வடகேரளம்- ஒரு நண்பர்கூடல் -2018
மலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது. பொதுவாக நாம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து அங்கிருந்து கிளம்பிச் சென்றால் சிலமாதங்களிலேயே எல்லா உறவுகளும் அறுந்துவிடும். மெல்லிய உதிரி நினைவுகளே எஞ்சியிருக்கும். வேலைபார்த்த ஊர்களுக்கு திரும்பச் செல்பவர்கள் மிக அரிது. நானும் அவ்வாறுதான், விதிவிலக்கு மலபார்.
காசர்கோட்டுக்கு 1984 நவம்பரில் சென்றேன். 1989 பிப்ரவரியில் அங்கிருந்து கிளம்பினேன். ஏறத்தாழ ஐந்தாண்டுகள். காசகோட்டிலிருந்து கிளம்பி 31 ஆண்டுகளாகின்றன. ஆனால் அன்றிருந்த உறவுகள் அனைத்தும் அவ்வண்ணமே தொடர்கின்றன. அனைவருடனும் நெருக்கம் நீடிக்கிறது. காசர்கோட்டு நண்பர்கள் இன்று நீலேஸ்வரம், செறுவத்தூர், காஞ்ஞாங்காடு, கண்ணூர், தலைச்சேரி என பிரிந்து கிடக்கிறார்கள். அனைவருடனும் தொடர்பிலிருக்கிறேன். அங்கே சென்றுகொண்டே இருக்கிறேன்.
இம்முறை சற்றே வருத்தமான ஒரு பயணம், ஆனால் உற்சாகமானதாக ஆக்கிக்கொண்டோம். பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து கண்ணூர், காசர்கோடு மாவட்டத்திலிருந்து மட்டும் 400 பேர் விருப்ப ஓய்வு கொடுக்கிறார்கள். மாநிலம் முழுக்க 9000 பேர். தேசம் முழுக்க 80000 பேர். ஓய்வுபெறும் என் – நண்பர்களுக்கு ஒரு கூடுகையை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நான் சென்றது அதில் கலந்துகொள்ள.
விருப்ப ஓய்வு என்றால் விரும்பி ஓய்வுபெறுவது அல்ல, கிட்டத்தட்ட வெளியே தள்ளப்படுவது. சென்ற நான்காண்டுகளாக மிகமிகக் கடுமையான பணிச்சுமை. வேலையே செய்யமுடியாத சூழல். அடிப்படை நிர்வாகத்திற்குக் கூட பணமில்லாத நிலை. ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் விடுப்பு எடுப்பதற்கும் அனுமதி இல்லை. கூடவே இடமாற்றல் மிரட்டல்கள். தெருத்தெருவாகச் சென்று சிம்கார்டு விற்கவேண்டும் என்னும் கட்டாயங்கள்.
பி.எஸ்.என்.எல் சிம்கார்டை மக்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தொழில்நுட்பரீதியாக ஜியோ அல்லது ஏர்டெல் கொண்டுள்ள எந்த தரமும் பி.எஸ்.என்.எல் அமைப்புக்கு இல்லை. உலகின் பிரம்மாண்டமான தொலைதொடர்பு நிறுவனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அதற்கு நவீனத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதன் 2ஜி ஏலம் அரசு கணக்காயராலும் நீதிமன்றத்தின் அதிரடிகளாலும் முடக்கப்பட்டபின் வெளிநாட்டு நிதிமுதலீட்டாளர் வருவதில்லை.
அரசு சமீபத்தில் சில ஆயிரம்கோடி ரூபாயை பி.எஸ்.என்.எல்க்கு ஒதுக்கியது. பி.எஸ்.என்.எல்-ஐ சீரமைக்க போகிறது என்ற செய்தி வந்தது. ஆனால் ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்புவதற்குரிய நிதி அது. அவர்களுக்குரிய ஓய்வூதியம் அரசக்கணக்கிலிருந்து கொடுக்கப்படும், ஏனென்றால் அது முன்னரே அவர்களின் ஊதியத்திலிருந்து ஓய்வூதிய நிதிக்கு செலுத்தப்பட்டது. பிறகு வந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளது, அவர்களுக்கு அரசு அளிக்கும் ஓய்வூதியம் இல்லை. ஒரு சேமிப்புத் தொகை அளிக்கப்படும், அவ்வளவுதான்.
