‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 70

பகுதி ஏழு : பெருசங்கம் – 2

மரத்தடிகளை நட்டு பலகை அறைந்து மூன்றாள் உயரத்தில் சுற்றுவேலியிடப்பட்ட வேள்விநகரில் எழவிருக்கும் ராஜசூயவேள்விக்கான வேள்விச்சாலை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. எண்கோண வடிவிலான பந்தல். எட்டு கோபுரவாயில்கள். எட்டு வாயிலுக்கும் வந்து சேர்ந்த அகன்ற பாதைகளில் பலகைகளை அறைந்து பொருத்திக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு கொட்டுவடிகள் மரங்கொத்திகள் என ஓசையிட்டுக்கொண்டிருந்தன.

வேள்விச்சாலையைச் சுற்றி இரு பிறைவடிவங்களில் குடில்நிரைகள் இருந்தன. அவை ஒருபக்கம் வேள்வி நிகழ்த்த வரும் அந்தணர்கள் தங்குவதற்குரியவை. மறுபக்கம் வேள்வியை வாழ்த்த வரும் முனிவர்களுக்கு உரியவை. அவையனைத்திலும் பணி முடிந்துவிட்டிருந்தாலும் மேலும் பணி நடந்துகொண்டிருந்தது. வேள்விக்கு முந்தையநாள் வரை அங்கே பணிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும். அந்தணர்களும் முனிவர்களும் உணவு சமைப்பதற்குரிய புது மண்கலங்களை கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குரிய மரவுரி ஆடைகளும் தோலாடைகளும் ஏவலர்களின் தலைகளில் சுமைகளாக சென்றுகொண்டிருந்தன.

ஒவ்வொரு குடிலும் மையக்குடிலைச் சுற்றி மாணவர்கள் தங்குவதற்குரிய விரிவான திண்ணைகளுடனும் பின்பக்கம் ஏவலர் தங்குவதற்குரிய சிறு துணைக்குடில்களுடனும் அமைக்கப்பட்டிருந்தன. அந்தப் பிறைகளில் இருந்து பின்பக்கம் விரிந்துசென்ற சிறிய பாதைகள் வேள்விநகரின் அப்பால் அமைந்திருந்த ஏவலர்களின் குடில்தொகைகளைச் சென்று சேர்ந்தன. அதை ஒட்டியே நெய்ப்பசுக்களின் கொட்டில்களும் புரவிக்கொட்டகைகளும் அமைந்திருந்தன. மையச்சாலையில் இருந்து அங்கே வந்துசேர தனிச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே விறகுவண்டிகள் மாடுகளால் இழுக்கப்பட்டு எடைமிக்க சகட ஓசையுடன் நிரைநிரையெனச் சென்றுகொண்டிருந்தன.

வேள்விச்சாலையின் தேவைக்கென கங்கைக்குச் சென்றுசேரும் சிற்றாறுகளில் ஒன்று அணைகட்டி நிறுத்தப்பட்டு மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட ஓடை வழியாக கொண்டுவரப்பட்டிருந்தது. அது அங்கே ஒரு குளத்தை நிறைத்து மறுபக்கம் பொங்கி சரிவில் சிறு அருவியென விழுந்து அப்பால் சென்றது. மரத்தாலான கரைகளும் அடித்தளமும் அமைக்கப்பட்ட குளத்தில் தூய நீர் அலைகொண்டது. அதைச் சூழ்ந்து நீரை அள்ளித்தேக்கும் பொருட்டு கங்கைப்படகுகளை மண்பீடங்களில் பொருத்தும் பணி நடந்துகொண்டிருந்தது.

வேள்விச்சாலை அரக்கு பூசப்பட்ட மரப்பலகைகளால் கூரையிடப்பட்டிருந்தது. கூரையின் பணி அப்போதும் முடியவில்லை. அங்கிருந்து கொட்டுகழிகளும் முழைக்கழிகளும் ஓசையிட்டன. அந்தத் தாளம் வெவ்வேறு ஒழுங்குகளில் மாறிமாறி ஒலித்தது. ஓர் உரையாடல்போல் அது தோன்றியது. கீழிருந்து அவர்களுக்கு உதவியவர்கள் கைகளில் வெவ்வேறு வண்ணத் துணிகளை அசைத்து குறிமொழியை பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் கழிகளையும் உளிகளையும் தூக்கி அசைத்தும் சுழற்றியும் மறுமொழி உரைத்தனர். மிக அப்பால் மணியோசை கேட்டது. பெரிய உருளிகள், நிலைவாய்கள், குட்டுவங்கள் தட்டுவண்டிகளில் ஏற்றப்பட்டு அத்திரிகளால் இழுத்துக்கொண்டு செல்லப்பட்டன.

