பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 12
பேச்சு இயல்பான அமைதியை சென்றடைந்தது. பீமனை மாறிமாறித் தழுவி பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை உணர்ந்து தனித்தனர். தாங்களென்றான பின்னர் மொழியை சென்றடைந்தனர். மொழியில் தங்களை அளந்து அளந்து ஊற்றி முன்வைத்தனர். மொழி காட்டெருமைகள் கொம்புமுட்டிக்கொள்வதுபோல உரசி வருடி விலகி மீண்டும் தொட்டு விளையாடியது. பேராற்றலின் விளையாட்டுக்கருவி. கொலைக்கருவிகளால்தான் மிகச் சிறந்த விளையாட்டை நடத்த முடிகிறது. யுயுத்ஸு அவர்கள் ஒவ்வொருவரும் அகத்தே சலிப்பதை, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் அத்தனை விரைவாக விலக முடியாது. மேலும் சில பொழுதுகள் தேவைப்பட்டன.
அன்பு என்பதும் பற்று என்பதும் அவ்வளவுதான். மூன்றுநாழிகை, அல்லது நான்கு. அதற்குமேல் அவை நீடிப்பதில்லை. அவை ஒருபக்கம் மட்டும் எழும் ஊசல்கள், அவற்றுக்கு ஓர் எல்லை உள்ளது. இன்னொன்று எழ வேண்டும். ஒரு பழைய கசப்பு, ஓர் உளக்குறை, ஒரு குற்றச்சாட்டு. அது நேருக்குநேர் என நிகழமுடியாது, அத்தருணம் அத்தகையது. ஆகவே பிறிதொருவர் மேல் அது எழும். அவரை சற்றே வெறுத்து, சற்றே வசைபாடி, சற்றே குறைசொல்லி, சற்றே வம்புரைத்து அதனூடாக மீளமுடியும். கொஞ்சம் கசப்பும் துவர்ப்பும் காந்தலும் வந்துவிட்டதென்றால் மீண்டும் விடாய்கொண்டு நா தவிக்க அன்பின் இனிமை நோக்கி செல்லமுடியும்.
நகுலன் பீமனிடம் “மூத்தவரே, தாங்கள் அரசருக்கென கொண்டுவந்திருக்கும் சிறப்புப் பரிசு என்ன?” என்றான். அவ்வினாவே அனைத்து உள்ளத்திலும் வெவ்வேறு சொற்களுடன் திகழ்ந்து கொண்டிருந்தமையால் திடுக்கிட்டவர்கள்போல் அவனை திரும்பிப் பார்த்தனர். யுயுத்ஸு அத்தருணத்தில் பிறிதொரு சொல்லாடல் எழுவதைவிட அது உகந்ததே என உணர்ந்தான். பீமன் பீடத்தில் கால்களை நீட்டி அமர்ந்து, கைகள் கைப்பிடி மேல் தளர்ந்து எடைகொண்டு பதிய, கண்களை மூடி அமர்ந்திருந்தான். அறைக்குள் சாளரத்தினூடாக மென்காற்று சுழன்று வந்தது. நகுலனின் வினாவை அவன் கேட்டதாகத் தெரியவில்லை.
சுரேசர் “அவ்வண்ணம் ஒரு பரிசு இருந்தாகவேண்டும் என்பதில்லை” என்றார். ஆனால் நகுலன் அதை விடாமல் “மூத்தவர் நோயுற்றிருக்கிறார் என்பதனால் சொன்னேன். அவர் பரிசுகளை விரும்புவார்…” என்றான். சகதேவன் “ஆம், மேலும் நாங்களிருவருமே தனிப்பரிசுகளை கொண்டுவந்திருப்பதனால் நீங்களும் பரிசு கொண்டுவந்தாகவேண்டும் என்னும் நிலை உருவாகிவிட்டது” என்றான். பீமன் சிறிய விழிகளைத் திறந்து நகுலனை நோக்கினான். சுரேசர் “நான் சொல்கிறேன்” என்றார். “அரசர் நோயுற்றிருக்கிறார். அவருக்கு வெற்றிச் செய்திகளும் பரிசுகளும் மருந்தாகக்கூடும். ஏனென்றால் இது உளத்தளர்வால் உருவான நோய்” என்றார்.