பழைய ஊழியர்களை அனுப்பிவிட்டு குறைந்த ஊதியத்தில் புதிய ஊழியர்களை எடுப்பதும், அதன்பின் பி.எஸ்.என்.எல்ன் பங்குகளை தனியாருக்குவிற்று அதை தனியார்மயப்படுத்துவதுமே அரசின் திட்டம். பி.எஸ்.என்.எல்னின் முதலீட்டு மதிப்பில் ஐந்து சதவீதம்கூட அதன் பங்குகளின் விலையில் பிரதிபலிப்பதில்லை. அதன் சொத்துக்களின் சந்தை மதிப்பை நோக்கினால் அரைசதவீதம்கூட பங்குமதிப்பில் பிரதிபலிப்பதில்லை. அதாவது நூறுரூபாய் மதிப்புள்ள – நிறுவனத்தை பங்குச்சந்தையில் ஐம்பது பைசாவுக்கு விற்கவிருக்கிறார்கள். ஆனால் அதை பெருநிறுவனங்களே வாங்க முடியும்.
கூடுகையை என் நண்பர் பாலசந்திரன், கருணாகரன், எம்.ஏ.மோகனன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நான் சென்று பேசவேண்டும் என கோரினார்கள். 18 ஆம்தேதி திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாவேலி எக்ஸ்பிரஸில் செறுவத்தூர் சென்று சேர்ந்தேன். பாலசந்திரன் வீட்டில் தங்கினேன். நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். அங்கே நான் என் இருபதுவயதுகளுக்கு திரும்பிவிடுகிறேன்.
https://youtu.be/sYEhg7aGYYc
காலை பத்துமணிக்கு விழா. நீலேஸ்வரம் அருகிலுள்ள விவசாயக் கல்லூரியின் அரங்கில். முந்நூறுபேர் வரை வந்திருந்தனர். நான் பேசினேன். பழைய நினைவுகள். கூடவே ஓய்வுப்பிந்தைய மறுதொடக்கம் எப்படி அமையவேண்டும் என்று சில ஆலோசனைகள்.
அவர்களுக்கு நான் ஒரே சமயம் பழைய ஜயமோகனன், இன்னொரு பக்கம் அவர்களிடமிருந்து எழுந்து வெற்றிபெற்ற ஒருவன். மலபாரின் பண்பாடே வேறு. அவர்களின் பார்வையில் எழுத்தாளன் ஒரு பேராளுமை. அரசியல், சினிமா, தொழில்வெற்றி எதுவுமே அதற்கு நிகரானது அல்ல. கொண்டாட்டம் சிரிப்பு என ஒருநாள்.
விருப்ப ஓய்வுபெற்றவர்களைத் திரட்டி ஒரு கூட்டுறவு சங்கம் அமைப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். தொலைதொடர்பு சார்ந்த, சுற்றுலா சார்ந்த சிறுதொழில்கள் எதையாவது செய்யலாம் என்ற திட்டம். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தாயிரம் பங்குகள். ரவீந்திரன் கொடகர என்னும் சங்கத்தோழர் முன்கை எடுத்துச் செய்கிறார்.
கேரளத்தில் பொதுவாக கூட்டுறவு அமைப்புக்கள் வெற்றிகரமாகவே நிகழ்கின்றன. அதற்குக் காரணம் பொதுநலம் நாடும் சிலர் அவற்றை வழிநடத்துபவர்களாக அமைகிறார்கள் என்பது. தமிழகத்தில் சாதிப்பூசலும் ஊழலும் சேர்ந்து இத்தகைய அமைப்புக்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன.
