‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 16

சுரேசரின் அறைக்குள் நுழைந்து யுயுத்ஸு தலைவணங்கினான். அவர் சற்று பதற்றத்தில் இருந்தார். எழுந்து அவனை வரவேற்று அமரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று அங்கிருந்த ஒற்றர்களிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு திரும்பிவந்து அவனிடம் “இளையவர் பார்த்தனின் படைகள் அணுகிவிட்டிருக்கின்றன. அவர் நம் எல்லைக்குள் புகுந்துவிட்டார்” என்றார். யுயுத்ஸு “ஆம்” என்றான். “நகர் ஒருங்கியிருக்கிறது. இம்முறை நாம் எதையுமே செய்யவில்லை. நகரம் தானாகவே எழுந்துவிட்டது. பிரிந்த காதலன் அணுகும்போது அணிகொள்ளும் காதலியைப்போல என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றார் சுரேசர்.

யுயுத்ஸு புன்னகைத்தான். அவன் நாள்முழுக்க அரசிகள் நகர்புகுவதை திட்டமிட்டு நடத்துவதில் மூழ்கியிருந்தான். விஜயையும் தேவிகையும் தனித்தனியாக நகர்புகுந்தனர். அவர்களின் அரண்மனைச் சந்திப்புகள் முறைமைப்படி நிகழ்ந்து முடிந்தன என்று அறிந்த பின்னரே அவன் நிறைவுகொண்டு தன் அறைக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தான். அர்ஜுனன் அன்று நகர்புகவிருப்பதை அறிந்திருந்தான். அதை சுரேசரே பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். நகுலனும் சகதேவனும் அர்ஜுனனை கோட்டைமுகப்பில் எதிர்கொள்வது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பீமன் புராணகங்கைக்குள் முந்தையநாள் இரவே சென்றுவிட்டிருந்தான்.

அர்ஜுனன் நகர்புகுந்துவிட்டிருப்பான் என்று யுயுத்ஸு எண்ணினான். சுரேசர் கொண்டிருந்த பதற்றம் அதில் ஏதோ சிக்கல் என்பதை காட்டியது. யுயுத்ஸு அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் பதற்றங்களை மறைப்பவர், ஆனால் அன்று சற்று எல்லைகளை கடந்திருந்தார். மீண்டும் பீடத்தில் அமர்ந்து “இளையவர் பார்த்தன் இன்று நகர்புகப் போவதில்லை” என்றார். யுயுத்ஸு அவர் மேலே சொல்வதற்காக காத்திருந்தான். “அவருடைய படைகள் வந்தணைந்துவிட்டன. அவை அஸ்தினபுரியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன” என்றார் சுரேசர். “ஆனால் அவர் நேராக கங்கைக்கரையில் துரோணரின் பழைய குருநிலைக்கு சென்றுவிட்டார். நீங்கள் அறிந்திருப்பீர்கள், இளைய யாதவர் அங்குதான் இருக்கிறார்.”

யுயுத்ஸு தலையசைத்தான். “அவர் நேராக அங்கே செல்வதே இயல்பு. நான் அதை முன்னரே எண்ணியிருக்கவேண்டும். ஆனால் இம்மூன்றுபேரும் அணியூர்வலமாக நகர்புகுந்ததை என்னில் நிகழ்த்தி நிகழ்த்தி நோக்கி அவ்வாறே பார்த்தனும் நகர்புகுவார் என எண்ணிவிட்டேன்” என்ற சுரேசர் புன்னகைத்து “நாம் நிகழ்ச்சிகளை கற்பனையில் காட்சியாக ஆக்கிக்கொள்கையில் அவை நிகழ்ந்துவிட்டன என்றே எண்ணிக்கொள்ளத் தொடங்கிவிடுகிறோம்” என்றார். “ஆம்” என்றான் யுயுத்ஸு. “அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் அவை நிகழமுடியாதென்றே தோன்றிவிடுகிறது.” “அதுதான் நான் செய்த பிழை… கொண்டாட்டத்தில் நானும் ஈடுபட்டுவிட்டேன்” என்றார் சுரேசர். யுயுத்ஸு “நாம் கொண்டாட ஏதுமில்லை” என்றான்.

சுரேசர் அதை செவிகொள்ளாமல் “இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. நகரம் முழுக்க மக்கள் திரண்டு ஆர்ப்பரித்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கதைகள் வழியாக பலநூறு அர்ஜுனன்களை பார்த்துவிட்டவர்கள். அவர்களின் வாழ்க்கையில் இது ஒரு முதன்மைத் தருணம்… அவர் நகர்புகவில்லை என்றால் இந்த உள எழுச்சி ஒரு பெரிய சோர்வாக மாறிவிடும். அது நீடித்தால் நாம் அறிவிக்கவிருக்கும் வேள்வியும் கொண்டாட்டமும் எல்லாமே உணர்வடங்கியே நிகழும். ஒருமுறை கொண்டாட்டம் குளிர்ந்து நைந்துவிட்டால் பின்னர் அதை எழுப்புவது கடினம்” என்றார்.