யுதிஷ்டிரனின் நோய் எதன் பொருட்டென்று சுரேசர் விளக்கினார். பீமன் விழிகள் மங்கலடைந்திருக்க துயில்பவன்போல் அமர்ந்து அதை கேட்டான். “நம்மால் இப்போது சொல்லமுடியாது, இது அறியாப் பூட்டுக்கு அறிந்த தாழ்க்கோல்கள் அனைத்தையும் போட்டுப் பார்ப்பது போலத்தான். ஒருவேளை தாங்கள் கொண்டு வந்துள்ள பரிசால் அவர் நோய் நீங்கக்கூடும்” என்றார் சுரேசர். “இனி வரவிருப்பவர் இளையவர் பார்த்தன். அவர் அவ்வாறு ஒரு பரிசு கொண்டுவராமல் இருக்கவே வாய்ப்பு மிகுதி…” குரலைத் தாழ்த்தி “அவ்வண்ணம் ஒரு பரிசை நீங்கள் கொண்டுவரவில்லை என்றாலும்கூட நீங்கள் கொண்டுவந்துள்ளனவற்றில் அரியதோ, அழகியதோ ஆன ஒன்றை அவருக்கு பரிசளிக்கலாம். அது உங்களால் கொடுக்கப்படும்போது மேலும் அரியதாகலாம். பரிசுகள் அத்தருணங்களால் அம்மானுடரால் மதிப்பேற்றம் செய்யப்படுவன” என்றார்.
பீமன் கண் திறந்து நகுலனை ஒருமுறை பார்த்துவிட்டு “அவருக்கென தனியான பரிசு எதையும் கொண்டுவரவில்லை. ஆனால் இப்போது அவருடைய நலமின்மை குறித்து நீங்கள் சொல்லக் கேட்கையில் ஒரு பரிசு அவருக்குரியது என்ற எண்ணம் ஏற்படுகிறது” என்றான். “உண்மையில் நான் அதை மறந்துவிட்டிருந்தேன். நான் கொண்டுவந்த செல்வத்துடன் அது எங்கோ கிடக்கும். ஆனால் அது என் கனவில் பலமுறை வந்துவிட்டது என்னும்போது அதை நான் கடந்துசெல்லவில்லை என்று தோன்றுகிறது. நீங்கள் சொன்னதுமே அதை நினைவுகூர்ந்தேன் என்பதனாலேயே அது மூத்தவருக்குரியது என்றும் படுகிறது.” அவன் புன்னகைத்து “அல்லது ஒருவேளை இதை மூத்தவருக்கு அளிப்பதனூடாக இதில் இருந்து நான் விடுபட முடியும்… என்னால் கடந்துசென்றுவிடவும் முடியும்” என்றான்.
சுரேசர் “எதுவாயினும் இவ்வளவு சொற்களை அதைப்பற்றி சொல்வதற்கிருப்பதே நல்லது, அது அவருக்குரியதுதான். சொற்களே அவருக்கு பரிசாக முடியும். அச்சொற்களை உருவாக்கும் பொருளே நமக்குத் தேவை” என்றார். பீமன் “விந்தையானது, ஒருவேளை என் கனவாகவேகூட இருக்கலாம். மலையிறங்கும்தோறும் அதை கனவு என்றே உணர்கிறேன். இந்த வாழ்க்கையில் நான் அறிந்த இனியவை அனைத்தும் கனவுகளே, துயரங்கள் அனைத்தும் மெய்யென” என்றான். அவன் முகம் விரிந்தது. “அது ஏன் என்னை விடாமல் தொடர்கிறது என இப்போது அறிகிறேன். அது ஓர் அழகிய குழந்தைக்கதை போன்றது. ஆனால் ஒரு தொன்மையான பாடல்போல் விரித்து விரித்தெடுக்கும் ஆழ்பொருள் கொண்டது…” என்றபின் கைகளை தட்டினான்.
