‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71

பகுதி ஏழு : பெருசங்கம் – 3

சுதமன் அரண்மனைக்குள் நுழைந்ததுமே நேராக சுரேசரின் அறைக்குத்தான் சென்றார். சுரேசர் தன் அறையில் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். நீண்ட நிரைகளாக நின்றிருந்த சிற்றமைச்சர்களும் அலுவலர்களும் அவரிடம் சென்று ஆணைகளைப் பெற்று விலகினர். எழுத்தர்களிடமும் கற்றுச்சொல்லிகளிடமும் உரிய ஓலைகளை பெற்றுக்கொண்டு வெளியே சென்றனர். சுதமன் வந்ததை சுரேசர் பார்த்துவிட்டிருந்தார். அவருடைய பதறிய முகத்தையும் அவர் பார்த்து புரிந்துகொண்டார். ஆனால் அவரால் அந்த அலுவலில் இருந்து விடுபட இயலவில்லை.

சுதமன் ஆணைகளை செவிகொண்டு அங்கேயே நின்றார். அவ்வாணைகள் வழியாகவே அப்பெருநகரம் அவர் சித்தத்தில் விரிந்தது. நகரின் எப்பகுதியின் மக்கள் எந்த நாளில் வேள்விச்சாலைக்கு வரலாம் என்று சுரேசர் வகுத்திருந்தார். ஒவ்வொரு குடியிலும் குடித்தலைவர் எழுவர் மட்டுமே பந்தலுக்குள் அமர ஒப்பப்படுவார்கள். எஞ்சியோர் வெளியே பெருமுற்றத்தில் அமர்ந்து வேதச்சொல்லை செவிகொள்ளலாம். அவிமிச்சம் பெற்று திரும்பிச் செல்லலாம். வேள்விப்புகையால் தலைதொட்டு வாழ்த்தப்படலாம்.

ஒவ்வொருநாளும் ஆண்களுக்கு முன்காலையும் பின்னிரவும் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு முன்உச்சிப்பொழுது முதல் முதல்மாலைப் பொழுதுவரை. ஒவ்வொருவரும் அணியவேண்டிய ஆடைகளும் அணிகளும் வகுக்கப்பட்டிருந்தன. பட்டும் பருத்தியும் மட்டுமே அணியப்படவேண்டும். முனிவர்களன்றி எவரும் மரவுரி அணியலாகாது. தோலாடைகளையும் கம்பளி ஆடைகளையும் எவருமே அணிய ஒப்புதல் இருக்கவில்லை. வேளாண்குடிகள் பச்சை நிறமான ஆடைகள். ஆயர்குடியினர் மண் நிறம். மச்சர்கள் நீல நிறம். ஷத்ரியர் செந்நிறம். வைசியர் மஞ்சள். அந்தணர் வெண்மை. கருநிற அடை அணிய எவருக்கும் உரிமை இருக்கவில்லை.

ஒவ்வொருவரும் அவரவருக்குரிய குடிமுத்திரைகளை நெஞ்சில் பதக்கம் என அணிந்திருக்கவேண்டும். எவரும் தலையணிகள் என எதையும் அணிந்திருக்கலாகாது. பெண்கள் தலையில் மலர்சூடிக்கொள்ளலாம், அணிசெய்து கொண்டிருக்கலாகாது. ஆண்கள் மேலாடைகளை அணிந்திருக்கக் கூடாது. மலர்மாலைகளை தோளில் அணிந்திருக்கலாம். சந்தனம், குந்திரிக்கம் போன்ற மரத்திலெழும் நறுமணங்களுக்கு ஒப்புதல் உண்டு. விலங்கிலெழும் நறுமணங்களான கஸ்தூரி, கோரோசனை, புனுகுக்கு ஒப்புதல் இல்லை.

ஒவ்வொரு குடியினரும் தங்களை முறையாக அறிவித்து பதிவுசெய்து நாளும் பொழுதும் வகுத்துக்கொள்ள வேண்டும். வேள்விச்சாலைக்கு அவர்கள் வருகையில் தங்கள் குடியையும் குலத்தையும் அறிவிக்கும் கொடிகளை ஏந்தியிருக்கவேண்டும். சங்கும் மணியும் அன்றி வேறெந்த இசைக்கலங்களும் வேள்விநகருக்குள் முழக்கப்படலாகாது. வேதமுதல்வர்களாகிய தெய்வங்களையும் வேள்விக்காவலனாகிய அரசனையும் அன்றி எவரையும் வாழ்த்தி சொல்லெடுக்கலாகாது. அந்த நெறிகள் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் அறிவிக்கவேண்டியிருந்தது.

