சரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்

[நரேந்திரன் மொழியாக்கம் செய்த இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் பற்றிய மதிப்புரை]

என்னுடைய அப்பா, அவரது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வேலைக்காக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோபிக்கு சென்றார். பின்னர் ஈரோடுக்கு. அம்மாவை மணமுடித்த பின்னர் ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு “செட்டில்” ஆனது அவிநாசிக்கு அருகில் இருக்கும் “திருமுருகன்பூண்டி”யில். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது, இப்போது வாழ்வது பூண்டியில்தான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “காங்கேயம்பாளையம்” செலவது என் பால்யம் முதற்கொண்டே தொடரும் பழக்கம். எனக்கு மனதளவில் நெருக்கமான ஊர்தான் பூண்டி, அன்றாடம் 2 மணி நேரங்களை பயணத்தில் கழித்து நான் பணிக்குச் சென்றுவந்த போதும், பூண்டியிலேயே இருப்பதற்கான காரணம் இவ்வூருடன் எனக்கு அமைந்த பிணைப்பு. என்றபோதிலும், எவரேனும் ”உன் சொந்த ஊர் எது?” என கேட்கும்போது அன்னிச்சை செயலாகவே கூறிவிடுவேன் “காங்கேயம்பாளையம்” என்று. பணி நிமித்தம் சென்னையில் நான் ஏறத்தாழ 5 வருடங்கள் கழித்த தினங்களின் இரவுகள், என்னுள் பூண்டியின் நினைவுகளை கிளர்த்தியவை. இப்படி நாம் வசித்த ஊர் மீதான பிணைப்பும், நம் சொந்த மண்ணுடனான தொடர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவை.

“எனக்கிந்த ஊரே புடிக்கலடா, பேசாம நம்ம ஊர்ப்பக்கமே போயிடலாம்முண்ணு பாக்குறேன்” என்ற வாக்கியத்தை உச்சரிக்காத வெளியூர்வாசிகள் பாக்கியவான்கள். ஒரே நிலப்பரப்புக்குள், பெரும்பாலும் மிகக்குறைந்த மொழி , கலாச்சார வேறுபாடுகள் மட்டுமே நிலவும்போதே இத்தகைய இடர் என்றால், போரின் காரணமாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ வேறு நாடுகளில் வாழ நேர்ந்த மனிதர்களும் அவர்கள் குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதவை.

*

அகதிகளாகவோ அல்லது பணி நிமித்தமோ, பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த பத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, அதை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர். நரேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் புலம்பெயரிகளின் இருத்தல் / கலாச்சாரம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் உறவுகளுக்கிடையேயான சிக்கல்களைப் பேசுபவை.

*

”கெயிட்டா”வுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்துதான் ”ந்னாம்” அவரை மணம் புரிந்துகொண்டாள். அவனது முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள விரும்பும் ந்னாம், தன் சம்பாத்தியத்தில் கட்டும் வீட்டைக்கூட கெயிட்டாவின் பெயரில் பதிவு செய்யுமளவு அவன் மீது அன்பு கொண்டவள். கெயிட்டா அகால மரணமடைகிறான். அதன்பின் அவனது மறுபக்கம் தெரியவருவதும், கெயிட்டாவுடனான தன்னுடைய வாழ்க்கையை / உறவை ந்னாம் மறுபரிசீலனை செய்வதும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அவனது நினைவை கிளர்த்தும் பொருட்கள், வாசனை என ஒவ்வொன்றையும் அகற்றும் ந்னாம்மின் சித்திரம் மிகவும் துல்லியமானது. உகாண்டாவுக்கும் மான்செஸ்டருக்குமான ஒரு ஊஞ்சல் பயணம் போல அமைந்திருக்கிறது “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” கதை. வாசிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கெயிட்டாவின் நினைவை வீட்டில் இருந்து அழிப்பதைப் போலவே தன் மனதிலிருந்தும் அழிக்கும் ”ந்னாம்” ஐ, அவள் தன் தகப்பனிடம் வீட்டைப் பற்றிக் கேட்கும் தருவாயில் அறியமுடிகிறது.

என்னுடைய வாசிப்பில், இந்தக் கதைக்கு இணை வைக்கக்கூடிய ஒரு கதையாக “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ” ஐ சொல்வேன். அழிவுக் காலத்தை நெருக்கும் பூமியிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக மறைந்துகொண்டிருக்கும் சூழலில், தன்னுடைய உறவும் (அல்லது தன்னுடைய இருப்போ) அப்படியே மறைந்து போகக்கூடிய சாத்தியத்தை எண்ணிக்கொள்ளும் கதை அது. இங்கிருந்து மறைபவை எல்லாம் இன்னொரு பக்கத்தில் சென்று சேர்ந்து காத்திருப்பவை எனும் வரி பலவகையில் விரிவடையும் சாத்தியம் கொண்டது.