கூரைமேல் அமர்ந்திருந்த தச்சர்கள் உருக்கிய அரக்குடன் சுண்ணமும் தேன்மெழுகும் கலந்து உருவாக்கிய குழம்பைக் கொண்டு பலகையின் இணைப்புகளை ஒட்டிக்கொண்டிருந்தனர். கீழே பல இடங்களில் பெரிய இரும்பு உருளிகளில் அரக்கும் மெழுகும் கலந்த கலவை கொதித்து குமிழிவெடித்து கமறும் கெடுமணப்புகையை எழுப்பியது. அதில் சுண்ணத்தைக் கொட்டி நீண்ட சட்டுவங்களால் கிளறிக்கொண்டிருந்தார்கள். அக்குழம்பை அள்ளி இரும்புச் சட்டிகளில் ஊற்றி கயிறு சுற்றப்பட்டிருந்த சகடங்களைச் சுற்ற அவை எழுந்து மேலே சென்றன. அங்கு நின்றவர்கள் அவற்றைத் தூக்கி சிறிய மரக்கொப்பரைகளில் கொண்டுசென்று தச்சர்களிடம் அளித்தனர். கூரைவிளிம்புகளில் அரக்குத்துளிகள் வழிந்து வந்து சொட்டி உறைந்து மணிகள்போல் நின்றிருந்தன.

சுதமன் ஒரு திறந்த வாயிலினூடாக வேள்விச்சாலைக்குள் எட்டிப்பார்த்தார். உள்ளே காடுபோல பல்லாயிரம் மூங்கில் தூண்கள் செறிந்து நின்றிருந்த மண்தரையை எடைமிக்க உருளைக்கற்களால் இடித்து செறிவாக்கிக்கொண்டிருந்தனர். மூங்கில் தூண்களுக்கு மேல் பலவகையில் வளைக்கப்பட்ட மூங்கில்களை பின்னிப் பின்னி உருவாக்கிய கூரைக் கட்டமைப்பு மாபெரும் வலை போலிருந்தது. அதன்மேல் வெவ்வேறு இடங்களில் மூங்கில் பணியாளர்கள் தொற்றி அமர்ந்திருந்தனர். கீழிருந்து அவர்களுக்குத் தேவையான உளிகளும் கத்திகளும் கயிறுகளும் கம்பிச்சுருள்களும் கயிறுகளால் கட்டப்பட்டு மேலிழுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான நாகங்கள் கீழிருந்து அப்பொருட்களைக் கவ்வி மேலே கொண்டுசெல்வதுபோலத் தோன்றியது.

சுதமன் வேள்விச்சாலையை சுற்றிக்கொண்டு பின்னால் சென்றார். ஒரு நீண்ட கோட்டைபோல அதன் சுவர் அவரருகே வந்துகொண்டே இருந்தது. அவரைக் கண்டதும் ஏவலர்தலைவன் வந்து தலைவணங்கினான். அவனிடம் ஆணைபெற்றுக்கொண்டிருந்தவர்கள் தலைவணங்கி நின்றனர். சுதமனால் அவன் முகத்தை நினைவுகூர முடியவில்லை. “ஆநிரைகள் அனைத்தும் வந்துவிட்டனவா? மீண்டுமொருமுறை நேரில் வந்து பார்த்துச்செல்லும்படி பேரமைச்சர் சுரேசரின் ஆணை” என்றார். அதற்குள் அவன் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது, மாகேயன்.

மாகேயன் “ஆம், அனைத்தையும் கொட்டிலில் பேணிக்கொண்டிருக்கிறோம். மூன்று பசுக்களுக்கு ஓர் ஆயன் என அமர்த்தியிருக்கிறோம். அத்தனை பசுக்களின் உடல்நிலையையும் காலையிலும் மாலையிலும் நோக்கி எனக்கு அறிவிக்கவேண்டும் என ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். சுதமன் “அறிவிப்புகள் நன்றாகவே இருக்கும். ஆனால் நேரில் சென்றால் நிலைமைகள் எப்போதுமே வேறாக இருப்பதை காணலாம். ஆகவேதான் என்னை நேரில் சென்று பார்க்கும்படி பேரமைச்சர் சுரேசர் சொல்லியிருக்கிறார்” என்றார். அமைச்சர் பெயர் உருவாக்கும் அதிர்வை அவர் கண்டார். அதன் பொருட்டே அப்பெயரைச் சொல்கிறோம் என அவர் அறிந்திருந்தார்.