அறிவிக்குந்தோறும் அவற்றில் ஐயம் எழுந்துவந்தது. விலங்கிலெழும் நறுமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்று அறிவிக்கப்பட்டதுமே தென்கலிங்கக் கடற்கரையிலிருந்து பெயர்ந்துவந்த மச்சர்குடிகளில் ஒன்று சிப்பியில் இருந்து எடுக்கப்படும் ஒரு நறுமணத்திற்கு ஒப்புதல் உண்டா என்று வினவியது. ஆகவே விலங்கு என்பது அசைவுயிர் என மாற்றப்பட்டது. எனில் மண்ணிலிருந்து எடுக்கப்படும் உப்புகளை நறுமணமென அணியலாமா என்ற வினா எழுந்தது. நறுஞ்சுண்ணம் அணிய ஒப்புதல் இல்லை என்பதனால் அகழ்வுப்பொருட்களில் இருந்து எடுத்த எவையும் ஒப்பப்படாது என்று தெளிவுறுத்தப்பட்டது.

நகரமெங்கும் முந்நூறு அன்னநிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குரிய அடுமனைகளும் அருகிலேயே கட்டப்பட்டிருந்தன. அவற்றுக்குரிய களஞ்சியங்களும் அருகிலேயே அமைக்கப்பட்டு அங்கிருந்து அடுமனைக்கு தனியான சாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அடுமனைக்கும் வெவ்வேறு ஆட்சியாளர்கள் பொறுப்பளிக்கப்பட்டிருந்தனர். பத்து ஆட்சியாளர்களுக்கு ஒரு தலைவர். அவர்கள் அனைவருக்கும் பெருஞ்சூதர் சுபாகரர் கோன்மை கொண்டிருந்தார்.

அதேபோலவே களஞ்சியப்பொறுப்பாளர்களும் நிறுவப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் சம்பூதர் தலைமைகொண்டிருந்தார். இருவருடைய அறைகளும் அரண்மனையின் வலப்பக்கம் அருகருகே என அமைந்திருந்தன. அங்கே ஒவ்வொரு கணமும் தூதுப்புறாக்கள் வந்தமர்ந்து எழுந்து பறந்துகொண்டிருந்தன. செய்திவீரர்கள் புரவிகளில் வந்திறங்கி மீண்டுசென்று அவர்களின் முற்றம் நீர்ச்சுழி என சுழன்றுகொண்டிருந்தது. களஞ்சியங்களின் இருப்பை அறிவிக்கும் பலகை ஒன்று சம்பூதரின் முன் அமைந்திருந்தது. ஒரு சூதர் அதன் முன் நின்று அவருக்கு வரும் செய்திகளை அதில் வரைந்துகொண்டே இருந்தார். களஞ்சியம் நிறைந்து ஒழிந்து நிறைந்துகொண்டே இருந்தது. அவர் அதை நோக்கி பதற்றமும் ஆறுதலும் கொண்டார்.

நகரின் போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் பொறுப்பு இளம்படைத்தலைவியான நிஷாகரிக்கு அளிக்கப்பட்டிருந்தது. நகரின் திரளை மேலிருந்து நோக்கும் பொருட்டு நூறு காவல்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குமேல் இருந்த காவல்வீரர்கள் வெவ்வேறு வண்ணக்கொடிகளை அசைத்து நகரின் தெருக்களின் செய்திகளை அறிவிக்க, அரண்மனையின் மேலிருந்த காவல்மாடத்தில் அமர்ந்திருந்த பதினெட்டு ஓவியர்கள் அச்செய்தியின் அடிப்படையில் நகரின் தெருக்களை வரைந்தனர். சாலைகளில் நெரிசல்களை ஏழு வண்ணங்களில் அவர்கள் காட்டினர்.

அந்த ஓவியப்பலகையை நோக்கி நிஷாகரியின் அறைமுகப்பில் இருந்த ஓவியப்பலகையை வரைந்துகொண்டிருந்தான் இன்னொரு ஓவியன். நிஷாகரி எப்போது விழிதூக்கினாலும் அவள் கண்முன் நகரம் தெரிந்துகொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு தெருவையும் அவள் அங்கிருந்தே கண்டாள். தன் அறையிலிருந்தே நகரின் நெரிசலை ஆட்சிசெய்தாள். “அங்காடித்தெருவில் ஏன் அத்தனை திரள்? அவர்களை அங்கிருந்து அகற்றுக!” என அவள் ஆணையிட்டால் அந்த ஆணை உடனே கொடியசைவாக மேலே சென்றது. கொடிகளினூடாகவே சென்று சேர்ந்து அக்கணமே அங்காடித்தெருவை நோக்கி குதிரைப்படைப்பிரிவு ஒன்று சென்றது.

நெருப்புக்காவலுக்கு தனி அமைச்சு செயல்பட்டது. நகரமெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூங்கில்மேடைகளில் கங்கையின் பெரிய படகுகள் ஏற்றிவைக்கப்பட்டு அவற்றில் நீர் ஊற்றி நிரப்பப்பட்டிருந்தது. அத்திரிகளும் காளைகளும் மேலும் நீரை மேலே ஏற்றிக்கொண்டிருந்தன. எங்கேனும் அனல் எல்லைமீறுமென்றால் அருகிருக்கும் படகிலிருந்து நீரை அள்ளி ஊற்றி அணைக்க அந்த மேடைகளுக்குக் கீழேயே எரிகாவலர் இருந்தனர். அவர்களுக்கு ஒளிவிடும் செந்நீலநிறத்தில் தலைப்பாகைகளும் ஆடைகளும் அளிக்கப்பட்டிருந்தன.

