பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 8
யுயுத்ஸு யுதிஷ்டிரனின் அறையை அடைந்து “என்னை அழைத்திருக்கிறார்” என்றான். ஏவலன் அவன் வருகையை அறிவித்து உள்ளே அனுப்பினான். யுயுத்ஸு உள்ளே சென்று சொல்லின்றி யுதிஷ்டிரனை வணங்கினான். யுதிஷ்டிரன் மஞ்சத்தில் கால்களை நீட்டி தலையணைகளில் சாய்ந்து அமர்ந்திருந்தார். முகம் சற்று தெளிவுகொள்வது போலிருந்தது. மூச்சு மட்டும் எழுந்து எழுந்து அமைய நெஞ்சு அசைந்துகொண்டிருந்தது. அமரும்படி கைகாட்டினார். அவன் அமர்ந்ததும் “உன்னை அழைத்தது ஒரு சந்திப்புக்காக. என் உளநிலையுடன் ஒத்துச்செல்பவன் நீ மட்டுமே” என்றார். “சகதேவன் இருந்தால் அவனை அழைத்திருக்கலாம்” என முனகிக்கொண்டார்.
யுயுத்ஸு புரிந்துகொண்டான். “அந்த மேற்குநிலத்து அறிஞர்களை நான் சந்திக்கவேண்டும் என்று விரும்பினேன். அவர்களை அழைத்துவரச் சொல்லி ஆணையிட்டிருக்கிறேன். அப்போது நீயும் உடனிருக்கலாம் என்று தோன்றியது” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு தலைவணங்கினான். “அவர்களின் மெய்மை என்ன என்று அறிவதில் எனக்கு ஆர்வமில்லை. நான் உண்மையில் நெறிநூல்களைப் பற்றிய ஆர்வத்தை முற்றாகவே இழந்துவிட்டிருக்கிறேன். நெறிநூல்கள் என்பவை மக்களை வழிநடத்துபவை என எண்ணியிருந்தேன். அவ்வாறல்ல, நெறிகளை மக்கள்தான் உருவாக்கிக்கொள்கிறார்கள். உருவாக்கிக்கொண்ட நெறிகளை எழுதிவைக்கிறார்கள். ஆனால் அவற்றை நடைமுறையில் தொடர்ந்து மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.”
“எனில் ஏன் எழுதி வைக்கிறார்கள்? அவற்றை நிலையாக ஆக்கும்பொருட்டா?” என யுதிஷ்டிரன் தொடர்ந்தார். “அல்ல, நிலையாக ஆக்கமுடியாதென அனைவருமே அறிந்திருக்கிறார்கள். அவற்றை பதிவு செய்வது அவை குடிகளின் கண்ணுக்குப் படவேண்டும் என்பதற்காக மட்டுமே. எழுதப்பட்ட நெறி என்பது ஒரு பொருள். மக்களால் நுண்ணுருவான எதையும் நம்ப முடியாது. தெய்வத்தை சிலையாக்குவதுபோல நெறிகளை சொல்லாக்குகிறார்கள். சிலையை தெய்வமாக்கிக்கொள்வதுபோல சொற்களை நெறிகளாக விரித்துக்கொள்கிறார்கள். தெய்வம் அந்தந்தத் தருணங்களுக்கேற்ப அந்தந்த உள்ளங்களுக்கு இயைய உருக்கொள்வதுபோல நெறிகளும் தோற்றம் கொள்கின்றன.”
“ஆனால் இந்த நூலின் வடிவம் எனக்கு ஆர்வமூட்டியது. இது பொன்னாலானது. இதை பொன்னில் பொறிக்க வேண்டும் என எவருக்குத் தோன்றியது? இச்சொற்கள் தெய்வநெறிகளைச் சொல்பவை என்றால் பொன் இவற்றுக்கு எதை மேலும் கூட்டி அளிக்கப்போகிறது? முன்பு அதை எண்ணியிருக்கிறேன். காலம்கடந்தவை என்று நாம் நம்புகிறோம் என்றால் அச்சொற்களை ஏன் கல்லில் பொறிக்கிறோம்? அச்சொல்லைவிட காலம்கடந்தது கல் என்று நம்புகிறோம் என்றல்லவா அதன் பொருள்?” என்றார் யுதிஷ்டிரன். “ஆகவே இந்நூலை படித்தறியவேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டது. இதில் புதியதென ஏதும் இருக்கப்போவதில்லை என்பதில் ஐயமில்லை. ஆனால் எதை அவர்கள் பொன்னால் அரணிட்டு நிறுத்த விழைந்தனர் என அறிய விழைகிறேன்.”
