பகுதி ஏழு : பெருசங்கம் – 1
சுதமன் பதற்றத்துடன் இடைநாழியினூடாக ஓடினார். பிறகு ஏன் அப்படி ஓடுகிறோம் என்று உணர்ந்து நின்று மூச்சுவாங்கிக்கொண்டார். ஆனால் உள்ளம் விசைகொண்டிருக்கையில் உடலை நிலைகொள்ளச்செய்ய முடியவில்லை. அவரால் எங்கும் அமரவோ படுக்கவோ முடியவில்லை. துயிலில் உடல் பல பக்கங்களிலாக தள்ளியது. நீர் நிறைந்த கலத்தை தூக்கிக்கொண்டு செல்வதுபோல தள்ளாடினார். ஆனால் படுத்தால் ஒரு நாழிகைகூட துயில்கொள்ள முடியவில்லை. துயில் கலைந்த பின் ஒரு கணம்கூட படுக்கையில் நீடிக்க முடியவில்லை.
அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சியே இல்லை என்று தோன்றியது. செய்யவேண்டியவை குறித்த பதற்றம், செய்யவிட்டுப்போனவை பற்றிய அச்சம், செய்துகொண்டிருப்பவற்றின் முடிவின்மை குறித்த கொந்தளிப்பு ஆகியவை கலந்து அவர் அகமொரு பெருங்கூச்சலாக இருந்தது. ஆனால் நின்று எண்ணும்போது அதுவே மகிழ்ச்சி என்று தோன்றியது. இந்தப் பரபரப்புகள் ஓய்ந்து அஸ்தினபுரி மீண்டும் தன் இயல்பமைதியில் நிலைகொள்ளுமென்றால் வாழ்க்கையே பொருளில்லாததாக ஆகிவிடக்கூடும்.
அவர் எதிர்ப்படுபவரிடமெல்லாம் எதையாவது கூவி ஆணையிட்டார். ஆணையிட்டு அகன்ற பின் திரும்ப ஓடிவந்து மீண்டும் ஆணையிட்டார். ஆணைகளை அவர்கள் மறந்துவிடுவார்களோ என்னும் ஐயத்துடன் ஓடிச் செல்கையில் இன்னொருவரைக் கண்டு அவரிடம் இன்னொரு ஆணையை இட்டார். ஒவ்வொருவரிடமும் அவர் சொல்லவேண்டியவை பெருகிக்கிடந்தன. ஒவ்வொன்றும் அறுந்து துடித்துக்கொண்டிருந்தது. பல்லாயிரம் முனைகளாலான ஒரு கூடையை அவர் முடைந்துகொண்டிருந்தார். ஒவ்வொன்றையும் பற்றி எடுத்து பின்னி முடைந்து அதன் வடிவை முழுமைசெய்யவேண்டும்.
அவரால் அதை எண்ணிநோக்கவே முடியவில்லை. உள்ளம் மலைத்து அப்படியே செயலற்றது. மறுகணமே அதை எண்ணக்கூடாது என ஒழிந்தார். அதை திரும்பி நோக்கவேகூடாது. மொத்தப் பணியையும் எண்ணுபவனால் பெருஞ்செயல்களை ஆற்றமுடியாது. செயலின் விளைவையும் எதிர்கால மதிப்பையும் கருதுபவன் சோர்வடைவான். இன்று இக்கணம் நான் ஆற்றும் செயல்மட்டுமே நான். வேறேதுமல்ல. அதில் முழுமையாகத் திகழ்வதே செய்யக்கூடுவது. முழுமை இருப்பது எதிர்காலத்தில். செயல் என அனைத்தும் திகழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே.
ஆனால் அது இயலவில்லை. அவர் நான்கு திசையிலும் சிதறித்தெறித்துக்கொண்டிருந்தார். மூன்று காலங்களிலும் ஒரே தருணத்தில் திகழ்ந்தார். எங்கும் இல்லாமலும் இருந்தார். எதிரே வந்த காவலனிடம் “பிரீதர் எங்கே? நான் அவரை கேட்டதாக சொன்னேனே? உடனே என்னை வந்து சந்திக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேனே?” என்றார். அவன் திகைத்து “என்னை யானைக்கொட்டிலுக்கு செல்லும்படி சொன்னீர்கள். நான் வேள்விக்குரிய நூற்றெட்டு யானைகளையும் நோக்கி வந்து செய்திசொல்லவேண்டும் என்றீர்கள்” என்றான்.
