ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்

ராம்குமார்

 

 

முதல் தொகுப்பில் வரும் கதைகளே ஒரு ஆசிரியரின் எண்ணவோட்டத்தை நமக்கு அளிக்கின்றன. அவை அவரது ஆரம்பகால கதைகளாக இருக்கும் பட்சத்தில். அதன் பின்னான தொகுப்புகள் பெரும்பாலும் அதை கயிறு திரித்தோ அல்லது கூர்தீட்டியோ அலங்காரம் செய்தோ மேலெழுபவையாகத்தான் இருக்கின்றன. அதானால்தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் முதல் தொகுப்பின் கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. அவற்றில் போதாமைகள் இருக்கலாம் எழுத்துப்பிழைகள் இருக்கலாம் வடிவ நேர்த்தி குறைந்திருக்கலாம் ஆனால் வாசகனுக்கு அவை முக்கியமானவையே. ஏனெனில் அந்த எழுத்தாளர் ஏன் எழுத வந்தார் என்பது அதில் புலப்படலாம் அல்லது அவரது பார்வை என்ன என்பது புலப்படலாம். அவரது தேடல் என்ன என அறிய உதவலாம். இதெல்லாம் ஒரு வாசகனுக்குத் தேவையா என்றால், ஆம். அதை வைத்து தான் அந்த எழுத்தாளரை மேலே தொடர முடியும். அவர் வாசகரின் கைத்தட்டலுக்கு எழுதுகிறாரா  அல்லது தன்னை தொகுத்துக்கொள்ள எழுதுகிறாரா என்பது இலக்கிய வாசகனுக்கு முக்கியம். வாசகனின் கைத்தட்டலுக்கும் அதிர்ச்சிக்கும் எழுதும் கதைகள் அடுத்த பரபரப்பில் காணாமல் போய்விடுகின்றன. அவ்வாறு  வாசகனை திருப்திப்படுத்தவும் சொறிந்து தரவும்  எழுதப்படும் கதைகள் சராசரியான  கதைகளாகவே தேங்கிவிடுகின்றன..

 

தமிழனி பதிப்பகம் வெளியிட்டுள்ள ராம்குமாரின் அகதி தொகுப்பில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. உறவுகளுக்கிடையிலான ஊசலாட்டம், தன்னகங்காரம்/பாவனை அழியும் கணம், அரசாங்க பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்வு, மனிதர்களின் கீழ்மை மற்றும் கொண்டாட்டம் என பல வகைப்பட்டக் கதைகள். கதைகள் ராம்குமாரின் எளிய நேரடியான கதை சொல்லல் முறையில் எங்கும் துருத்தாமல் செல்கின்றன.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதையாக தொகுப்பின் முதல்கதையான கருவியைச் சொல்வேன். எல்லாவகை உறவுகளிலும் காணப்படும் போலித்தனமும் அதை நிஜம் என நம்பி இருக்கும் மனிதன் ஒருவனையும் சுற்றி நடக்கும் கதை. உண்மையில் பூபாலனுக்கு மகன் மீது அக்கறை இருக்கவில்லை. அவருக்கு தன் மீதுதான் மொத்த கவனமும். அதை அவர் உணரும் இடத்தில் அவருக்கு அதுவரை இருந்த இடமுமே கூட பறிபோகிறது.

 

பெருச்சாளி – சமரசம், லெனின் – கசப்பு ஆகிய கதைகள் வேறு வேறு வடிவங்களாக ஒரே விஷயத்தின் பல சாத்தியக்கூறுகளை ஆராய்பவைகளாக இருக்கின்றன. அனைத்து முரண்களையும் எடுத்து பார்த்து அந்தந்த தரப்பு மாறும் கணத்தை வெளிக்காட்டுகிறார். அதை பார்த்து நகைக்கிறார்.

 

ரோஜா, கான்கிரீட் நிழல்கள் இரண்டும் ஒரு வகையில் ஒரே வடிவானவை. தன்னுடைய நிலைக்குப் பொருந்தாத ஒன்றின் மீது கதாபாத்திரம் எவ்வகையிலோ கொள்ளும் ஈர்ப்பு என்கிற வகையில். ஒருத்தி தன் அன்றாட அடிப்படைத் தேவைக்காக  தீப்பட்டித் தொழிற்சாலையில் பணிபுரிபவள்.. மற்றவன் தகவல் தொழில் நுட்பநிறுவனத்தில் தன் நண்பன் மீதான காரணமிலாத  அகங்காரத்தின் பொருட்டு வந்தவன்.    ஒன்று ஒரு  அப்பாவியின் குணத்தை அப்படியே காட்டி மனதை லேசாக்குகிறது. ஆனால் மற்றது மனிதனின் ஒரு ஆழ்மனதில் கான்கிரீட் போட்டு இருக்கும் ‘காரணமில்லாத’ துவேஷத்தைக் காட்டிச் செல்கிறது. அதைக் காட்ட அது செய்யும் ஜாலங்கள் எல்லாம் பகடிபோல சொல்லிப்பார்க்கிறது. பக்கத்து இருக்கை நண்பன் சூர்யாமீது வரும் காரணமில்லாத போட்டி உணர்வு போல சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவன் மீதும் காரணமில்லாமல் வருகிறது..இது போன்று மனித மனங்களை ஆராயும் போக்கு இவரது கதைகளில் போதுவாகவே காணப்படுகிறது.

