எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம், நான் உங்கள் தொடர் வாசகன். தங்கள் வலைத்தளத்தில் நீங்கள் எழுதிய எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? கட்டுரையை படித்த பின் அதிர்ச்சி அடைந்து உறைந்துள்ளேன்
இன்று ஒருவன் “நான் முற்றிலும் தனிமனிதன்”, என்று சொல்வான் என்றால் அவன் ஒருவகை மனக்குறுகல் கொண்டவன், ஒரு நோயாளி என்றே பொருள்.
இவ்வரிகள் பயமுறுத்துகின்றன. வாசகர்கள் யாரவது ஆலோசனை கேட்பார்கள் என்றிருந்தேன் யாரும் கேட்கவில்லை போலும். நான் ஹிப்பி இல்லை.வெறுமனே சுயமையவாதிதான் எனக்கூறும் தான்தோன்றியும் இல்லை. “அந்தரங்கம் புனிதமானது,பலபேரிடம் ஆலோசனை கேள் முடிவை நீயாய் எடு” என்ற ஜெயகாந்தன் சொற்கள் வழியாகவும்,உங்களின் எழுத்துகளே தனிமனித அறைகூவலாகவும் கண்டு உணர்ந்தேன்.
ஜனநாயக சோதனை சாலையில் நீங்கள் முதல் பொதுத்தேர்தல் பற்றி எழுதிய கட்டுரைகள் இந்தியாவில் பலபேருக்கு பெயர்கள் கூட இல்லை எனவும் தனிமனித சிந்தனை ஐரோப்பிய கொடை எனவும் இன்னும் பல நூல்களில் தனிமனித கருதுகோளை முதன்மை படுத்தியுள்ளிர்கள்.உங்களை பின் தொடரும் வாசகனாக உங்கள் எழுத்துகள் வழியாக தனிமனித சிந்தனைக்கு கட்டமைக்கபட்டுளேன்
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? கட்டுரைகள் தெளிவாக உள்ளது. மறுக்கவும் முடியவில்லை. ஜெயகாந்தன் ஆவணப்படத்தின் இறுதியில் ‘ என் தனிதன்மையைத்தான் நான் காப்பாற்றி கொள்ள வேண்டுமே தவிர, நான் தனியனாகி விடக்கூடாது’ என்கிறார். அவர் கூறிய சொற்சொடர் உங்கள் கட்டுரைகள் வழியாக புரிகிறது. இருப்பினும் அடுத்தவர் அந்தரங்கத்தில் எப்படி தார்மிக உரிமை கொள்வது? எப்படி அதை அனுமதிப்பது? எனக்கொரு பெண் குழந்தை உள்ளது அவளின் தனிப்பட்ட வாழ்கையில் என் தலையீடு இருக்க கூடாது என்றே இக்கணம் வரை நினைத்துகொண்டு இருக்கிறேன். என் ஐயத்தை தெளிவாக்குங்கள்.
இதுவரை உங்களின் கருத்துகள் முதலில் அதிர்ச்சியும் பின் அக்கருத்துடன் ஒத்துபோவதே என் வழக்கம்.
குமரவேல் (கோவை)
அன்புள்ள குமரவேல்
எதை ஒன்றைச் சொல்லும்போதும் ஏற்கனவே சொல்லப்பட்ட சிலவற்றை அழித்து, சிலவற்றை மாற்றி, சிலவற்றை நீட்டியே சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே சொல்லப்பட்ட எதற்கும் உடனே மேலதிக விளக்கமும் தேவையாகிறது. தவிர்க்கமுடியாது.
இதை சில கேள்விகளாகப் பிரித்துக்கொண்டு மீண்டும் சொல்கிறேன்.
அ. ஒரு மனிதனுக்கு ‘பகிரவே முடியாத’ அகம் உண்டா?
ஆ. ஒவ்வொரு மனிதனும் வேறெவருக்கும் இல்லாத அந்தரங்கம் கொண்டவனா?
இ. ஆகவே ஒரு மனிதனுக்கு இன்னொருவர் வழிகாட்டவே முடியாதா?
ஈ. நாம் நமது அந்தரங்கத்தை வெளிப்படையாக வைக்கவேண்டுமா?
உ. நாம் நமது தனித்தன்மையைப் பேணிக்கொள்ளவேண்டுமா?
ஊ. இன்னொருவரின் அந்தரங்கத்திற்குள் நுழைய நமக்கு உரிமை உண்டா?
