வாழ்வறிக்கை – ஒரு கடிதம்

ஒரு வாழ்வறிக்கை

இனிய ஜெயம்

பிரதாப் சந்திர ராய் அவர்களின் அறிக்கை வாசித்தேன். இங்கே தெற்கில் கும்பகோணம் மகாபாரதம் பதிப்பை கொண்டுவந்த ராமானுஜாச்சாரியார் கதையுடன் இணையும் வியாசரின் வடஇந்திய சீடரின் கதை.

இங்கே அடிப்படைவாதிகள் வசம் ஒரு பார்வை உண்டு. நான் கொண்டது முற்ற முழுதான நன்மை. அவன் கொண்டது முற்ற முழுதான தீமை. எனும் பார்வை அது. அப்படி ஒன்று சமூக உருவாக்கப் பின்புலத்தில் சாத்தியமே இல்லை.

பிரிட்டன் அதிகாரம் இந்தியாவை ஒட்ட ஒட்ட சுரண்டிய வரலாறு, சசி தரூர் நூலில் காணக் கிடைக்கிறது. இதே அளவு, இங்கே இந்திய சமூகத்தில் நேர்மறை எண்ணம் கொண்டு பணியாற்றிய ஆங்கிலேய ஆளுமைகளும் உண்டு.  இந்தியப் பஞ்சங்கள் குறித்து தொடர்ந்து பேசி பிரிட்டன் பார்லிமென்ட் முதல்  அங்குள்ள பொது மனசாட்சி வரை உலுக்கியவர் வில்லியம் டிக்பி.  ரிச்சட் டெம்பிள் அதிகாரியாக இந்திய தானிய வணிக கட்டமைப்புக்கு எதிராக நின்றது, பர்மா போன்ற நிலங்களில் இருந்து உணவு தானியம் இறக்குமதி செய்தது, இவை அனைத்தும் வரலாறு. இப்படி பல ஆளுமைகளின் பங்களிப்பு இங்கே உண்டு.  இன்று அடிப்படைவாதம்பேசுவோர்க்கும் சேர்த்தே  பணியாற்றிவிட்டு சென்றவர்கள்  அன்றைய ஆளுமைகள்.

இவற்றை இப்போது நினைவு கொள்ளக் காரணம் பிரதாப் சந்திர ராய் அவர்கள் நன்றி நவின்றிருக்கும் பட்டியலில் உள்ள பெயர்கள். கொஞ்சம் சிந்தித்தால் கூட போதும், ராய் அவர்கள் பணி புரிந்த காலம் புரியும். தக்காணத்தில் தோன்றி வட இந்தியா மற்றும் தென் இந்தியாவுக்குப் பரவி கோடிகளில் மனிதர்களை காவு வாங்கிய பஞ்சங்கள் வலுவாக நிலை கொண்டிருந்த கால் நூற்றாண்டு பின்புலத்திதான் ராய் பணியாற்றி இருக்கிறார்.

அவர் பணிக்கு உறுதுணை நின்றோர் ஆங்கிலேய அதிகாரிகள், நிஜாம்கள். ராய் சொல்லைக் கடன் கொண்டால் ‘இந்துச் செருக்கு’ அதன் நூலகம் காற்றாடிக் கொண்டிருக்க, ஸ்விங் ஹோ, மாக்ஸ் முல்லர் நூலகங்களும் அவர்களின் உதவியும் துணைக்கு வருகிறது. நிஜாம்கள், பல ஆங்கிலேயர்கள் பின்புலம் இன்றி கிசாரி மோகன் கங்குலி மொழியாக்கம் செய்த, ராய் பதிப்பித்த வியாச பாரதத்தை  உலகம் திருப்பிப் பார்க்க இன்னும் நெடுநாள் ஆகி இருக்கும்.

பஞ்சங்கள் நிலை பெற்ற, பேரழிவின் பின்புலத்தில் வியாசருக்காக நின்றவர்கள் இவர்கள்.  இந்த ஒவ்வொரு ஆளுமைகள் பின்புலத்தை துருவி, தங்கள் கீழ்மைகளை அடையாளம் காணும் கண்ணாடிகளை அடிப்படைவாதிகள் தேடித் கண்டடையலாம்.  வியாசர் இன் யான் தத்துவம் அறிந்தவர் போலும்.  அவர் ராய் பட்டியல் இட்ட ஆளுமைகளைத்தான் இப் பெரும்பணியின் பொருட்டு ‘தேர்வு’ செய்திருக்கிறார்.  ராயின் வாழ்வறிக்கை அளவே, அவ்வறிக்கையில் இடம்பெறும் பெயர்களும் முக்கியமானது.  பேரரசன் தளத்தின் மிக முக்கியமான பதிவு இது,

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் – கடிதம்
அடுத்த கட்டுரைதனிமையின் முடிவில்லாத கரையில்…