ஏவலன் வந்து வணங்க “என் துணைப்படைத்தலைவன் ஊர்வரனிடம் சென்று வடபுலத்தில் கின்னரநாட்டில் நாம் கண்ட போதநாட்டு முதிய துறவி அளித்த அந்த விழிக்கல்லை எடுத்துவரச் சொல்” என்றான். அவன் தலைவணங்கி வெளியே சென்றான். பீமன் “அது விந்தையான கல். அதை அவர்கள் நாகம் சீறுவதுபோன்ற ஒலியில் ட்ஸி என்கிறார்கள். எனக்கு அதை அளித்தவர் அதற்கு நாகாக்ஷம் என்று பெயர் சொன்னார். பல கைகள் மாறி, மாறுந்தோறும் கதைகள் பெருகி அவரை வந்தடைந்தது அது. சிறியது, மலையில் கிடைக்கும் ஏதோ கல்லில் இருந்து செதுக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருபக்கமும் சிறிய கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அது நம்மை வெறித்து நோக்கிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும்” என்றான்.
“அது மலைகளின் கண் என்கிறார்கள். முதலில் அதை பார்த்ததும் எனக்குத் தோன்றியது மாமலைகளை அத்தனை சிறிய பொருளாக ஆக்கிக்கொள்வதில் இருக்கும் மானுடக் கனவுதான். அந்த மலையே அவ்வாறு ஆணையிடாமல் மானுட உள்ளத்தில் அது தோன்றியிருக்காது. அதை கழுத்தில் அருமணியாக அணிகிறார்கள். உடலிலேயே வைத்திருக்கிறார்கள்.” பீமன் நகைத்து “எங்கு சென்றாலும் மலையை உடன்கொண்டு செல்கிறார்கள்” என்றான். சுரேசர் “நாம் இங்கே கைலை மலையை சிவக்குறி என சூடிக்கொள்வதுபோல” என்றார். பீமன் “ஆம், அதை நான் எண்ணவில்லை. மலைகளின் விழைவுபோலும் அது” என்றான். சகதேவன் “மலைகள் அசைவும் பெயர்வும் அற்றவை. அசையவும் அலையவும் அவைகொண்டுள்ள விழைவே அவ்வாணையாக மானுடருக்கு வந்தது போலும்” என்றான்.
பீமன் “போதநிலம் குறித்து நான் முன்பு அறிந்திருக்கவில்லை. வடக்கே கின்னரநாடுதான் உள்ளது, அதற்கப்பால் வெண்பனி மூடிய இமையமலையடுக்குகள் மட்டுமே என்றே நினைத்திருந்தேன். மலைகளுக்கு அப்பால் பீதர்நிலம் உள்ளது என்றும் தெரியும். மலைகளின் உச்சியில் வானில் என நின்றிருப்பது போதநிலம். அம்மக்கள் அதை போ என்றும் போத் என்றும் அழைக்கிறார்கள். அவர்களுக்கு கீழிருக்கும் நிலங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் குருதி குளிர்ந்திருப்பது என்றும் அவர்களின் விழிகளும் பற்களும் பனிக்கட்டியால் ஆனவை என்றும் அவர்களால் மலைகளில் இருந்து மலைகளுக்கு பறக்கமுடியும் என்றும் கின்னரநாட்டில் கதைகள் உள்ளன. அந்நிலத்தை கின்னரநாட்டில் மின்னல்களின் நிலம் என்றும் சொல்கிறார்கள். அங்கே தலைக்குமேல் எப்போதுமே மின்னல்கள் துடித்துக்கொண்டிருக்குமாம். மின்னல்களால் ஆன ஒரு சிலந்திவலை அவர்களின் வானம் என்றனர். அப்படி ஏராளமான கதைகள். ஆனால் அங்கேகூட போதநாட்டிற்குச் சென்று மீண்ட எவரையும் நான் பார்க்கவில்லை.”
