பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ரா. கிரிதரன்
சிறுகதைகள் குறித்த ஒரு விவாதத்தை தொடங்குவதென்றாலும் ஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் தமிழ்ச் சிறுகதை மரபு வளமானது என்ற வரியை சொல்லித் தொடங்குவது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. இப்படிச் சொல்ல காரணங்கள் இல்லாமல் இல்லை. தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் வலுவான சிறுகதை ஆசிரியர்களாகவே இருக்கின்றனர். பல்வேற வகைமைகளில் தமிழ்ச் சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன. பல நுண்மைகள் தமிழ்ச் சிறுகதைகளில் பேசப்பட்டுவிட்டன. சிறுகதைகளில் நுண்மைகளைத்தான் பேசவும் முடியும்.
தமிழ் வாழ்வின் பல தளங்கள் தமிழ்ச் சிறுகதைகளில் இன்னமும் எழுதப்படாமல் இருந்தாலும் கூட தொடர்ந்து எழுதப்பட்ட கலைநயம் கொண்ட ஆக்கங்களால் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு செய்நேர்த்தி உருவாகிவிட்டது. கவிதைகளுக்கும் இது பொருந்தும். ஒப்பிட தமிழில் நாவல் என்ற வடிவம்தான் இன்னமும் போதுமான ‘செய்நேர்த்தியை’ எட்டவில்லை என்று சொல்லலாம். ஆகவே தமிழில் சிறுகதை எழுத வரும் எந்தவொரு எழுத்தாளனுக்கும் இங்கு உருவாகி வந்திருக்கும் செய்நேர்த்தி மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எழுத்தாளனிடம் சொல்வதற்கு புதிய களங்கள், புதிய வாழ்க்கைகள் இருக்கலாம். ஆனால் அதைச் சொல்வதற்கான தனிமொழியை கண்டுகொள்ளும் வரை இந்த வளமான சிறுகதை பரப்பு அவனது ஆக்கங்களை புறக்கணிப்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தமிழின் முன்னோடி சிறுகதை எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளை வாசிக்கும்போது அவர்களும் இந்த தடுமாற்றத்துக்கு ஆளாகி இருப்பது தெரிகிறது. இந்த பரப்பில் தனக்கான மொழியை ஒரு ஆசிரியன் கண்டுகொண்டாலும் தன் மொழி மூலம் மட்டுமே முன்வைக்கக்கூடிய பிரத்யேக வாழ்க்கை நோக்கு அவனுக்கு அடுத்தகட்ட சவாலாகிறது. தன் வாழ்க்கை நோக்கை ஆராய்ச்சி செய்யும் களமாக சிறுகதையை ஒரு எழுத்தாளன் கொள்ள முடியாது. சிறுகதை எல்லைகள் கொண்ட வடிவம். ஆகவே ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு மொழி மற்றும் வாழ்க்கைநோக்கு இரண்டும் சார்ந்த தெளிவு ஒரு நாவலாசிரியனை விட சற்று கூடுதலாகவே தேவையாகிறது என்று சொல்லலாம்.
பொதுவாக முதல் தொகுப்பினை வெளியிட்ட எழுத்தாளர்களைப் பற்றி பேசும்போது விமர்சகர்கள் இந்த இரண்டு விஷயங்களை வெவ்வேறு வகைகளில் குறிப்பிடுவதை நம்மால் அவதானிக்க இயலும். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர்களின் தொகுப்பினை அடுத்தடுத்து வாசிக்கும்போது மொழியையும் வாழ்க்கை நோக்கையும் அவர்கள் தொடர்ந்து தீட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களுடைய மொழியின் வழியாக கண்டறிந்த வாழ்க்கை நோக்கின் காரணமாக ஒரு குறிப்பிட்ட எல்லையில் நின்றும் விடுகின்றனர். ஒரு எழுத்தாளனுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு முத்திரை உருவாவது எழுத்திற்கு கிடைக்கும் ஒரு மறைமுக அங்கீகாரம் என்றாலும் கூட அதன்பிறகு அவர்களுடைய எழுத்தில் பன்மையை எதிர்பார்க்க இயலாமல் ஆகிவிடுகிறது. பல்வேறு விதமான கதைகளை எழுதிப் பார்க்க வேண்டும் என்ற எத்தனம் உடையவர்கள் ‘வகைமைகளில்’ மட்டுமே கவனம் செலுத்துவதால் எழுதும் கதையில் கலைத்தன்மை கூடாமல் போவதும் நிகழ்கிறது.
“காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” கிரிதரனின் முதல் தொகுப்பு. ஆனால் முதல் தொகுப்பில் காணக்கிடைக்கும் மேற்சொன்ன எந்தக் குறைகளையும் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணமுடிவதில்லை. தனித்த வாழ்க்கை நோக்கும் மொழியும் கொண்ட கதைகளாக இவை இருக்கின்றன. கதைகளின் தளமும் வரலாறு, அறிவியல், இசை, புலம்பெயர் வாழ்க்கை என பல பரிணாமம் கொண்டதாக இருக்கிறது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இப்படி வெவ்வேறு பரிணாமங்களுக்குள் ஆழமாக நுழையும் போதே கலைத்தன்மை கைகூடும் கதைகளாக இத்தொகுப்பில் உள்ள கதைகள் உள்ளன.
கிரியுனுடைய கதையுலகின் தனித்தன்மையை உருவாக்குவது கதைக்குப் பின்னிருக்கும் வரலாற்று நோக்கில் வெளிப்படும் தனித்தன்மைதான். பொதுவாக வரலாற்று நோக்கிலான புனைவுகள் நிலைபெற்றுவிட்ட வரலாற்றின் இடைவெளியை நிரப்புகிறவையாக இருக்கும். வரலாற்றுப் புனைவுகளின் தேவையும் அதுதான். புனைவாக வாசிக்கப்படாதவரை அல்லது புனைவுத்தன்மையிலான எழுத்தின் வழியாக வரலாறு வாசிக்கப்படாதவரை அதுவொரு உயிரற்ற தகவல் வெளியாக மட்டுமே நம் பிரக்ஞையில் பதிந்துள்ளது. ஒரு தேர்ந்த புனைவெழுத்தாளன் ஒரு வரலாற்றுப் பரப்பை விசாரிக்கத் தொடங்கும்போதுதான் வரலாறு உயிர்பெறத் தொடங்குகிறது என்று சொல்லலாம். இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் இந்த வரலாற்றுப் பிரக்ஞை ஒரு தீர்க்கமான பின்புலத்தை கட்டமைக்கிறது. பொதுவாக வரலாற்றுப் புனைவுகள் ஒரு நிதானமான மொழியில்தான் எழுதப்பட இயலும். தரவுகளை கணக்கில் கொண்டே அவற்றின் புனைவுத்தளம் விரியவும் இயலும். ஆகவே வரலாற்றுப் புனைவுகளுக்கு யதார்த்தவாத கூறல்முறை ஏதுவானதாக இருக்கிறது. கிரிதரன் இந்த தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் இந்த யதார்த்த கூறல் முறையைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் அவரது தனித்திறன் இந்த யதார்த்தத்தைக் கூறலை ஊடறுக்கும் ஒரு அம்சத்தை கதையில் சேர்ப்பதுதான்.
தொகுப்பின் முதல் கதையான ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை’ நாசி ஜெர்மனியால் சிறைபிடிக்கப்பட்ட ஆலிவர் மெஸ்ஸையன் என்ற இசைக்கலைஞர் சிறையில் இருந்தபடியே எழுதிய இசைத்தொகுப்பினை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. கதை முழுக்க கைதிகளின் துயரமும் இசைக்கலைஞனின் தவிப்பும் பேசப்படுகிறது. ஆனால் இக்கதையின் பின்புலத்தில் ஒரு வரலாறு இருக்கிறது.
‘நீர்பிம்பத்துடன் உரையாடல்’ என்ற கதையை நம்மிடம் சொல்வது ஒரு பிரஞ்சு அரசு குடும்பத்தின் ஓவியம்.சந்திரநாகூர், புதுச்சேரி, மொரீஷியஸ் என்று அந்த ஓவியம் பயணிக்கும் இடமெல்லாம் கதை விரிகிறது. ஒரு அரச குடும்பத்தின் எழுச்சி, வீழ்ச்சி, அதிகாரப் பரிமாற்றம் என்று அனைத்தும் அந்த ஓவியத்தின் பார்வையில் சொல்லப்படுகிறது.
காந்தியின் மரணத்தை முன் கணிக்கும் ஒரு ஜோதிடரின் வழியாக ‘மரணத்தை கடத்தல் ஆமோ’ என்ற கதை சொல்லப்படுகிறது. வன்முறையான வழியில்தான் காந்தி இறப்பார் என்று அந்த ஜோதிடர் கணித்துச் சொல்கிறார். அந்த கணிப்பு காந்தியினுள் ஏற்படுத்தும் அலைகழிப்புகளைச் சொல்வதாக இக்கதை நகர்கிறது. வரலாற்றினை சார்ந்து இத்தொகுப்பில் எழுதப்பட்டுள்ள கதைகளில் இசை, மாயத்தன்மை என்று ஒரு அம்சத்தை கூடுதலாக சேர்ப்பதன் வழியாக இக்கதைகளை ஆசிரியர் நமக்கு அணுக்கமானவையாக மாற்றுகிறார்.