சுதமன் சீற்றத்துடன் “யானைகளைப்பற்றி என்ன கவலை இப்போது? அதற்கு இன்னமும் ஏழு நாட்கள் இருக்கின்றன. இப்போது…” என்றபின் கைவீசி “செல்க, உடனடியாக சாரதனை நான் சந்திக்கவேண்டும் என்று சொல்க!” என்றார். “தாங்கள் பிரீதரை சொன்னீர்கள்” என்றான் ஏவலன். “சொன்னதை செய். எதிர்ப்புச்சொல் எனக்கு உகந்ததல்ல, தெரிகிறதா?” என்று கூச்சலிட்ட பின் சுதமன் இடைநாழியினூடாக ஓடத்தொடங்கினார். ஓடும்போதுதான் அவர் இயல்பாக இருப்பதாகத் தோன்றியது.
மேற்கு முற்றத்தை அடைந்து இறங்கி காற்று தூசும் சருகுத்தூளுமாகச் சுழன்றுகொண்டிருந்த வெளியில் நின்றபோதுதான் எதற்காக அங்கே வந்தோம் என்னும் உணர்வை அடைந்து திகைப்புடன் திரும்பி அரண்மனையை பார்த்தார். பதைப்புடன் மீண்டும் அரண்மனை நோக்கி செல்ல காலெடுத்தபோது எதன் பொருட்டு அங்கே வந்தோம் என நினைவுக்கு வந்துவிட்டது. அவர் கைதூக்கி கூவியபடியே ஓடினார். “தேர்… தேர் வருக!” அவரை தொலைவிலேயே நோக்கிக்கொண்டிருந்த தேர்வலன் தேரைப் பூட்டி அவர் அருகே வந்தான். “மூடா, நான் முற்றத்திற்கு வந்தால் தேரை கொண்டுவரமாட்டாயா?” என்று சுதமன் சீறினார். “நீங்கள் இன்று பலமுறை இவ்வாறு முற்றத்திற்கு வந்த பின் திரும்பி ஓடியிருக்கிறீர்கள், உத்தமரே” என்றான் தேர்வலன். “செல்க! தேவையற்ற பேச்சு வேண்டாம்” என்றார் சுதமன்.
தேர்வலன் தேரை மெல்ல செலுத்தியபடி “எங்கே?” என்றான். “அதை நான் ஏறியதுமே நீ கேட்டிருக்கவேண்டும்… புரவிகள் இருக்குமிடத்திற்கு” என்றார். “எந்தப் புரவிகள்?” என்று அவன் மேலும் தணிந்த குரலில் கேட்டான். “அஸ்வமேதப் புரவிகள்… வேறெங்கே செல்வேன்? நான் என்ன குதிரைச்சூதனா? அறிவிலி” என்று சுதமன் கூவினார். தேர் விசைகொண்டதும் அவர் அகம் சற்றே அடங்கியது. இருபுறமும் அணிகொண்டிருந்த அஸ்தினபுரியை நோக்கியபடி பீடத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தார்.
நகரின் அத்தனை கட்டடங்களும் புதுச்சுண்ணமும் பல்வண்ணமும் கொண்டு பொலிந்தன. கூரைகள் புதிய அரக்கும் மெழுகும் பூசப்பட்டு அன்று எழுந்தவை போலிருந்தன. சாலையோரங்களில் எல்லாம் தோரணங்கள். அடிக்கடி வளைவுகள். ஆங்காங்கே பந்தல்கள். ஆனால் அனைத்தையும்விட நகரை அணிசெய்தது எங்கும் பெருகியிருந்த திரள்தான். மக்களின் முகங்களெல்லாம் ஒன்றே எனத் தோன்றின. அனைத்தும் மகிழ்ச்சியில் வெறிப்பு கொண்டிருந்தன. தேவையில்லாமலேயே அனைவரும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள். அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எறும்புவாய் என வீடுகளுக்குள் இருந்து வெளியே வந்தனர், அதேயளவு மக்கள் உள்ளே சென்றனர்.