“நீங்களே நேரில் பார்க்கலாம், உத்தமரே. நான் இரண்டு நாளுக்கு ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிடுகிறேன்” என்றான் மாகேயன். “பார்க்கிறேன். பசுக்களுக்கு நோய்கள் ஏதும் வந்துவிடக்கூடாது. அத்தனை பசுக்களும் அன்றலர்ந்த வெண்தாமரைகள்போல் இருக்கவேண்டும் என்பது நூல்நெறி” என்றார். மாகேயன் தலையசைத்தான். அவன் வெயிலுக்கு கண்களை சுருக்கியிருந்தமையால் கவலைகொண்டவன் போலவும் சுதமனின் பேச்சு புரியாதவன் போலவும் தோன்றினான்.

“முன்பு ஒருமுறை பிரக்ஜ்யோதிஷத்தில் பசுக்களில் நான்கு நோயுற்றமையால் வேள்வி தொடங்கவில்லை… அன்றிலிருந்து இதில் முழு நோக்கையும் செலுத்துகிறார்கள்” என்றபடி அவர் நடக்க மாகேயன் உடன் வந்தான். அப்போதுதான் சுதமனுக்குத் தோன்றியது, சென்ற சிலநாட்களாக என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று. வெவ்வேறுவகையில் வேள்வி நின்றுவிடுவதை கற்பனையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் மட்டுமல்ல, சுரேசரும் அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள். அந்த வழியை மூடுகிறார்கள், பிறிதொன்றை தேடுகிறார்கள். ஒரு வழியைக் கண்டடைந்து அதை மூடும்போது நிறைவடைகிறார்கள். அந்நிறைவுக்காகவே மீண்டும் அதை தேடுகிறார்கள். பல்லாயிரம் முறை பல்லாயிரம் வழிகளில் இவ்வேள்வி நின்றுவிட்டிருக்கிறது உள்ளங்களில்.

சுதமன் பசுக்கொட்டில்கள் அமைந்த மேட்டுநிலம் நோக்கி பலகையால் அமைக்கப்பட்ட சரிவான பாதையில் ஏறிச்சென்றார். அங்கே மூங்கில் நட்டு தட்டிகளால் இரண்டாள் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய வேலிச்சுவருக்கு உள்ளே பசுக்கொட்டில் இருந்தது. அதன் முகப்பு கொட்டில்களுக்குரிய தொன்மையான வடிவில் வாயிலுக்குக் குறுக்கே மேடையுடன் அமைக்கப்பட்டிருந்தது. அமுதகலக் கொடியும் பசுக்கொட்டில் என அறிவிக்கும் கொம்புமுத்திரை கொண்ட கொடியும் மேலே பறந்தன. அணுகும்போதே பசுக்களின் ஓசையும் சாணியும் சிறுநீரும் கலந்த மணமும் வரத்தொடங்கின.

கொட்டிலின் பக்கவாட்டில் அமைந்த கொட்டகையில் பச்சைப்புல் கட்டுகள் குவிக்கப்பட்டிருந்தன. ஏவலர் அவற்றை உள்ளே கொண்டு சென்றுகொண்டிருந்தனர். கொட்டிலுக்குள் பகலிலும் குந்திரிக்கப் புகையின் நீலப்படலம் எஞ்சியிருந்தது. மூங்கில்களில் இரவில் எரிந்து அணைந்திருந்த பந்தங்களுக்குக் கீழே எண்ணைக்கறை மரவுரி விழுந்துகிடப்பதுபோலத் தெரிந்தது. கொட்டில்காவலனாகிய மர்க்கன் எழுந்து வந்து தலைவணங்கினான். “எப்படி இருக்கின்றன பசுக்கள்?” என்று சுதமன் கேட்டார். மர்க்கன் “அனைத்தும் நலமாக உள்ளன” என்றான்.

சுதமன் கொட்டில்கள் வழியாக நடந்தார். பசுக்கள் அசைபோட்டுக்கொண்டு படுத்திருந்தன. அழிகளிலிருந்து புல்லை எடுத்து மென்றன. மணியோசைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. கால்மாற்றி நின்று திரும்பி அவரை நோக்கின. “இரவும் பகலும் கொட்டில்களிலேயே அவை நிற்கலாகாது. பசுநிலம் காணாதொழிந்தால் அவை உளச்சோர்வு கொள்ளக்கூடும்” என்றார். “ஆம் உத்தமரே, ஒவ்வொருநாளும் ஒருநாழிகைப்பொழுது அவற்றை அருகே காட்டுக்குள் நடக்க கூட்டிச்செல்கிறோம்” என்றான் மர்க்கன். இரு ஆயர்கள் வந்து இணைந்துகொண்டனர். சுதமன் “ஆனால் அவற்றை அயலார் நோக்கவேண்டியதில்லை. மானுட விழிகளில் தீய விசைகள் உண்டு” என்றார். “எவரும் நோக்குவதில்லை. அவை உலவிவருவதற்கான வழி நன்கு வகுக்கப்பட்டுள்ளது” என்றான் மர்க்கன்.