“ஏனென்றால் கொண்டாட்டங்களில் ஒரு பொய் உள்ளது. அதை மானுட உள்ளம் அறிந்துகொண்டேதான் இருக்கும். அதை எங்கோ கரந்துவைத்துத்தான் அவர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அது மீறி எழுந்துவிட்டதென்றால் ஐயமும் நம்பிக்கையிழப்பும் உருவாகும். அது ஏளனமாக பகடியாக மாறும். அதன்பின் எதையும் நாம் ஈடுவைக்க முடியாது” என சுரேசர் தொடர்ந்து சொன்னார். யுயுத்ஸு “மெய், எங்கே கொண்டாட்டம் கேலிக்கூத்தாகிறது என எவராலும் வகுக்க முடியாது” என்றான். சுரேசர் “என்ன செய்வதென்று புரியவில்லை… நான் இந்த அளவுக்கு செயலற்றுப் போனதில்லை. என்னால் இளைய பாண்டவரின் உள்ளத்தை மாற்றமுடியாது. நீங்கள் சென்று அவரை எவ்வண்ணமேனும் அழைத்துவரக்கூடுமா? அரசி திரௌபதியை அழைத்துவந்ததைப்போல?” என்றார்.

யுயுத்ஸு “இளைய யாதவருடன் அவர் நகர்புகலாமே?” என்றான். சுரேசர் “இல்லை, இளைய யாதவர் நம் வேள்வியில் பங்குகொள்ள மாட்டார். இந்தக் கொண்டாட்டத்திலும் அவர் கலந்துகொள்ளப்போவதில்லை” என்றார். “ஏன்?” என்றான் யுயுத்ஸு. “அவருடைய முடிவை அவர் முன்னரே தெரிவித்துவிட்டார். அதை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இதை முழுக்க முழுக்க நமது வெற்றியாகவே நிகழ்த்த அவர் விழைகிறார். இன்று அவர் முடிகொண்ட அரசர் அல்ல. அவர் ஓர் ஆசிரியராகவே வேள்வியில் கலந்துகொள்ள முடியும். அதையும் அவர் இன்று விரும்பவில்லை. அவர் வேறொரு பயணத்தில் இருக்கிறார். அதை நாம் இன்று அறியமுடியாது” என்றார் சுரேசர்.

யுயுத்ஸு அதை புரிந்துகொண்டு தலையசைத்தான். “உடன் இளைய பாண்டவரும் அங்கேயே தங்கிவிட்டார் என்றால் அதைவிடச் சோர்வூட்டுவது வேறில்லை. அவர் இவ்விழாவை புறக்கணிக்கிறார் என்றே பொருள். அது எதிர்காலத்தில் பலவகையான புனைவுகளை உருவாக்கும். அவருக்கும் யுதிஷ்டிரனுக்கும் நடுவே மணிமுடிக்கான போர் நிகழ்ந்தது என்றுகூட சொல்லப்படலாம்” என்றார் சுரேசர். “ஏனென்றால் இந்நிகழ்வின் முழு மங்கலத்தை சற்றேனும் குறைக்கவே ஒவ்வொரு எதிர்த்தரப்பும் முயலும். நம்மை எதிர்ப்பவர்கள் பலர். தோல்வியடைந்த அரசர்கள், வெல்லப்பட்ட பழைய வேத மரபினர், ஷத்ரியர் முழு வெற்றிகொள்வதை விழையாத அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதரும் என. எதிரிகள் சூழ்ந்திருப்பது நன்று. அது நம்மை செயலூக்கம் கொண்டவர்களாக்குகிறது. ஆனால் மறைந்திருக்கும் எதிரிகள் நம்மை ஐயம்நிறைந்தவர்களாக ஆக்கிவிடுகிறார்கள்.”