எங்கும் மலர்மணமும் குங்குமமும் சந்தனமும் கொம்பரக்கும் புனுகும் கஸ்தூரியும் கலந்த மணமும் நிறைந்திருந்தன. வெயிலில் அவை ஆவியென்றாகி வந்து முகத்தை அறைந்தன. “காடு பூத்தால் அத்தனை பூக்களும் ஒன்றே என்றாகிவிடுகின்றன” என்று ஒரு சூதன் விழவெழுந்த நகரைப் பாடியதை அவர் நினைவுகூர்ந்தார். விழாவில் களிவெறிகொள்ள மக்களுக்கு எவரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனிமையால், அத்தனிமையில் வெளிப்படும் தங்கள் சிற்றுருவால் உளம் நைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் விழைவது ஒன்றெனத் திரள்வதை, பேருருக் கொள்வதை. கைபெருகி கால்பெருகி கண்பெருகி உடல்பெருகி உளம் ஒன்றாகி திகழ்வதை.
அவர் விழிகள் பெருகியவர்போல் ஆனார். உடலெங்கும் விழிகள். விழிகள் மேலும் மேலும் ஆற்றல்கொண்டன. இல்லங்களுக்குள் பெண்களின் களியாட்டை காணமுடிந்தது. இருள்மூலைகளில் நிகழும் காமக்கொண்டாட்டங்களைக்கூட காணமுடிந்தது. இந்திரவிழா அவிழ்த்துவிட்ட முடிச்சுகளை மீண்டும் கட்டி இறுக்க முடியவில்லை. நகரில் பிறிதொரு பெருநிகழ்வு எழுந்தால் மட்டுமே அவ்வுளநிலை மாறமுடியும். அதற்கு வேள்வியறிவிப்பு எழவேண்டும். வேதச்சொல் தெருக்கள் தோறும் முழங்கவேண்டும். மக்கள் இப்போதிருக்கும் உடலுக்குள் இருந்து பிறர் என வெளிவருவார்கள்.
தேர் வணிகச்சாலையினூடாகச் சென்றது. அவ்விழாவிலும் வணிகர்கள் விற்றுக்கொண்டே இருந்தனர். ஆடைகள், அணிகள், நறுமணப்பொருட்கள், இன்னுணவுகள், மங்கலப்பொருட்கள். ஒவ்வொன்றும் கடைகளின் முகப்பில் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றை அறிவிக்கும் கொடிகள் படபடத்தன. வாங்குவோரை அறைகூவும் கொம்புகளும் சங்குகளும் குழல்களும் முழங்கின. வாங்குபவர்கள் தோளோடு தோள்முட்டி ததும்பிக்கொண்டிருந்தனர். விலைகூறி கூச்சலிட்டனர். நறுமணப்பொருட்களை எடுத்து ஒருவரோடு ஒருவர் வீசிக்கொண்டாடினர். வழக்கமாக தனியிடங்களில் மட்டுமே மது விற்கப்பட்டது. அப்போது கடைவீதிகள் முழுக்க பெரிய கலங்களில் மதுவை கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொன்றிலும் எத்தனை வகை! நூற்றுக்கணக்கான விலங்குகளின் தோல்களால் ஆன ஆடைகள். விலைமிக்க இமையக் கவரிமானின் வெண்மயிர் செறிந்த நுரையாடைகள், மான்தோல் ஆடைகள், புலித்தோலாடைகள், தென்னகத்திலிருந்து வந்த செந்தழல்போன்ற மயிர்கொண்ட மலையணில் ஆடைகள். புரவிவால் வண்ணம் கொண்ட ஆசுரநாட்டு மரவுரிகள், செவ்வண்ணமும் நீலவண்ணமும் பூசப்பட்ட மரவுரிகள். முகிலாலானவை போன்ற, நீர்க்குமிழியாலானவை போன்ற, இளம்பாளையாலானவை போன்ற, தளிராலானவை போன்ற பட்டுகள். பல்வேறுவகை படைக்கலங்கள்.
உடைவாள் பிடிகளில் அருமணிகள் மின்னிக்கொண்டிருந்தன. வகைவகையான மலர்ச்செதுக்குகள், மரப்பட்டைச் செதுக்குகள், நாகச்செதில் செதுக்குகள், முதலைப்பொருக்கு செதுக்குகள் கொண்ட வாளுறைகள். குறுவாள்கள், குத்துக்கத்திகள், எறிவாள்கள், எய்வாள்கள், வளைவாள்கள், சுழிமுனைவாள்கள், ஐம்முனை நகப்பிடிகள், உகிர்முனை கைப்பொருத்துக்கள். மானுடனுக்கு இப்புவியிலுள்ள அனைத்துத் தோல்களையும் தன்னுடையதாக்கவேண்டும். வண்ணத்துப்பூச்சியாகவேண்டும். புலியாகவேண்டும்.
