படம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம்

 

 

சுரங்கப்பாதைக்கு அப்பால்…

அன்புள்ள ஜெ,

 

சுரங்கப்பாதைக்கு அப்பால் ஓர் அழுத்தமான கட்டுரை. அதை கட்டுரை என்று சொல்ல முடியுமா? புகைப்படங்கள், நினைவு, கவிதை, வாழ்க்கைக்குறிப்பு, பாடல் எல்லாம் கலந்த ஒரு பதிவு. இணையம் வந்தபின்னர்தான் இத்தகைய ஒரு கலைவடிவம் சாத்தியமாகிறது. அந்தக் கலவை ஒவ்வொன்றையும் இன்னொன்று அழுத்தம் கொண்டதாக்குகிறது

 

மலைகளின் பின்னணியில் மதுவுடன், மழையில் நனைந்து அமர்ந்திருக்கும் குமரகுருபரனின் புகைப்படம் கிளர்த்தும் உணர்வுடன் அந்தக்கவிதை ஆழமாக ஊடுருவுகிறது. நஞ்சுபோல இனியது என்ற அந்த வரி உலுக்கிவிட்டது. கூடவே அந்தப் பாடல். சுறுமையணிந்த மிழிகளே. அதில் வரும் தேன்தடவிய முட்கள் என் நெஞ்சில் எறிவது ஏன்? அந்தக் குரலில் இருக்கும் போதையும் கூடவே பெரும் துயரமும்.

 

அதன்பின் பாபுராஜின் வாழ்க்கை. அவர் இழந்ததும் பெற்றதும் தேடியதும். அந்த வாழ்க்கைக் குறிப்பை படித்தபின் மீண்டும் கவிதையையும் படத்தையும் பார்த்தால் ஒவ்வொன்றும் இன்னும் பலமடங்கு அழுத்தமானவையாக ஆகியிருந்தன.

 

ஒருநாள் முழுக்க நீண்ட ஒரு பெரிய அனுபவம். அழுத்தமான ஒரு சிறுகதையோ நாவலோ. அல்லது சினிமா. சினிமாதான் இப்படி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கும் கலை. ஏற்கனவே எழுதியிருந்தேன். பிழை என்ற சிறுகதை இந்த காலகட்டத்தில் மட்டுமே எழுதப்படக்கூடியது. கணிப்பொறி ஊடகத்தில் மட்டுமே வாசிக்கத்தக்கது. அந்தப்பாடலையும் கதையையும் பிரிக்கமுடியாது. அந்த விஷுவல்ஸும் கதையின் அம்சங்கல். அந்த கதைபோன்ற ஒரு நியூ ஏஜ் கட்டுரை இது

 

ஜி.சங்கர நாராயணன்

 

முந்தைய கட்டுரைகண்ணீரைப் பின்தொடர்தல் -கடிதம்
அடுத்த கட்டுரைகவிதை, ஆளுமை, பாவனைகள்