“போதநாட்டைப் பற்றி கேள்விப்படுந்தோறும் அங்கு மெய்யாகவே சென்று மீண்ட எவரேனும் இருந்தால் அழைத்துவரும்படி சொல்லியிருந்தேன். ஒவ்வொரு நாளும் புதிய கதைகளே வந்துகொண்டிருந்தன. உண்மையில் போதநிலத்தைப் பற்றிய கதைகளைக் கொண்டே அங்குள்ள இறைவழிபாட்டுமுறைகளை உருவாக்கியிருந்தனர். மேலே இருந்து பனி உருகி ஓடைகளாகி வருவதுபோல அக்கதைகளும் இடிமின்னல்களின் நாட்டிலிருந்து வருகின்றன என்றனர். ஒருநாள் அந்த முதுதுறவியைப் பற்றி என் வீரர்கள் அறிந்தனர். அவர் கின்னகைலை மலையின் அடிவாரத்தில் ஒரு சிறு குன்றின்மேல் குகை ஒன்றில் தங்கியிருந்தார். அவர் போதநிலத்தில் இருந்து வந்தவர் என்று அவ்வூர் மக்களால் வழிபடப்பட்டார். அவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தேன். அவர் அவர்களால் தெய்வநிலை கொண்டவர் என கருதப்பட்டார். மலைக்குமேல் உள்ள மக்களின் மெய்ஞான வழி போதம் என்று அழைக்கப்பட்டது. அதை அவர்கள் போ என்றும் போன் என்றும் சொன்னார்கள். அந்த வழியின் தொலைநிழலே கின்னரநாட்டினரின் வழிபாடு.
என் வீரர்கள் அவரைப் பற்றி என்னிடம் வந்து சொன்னார்கள். அவரை என்னிடம் அழைத்துவரும்படி சொன்னேன். அவர் எங்கும் செல்வதில்லை என்றார்கள். நான் அப்போது எனக்கே புரியாத ஏதோ எரிச்சலில் இருந்தேன். ‘எனில் அவரை தூக்கிவருக!’ என்று ஆணையிட்டேன். என் வீரர்கள் நூறுபேர் அவரை கொண்டுவரும்பொருட்டு சென்றனர். அவர் வாழ்ந்த குகைக்குள் சென்று அவரிடம் உடன் வரும்படி அழைத்தனர். அவர் எப்போதும் ஊழ்கத்தில் ஆழ்ந்திருப்பவர். அவர்களின் சொற்களை செவிகொள்ளவே இல்லை. அவர்கள் அவரை தூக்க முற்பட்டனர். அவர் எடைமிகுந்தவராக இருந்தார். கல்போல, இரும்புபோல. மண்ணில் உள்ள எப்பொருளையும்விட பலமடங்கு எடைகொண்டவராக. அவர்களால் அவரை அசைக்கக்கூட முடியவில்லை. பன்னிருபேர் சேர்ந்து அவரை பற்றி இழுத்தபோதுகூட அவரிடம் சிறு அசைவுகூட உருவாகவில்லை. அவர் மலையில் பொருந்தியிருக்கும் பாறை எனத் தோன்றினார். ஆனால் சற்றுபொழுது கழிந்து ஊழ்கநிறைவு அடைந்து எழுந்து எளிதாக நடந்து சென்றார்.
அவர்கள் அஞ்சி திரும்பி ஓடி என்னிடம் வந்து நிகழ்ந்தனவற்றை சொன்னார்கள். நான் சீற்றம் கொண்டேன். “அது ஏதோ இந்திரமாயம். உளம்நிலைத்தவனை அந்த மாயம் ஏதும் செய்யாது. நான் செல்கிறேன்” என்றேன். நானே கிளம்பி அவரைப் பார்க்க அந்த குகைக்கு சென்றேன். கீழிருந்து அந்த மலையின் படிகளில் ஏறும்போது அங்கிருந்த மலைப்பாறை ஒன்றை தூக்கிக்கொண்டேன். அதை தோளில் ஏற்றியபடி படியேறி மேலே சென்றேன். ஆனால் படிகளில் ஏற ஏற அந்தப் பெரும்பாறை எடையில்லாமல் ஆகிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இறகென, பஞ்சென ஆகியது. அது அங்கில்லை என்றும் என் கைகள் வெறுமனே எடைசுமப்பதாக நடிக்கின்றன என்றும் தோன்றியது. அதை கீழே வீசிவிட எண்ணினேன். ஆனால் இன்மையை எப்படி கீழே வீச முடியும்?