கோட்டையைக் கடந்து தேர் சென்றதையே அவர் அறியவில்லை. கோட்டை வெண்ணிறத் திரைச்சீலை என பகலொளி பரவிய வானில் மறைந்துவிட்டிருந்தது. அதில் நிழல்கள் ஆடிக்கொண்டிருந்தமையால் விழிமயக்களித்த பெருங்கூட்டத்தில் தானும் கரைந்துவிட்டிருந்தது. கோட்டைக்குள்ளும் வெளியிலும் ஒரேபோல பெருந்திரள் அலைகொண்டது. திரும்பி நோக்கியபோது நகர் இருப்பதே தெரியவில்லை. வெண்ணிறக் கோட்டைக்கு அப்பாலிருந்து எழுந்த ஒலியலைகளும் அதிலாடிய நிழல்களும் அங்கே முடிவிலா மக்கள்வெளி இருப்பதாகவே தோன்றச்செய்தன.
சென்ற பல மாதங்களாகவே கண்கள் மக்கள்திரளுக்கு பழகிவிட்டிருந்தன. திரள் நாளென பொழுதென கணமென பெருக கண் அதை அறியாமல் ஏற்று ஒப்பி எப்போதும் எங்கும் மக்களின் திரள் கொப்பளிப்பை மட்டுமே நோக்குவதாக மாறி எப்போதேனும் அசைவற்று நிலைத்த ஓரிடத்தைப் பார்க்கையில் சற்று துணுக்குறல் உருவாகியது. கண்களை எப்போது மூடினாலும் உள்ளே காட்சியலைகள் எழுந்தன. இரவு துயிலில் எழும் கனவுகளில்கூட பெருந்திரள் அலையடித்தது. அத்தனை சொற்களிலும் திரளில் இருந்து கூச்சலிடும் தன்மை அமைந்தது. தனித்து ஒருவரை பார்த்தால்கூட அவர் திரளில் ஒரு துளியென உள்ளம் உணர்ந்தது.
நகருக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு மேற்குவாயிலும், வெளியே செல்வதற்கு வடக்குவாயிலும், அரசச்செய்தியாளரும் பிறரும் வெளியே செல்வதற்கு தெற்குவாயிலும் ஒதுக்கப்பட்டிருந்தன. நகரைச் சூழ்ந்திருந்த காடு அகன்று விலகிச் சென்றுவிட, அங்கே குடியிருப்புகளும் சாலைகளும் உருவாகி வந்துவிட்டிருந்தன. முச்சந்தி முனைகளில் சிறு சந்தைகள் எழுந்தன. அங்கே ஆலயங்கள் உருவாயின. உருவாகிவிட்டிருந்த ஆலயங்கள் நாள்தோறும் வளர்ந்து செழித்துப் படர்ந்தன. ஒருநாள் விட்டு மறுநாள் ஒரு வழி சென்றால் அங்கே ஓர் ஆலயம் எழுந்துவிட்டிருந்தது. அவற்றுக்கென எந்த நெறியையும் அரசால் அமைக்க முடியவில்லை. “அது தெய்வங்களின் பாதை. அவற்றின் விழைவு. நம் ஆணைகளை அவை செவிகொள்ளப்போவதில்லை” என்றார் சுரேசர்.
