பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 15
யுதிஷ்டிரனின் அறைக்குள் மருத்துவர் இருந்தார். முதியவர், அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றார். சுரேசர் வணங்கி “அரசருடன் உரையாடலாமா?” என்றார். அவர் “உரையாடுவது அவருக்கு நன்று” என்றார். சுரேசர் “அரசே, வெற்றிவீரராக தங்கள் இளையவர் வடபுலத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இப்போது பன்மலையடுக்கத்துப் பனிநிலமும் உங்கள் கோலுக்குரியதாகியிருக்கிறது. பனிநிலவு சடை சூடிய அனல்வண்ணத்து அண்ணலுக்கும் உரியவராக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். பனிமலைகளை பண்டு ஹஸ்தி வென்றார் என்று நூல்கள் சொல்கின்றன. அதன்பின் அங்குவரை சென்றடைந்த படைகள் தங்களுடையவை மட்டுமே. இனி நெடுங்காலம் அது அவ்வண்ணமே நீடிக்கும். விண்முகில்களின் உலகிலிருந்து உங்கள் மூதாதையரும் குடித்தெய்வங்களும் உங்களை வாழ்த்தும் தருணம் இது” என்றார்.
அந்த முறைமைச்சொற்கள் யுயுத்ஸுவை சலிப்புறச் செய்தன. யுதிஷ்டிரன் ஏதாவது எரிச்சலுடன் சொல்வார் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் வியப்புறும்படியாக யுதிஷ்டிரனிடம் சற்றே மலர்வு தோன்றியது. அவர் மஞ்சத்தில் கையூன்றி எழுந்து அமர்ந்து “ஆம், நம் குடியில் இதுவரை எவரும் பனிமலைகளை வென்றதில்லை. மாமன்னர் ஹஸ்தியின் புகழ்பொறிப்புகளில் அவ்வண்ணம் உள்ளது என்பது மெய். ஆனால் அது அன்று ஒரு தொல்பாணர் சொல்மரபு மட்டுமே. வடபனிக்கோடும் தென்கடல்முனையும் வெல்லப்பட்டது என்று சொல்வார்கள். ஆனால் அவற்றை படைகொண்டுசென்று வென்றிருக்க மாட்டார்கள். வடபுலத்திலிருந்து ஒரு பனிக்கட்டியை எடுத்துவரச் செய்வார்கள். தென்கடல் நீரை ஒரு கமண்டலத்தில் கொண்டுவருவார்கள். அவற்றை மூதாதையருக்குப் படைத்து வேள்வியில் அவியாக்குவார்கள்” என்றார்.
“அன்று அஸ்வமேதம் என்றால் உண்மையில் குதிரைகளை பாரதவர்ஷமெங்கும் அனுப்புவதல்ல” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அன்று ஆரியவர்த்தம் மட்டுமே பாரதவர்ஷம் என்று கருதப்பட்டது. இன்று சைந்தவம் காங்கேயம் என்று சொல்லப்படும் நிலங்கள், காமரூபமும் யவனமும் கணக்கில் இல்லை. வடபுலமும் தெற்கே தண்டகாரண்யமும் அதற்குள் வருவதில்லை. சொல்லப்போனால் சர்மாவதியின் கரையிலமைந்த நிஷாதர் நாடுகளும் பாஞ்சாலத்திற்கு அப்பாலிருந்த கிராதர் நாடுகளும் அதில் சேர்க்கப்படுவதில்லை. மிகக் குறுகிய நிலப்பகுதியே அன்று கருத்தில் கொள்ளப்பட்டது” என்றார். அவர் அவ்வளவு பேசுவது அவர்கள் அனைவருக்குமே சற்று துணுக்குறலை அளித்தது. அவர் பீமனை கருத்தில் கொண்டதுபோலவும் தெரியவில்லை.
“அன்றைய கணக்கு வேறு. எங்கு வேதம் திகழ்கிறதோ அந்த மண்ணை முழுதும் வென்றவன் ராஜசூயம் நடத்தலாம். வேள்விப்பரி செல்லவேண்டியவை அந்நிலங்களே. வேதத்தால் ஈரமான நிலம் மட்டுமே பாரதவர்ஷம், எனவே அவ்வாறு வேள்விநடத்தியவன் பாரதவர்ஷத்தை வென்றவன் ஆவான். அரக்கர், அசுரர், நிஷாதர், கிராதர்களை வென்று பரிவேள்வி நிகழ்த்தவேண்டியதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆளும் நிலத்தை அவ்வரசன் அதற்குப் பின்னரும் ஆளமுடியாது, அங்கே வேதம் திகழச்செய்ய இயலாது. அத்தகைய நிலம் அவனுக்கு பழியே சேர்க்கும். அசுரர் அரக்கர் முதலான அயலார் வேதவேள்விகளுக்கு தீங்கிழைக்காமல் அவர்களை வென்று அகற்றுவது மட்டுமே அரசர்களின் கடன். வணிகப்பாதைகளையும் அந்தணர் நிலைகளையும் முனிவர்களின் தவச்சாலைகளையும் அவன் காக்கவேண்டும், அவ்வளவுதான்.”