மதிய உணவு செறுவத்தூர் குடும்பஸ்ரீ அமைப்பின் பெண்களால் சமைத்து அளிக்கப்பட்டது. கேரளத்தின் மிகவெற்றிகரமான கூட்டுறவு அமைப்புத்தொடர் இது. இதைப்பற்றி பாலா போன்றவர்கள்தான் ஆராய்ந்து எழுதவேண்டும். நம்மூர் மகளிர் சுயஉதவிக்குழு போன்றது. ஆனால் பெண்கள் பலவகையான தொழிலகளை வெற்றிகரமாகச் செய்கிறார்கள்.
குறிப்பாக உணவு. ‘வீட்டு உணவு’ என்ற கருத்து குடும்பஸ்ரீ அமைப்புகளுக்கு பெரிய லாபத்தை அளிக்கிறது. அந்த பெண்கள் ஆளுக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் ஈட்டுவதாகச் சொன்னார்கள். மிகச்சுவையான வடகேரளத்து கிராமிய உணவு. கோழிக்கோட்டில் ஒருமுறை திருநங்கையர் மட்டுமே சேர்ந்து நடத்திய குடும்பஸ்ரீ உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.
மாலை வரை நண்பர்களுடன் இருந்தேன். என்னைக் கேட்காமலேயே கருணாகரன் அங்கே முச்சிலங்கோட்டு பகவதி ஆலயத்தில் பெருங்களியாட்ட உத்சவத்தை ஒட்டி நிகழும் நாடகவிழாவை தொடங்கி வைக்க என்னை கூட்டிச்செல்வதாக ஒப்புக்கொண்டுவிட்டிருந்தான். “அதென்ன உங்கிட்ட சொல்றது? பேசாம வாடா” என்றான்.
வடகேரளத்தில் பகவதி, முத்தப்பன் போன்ற நாட்டார் ஆலயங்களின் விழாக்கள் மாபெரும் மக்கள் கொண்டாட்டங்கள். பல்லாயிரம்பேர் கலந்துகொள்பவை. இடதுசாரிகள் இந்த மதவிழாக்களை பண்பாட்டுநிகழ்வுகளாக, மிகச்சாதகமான உளநிலையுடனேயே அணுகுகிறார்கள்.
காறமேல் முச்சிலோட்டு பகவதி தெய்யம் ஒரு சமீபகாலத் தொன்மம் கொண்டது. முன்பு அருகிலுள்ள தளிப்பறம்பு என்னும் இடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒரு பெண் பிறந்தாள். தன் பதினாறு வயதில் அவள் தன் இல்லத்தருகே நடந்த ஒரு ஞானசபை நிகழ்வை மறைந்திருந்து பார்த்தாள். அதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “மிகப்பெரிய துயர் எது? மிகப்பெரிய இன்பம் எது?” அதற்கு எவரும் பதில்சொல்லவில்லை. அவள் “பிரசவ வலி பெருந்துயர். காம உச்சமே முதன்மை இன்பம்” என்று பதில் சொன்னாள்
அவள் சொன்னதே சரி என களத்தில் எழுந்த தெய்வங்கள் ஒப்புக்கொண்டன. அவளை சர்வக்ஞை [அனைத்தும் அறிந்தவள்] என அங்கீகரித்தன. ஆனால் அங்கிருந்த அந்தணரும் பிறரும் பொறாமைகொண்டனர். திருமணம் ஆகாத சிறுமியாகிய அவள் எப்படி அதைச் சொல்லமுடியும், அவள் கற்பில்லாதவள் என் அலர் கிளப்பினர். அவளுடைய குடும்பம் அவளை சாதிநீக்கம் செய்தது
அவள் தன்னந்தனியாக நடந்து வந்து காட்டில் நின்றாள். சிதையேறி தன் தூய்மையை நிரூபிக்க எண்ணினாள். சிதைகூட்டிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு எண்ணைவாணியன் சென்றான். அவன் பெயர் முச்சிலோடன். முச்சிலோடு அவன் குடிப்பெயர். அவன் தலையில் எண்ணை இருந்தது. அதை சிதையில் ஊற்றும்படி அவள் ஆணையிட்டாள். அவன் எண்ணையை அதில் ஊற்றினான். அவள் அதை கொளுத்தி அந்த தீயில் பாய்ந்து எரிந்து மறைந்தாள்
வீடு திரும்பிய முச்சிலோடன் தன் இல்லத்தில் எல்லா கலங்களிலும் எண்ணை நிறைந்திருப்பதைக் கண்டான். தீயில் விழுந்தவள் தெய்வமாக ஆனாள். கணியன் வந்து கணித்து அவள் தேவிவடிவம் என்றும், அவர்களின் குலக்காவல் தெய்வம் என்றும் சொன்னான். முச்சிலோட்டு வீட்டில் அதன்பின் கலங்களில் எண்ணை தீரவே இல்லை. அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களானார்கள். தேவி அவர்களின் இல்லத்திலேயே சிறு கோயிலில் அமர்ந்து அருள்புரிந்தாள்.