பலநூறு குடித்தெய்வங்கள். பாரதவர்ஷம் எங்கிலுமிருந்து அவை பிடிமண் என, அடையாளப்பொருள் என, நுண்சொல் என கொண்டுவரப்பட்டு அஸ்தினபுரியின் நிலத்தில் நிறுவப்பட்டன. பீடங்களில் களிமண் உருவங்களாக, மரச்செதுக்குகளாக, கல்லுருளைகளாக, நடுகற்களாக, விழிக்கற்களாக அவை நின்றன. ஒவ்வொரு தெய்வமும் முதல் நோக்கில் துணுக்குறச் செய்தது. ஒவ்வொன்றும் புதியதாகவும், கூடவே ஏற்கெனவே சற்று தெரிந்ததாகவும் இருந்தது. “இந்த தெய்வம் எது?” என்று வினவி அதன் கதையை, இயல்பை அறிந்து முன்னரே தெரிந்த தெய்வமொன்றுடன் அதைப் பொருத்தி வகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
“பாரதவர்ஷம் தெய்வங்களின் நிலம். ஏதோ ஆணையை ஏற்றுக் கிளம்பியதுபோல எல்லா தெய்வங்களும் இன்று இங்கே வந்து சேர்ந்துவிட்டிருக்கின்றன” என்று சுரேசர் சொன்னார். “தெய்வங்கள் புது நிலத்தில் மிக எளிதாக வேர்விடுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக அங்கேயே நிலைகொண்டவை என தோன்றச் செய்துவிடுகின்றன.” அவரே அதை உணர்ந்தார். ஐந்தாறு முறை பார்த்த பின் ஓர் இடத்தின் அடையாளமாகவே அந்த தெய்வங்கள் உருமாறின. அவை இருக்குமிடம் அவற்றால் பெயர் பெற்றது. இன்னும் சில ஆண்டுகளில் அவற்றின் தொன்மை கதைகளால் நிறுவப்படும் என்று அவர் எண்ணிக்கொண்டார். ஆழுளம் உணரும் ஆழம் என்பதனால் அதை சித்தம் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும்.
அனலிலும் புனலிலும் காற்றிலும் சொல்லிலும் எழுந்து எங்கும் நிலைகொள்ளாத தெய்வங்கள் பல்லாயிரம். பூசைக்கென எழுந்து பூசைபெற்று அக்கணமே மறைபவை. மானுடரில் எழுந்து மானுடரைக் கடந்த நிலைப்பேறைப் பெற்று உறைபவை. கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் உருப்பெறும் தெய்வங்கள் மேலும் பல்லாயிரம். அத்தனை தெய்வங்கள் மானுடருக்கு தேவைப்படுகின்றன. “முன்பும் இங்கு பல்லாயிரம் தெய்வங்கள் இருந்தன. அவை சொல்லில் எழுந்தவை. இவை மண்ணில் இருந்து எழுந்த தெய்வங்கள்” என்றார் சுரேசர். “இனி இவை சொல்லுக்குள் சென்று பீடம் கொள்ளும். அங்கே முளைவிட்டு பெருகிப்பரவும். சொல் பெறும் தெய்வம் தன் ஆற்றலை சொல்லை ஆள்பவனுக்கு அளித்துவிடுகிறது.”
ஒவ்வொருநாளும் சுதமன் வெவ்வேறு பூசனைமுறைகளை பார்த்தபடி சென்றார். வெறியாட்டு எழுந்த பூசகன் முழுக் காளைக்கன்றை வாயில் கவ்வி அப்பால் தூக்கி வீசுவதை கண்டார். பல்லால் கடித்து மரக்கிளையில் தொங்கிக்கிடக்கும் வேலனைக் கண்டு உடல் நடுங்கி பின்னடைந்தார். வறுமுலை மூதன்னையின் நாவில் கேளாச் சொல் என நடுங்கும் தெய்வ ஆணையை கண்டார். துள்ளி அதிரும் வேல்கள். ஒளிர்நாவென திளைக்கும் வாள்கள். சுழலும் தடிகள். கருவறைக்குள் இருளில் அமர்ந்திருந்தன சில தெய்வங்கள். முச்சந்தியில் உச்சிவெயிலில் வெறித்து நோக்கி இருந்தன சில தெய்வங்கள்.
நகருக்கு மேற்கே முன்பு அடர்காட்டுக்குள் இருந்த ஓர் கலிதேவனின் ஆலயம் ஒவ்வொருநாளும் மக்கள் செல்லத்தொடங்கி தானே எழுந்து அணுகி சாலையோரத்திற்கு வந்ததுபோல தெளிவடைந்தது. அங்கு செல்வதற்கான படிகள் அமைந்த பாதை உருவாகியது. கலிதேவனுக்கு உகந்த நீலமலர்களுடன் கரிய ஆடை அணிந்து மக்கள் நீண்ட நிரைகளாக அப்பாதையில் வளைந்து ஏறிச்சென்றனர். கலிதேவனை புகழ்ந்து பாவலர் இயற்றிய செய்யுட்கள் ஒவ்வொருநாளும் புதிதாகக் கிளம்பி வந்தன. “எழும் யுகம் கலிக்குரியது. இனி நெறிகளை ஆள்பவன் அவனே. விழைவின் அரசன், வஞ்சத்தின் தலைவன், வெற்றிக்குரியவன், அனைத்து தெய்வங்களுமென்றாகி நின்று இப்புவியை இனி நடத்தவிருப்பவன்.” அவ்வழியே தேரில் செல்கையில் அச்சிறு குன்று ஒரு வண்டு என ரீங்கரிப்பதை கேட்கமுடிந்தது.