“அதைவிட இன்னமும் உருவாகாத எதிரிகள் இடர்மிக்கவர்கள். உருவாகாதவர்களை எங்கே தேடுவது?” என்று சுரேசர் தொடர்ந்தார். “இன்று நம்முடன் இருப்பவர்களிடமே அந்நிறைவுக்கு எதிரான உளநிலைகள் எழலாம். எந்த மங்கலநிகழ்விலும் அந்நிகழ்வின் பகுதியாக இருப்பவர்களிலேயே சிலர் அதன் முழுமையை குலைக்க ஏதேனும் செய்வதை காணலாம். நிகழ்வில் ஏதேனும் குறை காண்பார்கள். நிகழ்வில் தங்கள் இடம் குறைபட்டுவிட்டதாக எண்ணிக்கொள்வார்கள். பல தருணங்களில் நிகழ்வின் மங்கலத்தில் பிறர் குறைவுசெய்வதாக குற்றம்சாட்டி அம்முழுமையை தாங்கள் அழிப்பார்கள். அதைவிட சிலருடைய ஆழுளத்தில் உறையும் தெய்வங்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் தாங்கள் எடுத்துக்கொள்ளும், அவர்கள் பொருந்தாதன இயற்றுவார்கள், ஒவ்வாதன சொல்வார்கள். நான் அஞ்சிக்கொண்டிருப்பது அதைத்தான். எவரிடமிருந்து என்ன எழும் என்று என்னால் இப்போது எத்தனை உளம்கூர்ந்தாலும் சொல்லமுடியவில்லை. அதற்கான வாய்ப்பை அரசர் ஐவரில் எவரும் அளித்துவிடலாகாது என்பதையே மீளமீள உறுதிசெய்துகொண்டிருக்கிறேன்.”

யுயுத்ஸு ஒருகணம் எண்ணிவிட்டு “ஐயம்வேண்டாம், மூத்தவர் பார்த்தன் அரசவைக்கு வருவார். வேள்வியில் பங்கும் கொள்வார்” என்றான். “அது இளைய யாதவரின் ஆணை. இது அவருடைய சொல்லின் வெற்றி. அதில் தன்னால் ஒரு குறைவு நிகழ அவர் விரும்பமாட்டார். சில நாட்களிலேயே பார்த்தன் நகர்புகுவார்.” சுரேசர் “எனில் நன்று” என்றார். “மெய்யாகவே இச்சொல் ஆறுதல் அளிக்கிறது. ஆனால் இன்று என்ன செய்வது? இன்றைய கொண்டாட்டம் குறைவிலாது நிகழ்ந்தாகவேண்டும்.” யுயுத்ஸு “நாம் ஏன் அவருக்கு மாற்றாக காண்டீபம் நகர்புகுவதாக இந்நிகழ்வை நடத்தலாகாது?” என்றான். “அதை நான் எண்ணினேன். ஆனால் அவர் தன் வில்லை பிரியப்போவதில்லை” என்றார் சுரேசர். “தேவையில்லை. காண்டீபம் என இன்னொரு வில் தேரிலிருக்கட்டும்” என்றான் யுயுத்ஸு.

“அதை நாம் செய்யலாகாது. நாம் பொய்யுரைப்பதல்ல அதிலுள்ள சிக்கல். காண்டீபத்திற்கு நிகராக ஒன்றை நாமே தெய்வங்கள் முன் காட்டிவிடலாகாது” என்று சுரேசர் சொன்னார். யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “எதையேனும் ஒன்றை செய்தாகவேண்டும், நமக்கு பொழுதும் இல்லை. ஒவ்வொன்றும் அலையென அணுகுந்தோறும் பேருருக்கொண்டு வந்து அறைகின்றது” என்று சுரேசர் சொன்னார். “இந்த அறையிலிருந்தால் என் எண்ணங்கள் நான்கு சுவர்களையும் முட்டிமுட்டி திரும்பி வருகின்றன. வெளியே சென்றால் திறந்தவெளிக்காற்றில் பட்டுச்சால்வை என என் அகம் பறந்தலைகிறது.”

ஏவலன் வந்து தலைவணங்கி சம்வகை வந்திருப்பதை சொன்னான். “அவள் வருவது ஒரு நன்னிமித்தம். அவளால் நாம் எண்ணாதனவற்றை சொல்லமுடியும்” என்றார் சுரேசர். “அவள் வெறும் படைத்தலைவியே” என்று யுயுத்ஸு சீற்றத்துடன் சொன்னான். அச்சீற்றம் ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. சுரேசர் சிரித்தபடி “அவள் நகரின் மக்கள்திரளுடன் கலந்து அலைபவள். அவர்களில் ஒருத்தியென உணர்பவள்” என்றார். “கவசமணிந்த உடலுக்குள் இருப்பவள் சூதர்குலத்தவள் என்பதை மறக்கவேண்டியதில்லை.” யுயுத்ஸு “ஆம்” என்றான். அவனுள் எழுந்த சீற்றம் ஏன் என அவன் உணர்ந்தான். அவளை பிறிதொரு ஆண்மகன் புகழ்ந்ததை கேட்டதனால். ஆனால் அதை சுரேசரும் உடனே உணர்ந்துகொண்டிருந்தார். அது அவனுக்கு சற்றே நாணத்தை எழுப்பியது. ஆகவே தன் முகத்தை இறுக்கி வைத்துக்கொண்டான்.