அக்குகையின் வாயிலை அடைந்தேன். உள்ளே அவர் கவரிமான் தோலில் அமர்ந்து ஊழ்கம் புரிந்துகொண்டிருந்தார். அவருடைய தோற்றம் என்னை துணுக்குறச் செய்வதாக இருந்தது. நீண்ட தலைமயிர் வளர்ந்து தரை தொடும்படி நீண்டிருந்தது. அதை ஏழு பின்னல்களாக ஆக்கியிருந்தார். அவருடைய புருவங்கள் வளர்ந்து கன்னத்தைத் தொட்டு தொங்கின. மீசையும் தாடியும்கூட செறிந்து வளர்ந்து மடியை தொட்டன. பீதர்களுக்கு அத்தனை செறிவான நீண்ட தாடியையும் மீசையையும் நான் கண்டதே இல்லை. நகங்கள் வளர்ந்து ஐந்து பறவையலகுகள் போலிருந்தன. அவர் விழிகளும் விந்தையானவை. பீதர்களின் விழிகளைப் போலன்றி அவை உருண்டு துறித்து நோக்குகொண்டிருந்தன. பின்னர் நான் கண்டறிந்தேன் போ மெய்வழியின் தெய்வங்கள் அனைத்துமே அத்தகைய நோக்கு கொண்டவை என.
நான் அந்தப் பாறையை கீழே போட்டேன். எடையோசையுடன் அது விழுந்தது. நிலம் அதிர்ந்தது, விழுந்த இடத்திலிருந்த பாறைகள் பொடியாயின. நான் விழிநீர் பெருக கைகூப்பி நின்றேன். அவர் என்னை அறியவே இல்லை. அருகணைந்து அவர் காலடியில் என் தலையை வைத்தேன். என் அகமும் எடையிழந்தது. நான் அழுதுகொண்டிருந்தேன். கடோத்கஜனையும் சுதசோமனையும் சர்வதனையும் நினைத்துக்கொண்டேன். என் எல்லா எல்லைகளும் சிதறின. என் தலையை அவர் காலடியில் அறைந்து அறைந்து கதறி அழுதேன். என் குரல் குகையிருளுக்குள் எதிரொலித்தது.
பின்னர் மெல்ல ஓய்ந்து உடலை சுருட்டிக்கொண்டு கருக்குழவிபோல அவர் காலடியில் கிடந்தேன். அப்படியே துயின்றுவிட்டேன். நான் கண்டது பிறிதொரு உலகம். ஒளியாலான உடல்கொண்ட மானுடர் மிதந்து அலையும் ஒரு நகரம். ஆடி என மின்னி நெளியும் ஒரு கோட்டை, குவிந்தும் செறிந்தும் உருவெடுத்த ஒளியாலான மாளிகைகள். எல்லா ஓசைகளும் இசையே என்றான சூழல். என் உள்ளம் தித்திக்க விழித்துக்கொண்டேன். கண்களைத் திறந்தபோது காட்சிகள் துலக்கம் பெற்றிருந்தன. செவிகள் பலமடங்கு கூர்கொண்டிருந்தன. என் உடலே இனிமையில் திளைத்துக்கொண்டிருந்தது. ஒரு சொல் இன்றி அவர் காலடிகளைப் பணிந்து விடைபெற்றேன். ஒரு சொல் எஞ்சாத உள்ளம் கொண்டிருந்தேன். இன்பத்தின் அழகு என்னவென்று மெய்யாகவே உணர்ந்துவிட்டிருந்தேன்.