“இதோ இன்று அனைத்துமே மாறிவிட்டிருக்கிறது. இன்று தொலைநிலங்களில் எல்லாம் நாடுகள் உருவாகி எழுந்துள்ளன. அவையெல்லாமே அஸ்தினபுரிக்கும் மகதத்திற்கும் நிகரான செல்வமும் படைவல்லமையும் கொண்டிருக்கின்றன. அவற்றை வெல்லாமல் நாம் பாரதவர்ஷத்தை ஆள்கிறோம் என்று சொல்லிக்கொள்வதில் பொருளே இல்லை. அவையெல்லாமே வேதவேள்வி நிகழும் நிலங்கள். அவர்களும் அஸ்வமேதம் செய்ய விழைபவர்கள். ஆரியர் என்று சொல்லிக்கொள்பவர்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவருக்கு சற்று மூச்சுத் திணறியது. “அது பரசுராமரால் நிகழ்ந்தது. அவர் அத்தனை தொல்குடிகளையும் அரசர்களாக்கினார். அனல்குலத்து ஷத்ரியர் நாடெங்கும் பெருகி வேதத்தகுதி பெற்றனர். ஆகவே இன்று இங்கே மும்முடி சூடி அமரவிழைபவன் அவர்கள் அனைவரையும் வென்றாக வேண்டியிருக்கிறது. மாபெரும் அறைகூவல் ஒன்றை விடுத்திருக்கிறார் அவர்.”
“ஆகவேதான் இங்கே சென்ற இருநூறாண்டுகளில் எவரும் ராஜசூயம் செய்ததில்லை. மெய்யாகவே செய்ததில்லை என்று சொல்கிறேன். ராஜசூயம் போன்ற ஒன்றைச் செய்து பாணரை பாடவிடுவது வேறு. வேதம் நனைந்த நிலமனைத்தையும் வென்று அதை செய்ததில்லை. அத்தனை பெரிய படைவெற்றி எவருக்கும் அமைந்ததே இல்லை. அதன் பேரழிவு ஒருபக்கம். மறுபக்கம் அதற்குரிய பெருந்திறல். அத்தனை பெரிய படை திரட்டப்பட்டதே இல்லை…” அவர் பெருமூச்சுடன் அமைந்தார். “அது நம்மால் இயன்றிருக்கிறது. நாம் குருக்ஷேத்ரத்தில் வென்றது இப்பாரதவர்ஷத்தையேதான். இனி நெடுங்காலம் இவ்வண்ணம் ஒன்று நிகழப்போவதில்லை.” அவர் கைகளை விரித்தார். “இன்று மெய்யாகவே பனிபடு வடமலையும் நீரெழு தென்முனையும் வெல்லப்பட்டுவிட்டன. ஒரு கோலால் ஆளப்படுகின்றன.”
“ஆம் அரசே, வேள்விப்பரிகள் நான்கு எல்லைகளையும் சென்றடைந்துவிட்டன” என்று சுரேசர் ஊடே புகுந்தார். “உங்கள் இளையோன் இதோ வென்று மீண்டு வந்திருக்கிறார். உங்களை வணங்குகிறார்.” அவர் கண்காட்ட பீமன் முன்னால் சென்று யுதிஷ்டிரனின் கால்களை தொட்டு வணங்கினான். “வாழ்த்துக மூத்தவரே, நான் உங்கள் சொல்லுடன் வடபுலத்தை வென்று மீண்டிருக்கிறேன்!” யுதிஷ்டிரன் “மேலும் மேலும் வெற்றிகள் சூழ்க!” என்று வாழ்த்திய பின் மீண்டும் சுரேசரை நோக்கி “இவ்வண்ணம் அனைத்து நாடுகளையும் ஏன் வெல்லவேண்டும்? அதைத்தான் நான் நேற்றிரவெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாடும் தன் வழியில் வாழ்ந்தால் என்ன? ஒரு நாடு வளர்ந்து பிறவற்றை வென்றே ஆகவேண்டுமா என்ன? இது வெறும் ஆணவமா? என் தன்முனைப்பின் நிறைவுக்காகத்தான் இதை செய்கிறேனா? நான் மும்முடி சூடி அமர்வதனால் எனக்கன்றி பிறருக்கு எந்தப் பயனும் இல்லையா?” என்றார்.
