பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 5
தொலைவில் பீதர்நாட்டு எரிமருந்து நிறைக்கப்பட்ட பூத்திரிகள் சீறி எழுந்து வானில் வெடித்து மலர்களென விரிந்து அணைந்தன. அவற்றின் ஓசை சற்று நேரத்திற்குப் பின் வந்து மலர்மொக்கு உடைவதுபோல செவிகளில் விழுந்தது. கோட்டை மேலிருந்த காவல்வீரர்கள் தங்கள் படைக்கலங்களை தூக்கி வீசி ஆர்ப்பரித்தனர். பெருமுழவுகள் உறுமத்தொடங்கின. ஒன்று தொட்டு ஒன்றென நகரெங்கும் முரசுகள் ஓசையிட, தெருக்களில் நிறைந்திருந்த மக்கள் உடன் இணைந்து ஒலியெழுப்பினர்.
மிக விரைவிலேயே அவர்கள் அனைவரும் அஸ்தினபுரியின் வெற்றியை தங்கள் வெற்றியாக கருதத் தொடங்கியிருப்பதை யுயுத்ஸு கோட்டை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். எளிய மக்கள், தங்கள் வாழ்வில் வெற்றி என ஒன்றை உணராதவர்கள். வெற்றியின் பொருட்டே அவர்கள் வெல்பவர்களை வழிபடுகிறார்கள், அவ்வெற்றி தங்கள் வெற்றியென கொண்டாடுகையில் வாழ்வை பொருட்செறிவு கொண்டதாக ஆக்கிக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு அத்தலைவர்களின் கொடுமைகளைக்கூட பொறுத்துக்கொள்கிறார்கள். தங்கள் தலைவர்களின் தோல்வியில் உளம் சோர்கிறார்கள். ஆனால் மிக விரைவிலேயே தோற்றவர்களை விட்டு விலகிவிடுகிறார்கள். அவர்களை தங்களிலிருந்து இயல்பாக அகற்றிக்கொள்கிறார்கள். எச்சமின்றி மறக்கவும் அவர்களால் முடியும்.
அவன் நகரெங்கும் அலையடித்த உடற்பெருக்கை விழிமலைத்து நோக்கிக்கொண்டு இடையில் கைவைத்து நின்றான். அவன் ஆடை எழுந்து பறந்தது. அன்று புலரியில்தான் அவன் கங்கைக்கரையில் இருந்து நகருக்குள் நுழைந்திருந்தான். திரௌபதி நகர்நுழைந்த பின்னர் கங்கைக்கரையில் அவன் மேலும் தங்கி, அங்கு வந்தடைந்த இந்திரப்பிரஸ்தத்தின் படகுகளிலிருந்த பொருட்கள் அனைத்தையும் முறையாக ஏற்றி அஸ்தினபுரிக்கு அனுப்பினான். அனைத்து ஒருக்கங்களையும் முடித்துவிட்டுத்தான் அவன் கிளம்ப முடிந்தது. ஒவ்வொரு பணியாக வந்துகொண்டிருந்தது. வந்தடைந்த பொருட்களின் பட்டியலும் ஏற்றியனுப்பப்பட்ட பொருட்களின் பட்டியலும் இசைவுகொள்ளவில்லை. அங்கும் இங்கும் வெவ்வேறு உளைநிலைகளைக் கொண்டவர்கள் இருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தவர்கள் சிறியனவற்றையும் கணக்கு வைத்தனர். அஸ்தினபுரியில் இருந்தவர்கள் அவற்றை பொருட்படுத்தவில்லை. “இந்திரப்பிரஸ்தம் அன்னை, அஸ்தினபுரி தந்தை. அவர்களிடையே ஊடலும் ஆடலும் ஒரு போதும் முடிவடையாதவை” என்று முதிய குகன் சொன்னான்.
முந்தைய நாளிரவு அஸ்தினபுரிக்கு கிளம்பும்போது அவன் உடல் சோர்ந்து சலித்திருந்தது. அதையும் மீறி அஸ்தினபுரியை வந்தடைந்துவிடலாம் என்று எண்ணி அமர்ந்தவன் முற்றிலும் மயங்கி துயின்றுவிட்டிருந்தான். அஸ்தினபுரியை வந்தடைந்தபோது விடிவதற்கு ஒருநாழிகையே எஞ்சியிருக்கிறது என்றார்கள். துயிலவேண்டும் என எண்ணியிருந்தான். ஆனால் தேரில் துயின்றதே போதுமென்று தோன்றியது. அஸ்தினபுரிக்குள் நுழையும் நகுலனை வரவேற்க அரசகுடியினர் என்று துச்சளையின் மைந்தர்கள் செல்வதாக சொன்னார்கள். நன்றல்லாதது ஏதோ நடக்கக்கூடும் என அவனுடைய அகம் சொன்னது. ஆகவே நேராக சென்று நீராடி ஆடை மாற்றி அணிந்து கோட்டைமுகப்பிற்கே வந்துவிட்டிருந்தான்.