சம்வகை வந்து தலைவணங்கினாள். கழற்றி கையில் வைத்திருந்த தன் தலைக்கவசத்தை பீடத்தில் வைத்தாள். சுரேசர் “உங்கள் தலைகளில் ஒன்றை கழற்றி அப்பால் வைப்பதுபோல் தோன்றுகிறது” என்றார். சம்வகை சிரித்தபடி “அந்தத் தலையின் எடையைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றாள். “எப்போதும் இது தேவையா என்ன?” என்று யுயுத்ஸு சற்று எரிச்சலுடன் கேட்டான். “இது என் அடையாளமாக ஆகிவிட்டிருக்கிறது” என்று சம்வகை சொன்னாள். “இது உங்களை ஒரு தெய்வச்சிலைபோல் ஆக்குகிறது” என்று சுரேசர் சொன்னார். “இது இல்லையேல் நீங்கள் வெறும் பெண்… இது உங்கள் குரலையும் இரும்பாலானதாக மாற்றிக்காட்டுகிறது.”

சம்வகை “ஆம், இதன் ஆணைகளை எவராலும் இங்கே மீறமுடியவில்லை” என்றாள். “நான் துயிலச்செல்கையில் இந்தக் கவசத்தை என் அறைக்குள் விட்டுவிட்டுச் செல்கிறேன். நானே அங்கிருக்கும் உணர்வை இது அளிக்கின்றது. இன்று இதைப்போலவே எட்டு கவசங்களைச் செய்து வாங்கியிருக்கிறேன். அவற்றை அணிந்தபடி சுதமையையும் சுஷமையையும் பிற துணைக்காவல்தலைவியரையும் நகரில் உலவச் சொல்லியிருக்கிறேன். நானே ஒன்று பலவாகி இந்நகர் முழுக்க நிறைந்திருப்பதுபோல உணர்கிறேன்” என்றாள் சம்வகை. “யாதேவி, சர்வபூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா” என்றார் சுரேசர். சம்வகை புன்னகைத்தாள்.

“நாங்கள் பேசிக்கொண்டிருந்தது இளையவர் பார்த்தன் இன்று நகர்புகப்போவதில்லை என்பதைப்பற்றி…” என்றார் சுரேசர். “ஆம், அறிவேன். அதைப்பற்றி பேசவே வந்தேன்” என்றாள் சம்வகை. “நாம் என்ன செய்யமுடியும்? மக்கள் இன்று கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்…” என்று சுரேசர் சொன்னார். “நாம் அதை நுரையடங்க விட்டுவிடலாகாது.” சம்வகை “நாம் செய்வதற்கு ஒன்றே உள்ளது. மக்களின் கொண்டாட்டம் மேலும் மேலுமென எழவேண்டும். கொண்டாட்டம் நீடிக்கவேண்டுமென்றால் அது கூடிக்கொண்டே இருந்தாகவேண்டும்” என்று சொன்னாள். “நாம் குறையாமல் செய்ய என்ன வழி என எண்ணிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சுரேசர்.

“அதற்கு ஒரு வழி எனக்குத் தோன்றுகிறது” என்றாள் சம்வகை. சுரேசர் “அதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்” என்றார். “அமைச்சரே, வருபவர் இந்திரனின் மைந்தர். அவரை எதிர்கொள்ள இந்திரன் செல்லட்டும். அங்கிருந்து இந்திரன் திரும்பி வரட்டும். தெருக்களில் இந்திரன் ஊர்வலமாக செல்லட்டும். மைந்தரின் வெற்றியை இந்திரன் நகருக்கு அறிவிக்கட்டும். இந்திரவிழா தொடங்கட்டும். இந்திரவிழவின் நிறைவில் அர்ஜுனன் நகர்புகுவார் என அறிவிப்போம்” என்று சம்வகை சொன்னாள். சுரேசர் “இந்திரவிழா எனில்…” என்றார். “காமன் விழாவேதான். கள்ளும் காமமும் பெருகட்டும்… இந்திரன் ஆலயத்தில் மீளச்சென்று அமைவதுவரை இந்நகரில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே எதுவும் மீறல் அல்ல, எதுவும் பிழையும் அல்ல. அதுவே தொல்வழக்கம்.”

