இரு காந்திகள்.
சுதந்திரத்தின் நிறம்
ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…
இவ்வாண்டுக்கான பத்மபூஷண் விருது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள் கொண்டிருப்பது முதல் வகையான புகழ். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் அடைந்திருப்பது இரண்டாம் வகை புகழ். மரபின் மொழியில் சொல்லப்போனால் பொன்றாப்புகழ்.
”தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” , “செயற்கரிய செய்வார்” என்னும் இரண்டு வரிகளால் அவர்களை நம் மரபு வரையறை செய்கிறது. ’வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என வகுக்கிறது. அவர்களே புலவர் சொல்லில் எழவேண்டியவர்கள். தலைமுறைகளின் நினைவில் நின்றிருக்கவேண்டியவர்கள். கிருஷ்ணம்மா:ள் அவர்களில் ஒருவர். அவர்களை வணங்குகிறேன்.