சுரேசர் “அவ்வாறல்ல, அது இறையாணை” என்றார். “ஆம், அதேதான். இவ்வாறு ஒரு நாடு பிறவற்றை வெல்லும் முனைப்பு கொள்வதே இறையாணையால்தான். இரு போக்குகள் இங்கே நிலவுகின்றன. ஒன்று உடைந்து உடைந்து பரவும் போக்கு. நாடுகளும் குலங்களும் உடைகின்றன. பிரிந்து அகன்று புதியனவாக வளர்கின்றன. அதற்கு நேர் எதிரானது ஒன்று மேலும் வளர்ந்து அவையனைத்தையும் ஒன்றெனத் தொகுக்கும் போக்கு. ஒரு யுகத்தில் ஒன்று மேலோங்கும், அடுத்த யுகத்தில் பிறிதொன்று. இந்த நெசவினூடாகவே மானுடம் முன்செல்கிறது. இது தொகையுகம். அதையே கலியுகம் என்றனர் போலும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். சுரேசர் “ஆம், யாதவரின் மெய்நூல் கலியுகத்தில் ஒருங்கிணைதலே ஆற்றல் என்கிறது” என்றார். அச்சொற்களை இமைக்கா விழிகளுடன் கேட்ட பின் யுதிஷ்டிரன் புன்னகைத்து “மெய்” என்றார்.
மேலும் சொற்கள் அவரிடமிருந்து எழுந்தன. “உண்மையில் நான் பாரதவர்ஷத்தை தொகுக்கிறேன். பாரதவர்ஷம் முழுக்க வணிகம் ஒருங்கிணைய, நெறிகள் முறைமைப்பட, நூல்கள் தொகுக்கப்பட வழிவகுக்கிறேன். பாரதவர்ஷம் விராடவடிவமென எழுந்து நிற்பது என் கோல் வழியாகவே. இது என் கோல் மட்டுமல்ல, இளைய யாதவரின் சொல்லும் கூட. அவருடைய சொல் கூட அல்ல, அவருடைய குருமரபின் சொல். அந்த குருமரபோ காடுகளை கொந்தளிக்கச் செய்த வேதமுடிபுக் கொள்கைகளின் விளைகனி. என் வழியாக வேதமுடிபுக்கொள்கையே இந்நிலத்தை வென்று ஆட்கொள்கிறது. வேதம் ஆண்ட நிலத்தை இனி வேதமுடிபே ஆளும்.” அவர் நிறைவுடன் புன்னகை செய்து “அந்தத் தெளிவை நான் அடைந்தேன். அதன் பின்னரே நேற்று துயில்கொண்டேன்” என்றார்.
சுரேசர் “ஆம் அரசே, உங்கள் இளையோனின் படைகள் வழியாக வடமலைகள் வரை சென்றடைந்தது வேதமுடிபின் அழியாச் சொற்களே” என்றார். “உங்கள் இளையோன் உங்களை வணங்கி நற்சொல் பெற்றுச்செல்ல வந்துள்ளார்.” யுதிஷ்டிரன் பீமனை மீண்டும் நோக்கிவிட்டு “ஆம், நான் அவனை வாழ்த்திவிட்டேனே” என்றார். பீமன் “மூத்தவரே, நான் உங்களுக்கு ஒரு பரிசை கொண்டுவந்திருக்கிறேன். அரிய பொருள் ஒன்று” என்றான். நிறைவுடன் புன்னகைத்து யுதிஷ்டிரன் சொன்னார் “ஆம், அரிய பொருட்கள் அனைத்தும் இனி இந்த அரண்மனைக்குத்தான் வந்தாகவேண்டும். ஏனென்றால் பாரதவர்ஷமே இனி என் உடைமை.” பீமன் ஒருகணம் சுரேசரை நோக்கிவிட்டு “இதை உங்களுக்கென கொண்டுவந்தேன்” என்று அப்பேழையை அவர்முன் பீடத்தில் வைத்தான்.
