மிஷ்கின்,சிசிடிவி ஒரு விவாதம்

 

நான் சைக்கோ பார்க்கவில்லை. படம்பார்க்கும் மனநிலையிலேஎயே இல்லை. ஆனால் மிஷ்கினின் இந்த ஆரம்பக்கல்விப் பயிற்றல் எனக்குப் பிடித்திருக்கிறது. தன்னம்பிக்கையாகச் சொல்கிறார். ஆனால் என்ன பிரச்சினை என்றால் இந்த ஆரம்பப் பாடத்தை கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இங்கே எழுத்திலும் திரையிலும் புனைவை உருவாக்குபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான்.

இங்கே பிரச்சினை இந்த ஆரம்பப் பாடம்  படம் பார்ப்பவர்களுக்குப் புரியவில்லை என்பது அல்ல. அவர்களுக்கு ஏனோ ஒரு படைப்பு பிடிக்கிறது, அல்லது பிடிக்கவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். படைப்பாளியை பிடிக்காது. படைப்பு பிடிக்காது. அப்படி பல . ஆனால் அதை ஏன் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று  சொல்ல அழகியல் காரணங்கள் எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான். ஆகவே இதைச் சொல்கிறார்கள். அவர்கள் வேறு என்னதான் சொல்லமுடியும்?

ஒருபடைப்பை அழகியல் ரீதியாக விமர்சிக்க அக்கலையின் அழகியல்முறைமை என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். அதிலுள்ள வகைபேதங்கள் தெரிந்திருக்கவேண்டும். அதன் சாத்தியங்கள் என்ன என்று ஊகிக்கும் நுண்ணுணர்வும் தேவை. படைப்பை ஆராய்ந்து பார்க்கத் தெரியவேண்டும். அதன் வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்கவேண்டும். .

இவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. நாளெல்லாம் படம்பார்த்தாலும், கதை வாசித்தாலும் அழகியல்  பிடி கிடைப்பதில்லை. ஆகவே நான்கு வகைகளில் படைப்பைக் குறைசொல்கிறார்கள்.

அ. புனைவின் அரசியலையும் அரசியல் சரிநிலைகளையும் அடிப்படையாகக்கொண்டு அதை நிராகரிப்பது. இந்தப்படம்  ‘சரியான அரசியல்நிலைபாடு’ கொண்டது அல்ல என்பார்கள். உதா, இது  உழைக்கும் மக்களுக்கு எதிரானது, இது அடித்தள மக்களை இழிவுசெய்கிறது இன்னபிற. அல்லது அது பொதுவாக சமூக ஒழுக்க நம்பிக்கைகளைக் கடக்கிறது என்பது. உதா, இதில் ஒருவன் குழந்தைகளை அடிக்கிறான், அதெப்படி குழந்தைகளை அடிப்பதுபோலக் காட்டலாம் என்பது.

எந்தப் படத்திலும் எப்படியும் இதைக் கண்டடையலாம். ஒரு படு முற்போக்குப் படத்தில் முதலாளி தொழிலாளியை வசைபாடுகிறான் என்று கொள்வோம். அந்தப்படத்தை நிராகரிக்கவேண்டும் என்றால் முதலாளியின் வடிவில் இயக்குநர்தான் தொழிலாளியை வசைபாடுகிறார் என எடுத்துக்கொண்டால் போதும்.

அதாவது ஒரு படைப்பின் உள்ளடக்கம், அல்லது உள்ளடக்கங்களில் ஒருபகுதி, அல்லது உள்ளடக்கம் என இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை மட்டும் எடுத்துக்கொள்வது. அதை அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமான அரசியல் விவாதங்களில் பொருத்திக்கொண்டு வழக்கமாக எந்நிலைபாட்டை எடுப்பார்களோ அதன் அடிப்படையில் ஆராய்ந்து வழக்கமாக எதைச் சொல்வார்களோ அதையே சொல்வது. அதற்கு கூடுதலாக கொஞ்சம்  கலைச்சொற்களை நிரவிவிட்டால் சினிமாக் கோட்பாட்டுவிவாதமாக ஆகிவிடுகிறது.