மறுநாள் மீண்டும் அவரைச் சந்திக்க அங்கே சென்றேன். தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். அவர் அருகே அமர்ந்து மீள்வதொன்றே நான் செய்வது. ஒருநாள் மேலே செல்வதற்கு முன் கீழே கிடந்த பாறை ஒன்றை தூக்க முயன்றேன். அது எடையே இல்லாமல் இருந்தது. யானையளவு பெரிய பாறைகளை என் சுட்டுவிரலால் தொட்டு தூக்கினேன். வீசி எறிந்து பிடித்தேன். முகில்கீற்றை அளைவதுபோல அவற்றை வைத்து விளையாடினேன். அன்று மேலே செல்லும்போது சிரித்துக்கொண்டிருந்தேன். அவர் அருகே சென்றமர்ந்தபோது எனக்கு இப்புவியில் அணுக்கமான பிறிதொருவர் இல்லை என்றே உணர்ந்தேன். ஆகவே சிரித்துக்கொண்டே அவரிடம் சொன்னேன். “நான் கண்ட அந்த இடம் எது? அங்கன்றி எங்கும் நான் செல்லவிழையவில்லை.”
அவர் எந்தச் சொல்லும் உரைக்கவில்லை. நான் மீண்டும் மீண்டும் அதையே கேட்டேன். சீற்றம் எழ மீளமீள அதையே கேட்கத் தொடங்கினேன். வெறிகொண்டு நூறுமுறை அதை கேட்டேன். பின்னர் எழுந்து திரும்பி நடந்தேன். படியிறங்கி வந்தபோது நான் தூக்கி விளையாடிய பாறைகள் அங்கே கிடந்தன. சீற்றத்துடன் அவற்றில் ஒன்றை மிதித்தேன். என் கால் உடைவதுபோல வலிக்க அலறியபடி அமர்ந்துவிட்டேன். அந்தப் பாறை மீண்டும் எடைகொண்டுவிட்டிருந்தது. நான் மீண்டும் படியேறி ஓடி அவரை அடைந்தேன். நொண்டியபடி அருகணைந்து நெஞ்சில் அறைந்து கூவினேன். “கூறுக, ஆசிரியரே! அது எந்த இடம்? அதை சொல்லாவிட்டால் இப்போதே இங்கே உயிர்துறப்பேன்.”
அவர் புன்னகைத்து “அதன் பெயர் ஷம்பாலா. அதை மெய்ஞானத்தின் நிலம் என்கின்றன நூல்கள். அங்கே மலைகளுக்கு மேல் மெய்யறிவின் மண்ணான போதநிலத்தில் எங்கோ உள்ளது அது. மண்ணில் ஊழ்கம் நிறைந்தவர்களே போதநிலத்தை சென்றடைய முடியும். அங்கே சென்று கனிந்தவர்களே மேலும் எழுந்து ஷம்பாலாவுக்கு செல்லமுடியும்” என்றார். “ஆனால் விழைபவர் அனைவருமே அதை கனவென ஒருமுறையேனும் கண்டுவிடுவார்கள். அது ஓர் அழைப்பு. அவ்வழைப்பைப் பெற்றவர்கள் அமைதியின்மை அடைகிறார்கள். மண்ணில் அடையும் பிற இன்பங்களெல்லாமே பொருளற்றவை என உணர்கிறார்கள். அதன்பின் அவர்கள் அக்கனவிலிருந்து வெளிவரவே இயல்வதில்லை.”
