கு எதிராக படைக்கலம் என எழாது, குருதி குடித்து தருக்காது நிற்குமென்றால் அச்சொல் பதர் என்றே பொருள்படும். இச்சொல்லும் அவ்வாறே நிலைகொள்ளும்” என்றார். “என்றேனும் இச்சொல் எடைமிகுந்து மானுடரால் தாளமுடியாதபடி ஆகுமென்றால் அன்றும் இன்று இவ்வண்ணம் இவரிலெழுந்த ஒன்று மண்கீறி எழும். விண்தொட எழுந்து நிற்கும். அதையும் சொல்கிறது இந்த மெய்வேதம். நன்று காக்க, தீது ஒழிக்க, அறத்தை நிலைநிறுத்த யுகங்கள் தோறும் எழுகிறேன் என்று.”
தீக்ஷணன் தலையை அசைத்தான். “மீளமீள ஒன்றே நிகழ்கிறது. மானுடமென்னும் இச்சிற்றுயிரை எத்தனை முறை தூக்கி எங்கே போட்டாலும் அது தானறிந்த ஒன்றையே வரைகிறது. நேற்று வேதம் ஏன் வன்மைகொண்டது, வழிமறந்தது? அது நிகழ்ந்தமைக்கான ஏதுக்கள் கண்டடையப்படாதபோது இன்று ஒரு வேதம் மானுடத்திற்கு அளிக்கப்படுவதனால் என்ன பயன்?” ஜங்காரி “இத்தகைய வினாக்களால் பயனில்லை. அன்றைய சிறுவயலுக்கு முள்வேலி போதுமென்றிருந்தது. இன்றிருப்பது யானைகளை புறம்நிறுத்தும் பெருங்கோட்டை தேவையென்றாகும் பெருவேளாண்மை” என்றார்.
தீக்ஷணன் குனிந்து அவர் விழிகளை நோக்கி “உத்தமரே, உங்கள் அகம் நோக்கி வினவுகிறேன். குருதிகோராத வேதம் என்று ஒன்று உண்டா?” என்றான். அவர் “எவர் குருதி என்பதே வினா. பலிக்குருதியும் பகைக்குருதியும் படாமல் படைக்கலங்கள் செயல்பட முடியாது” என்றார். “வெறும் சொற்கள்” என்றான் தீக்ஷணன். “நான் கிளம்புகிறேன்” என அவன் கதவை நோக்கி சென்றான். “நீர் சார்வாகரா?” என்று இளைஞன் ஒருவன் கேட்டான். அவனை நோக்காமல் “இல்லை, என்னால் அவர்களையும் ஏற்க முடியவில்லை” என்றான் தீக்ஷணன். “நீர் ஏற்பது எதை?” என்று ஜங்காரி கேட்டார். “அறியேன். நான் மறுப்பதென்ன என்று மட்டும் அறிந்துகொண்டிருக்கிறேன், ஒவ்வொன்றையும் மறுத்து மறுத்தே அதை அறிகிறேன். ஏற்பது என ஒன்றைக் கண்டால் அங்கே நின்றுவிடுவேன்.” இளம் புலவன் ஏதோ சொல்ல முயல ஜங்காரி அவனை கைநீட்டித் தடுத்து “உம்மிடம் சொல்லாடுவதில் பொருளில்லை. நீரே கண்டடைக… நலம் சூழ்க!” என்றார். தீக்ஷணன் தலைவணங்கி வெளியே சென்றான்.