.புனைவை தழுவல் அல்லது நகல் என்பது. எந்த ஒரு புனைவுக்கும் அதற்கு முன்னோடியான புனைவு இருக்கும். அதிலும் இன்று புனைவுகள் பெருகியிருக்கும் சூழலில் முன்னோடிப் புனைவுகள் பல்லாயிரம் இருக்கும். ஒரு படைப்பின் கதையைச் சுருக்கி ஓரிரு குறிச்சொற்களாக ஆக்கி கூகிளில் தேடினால் அதேபோன்ற ஓரிரு கதைகளை எடுத்துவிட முடியும். அதைச் சொல்லி இது அதேதான் என்று சொன்னால் சொல்பவர் அதியதிதீவிர வாசகர்,ரசிகர் ஆகிவிடுகிறார். இது கல்வி — ஆய்வுச்சூழலில் அசட்டுத்தனமாக கருதப்படும் ஓர் உத்தி. அனால் பொதுச்சூழலில் அறிவுஜீவிகளிடம் புழங்கிக்கொண்டிருக்கிறது.

முன்பு வசந்தபாலனின் வெயில் வந்தபோது இணையமெங்கும் அது சினிமா பாரடைஸ் படத்தின் ‘அப்பட்டமான காப்பி’ என எழுதினார்கள். சினிமா பாரடைஸுக்கும் வெயிலுக்கும் ஒரே ஒற்றுமைதான். வெயில் படத்தில் கதைநாயகர்களில் ஒருவன் ஓரிரு காட்சிகளில் திரையரங்கில் வேலைசெய்கிறன். சினிமா பாரடைஸ் ஒரு திரையரங்கைப் பற்றிய படம்.

3 . தகவல்பிழைகளைச் சுட்டிக்காட்டுவது  எந்தப்புனைவும் ஓரிரு தகவல்களைத்தான் பயன்படுத்தும். அத்தனை தகவல்களையும் பயன்படுத்தி ஒரு புனைவை உருவாக்க முடியாது. தனக்கு வசதியான தகவல்களை மட்டும் தெரிவுசெய்து அதை கற்பனைமூலம் விரிவாக்கி, திரித்து மட்டுமே ஆசிரியன் புனைவை உருவாக்கமுடியும். இன்றைய கூகிள் யுகத்தில் புனைவு சொல்லும் தகவல்களைக் கொண்டு தேடி மேலதிக தகவல்களை ஐந்து நிமிடத்தில் எடுத்துவிட முடியும். அதை முன்வைத்து ஆசிரியனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு அதற்குமேல் தெரியும் என்று காட்டிக்கொள்வது ஓர் அற்பத்தனம். ஆனால் இணையம் முழுக்க இருப்பது இதுதான்.

இல்லாத தகவல் ஆசிரியனுக்கு தெரியாத தகவல் அல்ல. மாற்றிச் சொல்லப்பட்ட தகவல் ஆசிரியனின் பிழையும் அல்ல. தகவல்கள் உருமாற்றம் அடையாமல் புனைவு உருவாக முடியாது.ஒரு தகவல் என்பது புனைவில் எப்படிப் பயன்படுகிறது, அப்படைப்பின் அடிப்படைப் புனைவை அது தீர்மானிக்கிறதா என்னும் அடிப்படையில் மட்டுமே தகவல்கள் ஆராயப்படவேண்டும்.

அவ்வகையில் ஒரு முதன்மையான தகவல் விடப்படுவது, மாறியிருப்பது எல்லாம் ஆசிரியனின் ஆழத்திற்குள் செல்வதற்கான பாதைகள். இவற்றை புனைவின் இடைவெளிகள் அல்லது விரிசல்கள் என நவீன விமர்சனம் கருதுகிறது. அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு ஆசிரியனுக்கு அறிவுரை சொல்லும் அறிவின்மை தமிழில் இப்படி புழங்குவதை வெளியே சொன்னால் வெட்கக்கேடு .

4, தர்க்கப்பிழைகளைக் கண்டடைவது. படைப்பு என்பது வாசகனிடம்  ‘இது ஒரு வாழ்க்கை’ என நம்பும்படி கோருகிறது. நம்பும் வாசகனிடம் மட்டுமே அது பேசமுடியும். நம்ப மாட்டேன் என்று சொல்லும் வாசகனிடம் எந்தப்புனைவும் மேற்கொண்டு பேசமுடியாது.