“அனைவர் தலைக்கும் மேலாக ஓர் ஏரி நின்றிருக்கிறது இன்று” என்று சூதன் இளிவரல் பாடினான். “அஸ்தினபுரியின் மேல் நாம் மழைமுகிலை சமைத்துள்ளோம்!” எரிகாவலர்கள் பதின்மர்குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். பத்து குழுக்களுக்கு நூற்றுவனும் பத்து நூற்றுவருக்கு ஆயிரத்தவனும் இருந்தனர். ஆயிரத்தவர்களை ஆள படைத்தலைவி பிராதை அமர்த்தப்பட்டிருந்தாள். “இங்கே பணியாற்றாமலிருக்கும் பொருட்டு பணியாற்றிக்கொண்டிருக்கிறாய் நீ” என்று அவளை சுரேசர் ஏளனம் செய்தார். அவள் பதற்றத்துடன் தன் முகவாய் வியர்வையை துடைத்து “ஆம், அமைச்சரே” என்றாள்.

நகரெங்கும் குடிநீர் வழங்குவதற்கான பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊற்றுநிலைகள் அதற்கான அமைச்சால் ஆளப்பட்டன. கழிப்பறைகளுக்குரிய அமைச்சு அதற்கு அருகே அமைந்திருந்தது. கங்கையின் ஓரமாகவே வேள்விக்கு வரும் அரசர்கள் தங்குவதற்கான மாளிகைகள் மென்மரத்தால் கட்டப்பட்டன. ஒவ்வொரு மாளிகையுடனும் ஒரு படகுத்துறை இணைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் வந்துசேரவும் பயணிகள் வந்திறங்கவும் வெவ்வேறாக நூற்றெட்டு படித்துறைகள் கங்கைக்கரையில் அமைக்கப்பட்டன. அங்கிருந்து வேள்விச்சாலைக்குச் செல்ல தனியாக அரசப்பாதை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அப்பணிகளை துணையமைச்சரான புண்டரீகர் நோக்கி நடத்தினார்.

ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிந்துகொண்டே இருந்தன. விலங்குகளைப் பேணும்பொருட்டு அமைக்கப்பட்டிருந்த அமைச்சின் பொறுப்பு படைத்தலைவர் பஞ்சஜித் தலைமையில் அமைந்திருந்தது. அது ஏழாக மேலும் பிரிக்கப்பட்டது. யானைகள், புரவிகள், காளைகள், பசுக்கள், அத்திரிகள், கழுதைகள், வேட்டைநாய்கள் என ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனியான துணையமைச்சுகள் உருவாயின. அவற்றில் புரவிகளுக்குரிய அமைச்சு மேலும் ஐந்தாக பிரிக்கப்பட்டது. படைப்புரவிகள், பயணப்புரவிகள், பணிப்புரவிகள், அரசுப்புரவிகள், அணிப்புரவிகள் வெவ்வேறு பணித்தலைமைகளால் புரக்கப்பட்டன.

பிரியும்தோறும் பணிகள் எளிதாயின. ஆனால் ஒருங்கிணைப்பு மெல்லமெல்லத்தான் உருவாகி வந்தது. ஒவ்வொருநாளும் எழுந்து வந்துகொண்டிருந்த புதிய இடர்களைக் கண்டு சுதமன் சலிப்படைந்தார். சுரேசர் சிரித்தபடி “எந்த அமைப்பை உருவாக்கினாலும் முதலில் இடர்கள் எழுந்து வரும். முறையீடுகள் பெருகும். அவை நன்று. அந்த இடர்களுக்கு நாம் அளிக்கும் செல்வழிகள், அம்முறையீடுகளுக்கு நாம் காணும் தீர்வுகள் வழியாகத்தான் இவ்வமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நெறிகள் உருவாகி வருகின்றன. இத்தனை சிக்கல்கள் எழுவதென்பது இந்த அமைப்புக்கள் செயல்படுகின்றன என்பதற்கான சான்று. சிக்கல்கள் பெருகப்பெருக நெறிகள் பெருகும். நெறிகள் அமையுந்தோறும் சிக்கல்கள் குறையும். பின்னர் ஆணைகளின்றியே இவை இயங்கலாகும். ஆகவே நாம் இப்போது செய்துகொண்டிருப்பது ஆளும் பணி அல்ல அமைக்கும் பணி” என்றார்.

சுரேசரிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முறையிட்டனர். ஒவ்வொருவருக்கும் தங்கள் கோன்மையின் எல்லை என்ன என்பதே சிக்கலாக இருந்தது. அவர்களின் பணியெல்லை அக்கோன்மை எல்லையைக் கடந்து விரிந்திருந்தது. ஆகவே அவர்கள் இன்னொருவரின் பணியெல்லைக்குள் தலையிட்டனர். அது ஆணவமோதலாகியது. ஆணைக்குழப்பங்களை உருவாக்கியது. மேல்கீழ் அடுக்கை குலைத்தது. ஒருவருடன் ஒருவர் ஒத்திசைந்தே ஒவ்வொன்றையும் செய்யவேண்டியிருந்தது. ஆனால் இசைவு என்பதற்கும் பணிதல் என்பதற்கும் இடையே நுட்பமான வேறுபாடே இருந்தது.

சுரேசர் ஒவ்வொன்றுக்கும் தெளிவான ஆணைகளை பிறப்பித்தார். ஒருவரின் கோன்மையின் எல்லையை இன்னொருவர் கடப்பதாக இருந்தால் அதை முறைப்படி அவருடைய ஒப்புதலைப் பெற்று செய்க, அதை ஒரு பணிக்கென மட்டுமே செய்க, எப்போதைக்குமென கொள்ளாதொழிக, ஒவ்வொரு செயலையும் முறைப்படி பதிவுசெய்க என்று அவர் மீள மீள சொல்லிக்கொண்டிருந்தார். தன் நோக்கத்தை தெளிவுற உணர்த்தாமல் பிறிதொருவரின் எல்லைக்குள் நுழைவது ஒழிக என ஆணையிட்டார்.

அவர் இறுதியாக இட்ட ஆணை நீர்நிலைகளில் இருந்து தன் கட்டுப்பணிக்கு ஓடை ஒன்றை வெட்டிக்கொண்ட ஆட்சியாளருக்கு. அவர் அதை நீர் மேலாட்சி செய்பவரிடம் சொல்லவில்லை. “நீரின்றி எப்படி எழுப்புவது?” என்று அவர் மீளமீள கேட்டுக்கொண்டிருந்தார். நெறிகளை சுரேசர் மீண்டும் ஒருமுறை அவரிடம் சொன்னார். அவர் முகம் அதை விளங்கிக்கொண்டதுபோல காட்டவில்லை. “ஆணை” என்று மட்டும் சொல்லி விலகினார். சுரேசரின் தொண்டை அடைத்திருந்தது. அவர் சற்றே இளைப்பாறினார். ஓர் ஏவலன் அவருக்கு சுக்கு போடப்பட்ட இளவெந்நீரை அளிக்க அதை அருந்தினார்.

அவர் சாய்ந்துகொண்டதும் சுதமன் அருகே சென்று நின்றார். “சொல்க!” என்றார் சுரேசர். “நான் புரவிக்கொட்டிலுக்கு சென்றிருந்தேன்” என்றார் சுதமன். “அங்கே முழுமையான காவல் இருந்தது. ஆனால் நான் அங்கே ஓர் அரசநாகத்தை கண்டேன்.” நிகழ்ந்ததை அவர் சுருக்கமாக சொல்லி முடித்தார். சுரேசர் முகவாயைத் தடவியபடி அதை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் விழிகள் மங்கலடைந்திருந்தன. “நாகங்களை தடுக்க இயலாது. அந்நிலையில் அவற்றின்மேல் ஒரு போர் தொடங்குவதில் பொருளில்லை” என்று சுதமன் சொன்னார். “ஆனால் நாம் அவற்றை அஞ்சியாகவேண்டும். அவர்கள் நம்மை அழிக்குமிடத்திலேயே இன்றும் இருக்கிறார்கள்.”

“என்ன செய்யலாம் என நினைக்கிறீர்?” என்றார் சுரேசர். “அவர்களுக்கான இடத்தை நாம் அளித்தாகவேண்டும். அவர்களின் காண்டவப் பெருங்காட்டை நாம் அழித்துவிட்டோம். அவர்கள் வாழ்ந்த நகர்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவர்களுக்கு என்ன தேவை என்று அரசர் உசாவவேண்டும். அவர்கள் நிறைவுறும் பிழைநிகர்ச் செயல்பாடுகளை இயற்றவேண்டும். இந்த வேள்வியின்போதே அது நிகழவேண்டும்” என்றார் சுதமன். சுரேசர் “ஆம், அதை நான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “நான் இந்த அரண்மனையிலேயே இருமுறை நாகங்களை பார்த்துவிட்டேன்.”