யுயுத்ஸு புன்னகைத்தான். “ஏழு அறிஞர்கள் என்பது மேலும் ஆர்வமூட்டுகிறது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அவ்வாறென்றால் அவர்கள் இந்நூலை பல தலைமுறைகளாக பயின்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். பல காலமாகப் பயிலப்படும் ஒன்று தெய்வமென ஆகிவிட்டிருக்கும். தெய்வம் உருமாற்றத்தினூடாக மட்டுமே செயல்பட முடியும்.” அவர் முதல்முறையாக சிரித்தார். அவருடைய பற்கள் வெளித்தெரிய கண்களில் மெல்லிய ஒளி வந்தமைந்தது. அவர் சிரிப்பது மிக அரிது என யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். நூல்தேரும்போது மட்டுமே அச்சிரிப்பு எழுகிறது. அது நூலில் அங்கதத்தைக் கண்டடைந்தால் மட்டும். நூலாய்வதையே வாழ்வெனக் கொண்டவர்கள் அறுதியில் நூலில் அங்கதம் அன்றி எதையுமே பொருட்டெனக் கருதுவதில்லை போலும்.
ஏவலன் வந்து வணங்கி அறிஞர்கள் வந்திருப்பதை அறிவித்தான். அவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்தனர். அனைவருமே யவனர்கள். ஆனால் ஒருவர் மட்டுமே செந்நிறத் தலைமயிர் கொண்டிருந்தார். அவர் விழிகளும் பழுப்புநிறத்தில் இருந்தன. ஒருவர் ஓங்கிய பேருடலும் அடர்த்தியான கருநிறப் புருவங்களும் கொண்டிருந்தார். இருவரிடம் நோக்கியபின் சற்று பீதர்குருதியின் கலப்பை கண்டடைய முடிந்தது. அவர்கள் அறைக்குள் வந்ததும் யுதிஷ்டிரன் யவனமொழியில் முகமன் உரைத்து வரவேற்றார். அமரும்படி அவர்களிடம் கோரினார். “நான் உடல்நலமின்றி இருக்கிறேன். ஆகவே என்னால் எழுந்து அமர்ந்து நூலாட இயலாது. பொறுத்தருள்க!” என்றார்.
அவர்களில் முதியவர் உரத்த குரலில், சற்றே குழறல் கலந்து ஒலித்த செம்மொழிச் சொற்களில் “என் பெயர் தாட்டியஸ். நான் இரட்டைநதியோடும் தொல்நிலமாகிய கீழ்யவனத்தை சேர்ந்தவன். நெறியுசாவும் கல்விபெற்றவன். நூல்நவிலும் உரிமைகொண்ட குலத்தில் பிறந்தவன்” என்றார். “இவர்களும் எங்கள் நிலத்தவரே. இவர் இசாயர், அவர் சபூரர், உயரமானவர் சார்பெல். நாங்கள் நால்வரும் ஒற்றை கல்விமுறையைச் சேர்ந்தவர்கள்” என்றார். மெலிந்த உடலும் கூர்முகமும் சற்றே உந்திய மூக்கும் கொண்டிருந்தவர் “நான் இரட்டைநதிக்கு அப்பாலிருக்கும் பாலையவனத்தைச் சேர்ந்தவன். என் பெயர் அடாமி. அவர்கள் இருவரும் இரட்டையர், அவர்களுக்கு எப்போதும் தோமர் என்னும் பெயரை இடுவது எங்கள் வழக்கம்” என்றார்.
“நாங்கள் எழுவருமே செம்மொழி கற்றவர்கள். அரசர் விரும்பும்படி நூல்களை பொருள்கொண்டு விளக்க கடமைப்பட்டுள்ளோம்” என்று முதல் தோமர் சொன்னார். “நெறியுரைப்பது எங்கள் தொழில், அத்துடன் உலகமெங்கும் நெறிகளைக் கொண்டுசெல்ல வேண்டியது எங்கள் குலக்கடமையும்கூட.” யுதிஷ்டிரன் கைகாட்ட ஏவலன் அந்த மீன்பேழையை எடுத்துவந்தான். “இந்த நூல் எது? இதன் ஊற்றுமுகம் என்ன? இது உரைப்பது எதை?” என்று யுதிஷ்டிரன் கேட்டார்.
