‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76

பகுதி ஏழு : பெருசங்கம் – 8

சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள் ஓர் உயரமான படுக்கையில் மெலிந்து ஒடுங்கிய நீண்ட உடல் மிதந்ததுபோல் கிடப்பதை கண்டார். அதன் பின்னரே அது அம்புப்படுக்கை என்று உணர்ந்தார். அம்புகள் அவர் உடலை தொடாமல் தாங்கியிருப்பதுபோல, அவர் காற்றில் மிதந்து நிற்பதுபோல் தோன்றியது.

அவர் முகமும் தோளும் தோல் மட்கியதுபோல ஒளியிழந்திருந்தன. உடலில் எங்கும் தசையே இருப்பதாகத் தெரியவில்லை. உடலெங்கும் அம்புகள் பதிந்து பொருக்கோடி சிறு புற்றுகள்போல் எழுந்திருந்தன. தாடியும் தலைமுடியும் பெரும்பாலும் உதிர்ந்திருந்தன. கைகளில் நகங்கள் வளர்ந்து சுருண்டிருந்தன. கால்களின் நகங்களும் அவ்வாறே வளர்ந்து சுருள முடியும் என்பதை சுதமன் அப்போதுதான் உணர்ந்தார். அவர் முள்ளில் வந்து படிந்த சருகு போலிருப்பதாக அவர் எண்ணிக் கொண்டார்.

அவர் உடலில் உயிர் இருப்பதாகத் தெரியவில்லை. சுதமன் வானை நோக்கினார். கதிர் வடமுகம் எழுவது நாளை. நாளை முதல்தான் ராஜசூய விழா தொடங்குகிறது. ஆனால் இன்றே அந்நாள் இலக்கணப்படி தொடங்கிவிட்டது. இன்னும் ஒரு நாழிகை. ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தார். இல்லை, உயிர் இருப்பதாகவே அகம் சொல்கிறது. எந்தத் தடயமும் இல்லை, ஆனால் உள்ளம் அவ்வாறே ஆணையிடுகிறது. அவர் முகத்தை கூர்ந்து நோக்கினார். மூச்சு ஓடுவது தெரியவில்லை. நெஞ்சக்குழி அசைவற்றிருந்தது.

அவர் என்ன செய்வதென்று அறியாமல் தயங்கி மருத்துவர்களை பார்த்தார். “சொல்லுங்கள்” என்று முதிய மருத்துவர் சொன்னார். “அவருக்கு கேட்குமா?” என்று சுதமன் கேட்டார். அவர் “இனி சொல்ல முடியாது” என்றார். சுதமன் மேலும் மூச்சை இழுத்துத்தான் தன் சொற்களை கண்டடைந்தார். “பிதாமகரே, நான்…” அவரால் தன்னை அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை. அக்கணத்தில் அச்சொற்கள் பொருளில்லாதவை என்று தோன்றின. “அந்தணனாகிய நான் அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரனின் ஆணைப்படி இங்கு வந்துள்ளேன்” என்றார்.

“அஸ்தினபுரியின் இளையவர் நால்வரும் நான்கு வேள்விப்பரியுடன் சென்று பாரதவர்ஷத்தை வென்று மீண்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாக நாளை எழவிருக்கும் கதிர்மாறு நாளில் அஸ்தினபுரியில் ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. தந்தையெனும் நிலையில் தங்களுடைய அருட்சொல் கோரப்படுகிறது” என்றார். அவர் இமைகள் அசைவதை கண்டார். அவர் “ம்” என்றார். அச்சொல் அவர் வாயிலிருந்து எழுவதா என சுதமன் ஐயுற்றார். அவரிடமிருந்தே எனத் தெளிந்ததும் பெருமூச்சுவிட்டார். “என்னிடம் அஸ்தினபுரியின் அரசர் ஒரு பரிசை அளித்து அனுப்பியிருக்கிறார். அது கீழ்த்திசையிலிருந்து இளையவர் அர்ஜுனனால் கொண்டுவரப்பட்டது. தங்களுக்குரியது அது என அரசர் கருதினார். உடன் ஒரு செய்தியோலையும் அளிக்கப்பட்டுள்ளது.”