முச்சிலோட்டு பகவதி கோயில் எண்ணைவாணிய சமூகத்திற்கு உரியது. இன்று அது அவ்வூரின் பொது கோயிலாக மாறியிருக்கிறது. ஆண்டுதோறும் நிகழும் விழா புகழ்பெற்றது. பெருங்களியாட்ட விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது. 6,7,8,9 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழா கேரளக் கலைமரபின் மிகச்சிறந்த நிகழ்வுகளில் ஒன்றுஅத்தனை தெய்வங்களும் தோன்றும் விழா அது.. கொற்றவை, வண்ணக்கடல் போன்ற நாவல்களில் அதன் வேறுவேறு சித்திரங்களை நான் எழுதியிருக்கிறேன்.
அதையொட்டிய நாடகவிழாவில் நான்கு நாடகங்கள் பங்கெடுத்தன. நாடகக்கலை பற்றி சுருக்கமாகப் பேசி அதை தொடங்கிவைத்தேன். அப்போதெல்லாம் லோகியை நினைத்துக்கொண்டிருந்தேன். கிராமங்களில் நிகழும் திருவிழாக்களை லோகி தவறவிடுவதே இல்லை. அவருடைய இளமைப்பருவம் நாடகக்குழுக்களுடன் கழிந்தது. அவர் திலீப், கலாபவன் மணி போன்ற பிற்கால நட்சத்திரங்களை அங்குதான் கண்டுபிடித்தார்
ஒன்பது மணிக்கு ஆய்ஸ்டர் ஓப்பரா என்னும் கடலோர விடுதிக்குச் சென்றோம். அங்கே நண்பர்கள் கூடியிருந்தனர். மது, இசை, சிரிப்பு. நான் மலையாளிகளுடன் மதுக்கொண்டாட்டங்களை விரும்புபவன். அங்கே மது அருந்தாதவர் இயல்பாக இருக்கலாம். குடித்தால் சலம்பியே ஆகவேண்டும் என்னும் மனநிலை பொதுவாக அவர்களிடம் இல்லை. மிதமிஞ்சி குடிப்பது வாந்தி எடுப்பது எல்லாம் கிடையாது.
களியாட்டம் என்றால் அது முழுக்கமுழுக்க இசைதான். வழக்கமாக ஒரு பாடகரேனும் இருப்பார். இங்கே மூவர் பாடகர்கள். புருஷோத்தமன், சுஜித்,ரவி ஆகியோர் பாடினார்கள். பழைய மலையாள, இந்திப் பாடல்கள். அப்பாடல்களைத் தெரிவுசெய்ய முதன்மைக் காரணம் அவற்றுக்கு உடனியங்கும் இசைக்கருவிகளின் தேவை இல்லை என்பது. பெரும்பாலும் தாளமே கூட தேவையில்லை. மெல்லிய ஒற்றைத்தாளத்திலேயே பாடலாம்.