தோமர் “இது ஒரு தொல்கதையிலிருந்து சொல்லப்பட வேண்டியது” என்று தொடங்கினார். “இது தெய்வங்கள் மட்டுமே மண்ணில் திகழ்ந்திருந்தபோது நிகழ்ந்தது. அன்று இங்கு பல்லாயிரம்கோடி தெய்வங்கள் இருந்தன. முள்ளின் முனையில் மூன்றுகோடி தெய்வங்கள் நின்றிருக்க இடமுண்டு என்பது எங்கள் மொழியின் சொல். அத்தெய்வங்கள் அனைத்துக்கும் தெய்வம் என்று அமைந்தது அனு என்னும் முதல் தெய்வம். அது ஆணும் பெண்ணுமாகியிருந்தது. வானும் மண்ணும் ஆகியிருந்தது. இருளும் ஒளியும், நீரும் நெருப்பும் அதுவே. இருத்தலும் இன்மையும் அதுவே. அறியப்படுவன அனைத்தும் அது, அறியப்படாமையும் அதுவன்றி வேறில்லை.”
இங்கிருந்த அனைத்து தெய்வங்களும் அது, ஆனால் இத்தெய்வங்கள் அனைத்தும் இணைந்தாலும் அது அல்ல. இவ்வண்ணம் நூறுநூறு சொற்களில் மட்டுமே நம்மால் அதைப் பற்றி சொல்லமுடியும். அனு எங்குள்ளது என்றாலும் அதன் ஒற்றைவிழி மட்டும் வடக்கே துருவமுனையில் வடமீன் என நின்றுள்ளது. விண்ணில் ஒவ்வொன்றும் மாறுகையில் மாறாதுள்ளது அது ஒன்றே. தான் இருப்பதற்கு மானுடருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மீன்களுக்கும் முதற்தெய்வமான அனு அளிக்கும் சான்று அது” என்றார் தோமர். “அனுவின் ஒவ்வொரு எண்ணமும் ஒரு தெய்வமென்றாகிறது. முடிவில்லாத தெய்வங்களால் ஆன தெய்வம் அது எனக் கொள்க!
அனுவின் ஓர் எண்ணம் என்லில் என்னும் தெய்வமாகியது. அது மண்மேல் சுழன்றடித்த பெரும்புயல்காற்று. பாறைகளாலும் மரங்களாலும் பிளவுபடுத்தப்பட்டு அது பல்லாயிரம் காற்றுகளாகியது. சுழற்காற்றும் சுழிக்காற்றும் மழைக்காற்றும் என வடிவுகொண்டது. விசையின், ஆற்றலின் தெய்வமான எனிலின் இளையோன் என என்கி என்னும் தெய்வம் பிறந்தது. அவன் பெருங்கடல்கள் என ஆகி இப்புவியை மூடினான். உடன்பிறந்தார் இருவரும் ஒருவருக்கொருவர் பூசலிட்டமையால் கடல்கள் கொந்தளித்தன. அலைகள் எழுந்து சென்று விண்ணை அறைந்து அதிரச்செய்தன. ஆகவே முதல் தெய்வமான அனுவின் ஓர் எண்ணம் நின்மை என்னும் அன்னைத் தெய்வமாகியது.
மலைகளுக்கும் மண்ணுக்கும் உரியவள் நின்மை. நிலமகளை எனிலும் என்கியும் மணந்தனர். அவர்களின் கூட்டில் உருவாயினர் மானுடர். தன் மைந்தர்கள் வாழும்பொருட்டு என்கி தன் அலைகளால் நீரை வானில் செலுத்தினான். என்லில் அவற்றைச் சுமந்துவந்து பொழியச் செய்தான். பெருநீர் இரு நதிகளாகியது. இரு நதிகளின் நடுவே எழுந்த அந்நிலம் நடுநீர்நிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கே குலங்கள் உருவாயின. அரசுகள் எழுந்தன. மொழிகள் செழித்தன. செல்வம் பெருகியது. செல்வம் அவர்களை விழைவுமிக்கவர்களாக்கியது. விழைவு பழிச்செயல்களை நோக்கி செலுத்தியது.
அவர்களின் பழிகளுக்கெல்லாம் இரு தந்தையரும் சினந்தனர். அவர்களை ஒவ்வொரு முறையும் அன்னை அடக்கி அமைதிப்படுத்தினாள். ஆனால் ஓர் எல்லையை அவர்கள் கடந்தபோது அன்னை முனிந்தாள். முழுக் கடலும் காற்றில் ஏறி வானாகச் சூழ்ந்து பொழிந்தது. மண்ணை நீர் மூடியது. ஒருவர் எச்சமின்றி அனைவரும் மடிந்தனர். அவர்கள் புதைந்த சேற்றுப் பரப்பில் இருந்து ஒரு கைப்பிடி அள்ளி அன்னை மீண்டும் மானுடரை உருவாக்கினாள். அவ்வாறு ஆறு முறை அவள் தன் மைந்தரை முற்றழித்தாள். ஏழாவது முறை மானுடரை முற்றழிக்க அவள் எண்ணியிருந்தாள். அவளுடைய சினம் நிலத்தில் அதிர்வுகளாக நீரில் அலைகளாக காற்றில் விம்மலோசைகளாக எழுந்துகொண்டிருந்தது.