யுதிஷ்டிரன் அதை குனிந்து நோக்கினார். ஆனால் தொடவில்லை. “இது என்ன?” என்றார். பீமன் அதை திறந்து உள்ளிருந்த கல்மணியை காட்டினான். “வடக்கே மலைகளுக்கு மேல், கின்னரநாட்டுக்கும் அப்பால் போதநிலம் என்னும் நாடு இருப்பதை அறிந்திருப்பீர்கள்” என்றான். “ஆம், ஆனால் அது சொற்களில் மட்டுமே உள்ளது என்று கேட்டிருந்தேன். மெய்யாகவே அவ்வண்ணம் ஒரு நிலம் உண்டா என்ன?” என்றார் யுதிஷ்டிரன். “மெய்யாகவே உள்ளது. போத் என்றும் போ என்றும் அந்நிலம் கின்னரநாட்டினரால் அழைக்கப்படுகிறது. அங்கு திகழும் மெய்வழி போன் எனப்படுகிறது. அங்குள்ள தெய்வங்கள் அங்கு சென்று மீளும் சிலர் வழியாக கின்னரநாட்டுக்கு வருகின்றன. கின்னரர்கள் வழிபடுவது அத்தெய்வங்களையே” என்று பீமன் சொன்னான்.
யுதிஷ்டிரன் மெல்ல ஆர்வம் கொண்டார். “அங்கு சென்று மீண்ட எவரையேனும் நீ பார்த்தாயா?” என்றார். “ஆம் மூத்தவரே, நானே கண்டேன். அவர் காலடியில் அமர்ந்தேன். அவரிடம் சொல் பெற்றேன். அவரால் இது எனக்கு அளிக்கப்பட்டது” என்று பீமன் சொன்னான். “போதநாட்டுக்கும் அப்பால் மலைமுடிகளுக்குமேல் மண்ணிலிருந்து விலகிப்பிரிந்து வானில் மிதப்பதுபோல் ஒரு நகரம் உள்ளது. அதை ஷம்பாலா என்கிறார்கள்.” யுதிஷ்டிரன் எழுந்துவிட்டார். “ஆம், அறிவேன். அங்கு செல்வதற்கான குகைப்பாதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். “அந்நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டது இந்தக் கல்மணி. இரு விழிகள் செதுக்கப்பட்டது இது. இதை அவர்கள் ட்ஸி என்கிறார்கள். ஷம்பாலாவின் காவலர்களான நாகங்களின் விழிமணிகள் இவை எனப்படுகிறது.”
யுதிஷ்டிரன் அதை குனிந்து நோக்கினார். “மூத்தவரே, அமுதும் நஞ்சுமான ஒன்று இது. ஒன்று பிறிதாகும் ஒருமை நிலையை நமக்கு உணர்த்துவது. வாழ்வும் சாவும், உண்மையும் பொய்யும் என இரு நிலைகளை உணரவேண்டுமென்றால் இதைத் தொட்டு உசாவலாம்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், இவ்வாறு ஒன்றைப்பற்றி அறிவேன்” என்றார். அதை மேலும் குனிந்து நோக்கி “இது நமக்கு ஒன்றை அளிக்கும் விலையென பிறிதை கோரும் இல்லையா? உண்மையை நமக்கு உரைக்கும் அதற்கு நிகராக பத்து பொய்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றார். பீமன் “ஆம், மூத்தவரே. இளமையை நமக்களிக்கும், பத்துமடங்கு விசையுடன் முதுமைகொண்டு சாவை அணுகச் சித்தமென்றால்” என்றான்.
யுதிஷ்டிரன் நிமிர்ந்து அவனை நோக்கினார். “நீ இதனிடம் இளமையை உசாவினாயா?” என்றார். “இல்லை, மூத்தவரே” என்றான் பீமன். “நீங்கள் இருவரும்?” என்று நகுலனையும் சகதேவனையும் நோக்கி யுதிஷ்டிரன் கேட்டார். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிய பின் “இல்லை, அந்த அருமணியை சற்றுமுன்னர்தான் நோக்கினோம்” என்றார்கள். “ஆகவே இதை முதன்முதலாக எனக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆம்” என்றான் பீமன். “ஏனென்றால் நான் அரசன் என்று சொல்லப்போகிறாய்… நன்று” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “சரி, நான் ஒன்று உசாவுகிறேன். இதை எனக்களிக்கையில் நீ எண்ணிக்கொடுப்பது என்ன? சாவா, வாழ்வா?” பீமன் “மூத்தவரே…” என்றான். “சொல், நீ எனக்கு அளிப்பது என்ன? நஞ்சா, அமுதா?”