சுரேசர் “நாம் ராஜசூயம் பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறோம். அதுவே மெய்யான கொண்டாட்டம்” என்றார். “இந்தக் காமக்கொண்டாட்டம் நிறைவடையட்டும். இதன் நிறைவில் மக்கள் சோர்வுறுவார்கள். தனிமை கொள்வார்கள். உடல்நிறைந்ததும் உடலைக் கடக்கும் விழைவு எழுகிறது. அப்போது வேள்விச்செய்தியை அறிவித்தோமென்றால் மக்கள் அதை நோக்கி மேலும் ஆவலுடன் வந்தணைவார்கள். இப்போது நாம் வேள்விச்செய்தியை அறிவித்தால் அது ஓர் அரசச்சடங்காகவே இருக்கும். இக்கேளிக்கைக்குப் பின் அறிவித்தால் மக்கள் அதை ஒரு மீளும் நிகழ்வென கொண்டாடுவார்கள். ஒரு தூய்மைச்சடங்காக” என்றாள் சம்வகை.

“ஆம், அவ்வாறுதான் எனக்கும் படுகிறது” என்று சுரேசர் சொன்னார். யுயுத்ஸு “அர்ஜுனன் கிழக்கின் மேருமலையில் இருந்து இந்திரனுக்குரிய அடையாளமாக பொன்மூங்கில் ஒன்றை கொண்டுவருவதாக சொல்லப்பட்டது” என்றான். சுரேசர் ஊக்கத்துடன் எழுந்து “ஆம், பொன்மூங்கில். அது கிழக்கின் அடையாளம். இந்திரனுக்குரிய மரம்… அதை நகர்புகச் செய்வோம். அதை இந்திரனின் ஆலயத்திற்கு முன் நட்டு நிலைநிறுத்தும் சடங்கு இங்கே நிகழட்டும்… அதுவே இந்திரவிழாவாக ஆகட்டும்” என்றார். யுயுத்ஸு “இந்திரவிழா நன்று. முன்னரும் இந்திரவிழா இங்கே நிகழ்ந்துள்ளது. அவையனைத்துமே பெருங்களியாட்டுக்கள். இந்திரவிழா கிழக்கிலும் தெற்கிலும் பெரிதாகக் கொண்டாடப்படுவது. இந்த மக்கள் ஏற்கெனவே அதை அறிந்திருப்பார்கள்” என்றான்.

சுரேசர் “மேலும் இங்குள்ள இவர்கள் பல வண்ணத்தவர். பல வகையினர். இவர்களை ஒன்றெனச் சேர்த்து கலக்குவது போன்றது இந்திரவிழா. நமக்கு இன்று தேவை அதுவே. கலங்கி உருகி ஒன்றாகும் திரள். அஸ்தினபுரியின் குடிகள் என்னும் அடையாளமன்றி பிற அனைத்தும் கரைந்தழியவேண்டும். இன்றும் அவர்கள் தனித்தனியாகவே வாழ்கிறார்கள். தங்கள் உள்ளத்தின் முனைகளால் மட்டுமே தொட்டுக்கொள்கிறார்கள். இந்திரன் பாரதவர்ஷத்தை மந்தர மலை என கலக்கியவன், அமுதெழச் செய்தவன் என்கின்றன நூல்கள். அவ்வண்ணமே இங்கும் நிகழட்டும்” என்றார். யுயுத்ஸு புன்னகைத்தான்.

சம்வகை “இந்திரன் மீண்டும் பீடம் அமர்வது வரை இந்திரவிழா நிகழவேண்டும் என்பது வழக்கம்” என்றாள். “ஆகவே நமக்கு வேண்டிய பொழுதிருக்கிறது. நாம் எவரையேனும் அனுப்பி பார்த்தனை உளம் வளையச் செய்து இங்கே அழைத்துவரலாம். அவர் வந்து பொன்மூங்கிலை நட்டதும் விழா நிறைவுகொள்கிறது. அதன்பின் மறுநாள் தூய்மைச்சடங்கு நிகழலாம். அதற்கு அடுத்த நாள் வேள்வியறிவிப்பு, அதற்கு மறுநாள் பெருங்கொடைவிழாவுடன் வேள்வி தொடங்கட்டும்” என்றாள். “நன்று, இதுவே உகந்தது” என்றார் சுரேசர். யுயுத்ஸு “ஆம், பொருத்தமானதாகவே இருக்கிறது” என்றான். “உண்மையில் இத்தனை தெளிவாக நான் வகுப்பதே இல்லை” என்றார் சுரேசர். “இல்லை அமைச்சரே, நான் சொல்வன தங்கள் உள்ளத்தில் உள்ள சொற்களையே. அவற்றை எவரேனும் சொல்லி செவியில் விழவேண்டும் என தங்கள் உளம் கோருகிறது” என்றாள் சம்வகை.