அவருடைய இமைகள் அசைந்தன. சுதமன் திரும்பி நோக்கினார். மருத்துவர்கள் வியப்படைந்ததுபோல் தெரியவில்லை. கங்கர்களிடமும் வியப்பு தென்படவில்லை. அவர் ஓலையை எடுத்து உரத்த குரலில் படித்தார். அதன்பின் தன் இடையிலிருந்து அந்த புற்குழலை எடுத்தார். பீஷ்மரின் முகத்தில் புன்னகை தெரிந்தது. சுதமன் அது விழிமயக்கா என திகைத்தார். திரும்பி அனைவரையும் நோக்கினார். புன்னகையேதான். ஆனால் உதடுகளில் தசைகளில் எந்த மாறுதலும் நிகழவில்லை. மூடிய விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. ஐயமே இல்லை, புன்னகைதான்.

அவர் அந்த புற்குழலை வாயில் வைத்து “நான் இதை மீட்டலாமா?” என்றார். “ம்” என்று பீஷ்மர் சொன்னார். சுதமன் இப்போது அவர் குரலே என உறுதிகொண்டார். அவர் உள்ளம் மலர்ந்தது. விந்தையான, அரிதான ஒரு நிகழ்வை அவர் நிகழ்த்தவிருக்கிறார். அதனுடாக அவர் அரியவராக ஆகப்போகிறார். அவரிடம் சொற்கள் பெருகும். அவரைச் சூழ்ந்தமர்ந்து அதை கேட்பார்கள். இன்னும் நெடுங்காலம். அவர் பிறவியின் பொருளே அந்நிகழ்வை கண்டவர், நிகழ்த்தியவர் என்பதாக இருக்கலாம். அவர் அதை தன் உதடுகளில் வைத்து மூச்சை செலுத்தினார்.

அதன் கூரிய ஒலி எழுந்தபோதுதான் குருக்ஷேத்ர வெளியெங்கும் ஒரு பறவையின் அசைவைக்கூட காணமுடியவில்லை என்பதை அவர் நினைவுகூர்ந்தார். காடு மிக அப்பால் பச்சை நிழல்வரம்பு என தெரிந்தது. அங்கே காற்று ஓடும் ஒலிகூட இங்கே கேட்கவில்லை. வெற்றுச் செம்மண் அலைவெளிக்குமேல் பறவைகளின் நிழல்கள் கூட இல்லை. அங்கே பறவைகள் உண்பதற்கு ஏதுமில்லை போலும். எனில் எந்தப் பறவை இதை கேட்கும்? அவர் மீண்டும் மீண்டும் மீட்டி குழல் தாழ்த்தி செவிகூர்ந்தார். பின்னர் மீண்டும் ஒரு முறை மீட்டினார். ஒலி சுழன்று சுழன்று கலைந்து அமைந்தது.

அப்போது ஒரு வானம்பாடியின் குரல் கேட்டது. அது தன் குழலில் இருந்து எழுந்தது என முதலில் எண்ணினார். பின்னர் அவர்களில் எவரேனும் அவ்வொலியை எழுப்புகிறார்களா என்று நோக்கினார். ஆனால் அதற்குள் அவர் அப்பறவையை பார்த்துவிட்டார். அது மூங்கில்மேல் வந்தமர்ந்தது. பாடியபடி எழுந்து இன்னொரு மூங்கில்மேல் அமர்ந்தது. மேலும் எழுந்து காற்றில் தாவி சிறகடித்து அருகே வந்து அமர்ந்து சிறகு பிரித்து அடுக்கி கூவியது. “ம்?” என்றார் பீஷ்மர். சுதமன் பேசாமல் நின்றார். அவர் உதடுகள் அசைந்தன. மிருகாங்கன் உரக்க “பிதாமகரே, நீங்கள் அப்பறவையிடம் உசாவலாம்” என்றார்.