சுரேசர் “இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதன என்று காட்டும் மணி இது, அரசே” என்றார். “அதை நான் அறிவேன். ஆனால் நான் அறிய விழைவது இதை அளிக்கையில் அவன் எண்ணியது என்ன என்று” என்றார். பீமன் திணறலுடன் “நான்…“ என்றபின் “என்னால் சொல்லமுடியவில்லை, மூத்தவரே” என்றான். “நான் ஏன் வினவுகிறேன் என்றால் நீ என்றுமே இவ்விரண்டையும் எனக்கு அளித்தவன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். பீமனை நோக்கி விழிகூர்ந்து “என் உள்ளத்தில் உறையும் வஞ்சச்சொற்கள் வசைச்சொற்கள் எல்லாமே நீ உரைத்தவை. நான் அடைந்த அனைத்து நலங்களும் நீ அளித்தவையே” என்றார். “இது எவ்வண்ணம் உன்னிடமிருந்து கிளம்பியது என்று மட்டுமே அறிய விழைகிறேன்… நீ உன்னையே உசாவிச்சொல்.”
பீமன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனுள் ஏதோ திரள்வதை யுயுத்ஸு கண்டான். நாகம் நஞ்சைத்திரட்டி படமெடுப்பதுபோல. ஒரு கூர்பழிச்சொல் எழவிருக்கிறதா என்ன? பீமன் “நான் நஞ்சு கொண்டவன், முத்தவரே. உடன் அமுதும் ஏந்தியவன். அந்நஞ்சு என்னில் ஊறிய கானகக்குரங்கின் பால் எனக்கு அளித்தது. நான் கொண்டுள்ள அமுது அன்னை குந்தி ஊட்டிய அன்னம். இரண்டும் நானே, ஆகவே என்றும் அவ்வாறேதான் இருப்பேன்” என்றான். அவன் அந்த அருமணியைச் சுட்டி “இது அவ்விரண்டும் இணைந்தது. உங்கள் வாழ்வும் சாவும் இதிலுள்ளது. நீங்கள் இரண்டையும் ஒன்றெனத்தான் தெரிவுசெய்யவேண்டும்” என்றான்.
யுதிஷ்டிரன் மீண்டும் குனிந்து அந்த அருமணியை நோக்கினார். அவர் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது. “நன்று, இது எனக்கு இளமையை மீட்டளிக்கும் இல்லையா?” என்றார். “நான் கொண்டுள்ள நோயை கடந்துசெல்ல இது உதவக்கூடும் என நினைக்கிறீர்களா?” சுரேசர் “ஆம் அரசே, உங்களை இன்றைய சோர்விலிருந்து இது மீட்கும், ஐயமே இல்லை” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், அதையே நானும் உணர்கிறேன். ஆனால் நான் இளைமையை நோக்கி சென்றால் அடைந்த அறிவை இழந்துவிடுவேன் அல்லவா? துயரங்களினூடாக நான் அடைந்தது அது. துயரங்களை எனக்கு அளிப்பதும் அறிவே. ஆனால் அறிவை இழந்து எதையும் நான் சென்றடைய விழையவில்லை” என்றார்.
யுதிஷ்டிரன் பீமனிடம் “இதை சொல்லும்போது என்னால் ஐயமில்லாது உரைக்க முடிகிறது. இதில் எப்போதுமே தடுமாற்றம் வரப்போவதில்லை. இது எனக்கு தேவையில்லை, இதை எந்நிலையிலும் நான் தொடப்போவதில்லை. இது நீ எனக்கு அளித்த நற்பரிசு, இளையோனே. ஆனால் இப்பொருள் அல்ல, இதன் முன் இவ்வண்ணம் ஐயமின்றி என்னால் சொல்லமுடியும் என்னும் அறிதலை நான் அடைந்த கணமே எனக்கான பரிசு” என்றார். பீமன் தலைவணங்கினான். “நலம் சூழ்க!” என்று யுதிஷ்டிரன் வாழ்த்தினார். பீமன் தலைவணங்கி பின்னால் நகர்ந்தபோது யுதிஷ்டிரன் எழுந்து இரு கைகளையும் விரித்து “வருக, இளையோனே!” என்றார்.
ஒரு கணம் பீமன் தயங்கினான். “வருக என நான் அழைப்பது காட்டின் மைந்தனை. நான் உண்ட நஞ்சினால்தான் என் மெய்யறிதல்கள் அனைத்தையும் அடைந்தேன். என் வாழ்நாள் முழுக்க கான்வல்லமைகளால் காக்கப்பட்டேன். என் எல்லைகள் நீ, என் எல்லைகளுக்கு காவலும் நீ” என்றார் யுதிஷ்டிரன். பீமன் கைகளை விரித்தபடி முன்னால் சென்றான். அவர்கள் தழுவிக்கொண்டார்கள். யுதிஷ்டிரன் விழிநீர் சிந்தி விம்மினார். பீமனின் தோள்களில் தலைவைத்து அவன் முதுகை வருடிக்கொண்டே இருந்தார். பெருமூச்சுடன் பிரிந்து முகம்நோக்கி சிரித்து மீண்டும் தழுவிக்கொண்டார். மூன்றுமுறை அவர்கள் தழுவிக்கொண்டதும் சுரேசர் சிரித்தபடி “போதும் அரசே, ஒன்று கடந்தால் மூன்று என்பது முறை” என்றார். யுதிஷ்டிரன் சிரித்துக்கொண்டு “ஆம், செல்க!” என்றார்.