சுரேசர் புன்னகைத்து “எல்லாம் தெளிவாகிவிட்டது. நான் ஆணைகளை பிறப்பிக்கிறேன்” என்றார். சம்வகை எழுந்துகொண்டு “நானும் என் பணிகளுக்கு மீளவேண்டியிருக்கிறது” என்றாள். சுரேசர் “இளவரசர் யுயுத்ஸு இப்போதே கிளம்பி துரோணரின் குருநிலைக்கு செல்லட்டும். அங்கே இளையவர் பார்த்தனையும் இளைய யாதவரையும் பார்த்து அனைத்தையும் பேசி முடிக்கட்டும். அவருடைய சொல்வன்மையை நான் நம்புகிறேன். அதைவிட அவரில் எழும் மூத்த பேரரசர் திருதராஷ்டிரரின் சாயலை நம்புகிறேன். அவருடைய சொற்களை இங்கு எவரும் தட்டமுடியாமலாவது அதனால்தான்” என்றார். யுயுத்ஸு புன்னகைத்தான்.

 

இடைநாழியில் யுயுத்ஸுவுக்காக சம்வகை காத்து நின்றிருந்தாள். அவன் அவள் நிற்பதை பார்த்தபின் மெல்ல நடந்தான். அவள் தனக்காகக் காத்துநிற்பது அவனை உவகைகொள்ளச் செய்தது. அப்படி அவளுக்காக அந்தப் பொதுவான இடைநாழியில் காத்து நின்றிருக்க தன்னால் இயலாது என அவன் எண்ணிக்கொண்டான். பெண்கள் நாணம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் காதல் கொள்கையில் அவர்கள் நாணமிழந்து துணிவுகொள்கிறார்கள். ஆண்கள்தான் நாணத்தை அடைகிறார்கள். அவன் நடைதளர அவள் அருகே சென்று நின்றான். அவளிடம் நகையாட்டாக ஏதேனும் சொல்லவேண்டும் என விழைந்தான். ஆனால் “இந்தக் கவசம் உன்னை ஒரு படைக்கருவிபோல காட்டுகிறது” என்றுதான் அவனால் சொல்லமுடிந்தது.

ஆனால் அவள் அதை ஒரு காதற்சொல் எனவே எடுத்துக்கொண்டாள். பெண்கள் சொற்களை நோக்குவதே இல்லை போலும். நீ குரங்குபோல் இருக்கிறாய் என்று சொன்னால்கூட மகிழ்ந்துவிடுவார்கள். அவன் புன்னகைத்தான். “உன்னை சுரேசர் இந்நகரை ஆளும் அரசி என எண்ணுகிறார்” என்றான். அச்சொற்களும் அவனை மீறி வந்தன. அப்போது ஏன் அவரைப் பற்றிய குறிப்பு வரவேண்டும்? ஏன் என்பதை அவன் நாவிலெழுந்த அடுத்த வரிகள் காட்டின. “அவர் உன்னை வழிபடுகிறார்.” அவள் அதை பெருஞ்சிரிப்புடன் எடுத்துக்கொண்டாள். “ஆம், நான் சொல்வன எல்லாமே அவருக்கு அரிதாகத் தெரிகின்றன. ஆனால் அனைத்தையும் அவரிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன்.”

அவன் எரிச்சல்கொண்டான். “அவர் நுண்ணுணர்வு கொண்டவர். ஆனால் அது அந்தண நுண்ணுணர்வு. அது இக்கட்டில்லாதபோது கூர்கொள்ளும். இக்கட்டுகளில் பின்வாங்கிவிடும். அந்தணர் சொல்லை ஷத்ரியர் அறவுரைக்கு மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். களநிலையில் அதற்கு பின்னெடையெனத் திகழும் இடம் மட்டுமே அளிக்கப்படவேண்டும்.” அவள் அவனுடைய எரிச்சலை புரிந்துகொள்ளவில்லை. மேலும் சிரித்து “அது நான் முடிசூடி அமர்ந்து எதிரிகளை களத்தில் வெல்லும்போது நிகழட்டும். இப்போது நான் வெறும் படைத்தலைவி மட்டும்தானே?” என்றாள். அவன் தளர்ந்தான். அவளால் தன்னை புரிந்துகொள்ள முடியவில்லையா? அல்லது இத்தருணங்களில் பெண்கள் பேதையாகிவிடுகிறார்களா? ஆனால் உண்மையில் பெண்கள் இத்தருணங்களில் பலமடங்கு கூர்கொள்கிறார்கள். இவள் என்னுடன் விளையாடுகிறாள்.