கீழே சூதர்கள் அஸ்தினபுரியின் மாமன்னர்களின் வெற்றியை பாடுவதை மேலிருந்து அவன் கேட்டுக்கொண்டிருந்தான். வீரர்கள் ஒவ்வொருவரின் சொற்புகழும், களவெற்றியும், மைந்தர் சிறப்பும் பாடலென எழுந்து அருகே நின்றிருந்தன. இவ்விருளில், விண்மீன்கள் சூழ்ந்த இத்தனிமையில், அருகே பிறிதொரு ஒழுக்கு என அந்த அழியா வாழ்வு நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. படைவீரர்கள் அனைவரும் அசைவிலாது காவல்மாடங்களிலும், கோட்டை விளிம்புகளிலும், படிகளிலும் நின்று அதை கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களில் பலர் அந்தக் கதைகளை முதல்முறையாக கேட்பவர்கள். கோட்டையை ஒட்டி கைவிடுபடைகளை நீக்கிவிட்டு அமைக்கப்பட்டிருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களுக்கு முன்னால் அமர்ந்து ஏவலரும் அணிச்சேடியரும் அதை செவிமடுத்தனர்.
அங்கிருந்து நோக்கியபோது அவர்கள் அனைவருமே நிழல்களென மாறிவிட்டிருப்பதுபோல் தோன்றியது. நீர்த்துளிகள்போல் அவர்கள் கண்கள் மின்னுவதை காண முடிந்தது. அவர்களின் உளஎழுச்சி இருளை அதிரச் செய்வதுபோல. யுயுத்ஸு ஒருகணத்தில் ஒரு சிறு நிறைவின்மையை உணர்ந்தான். அது அவன் உடலில் ஓர் அசைவென வெளிப்பட்டது. இருவர் திரும்பி நோக்கிய பின்னர்தான் அவ்வண்ணம் தன் உடலில் ஒன்று எழுந்ததை உணர்ந்தான். அதை அடக்கிக்கொண்டு தன் மேலாடையை சீர் செய்து முகத்தை கைகளில் தாங்கிக்கொண்டு அமர்ந்தான். அவனுள் எழுந்த அந்த ஒவ்வாமை அவன் அதை திரும்பிப் பார்த்ததுமே வளர்ந்து பெருகலாயிற்று. பெருவீரர்கள் பெருவீரர்கள் என்று அவன் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. யயாதி, நகுஷன், ஆயுஷ், குரு, ஹஸ்தி, பிரதீபன்…
அவன் தலையை உலுக்கி இருள்நோக்கி முகம் திருப்பிக்கொண்டான். இந்த ஒவ்வாமை எங்கிருந்து எழுகிறது? இது என்னை அச்சுறுத்துகிறது. எனில் இது எழுவது நன்றல்ல. என்னிலிருந்து நான் விரும்பாத பிறிதொரு தெய்வம் எழுந்து முன் நிற்கிறது. இந்த வீரர்கள் அனைவரும் அஸ்தினபுரியின் அரண்மனையில் பழைய சுவரோவியங்களாக வரையப்பட்டிருந்தனர். அவர்களின் மேல் காலம் படிந்து மறைத்து மங்கலான வண்ணத் தீற்றல்களாக ஆக்கியிருந்தது. அவற்றை எவரும் நோக்குவதில்லை. எப்போதாவது எங்கேனும் அமர்ந்து இயல்பாக சுவரை வெறித்துக்கொண்டிருந்தால் அவர்களின் விழிகள் துலங்கி நோக்கு வந்து தொடும். திடுக்கிட்டு விழிவிலக்கிக்கொண்டு அவன் எழுந்துகொள்வான். அவர்களில் சிலருடைய அணிகள், சிலருடைய படைக்கல ஒளிகள், சிலருடைய சிரிப்புகள் அவ்வாறு நீரடியிலிருந்து வெள்ளி மீன் எழுவதுபோல தோன்றி மறைவதுண்டு. முழுத் தோற்றமாக அவர்கள் துலங்கியதே இல்லை.
அப்போது யுதிஷ்டிரன் அவர்களை பெரிய ஓவியங்களாக அரண்மனைச் சுவர்களெங்கும் வரையச் சொல்லியிருந்தார். அவர்கள் மழையில் முளைத்தெழுந்தவர்கள்போல பேருருவம் கொண்டனர். அரண்மனைக்குள் அவர்களின் நோக்கு நிறைந்திருந்தது. ஆணையிடும் நோக்கு. எச்சரிக்கும் நோக்கு. ஐயமும் சினமும் கொண்டது. பிரதீபனின் நோக்கிலிருந்தது அதற்கப்பால் பிறிதொன்று. துயரோ கசப்போ திகைப்போ அன்றி பிறிதோ. எவ்வண்ணமோ அவர் தன் குலத்தின் அழிவை முன்கண்டிருக்கக் கூடும். நிகழப்போவதை மூன்று தலைமுறைக்கு முன்னாலேயே நிமித்திகர் கூற முடியும் என்பார்கள். பாரதவர்ஷத்தின் தலைசிறந்த நிமித்திகர்கள் நிறைந்த அவையில் அது எழாமல் இருந்திருக்காது. சந்துனுவின் மைந்தர்களின் ஊழையேனும் அவர் அறிந்திருக்கக்கூடும்.