அவர்கள் தலைவணங்கி திரும்பியபோது யுதிஷ்டிரன் “இளையோனே, இதை எடுத்துச்செல்” என்றார். பீமன் அந்தச் சிமிழை எடுத்துக்கொண்டான். யுதிஷ்டிரன் “இதை நீ திரௌபதிக்கு அளிக்கலாம்” என்றார். பீமன் அவரை நோக்கி நிற்க அவர் விழிகளை திருப்பிக்கொண்டு “அவள் விழைவாளா என அறியேன், ஆனால் அவளுக்கு இது தேவைப்படும்” என்றார். பீமன் “அவ்வண்ணமே” என தலைவணங்கினான்.
அவர்கள் வெளியே வந்ததும் பீமன் “மூத்தவரின் ஆணைப்படி இதை திரௌபதியிடம் அளித்துவிடலாம்” என்றான். “அதை நீங்கள் கொண்டுசென்று கொடுப்பதே முறை” என்றார் சுரேசர். “இல்லை, அதற்கான உளநிலை எனக்கில்லை” என்று பீமன் சொன்னான். “என்பொருட்டு இளையோன் யுயுத்ஸு செல்லட்டும்…” என்று திரும்பி யுயுத்ஸுவை நோக்கி “செல்க, இளையோனே! இதை நான் என் பரிசாக வெண்மலைகளில் இருந்து அரசிக்கு கொண்டுவந்தேன் என்று சொல்லி அவளிடம் அளித்துவருக!” என்றான். யுயுத்ஸு தலைவணங்கினான். பீமன் “அவளிடம் நான் சொன்னதாகச் சொல்க! இது இளமையின் பாதை, ஆனால் அவள் இதில் தனித்தே செல்லமுடியும் என” என்றான்.
யுயுத்ஸு தலைவணங்கி அந்தச் சிமிழை பெற்றுக்கொண்டான். அவர்கள் விலகிச்செல்வதை நோக்கியபடி சற்றுநேரம் நின்றான். பின்னர் திரும்பி நடந்தான். இடைநாழியின் சுவர்கள் தோறும் விரிந்திருந்த மாபெரும் ஓவியங்களிலிருந்து யயாதியும் புருவும் குருவும் ஹஸ்தியும் பிரதீபனும் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் அவர்களை நோக்காமல் தலைகுனிந்து நடந்தான். அவர்களின் நோக்கு எடைமிக்கதாக இருந்தது. அவனை தொடர்ந்து துரத்தி வந்தது. அரசியர் மாளிகைக்கு அவன் வந்தபோது களைத்து மூச்சிளைத்துக் கொண்டிருந்தான். திரௌபதியின் அறைக்கு முன் நின்றிருந்த ஏவற்பெண்டிடம் அரசியைப் பார்க்க விழைவதாகச் சொன்னான். உடனே அவன் உள்ளே செல்லலாம் என ஒப்புதல் வந்தது.
திரௌபதி உள்ளே பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவள் முன் சுவடிகள் விரிந்திருந்தன. அவளுடைய கூந்தலை இரு அணிப்பெண்டிர் எண்ணையிட்டு சீவிக்கொண்டிருந்தனர். கரிய பட்டுச்சால்வை என ஒளியுடன் அது அவர்களின் கைகளில் வழிந்திருந்தது. தாழம்பூவும் கைதோன்றியும் கலந்த எண்ணை மணம் அறையில் நிறைந்திருந்தது. திரௌபதி படித்துக்கொண்டிருந்த நூல் காவியம் என அதன் வண்ணப்பூச்சிலிருந்து யுயுத்ஸு உய்த்தறிந்தான். அப்போது அவள் ஓர் அரசியல்நூலை படித்துக்கொண்டிருந்தால்தான் ஏமாற்றம் அடைவோம் என எண்ணிக்கொண்டான். அவன் வணங்கியதும் அமரும்படி திரௌபதி கைகாட்டினாள். அவன் அமர்ந்தான். அப்பேழையை அவள் பார்த்துவிட்டாள் என உணர்ந்தான்.