“அவர் உன்னை மிகையாக மதிப்பிடுகிறார்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஏனென்றால் அவருக்கு உன்னை தன் உருவாக்கம் என்று முன்வைக்கவேண்டியிருக்கிறது. காலடியில் கிடந்த கல்லில் இருந்து பெண்ணை எழுப்பிய ராகவராமன்போல தன்னை காட்டிக்கொள்கிறார்.” அவள் “அது மெய்யாகவும் இருக்கலாமே” என்றாள். அவன் கடும் சீற்றம்கொண்டான். அவளுடைய சிறிய சிரிக்கும் கண்களைப் பார்த்ததும் அவன் உள்ளம் எரிந்து எழுந்தது. அவ்விசையில் அவன் ஒன்றை கண்டுகொண்டான். அத்தனை மகளிருக்கும் அவர்களை எண்ணி பொறாமைப்படும் ஆண்கள் மகிழ்ச்சி அளிக்கிறார்கள். அவன் அவளுடைய அந்த மகிழ்ச்சியை அவ்வண்ணமே கலைக்க எண்ணினான். “என் துணைவியர் இன்று நகர்புகவிருக்கிறார்கள்” என்றான்.

நினைத்தது போலவே அவள் முகம் அணைந்தது. “ஆம், அறிவேன்” என்றாள். “அவர்கள் திரும்பிவரப் போவதில்லை என்று சொல்லிச் சென்றவர்கள். இப்போது இங்கே என் இடம் மிகையாகி வருவதை உணர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.” அவள் முகம் மேலும் இருண்டது. “ஆம், அவர்கள் இங்கு வந்தால்தான் இளவரசியர். அவர்களின் தந்தையர் அவர்களை அரசியல் கருவியென்றே பயன்படுத்துவார்கள்” என்றாள். அவன் அவள் முகத்தை நோக்கியதும் துயர்கொண்டான். ஏன் அன்பின் தருணங்களையெல்லாம் துயர்மிக்கதாக்கிக் கொள்கிறோம்? இனிமையை வேண்டுமென்றே தள்ளித்தள்ளி அகற்றுகிறோம்? “ஆனால் அவர்கள் அஸ்தினபுரிக்கு அயலவர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் இருவரிடமும் எனக்கும் உளம் செல்லவில்லை.”

அவள் முகம் மலரவில்லை. “நான் செல்லவேண்டியிருக்கிறது. நீங்கள் இங்கிருந்தே கிளம்புகிறீர்களா?” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “நான் இங்கிருந்தே சென்றால் மட்டுமே உரிய பொழுதில் சென்றடைய முடியும். கிழக்கு வாயில் வழியாக செல்ல முடியாது. வடக்குவாயில் வழியாக வெளியே சென்று காட்டினூடாக சுற்றிக்கொண்டு செல்லவேண்டும். ஆனால் ஊடுபாதைகள் உள்ளன, எனக்கு அவை நன்கு தெரியும். இன்னும் மூன்று நாழிகைக்குள் இளைய யாதவரை பார்ப்பேன்.” அவள் இயல்பான குரலில் “நன்று, நினைத்தது நிகழட்டும்” என்றாள். ஆனால் அவள் விழிகளில் துயர் தெரிந்தது.

யுயுத்ஸு உளம்கனிந்தான். அவன் குரலும் நெகிழ்ச்சி கொண்டது. அச்சொற்கள் எண்ணாமல் அவன் நாவிலெழுந்தன. எண்ணியிருந்தால் அவற்றின்பொருட்டு அவன் நாணம் கொண்டிருப்பான். “இன்று இப்படி உன் முகத்தையும் விழிகளையும் நோக்கக் கிடைத்தது நன்று. உன் குரலின் இனிமை நெடுந்தொலைவு என்னுடன் வரும்” என்றான். அவள் கண்களில் மீண்டும் ஒளி எழுந்தது. அது அவனை மகிழச்செய்தது. “நான் எனக்கு துணை என எவரையும் இப்புவியில் எண்ணவில்லை. என் ஆற்றலை மட்டுமே பகிரக்கூடிய உள்ளம் எனக்கு மெய்யான துணை அல்ல. என் ஐயங்களையும் தோல்விகளையும் சிறுமைகளையும் பகிர உகந்த உள்ளமே துணையென்றாக முடியும். அது நீயே” என்றான்.

அவள் விழிகள் கனிந்தன. “அனைவருக்கும் அவ்வாறுதான்” என்றாள். “சம்வகை, என்னால் இக்கொண்டாட்டங்களில் முழுதாக உளம்செலுத்த முடியவில்லை. என்னை ஏதோ ஒன்று ஒவ்வாமைகொள்ளச் செய்கிறது” என்றான். அவள் அவன் கையைத் தொட்டு “அதை நான் உணர்கிறேன்” என்றாள். “உனக்கு அந்த ஒவ்வாமை உள்ளதா?” என்றான். “இல்லை, நான் அதை உணர்கிறேன்” என்று அவள் சொன்னாள். “புதிய வேதத்தால் மேலெழுந்தவள் நான். ஆகவே எல்லாவற்றையும் எனக்கான வாய்ப்புகளாகவே கருதுகிறேன். ஆனால் உங்கள் உளநிலை எனக்கு புரிகிறது.”