அவ்வரண்மனையில் உலவும் பெண்டிர் எவ்வாறு உணர்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டான். அவர்கள் சுனந்தையை தபதியை அம்பாலிகையை அம்பிகையை அறிந்திருக்கிறார்களா? அவ்வோவியங்களின் ஊடாக நடக்கும்போது சுவர்களை முற்றிலும் தவிர்த்து தன் கால்களை நோக்கி நடப்பது அவன் வழக்கமாயிற்று. சுவர்களிலிருந்து நோக்குபவர்களிடமிருந்து ஒலிக்கும் அகச்சொற்கள் அவன் பிடரியைத் தொட்டு மெய்ப்பு கொள்ளச் செய்தன. சம்வகையிடம் “அவர்கள் இறந்தபின் மேலும் ஆற்றல் கொள்கிறார்கள். இந்த அரண்மனைக்குள் அவர்களிடமிருந்த சிலவற்றைப் பெற்று நட்டு பயிரிட்டு வளர்த்திருக்கிறார்கள். என்றேனும் இது தீப்பிடித்து எரிந்தழியுமெனில் மட்டுமே இவர்கள் முற்றழிவார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். பின்னர் கசப்புடன் “அவ்வாறும் கூற முடியாது. அவர்கள் இங்கிருந்து நுண்வடிவில் எழுந்து காற்றை நிறைக்கலாம். அனல் சென்று பற்றிக்கொள்ளும் அனைத்து இடங்களுக்கும் தாங்களும் சென்று குடியேறலாம்” என்றான்.
“இது என்ன பேச்சு?” என்று அவள் மெல்லிய குரலில் கூறினாள். “மங்கலம் நிறைந்திருக்கும் இந்த அரண்மனை…” என்று அவள் மேலும் சொல்ல யுயுத்ஸு சீற்றத்துடன் “வீரம் என்பது மங்கலமல்ல, அது கொலைக்குருதி” என்றான். “செல்வம் என்பது மங்கலம், வீரமின்றி செல்வமில்லை” என்று அவள் சொன்னாள். அவன் அவளை ஒருகணம் திரும்பி நோக்கிவிட்டு “இவர்கள் ஒன்றோடொன்று தொடுக்கப்பட்ட இரும்புக்கண்ணிகள். பெரும் சங்கிலிபோல் இந்நகரை ஆயிரம் ஆண்டுகளாக பிணைத்திருப்பவர்கள்” என்றான். அவளது துணுக்குற்ற விழிகள் அவனை நோக்கிக்கொண்டிருந்தன. “இந்த யானை இன்னமும் காட்டை நினைவில் வைத்திருப்பது. சங்கிலிகள் யானையை ஒருபோதும் முழுக்கத் தளைப்பதில்லை என்பது மதங்கநூலின் மெய்மை” என்றான் யுயுத்ஸு. அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவள் பேசுவதை எதிர்பார்ப்பதுமில்லை.
“ஒரு ஷத்ரிய அரசமைந்தனுக்கு இப்பெயர்களை சொல்லிச் சொல்லி தனக்கு ஆற்றல் ஏற்றிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கலாம். பிறருக்கு அவை அச்சத்தை மட்டுமே ஊட்டுகின்றன. ஷத்ரியர்களின் ஆற்றல் என்பது என்ன? அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலப்பெருமையால் பீடம் பெற்றவர்கள். அக்குலப்பெருமை அவர்கள் சமைத்துக்கொள்ளும் தொல்வரலாற்றால் ஆனது” என்று அவன் மீண்டும் சொன்னான். “ஆகவே வரலாற்றை அழிக்காமல் ஷத்ரியர்களை வெல்ல முடியாது. வரலாறே மண்ணுள் இருக்கும் வேர்த்தொகை. அதிலிருந்து முடிவிலாமல் முளைத்தெழுவார்கள். ஆகவேதான் மூத்தவர் அழிந்த வரலாற்றை மீண்டும் ஒளியுடன் வரைந்து எழுப்புகிறார்.” சம்வகை ஒன்றும் சொல்லாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். “அச்சத்தால் உருவாகும் கோன்மை… ஒருவேளை கோன்மை என்பதே அச்சத்தின் ஒரு வடிவம்தான் போலும்.”