ஏன்? அப்படைப்பின் ரசிகன் அறியாத ஒரு வாழ்க்கையை அது காட்டுகிறது. தனக்குத் தெரியாத வாழ்க்கைக்குள் சென்று தனக்குத்தெரிந்த தர்க்கத்தை ஒருவன் தேடுவான் என்றால் அவன் எவ்வகையான ரசிகன்? படைப்பின் நோக்கமே ரசிகன் வாழ வாய்ப்பில்லா ஓர் உலகை அவனுக்கு கற்பனையில் உருவாக்கி அளிப்பதுதான். அக்கற்பனையை தவிர்த்து தான் உண்மையில் வாழும் உலகை , தான் முன்னரே அறிந்த செய்திகளை ஒருவன் அதில் தேடுகிறான் என்றால் அவனுக்கும் புனைவுக்கும் தொடர்பில்லை. அவன் நேரத்தை வேறுவகையில் செலவழித்துச் சில்லறை சேர்க்கலாம்

புனைவில் தர்க்கப்பிழைகளைக் கண்டடையவே கூடாதா? அதற்கும் அழகியல் பயிற்சி தேவை. சுருக்கமாகச் சொல்லலாம். ஒரு புனைவாளன் அப்புனைவிற்குள் அவனே புனைந்து உருவக்கும் தர்க்கஒழுங்கு புனைவுத்தர்க்கம் எனப்படுகிறது. அப்படைப்புள் நுழைகையில் அதையே வாசகன் ஏற்கவேண்டும். தானறிந்த தர்க்கத்திற்கு புனைவை இழுக்கக்கூடாது. அப்புனைவுத்தர்க்கத்தை ஏற்றபின் அந்தத் தர்க்க ஒழுங்குக்குள் இருக்கும் விடுபடல்களை அவன் கவனிக்கலாம், அவை அந்தப் புனைவின் அடிப்படை கட்டுமானத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றால் அதை அழகியல்குறைபாடாகச் சுட்டிக்காட்டலாம்

உதாரணமாக, கௌபாய்  ‘காமிக்’கள் அவற்றுக்கான ஒரு தர்க்கத்தை உருவாக்குகின்றன. அங்கே கதைநாயகன் மேல் குண்டுகள் படாது. அதெப்படி படாமலிருக்கும் என்று கேட்பவன் காமிக்குகள் படிக்கக்கூடாது, அவ்வளவுதான். ஒரு கதாபாத்திரம் அச்சில் எட்டு பக்கத்திற்கு நிறுத்தாமல் பேசுமா என்று கேட்கும் யதார்த்தவாதி தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்கக்கூடாது. அவன் படிக்கவேண்டியது சில இருக்கும் அவற்றைப் படிக்கலாம் – பலசமயம் அது தினதந்தி மட்டுமே..

*

இங்கே தர்க்கப்பிழைகளைக் கண்டறிபவர்களைப் பற்றி எனக்குள்ள ஓர் அனுபவம். பாபநாசம் படத்தை தமிழில் எடுத்தபோது நான்  எழுதினேன். மலையாள மூலத்தில் மிக நுட்பமாக பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட திரைக்கதை. அதில் குற்றம் நடக்கும் அந்நாளில் கடுமையான மழை பெய்கிறது. இரண்டுநாட்கள் மழை. சுயம்புலிங்கம் குற்றவாளி வந்த அந்தக் காரை நீரில் வீசுகிறான்

இரண்டும் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. ஏனென்றால் ஒரு போலீஸ்நாய் வந்து மோப்பம் பிடித்திருந்தால் நேராக கொலை நடந்த இடத்திற்குச் சென்றிருக்கும் .மழை நாயின் மோப்பத்தை இல்லாமலாக்கிவிடும். சுயம்புலிங்கம் காரை நீரில் வீசுவது ஏன் என்றால் அதில் கைரேகை இருக்காது.