“பசும்புல் மட்டும்தானா உணவு?” என்று சுதமன் கேட்டார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தபோதும் அதை கேட்டார் என அப்போது நினைவு வந்தது. “இல்லை, பருத்திக்கொட்டையும் சிறிதே புண்ணாக்கும் கொடுப்பதுண்டு… உணவு முதுஆயர்கள் எழுவரால் ஒவ்வொருநாளும் நோக்கி வகுக்கப்படுகிறது” என்றான் மர்க்கன். “இவற்றின் சாணி இங்கே போடப்படுவதில்லை அல்லவா?” என்றார். அதையும் பலமுறை கேட்டிருந்தார். “இல்லை, உத்தமரே. அதை உடனுக்குடன் அள்ளி வண்டிகளில் ஏற்றி நெடுந்தொலைவு கொண்டுசெல்கிறோம்” என்றான் மர்க்கன்.

கன்றுகள் தனியாக கட்டப்பட்டிருந்தன. சிறுகன்றுகள் மூங்கில் வளைப்புக்கள் கட்டப்படாமல் விளையாட விடப்பட்டிருந்தன. அன்னைப்பசுக்கள் தலையைச் சரித்து அவ்வப்போது கன்றுகள் நலமாக உள்ளனவா என நோக்கிக்கொண்டன. அவர் கன்றுகளை நோக்கியபடி நின்றார். பின்னர் “இவை இப்போது பால் கறப்பதில்லை அல்லவா? கன்றுகளுக்கு குடிக்கக் கொடுப்பதுதானே?” என்றார். “அவைதான் அருந்துகின்றன. ஆனால் முழுக்க அருந்தினால் அவற்றின் வயிறு புளித்துவிடுகிறது. அவை ஓடியாடவேண்டும்… கூட்டமாக நின்றால் விளையாடாமலிருக்க அவற்றால் இயலாது” என்றான் மர்க்கன்.

வேள்விக்கு ஆயிரத்தெட்டு வெண்காராம் பசுக்கள் தேவை என்றனர் வேள்வி கணித்த அந்தணர். நாடெங்கிலும் இருந்து அவை தேடிக் கொண்டுவரப்பட்டிருந்தன. அனைத்துமே இரண்டு கன்றுகளுக்குமேல் ஈனாதவை. நகம்போல் சிவந்த கொம்புகளும், இளநிற மூக்கும், செம்மையோடிய கண்களும், வெளிர்வண்ணக் குளம்புகளும் கொண்ட பால்வெண்ணிறப் பசுக்கள். காம்புகளும் நாக்கும் மட்டும் கருமையானவை. நெற்றியில், நெஞ்சில், விலாவில், பின்புறம் என ஐந்து சுழிகளும் அமைந்தவை. வாயில் புளிப்புவாடையும் சாணியில் அமிலவாடையும் இல்லாதவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்தெட்டு பசுக்களும் அவற்றுக்கு ஏதேனும் குறை வருமென்றால் இடமாற்றம் செய்யத்தக்க நூற்றெட்டு பசுக்களும் அக்கொட்டிலில் இருந்தன. மேலும் ஆயிரத்தெட்டு பசுக்கள் கங்கைக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்தன. தேவையென்றால் அவற்றை படகில் நான்கு நாழிகையில் வேள்விச்சாலைக்கு கொண்டுவந்துவிடமுடியும். அவற்றைத் தவிர ஆநீர் கொள்வதற்குரிய நூறு கன்னிப்பசுக்கள் பிறிதொரு கொட்டிலில் தனியாக பேணப்பட்டன. சாணியில் உருளை மாறாதவை, ஆனால் ஐந்து காம்பும் எழுந்தவை என்பது அவற்றுக்கான இலக்கணம்.

அவர் பசுக்களின் வால்கள் சுழல்வதை நோக்கியபடி நடந்தார். “ஆயர்களின் கைகள் ஒவ்வொருநாளும் மூலிகை எண்ணையால் தூய்மை செய்யப்படுகின்றன” என்று மர்க்கன் சொன்னான். “நன்று” என்று அவர் சொன்னார். கூடுதலாக அங்கே என்ன செய்யவேண்டும் என அவருக்கு தெரியவில்லை. சுரேசர் அவரை எதற்கு அனுப்புகிறார் என அவர் உணர்ந்திருந்தார். அவர் தன் கண்களில் ஒன்று என அவரை அங்கே செலுத்துகிறார். எண்ணியிராதபடி எவரேனும் வந்து நேரில் நோக்கக்கூடும் என்ற அச்சத்தை ஒவ்வொருவரிடமும் உருவாக்குகிறார்.