அவன் அருகிலிருந்த நகுஷனின் ஓவியத்தை சுட்டிக்காட்டினான். “இங்கு இன்றுள்ள மக்கள் இவ்வீரர்களை வெறும் சொற்களாகவே அறிந்திருக்கிறார்கள். இதோ இப்போது திசைவென்று செல்வத்துடன் நுழையும் நகுலனைக்கூட அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அவர் கதைகளைக் கலந்து அவரை வரைந்துகொண்டிருக்கிறர்கள். அவர்களின் கற்பனையில் அவர் நான்கு கைகளும் கோரைப்பற்களும் கொண்டவராக இருக்கலாம். மின்படையும் விற்படையும் ஏந்தி முகில்களில் ஊர்பவராக இருக்கலாம்” என்றான். சொல்லச்சொல்ல அவனுடைய கசப்பு மிகுந்து வந்தது. “மக்கள் தேடுவது யாரை? தங்கள் பொறுப்பை தாங்கள் சுமக்க இயலாதென்பதையே ஒவ்வொரு எளிய குடியும் நம்மிடம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. பிற அனைவருடைய அச்சங்களையும் ஐயங்களையும் தனிமைகளையும் போக்கும் ஒருவன் மானுடரில் எழவேண்டும் என அவர்கள் விழைகிறார்கள். எல்லா சுமைகளையும் தான் ஏற்றிக்கொள்பவன். தெய்வமாக மாறி பேருருக்கொண்டு அவர்களை காப்பவன், காக்கும் பொருட்டு அவர்களை அவன் அழிக்கவும் செய்யலாம்.”
யுயுத்ஸு முதல் எரியம்பின் ஒலியைக் கேட்டபோது தன்னுள் கசப்பு ஊறி நிறைந்திருப்பதை உணர்ந்தான். மேலும் மேலும் பூத்திரிகள் வெடிக்க இருண்ட வானில் தொட்டாற்சிணுங்கி மலர்களென, மந்தார மலர்களென, அடுக்ககடுக்கான தாமரைகளென செந்நிறமும் பொன்னிறமும் கொண்ட அனல் மலர்கள் இதழ் விரித்து சுடர்கொண்டு இருண்டு அமைய முதிய சூதர் தன் பாடலை நிறுத்தினார். முதலில் அவர் உதடுகள் பாடிக்கொண்டிருந்தன. பின்னர் அவர் உதடுகள் மட்டுமே அசைவதாகவும் அதைக் கொண்டே அருகிருந்த இளைய சூதன் பாட்டெடுப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது. பின்னர் அவர் பாடவே இல்லை, அவர் உள்ளிலிருந்து இளையோன் பாடலை எடுத்துக்கொண்டான். அவன் தன் அகத்தையே சொல்லாக்கிப் பாடுவதை வியப்புடன் பேருவகையுடன் அவர் விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாடலினூடாக தான் சென்று கொண்டிருந்தார்.
முரசு முழங்கத்தொடங்கியதும் முதிய சூதர் இளையவரின் தோள் பற்றி எழுந்து முதற்கோயிலில் அமர்ந்த சொல்லன்னையை வணங்கினார். இளையோன் அவரை பற்றிக்கொண்டு வந்து சூத நிரையின் முகப்பில் நிறுத்தினான். யுயுத்ஸு படிகளினூடாக கீழிறங்கி வந்து அவர்களை அணுக இளையோன் தலைவணங்கி நின்றான். யுயுத்ஸு திரும்பிப்பார்க்க சுதமை அருகே பெரிய தாலத்தில் பரிசில்களுடன் வந்து நின்றாள். பட்டில் முடிந்த பொற்காசுகளை எடுத்து இளைய சூதனுக்கு அவன் வழங்கினான். மேலும் பெரிய கிழியை எடுத்தபடி திரும்பிய போது முதியவரின் விழிகள் தன் மேல் நிலைகொண்டிருப்பதை அவன் கண்டான். அதிலிருந்த கசப்பைக் கண்டு திகைத்து அவன் கை ஒருகணம் தாழ்ந்தது. பின்னர் புன்னகைத்தபடி “பெறுக, சூதரே! பெருவீரமும் குடிமாண்பும் அழிவதில்லை என்று இங்கு சொல்லால் நிலைநாட்டினீர்கள்” என்றான்.
ஆனால் முதியவர் இரு கைகளையும் நீட்டவில்லை. அவர் விழிகள் வஞ்சம் கொண்டு சினந்து அவனை நோக்கின. அவன் மீண்டும் கிழியை நீட்ட இளையவன் அவற்றை பெற்றுக்கொண்டு “களைத்திருக்கிறார். அவர் உள்ளம் இங்கில்லை” என்றான். “ஆம், அவர் விழிகள் அதையே காட்டுகின்றன” என்றபின் பிற சூதர்களுக்கும் பரிசில் கிழிகளை வழங்கினான். அவன் மேல் அவருடைய நோக்கு நிலைத்திருந்தது. அவர் வேறெங்கோ இருந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தார். அவன் அவர் நோக்கை விலக்கி திரும்பிக்கொண்டு சுதமையிடம் “அனைத்தும் ஒருங்கிவிட்டன அல்லவா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.