சுதமன் அந்தப் பறவையை பார்த்தார். அது தன் விழிமயக்கல்ல, மெய்யாகவே அங்கே ஒரு வானம்பாடி வந்து அமர்ந்திருக்கிறது. மென்மையான மண்சாம்பல் நிற உடல். சிறிய தலை. அதன்மேல் ஏந்திய பூ என கொண்டை. பீஷ்மர் மெல்ல முனகினார். மிருகாங்கன் அருகணைந்து அவர் வாயருகே செவியை வைத்து சொற்களை கேட்டார். பறவையை நோக்கி “யயாதி” என்றார். பறவை “யயாதி” என்றது. பீஷ்மர் அதை கேட்டார். அவர் முகம் கூர்மைகொண்டு பின் தளர்ந்தது. சற்றுநேரம் கழித்து பீஷ்மரின் உதடுகள் அசைந்தன. மீண்டும் செவிகொடுத்து திரும்பி மிருகாங்கன் “புரு!” என்றார். பறவை அதை திரும்பச் சொல்லவில்லை. சிறகடித்து எழுந்து அமர்ந்தது.

மீண்டும் “புரு” என்றார் மிருகாங்கன். பறவை எழுந்து அமர்ந்தது. “புரு” என்றார் மிருகாங்கன். பறவை எழுந்து சிறகடித்து வீசியெறியப்பட்டதுபோல் காற்றில் தாவி அலைகளில் எழுந்தமைந்து அப்பால் பறந்தது. அது மறைவது வரை நோக்கிவிட்டு மிருகாங்கன் “அது கூறவில்லை, பிதாமகரே” என்றார். பீஷ்மரின் முகத்தில் புன்னகை உறைந்திருந்தது. விழிகள் அசைவிழந்திருந்தன. மிருகாங்கன் “பிதாமகரே…” என்றார். சுதமன் சற்று அருகே சென்றார். மிருகாங்கன் “மருத்துவரே” என அழைத்தார்.

மருத்துவர் அப்பால் நின்று “விலகுக!” என்றார். மிருகாங்கன் விலக அவரை நோக்கி சுதமனும் விலகினார். மருத்துவர் பீஷ்மரின் கையைப் பற்றி நாடியை நோக்கினார். கழுத்திலும் நெஞ்சிலும் கைவைத்து இரு நாடிகளை நோக்கியபின் “பொழுது கணக்கிடுக நிமித்திகரே, பிதாமகர் மண்நீங்கினார்!” என்றார். சுதமன் தன் நெஞ்சு அதிர்வதை கேட்டுக்கொண்டு நின்றார். அவர்கள் எவரும் பதறவில்லை. அந்த நிகழ்வை பலமுறை நெஞ்சுக்குள் ஒத்திகை பார்த்திருப்பார்கள் என்று தெரிந்தது. ஒவ்வொருவரின் பணியும் நன்கு வரையறை செய்யப்பட்டிருந்தது. பழகிய சடங்கு என அனைத்தையும் இயற்றினர்.

மிருகாங்கன் வெளியே சென்று மெல்லிய குரலில் ஏதோ கூற அங்கே நின்றிருந்த இளைய கங்கர் வலம்புரிச் சங்கை எடுத்து வான் நோக்கி அண்ணாந்து மும்முறை ஊதினார். தொடர்ந்து கொம்புகள் மும்முறை ஒலித்தன. மிக அப்பால் ஒரு முரசு ஒலியெழுப்பியது. முரசொலியினூடாக செய்தி அஸ்தினபுரியை இன்னும் சற்றுநேரத்தில் சென்றடையும் என சுதமன் உணர்ந்தார். நிமித்திகர் “மிகச் சரியாக வடக்குமுகம் தொடங்கிய கணம்” என்றார். மிருகாங்கன் சென்று பீஷ்மரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினார். மருத்துவர்களும் நிமித்திகர்களும் அவரை கால் வணங்கினர். கங்கர்கள் நிரையென வந்து வணங்குவதை அவர் நோக்கி நின்றார். மிருகாங்கன் “வணங்குக, அந்தணரே!” என்றார். சுதமன் சென்று பீஷ்மரின் கால்களில் தலை வைத்து வணங்கினார்.