அவர் யானைக்கொட்டிலுக்கு எவரை அனுப்பினோம் என எண்ணினார். பின்னர் அவ்வெண்ணத்தை அப்படியே கடந்து “நெய்ப்பசுக்கள் எவ்வண்ணம் உள்ளன?” என்றார். மாகேயன் “அவை இங்கில்லை, கங்கைக்கு அப்பால்” என்றான். “ஆம், அறிவேன்” என்றார் சுதமன். “அவற்றை தாங்கள் பார்க்கவேண்டும் என்றால்…” என்று மாகேயன் தயங்க “தேவையில்லை, வெறுமனே கேட்டேன்” என்றபின் சுதமன் தன் தேர் நோக்கி சென்றார். கன்னிப்பசுக்களையும் சென்று பார்த்துவிட்டுச் செல்லலாம். ஆனால் அதற்கு நீண்ட பொழுது ஆகும். அவர் செல்லவேண்டிய இடங்கள் மேலும் பல இருந்தன.

வேள்விச்சாலையிலிருந்து கங்கைவரை நீண்ட பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. கங்கைக்குள் ஆயிரக்கணக்கான செம்புக்கலங்களில் நெய் நிறைக்கப்பட்டு வாய்வட்டம் உருக்கிய ஈயத்தால் மூடப்பட்டு நீருக்குள் இறக்கப்பட்டிருக்கும். நீருள் குளிர்ந்து காத்திருக்கும் அனல். அவர் அவ்வெண்ணத்தால் விந்தையான ஓர் உளச்சுமையை அடைந்து பெருமூச்சுவிட்டார்.

 

சுதமன் மீண்டும் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோது அவர் களைத்திருந்தார். தேரிலேயே சற்று துயின்றார். அத்துயிலில் அவர் அவளை கண்டார். ஓர் ஆலமரத்தின் அடியில் வேர்முடிச்சின்மேல் கால்களை மடித்து தெய்வச்சிலை என அமர்ந்திருந்தாள். கீழிருந்து வேர்கள் எழுந்து அவள் உடலை மூடியிருந்தன. அவள் கூந்தல் பரவி நிலமெங்கும் ஓடியிருந்தது. அவர் முகத்தில் ஆலமர விழுதுகள் முட்டின. அவர் அவற்றை தள்ளித் தள்ளி விலக்கிச் சென்றபோது அவை அவள் கூந்தலிழைகள் என உணர்ந்தார். “தேவி!” என்றார். அவள் அவரை பார்க்கவில்லை. அவள் அமர்ந்திருந்த வேர்கள் அனைத்தும் நாகங்கள் என நெளிந்தன.

கோட்டைக்குள் நுழைந்தபோது எழுந்த ஒலிமாறுபாடு அவரை எழுப்பியது. “இடப்பக்கம் திருப்புக!” என அவர் ஆணையிட்டார். தேர் கோட்டையை ஒட்டிய படைக்கலநிலைகள் வழியாகச் சென்றது. புதியதாக அமைக்கப்பட்டிருந்த கற்பலகைச்சாலையில் ஓசையின்றி நீரோடையிலெனச் சென்றது. கோட்டைக்கு இணையாக அமைக்கப்பட்டிருந்த நூற்றெட்டு அன்னையரின் ஆலயங்கள் அனைத்திலும் விளக்குகள் எரிந்தன. அன்னையர் வெள்ளிவிழிகளுடன், பொன்முடிகளுடன், அவரவர்களுக்குரிய வண்ணங்களில் பட்டு ஆடையுடன் சாலையை நோக்கி அமர்ந்திருந்தனர்.

கோட்டையை ஒட்டி தாழ்வான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவர் அமர்ந்துகொள்ளும் அளவுக்கே உயரமானவை. அவற்றின் கூரையும் கல்லால் ஆனது. ஆகவே அவற்றின் மேல் ஏறி கோட்டைக்கு செல்லமுடிந்தது. உள்ளே வீரர்கள் படுத்துத் துயின்றபடியும் அமர்ந்து சொல்லாடியபடியும் தென்பட்டனர். சாலையின் மறுபக்கம் மரத்தாலான பாடிவீடுகள் ஒன்றன்மேல் ஒன்று என அடுக்கப்பட்ட பெட்டிகள்போல ஏழு நிலைகளாக எழுந்திருந்தன. அவை முழுக்க படைவீரர்கள் செறிந்திருந்தனர். அஸ்தினபுரியின் படை பலமடங்கு பெருகியிருந்தது. காவல்படையே மும்மடங்காகிவிட்டிருந்தது.