அணிப்படைகள் ஏழு நிரைகளாக கோட்டையின் முகப்பு நோக்கி செல்லத்தொடங்கின. அவற்றை வழி நடத்திச் சென்ற சம்வகையின் கவசமணிந்த உருவம் புலரியின் இருளில் பந்தங்களின் வெளிச்சத்தில் உருகும் உலோகத்துளி என தெரிந்தது. அவன் தன் மேலாடையை சீரமைத்துவிட்டு கோட்டைமுகப்பு நோக்கி நடந்தான். மங்கலச்சேடியர் வெளிமுற்றத்தில் அணிவகுத்தனர். வேதியர் தங்கள் பொற்குட நீருடன் நின்றனர். இசைச்சூதர்கள் இசைக்கலங்களுடன் தங்கள் இடங்களில் அமைந்தனர். அவன் முன்பு சௌவீரநாட்டுப் படையெடுப்புக்குப் பின் பாண்டவர்கள் அவ்வண்ணம் வந்ததை நினைவுகூர்ந்தான். அந்தக் கிழக்கு வாயிலினூடாக மீளமீள அவர்கள் வெற்றிக்கொடியுடன் நுழைந்துகொண்டே இருக்கிறார்கள்.
முற்றத்தை நோக்கி நடந்தபோது ஒருகணத் திரும்பலில் தெரிந்தது, அவன் அவர் விழிகளில் கண்டது அந்தக் குலமூதாதையரின் நோக்கைத்தான் என. ஓவியங்கள் அனைத்திலும் அவர்கள் அதை வரைந்து நிலைநிறுத்தியிருந்தார்கள். வரைந்தவர்கள் கலிங்கத்து ஓவியர்கள். பழைய ஓவியங்களிலிருந்து அதை பகர்ப்பு எடுத்து வரைந்திருக்கிறார்கள். ஓவியங்களிலிருந்து ஓவியங்களுக்கு அந்நோக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஓவியங்களே அழிந்தாலும் காவியச் சொற்களில் அவை இருக்கும். காவியங்கள் அழிந்தாலும் நினைவில் இருக்கும். நினைவுகள் அழிந்தாலும் கொடிவழிகளின் விழிகளில் எவ்வகையிலோ குடிகொண்டிருக்கும். அவன் மூச்சடைப்பதாக உணர்ந்தான். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தொண்டையில் ஒரு துவர்ப்பை உணர்ந்தான். காய்ச்சல் வரவிருக்கிறதா? அன்றி வெறும் துயில் கலக்கம்தானா? காற்றில் பறக்கும் மேலாடையை இழுத்துச் செருகி கைகளை மார்பில் கட்டியபடி அவன் நோக்கி நின்றிருந்தான்.
தொலைவில் பூத்திரிகள் எழுந்தெழுந்து வெடித்தன. முரசொலிகளும் கொம்பொலிகளும் வலுத்துக் கேட்டன. மக்கள் ஆர்ப்பரிக்கும் ஓசை. காடுகளிலிருந்து பறவைகள் கலைந்தெழுந்து வானில் சுழன்று பறந்து கூக்குரலிடலாயின. விண்மீன்கள் குளிர்ந்து நீர்த்துளிகள்போல வானெங்கும் ததும்பி, சிறு உலுக்கலில் பொழிய காத்து நின்றிருந்தன. குளிர்காற்று அனைத்துத் துணிகளையும் கொடிகளையும் மணிகளையும் அசைத்தபடி கடந்து சென்றது. மிக அருகே ஒரு பூத்திரி வெடித்தது. அவ்வெளிச்சத்தில் அவன் காடு சுடர்ந்தணைவதை கண்டான். காட்டுக்குள் இருந்து கீரிகள் சில பதறி ஓடி முற்றத்திற்கு வர சிலர் கூச்சலிட்டு அவற்றை துரத்தினர். பலநூறு படைக்கலங்களின் முனைகளில் செந்துளிகள் எழுந்து எழுந்து அணைந்தன.