சுதமன் “நாம் அரசரிடம் சொல்வோம். நாம் அவர்களை வெல்ல இயலாது. அவர்களின் உலகம் நம் காலடிக்குக் கீழே இருக்கிறது” என்று சொன்னார். சுரேசர் “அரசர் அதை எவ்வண்ணம் ஏற்றுக்கொள்கிறார் என்று அறியேன். ஆனால் நம் பணி அதை அவரிடம் சொல்வதே” என்றார். சுதமன் “நகரில் சார்வாகர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். நகர்ச்சதுக்கங்களிலேயே அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். காபாலிகர்களும் காளாமுகர்களும் மாவிரதர்களும் பாசுபதர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நம் மீது வஞ்சமோ பகையோ கொண்டிருந்தால்கூட அவர்களைப் பணிந்து அவர்களின் வாழ்த்துக்களையே பெற்றுக்கொண்டிருக்கிறோம். நாகர்களையும் அவ்வண்ணமே கருதவேண்டும்” என்றார்.

சுரேசர் எழுந்துகொண்டு “வருக, நாம் அரசரிடம் நேரிலேயே பேசுவோம்!” என்றார். சுதமன் திகைத்து “நானா! அரசரிடம் நான்…” என்று சொல்ல “நீர் வரவேண்டும். இறுதியாக பாம்பைக் கண்டவர் நீர்” என்றார் சுரேசர். ஒற்றன் ஒருவன் தலைவணங்கினான். “சொல்க!” என்றார். “அரசர்களுக்கு தூதுசெல்லவேண்டிய அந்தணர்களின் நிரையை அறுதிசெய்திருக்கிறார் இளவரசர் யுயுத்ஸு. அதை தாங்கள் ஒருமுறை நோக்குவது நன்று” என்றான். “ஆம், அதை இன்றே முடிவுசெய்யவேண்டும்” என்றபின் சுரேசர் “வருக” என்று நடந்தார். தயக்கத்துடன் சுதமன் உடன் சென்றார்.

 

யுதிஷ்டிரனின் அறைக்குள் ஏற்கெனவே பலர் இருந்தனர் என்பது கதவு திறந்தபோது எழுந்த உரையாடல் ஓசையிலிருந்து தெரிந்தது. அவர்களையும் உள்ளே வரும்படி அவர் ஆணையிட்டார். உள்ளே நுழைந்ததும் சுரேசர் தலைவணங்கி நிற்க “அமர்க”! என்று கைகாட்டிவிட்டு யுதிஷ்டிரன் சகதேவனிடம் திரும்பினார். அப்பால் நகுலன் அமர்ந்திருந்தான். நான்கு அரசத்தூதர்கள் அச்சிறிய அறைக்குள் இருந்தனர். யுதிஷ்டிரன் ஏற்கெனவே சீற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்ததை மேலும் சீற்றத்துடன் தொடர்ந்தார்.

“எதுவும் பழைய முறைப்படி நடந்தாகவேண்டும் என்பதில்லை. முறைமை என்பது உளம்கோணாதபடி அனைத்தும் நிகழவேண்டும் என்பதற்காகவே… வரவிருக்கும் அரசர்களின் படிநிலை என்ன என்பதை அவர்கள் முடிவுசெய்யவேண்டியதில்லை. அவர்கள் அதை நமக்கு அறிவிக்கவும் வேண்டியதில்லை. இந்த மச்சநாட்டு அரசன் மந்தரன் என்ன சொல்கிறான்? அவன் நம் அவைக்கு வந்து வேள்விமண்டபத்தில் அமரவேண்டும் என்றால் நாம் அவனை பணியவேண்டுமா என்ன?” என்றார்.

நகுலன் சுரேசரை நோக்கிவிட்டு “அவ்வாறல்ல. அவன் சொல்வது மச்சர்குலத்தில் அவனுக்கு ஒரு முன்நிலை முன்பே உள்ளது என்று. அதை கருத்தில்கொண்டு நாம் அவனை அழைத்திருக்கவேண்டும் என்கிறான்” என்றான். “ஆனால் அவனைவிட பிரஜங்கன் மேலும் பெரிய படைவல்லமை கொண்டவன். அவனை நாம் இரண்டாம்நிலையில் வைக்க முடியாது.” யுதிஷ்டிரன் “ஏன்? எவரை எங்கே வைப்பதென நாம் முடிவுசெய்வோம். அவன் வரவில்லை என்றால் அவனை கட்டி இழுத்துவர நம் படைகள் செல்லட்டும். முடிசூடி வர மறுத்தான் என்றால் தளையிடப்பட்டு நகர்நுழையட்டும்” என்று கூவினார்.

சகதேவன் “மூத்தவரே, இந்த வேள்வியை நடத்துவதைப் பற்றிய பேச்சு அல்ல இது. இங்கே நாம் பாரதவர்ஷத்தை ஒருங்கிணைத்து எப்படி ஆட்சி செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியது. இவர்கள் பாரதம் முழுக்க பரவியிருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஆற்றல்பெற்று எழுந்து கொண்டிருக்கிறார்கள். வரும்காலம் முழுக்க இவர்களுடன் நாம் போரிட்டுக்கொண்டே இருக்கமுடியாது. போர் வழியாக எவரும் எந்த நாட்டையும் நிறுவி நிலைநாட்ட இயலாது” என்றான். “இவர்கள் நம்மை தலைமை என ஏற்கவேண்டும். அதற்கு இவர்களுக்கு நாம் பயனுள்ள சிலவற்றை அளிக்கவேண்டும், அவர்கள் நமக்கு அதற்கு விலையாகவே ஏற்பை அளிப்பார்கள்.”