கோட்டைச் சாலையில் இருந்து பிரிந்து விலகிச் சென்ற சாலை முழுக்கமுழுக்க படைகளுக்கு மட்டுமே உரியது. அதன் நுழைவாயிலிலேயே காவலர் இருந்தனர். அவருடைய தேரின் கொடியைக் கண்ட பின்னரும் நிறுத்தி அவர் முகத்தை நோக்கிய பின்னரே உள்ளே செல்ல ஒப்பம் அளித்தனர். அவர் கல்தரையில் தேர்ச்சகடம் உருளும் ஓசை உடன்வர அங்கிருந்த காவலர்களை நோக்கியபடி சென்றார். அவர்களில் யவனரும் பீதரும் தென்னவரும் கீழைநிலத்தவரும் கலந்திருந்தனர். குருதி வேறுபட்டவராயினும் சொல் ஒன்றால் மட்டும் அஸ்தினபுரிக்கு கட்டுப்பட்டவர்கள். இனி குருதியின் இடத்தை சொல்லே எடுத்துக்கொள்ளும் போலும் என எண்ணிக்கொண்டார்.

படைக்கலங்கள் முட்புதர் என செறிந்து நின்ற படைப்பிரிவு ஒன்று அடுத்த வாயிலில் அவரை தடுத்து மீண்டும் ஒருமுறை கூர்ந்து நோக்கி செலவொப்பியது. மூன்றாவது வளையம் தடித்த மரத்தடிகள் ஊன்றப்பட்டு பலகைகள் அறைந்து வேலியிடப்பட்டிருந்தது. உள்ளே சென்றதும் அவர் ஒருவகை அமைதியிழப்பை உணர்ந்தார். கடுமையான காவல் என்பது கடுமையான சூழ்கையும் கூடத்தான். அவர் தேரிலிருந்து இறங்கியதும் இரண்டு யவனக் காவலர் அவர் உடைகளையும் கச்சையையும் தொட்டு நோக்கி ஏற்பறிவித்த பின்னரே அடுத்த கதவு திறந்தது.

உள்ளே நான்கு திசைப்புரவிகளும் நான்கு கொட்டில்களில் நின்றிருந்தன. மையமாக அமைந்த முற்றத்தின் நடுவே அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி பறக்கும் உயர்ந்த கம்பம். அதன் நான்கு மூலைகளில் கொட்டில்கள். ஒவ்வொன்றிலும் அந்த திசைக்குரிய தேவனின் கொடி ஒருபக்கமும் அத்திசை வென்ற பாண்டவ வீரனின் கொடி மறுபக்கமும் பறந்தது. ஒவ்வொரு கொட்டிலுக்கு அருகிலும் இரு குடில்களில் ஒன்றில் படைக்கலம் ஏந்திய காவலர்களும் இன்னொன்றில் அப்புரவியைப் பேணும் சூதர்களும் இருந்தனர்.

கொட்டில்தலைவரான யாமகேது அருகே வந்து பணிந்தார். “நான்கு புரவிகளும் நலமாக உள்ளன அல்லவா?” என்று சுதமன் கேட்டார். முடிந்தவரை அதை குரல் நிமிர்வுடன் கேட்கவேண்டும் என விழைந்தார். ஆனால் அவர் விழிகளை நோக்கி அதை கேட்கமுடியாது என்பதனால் நோக்கை முற்றம் நோக்கி பதித்திருந்தார். யாமகேது “நலமாக உள்ளன. ஒவ்வொரு நான்கு நாழிகைக்கும் ஒருமுறை அவற்றின் நலம் உசாவப்படுகிறது. உரிய உணவு அளிக்கப்படுகிறது. மருத்துவர்களே வந்து உழிச்சில் நிகழ்த்துகிறார்கள்” என்றார்.

கொட்டில்களின் திறப்புகள் அனைத்திலும் பட்டுநூலால் ஆன வலை கட்டப்பட்டு கொசுக்களும் ஈக்களும் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டிருந்தன. கொட்டில்களுக்குள் கூரையிலிருந்து வண்ணம்பூசப்பட்ட ஈச்சையோலையால் ஆன விசிறிகள் தொங்க அதை வெளியே இருந்து இருவர் இழுத்து காற்றுவீசச் செய்துகொண்டிருந்தனர். புரவிகளுக்குரிய மூலிகைப்பூச்சும் தைலமும் மணத்தன. கொட்டில்களுக்குள் புகைந்துகொண்டிருந்த குந்திரிக்கம் நீலத் துகில்போல அலையடித்தபடி வெளியே சென்றுகொண்டிருந்தது.