அணுகிக்கொண்டிருக்கும் நகுலனின் படைகளைக் கண்டு முற்றத்தில் நின்றிருந்த படைகள் உளஎழுச்சி கொண்டன. அணிவகுத்து நின்றிருந்தபோதும் கூட அவர்கள் உடலில் அவ்வெழுச்சியை வெளிக்காட்டாமலிருக்க முயலவில்லை. அப்படைநிரையே யாழ்நரம்புகள் என அதிர்ந்துகொண்டிருந்தது. சற்றே தொட்டால் சீறும் நாகமென உடல் சுருட்டி பத்தி எழுப்பிவிடும் என்று தோன்றியது. படைகளை கிளர்ந்தெழச் செய்வது வெற்றி. வெற்றியைவிட செல்வம். செல்வத்தைவிட சூறையாடல். அவர்கள் இவ்வுலகை வெல்ல விழைகிறார்கள். உலகை வெல்ல, ஆட்கொள்ள, சூறையாட ஒவ்வொரு ஆணுக்குள்ளும் எழுந்த விழைவை தனித்துப் பிரித்து திரட்டி உருவாக்கியதே படை என்பது. வஞ்சத்தையும் சினத்தையும் பிரித்து தனித்துத் திரட்டி உலோகத்தில் வார்த்தவையே படைக்கலங்கள்.
யுயுத்ஸு அந்தப் படைக்கலங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். உடைவாட்கள் உறைகளுக்குள் பொறுமையிழந்து அதிர்ந்தன. வேல்முனைகள் பசித்த நாவுகளென நெளிய முற்பட்டன. கூர்கள் ஒவ்வொன்றும் குருதி குருதி என்றன. இறுக்கங்கள் ஒவ்வொன்றும் எழுக எழுக என்றன. இந்த நகரம் படைக்கலமின்றி அமையாது என்று அவன் சொல்லிக்கொண்டான். இது பாரதவர்ஷத்தின் கோபுர உச்சிக்குடம். படைக்கலங்களால் உருவானவை நகர்கள். நகர்களின் உச்சமென எழுந்த இது படைக்கலங்களால் சமைக்கப்பட்டது. படைக்கலங்களால் இவை நிறுத்தப்படும். இங்கு இனி குருதி விழலாகாதென்று யுதிஷ்டிரன் கூறினார். இனி இங்கு போரில்லை என்றார். இனி நெடுங்காலம் இது போரை பார்க்காமலிருக்கலாம். ஆனால் அது அமைதி அல்ல, நிகழ்ந்த போரில் ஈட்டியவற்றைக் கொண்டு வாழும் ஒரு சோம்பல் வாழ்வு. ஒரு தலைமுறை, அன்றி இன்னொரு தலைமுறை, மூன்றாம் தலைமுறையிலேனும் மீண்டும் இது குருதி சிந்தியாகவேண்டும். இத்தெருக்கள், இக்கோட்டை, இவ்வரண்மனை முகடுகள் குருதியின்றி அமையா. தன் குருதி, பிறர் குருதி…
அங்கிருந்து கிளம்பி ஓடிவிடவேண்டுமென்று அவன் விரும்பினான். தனக்குரியது காடுதான். காடல்ல, எளியோர் நிறைந்த மன்று. உணவும் துயிலும் உரையாடலுமன்றி பிற மகிழ்வேதும் பொருள்படாத சிற்றூர் மன்று. இந்நகரில் இக்கணம் நானன்றி எவரேனும் இவ்வண்ணம் உள்ளம் அகன்றிருக்கிறார்களா என்ன? அவன் ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். அத்தனை முகங்களும் ததும்பிக்கொண்டிருந்தன. அவன் நோக்கு சம்வகையை சென்றடைந்தது. கவச உடைக்குள் இருந்த அவளை அவன் மிக அணுக்கமெனக் கண்டான். அவள் நிறைந்திருந்தாள். அப்போது அவன் விழைந்ததெல்லாம் அவளை அருகணைந்து அணைத்துக்கொள்ளவேண்டும் என்றுதான். அவளுடன் இருக்கவேண்டும், அவளிடமிருந்து ஆற்றலை பெற்றுக்கொள்ளவேண்டும். அவள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஒரு துளியையேனும்.
யுயுத்ஸு நகுலனின் கொடி தொலைவில் அணுகி வருவதை கண்டான். கவசமணிந்த வீரன் புரவியில் மிகப் பெரிய கொடி ஒன்றை ஏந்தியபடி முன்னால் வந்தான். அத்தனை பெரிய கொடி எவ்வாறு அவனால் அவ்வண்ணம் விண்ணில் தாங்கப்படுகிறதென்று அவன் திகைத்தான். பின்னர்தான் அந்தக் கொடி பறந்த பெருமூங்கிலில் இருந்து நான்கு பட்டுச் சரடுகளை அப்படை வீரனை சூழ்ந்துவந்த நான்கு புரவிவீரர்கள் இழுத்துப் பிடித்திருப்பதை அவன் கண்டான். ஏழு ஆள் உயரத்தில் எழுந்து நின்றிருந்த மூங்கிலிலிருந்து இரண்டு வாரை அகலமும் ஏழு வாரை நீளமும் கொண்ட பட்டுக்கொடி நெளிந்து பளபளத்தது. முகில் கீற்றொன்று அணுகி வருவதுபோல. கோட்டையிலிருந்து எழுந்த செவ்வொளி அதில் பட அது மேலும் மேலுமெனத் துலங்கி அணுகியது. வாழ்த்தொலிகளும் கொம்பொலிகளும் இணைந்து அளித்த பெருமுழக்கத்துக்குள் கொடி விழிநிறைய அருகே வந்தது. சம்வகையின் முன்னணிப் படைவீரர்கள் இரு பிரிவாகப் பிரிந்து உடைவாளை உருவித் தாழ்த்தி அதை வணங்கினர். கொடி அவர்களைக் கடந்து சென்று கோட்டைக்குள் நுழைந்து நகருக்குள் சென்றதும் அங்கிருந்து வாழ்த்தொலிகள் எழத்தொடங்கின.