அந்நாளில் சியுஸ்த்ரர் என்னும் மன்னரால் இரு நதிகளின் நாடு ஆளப்பட்டது. அவர் ஒருநாள் அந்தியில் பறவை ஒன்று சிறகைக் குவித்து வீசி பின்னால் நகர்வதை பார்த்தார். அது ஏன் என்று அவர் எண்ணி தன் நிமித்திகர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அவ்வண்ணம் ஒரு குறி தெரிந்திருக்கவில்லை. அது அவருடைய உளக்குழப்பம் என எண்ணினார். பிறிதொரு நாள் மரத்தின் உச்சியில் கூடுகட்டி வாழும் எலி ஒன்றை தன் மாளிகை மேலிருந்து கண்டார். பிறிதொரு நாள் நாகப்பாம்புகள் சிறகு கொண்டு காற்றில் மிதப்பதை கண்டார். ஒவ்வொன்றும் தங்கள் இயல்பழிந்து உருமாறுவதை உணர்ந்து அதன் பொருளென்ன என்று பதைத்தார்.
அவர் ஆற்றின்மேல் படகில் சென்றுகொண்டிருக்கையில் பெரிய மீன் ஒன்று வாயால் சிறிய மீன்களை உள்ளே இழுத்து விழுங்குவதை கண்டார். அக்கணமே தன் மேலாடையை வீசி அந்த மீனை பிடித்தார். அதை கொல்ல அவர் தன் குறுவாளை எடுக்கையில் அந்த மீன் “நில், கொல்லாதே என்னை” என்றது. சியுஸ்த்ரர் திகைத்து அதை நோக்கினார். பின் “நீ பலநூறு சிறுமீன்களை உன் பசிக்காக கொலைசெய்கிறாய், அரசனாகிய நான் என் நதியிலும் நெறிபேணக் கடமைப்பட்டவன்” என்றார். அந்த மீன் “நான் அவற்றை உண்ணவில்லை, என் வாய்க்குள் நோக்கு, அந்த மீன்கள் அனைத்தும் உயிருடன் உள்ளன. அவை அங்கே ஆழ்துயிலில் இருக்கும். அவை என் குழந்தைகள், நான் அவற்றை ஈன்றவள்” என்றது.
“உன் குழவிகளை நீ ஏன் விழுங்கிச் சேர்த்துக்கொள்கிறாய்?” என்று சியுஸ்த்ரர் கேட்டார். “அறிக, இங்கே பேரழிவு நிகழவிருக்கிறது! அன்னை நின்மை உயிர்க்குலங்கள் அனைத்தையும் அழிக்கவிருக்கிறாள். ஒவ்வொரு உயிர்வகையிலும் ஒன்றை மட்டும் அவள் எஞ்சவிடுகிறாள். இங்கு திகழும் பழிச்செயல்களில் பங்கில்லாதவர்கள் அவர்கள். எனக்கு அவள் அளித்த ஆணை என் உயிரை பேணிக்கொள்வதென்பது. என் குழந்தைகள் இன்றி என் உயிருக்குப் பொருளில்லை. ஆகவே அவர்களை என் உடலாக ஆக்கிக்கொள்கிறேன். என் ஊனை உண்டு அவர்கள் என்னுள் வாழ்வார்கள். அப்பேரழிவுக்குப் பின் புதிய உலகில் அவர்கள் என்னைப் பிளந்து வெளிவருவார்கள்” என்றது மீன்.
அந்த மீனை நீரிலேயே விட்டுவிட்டு சியுஸ்த்ரர் தன் அரண்மனைக்கு மீண்டார். தன்னையும் தன் குடியையும் காக்கும் தெய்வச்சொல்லுக்காக விழிநீருடன் வேண்டிக்கொண்டார். அவருடைய குடியால் வணங்கப்பட்ட அன்னை நின்மை அவரை ஏற்கவில்லை. அவருடைய நகர்கள்தோறும் ஆற்றல்வடிவெனக் குடிகொண்டிருந்த என்லில் அவரிடம் சொல்லாடவே இல்லை. அவர் ஏழு நாட்கள் நோன்பிருந்தார். பின் உயிரை மாய்ப்பதே உகந்தது என கடலுக்குச் சென்று பாறைமுனையிலிருந்து அலைகள்மேல் பாயமுற்பட்டார். அலைகளில் வெண்ணுரையாக கடலரசனாகிய என்கி எழுந்தான். நில் என்று கைகாட்டினான். “உன்னை காப்பேன்” என்றான்.