“படை இன்றி ஏற்பில்லை” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், ஆகவேதான் நாம் தலைமைகொள்கிறோம்” என்றான் சகதேவன். “ஆனால் படையை மட்டும் கொண்டு ஏற்பை உருவாக்க முடியாது. இவர்கள் நம்மை ஏற்பது நாம் புதிய வேதத்தின் காவலர்கள் என்பதனால். இவர்களை நாம் இனிவரும் வரலாற்றில் நிலைநிறுத்துவோம் என்பதனால். சென்ற யுகத்தில் பரசுராமரின் மழு இயற்றியதை இன்று இளைய யாதவரின் ஆழி இயற்றுகிறது. எழுகின்றன பலநூறு புதிய ஆட்சியாளர்களின் குடிகள். அவர்களை நாம் ஒருங்கிணைக்கவேண்டும் என்றால் அவர்களுடன் ஒருபோதும் நாம் பூசலிடக்கூடாது.”

“அவர்கள் நம்மை அஞ்சவேண்டும். ஆனால் எதிர்க்கக் கூடாது. நாம் அவர்களில் ஒருவரை வெல்லலாம், தண்டிக்கலாம். ஆனால் அது பிறரிடம் அச்சத்தை மட்டுமல்ல வஞ்சத்தையும் உருவாக்கும். வஞ்சம் அச்சத்தை கடக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. வஞ்சமில்லாத அச்சமே நீடிப்பது” என்று சகதேவன் சொன்னான். “அவர்களில் ஒருவரை நாம் அழித்தால்கூட அந்த நிலை தங்களுக்கும் எதிர்காலத்தில் அமையும் என அவர்கள் அஞ்சுவார்கள். அதன்பொருட்டு திட்டமிடுவார்கள். தங்களை ஒருங்கு திரட்டிக்கொள்வார்கள். இன்று அவர்கள் திரளவில்லை. அவ்வாறு திரண்டார்கள் என்றால் பாரதவர்ஷம் முழுக்க செலுத்தும் படையாற்றல் நம்மிடம் இல்லை, எவருக்கும் அது அமையமுடியாது.”

யுதிஷ்டிரன் சலிப்புடன் “என்ன செய்யவேண்டும் என்று சொல்” என்றார். சகதேவன் “பூசல் நிகழவேண்டும் என்றால் அவர்களுக்குள் நிகழட்டும். பிரஜங்கன் மந்தரனை சிறைப்பிடித்து அழைத்துவரட்டும்” என்றான். “ஆம், அதைச் செய்ய ஆணையிடுகிறேன்” என்றார். “அவர்கள் பூசலிட்டால் நாம் இன்னொருவரைக்கொண்டு இருவரையும் வெல்வோம்.” சுரேசர் உள்ளே நுழைந்து “ஒரு சொல், அரசே” என்றார். “சொல்க!” என்று யுதிஷ்டிரன் திரும்பினார். “அதை மறுதிசையில் செய்யலாமே? மூத்த குடியினனான மந்தரன் சென்று ஆற்றல்மிக்கவனாகிய பிரஜங்கனை முறைப்படி வேள்விக்கு அழைத்துவரட்டும். மந்தரனுக்கு உரிய மதிப்புடன் அரசரின் ஓலை செல்லட்டும், பிரஜங்கனை அரசர் பொருட்டு அவரே சென்று அழைத்துவரவேண்டும் என்று.”

யுதிஷ்டிரன் “ஏன், அதனால் என்ன?” என்றார். “அரசே, மந்தரன் நாடுவது குடிப்பெருமை. அரசரே தன் பொருட்டு அவனிடம் செல்லும்படி சொன்னால் அவன் அதை இழப்பதில்லை. பிரஜங்கனுக்குத் தேவை, குடியின் மெய்யான தலைமை. அதை அவனும் பெறுகிறான்” என்றார் சுரேசர். சகதேவன் “அதுவே உகந்தது. அவர்கள் தாங்களே தங்கள் அமைப்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும். தங்கள் முறைமைகளை அவர்களே நிலைநாட்டவேண்டும். நாம் அந்த அமைப்பும் முறைமையும் நமக்கு உகந்ததாக உள்ளனவா என்று மட்டும் நோக்கினால் போதுமானது, இல்லையென்றால் அவர்களின் விசையைக்கொண்டே அதை நமக்குரிய வகையில் சற்றே திருப்பிக்கொண்டால் மட்டும் போதும்” என்றான்.