அதைத் தொடர்ந்து வேள்விக்குதிரை தனியாக மென்னடையில் வந்தது. அதன் உடலில் அணிகளோ கடிவாளமோ சேணமோ இருக்கவில்லை. அதன் கன்னங்கரிய மென்மயிர் அலைகளின் மேல் பந்தங்களின் ஒளி வழிந்தது. அது தன் வெற்றியை உணர்ந்துவிட்டிருந்தது என்று தோன்றியது. நிமிர்ந்த தலையும் விரிந்த மூக்குத்துளைகளும் உருண்டு நோக்கும் விழிகளும் முன்கோட்டிய செவிகளுமாக அப்படையையே நடத்திவருவதுபோல் தோன்றியது. அதைத் தொடர்ந்து முரசுகளும் கொம்புகளும் முழக்கியபடி சூதர்கள் நிறைந்திருந்த ஏழு தேர்கள். தொடர்ந்து கவசம் அணிந்த புரவிவீரர்களின் படை மின்னும் ஈட்டிகளுடன் ஐந்து நிரைகளாக அணிவகுத்து வந்தது. அவர்களுக்குப் பின்னால் திறந்த தேரில் வில்லை தன் அருகே தோழனென ஊன்றி கைகளால் பற்றியபடி நகுலன் நின்றிருந்தான். அவன் மேல் பந்தத்தின் ஒளி படும் பொருட்டு இருபுறமும் புரவிகளில் வந்தவர்கள் பெரிய உலோகக் கேடயங்களை பிடித்திருந்தனர். அவ்வொளி சரிந்து அவன் மேல் விழுந்து அசைவுகளில் அலைபாய கவசங்கள் அணிந்து நின்றிருந்த நகுலன் பற்றி எரியும் தழல் போலிருந்தான்.
வேள்விப்புரவி முற்றத்தை அடைந்ததும் கொம்புகள் ஒலித்து ஆணையிட அது இடக்காலை முன்வைத்து தலைநிமிர்ந்து நின்றது. வேதியர் அதன்மேல் கங்கைநீர் தெளித்து அரிமலரிட்டு வாழ்த்தினர். நீர் அதன் உடலில் பட அதன் மென்மயிர் அலைகள் சிலிர்த்து அசைந்தன. நாக்கைச் சுழற்றி மூக்குவளையங்களை துழாவியபடி கழுத்தைக் குலுக்கி செருக்கடித்தது. அணிச்சேடியர் அதற்கு மங்கலத்தாலங்கள் காட்டினர். கால்களால் தரையைத் தட்டியபடி அது பொறுமையில்லாமல் அவர்களை பார்த்தது. மலராலான ஒரு கோடு தரையில் வரையப்பட்டது. அதற்கு அப்பால் வேதியரும் சூதரும் நின்றனர். முதுசூதர் போத்யரின் தலைமையில் வந்த இசைச்சூதர்கள் அங்கே நின்று அதை வரவேற்று நாவேறு பாடினர். “அஸ்தினபுரியின் மகளே, உன் இல்லத்திற்குள் நுழைக! திருமகளே, உன் காலடி பட்ட இடம் செழிக்கட்டும். உன் விழி தொட்டவை எல்லாம் ஒளிகொள்ளட்டும். உன் குரல் தொட்டு கல் கனியட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!”
புரவி இடக்கால் எடுத்துவைத்து அந்த மலர்வரியை கடந்தது. குரவைகள் ஒலித்தன. மங்கல இசை முழக்கமிட்டது. புரவியை அஸ்தினபுரியின் ஏழு சூதர்கள் வந்து பற்றிக்கொண்டனர். மாமன்னர் யுதிஷ்டிரன் தொட்டு அளித்த பட்டுக் கயிற்றால் அதை கட்டினர். அதற்கு பொன் மின்னும் கடிவாளமும் சேணமும் பூட்டப்பட்டது. பட்டும் பொன்னும் கொண்டு பின்னிய அணியாடையை அதன் முதுகில் அணிவித்தனர். அருமணிகள் பதித்த நெற்றிச்சுட்டியும் கழுத்தாரமும் சூட்டப்பட்டன. அதை ஐம்மங்கல இசைக்கலன்கள் முழங்க, குரவையொலி தொடர கோட்டைக்குள் கொண்டுசென்றனர். கோட்டைக்குள் புரவியை எதிரேற்க வந்த கூட்டம் எழுப்பிய வாழ்த்தொலிகள் பொங்கி இருளில் அதிர்ந்தன. வடக்கே புராணகங்கையின் விளிம்பில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த வேள்விச்சாலை நோக்கி அப்புரவி கொண்டுசெல்லப்பட்டது.