பெரும்பாலும் பெண்கள் அங்கே சென்றுகொண்டிருந்தனர். அத்தனை பெண்கள் செல்வது ஏன் என்று அவர் சுரேசரிடம் கேட்டார். அனைவருக்கும் கலிமேல் அத்தனை ஈடுபாடு எப்படி வந்தது? கலி எதிர்மறை உணர்வுகளின் தேவன். எழும் யுகம் பொருளுக்குரியது. விழைவின், உடைமையின், களிப்பின், துறப்பின் காலகட்டம். ஆகவே திருட்டின், காப்பின், ஐயத்தின், அச்சத்தின் சூழல். அன்று கலியே வழிபடப்படுவார். “உடைக்குள் பொன்னை ஒளித்துவைத்திருப்பவனை எப்படி கண்டுபிடிப்பாய் என நான் முன்பு ஒரு கள்வனிடம் கேட்டேன். அவன் தெய்வத்தை தொழுவதைப் பார்த்தாலே போதும் என்று அக்கள்வன் மறுமொழி சொன்னான்” என்றார் சுரேசர்.
சுதமன் சூழ நிறைந்திருந்த மக்களை நோக்கிக்கொண்டே சென்றார். நோக்க நோக்க ஒரே சொல்லை மீளமீள கேட்பது போலிருந்தது. ஒரே சொல் வளர்ந்துகொண்டே செல்வதுபோலவும் இருந்தது. சொற்களில் இருந்து சென்றடையக் கூடியவை பல. சொற்களில் இருந்து சென்றடையக் கூடியது இன்னொரு சொல் என்றிருந்தால் சொல் பயனில்லாததாகிறது. சொல் மானுடரிடம் விளையாடுகிறது. சொல்லை பகடையென வைத்து களத்தில் முடிவில்லாது நம்மை தோற்கடிக்கின்றன தெய்வங்கள். விழைவெனும் சொல் உடைமையெனும் சொல்லை சென்றடைகிறது. உடைமையெனும் சொல் ஆணவமெனும் சொல்லை.
இந்த மக்கள் எவர்? இவர்கள் இன்மையில் இயல்பாக இருந்தவர்களாக இருக்கலாம். இருத்தலையே நிறைவெனக் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கலாம். நிறைவையே மகிழ்ச்சியாக அறிந்திருக்கலாம். மகிழ்ச்சியைப்போல சிறந்த ஆடையும் அணிகலனும் ஒப்பனையும் வேறில்லை. இப்போது இவர்கள் ஒவ்வொருவரும் எதையேனும் வைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இல்லங்கள் அமைந்திருக்கின்றன. இல்லங்களுக்குள் அவர்கள் அமர்ந்து சொல்லாடுவதை, இல்லமுகப்புகளில் மைந்தரும் சுற்றமுமாக அமர்ந்திருப்பதை அவர் பார்த்துக்கொண்டு செல்வதுண்டு. ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு துண்டு வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மைகொண்டதாக இருக்கும்.
அஸ்தினபுரியை நாடி வந்தவர்கள் ஒருவர்கூட இல்லமின்றி தெருவில் தங்கியிருக்கலாகாது என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டிருந்தார். ஆகவே மொத்த நகரமும் தன்னைத்தானே கட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. சிதல்புற்று என நகர் வளர்ந்தது. நுரையெனப் பெருகியது. முகிலென மேலோங்கியது. வந்தவர்களுக்கு இருந்தவர்கள் இல்லம் செய்து அளித்தனர். வந்தவர்கள் இருப்பவர்கள் ஆகி வருபவர்களுக்கு இல்லம் செய்தனர். நகரம் ஒரு பெரும்பரப்பாகி அதன் நடுக்குமிழியாக பழைய அரண்நகர் அமைந்திருந்தது. ஒவ்வொருவரிடமும் சற்றேனும் பொன் இருந்தது. வந்தவர் அனைவருக்கும் உகந்த தொழில் அமைந்தது. அதற்கு பொன் ஊதியமாக கிடைத்தது. நகரமெங்கும் உணவும் கள்ளும் மலிந்து கிடந்தன. எனவே பொன் பொன் எனவே அவர்களிடம் சேர்ந்தது. அவர்கள் அதைக்கொண்டு வாங்கத்தக்க பொருட்களின் நுண்வடிவம். அவற்றை வாங்கும் தருணத்து இன்பத்தின் பருவடிவம்.
