யேசுதாஸின் அப்பா

சமீபத்தில் மலையாள எழுத்தாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன். “அது ஏன் என்று தெரியவில்லை. ஐம்பது வயது தாண்டியபின் யேசுதாஸின் குரலைக் கேட்காமல் நான் ஒருநாள்கூட தூங்கமுடிவதில்லை…ஒருசில வரிகளாவது” . கூடியிருந்த அத்தனைபேரும் சொன்னார்கள். “அது அப்படித்தானே? தாஸேட்டனைக் கேட்காமல் எப்படி ஒருநாள் முடியும்?”. அத்தனைபேரும், அத்தனை இளைஞர்களும் அதைச் சொன்னார்கள்.

 

ஏசுதாஸுக்கு கேரளத்தில் உள்ள இடமென்ன என்று என்னிடம் ஒருமுறை ஒரு நண்பர் கேட்டார். “இளையராஜாவுக்கு தமிழில் இருந்திருக்கவேண்டிய இடம்” என்று நான் பதில் சொன்னேன். கேரளத்தின் ஓர் அடையாளம், கேரளப்பண்பாட்டின் அழியாத முகம்.

 

யேசுதாஸின் குரல் மலையாளத்திற்கென்றே அமைந்தது. மலையாள உச்சரிப்பு மட்டுமல்லாமல் மலையாளத்திற்குரிய ஒலிகளும் உணர்வுகளும் கொண்டது. சினிமாப்பாடல்கள் வழியாக, மெல்லிசைப்பாடல்கள் வழியாக, இந்து கிறிஸ்தவப் பாடல்கள் வழியாக ஒவ்வொருநாளும் கேரளமெங்கும் ஒலித்துக்கொண்டிருப்பது. மலையாளிகள் தங்கள் இளமையை அதில் கண்டடைகிறார்கள். தங்கள் தந்தையரின் இளமையை. தங்கள் தொல்காலத்தை. தங்கள் கனவுகளை.

 

யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப் அவர் பிறந்தபோதே புகழ்பெற்ற பாடகராக இருந்தார்.. அவருடைய ஐந்து மைந்தர்களில் மூத்தவர் யேசுதாஸ்.

 

அகஸ்டின் ஜோசப் தன் மகனை பாடகனாக மட்டுமே பார்த்தார். நீ எதையுமே படிக்கவேண்டாம், இசையை மட்டுமே படித்தால்போதும் என்றார். இளமையில் தந்தையிடமிருந்து இசைபயின்ற யேசுதாஸ் கொச்சியில் ஆர்.எல்.மியூசிக் அக்காதமியில் இசை பயின்றார். பின்னர் திருவனந்தபுரம் ஸ்வாதித்திருநாள் இசைக்கல்லூரியில். அவருடைய மரபிசையின் ஆசிரியர் செம்பை வைத்யநாத பாகவதர்

 

ஆனால் அன்று திரையிசை ஓரு வணிக இயக்கமாக ஆகவில்லை. அதில் பெரிய வருமானமும் இருக்கவில்லை. அகஸ்டின் இறந்தபோது வறுமையில்தான் இருந்தார். யேசுதாஸ் கடுமையாகப் போராடித்தான் இசைக்கல்வியை முடிக்கவேண்டியிருந்தது. அவருக்கான வாய்ப்புகள் சற்று முன்னரே, இளமையிலேயே தேடிவந்தமைக்கு அவர் தந்தையின் அடையாளம் உதவியது, அவ்வளவுதான்.

https://youtu.be/3ZFgh18cBJg

 

கட்டாச்சேரி அகஸ்டின் ஜோசப் தன் ஐம்பத்தைந்தாவது வயதில் 1965ல் மறைந்தார்.  அகஸ்டின் ஜோசப் ஏராளமான நாடகங்களில் மரபிசைப்பாடல்களைப் பாடியவர் இரண்டு படங்களில் பாடி நடித்திருந்தார். நல்லதங்காள் [1950] வேலக்காரன் [1953]. அவருடைய பெரும்பாலான எந்தப்பாடலும் இன்று கிடைப்பதில்லை. இரு படங்களில் அமைந்த பாடல்கள் எஞ்சியிருக்கின்றன.

 

இணையத்திலுள்ள அப்பாடல்களில் உள்ள தெளிவான தமிழ்நெடி வியப்பூட்டுகிறது. என்ன காரணமென்றால் அன்று புகழ்பெற்ற பாடகர்கள் அனைவருமே தமிழகத்தவர். அன்று தமிழகம் கேரளம் என்ற வேறுபாடும் இருக்கவில்லை. கேட்டுப்பழகி வந்த அந்த தமிழ்நெடியைப் பற்றி யேசுதாஸே ஒர் உரையாடலில் சொல்கிறார்.

 

யேசுதாஸின் குரலில் அகஸ்டினின் சாயல் இல்லை என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் கூர்ந்துகேட்டால் அதே குரல்தான் என்று தோன்றும். விஜய் யேசுதாஸ் குரலில் ஏசுதாஸ் எழுவதைப்போல. அகஸ்டின் அன்றைய வழக்கப்படி பாகவதர்களுக்குரிய கிழக்குரலில் பாடமுயல்கிறார், அவ்வளவுதான். யேசுதாஸின் அழகு என்பது அவர் குரலின் என்றும் மாறாத மென்மையான இளமை.

 

சமீபத்தில் யேசுதாஸ் அவருடைய தந்தையை ஓர் உரையாடலில் நினைவுகூர்ந்து பேசுவதைக் கேட்டேன். அகஸ்டின் ஜோசப்பின் இன்று கிடைக்காத ஒரு பாடலை அவர் நினைவிலிருந்து பாடினார். மைந்தன் குரலில் தந்தை எழுவதைப்பார்க்க ஒருவகையான உளக்கிளர்ச்சி உருவானது

 

அகஸ்டின் ஜோசப் பாடல்கள்

 

 

முந்தைய கட்டுரைஅமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66