இந்த ஆறு கேள்விகளில் முதல் மூன்றுக்கும் இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால் அடுத்து வரும் மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறேன். இந்தப் பதில்களுக்கு இடையே முரண்பாடு உண்டு என்னும் குழப்பம் உங்களிடம் உள்ளது, சரிதானே?
ஆனால் எந்த முரண்பாடும் இல்லை. மனிதர்களுக்கு அப்படி முழுமுற்றான அகம் கொண்டவன் அல்ல. அவன் காலத்தில், மானுடத்திரளில் ஒரு பகுதியே. அவனுக்கு தனித்தன்மை இருந்தாலும் கூட அதுவும் ஒன்றும் பிறிதெங்கும் இல்லாதது அல்ல. ஆகவே எந்த மனிதருக்கும் உலகியலிலும் ஆன்மீகத்திலும் அறிந்தோர், ஆசிரியர்களின் வழிகாட்டல் இன்றியமையாதது. இதுவே முந்தைய இருகட்டுரைகளின் வழியாக நான் சொல்ல வந்தது. அந்த ‘எவருக்கும் இல்லாத தனித்தன்மை’ தனக்கு உண்டு என்னும் எண்ணமும் சரி ‘என்னுடைய ஆழம் எனக்கு மட்டுமே சொந்தமானது’ என்பதும் சரி நவீனத்துவ காலகட்டம் உருவாக்கிய புதுத்தொன்மங்கள், நம்பிக்கைகள் மட்டுமே.
ஆகவே எவருக்கும் எந்த தனித்தன்மையும் இல்லை, எல்லாருடைய அந்தரங்கமும் எல்லாருக்கும் உரியது என்று பொருள்வருகிறதா என்ன? ஒவ்வொருவரும் தங்களுக்குள் தங்களுடையது என உணரும் தனித்தன்மையும் ஆழமும் உண்டு. அந்தத் தனித்தன்மையை பேணிக்கொள்வதும் அதை தன் அக, புறப் பயணத்திற்கான கருவியாகக் கொள்வதும் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது. அந்தத் தனித்தன்மை எங்குமில்லாதது, எவரும் அறியமுடியாதது என்று கற்பனைசெய்துகொள்ளவேண்டாம் என்று மட்டுமே சொல்கிறேன்.
நமது தனித்தன்மை என்பது நமது கனவுகளால், நமது திறன்களால், நமது எல்லைகளால் ஆனது. அதை நாம் அறிந்தாகவேண்டும். நமது கனவுகளை நாம் வகுத்துக்கொள்ளவேண்டும். திறன்களைப் பயின்று பெருக்கிக் கொள்ளவேண்டும். எல்லைகள் குறித்த அறிதலும் தேவை. அதற்கான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளவேண்டும். முன்னோடிகளை அறிந்திருக்கவேண்டும். பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நம்முடைய தனித்தன்மை சுயம்புவானது, தானாக நிலைகொள்வது, எவருமே அறியமுடியாத மர்மம் கொண்டது என்றெல்லாம் பிரமைகொண்டு அதை பொத்திக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்றே சொல்கிறேன்.
ஏன் நம் தனித்தன்மைகளை நாம் பேணிக்கொள்ளவேண்டும்? ஏனென்றால் நம்மைச்சூழ்ந்திருக்கும் பொதுப்போக்கு அதை கரைத்து அழித்துவிடக்கூடாது என்பதனால். அதன் பொதுவான நெறிகளுக்குள் அது ஒடுங்கிவிடக்கூடாது என்பதனால். ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மைகளுக்கு இணங்க தங்கள் வாழ்க்கையை ஆற்றுகிறார்கள். அத்தனித்தன்மைகள் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரு பொதுப்போக்காகவும் நிகழ்கின்றன. சிலர் மேலதிக தனித்தன்மை, தனியாற்றல் கொண்டவர்கள். அவர்கள் பொதுப்போக்கால் முற்றாக அடித்துச்செல்லப்படக்கூடாது.
நான் சொல்வதை மீண்டும் இப்படிச் சொல்வேன். தன் தனித்தன்மையை உணரும் ஒருவர் அதை பொதுப்போக்குகள் வரையறுக்க விடக்கூடாது. பொதுப்போக்கின் விசைக்கு அதை அளிக்கக்கூடாது. அதை அவன் பேணிக்கொள்ளவேண்டும், அதை அவன் தனித்தன்மை கெடாமல் வளர்த்தாகவேண்டும். அதேசமயம் அதை பேணிக்கொள்ளும் பொருட்டு அதை அவன் எவருடனும் உரையாடாமல், எவருமே அறியாமல் வைத்துக்கொண்டான் என்றால் அது தேங்கிச் சூம்பியே போகும். அதை அறிபவர்கள் உண்டு. அதற்கு முன்னோடிகள் உண்டு. அதைப்போன்றவர்கள் உண்டு. அதற்கு வழிகாட்டக்கூடியவர்கள் உண்டு. அவர்களுடனான உறவுதான் அவனை வளர்ப்பது.
