கோழிப்பிராண்டல்!

ராமனின் நாடு

 

அன்புள்ள ஜெ

 

ஒரு சின்ன சந்தேகம். உங்கள் கட்டுரை ஒன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.[ராமனின் நாடு ]

 

எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல்.

 

ஆனால் கட்டுரையின் இறுதியில்

 

“அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப்போயிருப்பார் என நினைக்கிறோம்”

 

என்று செம்படவர்கள் சொல்கிறார்கள்

 

அவ்வளவு பெரிய வாக்கியத்தை சைகையில் சொல்வது எப்படி என தெரியவில்லை. ஒரு விரிவான கட்டுரையை எழுதி இதைப் புரியவைப்பீர்கள் என நினைக்கிறேன்.

 

செல்லக்குட்டி குரு

அன்புள்ள செல்லக்க்குட்டி,

 

இந்தக் கட்டுரைகள் ஃபேக்ஐடிகள் படிப்பதற்குரியவை அல்ல. கொஞ்சம் அறிவானவர்களுக்குரியவை.

 

ஜெ

 

*

 

மேலே சொன்ன பதிலை எழுதி அனுப்பிவிட்டு பத்துநிமிடம் எரிச்சலுடன் அமர்ந்திருந்தேன். யார் இந்த ஆள்? இவருக்கு என்னதான் தேவை? யோசித்துப்பார்க்கிறேன், சுந்தர ராமசாமி அவர் வாழ்நாள் முழுக்க இப்படி ஒரு அசட்டுக் கேள்வியை எதிர்கொண்டிருப்பாரா? நானறிய அதற்கு வாய்ப்பே இல்லை. அன்றும் இதேபோன்ற அரைவேக்காடுகள் இருந்திருப்பார்கள், ஆனால் அவர்கள் குரல் சுந்தர ராமசாமி வரை வந்து சேராது. இது சமூகஊடகங்களின் காலகட்டம். இங்கே எவரும் தப்பமுடியாது. எனக்கு மின்னஞ்சலே இல்லை என்றாலும் எழுதி அனுப்பிவிடுவார்கள்

 

இந்த ஆள் இதை எழுதி அனுப்பிவிட்டு கெக்கே கெக்கே என குதூகலிப்பதை கற்பனையில் பார்க்கையில் சிரிப்பு வந்துவிட்டது. உடனே  எரிச்சல் அகன்று இயல்புநிலைக்கு திரும்பிவிட்டேன். ஆனால்  உடனே மீண்டுமொரு மறுமொழி அனுப்பவில்லை. ஏனென்றால் இது ஒரு குறிப்பிட்ட உளநிலை. அறிவார்ந்த வளர்ச்சிப்போக்கின் ஒரு படிநிலை அல்ல, அப்படியென்றால் மட்டுமே விளக்கத்திற்கு பயனிருக்கிறது.

 

இது இயல்பிலேயே ஆழமாக யோசிக்கவோ, வாழ்க்கையுடன் இணைத்து எதையும் புரிந்துகொள்ளவோ திராணியில்லாத உள்ளத்தின் வெளிப்பாடு. மிக மேலோட்டமான வளர்ப்பும், குறைவான நுண்ணுணர்வும், கூடவே சராசரிக்கு சற்று மேற்பட்ட அறிவுத்திறனும் கொண்டவர்களுக்கு உரியது. இவர்கள் நிறையவே வாசிப்பார்கள். ஆனால் அந்த வாசிப்பு தொட்டுத்தொட்டு புரட்டிச்செல்லும் வாசிப்பாக இருக்கும். நாய் சந்தைக்குச் செல்வதுபோல. அவ்வப்போது நின்று இதேபோல சொட்டு கழித்துவிட்டுச் செல்வார்கள்.

 

உணர்வுசார்ந்த ஈடுபாடோ நுண்ணுணர்வோ இல்லாத வாசிப்பிலிருந்து இந்தவகையான அபத்தங்கள் உருவாகின்றன. இந்த அபத்தங்களைச் சேர்த்துக்கொள்ளுந்தோறும் தனக்கு ஒரு அறிவார்ந்த தகுதி வந்துவிட்டதாக ஒரு பிரமை உருவாகிறது. சமூக ஊடகம், நண்பர்சூழலில் கோமாளிவேடம் போட்டு சிரிக்கவைக்க முடிகிறது. அதற்கு கிடைக்கும் பாராட்டுக்களில் தன்மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கி விடுகிறார். ROFL கள், கைத்தட்டல் அடையாளங்கள்…

 

அப்படி ஒரு ‘ரோல்’ எடுக்கத் தொடங்கியதுமே மொத்த மூளையும் அதே கோணத்தில் திரும்பி விடுகிறது. அதன்பின் எதுவுமே உள்ளே செல்லாது. கோழி கிண்டிக் கிண்டி கொத்துவதுபோல வாசிப்பதே இதற்காகத்தான். மிகமிக ஆரம்பநிலையிலேயே கறாரான தன்மதிப்பீட்டுடன், தற்கண்டனத்துடன் விலகிக்கொள்ளாவிட்டால் நெடுந்தூரம் செல்லநேரிடும், மீளமுடியாது. அதில் ஒன்றும் பெரிய இழப்பெல்லாம் எவருக்கும் இல்லை. ஒன்றே ஒன்று, மிகநீண்ட  வாசிப்புகாலம் வீணாகிவிடுகிறது, அவ்வளவுதான்.

 

மீண்டும் ஓர் எண்ணம். அந்த போலி மின்னஞ்சலுக்கு ஒரு பதில்போட்டேன். ‘தம்பி, நீ கொஞ்சம் கவனமாக வாசிக்கலாம். அக்கட்டுரையிலேயே ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல் என்றுதான் இருக்கிறது. முழுக்கமுழுக்க சைகைமொழியில்தான் உரையாடல் என்று இருந்திருந்தால்தான் நீ கேட்பதற்குப் பொருள்.

 

மேலும் அதற்கு அடுத்தவரியிலேயே பெரிய சிக்கலொன்றும் இல்லை. சிலநாட்களில் தெலுங்கு புரியத்தொடங்கியது என்றும் வருகிறது. கடைசி நிகழ்ச்சி நடப்பது இரண்டு மாதங்களுக்குப் பின்பு. இதைப்புரிந்துகொள்ள கூரிய அறிவேதும் தேவையில்லை. சாதாரண வாசகனுக்கே புரியும். நீ உன்னை புத்திசாலி என நினைக்கும் மக்கு, ஆகவே இப்படி தோன்றுகிறது. கொஞ்சம் கவனமாகப் படி, உன் தலைக்குமேலேயும் விஷயங்கள் உள்ளன.

 

பதில் வராது என நினைத்தேன். ஒரு ஸ்மைலி வந்திருந்தது. அதாவது என்னை எரிச்சல் அடையச்செய்துவிட்டாராம். அதில் மகிழ்ச்சி அடைகிறாராமாம். மீட்பே இல்லை, அடுத்த கோழிப்பிராண்டலில் மும்முரமாக இருப்பார் என்று நினைக்கிறேன்

 

 

முந்தைய கட்டுரைதம்மம் தந்தவன்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகுடைக்கீழே…