சுதமன் மூச்சை இழுத்து வெளியே விட்டபடி தளர்ந்த காலடிகளுடன் வெளியே வந்து நின்றார். மிருகாங்கன் அருகே வந்து “அரசருக்கு செய்தி சொல்லுங்கள். கிளம்புங்கள்” என்றார். “பிதாமகர்…” என்று சுதமன் சொல்ல “அவரை இன்னும் மூன்று நாழிகையில் கங்கநாட்டுக்கு கொண்டு செல்வோம். கொண்டு செல்வதற்குரிய அனைத்தும் நெடுநாட்களாகவே ஒருக்கப்பட்டு காத்திருக்கின்றன. எங்கள் குடிக்கு செய்தி முரசொலியாக சென்றுவிட்டது” என்றார்.

“அரசரிடம் ஒப்புதல் பெறவேண்டாமா? அவருடைய முதற்குருதி, அவருடைய தந்தை” என்றார் சுதமன். “இல்லை, அஸ்தினபுரிக்கு எங்கள் குலம் அளித்த கொடை, அதை நாங்கள் மீட்டுக்கொள்கிறோம்” என்று மிருகாங்கன் சொன்னார். “அவர் தன்னை கங்கையின் சிறுதுணையாறு ஒன்றின் கரையில் நிலைநாட்டவேண்டும் என ஆணையிட்டிருக்கிறார். அங்கே அவருக்கான ஆலயம் அமையும். எங்கள் குடிமுற்றங்களில் அவர் என்றுமென அமர்ந்திருப்பார். எங்கள் கொடிவழிகளால் வணங்கப்படுவார்.”

சுதமன் தளர்ந்து காலோய்ந்து குடிலை சென்றடைந்தார். அங்கே பாய்மேல் உடலை எடையுடன் அமர்த்தினார். பின்னர் கால்களை நீட்டிக்கொண்டார். விடாயை உணர்ந்து எழுந்து நீர் அருந்தினார். மீண்டும் எழுந்து அமர்ந்தார். குடிலில் இருந்து மரக்குடுவைகளில் மூலிகைத்தேனை கொண்டு சென்றனர். சுதமன் எழுந்துகொண்டு “என்ன செய்கிறீர்கள்?” என்றார். “எங்கள் நிலத்திற்கு பிதாமகரைக் கொண்டுசென்று சேர்க்க நான்கு நாட்களாகும். ஆகவே உடலை பதப்படுத்தவேண்டும். தேனும் மெழுகும் கொண்டு பதப்படுத்தும் எங்கள் குடிமருத்துவர் இங்குதான் சென்ற பல மாதங்களாக இருக்கிறார்” என்றார்.

உள்ளே மூலிகையின் மணம் எழுந்தது. அது கசப்பு என மூக்குக்கு சொன்னது. சுதமன் “நான் கிளம்புகிறேன்” என்றார். அப்பாலிருந்து முரசொலி எழுந்தது. அதை ஒரு கங்கன் செவிகோட்டி கேட்டு மீள் கொம்பொலி எழுப்பினான். மிருகாங்கன் அருகே ஓடிவந்து தாழ்ந்த குரலில் கங்கர்மொழியில் ஏதோ சொன்னார். சுதமன் “என்ன?” என்று கேட்டார். “விந்தைதான், ஆனால் இத்தகைய விந்தைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன” என்று மிருகாங்கன் சொன்னார்.

“பீஷ்ம பிதாமகர் இளமையில் கங்கையின் ஒரு கிளையாற்றை அம்புகளால் அறைந்து அணைகட்டி நிறுத்தியதாக கதை சொல்வார்கள். அங்கே இன்று காலை மெய்யாகவே அணை ஒன்று உருவாகியிருக்கிறது. மானுடர் சமைத்த அணை அல்ல. நீரணில்கள் அதை உருவாக்கியிருக்கின்றன. நீர் தேங்கி மேலேறியிருக்கிறது. பிதாமகரின் ஆலயம் அமையவேண்டிய இடம் அது. காலையில் அதை பார்க்கச் சென்றவர்கள் அந்த அணையைக் கண்டு வியந்து ஊருக்கு ஓடிவந்து செய்தி சொன்னார்கள். அச்செய்தி கிளம்பியதுமே அவர் விண்புகுந்த செய்தி அவர்களை சென்றடைந்திருக்கிறது.”