என்கி நிலத்தை அழிக்கும்பொருட்டு எழுந்த தன் பெருஞ்சினம் பற்றி சொன்னான். ஒவ்வாதன செய்து உவகையிலாடிய உயிர்க்குடியினரை அழித்து மற்றொன்றை அமைப்பதே தெய்வங்களின் இலக்கு என்றான். தன்னையும் தன் குடியினரையும் காக்கவேண்டும் என்று சியுஸ்த்ரர் மன்றாடினார். “எனில் அறிக, வரவிருப்பது பெருமழை! அது புவியை வெள்ளத்தால் மூடும். ஆகவே வாகைநெற்று வடிவில் மேலும் கீழும் வளைந்து முற்றிலும் மூடப்பட்ட படகொன்றை செய்க! அதில் நெறியமைந்தோர் என நீ எண்ணும் உன் குடியினர் நூற்றெண்மரை மட்டும் ஏற்றிக்கொள்க! நீர்மேல் நீங்கள் மிதந்துகிடப்பீர்கள். புயல்மழை ஓய்ந்தபின், பெருவெள்ளம் வடிந்தபின் உருவாகும் வண்டல்நிலத்தில் சென்றமைவீர்கள். அங்கே வேர்கொள்க!”
“நீங்கள் பேணும்பொருட்டு இந்த மீனை அளிக்கிறேன். இது என் ஆணை என்றே கொள்க! ஒன்றன்மேல் ஒன்று என மூன்று விண்விற்கள் தோன்றும் நாள் வரை இது உங்களுடன் இருக்கும். அன்று விதைமுதிர்ந்த கனியென்றாகி இது என்னை நோக்கிவரும். அதுவரை இதை எந்நிலையிலும் பேணுக!” என்று என்கி கைவிரித்தான். அதில் ஒரு சின்னஞ்சிறு வெள்ளி மீன் இருந்தது. அந்த மீனை உள்ளங்கையில் ஏந்தி சியுஸ்த்ரர் தன் அரண்மனைக்கு மீண்டார். என்கிதேவனின் ஆணைப்படி அவர் படகொன்றை செய்தார். அவருடைய ஆட்சியின் கீழ் இருந்த நூற்றெட்டு சிற்பிகள் ஒரு வாகை நெற்றை கண்முன் வைத்து அதை நோக்கி நோக்கி அந்தப் படகை செய்தனர்.
அப்படகில் எறுவோரைத் தேர்வுசெய்ய அவர் ஒரு வழிமுறையை கண்டடைந்தார். “இந்நிலம் பழிசூழ்ந்தது ஆகிவிட்டது. என்கி என்னும் தெய்வம் புதுநிலம் ஒன்றை நமக்கு சொல்லளிக்கிறது. அங்கே சென்று குடியேற விழைபவர் மட்டும் இப்படகில் ஏறிக்கொள்க!” என்றார். “அங்கே நிலம் மட்டுமே நமக்கு அளிக்கப்படும். அன்னம் நம்மால் விளைவிக்கப்படவேண்டும். அங்கே பொன் இருக்காது. பொன்னில்லாத உலகத்தை விழைவோர் மட்டும் வருக!” பொன்னில்லாத உலகமா என்றனர் சிலர். பொன்னில்லை என்றால் விழைவை எப்படி அளப்பது என்றனர். விழைவு அளக்க அளக்கப்பெருகுவது, அளக்கப்படாத விழைவு சுருங்கிச் சுருங்கி மறையும் என்றனர். விழைவில்லாத உலகில் வெற்றிகள் இல்லை. வெற்றிகளில்லையேல் விளைவன பயனற்றவை. மண் வெறுமையானது. உறவுகள் உணர்வெழுச்சிகள் அற்றவை என்றனர்.
இறுதியில் நூற்றெட்டுபேர் மட்டுமே முன்வந்தனர். அவர்களில் எழுபதுபேர் பெண்கள். இருநதிநிலத்தில் வாழ்ந்த பல்லாயிரவர் அந்த அறிவிப்பை எள்ளி நகையாடினர். அப்படகில் ஏறிக்கொண்டவர்களை நோக்கி கூச்சலிட்டனர். அவர்கள் மேல் மண்ணை அள்ளி வீசி இழிசொல் கூவினர். அவர்கள் படகில் ஏறி அமர்ந்துகொண்டு கண்களை மூடியபடி என்கியை வேண்டினர். நூற்றெட்டாவது மனிதர் ஏறிக்கொண்டதும் வானம் பிளந்து மின்னலெழுந்தது. இடியெழுந்து நகரின் அனைத்துக் கோட்டைகளையும் கூரைகளையும் விரிசலிடச் செய்தது. கடல் கவிழ்ந்ததுபோல் மழை பெய்யலாயிற்று. வெள்ளம் மாபெரும் நாகம்போல் பத்தி விரித்து எட்டு திசைகளிலிருந்தும் அணுகியது.
