சென்ற மாதம் ஈரோட்டில் குற்றவாளிகள் நடுங்க, நீதிபதிகள் அதைவிட நடுநடுங்க ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞரும் சிந்தனையாளரும் இலக்கியச் செயல்பாட்டாளரும் பொதுவாக பண்பாட்டுத் தீவிரவாதியுமான நண்பர் கிருஷ்ணன் ஒரு பாறையிலிருந்து சறுக்கி விழுந்தார். இந்த நிலைகுலைவுக்குப் பின் பல்வேறு பண்பாட்டுக் காரணிகள் இருக்கும் என்றாலும்கூட உடனடியான பின்னணி இவ்வாறு.
கிருஷ்ணனும் கும்பலும் அருகே உள்ள பிள்ளைதின்னிக் கரடு என்னும் இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். உடன் தன்னறிவிப்புத் தொல்லியலாளரான ராஜமாணிக்கமும் கிருஷ்ணனின் சீடர்களான பாரி, மணவாளன், மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் உடன் சென்றனர். கிருஷ்ணனின் யூதாஸான அந்தியூர் மணி, கிருஷ்ணனின் அந்திக்கிறிஸ்துவான வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர். இது ஞாயிறு தோறும் அவர்கள் செல்லும் வழக்கமான தீனிப்பயணம் அல்ல. ஆய்வுநோக்கும் உடனிருந்தது.
ராஜமாணிக்கம் பசுமாடு ஒன்றுக்கடித்த தடத்தைக்கூட பிராமி லிபியாக வாசிக்கும் திறமைகொண்டவர். எல்லா கல்லும் தொல்லியல் குறித்தனவே என்னும் நோக்கில் மூத்தகுடி ஆய்வை மேற்கொள்பவர். ஆகவே பிள்ளைதின்னிக் கரடு என்பது ஒரு தொல்லியல்மேடு என அவர் கிளம்புவதற்கு முன்னரே அறிவித்தார். கிருஷ்ணன் “அதெப்டிச் சொல்லமுடியும்?” என்று வழக்கமான எதிர்ப்பைச் சொன்னார். “மேட்டுத்தொல்லியல்னு சொல்லலாமே? என்னதப்பு?” என விவாதித்தபடி அவர்கள் மேலே சென்றனர்.
வழியில் கிருஷ்ணன் கால்தடுக்கி விழ கையை ஊன்றியிருக்கிறார். உள்ளே எலும்பு உடைந்துவிட்டது. அலறிக் கொண்டிருந்தவரிடம் ராஜமாணிக்கம் “அண்ணா, கொஞ்சநேரம் அப்டியே கத்திட்டிருங்க. பரவாயில்லை. நாங்க மேலே போயி நடுகல்,பெருங்கல், கல்லளை ஏதாவது இருக்கான்னு பாத்திட்டு வர்ரோம்” என்று மேலே சென்றார். கிருஷ்ணன் தன்னந்தனியாக அழுவதில் பொருளென்ன என்று பேசாமல் அமர்ந்திருந்தார்.
மேலும் அவரால் அதை எதிர்க்கவும் முடியாது. ஏனென்றால் இப்படித்தான் எங்கள் இமாச்சலப் பிரதேசப் பயணத்தில் மஸ்ரூர் என்ற ஊரில் இருந்த குடைவரைக் கோயில்களைப் பார்க்கையில் ராஜமாணிக்கம் ‘அண்ணா இங்க பாருங்க கல்வெட்டு.. அய்யய்யோ கல்வெட்டு… அடடாடா கல்வெட்டு!” என்று உற்சாகம் பீரிட பின்னால் நகர ஒருக்களித்து விழுந்தார். முழங்கை எலும்பு உடைந்தது. அவரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று காரில் படுக்கவைத்துவிட்டு அந்தக் குடைவரையை அக்குவேறு ஆணிவேறாக பார்த்துவிட்டு வந்தோம்.
அதன்பின் அவரை நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் மாவுக்கட்டு போட்டுவிட்டார். ஆனால் ராஜமாணிக்கம் அன்று திரும்பும்போது முகம் வெளிறியிருந்தார். அறைக்குச் சென்றபின் குடைந்து கேட்டோம். அந்த டாக்டர் தன் மேஜைமேல் காகித எடையாக ஒரு மண்டையோட்டை பயன்படுத்தியிருந்தார். “பரவாயில்லை, பேஷண்டை மறக்கமுடியாத டாக்டரா இருப்பார் போலிருக்கு” என்று கிருஷ்ணன் சொன்னார்
கிருஷ்ணனை ஈரோட்டுக்கு கொண்டுவந்து டாக்டரிடம் காட்டியிருக்கிறார்கள்.அவருக்கு அறுவை சிகிழ்ச்சை செய்யவேண்டும் என்று அவர்கள் சொல்லிவிட்டனர். எலும்பை கம்பிவைத்து சேர்த்து கட்டவேண்டும். அவருக்கு இலைப்பச்சை நிறத்தில் அங்கி அணிவித்தனர். கிருஷ்ணன் மகிழ்ந்துவிட்டார். “நல்ல நெறம்… கோர்ட்டிலே கோட்டுகூட இந்த நெறத்திலே இருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார்
எலும்பு ஒடிந்த நோயாளி வாயெல்லாம் பல்லாக இருப்பதை மருத்துவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. செந்திலிடம் “இவரு யாரு யோகியா? இல்ல மெண்டலா?”என்றார்கள். “வக்கீல்” என்று ஈஸ்வரமூர்த்தி மறுமொழி சொல்லியிருக்கிறார். “பாவம் சார் அவர், கல்யாணமே பண்ணிக்கலை. அவர் வாழ்க்கையிலே ஏதாவது தப்பா நடக்கணும்னா இப்டி நடந்தாத்தான் உண்டு. மனுஷனுக்கு சொல்லிக்கிறதுக்கு லைஃப்லே ஏதாவது ஈவண்ட் வேணும்லே?” என்று செந்தில் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்.