“எல்லா அறிவுரைகளையும் கேட்டுக்கொள், உன் அகம் சொல்லும்படி முடிவெடு’ என்ற வரியைச் சொன்னீர்கள். யோசித்துப்பாருங்கள் அதிலிருக்கும் பிழையை. நம் அகம் முடிவெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியும் அறிதலும் கொண்டிருக்கும் என்றால் எதற்கு அறிவுரைகள்? அதற்கு அந்த முதிர்ச்சியும் அறிவும் இல்லையென்பதனால்தானே அறிவுரைகள் தேவையாகின்றன? எதைக்கேட்டாலும் நான் எனக்குப்பிடித்த முடிவையே எடுப்பேன் என்றால் அறிவுரைகள் எதற்கு? பெரும்பாலும் இங்கே அறிவுரைகள் அப்படித்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அறிவுரைகளை ஆணவத்தால் எதிர்கொள்வதுதான் அது. ஆணவம் இருந்தால் அறிவுரைகளில் இருந்து நாம் ஏற்கனவே எடுத்த முடிவுக்கு உகந்ததை, அல்லது நமக்கு வசதியானதை மட்டுமே தெரிவுசெய்வோம். அது பிழையாகப்போகுமென்றால் அறிவுரைகள்மேல் பழியைப்போடலாம், இல்லையா?
அந்த வரிக்குப் பின்னால் இருக்கும் புரிதல் என்பது நம் முடிவை பிறர் எடுக்கமுடியாது, நம் ஆழத்தை பிறர் அறியமுடியாது, நாம் முற்றிலும் தனித்தன்மைகொண்டவர்கள் என்னும் வழக்கமான பிழை. நாம் தனித்தன்மைகொண்டவர்கள்தான், ஆனால் அந்தத்தனித்தன்மை ஒன்றும் வேறெங்குமில்லாத அரியவிஷயம் அல்ல என்ற புரிதல் இருந்தால் நம்மைப்போன்றவர்கள், நம்மைக் கடந்துசென்றவர்கள், நம்மை வழிகாட்டக்கூடியவர்கள் ஆகியோரின் சொற்களை செவிமடுப்போம். நமக்கு ஒவ்வாதன என்றாலும், நம்மால் முழுதாக நம்பமுடியாதன என்றாலும் அவர்களின் சொற்களை ஏற்றுக்கொள்வோம். அறிவுரைகள், வழிகாட்டல்களில் அவற்றைக் கூறுபவரின் தகுதியே முதன்மையானது. அவரை நாம் ஏற்கிறோமா என்பதே அளவுகோல்.
பெரும்பாலான அறிவுரைகள் நாம் அறியாதவற்றைச் சார்ந்தவை, நாம் அறியாதவை என்பதனாலேயே நம்மால் அவற்றை மதிப்பிடவும் முடியாது. அவற்றை ஏற்று அவ்வழியே சென்றடைந்தபின்னரே அவற்றின் மதிப்பு நமக்குத்தெரியும். அதன்பின்னரே அவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆகவே அறிவுரைகளை மதிப்பிட்டபின் ஏற்பது என்பதைப்போல பிழை ஏதுமில்லை. அறிவுரை சொல்பவரை ஏற்பதொன்றே வழி. அவரை ஏற்க நம் உள்ளுணர்வே வழிகாட்டி. அவர் நாம் கொண்டுள்ள அகத்தை தானும் அறிபவர், நம் பாதையில் தானும் நடப்பவர், நமக்கு முன்சென்றவர் என்பதை உணர்ந்தால் அவரை ஏற்பதே செய்யக்கூடுவது
நம் தனித்தன்மையைப் பேணிக்கொள்வது, அந்தரங்கத்தைக் காத்துக்கொள்வது என்பது என்பது நம்மை தனித்துப்பேணுவது அல்ல. ஜெயகாந்தன் சொல்வது நம்மை திரளில் கரையாமல் பார்த்துக்கொள்வதும் நம் வழியை தேரும் உரிமையை தக்கவைத்துக்கொள்வதும்தான். எவரையும் பொருட்படுத்தாமல் தன்னந்தனிமையை தேடிக்கொள்வதை அல்ல. நான் தனித்துவமானவன் என்பது நான் தன்னந்தனியன் என்று பொருள் அளிப்பதில்லை.
