சோற்றுக்கணக்கு-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா? உங்கள் எழுத்தை என்னவென்று சொல்ல? அறம், சோற்று கணக்கு கதைகள் பற்றி எல்லோரும் நிரம்ப எழுதியாகிவிட்டது. இவ்விரு கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் மனம் பொங்குகிறது. இது வரை தமிழில் உங்களுக்கு எழுதியதில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நான் தஞ்சையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். கூட்டுக்குடும்பம். எங்கள் குடுமபம், சித்தப்பா குடும்பம், பாட்டி என ஒன்பது பேர். ஓயாமல் விருந்தினர். எனக்கு கிடைத்த அன்புக்குக் குறைவில்லை. நல்ல சாப்படு கிடைக்கும். ஆனால், விதவிதமான சாப்பாடு கிடைக்காது. அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் நாலு குழந்தைகளும் பாட்டியின் கன்கானிப்பில்.. பெற்றோர்களூக்குத் திருச்சியில் வேலை. கோச் புகை வண்டியில் அதிகாலை ஐந்து மணிக்குச் சென்று இரவு எட்டு மணிக்குத் தான் வருவார்கள்.. ஞாயிற்றுக் கிழமை மட்டும் அப்பா அம்மாவுடன் கொண்டாட்டம். கோடை விடுமுறை நட்களில், காலையில் சாப்பாடு. பிறகு மாலை 6 மணிக்குத்தான் அடுத்த சாப்பாடு. நடுவில் எதுவும் கிடையாது. பாட்டிக்கு நாள் முழுவதும் மற்ற வேலைகள் இருக்கும். தனியாக எங்களுடன் பேசவோ, எங்களைக் கவனிக்கவோ ஒழியாது. பாட்டி சில சமயம் மாதக் கணக்கில் தன் மற்ற பிள்ளைகள் இருக்கும் ஊர்களுக்கு சென்று விடுவாள்.

எங்கள் எதிர்த்த வீட்டில் கிறித்துவ குடும்பதினர் வசித்தார்கள். மரியதாஸ் மாமா, மரியதாஸ் அத்தை. அத்தையின் பெயர் தெரசா என்று நினைவு. ஆனால், அவர் எங்களுக்கு எல்லாம் ‘மரியதாஸ் அத்தை’ தான். பாட்டி ஊரில் இல்லாத சமையத்தில் தினமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவேன். பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் நன்றாக வெட்டுவேன். மூன்று மாதங்கள் கழித்து ஊரிலிருந்து வந்த பாட்டிக்கு என் உடல் வனப்பின் ரகசியம் தெரிந்து விட்டது. பாட்டி வருகைக்குப் பிறகும் நான் தொடர்ந்து அங்கு சென்றேன். பாட்டி, தன் பேத்திக்கு நல்ல உணவு கிடைப்பது பற்றி உள்ளுர மகிழ்ந்தாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பேச்சைத் தவிர்பதற்காக என் தலையில் தினமும் தண்ணீரைக் கொட்டி வீட்டினுள் அழைப்பாள். உள்ளே சென்று தலைக்குச் சாம்பிராணி போடுவாள். நாளைடைவில் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டு நானே தலை பின்னலை பிரித்து விட்டு தண்ணீர் தொட்டிக்கு அருகில் நிற்க ஆரம்பிக்கலானேன். இது என்னுடைய ஒன்பதாம் வயது வரை தொடர்ந்தது. பிறகு ஒரு முறை கோழி கழுத்து அறுபடுவதை நேரில் பார்த்தது முதல் அசைவத்தின் மேல் இருந்த நாட்டம் காணமல் போயிற்று. மரியதாஸ் அத்தை உணவை அள்ளி அள்ளி வைத்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. வயிறு நிரம்பி, நடக்க முடியாமல் நடந்து சென்றதை இன்றும் என்னால் உணர முடிகிறது.

என் சகோதரர்களுக்கு, எங்களுடைய இந்த காலகட்டத்தை பற்றிய எதுவும் நினைவுகளோ, தாக்கங்களோ இருக்கிறதா என்று தெரியவில்லை. இதுவரை நாங்கள் இதுபற்றிப்  பேசியதில்லை. ஆனால், அந்த அத்தையின் அன்பும் பரிவும் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், என் மனதில் தீராத ஒரு வெற்றிடம் இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

நான் இங்கு சொல்ல முனைவது அந்த சிறுமியின் சாப்பட்டுக்கான ஏக்கத்தைத்தான். தன் அம்மாவின் கையால் சாப்பிட ஏங்கும் ஏக்கத்தைத்தான். என்னை அழைத்து முட்ட முட்ட உணவு படைத்த அந்த அத்தையின் பரிவை என்ன சொல்வது? என் தாயின் அன்பை ஈடு செய்த அந்த நல்ல உள்ளத்தின் கனிவை நான் எப்படி மறக்க முடியும்? அந்த சோற்றுக் கணக்கை நான் எவ்வாறு அடைப்பேன்?

நன்றி

ரமா கண்ணன்

ஓஹையோ, அமெரிக்கா

அன்புள்ள ரமா

கிராமங்களில் வளர்ந்த எவருக்கும் இருக்கும் அனுபவம்தான் அது. அங்கே குழந்தைகள் நிறையச் சந்தர்ப்பங்களில் வேறெங்கோதான் வளரும்.

என் அம்மாவை நான் இடுப்பில் குழந்தை இல்லாமல் பார்த்ததே இல்லை. எங்கள் வீட்டில் எப்போதும் ஏழெட்டு குழந்தைகள் திரிந்து தவழ்ந்து கொண்டிருக்கும். ஊரில் வேலையுள்ள எல்லாருமே பிள்ளைகளை கொண்டு வந்து விடுவார்கள். இன்று என் அம்மாவின் படத்தைச் சொந்த அம்மாவின் படத்துடன் வீட்டில் மாட்டி வைத்துள்ள பல பிள்ளைகள் உள்ளனர்

இரு வருடம் முன்னர் அம்மாவின் இடுப்பில் வளர்ந்த ஒரு பையனை பார்த்தேன். 30 வயதாகியிருந்தது. ஒரு சொந்த வேன் ஓட்டுகிறான். வேனின் பெயர் விசாலம். என் அம்மா பெயர்.

அந்தக்காலத்தில் எல்லாப் பெண்களுமே தங்களை அம்மாக்களாக உணர்ந்தார்கள் போல. இயல்பாக, எளிமையாக.

ஒருமுறை என் பெரியம்மா சொன்னார்கள். ‘பிள்ளைகளை வளர்ப்பதையும் விவசாயத்தையும் வேலை என்று நினைத்தால் அதைச் செய்யமுடியாது’

ஜெ

முந்தைய கட்டுரைபெர்க்லி கடிதம்
அடுத்த கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்