ஆனால் தமிழில் நான் எழுதும்போது ஒரு போலீஸ் அதிகாரியே “மேடம், அன்னிக்கு மழையானதனாலே போலீஸ்நாய் மோப்பம் புடிக்கலை. அந்தக்கார் தண்ணியிலே கிடந்ததனாலே கைரேகையும் இல்லை. என்ன பண்றதுன்னே தெரியலை” என்று ஒரு வரி சொல்வதுபோல் எழுதியிருந்தேன்.  இயக்குநர் “அய்யய்யோ, எந்தா இது!” என்றார். “இது தமிழ்நாடு. இங்கே மழையையோ நீரையோ சும்மா காட்டினால் போதாது. சொல்லிக் காட்டாவிட்டால் லாஜிக் மீறல் கண்டுபிடிப்பார்கள். படித்தவர்களும் விமர்சகர்களும்கூட அந்த தரம்தான்” என்றேன்.

இயக்குநருக்கு குழப்பம். நான் திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன். ஆகவே ஒரு நடிகர் வரவழைக்கப் பட்டார். அக்காட்சி படமாக்கப்பட்டது. அந்த புஸ்திமீசை ஆபீசரை நீங்கள் படத்தில் காணலாம். ஆனால் அந்த வசனத்தை கடைசியில் இயக்குநர் நீக்கிவிட்டார். அதெல்லாம் மிகமிக  ‘ஸ்பூன் ஃபீடிங்’ என ஜித்து ஜோசப் நினைத்தார்.

படம் வந்தது, பார்த்திருப்பீர்கள். ஆங்கில நாளிதழ்கள் உட்பட பல விமர்சனங்களில் மேலே சொன்ன லாஜிக் பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஒரு போலீஸ்நாய் வந்திருந்தால் நேராக சுயம்புலிங்கம் வீட்டுக்கு போயிருக்குமே, அந்தக்காரில் சுயம்புலிங்கம் கைரேகையே இல்லையா என்றெல்லாம் அறிவுரைக்கும் தோரணையில் ,அல்லது மெல்லிய அறிவுஜீவிக் கேலியுடன் கேட்டிருந்தார்கள். படம் நன்றாக ஓடியது. ஆகவே எவரும் எதற்கும் பதில் சொல்லவில்லை. அப்படி ஒரு கேலி உருவாகி அது பேசப்படுவதேகூட விளம்பரம்தான் என்னும் மனநிலை நிலவியது.

உண்மையில் அதில் ஒரு மிகப்பெரிய பிழை இருந்தது, அது எங்களுக்குத் தெரியும், அதை எவருமே சுட்டிக்காட்டமாட்டார்கள் என்றும் நன்றாகவே தெரியும். ஏனென்றால் நானறிந்தவரை சராசரி சினிமாக்காரர்கள் சராசரி விமர்சகர்களைவிட பலமடங்கு விஷயமறிந்தவர்கள், கூர்மையானவர்கள். அப்படி மேலும் ஒரு இருபது சிறு விடுபடல்கள் அப்படத்தில் உள்ளன. ஒன்றுகூட எவராலும் சுட்டப்படவில்லை.

யோசித்துப்பாருங்கள், சுயம்புலிங்கம் மீது சந்தேகம் வந்ததுமே முதலில் போலீஸ் செய்வது அவருடைய வீட்டை துப்புரவாக சோதனை செய்வதுதான். அங்கே ஒரு துளிரத்தம், ஒரு கைரேகைப் பதிவாவது இல்லாமலிருக்காது. ஒரு தடையம்கூட இல்லாமல் மறைக்கவே முடியாது. ஆனால் படத்தில் அந்த வீடு சோதனையிடப்படவே இல்லை. நடைமுறையில் உண்மை இது, ஆனால் படத்தில் அப்படி சோதனையிட போலீஸுக்கு தோன்றவில்லை அவ்வளவுதான் .அந்த சாத்தியத்தின் மேல்தான் கதையே அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கே மிஷ்கின் செய்தது ஒரே தவறுதான் “சார்,அவன் பலே கெட்டிக்காரன், சிசிடிவி இல்லாத எடம் பார்த்து கிரைமை செஞ்சிருக்கான்” என்று ஒரு புஸ்திமீசைக் கான்ஸ்டபிளுக்கு வசனம் வைத்திருக்கவேண்டும். நம் அறிவுஜீவிகள் நிறைவடைந்திருப்பார்கள். அதைவிட பெரிய தவறு படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கையில் இப்படி விளக்கம் அளித்திருப்பது.

முந்தைய கட்டுரைரா.கிரிதரனின் இசை- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68