சுதமன் பெருமூச்சுவிட்டார். “நான் கிளம்புகிறேன்” என்றார். பின்னர் எழுந்துகொண்டு தேரை நோக்கி சென்றார். தேர்ப்பாகன் தேரின் அடியிலேயே அமர்ந்திருந்தான். “செல்வோம்” என்று சொல்லி சுதமன் ஏறிக்கொண்டார். தேர்ப்பாகன் ஏறி அமர்ந்த பின் “இச்செம்மண் பரப்புக்கு அடியில் எலும்புக்கூடுகள் நிறைந்துள்ளன, உத்தமரே” என்றான். “நான் ஒரு கைப்பிடி மண்ணை அகற்றிப் பார்த்தேன். சிரித்த முகம் கொண்ட மண்டை ஓடு. எதை எண்ணி நகைத்தானோ இறைவனே அறிவார்.”

சுதமன் அவன் சொற்களை செவிகொள்ளவில்லை. “இங்குள்ள அத்தனை வெடிப்புகளிலும் நாகங்கள் நெளிகின்றன. அவை நாக உலகுக்கான நுழைவாயில்கள். நாம் நாகங்களுக்குமேல் சென்றுகொண்டிருக்கிறோம்.” சுதமன் தன்னைச் சூழ்ந்து முரசொலிகள் சென்று கொண்டிருப்பதை கேட்டார். தளர்ந்து தேர்த்தட்டில் படுத்துக்கொண்டார்.

 

சுதமன் தேரில் விழித்துக்கொண்டபோது யமுனைக்கரையை அடைந்திருந்தார். “உத்தமரே, படித்துறை” என்று தேரோட்டி சொன்னான். அவர் இறங்கிக்கொண்டு காற்றில் பறக்கும் சால்வையுடன் நின்றார். யமுனையின் கரிய நீர் அந்திவெளிச்சத்தில் ஒளிகொண்டிருந்தது. அதை நோக்கியபடி நின்றபோது அவர் ஓர் உள எழுச்சியை அடைந்தார். நேராக படகு நோக்கி சென்று அதன் பலகை வழியாக ஏறி உள்ளே சென்று அமர்ந்தார். படகோட்டி அவரிடம் “கிளம்புவோமா, உத்தமரே?” என்றான். “கிளம்புக, கீழ்நோக்கி! மகதத்திற்கு” என்றார். “அல்லது அதற்கும் கீழே. அஸ்தினபுரிக்கு அல்ல.”

“உத்தமரே…” என்று அவன் அழைத்தான். “செல்க! செல்க!” என்று சுதமன் கூவினார். “விரைக, விரைக!” படகோட்டி “நாம் அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்லவேண்டும், அரசாணை அது” என்றான். “என் பணி முடிந்துவிட்டது” என்று சுதமன் சொன்னார். “நான் இனி எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. என்னை எவரும் இனி எதிர்பார்க்கப்போவதில்லை. செல்க!” படகோட்டி “ஆனால் நான் அஸ்தினபுரியின் எல்லைவரை மட்டுமே வரமுடியும்” என்றான். “நன்று! எனில் என்னை அடுத்த துறைமேடையில் இறக்கிவிடுக!” அவன் “உத்தமரே” என்றான். “இது என் ஆணை” என்றார் சுதமன். “அவ்வாறே” என படகோட்டி தலைவணங்கினான்.

படகு நீரலைகளை மெல்ல கிழித்தபடி சென்றுகொண்டிருந்தது. அதன் துடுப்புகள் நீரை துழாவும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மீன்கள் தாவுவது போலவும் நீரை மறந்து நினைவு நிலத்தை அடையும்போது ஏதோ விலங்கு நீரை நக்கி குடிப்பது போலவும் அவ்வோசை உளமயக்கு அளித்தது. இருபுறமும் காடுகள் இருள்கொள்ளத் தொடங்கியிருந்தன. பறவைக்கூட்டங்கள் சுழன்று சுழன்று மரக்கூட்டங்களின் மேல் இறங்கின. அல்லது பறந்தெழுகின்றனவா? வானில் செந்நிற முகில்கள் அணைந்துகொண்டிருந்தன. ஓசை கணம் கணமென மாறியது. ஒளி துளித்துளியென அணைந்தது. காலம் உறைந்ததுபோல் நின்றிருந்தது.