சுதமன் ஒவ்வொரு கொட்டகையாக நின்று உள்ளே நின்றிருந்த புரவிகளைப் பார்த்தபடி சென்றார். தெற்குத் திசைப்புரவியின் கொட்டிலின்மேல் எமனுக்குரிய எருமைக் கொடியும் சகதேவனின் அன்னப்பறவைக் கொடியும் பறந்தன. அவருடைய மணத்தை உணர்ந்த புரவி எடைமிக்க குளம்புகளை எடுத்து வைத்து நின்ற இடத்திலேயே ஓடுவதுபோல காலெடுத்து வைத்தது. அதன் பிட்டம் துடித்து அதிர்ந்தது. அதன் தூக்கிய பின்இடதுகாலுக்கு அடியில் பெரிய லாடத்தின் வடிவம் தெரிந்தது. உள்ளே இருந்த சூதன் எழுந்து தலைவணங்கினான்.

சுதமன் நடந்து சென்றபடி கிழக்குக்கு உரிய இந்திரனின் மின்படைக் கொடி பறக்கும் கொட்டகையை பார்த்தார். அர்ஜுனனின் குரங்குக் கொடி அருகே பறந்தது. “புரவிகளுக்குரிய அணிகலன்களை அனுப்பிவைப்போம். அவற்றை நீங்களே வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். புரவிகளை அணிசெய்பவர்களுக்கு நேரில் நின்று வழங்கவேண்டும்” என்று அவர் சொன்னார். “அணிசெய்வோர் வேறு… அவர்களை. அணிச்சூதர்கள் என்போம்” என்று யாமகேது சொன்னார். “அவர்களின் கல்வியும் நெறியும் வேறு. அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அவர்கள் அணிச்சூதர்களின் ஒரு பிரிவு. அவர்களுடைய கல்வியை சமையக்கல்வி என்பர்.”

இடைமறித்து “ஆம், அறிவேன்” என்று எரிச்சலுடன் சுதமன் சொன்னார். “உங்கள் நினைவுக்காக சொல்கிறேன்… புரவிகள் எவ்வண்ணம் அணிசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்று முறையாக வகுக்கப்பட்டுள்ளது. அதை பட்டுத்திரையில் ஓவியங்களாக வரைந்து அளித்திருக்கிறார்கள். அணிசெய்பவர்கள் அதை நோக்கி அவ்வண்ணமே செய்யவேண்டும்.” யாமகேது “ஆம் அந்தணரே, அவ்வண்ணமே செய்வோம். அவ்வாணையை நீங்கள் அணிச்சூதர்களிடம் அறிவிக்கவேண்டும்” என்றார். சுதமன் எரிச்சலுடன் அவரை நோக்கி ஏதோ சொல்ல நாவெடுப்பதற்குள் எதையோ பார்த்துவிட்டார். அவர் பதறி “என்ன? என்ன அது?” என்று கூவி பின்னடைந்தார்.

“ஒரு நெளிவு… நாகம்!” என்று ஓர் ஏவலன் கூவினான். “நாகமா? இங்கா?” என்று கூவியபடி யாமகேது முன்னால் ஓடினார். அதற்குள் அவரும் பார்த்துவிட்டார். “ஆ! நாகம்… நாகம்… ஓடி வருக! ஓடி வருக!” என்று கூவினார். அங்கிருந்த ஏவலர்கள் கையில் கிடைத்த தடிகளுடன் அப்பகுதியை சூழ்ந்துகொண்டார்கள். கிழக்குத் திசைப் புரவி நிலையழிந்து துள்ளி கொட்டிலின் சிறிய இடத்திற்குள் சுற்றி வந்து கனைத்தது. அதன் செவிகள் விடைத்து முன்கோட்டியிருக்க மூக்குத்துளைகள் விரிந்து அசைந்தன. உடலெங்கும் மயிர்கள் எழுந்து மென்பரப்பாகும்படி மெய்ப்பு அடைந்து அது நடுங்கிக்கொண்டிருந்தது.