தன் பெற்றோரை, இளமையை தொலைத்த தாய் தன்னுடைய இழப்பை தன் மகனுடன் கழிக்கும் பொழுதுகளால் சரி செய்கிறாள். மகன் வளர்ந்து பெரியவனாகும் போது, தன் அன்னையின் மொழி, கலை எதுவும் அவனுக்கு போதாமலாகிறது. தான் இப்போதுள்ள நாட்டில் கிடைக்கும் விசயங்களை நோக்கி அவன் ஈர்க்கப்படுகையில் அவன் அன்னை மீண்டும் தனித்து விடப்படுகிறாள். அவனது தாயால் காகிதங்களில் செய்யப்பட்டு (ஒரகாமி) சிறுவயதில் அவனால் பெரிதும் விரும்பப்பட்டு, பின்னர் நவீன விளையாட்டுப் பொருட்களால் மறந்துபோன காகித மிருகங்கள் ஒருவகையில் அவனது தாய்தான், ஏன் நாமும்தான். தாயின் மரணத்துக்குப்பின் அவளது கடிதத்தை மகன் வாசிக்கும் தருணம் என்னை பெரும் தத்தளிப்புக்கு ஆளாக்கியது. ஒரு நள்ளிரவில்தான் நான் “காகித மிருக சாலை” எனும் இந்தக் கதையை வாசித்தேன். அந்தத் தாயின் இடத்தில், என்னால் எந்த உறவையும் பொருத்திப்பார்க்க முடிந்தது. உதாசீனப்படுத்தப்பட்டதன் வலி, துயரம் என்னை தூக்கமிழக்கச் செய்தது.

ஒரு தந்தையின், இரு மனைவிகளின் குழந்தைகள், அவர்களுக்கு ஒரே பெயர் எனும் விசித்திரத் தகவலுடன் துவங்கும் கதை ”தந்தையர் நிலம்”. முதல் தாயுடன் வாழும் புவாங் (விவியன்), தன் தந்தையின் இரண்டாம் குடும்பத்துடன் கழிக்கும் தினங்கள், அவர்களுக்கென அவள் கொண்டுவந்திருக்கும் பரிசுகள், அவர்களை மகிழ்விக்க பெரும் தொகையை விவியன் செலவிடுதல், தன் பெயருள்ள புவாங்குடனான விவியனின் நேசம், புவாங்க்கிற்கான தனிப்பட்ட பரிசு, விவியனைப் போல தான் மாற எண்ணும் புவாங் என விரியும் கதை, ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில், அந்தப் பயணம் போலவே மாறிவிடுகிறது. “என் தங்கையை பற்றி கவலைப்பட எனக்கு நேரமிருக்காது” எனும் விவியனின் கண்ணீர், அதன் மறு எல்லையாக, புவாங்கால் எரிக்கப்பட்ட புகைப்படங்களின் சாம்பல் காற்றில் மறையும் சித்திரம், என காட்டப்படும் மனதின் ஆழங்கள் ஒருபோதும் நான் அறிந்துவிட முடியாதவை.

எந்த ஒரு உறவும் உடனடியாக அமைந்துவிடுவதில்லை. ஒருவருடனான நம் வாழ்க்கைப் பயணம் என்பது ஆயிரம் ஆண்டுகள் பிராத்திப்பதால் வரக்கூடியது. ஆனால், பரஸ்பரம் தேவைப்படும் போது, இல்லாது போகும் உறவுகள் முறிகையில் அந்தப் பிராத்தனைக்கான நியாயம் செய்யப்படுவதில்லை. சிறு குழந்தையாய் இருக்கையின் தன் மகளுக்கான சொற்களை மறந்து போன, தகப்பனின் சொற்களுக்கு மகளின் வாலிபத்தின் எந்தப் பொருளும் இருப்பதில்லை. நாடு விட்டு நாடு வந்த போதும் மொழியே புரியாத போதும், சிறிதுகாலம் மட்டுமே அறிந்தபோதும் தன் தோழியுடன் தன்னால் பகிர்ந்து கொள்ளக் கூடிய விசயங்களை, ஒரே மொழி தெரிந்தும், ஒரே தேசத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய நீட்சிதான் என்றாலும் தன் மகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு “ராக்கெட் சயிண்டிஸ்ட்” பற்றி நமக்குச் சொல்கிறது “ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்” கதை.

யுத்தகாலத்தின் நிச்சயமின்மை, ஒவ்வொரு தனி மனிதனிலும் நேரும் அதன் விளைவுகள், ஏதேனும் ஒரு குருட்டு நம்பிக்கையில் துவங்கும் பயணங்கள், எதிர்பாரா இடத்திலிருந்து அருளப்படும் ஒரு பற்றுக்கோல், அனைத்திலும் மேலான மனித மனத்தின் விளங்கிக்கொள்ள முடியாத இருட்டு என பல படிகளாக விரியும் கதை “ஒரு நேர்மையான வெளியேற்றம்”.

*

இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் அருமையான வாசிப்பனுபவம் தருபவை. இத்தொகுப்பில், என்னை மிகவும் பாதித்த, தொந்தரவுக்குள்ளாக்கிய கதைகள் என ”காகித மிருக சாலை”, “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்”, “ஆயிரமாண்டுப் பிராத்தனைகள்”, “தந்தையர் நிலம்”, “ஃப்ராவோவிலிருந்து ஒரு சவாரி”  கதைகளைச் சொல்வேன்.

*

ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள், அந்தக் கதைகளை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. இந்தக் கதைகள் நிகழும் பிரதேசங்கள் குறித்த சிறு புரிதல் இருப்பவர்களுக்கு இந்தக் கதைகள் இன்னும் அணுக்கமாக அமையக்கூடும். இந்தப் பத்து எழுத்தாளர்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை. அவ்வகையில் பத்துகதைகளை மட்டுமல்ல, பத்து எழுத்தாளர்களை தமிழுக்கு, தன் அற்புத மொழிபெயர்ப்பால் அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். நரேன்.

சிறுகதைகளின் நிலவெளி -முத்துக்குமார்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72
அடுத்த கட்டுரைசுசித்ராவின் ஒளி – கடிதம்