யுயுத்ஸு “அது வெளித்தெரிந்தால் பொறாமை என்பார்கள். அல்லது சூதனின் காழ்ப்பு என்பார்கள்” என்றான். “ஏன் வெளித்தெரியவேண்டும்?” என்று அவள் கேட்டாள். “அவ்வண்ணம் இங்கு ஒவ்வொருவரின் உள்ளேயும் ஏதேதோ இருக்கலாம்…” அவன் “ஆம்” என்றான். “இது அனைவருக்குமான காலம். அந்தக் காலம் உங்களையும் மேலெழச் செய்யும். உங்களிடம் நீங்கள் ஆழத்தில் விழையும் அனைத்தும் வந்துசேரும்.” அவன் திடுக்கிட்டு “ஆழத்தில் விழைவன என்றால்?” என்றான். “அனைத்தும்” என அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் உடல் நடுக்கு கொண்டது. ஆனால் உள்ளம் எடையிழந்தது. “அது பெரும்பழி அல்லவா?” என்றான். “இல்லை, எழும் யுகத்தின் நெறி அது” என்று அவள் சொன்னாள்.

அவன் அவள் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவள் சிரித்து “ஐயம் வேண்டாம். அது இளைய யாதவரின் சொல்” என்றாள். அவன் நீள்மூச்செறிந்தான். தணிந்த குரலில் “என்னையே அருவருத்துக்கொண்டிருந்தேன்” என்றான். “எதற்கு?” என்று அவள் கேட்டாள். “விழைவே ஷத்ரியர்களை உருவாக்குகிறது. விழைபவர் ஷத்ரியர் ஆகிறார்.” அவன் “ஆம்” என்றான். “அது சிசுபாலனுக்கு இளைய யாதவர் சொன்னது” என்று அவள் மேலும் சொன்னாள். அவன் மீண்டும் நீள்மூச்செறிந்தான். “நன்று, நான் கிளம்புகிறேன். இப்போது தெளிந்திருக்கிறேன்.” அவள் அவன் கையை மீண்டும் தொட்டு “நலம் கொள்க!” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி புன்னகை செய்தான். அவளும் புன்னகைத்தாள்.

அவன் கிளம்பிச்சென்றபோது முகம் மலர்ந்திருந்தான். உள்ளம் எடையில்லாமல் சூழ்ந்திருந்த அனைத்தின் மேலும் பரவிக்கொண்டிருந்தது. வடக்குப்பெருமுற்றத்தில் முன்பு பெருங்கதை இருந்த இடத்தில் அனுமனின் கல்லாலயம் எழுந்துவிட்டிருந்தது. அப்பால் யானைக்கொட்டில்கள் மீண்டும் யானைகளால் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்று அவன் மணத்தை அறிந்து பிளிறியது. பிற யானைகளும் திரும்பி நோக்கி உறுமலோசை எழுப்பின. புராணகங்கைக்கு வெளியே பழைய காந்தாரக் குடியிருப்புகள் மீண்டும் ஊர்கள்போல் நீண்டு எழுந்துவிட்டிருந்தன. பழைய வீடுகள் புதுப்பிக்கப்பட்டிருந்தன. புதிய இல்லங்கள் எழுந்திருந்தன. அவற்றில் யவனர்களும் சோனகர்களும்தான் குடியிருந்தனர். பாலைநிலத்தவர்களே இப்பசுங்காட்டை இத்தனை விரும்ப முடியும். இங்கு அவர்களே இப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஏனென்றால் இங்கிருந்தால்தான் கனவுகளில் அவர்களின் வெம்மை நின்றெரியும் வறுநிலம் வந்து விரியும்.

அவன் சிரித்துவிட்டான். புரவியை பெருநடையாக்கி கடந்துசென்றபோது ஒரு கணம் சகுனியின் நினைப்பு வந்தது. அங்கே அக்குடியிருப்புகளை நோக்கும்போது ஒருகணம்கூட அவரை நினைவுகூரவில்லை. அதற்குள் அனைவரும் மறந்துவிட்டிருக்கிறார்கள். நிலம் அனைத்தையும் செரித்துக்கொள்கிறது. எஞ்சாமல் ஆக்கிவிடுகிறது. என்றும் புதிதாக திகழ்கிறது. இனி அனைத்தும் சொல்லிலேயே திகழும். சொல் என்றும் பழையது. மண்ணில் வாழும் மானுடருக்கு சொல் மட்டுமே பழையது.

முந்தைய கட்டுரையேசுதாஸின் அப்பா
அடுத்த கட்டுரை‘அரசன் பாரத’ நிறைவுவிழா உரை