அவ்வெள்ளத்தில் சியுஸ்த்ரர் தன் குடியினருடன் ஊர்ந்த படகு மிதந்து சென்றது. படகின்மேல் மழை பொழிந்துகொண்டிருந்தது. எந்நாள் அது முடியுமென எவரும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் முதலில் அஞ்சினர். பின்னர் பசியும் களைப்பும் கொண்டனர். கையிலிருந்த உணவை உண்டு முடித்தனர். அதன்பின் அவர்களிடம் உண்பதற்கு ஏதுமிருக்கவில்லை. சூழ்ந்திருந்த வெள்ளம் பாலைநிலம்போல் வெறுமைகொண்டிருந்தது. சியுஸ்த்ரரின் கையிலிருந்த சிறு தொட்டியின் நீரில் அந்த வெள்ளி மீன் இருந்தது. அது ஒவ்வொருநாளும் என வளர்ந்தது. ஒரு முழம் அளவுக்கு நீண்ட வெள்ளி உடல்கொண்டிருந்தது.
படகில் இருந்தவர்கள் பசித்து உயிர்தவித்தனர். அவர்கள் அதை நோக்கி ஏங்கினர். அந்த மீனை உண்ணலாம் என அவர்களில் ஒருவர் சொன்னார். “அது தூயமீன், தெய்வத்தால் அருளப்பட்டது, எத்துயரிலும் பேணப்பட வேண்டியது” என்றார் சியுஸ்த்ரர். “மறுகணமே உயிர்பிரியும் என்றால் அதைப் பேணி என்ன பயன்?” என்று அவர்களில் சிலர் கேட்டனர். “எந்நிலையிலும் பேணிக்கொள்ள வேண்டியவை என சிலவாயினும் எஞ்சியிருப்பவர்களே பண்பட்டவர்கள் எனப்படுகின்றனர். தெய்வங்கள் அவர்களுக்கே கனிகின்றன. அவர்கள் பேணும் அந்த அரியவற்றின் வடிவிலேயே தெய்வங்கள் அவர்கள்முன் தோன்றுகின்றன” என்றார் சியுஸ்த்ரர்.
அவர்கள் ஒவ்வொருவராக பசியால் இறக்கத் தலைப்பட்டனர். சியுஸ்த்ரர் அந்த மீனை தன் வாளால் காத்து நின்றார். குழந்தைகள் இறக்கமுற்பட்டபோது அன்னையர் வெறிகொண்டு அந்த மீனைக் கொன்று உணவாக்க எழுந்தனர். உற்றார், அணுக்கர் என ஒவ்வொருவராக இறக்க அதைக் காத்து நின்றவர்களின் உறுதி அகன்றது. சியுஸ்த்ரர் மாறா உறுதியுடன் அதைக் காத்து நின்றார். இறுதியில் அவரும் பதினாறு அகவைகொண்ட ஒரு பெண்ணும் மட்டுமே அந்தப் படகில் உயிருடன் எஞ்சினார்கள். அவள் பெயர் ஆன்னி. அவள் வாய்பேசவோ செவிகேட்கவோ திறனற்றவள். மொழியென எதையும் அறிந்திராதவள். ஆகவே அவள் பழியென்பதையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் மட்டிலுமே அந்த மீனை உண்ண விழைவுகொள்ளாதவர்கள்.
மழையின் ஓசை நிலைத்துவிட்டதைக் கேட்டு சியுஸ்த்ரர் சாளரப்பாயை திறந்து நோக்கினார். வெளியே இளவெயில் எழுந்திருந்தது. வானம் முகில் விலகி ஒளிர்ந்தது. சியுஸ்த்ரர் சென்ற படகு ஒரு சேற்றுத்தீவின்மேல் சென்று முட்டி நின்றது. அவரும் ஆன்னியும் அங்கே இறங்கினார்கள். அந்நிலத்தில் அமர்ந்து அவர்கள் என்கியை வணங்கி நன்றிகூறினார்கள். அங்கே அவர்கள் காத்திருந்தபோது ஏழு நாட்களில் மண்பிளந்து செடிகள் மேலெழுந்தன. அவர்கள் தளிர்களை உண்டனர். பின்னர் இலைகளை உண்டனர். பின்னர் பிஞ்சுகளையும் காய்களையும் கனிகளையும் உண்டனர். அவர்களின் உயிர் பெருகலாயிற்று.