திரௌபதி இயல்பாக “அரசியர் கிளம்பிவிட்டனர். அனைவருமே இன்றும் நாளையுமாக நகர்புகுந்துவிடுவார்கள்” என்றாள். “தேவிகை இன்று உச்சிப்பொழுதிலேயே வந்துவிட வாய்ப்புண்டு… அவளை எதிர்கொள்ள துச்சளை சென்றிருக்கிறாள்.” யுயுத்ஸு “ஆம், அறிந்தேன்” என்றான். “அவர்களின் உளநிலைகள் எவ்வண்ணம் என்று தெரியவில்லை. இந்நகரின் பொலிவும் கொண்டாட்டங்களும் அவர்களை மகிழ்விக்குமா அன்றி சோர்வுறச் செய்யுமா என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” யுயுத்ஸு “அதை நாம் சொல்லமுடியாது. அவர்களே அத்தருணத்தில் தங்களை காணும்வரை சொல்லிவிட முடியாது” என்றான். திரௌபதி “மெய்தான்” என்றாள்.
அவளுடைய கருங்குழலில் ஒரு நரைகூட இல்லை என்பதை அவன் கண்டான். உடனே நோக்கை விலக்கிக்கொண்டு “நான் மூத்தவர் பீமசேனரின் ஆணைப்படி இங்கே வந்தேன்” என்றான். “ஆம், அவர் நகர்புகுந்ததை அறிவேன்” என்று திரௌபதி சொன்னாள். “நான் அவையிலன்றி எவரையும் சந்திக்கும் உளநிலையில் இல்லை.” அவன் அந்தச் சுவடியை நோக்க “இது காவியம். முதற்கவி வான்மீகி இயற்றியது. நான் சீதையின் கான்வாழ்வைப் பற்றிய பாடல்களை படித்துக்கொண்டிருந்தேன்” என்று திரௌபதி சொன்னாள். “கானகத்தில் அவள் உவகையிலாடுவதை வான்மீகி சொல்கிறார். அவள் நிலமங்கை. நிலம் பொலிவுகொள்வது காட்டிலேயே” என்றாள்.
யுயுத்ஸு “மெய், நானும் அவ்வண்ணம் எண்ணியதுண்டு” என்றான். “சிறைவைக்கப்படுகையில் நிலம் சிறப்பிழக்கிறது. கைப்பற்றப்பட்டாலும் மீட்கப்பட்டாலும் நிலமங்கை துயரையே அடைகிறாள்” என்றாள் திரௌபதி. அவள் சொன்னதற்கு என்ன பொருள் என்று யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். அப்பேச்சை கடக்கும் பொருட்டு “நான் பீமசேனர் தங்களுக்கு பரிசாக அளித்த ஒரு பொருளுடன் வந்துள்ளேன், அரசி” என்றான். அப்பேழையை பீடத்தில் வைத்து “இதை தங்களுக்கு அளிக்கும்படி மூத்தவர் சொன்னார். வெண்பனி மலைகளில் இருந்து இதை அவர் கொண்டுவந்தார். இது அருமணி அல்ல, எளிய கல்தான். ஆனால் ஒரு பெருநூலின் மையச் சொல் என பொருள் செறிந்தது” என்றான்.
அவன் அதைப்பற்றி சொல்லி முடித்தான். திரௌபதி விழிகளில் அசைவே இல்லாமல் அதை கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் பீமன் அவளிடம் சொல்லச்சொன்னதையும் சொல்லிவிட்டு “இதனிடம் எதை உசாவுவது என்பதை நீங்கள் முடிவுசெய்யலாம், அரசி” என்றான். அவள் கைநீட்டி அந்தப் பேழையை கேட்டாள். அவன் பீடத்தில் இருந்து எடுத்து அதை அவளிடம் கொடுத்தான். அவள் அதைத் திறந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அவளுடைய பெரிய இமைகள் சரிந்திருந்தன. விழிவெண்மை கீற்றெனத் தெரிந்தது. அவள் அதை நோக்கி ஊழ்கத்தில் ஆழ்ந்துவிட்டதுபோலத் தோன்றியது. யுயுத்ஸு “இது தங்களுக்கு உகந்தது என்று தோன்றியது எனக்கு” என்றான். அவள் விழிதூக்கி சொல்க என முகம் காட்டினாள்.