பாடப்பாட பாடல்கள் நினைவுக்கு வந்தன. பழையபாடல்களின் கனிந்த கற்பனாவாதம். “இந்நலே மயங்ங்கும்போள் ஒரு மணி கினாவின்றே பொன்னின் சிலம்பொலி கேட்டு உணர்ந்நு’ [நேற்று அரைத்தூக்கத்தில் ஒரு மணிக்கனவின் பொற்சிலம்பின் ஒலி கேட்டு விழித்துக்கொண்டேன்] ரஃபியின் உருகும் குரல்
கூடவே நினைவுகள், பகடிகள், சிரிப்புகள். புருஷோத்தமன் என்னும் புருஷு உற்சாகமான நகைச்சுவையாளன். குரல் நடிப்பு, உடல்நடிப்பு எல்லாமே உண்டு. சிரித்து தளர்ந்து சற்றுநேரம் அமைதி. அதில் ஒருவர் பாடத்தொடங்க பாடல்களின் வரிசை. பின்னர் மீண்டும் சிரிப்பு.
ஆய்ஸ்டர் ஓப்பராவில் அபாரமான கடலுணவும் அசைவ உணவும். இறால், நண்டு பொரியல்கள். மீன்கறி. மரவள்ளிக்கிழங்கு. சப்பாத்தி, சோறு , ஆப்பம் ஆகியவற்றுடன் பத்திரி என்னும் இஸ்லாமிய உணவு. மட்டன் சிக்கன் என்று வேறு வேறு உணவுகள். நான் இரவில் உணவை தவிர்ப்பவன். அன்று இரண்டுமுறை சாப்பிட்டேன்.
விடுதியின் உரிமையாளர் இஸ்லாமியர். என்னை தெரிந்தவர். இலக்கிய ஆர்வமும் எழுத்தாளர்கள்மேல் மதிப்பும் கொண்டவர். அன்று நாங்கள் செல்வதனால் வேறு சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் வைத்திருந்ததாகச் சொன்னார். அவரே வந்து வரவேற்று எல்லாவற்றையும் செய்தார்.
இரவு தூக்கமே இல்லை. விடியவிடிய. மலையாளிகளுக்கு குடிக்கொண்டாட்டம் என்றால் தூங்கவே கூடாது. “தூக்கம் இல்லையா?” என்று நான் கேட்டபோது “தூங்குவதென்றால் எதற்கு மது? தூக்கமாத்திரை போதுமே?” என்று புருஷோத்தமன் சொன்னான்.
கொஞ்சம் கொஞ்சமாக விடிய விடிய குடிக்கவேண்டும் என்பது மலையாளக் கொள்கை. அதாவது துளித்துளியாக. ஒரு இறகை ஊதி ஊதி காற்றில் பறக்கும்படி நிலைநிறுத்துவதுபோல குடிக்கவேண்டும் பறந்து போய்விடவும்கூடாது. தரையில் படியவும்கூடாது.
சுற்றிலும் காயலின் நீர்ப்பரப்பு. அது அந்தியில் இருண்டது. பின் ஒளிகொண்டது. விடிகாலையில் உருகி வழிந்து கிடப்பதுபோலிருந்தது.அதன்மேல் ஆயிரம் கண்கள் சுடர்விட பெரிய படகுகள் மிதந்துசென்றன. வௌவால்கள் நிழல்களுடன் பறந்தலைந்தன.
மறுபக்க தென்னைமரக்கூட்டங்கள் இருள்நிழல்குவைகள் . மறுகரை தங்கள் நிழலுருவுடன் இணைந்து இரு சிறகுகளாகி மாபெரும் வண்ணத்துப்பூச்சி போல் தெரிந்தன. தெரிந்தது. நீர்வெளியில் இருந்து எழுந்த காற்று இரவில் நீராவி வெம்மையுடன் இருந்தது. நள்ளிரவில் நடுங்கச்செய்தது. பின்னிரவில் மீண்டும் மெல்லிய வெம்மை. மாலையில் மணலுக்குள் கைநுழைத்தால் உணரும் வெம்மை.