நான் அவர் கால்களை பற்றிக்கொண்டேன். “நான் அங்கே செல்வேன். அங்கே செல்ல எதையும் கடப்பேன். எனக்கு வழிகாட்டுங்கள்” என்றேன். அவர் புன்னகைத்து “திரும்பிச் சென்று உன் மூத்தவருடன், உடன்பிறந்தாருடன் உள்ள உறவனைத்தையும் அறுத்துவிட்டு வா. உன் பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடு…” என்றார். “தன் இல்லத்தை எரிக்காதவன் பயணத்தை தொடங்குவதேயில்லை என்று எங்கள் நூல்கள் சொல்கின்றன.” நான் தளர்ந்தேன். என்னால் அது இயலாது என்று உணர்ந்தேன். அவர் காலடியில் அமர்ந்துவிட்டேன். “நீ விழைவது இப்பிறவியில் நிகழாது. உன்னுடையது பிறவிமுடிச்சு” என்று அவர் சொன்னார். “ஆனால் இப்பிறவியில் நீ விழைந்தாய் என்பதனாலேயே மறுபிறவிகளில் இது தொடரும். சென்றபிறவியின் நீட்சியாகவே இங்கு வந்து இதை அறிந்தாய். நீ பாதையை கண்டுவிட்டாய். சென்றடைவாய்” என்றார். நான் பெருமூச்சுவிட்டேன். பின்னர் ஆறுதல்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
நான் கின்னரநாட்டிலிருந்து திரும்பி வர முற்படுகையில் போதநிலத்து ஞானி அளித்ததாக அவரை வழிபடுவோன் ஒருவன் எனக்கு ஒரு பரிசை கொண்டுவந்து தந்தான். அவரிடம் விடைபெறச் சென்றிருந்தபோது அவர் எந்த உணர்வையும் காட்டவில்லை. நான் வணங்கி அறிவித்து திரும்பியபோது அவர் முகம் மாறவே இல்லை. அந்த அசைவின்மை என்னை துயருறச் செய்தது என்றாலும் அவ்வண்ணமே அது நிகழுமென்றும் அறிந்திருந்தேன். ஆகவே மறுநாள் காலை என் படைகள் கிளம்பிக்கொண்டிருந்தபோது என் மாளிகை முகப்பில் வந்து நின்ற பீதர்முகம் கொண்ட மலைமகன் எனக்கு வியப்பையே அளித்தான். அவன் “இதை போதர் உங்களுக்கு அளித்தார். அவர் ஆணைப்படி கொண்டுவந்தேன்” என அளித்தபோது திகைப்படைந்தேன். அது ஒரு சூதாக இருக்குமோ என்றுகூட ஐயம் கொண்டேன்.
அது வெண்பளிங்கால் ஆன ஒரு சிறிய பேழை. அதை திறந்து உள்ளே பார்த்தேன். உள்ளே இருந்தது ஒரு சிறிய கல்மணி. விழிகள் செதுக்கப்பட்டது. ஒருபக்க விழி நீலம், இன்னொருபக்கம் சிவப்பு. அரிசிமணியின் வடிவம், ஆனால் அரிசிமணியைவிட பத்து மடங்கு பெரியது. “இது என்ன?” என்று அவனிடம் கேட்டேன். “இது போதநிலத்து கல்மணி. இதை அவர்கள் ட்ஸி என்கிறார்கள். அங்கே கிடைக்கும் ஒரு வகையான அரிய பாறையில் செதுக்கப்படுகிறது. இதை மெய்மையின் துளி என்கிறார்கள். மெய்மை இந்த மலையடுக்குகளைப்போல ஒன்றைச் சிறிதாக்கி பிறிதொன்று என முடிவிலாது எழுவது. இது நம் கைவிரல்களுக்குள் அடங்கும் மெய்மை. மலையின் விதை என்று இதை சொல்வதுண்டு” என்றான்.
“அந்த அருமணி எனக்கு ஓர் ஒவ்வாமையையே அளித்தது” என்று பீமன் சொன்னான். “ஏனென்றால் அது அத்தனை அரியது அல்ல, அந்த மலைமகனே அதைப்பற்றி அறிந்திருக்கிறான். மலைமக்களின் தலைவர்கள் சிலரிடம் அதைப்போன்ற சிலவற்றை நான் கண்டதையும் நினைவுகூர்ந்தேன். அத்துடன் நான் விழைந்தது பொருட்களை அல்ல. பொருள்வடிவாகச் சுருங்கும் ஒன்றையும் அல்ல. எனினும் அந்தப் பரிசை பெற்றுக்கொண்டேன். அதை நான் பெற்றுக்கொண்ட செய்தியை போதரிடம் சொல்லும்படி சொல்லியனுப்பினேன். அப்பேழையை என்னுடன் வைத்துக்கொண்டேன்.” சுரேசர் “அங்கே அது எவ்வாறு பொருள்படுகிறது என்பதல்ல, இங்கே அது அரியதா என்பதே வினா” என்றார்.