நகுலன் தேரிலிருந்து இறங்கி நிற்க வேதியர் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதி அவனை வாழ்த்தினர். அணிச்சேடியரும் மங்கலச் சூதரும் அவனை வாழ்த்தி விலக வில்லுடன் மீண்டும் தேரில் ஏறிக்கொண்ட அவன் நகர்புகுந்தான். வாழ்த்தொலிகளின் நடுவிலூடாக அவன் நகர்த்தெருக்களில் சென்றான். யுயுத்ஸு தன்னை மெல்ல இழுத்துக்கொண்டு அங்கு நின்றிருந்த பெருந்திரளில் மறைந்தான். திரள் ஓர் இருள்போல அவனை சூழ்ந்துகொண்டது. நகுலன் ததும்பிக்கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. இத்தருணத்தில் அவனுள் அவன் இழந்த மைந்தர்கள் இருப்பார்களா? அவன் கொன்றொழித்த மைந்தர்கள் நினைவாகவேனும் எஞ்சியிருப்பார்களா? அவன் அடைந்த தனிமை எவ்வண்ணம் மறைந்திருக்கும்? கணங்களில் புதிதென எழும் ஆற்றலை மானுடருக்களித்து அனுப்பியிருப்பதனால்தான் தெய்வங்கள் அத்தனை பெரிய துயர்களையும் தயங்காது அவர்களுக்கு அளிக்கின்றன போலும்.
உலகை வென்று அதன்மேல் கால் வைத்து விண்ணில் தலையெழுந்தவன் போலிருந்தான் நகுலன். தெய்வங்களுக்கு அறைகூவல் விடும் செருக்கு கொண்டிருந்தான். ஆமென்கின்றன தெய்வங்கள். வருக என்கின்றன. இனி நீயே என்கின்றன. இத்தனை இழந்து அடைந்தது இத்தருணம். இத்தனை தொலைவு வந்து அடைந்தது இந்த இடம். இங்கும் அவனுக்கு தனிமையன்றி பிறிதொன்றில்லை. பேருவகையும் பெருந்தனிமையும் பெருவெற்றியும் தன்னந்தனிமையிலேயே அடையக்கூடுவன. யுயுத்ஸு உளம் சோர்ந்து உடல்குறுகினான். பொருளிலாத அழுகையொன்று எழுந்தது. எங்கேனும் இருளில் தூண் மடிப்பில் பற்களைக் கடித்து இரு கைகளையும் முறுக்கி உரக்க வீறிட்டலற வேண்டும் போலிருந்தது. தலையை ஓங்கி ஓங்கி முட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது. எது வேண்டுமானாலும் செய்யலாம். இங்கு எவரும் எவரையும் நோக்குவதில்லை. மானுடரே மானுடருக்கு அரணாக, இருளாக, திரையாக மாறிவிட்டிருந்தனர்.
கோட்டைக்குள் சென்றுகொண்டிருந்த கவசப்படைகளை தொடர்ந்து அத்திரிகளும் காளைகளும் புரவிகளும் இழுக்கும் வண்டிகள் நிரைநிரையாக வரத்தொடங்கின. அவற்றில் திறைச்செல்வம் நிறைந்திருக்கின்றது என்பதை நகரத்தோர் உணரும்பொருட்டு அவ்வண்டிகள் அனைத்திற்கும் மேல் பொன் வண்ணம் பூசப்பட்ட பாய்கள் வளைக்கப்பட்டிருந்தன. உள்ளிருக்கும் பொருளென்ன என்று காட்டுவது போல் அவற்றின்மேல் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பொன்னிறத் தாமரைகள், பொன் வண்ண ஆமைகள், பொன் மின்னும் மீன்கள், பொன் சுடரும் அன்னங்கள்… பொன்… பொன் மட்டுமே. பிறிதொன்றில்லை. உருகி பெருக்கென்றாகி நகருக்குள் நுழைந்துகொண்டிருந்தது பொன்னாலான நதி. அஸ்தினபுரியின் கருவூலம் ஓர் அடியிலாப் பிலமென வாங்கி அதை உள்ளே வைத்துக்கொள்ளவிருக்கிறது. பசி தீராத இருண்ட பெரிய வாய் அது.