நகுலன் “அவர்கள் ஏற்கெனவே குலமுறைகளையும் நெறிகளையும் கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றியமைப்பதென்றாலும் அவர்களே செய்யவேண்டும். நாம் அதில் நம் ஆற்றலை செலுத்தலாகாது” என்றான். யுதிஷ்டிரன் “எனில் அவ்வாறே அகுக!” என்றார். சகதேவன் “ஆணைகளை பிறப்பிக்கிறோம்… செல்க!” என்றான். அவர்கள் ஒவ்வொருவராகச் சென்றபின் யுதிஷ்டிரன் திரும்பி சுதமனை நோக்கினார். “இவர் துணையமைச்சர் அல்லவா?” என்றார். “ஆம்” என்று சுரேசர் சொன்னார். “இவர் இன்று ஒரு செய்தியுடன் வந்தார். நான் ஏற்கெனவே அறிந்த செய்திதான். ஆனால் இதை அவர் வந்து சொன்னபோதுதான் நான் முடிவை எடுத்தேன்” என்றார். “சொல்க!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். நகுலன் தன்னை கூர்ந்து நோக்குவதைக் கண்டு சுதமன் திகைத்து தலைகுனிந்தார்.

சுரேசர் “சொல்க!” என்றார். சுதமன் திடுக்கிட்டு சூழ நோக்கியபின் எச்சில் விழுங்கி “நான் வேள்விப்பரிச்சாலையில் இன்று ஓர் அரச நாகத்தை கண்டேன்” என்றார். சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதை உணர்ந்து வாய் உலர்ந்து நின்றார். யுதிஷ்டிரன் விழிகளைச் சுருக்கி “அங்கே காவல் இல்லையா?” என்றார். “காற்றுக்கும் நாகத்திற்கும் காவல் இல்லை என்பார்கள்” என்று சுதமன் சொன்னார். “நாகர்கள் நுழைய முடியாத இடம் என ஒன்றில்லை. அந்த நாகம் தற்செயலாக வந்திருக்கலாம். ஆனால் அது இளையவர் பார்த்தனின் பரியின் அருகே சென்றமை எனக்கு ஐயத்தை உருவாக்குகிறது.” சுரேசர் “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்’ என்றார்.

நகுலன் “அந்தக் குதிரை நாகத்தின் மணத்தை உணரவில்லையா?” என்றான். “இல்லை” என்றார் சுதமன். “எனில் அது வெறும் நாகம் அல்ல” என்று நகுலன் சொன்னான். “அது இலக்கு கொண்டது.” யுதிஷ்டிரன் “நாம் என்ன செய்யமுடியும்? பாரதவர்ஷத்தையே வென்றிருக்கிறோம். நாம் இவர்களை வெல்லமுடியாதா என்ன?” என்றார். “முடியாது, தெய்வங்கள்கூட நாகர்களை வெல்லமுடியாது” என்று நகுலன் சொன்னான். “என்ன செய்வது? சொல்லுங்கள், அவர்களை அடிபணியவேண்டுமா? மைந்தரையும் தந்தையரையும் உற்றாரையும் இழந்து நாம் பெற்ற அனைத்தையும் அவர்களுக்கு அளித்து முடிகீழே வைக்கவேண்டுமா?”

சுரேசர் “தொல்கதைகள் அனைத்தும் காட்டுவது ஒன்றே, நாகர்களை வெல்லலாம், ஆனால் அழிக்கமுடியாது” என்றார். “அவர்களை வென்றபின் நம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். ஆழியமைந்தவனின் படுக்கைபோல, அனல்வண்ணனின் அணிபோல, ஆறுமுகனின் அடித்துணைபோல, அன்னையின் விரல் ஆழிபோல நம்முடன் அவர்களும் இருக்கவேண்டும், அது ஒன்றே வழி.” யுதிஷ்டிரன் “அவர்களா, இங்கா?” என்றார். சுரேசர் “ஆம், இங்குதான். அவர்களுக்கான இடத்தை அளித்தாகவேண்டும்” என்றார். “எப்படி? அவர்களை நாம் அழித்திருக்கிறோம். அவர்களின் வஞ்சம் நம்மைச் சூழ்ந்துள்ளது” என்றார் யுதிஷ்டிரன்.

“ஆம், ஆனால் குருக்ஷேத்ரம் அனைத்து வஞ்சங்களும் எரிந்தணைந்த சிதை. அவர்களுக்கும் அவ்வாறே. அவர்களுடன் நாம் பேசுவோம். அவர்களுக்குரியனவற்றை அளிப்போம்.” யுதிஷ்டிரன் “எப்படி, எவரினூடாக?” என்றார். “இரு வழிகள் நமக்குள்ளன” என்றார் சுரேசர். “மூன்றாமவரின் துணைவி உலூபியின் குலம் இன்றும் நமக்கு அணுக்கமானது. நாகர்களின் தலைமையை அவர்களுக்கு அளிப்போம். அரவானுக்கு நம் நகரில் ஒரு ஆலயம் எழட்டும். அதற்கு உலூபியின் குடியினர் வந்து அவர்களின் முறைப்படி பூசனை செய்யட்டும். அந்த ஆலயமே அவர்களுக்குரியதாகட்டும். அரசர் தன் மணிமுடியுடன் சென்று அவர்களின் தெய்வத்தின் முன் பணியட்டும்… அந்த ஆலயம் வழியாக இந்த நகரில் அவர்கள் விழையும் இடத்தை அளிக்கமுடியும்.”