அனைவரும் கூடி கூச்சலிட்டபடி ஓடினர். கைக்குக் கிடைத்த கழிகளை எடுத்துக்கொண்டனர். புரவிகளின் தசைகளை உருவிவிடுவதற்குரிய மரவுரிக்குவை ஒன்று கொட்டிலின் அருகே கிடந்தது. அதை ஏவலர் நீண்ட கழிகளால் அகற்றினார்கள். ஒவ்வொரு மரவுரிக்குவையாக அகல அகல சூழ்ந்திருந்தவர்கள் எச்சரிக்கை கொண்டு உறுமல்களையும் ஓசைகளையும் எழுப்பினர். ஒரு மரவுரிக்கு அடியில் நாகத்தின் சுருள்கள் தெரிந்தன. அது கழி பட்டதும் சீறி படமெடுத்தது. பெரிய அரசநாகம். அதன் தலை இடையளவு உயரம்கொண்டு எழுந்து நின்றது. மணி கோத்தது போன்ற செதில்கள் அசைய கழுத்தின் வெண்ணிறமான வளைகோடு நெளிந்தது. நா பறக்க மணிவிழிகளுடன் அது நோக்கியது.

வீரர்களில் ஒருவன் சற்றே அசைய அத்திசை நோக்கி பாய முற்பட்டது. “அடியுங்கள்…” என்று யாமகேது கூவ இருவர் கூச்சலிட்டபடி தடியுடன் பாய்ந்தனர். நாகம் அவர்கள் மேல் பாய்வதுபோல முன்னெழுந்தது. அவர்கள் பின்னடைந்த கணம் அது தன் உடலைச் சொடுக்கிச் சுழற்றி வெற்றுத்தரைக்குள் புகுந்ததுபோல் மறைந்தது. “மரவுரிகளை அகற்றுக!” என்று யாமகேது கூவினார். மூங்கில்களால் மரவுரிகளை அகற்றினர். அடியில் ஒரு சிறிய நிலப்பிளவு தெரிந்தது. கைவிரல்கள் உள்ளே செல்லக்கூடுமா என ஐயுறச் செய்யும் அளவுக்கு சிறிது. ஆனால் அது உள்ளேதான் சென்றிருந்தது. உள்ளே இருளுக்குள் அதன் விழிமணிகளை காணமுடியும் என்பதுபோல தோன்றியது. அந்நிலப்பிளவே ஒரு விழி எனத் தெரிந்தது.

யாமகேது “தீயிடலாம்… தீ” என்று கூவினார். சுதமன் “வேண்டாம்” என்றார். “புரவிகள் உள்ள இடம்… நாம் இத்தனை பாதுகாப்பாக வைத்திருக்கும்போது…” என்று யாமகேது சொல்லத்தொடங்க “எந்தப் பாதுகாப்பும் நாகங்களை தடுக்காது… வேண்டாம்” என்று சுதமன் சொன்னார். “ஆனால்… இவை வேள்விப்பரிகள்” என்று யாமகேது மேலும் சொல்ல “என் ஆணை… அது விலகிச்செல்லட்டும்” என்றார் சுதமன். யாமகேது “என் கடமை எச்சரிப்பது” என்றார். “அது உள்ளே போகும் வழி இருக்கும்” என்றார் சுதமன். “தோண்டிப் பார்ப்போம்” என்றார் யாமகேது. “எதுவரை?” என்று சுதமன் கேட்டார். யாமகேது திகைப்புடன் நோக்கினார். “செல்க!” என்று சுதமன் கைகாட்டினார்.

யாமகேது தலைவணங்கி அகல, ஏவலர் முணுமுணுத்தபடி விலகினர். “அது இங்கேயே இருந்திருக்கிறது.” “காலடியில் உள்ளது நாகர்களின் உலகம்.” “அதன் எதிரி கீழ்த்திசைவென்ற பார்த்தன்.” “அப்புரவி ஏன் அதன் மணத்தை அறியவில்லை?” “அதற்கு தன்னை சுருட்டிக்கொள்ளத் தெரியும். தன் மணத்தையும் சுருட்டிக்கொள்ளும். உடலைப் பந்தாக்கி ஒரு விதைபோல ஆகி மண்ணில் கிடக்கும். நம் கால்களில் இடறவும் கூடும்.” “இங்கே கிடக்கும் இக்கூழாங்கற்கள் எல்லாமே நாகங்கள்தான். அவை நாகமென ஆகும் தருணம் அமையவில்லை.”

சுதமன் தன் உடலில் அதுவரை இருந்த எல்லா இறுக்கமும் விலக களைப்பும் சோர்வும் எடை என வந்து அழுத்துவதை உணர்ந்தார். கால்களும் கைகளும் அழுத்தமான பிசினில் சிக்கியிருப்பதுபோலத் தோன்றியது. அவர் தன் தேரை நோக்கி சென்றார். தேர் ஒருங்கட்டும் என தொலைவிலேயே கைகாட்டினார்.

முந்தைய கட்டுரைவானம் கொட்டட்டும்
அடுத்த கட்டுரை“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”