“நீங்கள் உளம்விலகிவிட்டிருக்கிறீர்கள். அணிகளை பூணுவதற்குக் கூட உங்கள் அகம்கூடவில்லை. எக்கணமும் துறந்து உதிர்ந்துவிடுபவர் போலிருக்கிறீர்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் இத்தருணம் கோருவது ஒரு பேரரசியை. மண்விழைவும் கோன்மைச்செருக்கும் கொண்டவளை. திருமகளும் கொற்றவையும் என ஆனவளை. அரியணையை ஒளிபெறச் செய்யும் சுடரை. அரசி, சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நீங்கள் அவ்வண்ணம் இருந்தீர்கள். அதை நீங்கள் மிக எளிதாக இந்த அருமணியினூடாக அடையமுடியும். இத்தருணத்தை பொலிவுறச் செய்ய முடியும்.” அவள் முகத்தில் எழுந்த மெல்லிய புன்னகையை கண்டபடி அவன் தொடர்ந்தான். “ஆம், இறப்பு மேலும் அணுகும். ஆனால் துறப்பவர் முதலில் களையவேண்டியது சாவின் மீதான அச்சத்தை அல்லவா?”
திரௌபதி அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உள்ளம் எண்ணுவதென்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் விழிகளையோ முகத்தையோ கொண்டு அவளை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. அவள் விழிகளை அரிதாகவே நேர்கொண்டு நோக்கவும் முடிகிறது. அவள் அதை மீண்டும் பீடத்தில் வைத்தாள். அது தனக்குத் தேவையில்லை என்று சொல்லப்போகிறாள் என்று அவன் எண்ணினான். எழுந்து தலைவணங்கி “நான் விடைகொள்கிறேன், அரசி” என்றான். ஆனால் அவள் புன்னகையுடன் “அது இங்கிருக்கட்டும்” என்றாள். அவன் தலைவணங்கி “அவ்வாறே” என்றான்.
வெளியே வந்தபோது யுயுத்ஸு புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவன் நடையில் இயல்புநிலை கூடியது. அவன் சுவர்களில் தெரிந்த அரசர்களின் விழிகளை நோக்கியபடியே சென்றான். யயாதியின் அருகே வந்ததும் நின்றான். யயாதி இளமையை புருவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் காட்சி வரையப்பட்டிருந்தது. புருவின் முதுமை. அப்போதுதான் அவன் அந்த ஓவியங்களின் விந்தையை உணர்ந்தான். யயாதியும் புருவும் ஒன்றுபோலவே முகம் கொண்டிருந்தனர். முதுமைகொண்ட புரு யயாதியாகவும் இளமை அடைந்த யயாதி புருவாகவும் தோன்றினார்கள். எதுவுமே மாறவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.
யுயுத்ஸு நடந்தபடி அந்த ஓவியங்களை மீண்டும் பார்த்தான். புருவிடம் மீண்டும் இளமையை கொடுக்க வந்து நின்றிருந்த யயாதி களைத்திருந்தார். புரு ஊக்கம் கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் அருகருகே நின்றிருக்கும் ஓவியத்தில் இருவரும் ஆடிப்பாவைகள்போலத் தோன்றினர். அவனால் அந்த ஓவியங்களின் பொருளென்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் ஓவியங்களை கூர்ந்து நோக்கியதே இல்லை. எந்தக் கலைக்கும் அவன் உளம்கொடுத்ததில்லை. கலையின் பொருள்மயக்கம் அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. அது நுட்பமான ஒரு சூதாட்டம் அன்றி வேறில்லை என்றுதான் எப்போதுமே தோன்றியிருந்தது. இப்போதுகூட அந்த ஓவியன் ஏதோ ஒரு பகடையை உருட்டியிருக்கிறான். அதை அவன் திரும்ப உருட்டவேண்டுமென எதிர்பார்க்கிறான். ஆனால் இந்த ஆட்டத்தின் களம் அவன் அமைத்தது. நெறிகள் அவனுடையவை. ஆகவே அவனை எவருமே வெல்லப்போவதில்லை.
அவன் மீண்டும் முதலில் இருந்தே அரசர்களின் ஓவியங்களை பார்த்துக்கொண்டு நடந்து யயாதியை வந்தடைந்தான். உள்ளம் வண்ணங்களால் மயக்கடைந்திருந்தது. இசையைப் போலவே வண்ணங்களும் பொருளில்லாத உணர்வலைகளை உருவாக்குவன, சித்தப்பெருக்கை ஒடுக்கி ஆழ்நிலை ஒன்றை உருவாக்குவன என அவன் அப்போதுதான் உணர்ந்தான். படிகளினூடாக இறங்கும்போது ஓர் எண்ணம் வந்தது. அவன் கண்ட அனைத்து அரசர்களின் விழிகளிலும் யயாதியின் நோக்கே இருந்தது. யயாதியிடமிருந்த ஏக்கமும் தவிப்பும் தனிமையும். அவன் கீழ்ப்படியில் புன்னகையுடன் நின்றுவிட்டான். பின்னர் மேலாடையை சீர்செய்தபடி நடந்தான்.