 

இதில் உள்ள பதக்கம் கதை தமிழகத்துக்கு மிகவும் புதிதானது. வடகிழக்கு மக்கள் வாழ்க்கையை அரசும் தீவிரவாத அமைப்புகளும் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்பதை உணர்ச்சிவசப்படாமல் காட்டியிருக்கிறார். மத்திய அரசின் இராணுவத்திற்கும் மாநில அரசின் காவல்துறைக்குமான உரசலில் பலிவாங்கப்படும் ஒரு குடும்பத்தின் கதையை சம்பவங்களில் பரபரப்பு கலந்தும் அதே சமயம் எழுத்துகளில் நிதானத்தைக் கையாண்டும் அளித்திருக்கிறார். ஒரு நாவலுக்கு தேவையான அனைத்தும் இருக்கும் சிறுகதை அது. இந்த தொகுப்பில் மனதை கனக்க வைத்த கதை அதுதான்

 

தொகுப்பின் தலைப்புக் கதையான அகதி, எதிரி நாட்டிடம் மாட்டிக்கொண்ட  ஒரு உளவாளியின் ஒருநாள் அனுபவம். நினைவுகள் நிகழ்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கயகுமாக ஊசலாடியே, எல்லைகளின், போரின் அபத்தத்தை சொல்லிப் போகிறது. இந்த தொகுப்பின் சாதாரண கதை அல்லது ஏற்கனவே எழுதப்பட்டு நம்மால் ஊகிக்க முடிந்த கதை என்று தோன்றும் கதைகள் என்றால் அவை இதுவும் பொன்னகரமும்தான். பழைய பொன்னகரம் ஒழுக்கத்தை  வறுமையைக் காட்டி ஒப்பிட்டது என்றால் இவரது கதை அதே ஒழுக்கத்தை  வளமையைக் காட்டி ஒப்பிடுகிறது.

 

 

ராம்குமாரின் எழுத்து நடையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  சில கதைகளில் அவரது நிதானமான நடையுடன் கூடி ஆங்காங்கு வெளிப்படும் நகைச்சுவைத் சித்தரிப்புகள் கதைகளை புன்னகையுடன் வாசிக்க வைக்கினறன. உறவுச்சிக்கல் கதைகளை கையாளும் போது ‘குடும்பச் சிக்கல் கதை  உங்களுக்குத் தெரிஞ்சதுதான.. சாதாரணமா வாங்க’ என வாசகனை மெல்ல அழைத்துச் செல்கிறது.  ரோஜா மற்றும் பதக்கம் ஆகிய இரு கதைகளையும் ராம்குமார் கொண்டு செல்லும் நிதானம்  வாசகனுக்கு முறையே பரவசத்தையும் பரபரப்பையும் அளித்தபடியே செல்கின்றன. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை நேரடியாக சொல்லாமல் தன் மற்றைய சித்தரிப்புகள் வழியே உருவாக்குகிறார். இறுதியில் அது ரோஜாவில் புன்னகையுடன் கூடிய ஒரு ஆசுவாசத்தையும் பதக்கத்தில் பாரத்தையும் அளித்துவிடுகின்றன.

 

 

ராம்குமாரின் அகதி தொகுப்பிற்கு  வாசகரை மகிழ்விக்க வேண்டிய நோக்கம் ஏதும் இல்லை. அவரது கதைகள் அவர் மனிதர்களில் கவனித்தவற்றை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. இதெல்லாம் ஏன் ஒரு வாசகன் கவனிக்க வேண்டும் என்று மீண்டும் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு புதிய படைப்பின் வழியாகவும் வாசகன் புதிதாக ஒன்றையோ  அறிவதோ அல்லது ஏற்கனவே அறிந்த ஒன்றை திடப்படுத்திக்கொள்ளவோ வேண்டும். புதியதாக ஒரு சிறுகதை படிக்கும் ஒரு வாசகன் தமிழில் எழுதப்பட்டிருக்கும் இத்தனை சிறுகதைகளின் வரிசையில் வைத்து அதைப் படிக்கிறான். அப்படிப் படிக்கையில்,  ஒன்று அவன் அட! என வியக்க வேண்டும். அல்லது ஆம்! என்று அவன் சொல்ல வேண்டும். அதுவே அதன் வெற்றி. வேறெதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.  சா.ராம்குமாரின் இந்த அகதி சிறுகதை தொகுப்பின் சில கதைகள் அட! என்றும் சொல்லவைக்கின்றன. சில கதைகள்  நம்மை ஆம்! என்றும் சொல்ல வைக்கின்றன.

 

செயல்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

தமிழகப் பொருளியல்- ராம்குமார்

செயல் -ஒரு கடிதம்

முந்தைய கட்டுரை“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”
அடுத்த கட்டுரைசுரங்கப்பாதைக்கு அப்பால்…