ஏழாம் நாள் மூன்று அடுக்குகொண்ட மாபெரும் வானவில் ஒன்று நீர்வெளியின்மேல் வளைந்து நின்றது. அந்த மீன் அவர்களின் தொட்டியிலிருந்து வெளியேறி நீரை நோக்கி சென்றது. நீரை அது அடையும்வரை சியுஸ்த்ரர் அதற்கு வாளுடன் காவல் சென்றார். அது நீரில் இறங்குவதற்கு முன் திரும்பி தன் வாயில் இருந்து ஒரு பொன்னிறமான சுருளை உமிழ்ந்தது. அந்த மீனுக்குள் கருக்கொண்டு விளைந்த விதை அதுதான். அச்சுருளை அவர் எடுத்துக்கொண்டார். அதில் பதினெட்டு ஆணைகள் இருந்தன. அவை அவரிலிருந்து எழும் குடியை ஆளும் நெறிகள் என அவர் புரிந்துகொண்டார். அங்கே அவருடைய குடி பெருகியது. மீண்டும் குலங்களும் நகர்களும் அரசுகளும் உருவாகி வந்தன. பின்னால் பறந்த பறவைகள் தேன்சிட்டுகளாயின. சிறகு முளைத்த எலிகள் வௌவால்களாக ஆயின. பறக்கும் நாகங்கள் நீள்கழுத்துள்ள வாத்துகளாயின.
மீன்வாய்ப்பொன் என அழைக்கப்பட்ட அந்த ஆணை அக்குடிகளை ஆட்சி செய்தது. குடி பெருகப்பெருக அந்த ஆணைகளுக்கு துணையாணைகள் உருவாயின. அவை பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டு மீன்வடிவப்பேழைகளிலேயே எப்போதும் வைக்கப்பட்டன. அவற்றின் மாற்றுவடிவங்கள் புல்ஓலைகளிலும் களிமண் பலகைகளிலும் எழுதப்பட்டு படிக்கப்பட்டன. என்கியின் ஆலயங்களில் தேவனின் சிலையின் காலடியில் வெள்ளிமீன் பேழை பேணப்பட்டது. ஏதேனும் ஐயமெழுகையில் ஆலயப்பூசகர் முன்னிலையில் அந்தப் பேழை திறக்கப்பட்டு படிக்கப்பட்டது.
“காலம் செல்லச்செல்ல அந்தப் பேழையை படிக்கையில் சிக்கல்கள் எழுந்தன. அனைத்து வினாக்களுக்கும் அதில் விடைகள் இல்லை. ஆகவே அதிலுள்ள சொற்களை விதைகளெனக் கொண்டு பொருளை வளர்த்தெடுத்து முழுமைப்படுத்தும் அறிஞர்கள் தேவையாயினர். அவ்வாறுதான் எங்கள் குடிகள் உருவாயின. நாங்கள் இந்தப் பேழை திறக்கப்படும்போது ஒற்றை எண்ணிக்கையில் அந்த அவையிலமர்வோம். எங்களில் பெரும்பான்மையினர் சொல்வதே இந்நூலின் மெய்யென்று ஏற்கப்படும்” என்றார் தாட்டியஸ்.
யுதிஷ்டிரன் அந்த மீன்பேழையை கூர்ந்து நோக்கினார். அதன்மேல் இருந்த வெள்ளிச்செதில்கள் ஒளிகொண்டிருந்தன. அதன் வைர விழி கூர்ந்து நோக்கியதுபோல் சுடர்ந்தது. “அதைத் திறந்து எடுத்து படியுங்கள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அதை முழுமையாகப் படிக்க எவராலும் இயலாது. ஏனென்றால் அதிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் பிற அனைத்து எழுத்துக்களுடனும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் இணையும் தன்மை கொண்டது. அவ்வாறு அத்தனை எழுத்துக்களையும் கூட்டி அத்தனை சொற்களையும் படிக்கவேண்டும் என்றால் அது கடல் அலைகளை எண்ணுவதுபோல. அதற்கு முடிவில்லாத காலம் தேவைப்படும்” என்றார் தாட்டியஸ். “அதனிடம் நாம் ஒரு வினாவை கேட்கலாம். அதற்குரிய விடையை அச்சொற்களில் இருந்து கண்டடைவதற்கான வழிகள் உள்ளன. சுழற்சகடம் போன்றும் சுழி போன்றும் நாற்சதுரம் போன்றும் இணைமுக்கோணம் போன்றும் வெவ்வேறு வகையில் அமைந்த வடிவங்களுக்குள் அச்சொற்களை அமைத்து நாங்கள் அவ்விடையை கண்டடைவோம்.”