சேர்க்கச் சேர்க்க அவர்கள் மேலும் மேலும் பொன்விழைவு கொண்டவர்கள் ஆனார்கள். கனவுகளை கைகளால் தொடமுடிகிறது. எண்ணி எண்ணி அடுக்கமுடிகிறது. மடியில் முடிந்துகொள்ள, இல்லத்தில் புதைத்துவைக்க முடிகிறது. பொன் அவர்கள் கையில் வளர வளர அவர்களின் ஆடை மாறியது. நடை மாறியது. சொற்களும் விழிகளும் மாறுபட்டன. தெய்வங்கள் மாறலாயின. குடித்தெய்வங்கள் அவர்களின் ஊர்களிலும் இல்லங்களிலும் தென்மேற்கு மூலைகளில் ஒடுங்கின. காக்கும்தெய்வங்களை அவர்கள் நாடினர். மேலும் மேலும் ஆற்றல்கொண்ட தெய்வங்களை. கொல்வேல் தேவர்படைத்தலைவனை. அவன் வழிநடத்தும் ஆயிரத்தெட்டு அன்னையரை. கொற்றவையை. அறுதியாக கலியை.
பிற தெய்வங்கள் அனைத்தையும்விட கலியே அவர்களின் அகத்தை நன்கறிந்தவன் என்று அவர்கள் உணர்ந்தனர். “கலி மூன்று தெய்வங்களுக்கும் மைந்தன். இருளில் இருந்து எழுந்தவன், எனவே இருளை அறிந்தவன், ஒளியை நோக்கி செல்ல பிறிதொரு வழித்துணை இல்லை” என்றனர் சூதர். நகரில் காகங்கள் திரும்பிவந்தன. நகரில் வறுமை எழுந்தபோது அவை மறையலாயின. துரியோதனன் களம்பட்டபோது அவை முற்றாக அகன்றன. கலிதேவனை வழிபடும் சொற்களால் அவர்கள் காகங்களை அழைத்தனர். நகரை அவற்றிடம் ஒப்படைத்தனர்.
நகரில் காகங்கள் பெருத்துவிட்டிருப்பதை எவரும் அறியவில்லை. நகரம் மக்கள்திரளால் ஓசையிட்டுக்கொண்டிருந்தமையால் அவற்றின் ஓசை மறைந்துவிட்டிருந்தது. ஆனால் ஒருநாள் இரவில் நிலவில் வானமெங்கும் காகங்கள் பறந்துகொண்டிருந்ததை சுதமன் கண்டார். அவர் முதலில் அவை வௌவால்கள் என நினைத்தார். பின்னர் அவை பறக்கும் சிறகசைவைக்கொண்டு காகங்கள் என தெளிந்தார். மறுநாள் அவர் அதை சொன்னபோது அமைச்சுநிலையில் இருந்த இளைய அமைச்சர்கள் அனைவருமே அதை சொன்னார்கள். நகரில் வெவ்வேறு இடங்களில் அவர்கள் அச்சுறுத்தும் அளவுக்கு காகங்கள் பெருகிநிறைந்திருந்ததை கண்டிருந்தனர்.
“அங்காடி முகப்பில் ஒருநாள் காலையில் நான் என்ன இது இந்த இடம் இத்தனை இருண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டு தேரில் சென்றேன். ஒருகணத்தில் உண்மை நெஞ்சை அறைய திகைத்துவிட்டேன். அந்த இடம் முழுக்க காகங்கள். காகங்கள் அசையவில்லை. தேருக்கான வழியை மட்டுமே அவை விட்டன. பெரும்பாலானவை ஓசையிடவோ எழுந்தமரவோ இல்லை…” என்றான் ஒருவன். “ஆம், நானும் கண்டேன். தெற்குக்காட்டில் மரங்களில் இலைகளை மறைக்கும் அளவுக்கு காகங்கள்…” என்றான் இன்னொருவன். நகர்ச்சதுக்கச் சூதன் “இது காகங்களின் ஆலயம் என்று அறிக! காலம்சமைக்கும் கலியின் அருள் எழுந்த நகர் இது” என்று பாடினான். “கருமையே எழும் யுகத்தின் நிறம். எல்லா வண்ணங்களும் சென்றடையும் வண்ணம் அது.”