நம்முடைய அந்தரங்கத்துடன் உரையாட பிறரால் இயலும் என்பதன் பொருள் நம் அந்தரங்கம் வெட்டவெளிச்சமானது, ஆகவே எவரும் அதை உணரமுடியும் என்றல்ல. எவர் வேண்டுமென்றாலும் நமக்கு ஆலோசனை சொல்லலாம் என்றல்ல. நாம் எவருக்கு வேண்டுமென்றாலும் ஆலோசனை சொல்லமுடியும் என்று அல்ல. பிறர் வாழ்க்கையை அறியவும் வழிநடத்தவும் நாம் முனையவேண்டும் என்று அல்ல.நம்மைச்சூழ்ந்தவர்களை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அல்ல. நமது அந்தரங்கத்தை அறிபவர்கள் சிலர் உண்டு என்றும், அவர்கள் நமக்கு அறிவுரைக்கமுடியும் என்றும் மட்டுமே நான் சொல்கிறேன். அவர்களை நாம் அறியவேண்டும் என்றும் அவர்களின் சொற்களை ஏற்கும் உளநிலை வேண்டும் என்றும் மட்டுமே சொல்கிறேன். நம்மிடம் கோரப்படாதபோது அறிவுரைப்பதோ வழிகாட்ட முற்படுவதோ வன்முறை. அது நம் பிள்ளைகளே ஆனாலும்
நான் சொல்வன அனைத்தும் ஒரே நோக்கம் கொண்டவை. கீழே அளித்துள்ள ‘மேற்கோளை’ பாருங்கள். நீங்கள் இணைய உலகில் இருந்தால் இதைப்போன்ற வரிகள் கண்ணுக்குப் பட்டபடியே இருக்கும்.
இவை சென்ற ஐம்பதாண்டுகளில் ஐரோப்பாவில் உருவான தனிமனிதவாத சிந்தனைகளில் இருந்து முளைத்தவை. இவை மெய்யறிதல்கள் போல முன்வைக்கப்படுகின்றன- ஆனால் வெறும் எண்ணங்கள். சொல்லப்போனால் வெறும் கசப்புகள் இவை. இவற்றைச் சொல்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டவர்கள். ஆகவே கசந்தவர்கள். இப்புவி, இம்மானுடத்திரள் அளிக்கும் எந்த கொடையையும் பெறாதவர்கள். ஆகவே தோல்வியடைந்தவர்கள்
இந்த வகையான வரிகள் உங்களை ஆழமாக பாதிப்பவை. தமிழில் சென்ற ஐம்பதாண்டுகளில் எழுதப்பட்ட கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை இந்த வகையான ‘கண்டறிதல்கள்’. ஐரோப்பா உருவாக்கிய நவீனத்துவ உளநிலைகளை வெவ்வேறுவகையாகச் சொல்லாக்குவதையே நம் கவிஞர்கள் செய்திருக்கிறார்கள். இவை நம்மை ஐயம்கொண்டவர்களாக ஆக்குகின்றன. நம்மிடம் தனித்தன்மை, அந்தரங்கம் என்னும் அரிய பொருள் உள்ளது, அதை பிறர் தட்டிப்பறிக்க முயல்கிறார்கள் , நாம்தான் ‘பார்த்து சூதானமாக’ இருந்துகொள்ளவேண்டும் என்னும் பிரமையை அளிக்கின்றன. அந்தப்பிரமை நம்மை நாமே உயர்வாக எண்ணிக்கொள்ளச் செய்கிறது. நாம் எதையும் அணுகமுடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது. காலப்போக்கில் எதையும் எள்ளலுடன் நோக்கும் அரைவேக்காட்டு ‘சினிக்; ஆக நம்மை வடிவப்படுத்துகிறது.
நான் என்னுடைய சொந்த ஆளுமையை ரசிப்பவன்தான். தனிமையில் மகிழ்பவன்தான். கொண்டாடுபவன் என்றே சொல்வேன். ஆனால் என்னுடன் அப்போது நித்ய சைதன்ய யதியும் இருப்பதை உணர்வேன். அவருடைய குருமரபை உணர்வேன். என் நண்பர்களை, நான் அடைந்த நல்லுறவுகளையும் உணர்வேன். எவரும் உங்களுடன் இருக்கப்போவதில்லை என்று சொன்ன அந்த துரதிருஷ்டமான ஆத்மா அவ்வாறு எண்ணிக்கொண்டமையாலேயே அவ்வாறு ஆனது. நம்முடன் அனைவரும் இருக்கிறார்கள். நான் சொல்லவருவது அதையே.
ஜெ.