அதற்குள் ஈரோட்டில் சிலர் ஆயிரங்காய் பட்டாசுகளை வெடித்திருக்கிறார்கள். வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் இனிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே லடாக்கில் நான்கு மணிநேரம் கிருஷ்ணன் காணாமலாகி பிறகு கிடைத்தார். அந்தச் செய்திக்கே ஈரோட்டில் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். “இரங்கல்கூட்டம் அளவுக்கு வருமா சார்?” என்று ஆவலுடன் கேட்டிருக்கிறார்கள்.
அறுவை முடிந்து மறுநாளே வீட்டுக்கு அனுப்பிவிட்டதில் கிருஷ்ணனுக்கு வருத்தம். சரி பத்தியமாவது இருப்போம் என்று “என்னென்ன சாப்பிடலாம், என்னென்ன சாப்பிடக்கூடாது?” என்று கேட்டிருக்கிறார். “என்னவேணுமானாலும் சாப்பிடலாம். மீட்னா சமைச்சு சாப்பிடறது நல்லது” என்று டாக்டர் சொன்னார். “அப்ப என்னென்ன புக் படிக்கலாம், என்னென்ன படிக்கப்பிடாதுன்னு சொல்லுங்க” என்று கிருஷ்ணன் கேட்டார். ‘கூட்டிட்டுப் போங்க சார் இவரை!” என்று டாக்டர் சீற ஈஸ்வரமூர்த்தி ஈனஸ்வரத்தி “அவரு வக்கீலு சார்” என்று சொன்னார்.
கிருஷ்ணன் வீட்டில் ஓய்வாக அமர்ந்துகொண்டு இலக்கிய உலகில் எவரெல்லாம் தன்னை அழைத்து அனுதாபம் தெரிவிக்கிறார்கள் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். “மலேசியா, லண்டன், கலிஃபோர்னியா எல்லா ஊர்லே இருந்தும் கூப்பிட்டுட்டாங்க சார். இருங்க சிங்கப்பூர் கால் வந்திட்டிருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார். எலும்பில் இரும்புக்கம்பி பொருத்தும் கலையை ஆழ்ந்து கற்று மற்றவர்களுக்கு கலைநயத்துடன் சொன்னார். கடலூர் சீனு போனில் அழைத்து சோர்வுடன் “என்ன லைப், எலும்பிலே ஒரு கம்பிகூட கட்டாம வாழ்ந்து என்ன பிரயோசனம்னு நினைக்க வச்சிட்டார் சார்” என்றார்.
மெல்ல கிருஷ்ணன் ஈடேறி வந்தார். வாசித்த நூல்கள் மேல் அவர் உருவாக்கி பரப்பிய கடுமையான விமர்சனங்கள் நலம்பெற உதவின. “வலியே தெரியலை சார். இப்பவந்த சிறுகதைகளை படிச்சிட்டே இருந்தேன்….” என்றார். அவருடைய ஜூனியரான ஈஸ்வரமூர்த்தி “கேஸ் நெறைய நிக்குது” என்று கவலை தெரிவித்தார் “சார் எந்திரிச்சு வந்தார்னா கோர்ட்டுக்குப் போயி வழக்கம் போல வாய்தாவ வாங்கிக் குடுப்பார்”
கிருஷ்ணனின் வீட்டில் அவர் கறுப்புக் கோட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட இல்லை. ஆனால் இந்தப் பச்சைச் சட்டையுடன் எடுத்துக்கொண்ட படம் சிரித்த முகமும் சீதேவியுமாக பெரிய அளவில் சட்டமிடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டுள்ளது. இதை அவர் தன் வாழ்க்கையில் நிகழ்த்திய [ஒரே] சாதனையாகக் கருதுகிறார்
ஆனால் இந்த எலும்புமுறிவு எதிர்கால சந்ததியினரால் பிழையாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என நான் ஐயம்கொண்டேன். ஈரோட்டுக் குற்றவாளிகள் நல்லவர்கள்தான் என்றாலும் அவர்களும் எல்லைமீறினால் வன்முறையில் இறங்கக்கூடுமே.இல்லையென்றாலும் எதிரிகள் அப்படிச் சொல்லி பரப்ப முடியுமே. “சேச்சே அப்டில்லாம் பண்ணமாட்டாங்க ” என்றார் செல்வேந்திரன் ‘இவருக்கு கேஸ் இருக்குன்னு பரப்பிவிட அவங்கள்லாம் லூசா என்ன?”