அந்தியை அவர் பார்த்தே நெடுநாட்களாகிறது என்று உணர்ந்தார். விழிகளே தான் என அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அஸ்தினபுரியை முற்றாக மறந்துவிட்டிருந்தார். அது நினைவிலெழுந்தபோது கைமறதியாக எங்கோ வைத்துவிட்டதை எண்ணிக்கொண்டதுபோல் அகம் துணுக்குற்றது. அஸ்தினபுரி என்னும் ஒன்று தன்னுள் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். கோட்டை, முகமுற்றம், நெடுஞ்சாலை, அங்காடி, காவல்மாடங்கள், அரண்மனை என்றுதான் நினைவுக்கு வந்தன. அவர் மீள மீள அஸ்தினபுரியை நினைத்துக்கொண்டே இருந்தார். எங்கு சென்றது அது? இத்தனை விரைவில் அகன்றுவிடுமா?

ஒரு கணத்தில் உள்ளம் முரசறைவு என அதிர்ந்தது. அவர் அறிந்த அனைத்தும் அவ்வண்ணம் விலகிச் செல்லலாம். அவர் பிறந்த குடி, அவருடைய அடையாளமென்றான குலம். அவர் கற்ற நூல்கள், சேர்த்துக்கொண்ட அறிதல்கள் அனைத்தும் மறைந்துவிடக் கூடும். அவர் திரும்பி வரவே முடியாதாகலாம். ஒருபோதும் மீளமுடியாத எழுகையா இது? எழுந்த பறவையின் கால்களுக்குக் கீழ் மரம் நிழலென்றாகி மறைந்துவிடும் என்றால்? ஆனால் கிளம்புபவர்கள் எவராயினும் மீண்டு வருவதில்லை. மீள்கையில் விட்டுச்சென்றவை அங்கிருப்பதில்லை.

அவர் அஞ்சி உடல்நடுங்கினார். கைகளை கோத்துக்கொண்டார். “செல்க செல்க செல்க” என தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டார். ஆனால் அவர் உடலில் காய்ச்சல் என வெப்பம் ஏறியது. செல்லுமிடம் அடியிலாதது. அறிந்திராத எதுவும் முடிவிலாததே. அறிவு எனும் ஒளிவட்டத்திற்குள் இச்சிறுவாழ்க்கை. அறியாதவை இருள்வெளியென விண்மீன் பெருக்கென சூழ்ந்திருக்கின்றன. அங்கே செல்லும் ஒரு துளி எங்கு சென்று விழும்? முடிவிலியில், அடியிலில். அச்சொல்லே அச்சுறுத்தியது. முடிவிலி, அடியிலி. இன்மை. அங்கே காத்திருப்பது இன்மை மட்டுமே. இருப்பென நான் திரட்டிவைத்திருப்பன அனைத்தும் அஸ்தினபுரியில் நான் ஈட்டியவை. அவை அழிந்துவிட்ட பின் எவ்வண்ணம் எஞ்சுவேன்?

அவர் எழுந்து நின்று கைநீட்டி “போதும், நிறுத்து. நிறுத்து படகை!” என்றார். படகோட்டி “உத்தமரே…” என்றான். “மீளவும் அஸ்தினபுரிக்கு… திரும்புக… அஸ்தினபுரிக்கே செல்க!” படகோட்டி “ஆணை” என்றான். சுக்கானை திருப்பி படகை ஒருபக்கமாக துழாவி நீர்ப்பரப்பின் மேலேயே வளைத்தான். படகு ஒழுக்கில் செல்கிறது. ஒருவேளை அதனால் திரும்ப முடியாமலேயே போகலாம். அது இவ்வொழுக்கிலேயே சென்று மறையலாம். நான் ஏற்கெனவே என் அஸ்தினபுரியிலிருந்து அறுந்து உதிரத்தொடங்கிவிட்டிருக்கலாம். “விரைக விரைக!” என்று அவர் கூவினார். “விசைகொள்க! விரைவுகொள்க!”