ஒலிகள் எழத்தொடங்கின. காலையொளியை ஒன்றும் சொல்லாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். “நல்ல இரவு, நல்ல காலை” என்று பிரதீப் சொன்னான். “இவ்வளவெல்லாம்தாண்டா வாழ்க்கையிலே. இதுவே மிகப்பெரிய அருள்தான்”
காலை ஒளி வெம்மைகொள்ளத் தொடங்கியபோது தலைசேரி கண்ணனூர் காரர்கள் கிளம்பினர். உள்ளூர்க்காரர்கள் மதியம் வரை இருந்து பேசிக்கொண்டிருந்தோம்
மதியம் கருணாகரனின் வீட்டில் விருந்து. மிகச்சிறப்பான சமையல். பிரதமன், செம்மீன் வறுவல், மீன்கறி, சாம்பார், பலவகையான தொடுகறிகள். வந்தது முதல் விருந்துகளாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். ஆனால் மனம் கொப்பளித்துக் கொண்டிருந்தமையால் உணவு சலிக்கவில்லை.
மதியம் கருணாகரனின் மனைவி ஆசிரியையாக பணியாற்றும் கொடகரா உயர்நிலைப் பள்ளியில் கலைவிழாவை தொடங்கிவைத்து உரையாற்றவேண்டும். அதற்கும் கருணாகரனே நாள் கொடுத்திருந்தான். “நான் அழைத்தான் அவன் வருவான் என்று சொன்னேன்” என்றான்.
நான் காந்தியைப் பற்றி அரைமணிநேரம் உரையாற்றினேன். அவர்கள் கேட்டிராத கதைகள் வழியாக இன்னொரு காந்தியை அவர்களுக்கு காட்டினேன். நான் பள்ளியில் பேசியதில்லை. அதுவே முதல் முறை. கல்லூரிகளில் பேசும்போது வரும் கசப்பு எழவில்லை. உற்சாகமாக உணர்ந்தேன்.
தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் இறந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் அடித்தள மக்களின் குழந்தைகள் மட்டுமே, வேறுவழியில்லாமல், பயில்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பயில்வதே கௌரவம் என்னும் எண்ணமே காரணம். பல பள்ளிகளில் மிகமிகக் குறைவாகவே மாணவர்கள் இருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர்கள் முறையாகச் சொல்லித்தருவதுமில்லை.
கேரளத்தில் பதினைந்தாண்டுகளுக்கு முன் அந்நிலை உருவாகியது. வி.எஸ்.அச்சுதானந்தன் கேரள முதல்வராக இருக்கையில் கம்யூனிஸ்டுக் கட்சியும் அரசும் இணைந்து அரசுப்பள்ளிகளை மீட்கவும் அரசு மருத்துவமனைகளை மீட்கவும் மக்களியக்கம் ஒன்றை தொடங்கினர். அதன் விளைவாக அரசுப்பள்ளிகள் புத்துயிர் பெற்றன. அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பானவையாக மாறின. கேரள மக்களின் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை அவ்வியக்கம் உருவாக்கியது.
கொடகர அரசுப்பள்ளி கேரளத்தின் வெற்றிகரமான பள்ளிகளில் ஒன்று. மிக மிக உற்சாகமான குழந்தைகள். நான் ஆற்றியது கொஞ்சம் தீவிரமான உரை, ஆனால் அதை அவர்களில் பெரும்பாலானவர்களால் புரிந்துகொள்ளமுடிந்தது.பல பெண்குழந்தைகள் உற்சாகமாக வந்து அவர்களின் கருத்துக்களைச் சொன்னார்கள்.
மாலை ஏழுமணிக்கு மாவேலி எக்ஸ்பிரசில் திரும்பினேன். நண்பர்கள் ரயில்நிலையம் வந்து ஏற்றிவிட்டனர். ரயில் வந்தணையும்வரை பேசிக்கொண்டே இருந்தோம். பேசிப்பேசி நெடுங்காலத்தைக் கடந்து எண்பதுகளை அடைந்தோம். ரயிலில் ஏறி அமர்ந்து திரும்பியபோது என் நிகழ்காலத்திற்கு வந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
***