
செயல்
அன்பின் ஜெ..
இன்று காலை நெகிழ்வுடன் விடிந்தது.
மேகாலயா ஐஏஎஸ் அதிகாரியும், நண்பருமான ராம்குமார் பகிர்ந்து கொண்ட கட்டுரையை மனமகிழ்வுடன் படித்தேன்.
மறைந்த ஐஏஎஸ் அதிகாரிகளான எஸ்.ஆர்.சங்கரன் (https://en.wikipedia.org/wiki/S._R._Sankaran), பி.எஸ்.கிருஷ்ணன். (https://indianexpress.com/article/opinion/columns/p-s-krishnan-ias-andhra-pradesh-6129265/), யுகாந்தர் (https://www.thebetterindia.com/195446/bn-yugandhar-ias-hero-father-satya-nadella-microsoft-tribute-india/) – நினைவில் வந்து போனார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையை உண்மையாக உள்வாங்கி, ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற உழைத்தவர்கள். இவர்களைப் போன்ற பல்லாயிரம் அதிகாரிகளின் வியர்வையில் தான் இன்றைய இந்தியா எழுந்து நிற்கிறது.
1988 ஆம் ஆண்டு ஊரக மேலாண் கழகத்தில் படிக்க, 20 ஆயிரம் கல்விக்கடன் தேவைப்பட்டது. பரோடா வங்கி மூலமாக அந்தக் கடன் பெற்றுக் கொள்ளும் வசதியை ஊரக மேலாண் கழகம் தந்திருந்தது. நானும் அப்பாவும், ஈரோடு பரோடா வங்கிக்குச் சென்றோம். அரைநாள் காக்கவைத்து விட்டு, சந்தித்த மேலாளர், உங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. அங்கே மஞ்சள் விளையும்.. உங்களுக்கு லோன் பத்திரத்தில் கையெழுத்துப் போட முடியாது என மறுத்துவிட்டார். இத்தனைக்கும், கடனுக்குக்கான கியாரண்டியை ஊரக மேலாண் கழகம் ஏற்றுக் கொண்டிருந்தது.
பின்னாளில், கல்விக்கடன் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதத் தரவுகளைத் திரட்டிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் வழங்கப்படும் கல்விக்கடன்களில் 50%, தமிழகம், கேரளம் என்னும் இரண்டு மாநிலங்களின் மாணவர்கள் வாங்குகிறார்கள் என்னும் புள்ளிவிவரத்தைக் கண்டு பிரமித்தேன். அதிலும், என் ஈரோடு மாவட்டத்தில், சில வருடங்களில் 100 கோடிக்கும் அதிகமான கல்விக்கடன் பெற உதயச்சந்திரன் ஐஏஎஸ் உதவினார் என இன்னொரு செய்தியும் கண்டேன். எத்தனை ஆயிரம் மாணவர்கள் ஏழ்மையிலிருந்து எழுந்துவந்திருப்பார்கள்? (அவருக்குமே கல்விக்கடன் மறுக்கப்பட்டதாம்…)
இன்னொரு சங்கரனாக, கிருஷ்ணனாக, யுகாந்தராக வரவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
அன்புடன்
பாலா
பி.கு: தன் பணியில் செய்யும் முக்கியமான மக்கள் நலத்திட்டங்களை ஆவணப்படுத்துங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்