படகு திரும்பி எதிர்த்திசை நோக்கி செல்லத் தொடங்கியதும் அவர் உளம்சோர்ந்து அமர்ந்தார். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். அங்கே அஸ்தினபுரி காத்திருக்கும். கனிந்த அன்னைபோல, உணவுடன் இன்சொல்லுடன். அவர் அமர்ந்தெழுந்த பீடங்கள் அங்கே இருக்கும். அவற்றில் அவர் உடல்பதிந்த மென்மையான தடம் இருக்கும். அவர் உடலின் இனிய வெம்மை எஞ்சியிருக்கும். அவர் ஈட்டிய அனைத்தும் அங்குதான் இருந்துகொண்டிருக்கும். அவர் எதையும் இழக்கவில்லை. இழப்பதைப்போல அறிவின்மை வேறில்லை.

எனில் எதன்பொருட்டு இழக்கத் துணிந்தேன்? ஏனென்றால் அச்சார்வாகரின் சொல். எனக்கு மகிழ்வளிப்பதை செய்யும்படி சொன்னார். அதுவே அறமும் பொருளும் வீடுபேறும் என்றார். எனக்கு அந்நகர் மகிழ்வளிக்கவில்லை என எண்ணிக்கொண்டேன். என் மகிழ்வு விடுதலையில் இருப்பதாக கற்பனை செய்தேன். அவ்விடுதலை என் எல்லைகளுக்கு அப்பால் இருப்பதாக சொல்லிக்கொண்டேன். அறிவின்மை, அறிவின்மையின் எல்லை. சார்வாகரே, நீர் அறிவிலி. நீர் மாய நீர் தேடி அலைந்து சாகும் ஊழ்கொண்ட பேதை. தன் மெய்யான மகிழ்வு எது என்று அறிந்தவர் இங்கு எவர்? ஆணவத்தைக் கடந்து சோம்பலைக் கடந்து தனிமையைக் கடந்து மெய்யான மகிழ்ச்சியை சென்றடைய எத்தனைபேரால் இயலும்?

ஆயிரத்தில் ஒருவரால். அவருக்கு மகிழ்ச்சி அக்கணமே தேடிவந்துவிடும். அவரே துறவி. அவரே படிவர். எஞ்சியோர் மகிழ்வு இது என்று தேடிச் சென்று அல்ல என்று அடைந்ததுமே தெளிந்து மேலும் தேடிச்சென்று அறியாமலேயே அணைந்துவிட ஊழ்கொண்டவர்கள். எளியோர், கீழோர், கட்டுண்டோர், கனியாது உதிரும் ஊழ்கொண்டோர். அவர் விம்மி அழத்தொடங்கினார். அழுந்தோறும் விம்மல்களும் விசும்பல்களும் ஏறி ஏறி வந்தன. படகோட்டி ஒரு சொல் பேசாமல் அவர் அழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். விண்ணகம் மீன்களால் பெருகியிருந்தது. காற்றுவெளியில் குளிரலைகள் நிறைந்திருந்தன. துடுப்புகளை நாவாக்கி ஆறு ஒற்றைச் சொல்லை மீளமீள சொல்லிக்கொண்டிருந்தது. தன் தேம்பல் ஓசையை தானே கேட்டு அவர் அழுதுகொண்டிருந்தார்.

அவர் அழுது அழுது ஓய்ந்து படகில் மல்லாந்து படுத்தார். உடல் எடையற்றிருந்தது. மெல்லிய இனிமை உள்ளத்தில் நிறைந்திருந்தது. சீழ்கட்டிய கட்டி உடைந்தபின் எழும் மெல்லிய எரிச்சலின் தண்மை. அவர் தன்னைக் கடந்து ஒழுகிக்கொண்டிருந்த விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். அவை எங்கோ என பெருகிச் சென்றன.

முந்தைய கட்டுரைவேறுவழிப் பயணம்
அடுத்த கட்டுரைகடவுள் தொடங்கிய இடம்