கலியின் காகக்கொடியை முதலில் வணிகர்கள் தங்கள் கடைகளிலும் இல்லங்களிலும் நிறுவினர். பின்னர் பெரும்பாலான மக்கள் தங்கள் இல்லங்களின் முகப்பில் காகச்சின்னத்தை பொறித்துக்கொண்டனர். காகத்தின் படம் பொறித்த வெள்ளி முத்திரைகள், நீலப்பட்டு துணிகள், பலகைகள் கடைகளில் விற்கப்பட்டன. காகம் பொறிக்கப்பட்ட செம்புக் கணையாழிகளை பெரும்பாலும் அனைவருமே அணிந்திருந்தனர்.
“நால்வருணமும் திரிந்து அனைவருமே வைசியர் என்றான காலகட்டம் இது” என்றார் அந்தணராகிய மர்க்கர். “அவ்வண்ணம் ஒன்று எழும் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அன்று வேதச்சொல்லும், முனிவரின் ஊழ்கமும், அரசனின் அறமும், மறவரின் வீரமும், புலவரின் சொல்லும்கூட பொன்னால் அளவிடப்படும். மூத்தோரின் மதிப்பும் அன்னையரின் அன்பும் மகளிரின் காதலும்கூட பொன்னுக்கு நிகர்வைக்கப்படும். அது எழுந்துவிட்டதென்பதை இந்நகர் காட்டுகிறது.”
சுதமன் துயின்றுவிட்டிருந்தார். சற்றுநேரம்தான், ஆனால் அவர் அதற்குள் தன்னுள் நெடுந்தொலைவு சென்று மீண்டார். அவர் அங்கே துரியோதனனை கண்டார். இரவில் நீர் என கன்னங்கருமையாக மின்னிய அரியணையில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவன் வலப்பக்கம் சகுனி நின்றிருந்தார். துரியோதனனின் காலடியில் சிறிய சிற்பங்களாக நூற்றுவர் தம்பியர் நின்றிருந்தனர். அப்போதுதான் துரியோதனன் நான்கு கைகளுடன் கல்லுடல் கொண்டு தெய்வம் என கருவறைப் பீடத்தில் அமர்ந்திருப்பதை சுதமன் கண்டார்.
துரியோதனன் தன் வலது மேற்கையில் முப்புரிவேலும் இடது மேற்கையில் பாசச்சுருளும் ஏந்தியிருந்தான். கீழ் வலக்கை அஞ்சலும் இடக்கை அடைக்கலமும் காட்டியது. காலுக்குக் கீழே பீடத்தில் காகம் பொறிக்கப்பட்டிருந்தது. துரியோதனனின் கண்கள் உயிருடன் இருந்தன. அவன் நட்புடன் புன்னகைத்தான். “அரசே, நான் சுதமன். உங்கள் அவையில் எந்தை அமைச்சராக இருந்தார்” என்று சுதமன் சொன்னார். “நான் உங்களை இளமைந்தனாக அரசவையில் கண்டிருக்கிறேன்.” துரியோதனன் புன்னகைத்து “உங்கள் குடி பெருகுக, உத்தமரே” என்றான். “நான் எளியோன். இந்நகரில் ஒரு சிறு துளி. உங்கள் அடிதொழுபவன்” என்றார் சுதமன்.
தேர் உலுக்கி நிற்க அவர் இறங்கி திகைத்து நின்றார். எங்கு வந்திருக்கிறேன்? பின்னர் இடமுணர்ந்தார். அஸ்தினபுரிக்கு வடகிழக்கே கங்கைவளைவு வரை பரந்திருந்த காட்டுக்குள் வேள்விக்கென ஒரு நகர் அமைக்கப்பட்டிருந்தது. அவர் அதன் முற்றத்தை அடைந்துவிட்டிருந்தார்.