யுதிஷ்டிரன் அவர்களை நோக்கி தன் தாடியை உழிந்துகொண்டிருந்தார். பின்னர் “அறிஞர்களே, உங்கள் வருணனிடம் கேட்டுச் சொல்லுங்கள். எதன்பொருட்டு ஒருவன் தன் தந்தையையும் உடன்பிறந்தாரையும் கொல்லலாம்?” என்றார். யுயுத்ஸு திகைத்தான். யுதிஷ்டிரனின் முகத்தை நோக்கினான். அதில் உணர்ச்சியென ஏதும் வெளிப்படவில்லை. ஆனால் அவருடைய விரல்கள் மஞ்சத்தின் மரவுரியின் நூல்களை கையால் நெருடிக்கொண்டிருந்தன.
அவர்கள் வியப்பெதையும் காட்டவில்லை. தாட்டியஸ் மீன்பேழையை எடுத்து தன் மடியில் வைத்து மேற்குநோக்கி அமர்ந்தார். அதைத் திறந்து அதற்குள் இருந்து பொற்சுவடிகளை வெளியே எடுத்தார். வலக்கையால் தன் ஆடையிலிருந்து சுண்ணக்கட்டி ஒன்றை எடுத்து தரையில் சுழல்வட்டம் ஒன்றை வரைந்தார். அதை குறுக்கும் நெடுக்குமாக கோடுகளால் வெட்டி நூற்றெட்டு களங்களை உருவாக்கினார். இடக்கையால் அந்தச் சுவடியின் எழுத்துக்களை வருடி வருடிப் படித்தார். அவ்வெழுத்துக்களை அக்களத்தில் எழுதினார். பின்னர் சுவடியை அடுக்கி பேழைக்குள் வைத்து மூடி அப்பால் வைத்தார். அவ்வெழுத்துக்களை உற்று நோக்கி அவற்றை சிறுகோடுகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கத் தொடங்கினார்.
முதல் தோமர் மேற்குநோக்கி அமர்ந்து பேழையை எடுத்து அவ்வண்ணமே தன் மடியில் வைத்து திறந்து சுவடிகளைப் பிரித்து இடக்கையால் வருடி வலக்கையால் வரைந்த சகடவடிவக் களத்தில் கட்டங்களுக்குள் எழுத்துக்களை எழுதினார். இளைய தோமர் அதே சகடவடிவக் களத்தை எதிர்திசையில் வரைந்தார். இசாயர் இணைமுக்கோணக் களம் வரைந்தார். சபூரர் சதுரக்களம். சார்பெல் அறுகோணம். அடாமி எண்கோணம். அவர்களின் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. விரல்கள் எழுத்துக்களை சுட்டிச் சுட்டிச் சென்றன. இணைத்தன, பிரித்தன. சொற்கள் தங்கள் வழியில் இணைவுகொண்டன. பிரிந்து மாற்றுருக்கொண்டன. அப்பால் அந்த மீன்பேழை நீரிலிருந்து சற்றுமுன் கரையேறியதென திகைத்த கண்களுடன் நோக்கி அமைந்திருந்தது.
தாட்டியஸ் பெருமூச்சுவிட்டார். “முடிந்தது, அரசே” என்றார். பிறரும் “ஆம், முடிந்தது” என்றனர். யுதிஷ்டிரன் “அறிஞர்களே, நீங்கள் உங்கள் முடிவுகளை ஓலைகளில் எழுதுங்கள்” என்றார். யுயுத்ஸு ஓலைகளையும் எழுத்தாணிகளையும் அளிக்க அவர்கள் வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் அதில் எழுதும் ஓசை அந்த அமைதியில் உடலில் ஊர்வதுபோலக் கேட்டது. “ஓலைகளை இளையோன் கையில் அளியுங்கள்” என்றார் யுதிஷ்டிரன். அவர்கள் அளித்த ஓலைகளை யுயுத்ஸு பெற்றுக்கொண்டான்.
“இளையோனே, அவற்றைப் படி” என்றார் யுதிஷ்டிரன். அவன் அனைத்தையும் படித்தான். “சொல், அவற்றின் முடிவுகள் அனைத்தும் ஒன்றென்றே உள்ளனவா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இல்லை, மூத்தவரே” என்றான் யுயுத்ஸு. “எனில் அந்த ஓலைகளை எரித்துவிடு” என்றார் யுதிஷ்டிரன். கைகூப்பி வணங்கி “அறிஞர்களே, இந்நிலத்திற்கு இன்று மேலும் நெறிகள் தேவையில்லை” என்றார். அவர்கள் திகைப்புடன் எழுந்துகொண்டனர். யுதிஷ்டிரன் எழுந்து நின்று வணங்க அவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். யுதிஷ்டிரன் களைப்புடன் மீண்டும் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு “அந்த ஓலைகளை கொண்டுசென்று தீயிலிடு”என்றார்.