ஏவலன் உள்ளே வந்து தலைவணங்கினான். பீமனின் முன் பீடத்தில் சிறிய மரப்பேழை ஒன்றை வைத்தான். பீமன் அதை திறந்து அதற்குள் இருந்து மேலும் சிறிய ஒரு பளிங்குப்பேழையை எடுத்தான் அவன் கைக்குள் அது ஒரு சிறு சிமிழ் போலிருந்தது. தூய வெண்ணிறம். அதை அவன் திறந்தபோது அனைவரும் எழுந்து அதை நோக்கினர். அந்தக் கல்மணி மிக எளிதான ஒன்றாகவே முதலில் தோன்றியது. அதன்பின் அதன் விழிகள் தெரிந்தன. பீமன் அந்தப் பேழையை சற்றே உருட்டி அக்கல்லை அசையவைத்துக் காட்டியபோது இரண்டு விழிகளும் தெரிந்தன. அவ்வசைவில், அந்நோக்கில் அது உயிருள்ளதுபோல உளமயக்கு கூட்டியது.
“இந்த மணியைப் பற்றிய கதைகளை பின்னர் உசாவி அறிந்தேன். மலையின்மேல் சில பாறைகளில் விண்ணில் இருந்து மின்னல்கள் பாய்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் அவ்வாறு மின்னல்கள் பாயும்போது அது வானின் ஆற்றல்கொண்டு ஒளிபெறுகிறது. அது நீலமும் செம்மையும் கலந்து மின்னுகிறது. அதை டோர்ஜே என்கிறார்கள். டோர்ஜே என்றால் வைரம். அதில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மென்மையான கல்லில் உருட்டி உருட்டி இதை உருவாக்குகிறார்கள். பின்னர் ஊசியால் இதில் விழிகளை செதுக்குகிறார்கள். நீலவிழி சாவையும் செந்நிறவிழி வாழ்வையும் குறிக்கிறது. அல்லது இரவையும் பகலையும். அல்லது இன்மையையும் இருப்பையும்” என்றான் பீமன்.
அவர்கள் ஒவ்வொருவராக அதை கூர்ந்து நோக்கினர். ஆனால் எவரும் அதை தொட முனையவில்லை. “மலைக்குமேல் போ மெய்வழியின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு அவர்கள் ஊழ்கம் செய்யவேண்டிய நுண்சொல்லை இப்படி ஒரு ட்ஸி மணியாக ஆக்கி அளிக்கிறார்கள். இதை அளிப்பதற்கு உரிய நாட்களும் சடங்குகளும் உள்ளன. விண்கோளும் மின்நிலையும் தெரிந்து நாள் குறிக்கிறார்கள். ஏற்கெனவே சொல்பெற்ற மாணவர்கள் சூழ அமர்ந்து ஆசிரியர் இதை புதிய மாணவனுக்கு அளிக்கிறார். இதைப் பெற்றவர் தன் உடலிலேயே எப்போதும் இதை வைத்திருக்கவேண்டும். இது அவரை ஷம்பாலா நோக்கி அழைத்துச் செல்லும். என்றேனும், எப்பிறவியிலேனும் அவர் அங்கே சென்று சேர்வார்.”
சுரேசர் “ஆனால் அது உங்களுக்கு போதரால் அளிக்கப்படவில்லை” என்றார். “ஆம், என் உளச்சோர்வு அதனாலேயே. நான் என்னிடம் அதை கொண்டுவந்து அளித்தவரிடம் அதை அவருக்கு போதரோ பிறரோ அளித்திருக்கிறார்களா என்று கேட்டேன். அவர் அந்த அருமணியை ஓரிருமுறை சில குடித்தலைவர்களின் உடலில் பார்த்திருக்கிறார். சிலர் அதை தெய்வமென நிறுத்தி வழிபடுவதையும் கண்டிருக்கிறார். அதைக் குறித்த கதைகளை கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்” என்றான் பீமன். யுயுத்ஸு “நம்மை வந்தடையும் ஒவ்வொன்றும் தனக்குரிய நோக்கம் கொண்டுள்ளது” என்றான். நகுலனும் சகதேவனும் அவனை திரும்பி நோக்கினார்கள். பீமன் சிறிய விழிகளைத் தழைத்து நிலம் நோக்கி அமர்ந்தபடி “ஆம், நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான்.