யுதிஷ்டிரன் “ஆம், அது ஒரு வழிதான்” என்றார். “அரவானின் இளையோன் நாகர்குலத்து அரசனாக மணிமுடி சூடட்டும். அவனுக்கு நம் அவையில் ஷத்ரியர்களுக்கு நிகரான இடத்தை அளிப்போம். அவன் குலத்துடன் உறவுகொள்ளும் நாகர் குலங்கள் அனைத்தும் நமக்கு குருதியுறவு கொண்டவை என அறிவிப்போம்” என்று சுரேசர் தொடர்ந்தார். “நம் குடியில் இருந்தே அவனுக்கு இளவரசியரை அளிக்க முடிந்தால் மேலும் நன்று.” யுதிஷ்டிரன் புன்னகைத்து “அதைத்தான் நிஷாதருக்கும் அரக்கருக்கும் அசுரருக்கும் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கிறோம்” என்றார். “ஆம், அதை நான் குருதிப் பங்கீடு என்பேன். இன்று நாம் செய்யவேண்டியது அதையே” என்றார் சுரேசர்.

“நமக்கு இன்னொரு தொடர்பும் உள்ளது. அங்கநாட்டரசர் கர்ணன் நாகர்களின் தலைவன் என்று இன்று போற்றப்படுகிறார். நாகபாசன் என அவரை அவர்கள் ஆலயம் அமைத்து வழிபடுகிறார்கள். நம் ஆலயங்கள் அனைத்திலும் நாகபாசனுக்கு கருவறைகள் அமையட்டும். நம் அரசகுடியின் பூசனைக்குரியவராக அவர் ஆகுக! நம் வேள்வியில் அரசகுடியின் மூதாதையருக்கு அளிக்கப்படும் அவியன்னப் படையலில் நாகபாசனுக்கும் ஒரு பங்கு அளிக்கப்படட்டும்.”

யுதிஷ்டிரன் “அது வழக்கம்தான்… மூத்தவர் எங்கள் முன்னோர் நிரையில் அமர்ந்திருப்பவர்” என்றார். “அது நாகபாசன் என்னும் பெயரால் அளிக்கப்படவேண்டும்” என்று சுரேசர் சொன்னார். “அதை அங்கநாட்டை ஆளும் கர்ணனின் கடைமைந்தரே முன்னின்று செய்யட்டும். அங்கநாட்டு அவையில் நாகர்குலத்தார் எவரும் இடம்பெறலாம் என நாம் அறிவிக்கலாம். காண்டவக் காடு குறித்த வஞ்சத்தால் நம் அவையில் அமரத் தயங்குபவர்கள் அவர் அவைக்கு செல்லட்டும்.”

யுதிஷ்டிரன் வாய்விட்டு நகைத்து “அதாவது அனைத்து இடங்களிலும் நான் முடிதாழ்த்தவேண்டும்” என்றார். “ஆம் அரசே, தாழ்த்துவதனூடாகவே இனி உங்கள் முடி உயரமுடியும்” என்றார் சுரேசர். “நான் குருக்ஷேத்ரத்தில் பெற்ற வெற்றியை இவ்வண்ணம் அனைத்துக் குலங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறேன், நன்று!” என்றார் யுதிஷ்டிரன்.

சுரேசர் “அதுவும் மெய்யே” என்றார். “வெற்றி என்பது செல்வம், அதை பகிர்ந்தே ஆகவேண்டும். இதோ ராஜசூயத்தின்போது நாம் கொண்ட செல்வம் அனைத்தையும் பகிர்ந்தளிக்கவிருக்கிறோம். அதற்கு முன் நீங்கள் சூடிய மணிமுடியை பங்கிடுவோம். ஐயம் வேண்டாம், பகிரப்பகிர முடிபெருகும். அது அரசியல்நெறி” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், அவ்வண்ணம் கற்றிருக்கிறேன்” என்றார். சுரேசர் தலைவணங்கி எழுந்துகொண்டார். சுதமனும் தலைவணங்கினார். யுதிஷ்டிரன் அவரிடம் தனிப்பட்ட முறையில் புன்னகைக்க அவர் உள்ளம் மலர்ந்தது. அறையை விட்டு வெளியே வந்தபோது அவர் இனிய பெருமூச்சைவிட்டு உடல்தளந்தார்.

முந்தைய கட்டுரைசுரங்கப்பாதைக்கு அப்பால்…
அடுத்த கட்டுரைமலேசிய உரைகள் -கடிதங்கள்