‘நந்தாதேவி’ என்ற கதை நந்தாதேவி மலைச்சிகரத்தில் ஏறும் குழுவின் ஒரு நாளினை விவரிக்கிறது. கதைக்களத்தின் நுண்தகவல்கள் கதைப்போக்கினை உறுத்தாமல் சொல்லுதல் என்பது கிரிதரனின் மற்றொரு முக்கியமான பலம். இந்தக் கதையை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மலையேற்றத்தில் உதவும் ஷெர்பாக்களின் வாழ்வியல் உட்பட மலையேற்றத்தின் ஒவ்வொரு கணுவையும் இக்கதை துல்லியமாக விவரிக்கிறது. கதைசொல்லி ஓநாய்களிடம் சிக்கித் தப்புவதும் பனிப்பிளவில் அவனுடைய குழு சிக்கிக் கொள்வதும் மிகுந்த துல்லியத்துடன் எழுதப்பட்டுள்ளன.
பார்ஸிக்கள் தங்களுடைய சமூகத்தில் இறப்பவர்களை ஒரு கோபுரத்தின் உச்சியில் வீசி விடுவது வழக்கம். கழுகுகள் அவர்களை தின்றுவிடும். இந்த நம்பிக்கையை மையமாகக் கொண்டு ‘மௌனகோபுரம்’ என்ற கதை சற்றே பகடி தொனிக்க எழுதப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் ஒரு அறிபுனைவுக்கதையும் இருக்கிறது. ‘பல்கலனும் யாம் அணிவோம்’ என்ற அக்கதை உடல் கடந்த பிரக்ஞை நிலையாக மனிதன் நிலை கொள்ள இயலுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்கிறது. அப்படி பிரக்ஞை நிலையாக மாறும் போது சுயத்துடன் தொடர்புடைய மனித உறவுகள் சார்ந்து அகத்தில் ஏற்படும் தத்தளிப்புகளையும் இக்கதை பேசுகிறது.
‘இருள் முனகும் பாதை’ கணவன் மனைவியான இரண்டு இசைக் கலைஞர்கள் குறித்த கதை.
ராபர்ட் ஷுமன் இசையை ஆன்மீக தளத்தில் பொருள்படுத்த விரும்புகிறார். அவருடைய இளமை முதலான வாழ்க்கையும் அவ்வாறே அமைந்திருக்கிறது. ஆனால் கிளாராவுக்கு இளமை முதலே இசை வெல்லப்பட வேண்டிய ஒன்றாக தீவிர பயிற்சியின் வழியாக மட்டுமே அடையக்கூடியதாக இருக்கிறது. கிளாராவின் வாழ்வு இசை வழியாக புகழ் பெறுதல் என்பதை நோக்கியதாக அமைந்திருக்கிறது. கலையின் உன்னதத்தை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக கிளாராவின் பாத்திரம் வலிந்து எதிர்த்தன்மையுடையதாக சித்தரிக்கப்படாதது இக்கதையின் முக்கிய அம்சம். ஷுமன் மற்றும் கிளாராவின் பிரத்யேக வலியை இக்கதை மிகச் சரியாக பிரதிபலிக்கிறது. இத்தொகுப்பின் சிறந்த கதை என்று இருள் முனகும் பாதையைச் சொல்லலாம்.
முன்பே சொன்னது போல கிரியின் கதைகள் மிகத் தீவிரமானதொரு களத்தினை எடுத்துக்கொள்ளும்போது மட்டுமே தனித்தன்மையை அடைகின்றன. இத்தொகுப்பில் உள்ள திறப்பு, தர்ப்பை, நிர்வாணம் போன்ற கதைகள் தன்னளவில் முழுமையான கதைகள் என்றாலும் தமிழில் எழுதப்படும் நேர்த்தியான கதைகளில் இடம்பெறக் கூடியவையாக நின்று விடுகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஒருவரின் பார்வையும் அது சார்ந்த அலைகழிப்புகளும் பல கதைகளில் பின்புலத்தை கட்டமைக்கின்றன என்றாலும் அந்நியப்பண்பாடுகளில் நுண்தகவல்கள் வழியே நிகழ்த்தப்பட்டிருக்கும் ஊடுறுவல் உணர்வுத்தளத்தில் நிகழாததான ஒரு தோற்றத்தை பல கதைகள் அளிக்கின்றன.ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் கிரிதரனின் பல்வேறு வகைமைகளில் கதைக்களத்தை அமைக்கும் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகிறவையாக அமைந்துள்ளன. வளமான தமிழ்ச் சிறுகதை பரப்புக்கு ஒரு முக்கியமான வருகை என கிரிதரனின் இத்தொகுப்பினைச் சொல்லலாம். அரிதான வருகை என்றும்.